புதன், 13 ஜூலை, 2016

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 7 )

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 7 )
அப்துல் வஹாப் ஜானி சாஹிபிற்கு அடுத்து ஆ.கா.அ. அப்துஸ் ஸமது சாஹிப் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் முஸ்லிம் லீக் தமிழகத்தில் இயங்கும் வேளையில் லீகிற்கு அதிகப் படியாக வசீகரம் கூடியது. இது சரியான உணமையும் கூடத்தான்.
தமிழகத்தின் மகத்தான மேடைப் பேச்சாளர்களில் அப்துஸ் ஸமது சாஹிபிற்கு உச்ச இடமிருந்து. அரசியல் மேடையானாலும், மீலாது போன்ற மார்க்க மேடையானாலும் அப்துஸ் ஸமது சாஹிப் சொற்பொழிவுதான் மணிமகுடம் சூடும்.
முஸ்லிம் லீகில் பேச்சாற்றல் கொண்டவர்கள் இல்லாமல் இல்லை. ஏராளம் ஏராளம் ஏராளம் நபர்கள் இருந்தார்கள். திருப்பூர் மைதீன் அண்ணன், இரவண சமுத்திரம் எம்.எம். பீர் முஹமது அண்ணன். திருச்சி நாவலர் ஏ.எம்.யூசுப் அண்ணன், வடகரை பக்கர் அண்ணன், எம்.ஏ. லத்தீப் சாஹிப், மதுரை ஷரீப் அண்ணன், திருவண்ணாமலை டாக்டர் ஷம்சுத்தீன் அண்ணன், கவிஞர் தா.காசிம், இப்படி பெரும் பட்டாளமே லீகின் கைவசம் நிரம்பி இருந்தது. இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் பெயர்களை இங்கே நான் குறிக்க வில்லை.
தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன், ஒருமுறை காரைக்குடி கம்பன் விழாவில் பேசினார். இந்த விழா அக்காலத்தில் உன்னதமாகப் பேசப்படும் விழா. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் நடத்தும் விழா. தமிழகத்தின் மிகப் பெரும் பெயர் பெற்ற பேச்சாளர்களே இந்த விழா மேடையில் தோன்ற முடியும்.
அந்தக் கம்பன் விழாவில் சுமார் 1/12 மணி நேரம் தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன் இலக்கியச் சொற்பொழிவாறறினார். இவ்வளவு மணி நேரம் அதுவரை வேறு எவரும் பேசியதில்லை..
திருச்சி பெரம்பலூருக்கு அருகாமையில் உள்ள ஒரு ஊரில் ஒரு மீலாது விழா. நாவலர் ஏ.எம். யூசுப் அண்ணன் சொற்பொழிவு. இவ்வூருக்குப் பேசுவதற்குச் சிலமணி நேரங்களுக்கு முன்னால் , ஒரு தகவல் யூசுப் அண்ணனுக்கு வருகிறது. அந்தத் தகவல் அவ்வூர் மக்களின் சமீபத்திய ஒரு செயல்பாட்டைக் குறித்தது.
அந்தத் தகவல் லீகிற்கும், இஸ்லாமியர் நடைமுறைக்கும் கொஞ்சம் நெருடலானது.
யூசுப் சாஹிப் மீலாது மேடையில் ஏறி அமர்ந்து பேசத் தொடங்கி விட்டார்.
தப்பு இப்படிச் சொல்லக் கூடாது ஏசத் தொடங்கிவிட்டார்.
வரலாற்று ஆதரங்களை அடுக்கி அடுக்கி அந்நகரத்து வாசிகளை ஏசுகிறார்.
இந்த ஏசல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இடைவேளை விடுகிறார். மீண்டும் ஏசல் தொடர்கிறது. அடுத்தொரு இடைவேளை. அடுத்தும் நீளுகிறது. பஜ்ர் தொழுகைக்குப் பாங்கு சொல்லப்படுகிறது. பேச்சு நிறுத்தப்படுகிறது. ஊர் மக்கள் அப்படியே அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
இப்படியொரு மேடையைத் தமிழகம் கண்டதே இல்லை. இவ்விதம் சொற்பொழிவு ஆற்றலாளர்கள் லீகில் நிரம்பி இருந்தாலும் அப்துஸ் ஸமது சாஹிபின் பேச்சாற்றல் தனியொரு மைல்கல்தான். இவர்கள் அனைவரின் பேச்சாற்றலை அப்துஸ் ஸமது சாஹிப் பாணி மிகைத்து நின்றது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழகத்தில் எழுப்பப் பட்ட புதிய மஸ்ஜித் கட்டிடத் திறப்பு விழாக்களில் தலைமை ஏற்கும் பொறுப்பு, அப்துஸ் ஸமது சாஹிப் அளவிற்கு வேறு எந்த முஸ்லிம் லீக் தலைவர்களுக்கும் வாய்க்க வில்லை. இதற்குக் காரணம் அவருடைய சொற்பொழிவாற்றல்தான்.
தி.மு.க. மேடைகள் கணடெடுத்த அண்ணா உள்ளிட்ட பேசசாற்றல் மிக்கவர்களின் பட்டியல்களில் ,அண்ணா, கருணாநிதி, சம்பத், நாஞ்சில்
கி. மனோகரன் போன்ற இவர்களுக்கு இணையாக, சமயத்தில் மிகையாக அப்துஸ் ஸமது சாஹிப் பேச்சாற்றல் தமிழக மேடைகளில் வலம் வந்தது.
மிகச் சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் ஒரு தனியார் கூட்டு நிர்வாகம் (மெட்ராஸ் மூடியா ) நடத்திய மணிச்சுடரின் ஆசிரியராக இருந்தார்.
இப்பத்திரிகை தொடங்கிய போது ஒரு கண்டிசன் போட்டார். இது நாளிதழ்.
இதில் தினம் தினம் ஒரு அற்புதமான கட்டுரை வந்தாக வேண்டும.அதற்குத் தகுதியனவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் ஏ.கே. ரிபாய் அண்ணன். அவரை இதற்கு ஒப்புக் கொள்ள வைத்தால் நான் ஆசிரியராக வருகிறேன் என ஸமது சாஹிப் கூறினார்.
அப்போது ஏ.கே.ரிபாய் சாஹிப் அவரின் சொந்த ஊரான வாவா நகரத்தில் உடலநலக் குறைவு காரணமாகக் குடும்பத்தோடு தங்கி இருந்தார்.
அங்கே ஆப்பனூர் காசிம் அண்ணன் புறப்பட்டுச் சென்றார். ஏ.கே.ரிபாய் சாஹிபைச் சம்மதிக்க வைத்து விட்டார்.
சென்னையில் தங்குவதற்கு எங்கே இடம் வேண்டும்.? மாதச் சன்மானம் எவ்வளவு வேண்டும்.? இதை நாங்கள் தீர்மானிக்க மாட்டோம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என ஆப்பனூர் காசிம் அண்ணன் ரிபாய் சாஹிபிடம் கூறினார்.
"எனக்குப் பணம் வேண்டாம்.தங்கும் இடம் நீங்கள் தயார் செய்யத் தேவையில்லை. முக்கியமான விஷயம் நான் ஆறு மாதங்கள் அங்கு இருப்பேன். தினம் தினம் எழுதித் தருவேன்.இதுதற்கு ஒப்புக் கொண்டால் வருகிறேன்" என
ரிபாய் சாஹிப் ஒப்புக் கொண்டு வந்தார்.அற்புதமான கட்டுரை தினம் தினம்
வந்தது. சரியாக ஆறாவது மாதத்தில் யார் தடுத்தாலும் ஒப்புக் கொள்ளாமல்
சொந்த ஊர் சென்று விட்டார். ஒரு பைசாக் கூடப் பெறாமல் பணி பரிந்தார்.
அப்துஸ் ஸமது சாஹிப் சிறந்த எழுத்தாளர். மிகச் சிறந்த பேச்சிற்றலாளர்.
ஆனால் அவரின் எழுத்துகளும் பேச்சுகளும் சரியாகத் தொகுக்கப் பெறவே இல்லை. எவ்வளவோ எழுதினார். அவைகள் பதிப்பாக வில்லை.எவ்வளவோ பேசினார் அவைகள் முழுவதும் பதிவாக வில்லை.
ஹஜ் வழிகாட்டி மாதிரி "புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள்" என் ஒரே ஒரு நூல் அவர் பெயரில் வெளி வந்தது.
அப்துல் வஹாப் ஜானி சாஹிப் காலத்தை விட இயக்கப் பணி விசாலமானது. ஆனாலும் இதுவரைக் கூட்டணி கட்சிகளில் லீகிற்குக்
கிடைத்து வந்த இடங்கள் சுருங்கி விட்டன. பிரபல்யம் பெற்ற அளவு இயக்கம் பெருக்கம் காணவில்லை. இதையும் மறந்துவிடக் கூடாது.
இன்னொரு பக்கமும் இதனால் லீக் சேதாரமானது. இந்தப் பேச்சாற்றல் வசீகரம், இயக்கத்திற்கு நன்மை தந்ததை விடவும் பிரச்சினையைத்தான்
பூதகரமாக்கியது. தி.மு.க. பாணி முறைகள் முஸ்லிம் லீகில் வலுப் பெற ஆரம்பித்தன.
இந்த மனப் போக்கை , இந்த அந்தரங்க உணர்ச்சியை அப்துஸ் ஸமது சாஹிப் தெளிவாகக் கணித்து வைத்திருந்தார். ஒருவகையில் இதைக் கண்டும் காணாமலும் கட்சியை வழி நடத்தினார். இதில் ஒரு வகையான சாதகத் தன்மையைத் தனக்காக்கிக் கொண்டார்.
தனக்குத் தேவைப்படும் பொழுது தி.மு.க.வைக் கை கழுவி விட்டு, அ.இ.அ.தி.மு.க.வை அரவணைத்துக் கொள்வார்.
ஒருநாள், மணிச்சுடரில கருணாநிதி செய்தி ஒன்று வழக்கம் போல் பிரமாதமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் குழு தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணிச்சுடர் பொறுப்பில் நான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆசிரியர்குழு தி.மு.க.சார்பானதுதான்.
மதியம் சரியாக 12 - மணிக்கு பக்கங்கள் அச்சாக வேண்டும்.
அப்போது, அப்துஸ் ஸமது சாஹிபிடமிருந்து தொலை பேசி அழைப்பு வருகிறது. "பத்திரிகையை அச்சிட வேண்டாம்.உடனே நான் வருகிறேன். வேறு மேட்டர் பேட வேண்டும்."என்பதுதான் அந்தத் தொலை பேசிச் செய்தி.
அலுவலகம் வந்தார். ஒரு மேட்டரைத் தயார் செய்து கொண்டு வந்தார்.
கருணாநிதி கிழி கிழியெனக் கிழிக்கப் பட்டிருந்தார், அந்த மேட்டரில்.
மணிச்சுடர் ஆசிரியர் குழு திக்பிரேமையில் விழுந்தது. அச்சாகிப் பத்திரிகை வெளி வந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி. மறுநாளில் இருந்து லீக் , அ.இ.அ,தி.மு.கவுடன் நெருக்கம். தொடர்ந்து லீக் செயற்குழுவும் புதிய கூட்டிற்குப் பின்னர் அனுமதி வழங்கியது.
டெல்லியில் இருந்து ஒரு போன். தனிப்பட்ட பாதிப்பு வரப் போவதாக ஒரு மிரட்டல். அவ்வளவுதான் கூட்டணி மாறி விட்டது. செயற்குழுவும் ஒப்புக் கொண்டது. இதுதான் அப்துஸ் ஸமது.
" என் கெழுதகைய நண்பர் கலைஞர் ." என்றொரு சொல்லாடலைக் கையாண்டு அடுத்து கருணாநிதியுடனும் கூட்டணி வைத்தார்.
அ. இ.அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவை, தமிழக அரசியல் தலைவர்கள் வரலாற்றிலேயே " எங்கள் அன்புச் சகோதரி" என்ற அடைமொழியைத் தவிர வேறு சொற்களைப் பயன்படுத்தாத தலைவர் இவர் ஒருவர்தான். ( அண்மையில் தன் ஆதரவை ஜெயலலிதாவக்குத் தெரிவிக்கச் சென்ற, அப்துஸ் ஸமது சாஹிப் மகளார் முசபர் பாத்திமா ,
ஜெயலலிதாவைக் கட்டி அணைத்து முசாபா செய்தார்.இது தந்தை வழி வந்த துணிச்சல்.
எந்தப் பெண்மணி யானாலும் ஜெயலலிதாவை விட்டு, 5 அடி தூரம் தள்ளிக் குனிந்து நிற்கும் தீய கலாச்சாரத்தைத் தகர்த்து விட்டார். முசபர் பாத்திமா இப்போது தன் கைவசம் ஒரு துக்கடா லீகை வைத்திருக்கிறார். என் போன்றவர்களுக்குத் துளி அளவு கூட இதில் உடன்பாடு கிடையாது. )
காயிதெ மில்லத்துக்கு முற்றிலும் மாறுபட்ட ," பிற கட்சிச் சின்னத்தில் தேர்தலில் நிற்பவர்கள் லீகில் தொடர வேண்டாம். அவர்கள் அந்தச் சின்னக் கட்சியிலேயே போய் சேர்ந்து கொள்ளட்டும். " என்ற கோட்பாட்டை முதன்முதல் உடைத் தெறிந்தவரும் அப்துஸ் ஸமது சாஹிப்தான்.
அந்த அடிப்படையில் அவர்தான் முஸ்லிம் லீகில் முதல் தி.மு.க.காரர்.
தமிழகத்தில் தேர்தல் நேரம் சூழ்ந்தது. தி.மு.க. கூட்டணி தொடர்ந்தது.
கூட்டணி களுக்கு இடையில் தொகுதி பங்கீடும் முடிந்து விட்டது.
சென்னை மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள 8-ஆம் எண் K.T.M.அஹமது இப்றாஹிம் மன்ஜிலில் முஸ்லிம் லீக் செயற்குழு அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் கூடியது. அதைத் தொட்ந்து,
அடுத்த அறையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவும் கூடியது.
அந்தப் தனி அறையில் , அப்துஸ் ஸமது சாஹிப், ஏ.கே. ரிபாய் சாஹிப், அப்துல் ஜப்பார் சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், எஸ்.ஏ.காஜா முஹையதீன் சாஹிப், வந்தவாசி அப்துல் வஹாப் சாஹிப் முதலிய தலைவர்களும், இவர்களுக்கு உதவியாளர்களாக , வடசென்னை மாவட்டச் செயலாளரான நானும் , தென்சென்னை மாவட்டச் செயலாளரான தாஜ் ஷரீப் அண்ணனும், நாகூர் கவிஞர் ஜபருல்லாஹ்வும்
இருந்தோம்.
ஒவ்வொரு தொகுதிகளை விரும்பிக் கேட்ட வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் அழைக்கப் பட்டு உறுதி செய்யப் பட்டார்கள்.
ராணிப்பேட்டை இத் தேர்தலில் லீகிற்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராணிப்பேட்டை தொகுதியை எவரும் கேட்க வில்லை.
முடிவாக , அப்துஸ் ஸமது சாஹிப் அத் தொகுதியில் பள்ளப்பட்டி அப்துல் ஜப்பார் சாஹிபை அங்கு நிற்கச் சொல்லி வற்புறுத்தினார். ஏற்கனவே ஒரு முறை அங்கே நின்று வென்றவர் அப்துல் ஜப்பார் சாஹிப்.
ஆனால் அப்துல் ஜப்பார் சாஹிப் மறுத்து விட்டார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் கேட்க வில்லை. தொகுதியைத் திரும்ப ஒப்படைத்தால் இயக்கத்திற்கு அவமானம் எனக் கூறியும் அப்துல் ஜப்பார் சாஹிப் மறுத்தே விட்டார்.
இந்தக் கட்டத்தில், அப்துஸ்ஸமது சாஹிப் ஒரு சூட்சமத்தை மெதுவாக அவிழ்த்தார். " இந்த முறை நம் தோழமைக் கட்சியானது. தி.மு.க.வின்
உதய சூரியன் சின்னத்தில் நின்று இந்தத் தேர்தலைச் சந்திக்கலாம் எனக் கருதுகிறேன்."என்பதே அந்த சூட்சமம்.
அப்துஸ் ஸமது சாஹிப் சொல்லி வாயை மூடவில்லை. "ராணிப்பேட்டையில்" நான் நிற்கிறேன். எனக்குத் தொகுதியை ஒதுக்கி விடுங்கள் என உரத்த குரலில், அதுவரை மறுத்து வந்த மாநில லீகின் துணைத் தலைவர் அப்துல் ஜப்பார் சாஹிப் உற்சாகத்துடன் கேட்டார்.
அந்த அறைக்குள் இருந்த மற்ற மேல் மட்டத் தலைவர்கள் எவரும் இதை எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.
ஆனால் ஒரு உண்மை ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. முஸ்லிம் லீக் செயற்குழுவில் சம்மதம் பெறுவதற்கு முன்பே உதய சூரியன் கேட்கப் பட்டு விட்டது. முதலில் அன்றுதான் லீகின் பிற தலைவர்களுக்கே இது தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனே செயற்குழுவிலும் ஏற்கப்பட்டது.
இன்னொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. தி.மு.க.. தலைவர் கருணாநிதியுடன், பொதுச் செயலாளர் அன்பழகனுடன் பேசி அவர்களது உதயசூரியன் சின்னத்தை லீக் வேட்பாளர்களுக்குத் தரக் கோரி,
சம்மதமும் அப்துஸ் ஸமது சாஹிப் பெற்றிருந்தார்.
உதய சூரியன் சின்னம் லீகிற்குத் தரக் கேட்டுத் தேர்தல் கமிஷனுக்குத் தி.மு.க. லெட்டர் பேடில் அன்பழகன் கடிதம் கொடுத்திருந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் அப்துஸ் ஸமது சாஹிப் நின்றார். வென்றார். தமிழகச் சட்ட மன்றத்தில் முதன் முதலாக நுழைந்தார். சின்னம் பற்றி இப்போதுள்ள தடைச் சட்டம் அப்போது இல்லை.
ஆனாலும் சட்டம் மன்றம் சென்ற உடனே ,அன்பழகனிடம் மறுகடிதம் வாங்கினார்.
" சின்னம்தான் உதய சூரியன் எனினும் அப்துஸ் ஸமது சாஹிபும் ,சம்ஷுல்
ஆலமும் எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. அவர்கள் முஸ்லிம் லீக் உறுப்பினரகள்தாம் " எனக் கடிதம் வாங்கிச் சட்ட மன்றச் சபாநாயகரிடம் அப்துஸ் ஸமது சாஹிப் கொடுத்து விட்டார்.
இந்திய கம்யூனிஸ்டில் இருந்து வெளியேறித் தனி கம்யூனிஸ்ட் கட்சி கண்டிருந்த தோழர் தா. பாண்டியனும் உதய சூரியன் சின்னத்தில்தான் நின்றார், வடசென்னைப் பாராளு மன்றத்தில் தொகுதியில்.
அவரும் இப்படி இரு கடிதங்கள் பெற்று அப்துஸ் ஸமது சாஹிப் மாதிரியே நடந்து கொண்டார்.
முஸ்லிம் லீக் அதுவரைக் காத்து வந்த சுய அடையாளம் முதன் முதலாகப்
படு வேகமாகக் கரைய ஆரம்பித்தது.
அப்துஸ் ஸமது சாஹிப் கட்சித் தலைமை ஏற்றிருந்த காலததில் லீகில் ஏராளம் ஏராளம் ஏராளம் இளைஞர் பட்டாளம் நிரம்பி இருந்தது. இந்த இளைய பட்டாளம், அப்துஸ் ஸமது சாஹிப்தான் முஸ்லிம் லீக் என்ற தீவிர நம்பிக்கை கொண்டிருந்தது.
அப்துஸ் ஸமது சாஹிப் காலத்தில் இருந்த பிற தலைவர்கள் அந்த இளைஞர்களுக்கு முஸ்லிம் லீக் வரலாற்றை முறைப்படிக் கற்றுத் தரவில்லை. இதுதான் மகத்தான பிழை.
இந்த இளைய பட்டாளத்தின் வேகம் கண்டு, அப்துஸ் ஸமது சாஹிபிற்கு
எதிர்க் கருத்து எவரும் கூறத் துணியவில்லை.
தி.மு. க.வில் எப்படி , கருணாநிதி தலைமை ஏற்ற பின் ஒரு இளைய பட்டாளத்தைக் கைவசம் வைத்துக் கொண்டு முன்னேறி வந்தாரோ, அப்படி ஒரு தோற்றம் முஸ்லிம் லீக் இயக்கத்துக்குள்ளும் அப்துஸ் ஸமது சாஹிபால் உருவாக்கப்பட்டது.

திங்கள், 11 ஜூலை, 2016

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 6 )

திராவிடக் கட்சிகளுடன் 1960-- ஆம் ஆண்டுகளில் இருந்து ஏற்பட்டிருந்த நட்புத் தொடர்பு முஸ்லிம்கள் மத்தியில் கொஞ்சம் கூடுதலாகவே பங்கெடுத்தது. 
நெருக்கம், முஸ்லிம்கள் பக்கம் சற்று அதிகம் இடம் பிடித்தது.
லீகின் நட்பை தன்வசம் நிலைப்படுத்திக் கொள்ளத் தி.மு.க,வும் அந்தரங்கத்
தீவிரம் காட்டியது. அதன் லாபத்தைத் தி.மு.க. மிகச் சரியாகவே கணித்திருந்தது. தி.மு.க.வின் பெரிய லாபகரமான அரசியல் வணிகம் அதுவாக இருந்தது.
முஸ்லிம் லீகின் எல்லா மேடைகளிலும் தி.மு.க.விற்குக் கிட்டத்தட்ட நல்லதோர் பங்கு தரப்பட்டது. காயிதெ மில்லத் மறைவுக்குப் பின்தான் இது அதிகம் அதிகம் சாத்தியமானது.
முஸ்லிம் லீக் நடத்தும் மீலாது மேடைகளிலும் தி.மு.க.வுக்குக் கூடுதலாக வாய்ப்பு வாரி வழங்கப்பட்டது. முஸ்லிம் லீக் மாநாடுகளில் தி.மு.க.விற்குக் கட்டாய இடம் இருந்தது, ஒரு சில இடங்கள் தவிர.
இதனால் தி.மு.க.வுக்கத்தான் படுபயங்கர லாபகரமான பாக்கியம் கிடைத்தது. தி.மு.க.வும் இவற்றைப் பூரணமாகச் சுவீகரித்துக் கொண்டது.
ஒரு கணிசமான வாக்கு வங்கி தி.மு.க.வின் கோட்டைக்குள் குவிந்தன.
தி.மு.க. பெற்றுக் கொண்ட அளவில் மூன்றில் ஒரு பங்குக் கூட முஸ்லிம் லீகிற்கு எதுவும் வந்து சேர்ந்து விடவில்லை. மாறாக லீகின் கோட்டைச் சுவர்களில் பொத்தல்கள் விழத் துவங்கின.
முஸ்லிம் லீக் இளைஞர்கள், முஸ்லிம் லீகின் சில பல தலைவர்கள், முஸ்லிம் சமுதாய மக்களில், ஒரு கணிசமான பகுதியினர் தி.மு.க.தான்
தம்மின் ஆத்ம பந்த நம்பிக்கை என நம்பத் தொடங்கினார்.
தி.முக.வின் தலைவர் மு.கருணாநிதி, முஸ்லிம் லீக் மாநாட்டு மேடைகளில் தோன்றி, " முஸ்லிம்களைத் தாக்க நினைப்பவர்கள் எங்கள் பிரேதத்தின் மீது ஏறிச் சென்றுதான் தாக்க முடியும் " என்று அவருக்கே உரிய பாணியில் வார்த்தைப் பின்னல்களைச் சரம் கோத்து வீசினார். என்ன நடக்கும் எனக் கருணாநிதி நினைத்தாரோ அது நடந்தேறியது.
கூட்டத்திலிருந்து முழு நம்பிக்கையோடு "நாரெயே தக்பீரும் அல்லாஹ் அக்பரும் மேகத்தைத் தொட்டுச் சிதறிச் சரிந்தன.
கருணாநிதி என்ன என்ன நினைத்துச் சொன்னாரோ அவைகள் நடக்கத் துவங்கின.
" தமிழக முஸ்லிம்கள் நாலா பக்கம் இருந்து தாக்கப்படப் போகிறார்கள் .அவர்களுக்குப் பாதுகாப்பு அரணே தி.மு.க.தான் "என்ற ஜோடனைக் கட்டி
எழுப்பப் பட்டது.முஸ்லிம்கள் மத்தியிலும் இப்படியொரு விநோத உணர்வு
வேர் பிடிக்கத் துவங்கியது.
இப்படி எல்லாம் ஒரு காலக் கட்டம் உருவாகத் துவங்கும்போது நம்மிடையே காயிதே மில்லத் இல்லை.காயிதெ மில்லத் காலத்தில் கருணாநிதியும் இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டார். அந்த அரசியல் நரிக்கு அதெல்லாம் தெரியம்.
காயிதே மில்லத் காலத்திற்குப் பின்னர் தமிழகத்திற்குத் திருச்சி அப்துல் வஹாப் ஜானி சாஹிப் தலைமை ஏற்றார்.
இவர் தலைமை ஏற்ற விதமே ஒரு தினுசானது. மாநிலச் செயற் குழுவிலோ, பொதுக் குழுவிலோ இவருக்கு ஆதரவாக ஐந்து உறுப்பினர்கள்
கிடையாது. இயக்கத்தினரிடையும் எந்தப் பெரும் செல்வாக்கும் இருந்தது இல்லை. ஆனாலும் காயிதே மில்லத்தால் இவருக்கு எம்.எல்.சி.பதவி பெற்றுத் தரப்பட்டு இருந்தது.
பிறகு எப்படி மாநிலத் தலைவரானார்? அது தனிக் கதை. இங்கு அவசியமில்லை. மாநில முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள்,மற்றும் தலைவர்களின் அந்தரங்க முடிவு அது. ஒரு தகவலாக மட்டும் இங்கே இருந்தால் போதுமானது.
ஆனாலும் ஒரு வகையில் ஜானி சாஹிப் உறுதியானவர். " முஸ்லிம் லீகை, முஸ்லிம் லீகாத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.கூட்டணிகளுடன் பிணைந்து விடக் கூடாது. "என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.
கூட்டணி தி.மு.க.விடம், உள்ளாட்சித் தேர்தல்களிலோ, சட்ட மன்றத் தேர்தல்களிலோ,பாராளு மன்றத் தேர்தல்களிலோ முஸ்லிம் லீகிற்கு உரிய பிரதிநிதித்துவத்தையும், உரிய தொகுதிகளையும் தி.மு.க.விடம் சண்டை போட்டே வாங்கி விடுவார்.
" கலைஞர் பாய் கலைஞர் பாய் " என்று அழைத்துக் கொண்டே காரியத்தைச்
சாதித்து விடுவார்.
அப்துல் வஹாப் ஜானி சாஹிபின் இந்த அணுகு முறையால் முஸ்லிம் லீக் இளைஞர்களுக்கு வேறு ஒரு வகையான உத்வேகம் தலையெடுக்க ஆம்பித்தது
இனிமேல் லீகர்களுக்குப் பதவி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அது வந்தே ஆக வேண்டும் எனும் உணர்வு நன்றாக எழுந்தது. பதவி பெறுவதற்குத்தான் முஸ்லிம் லீக் என்னும் உணர்வும் கூடவே வளர்ந்தது.
இப்படி ஒரு காலக் கட்டம் துவங்கும் வேளையில், அப்துல் வஹாப் ஜானி சாஹிப் தலைமைப் பதவி மாற்றப்பட்டது. அப்துல் வஹாப் ஜானி சாஹிபும் தமிழகச் சட்ட மன்ற மேலவை ( எம்.எல்.சி. ) உறுப்பினராக மூன்று முறைப் ( 18-- ஆண்டுகள் ) பதவி வகித்திருந்தார்.
இப்படிப் பதவி வகித்தவர்களால் சமுதாயத்திற்கு என்ன நம்மைகள் கிடைத்தன ?
தமிழக இயக்கத் தோழர்களே தனியே அமர்ந்து விருப்பு 

அடையாளம் கரைந்த அவமானம்...! ( 5 )

1971--ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் முஸ்லிம் லீக் சார்ந்த 
6--நபர்கள் தமிழகச் சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தில்லிப் பாராளு மன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தளபதி திருப்பூர் மைதீன் அண்ணன், எம்.ஏ. அப்துல் லத்தீப் சாஹிப், வந்தவாசி கே.அப்துல் வஹாப் சாஹிப், பள்ளப்பட்டி அப்துல் ஜப்பார் சாஹிப், கோதர் மைதீன் சாஹிப், அபு சாலிஹ் சாஹிப் ஆகியவர்கள் தமிழகச் சட்ட மன்ற உறுப்பினரானார்கள். பெரிய குளம் தொகுதியில் இருந்து மதுரை ஷரீப் அண்ணன் பாரளு மன்றத்திற்குத் தேர்வானார்.
இந்தத் தேர்தலில்தான் ஒரு தீங்கு தலைதூக்கியது.தென்ஆர்க்காடு மாவட்டப் புவனகிரி தொகுதியில், லால்பேட்டையைச் சேர்ந்த அபு சாலிஹ்
முஸ்லிம் லீக் உறுப்பினராக நிறுத்தப் பட்டார்.
ஆனால் இவருக்குள்ளே ஒரு பச்சைத் தி.மு.க.காரர் விழித்துக் கொண்டே இருப்பார்.அது சற்று வெளிப்படையாகவும் தெரியும்.
நான், 1968-69--யில் இருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்து வந்தேன்.
அபு சாலிஹ் சிதம்பரத்தில் வடுக நாதன் தியேட்டர் பக்கத்தில் அசைவ ஹோட்டல் நடத்தி வந்தார்.எனக்கு அப்போதே சற்று அறிமுகமானவர்தான்.
இவருக் குள்ளே தி.மு.க.காரன் விழித்துக் கொண்டிருக்கிறான் என்பது என் போன்றவர்களுக்குத் தெரியும்.
லால் பேட்டை நகர் முஸ்லிம் லீக் அதிக அழுத்தம் கொடுத்து இவரைப் புவனகிரி முஸ்லிம் லீக் வேட்பாளராகக் காயிதெ மில்லத் அனுமதியுடன் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்து விட்டது.
அபு சாலிஹ் புவனகிரி தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட அடி மனத்தில் ஆசைப்பட்டார். ஆனால் தி.மு.க.கூட்டணியில் முஸ்லிம் லீகிற்கு அத்தொகுதி கேட்டு வாங்கப் பட்டது. அதற்குப் பின்னணியிலும் அபு சாலிஹே இருந்தார். தி.மு.க.தொகுதியைப் பெற்றிருந்தால் இவருக்குத்
தொகுதி வந்திருக்காது.
தன் தொகுதி வெற்றி வாய்ப்பில் அவருக்கு ஒரு சந்தேகமும் வந்து விட்டது.
முஸ்லிம் லீக் இத் தொகுதியில் புதியதாக நிற்கிறது. தி.மு.க.உள் வேலை செய்து விட்டால் என்னாவது?
அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தார்.
நேரே சென்னை சென்றார். காயிதெ மில்லத் டெல்லி செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து விட்டார். இதை அறிந்து, அபு சாலிஹ் அங்கேயே விரைந்து சென்று விட்டார்.
தன் வெற்றி வாய்ப்பு குறித்துள்ள சந்தேகத்தைக் காயிதே மில்லத்திடம்
அபு சாலிஹ் விளக்கினார். அதற்கு ஒரு மாற்று வழியையும் அவரே முன் வைத்தார்.
"முஸ்லிம் வேட்பாளராகவும், அதே சமயத்தில் கூட்டணிக் கட்சியான "நம் தி.மு.க."வின் உதய சூரியன் சின்னத்திலும் நின்றால் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவரின் வெற்றி வாய்ப்பு நிச்சயமாகிவிடும்" எனக் கூறிக் காயிதெ மில்லத்திடம் அனுமதியைக் கேட்டார்.
காயிதெ மில்லத்திறகுக் கடுங் கோபம் வந்து விட்டது. ஆனாலும் அதைப் பூரணமாகக் காட்டாமல் " தி.மு.க.வின் சின்னத்தில் நிற்க வேண்டுமானால்
தி.மு.க. கட்சியில் போய்ச் சேர்ந்து நின்று கொள்ளுங்கள். முஸ்லிம் லீகில்
இதற்கு நிச்சயம் இடமில்லை"என்று கூறி விட்டுக் காயிதெ மில்லத் வேகமாகப் புகை வண்டி ஏறிச் சென்று விட்டார்.
இறுதியாக அபு சாலிஹ் முஸ்லிம்லீக் வேட்பாளராகவே நின்று வெற்றியும் பெற்றார்.
அதன் பின் ஐந்து ஆண்டுகள் சென்றது. பின்னர் முஸ்லிம் லீக் பக்கம் அவரைப் பார்க்க முடியவில்லை. இறுதியில் அண்ணா தி.மு.க. கரை வேட்டி கட்டிச் சிதம்பரத்தில் நடமாடிக் கொண்டிருந்தார்.
அபு சாலிஹ் புகை வண்டி நிலையத்தில் காயிதெ மில்லத்திடம் பேசிச் சென்று ஓரண்டு கடந்தது. காயிதெ மில்லத் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
பலப்பல முஸ்லிம் லீகர்களின் மன நிலையைத்தான் அபு சாலிஹ் அன்று பிரதி பலித்தார். அதனால்தான் காயிதெ மில்லத்தின் கோபமும், முடிவும் கடுமையாக அன்று வெளிப்பட்டது.
" முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், லீக் தரும் சின்னத்தில்தான் நிற்க வேண்டும்.தோழமைக் கட்சிச் சின்னங்களே யாயினும் அதில் நிற்கவே கூடாது. அப்படி நிற்பதாயின் அவர்கள் அந்தக் கட்சியிலேயே போய்த் சேர்ந்து கொள்ளட்டும்." என்ற காயிதெ மில்லத்தின் அபாய அறிவிப்பு அன்றே வெளியாகி விட்டது.
காயிதெ மில்லத் உடல் நலமும் பாதிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்து
மரணமும் நிகழ்ந்து விட்டது.
தோழமை என்பது வேறு. தாய்ச் சபை என்பது வேறு. நமக்குள் கூட்டணிதான் இருக்கிறது.திருமணம் போல கொடுக்கல் வாங்கல் உறவு முறை வைத்துக் கொள்ள வில்லை. இந்த அரசியல் ஞானம் தவறிப் போய்விடுமோ?என்ற அச்சம் காயிதெ மில்லத்திற்குக் கடைசிக் காலக் கட்டத்தில் இருந்திருக்கலாம்...? இறைவனே அதை அறியக் கூடியவன்.
முஸ்லிம் லீக் எப்படிச் சரியப் போகிறது? எங்கே கவிழப் போகிறது? என்ற முன்னறிவிப்பு முஸ்லிம் லீக் கீழ் வானத்தில் அன்றுதான் உதயமானது.

அடையாளம் கரைந்த அவமானம் . . . ! ( 4 )

ஒருசில நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை சமூகங்களுக்கு, இறைவன் வழங்கியருளும் தலைவர்களில் ஒருவராக வாழ்ந்து காட்டியவர், காயிதெ மில்லத்.
பலப்பலச் சோதனைக் காலங்களில் வேதனைகளைத் தானே ஏற்றுக் கொண்டும் தன்னுடைய ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டும் இறையருளால் நிலைகுலையாத உன்னத மனிதர் காயிதெ மில்லத்.
பென்னம்பெரிய உச்ச நிலை கண்டறிந்தவர். அப்போதும் தகுதி மீறித் தலை கனத்துக் கொள்ளாதவர். பல சில்லறை மனிதர்களால் அவருக்கு வீழ்ச்சிக் குழிகள் வெட்டப் பட்ட போதும் அதில் விழுந்தும் சாதனைப் படைத்தவர். அப்போதும் பதறித் துடித்து நொந்து கொள்ளாதவர்,காயிதெ மில்லத்.
இன்றைக்குச் சுமார் 60 , 70 வயதைத் தொட்டவர்கள் நேரில் பார்த்து பழகும் வாய்ப்புப் பெற்றிருந்த அந்த மாமனிதர் , நம் கண் முன்னே சாதரணமாக நடமாடிய மனித மாணிக்கம்.
காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் கண்டெடுத்துக் கட்டிக் காத்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் , அவர் காலத்தில் ஏற்றப் படிக் கட்டுகளிலேயே ஏறிச் செனறது.
எந்த மனிதரும் இந்த உலகில் ஒர் நாள் இல்லாது போகித்தான் ஆக வேண்டும். அந்த இறை நியமப்படி இன்று காயிதெ மில்லத் நம்மிடையே இல்லை.
காயிதெ மில்லத் தூக்கிச் சுமந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காயிதெ மில்லத்தின் தோள்களை இழந்த பின்னர், உச்சத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ் நோக்கி உருண்டு வருவதைச் சரித்திரம் நம் கண் முன் சித்திரம் தீட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தச் சரிவுக்குச் சமுதாயம் காரணமா? சமுதாயத்தை வழி நடத்திய தலைமைகள் காரணமா? எனற பட்டி மன்றங்களைச் சுவாரசியமாக
ஏசியும், பேசியும் கொண்டிருப்பது ஒரு கால விரையம்தான.
காலத்தை அவமதிப்பது வரலாற்றின் வக்கணையாகும்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எடுத்து வந்த சில நிகழ்வுகளையும்,
முஸ்லிம் லீகின் தலைமைகள், தங்களைத் தங்கள் இயக்கத்தவர்களிடம்
மவ்னமாகப் பெருமைப் படுத்திப் பிரச்சாரப் படுத்திய அணுகு முறைகளையும்,
தலைமைகளின் தனி அபிலாஷைகளையும் நாம் நம் கண்முன் நிறுத்திப் பார்க்கும் போது, வீழ்ச்சியின் விகிதாச்சாரம் படீரென வெளிப்பட்டு விடுகிறது.
காயிதெ மில்லத்திற்கு அடுத்து வந்த லீகின் அகில இந்தியத் தலைவர்களைத் தனியே இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக் கொள்ளுவோம்.
காயிதே மில்லத் காலத்திற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைமைகளையும், இயக்க நடவடிக்கைகளையும், ஜன்னல் வழியே வெளியே தெரியும் காட்சிகளைப் போல ஓரளவுக்கு இங்கே பார்த்து வைப்போம்.
ஏனென்றால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடக்கக் காலத்தில் இருந்து முஸ்லிம் லீகின் தலைமையை அகில இந்தியத்திலும், தமிழ் ராஜ்யத்திலும் காயிதெ மில்லத்தான் ஏற்றிருந்தார்.
இன்றையத் தமிழ் மாநிலம் என்னும் அன்றையத் தமிழ் ராஜ்யம் பெயரை முதலில் புரிந்து கொள்வதிலிருந்து, நமது கண்ணோட்டம் தொடங்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
தமிழ் ராஜ்யம் என்ற பெயரில்தான் தமிழ் மாநிலம் செயல் பட்டது.
இந்தப் பெயரை முஸ்லிம் லீக் விடாப்பிடியாக வைத்திருந்தது.
இதற்கு முக்கியக் காரணம், தமிழ் ராஜ்ய முஸ்லிம் லீக் பொதுச்செயலாளராக வாழ்வு முழுவதும் தொடர்ந்து பதவி வகித்து வந்த,
காயிதெ மில்லத் சகோதரர்(தம்பி ) K.T.M.அஹமது இப்றாஹிம் சாஹிப்தான்.
ராஜ்யம் என்பதை மாநிலம் எனத் தமிழ்ப் படுத்த வேண்டுமெனப் பலரும் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள்.கேட்டுக் கொண்ட அனைவரும் அன்றைய இளைஞர்கள். ஆனால் K.T.M. அதற்கு ஒப்புக் கொள்ள
மறுத்து விட்டார்.
ராஜ்யம் என்ற சொல்லுக்கு மாநிலம் என்பது சரியான மொழிபெயர்ப்பே இல்லை. மாநிலம் என்றால் விசாலமான இடம் என்று பொருள். உலகம் என்றும் பொருள்.
அதனால்தான் உமறுப் புலவர் சீறாப்புராணத்தில் நபிகளாரைக் குறிப்பிடும் பொழுது,
" மாநிலம் தனக்கோர் மணிவிளக் கெனலாய் " என்று குறிப்பிட்டுள்ளார்
" அண்ணல் நபி ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு மட்டுமா மணிவிளக்கு? "எனக் கேள்வி கேட்டு, மாநிலம் எனும் மொழிபெயர்ப்பில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டி மறுத்து விட்டார். அவர் சிறந்த அட்வகேட் அதனால் ஒரு சொல் முழுப் பொருள் தரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.
K.T.M.அஹமது இப்றாஹிம் சாஹிப் காலம்வரை மாநில முஸ்லிம் லீக் என்ற வார்த்தைப் பிரயோகப் படுத்தப்பட வில்லை.
K.T.M., காயிதே மில்லத்திற்கு முன்பே மரணித்து விட்டார். இதற்குப் பின்பு
தமிழ் மாநிலமும், தமிழ் ராஜ்யமும் கலந்தே பிரயோகிக்கப்பட்டது.
காயிதெ மில்லத் காலத்திற்குப் பின்னர் ராஜ்யம் என்ற பதம் முழுவதும் பூரணமாகப் புறம் ஒதுக்கப்பட்டது.
தமிழ் மாநிலம் என்ற சொல்லாக்கம் மட்டுமே இயக்கத்தின் பெயரோடு ஒட்டிக் கொண்டது.
இந்த இடத்தில் இருந்துதான் நம் கவனத்தை ஆழாகமாகக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இந்தக் காலக் கட்டம் தமிழகமெங்கும் சில சொல்லாடல்கள் தமிழாக்கம் பெற்றன. செந்தமிழ் என்ற முழக்கத்தோடு மக்களைச் சந்தித்தன.
மக்களிடம் செல்வாக்கும் பெற்றன.
அப்பொழுது அழகுத் தமிழ், பொது மேடைகளிலும் ஆரவாரம் செய்தது.
மக்கள் பயன்பாடு அதிகம் பெற்றிராத, மேட்டுக்குடி மாக்களே பயன்படுத்திய சமஸ்கிருத சொற்கள் அதற்குரிய கிழட்டுத்தனத்தோடு தற்கொலை செய்ய ஆரம்பித்தன.
இதற்குத் திராவிட முன்னேற்றக் கழகமே முக்கிய காரணம். அண்ணாவும் அவரின் சொற்பொழிவு பட்டாளமும் மேடைகளில், எழுத்து ஊடகங்களில், திரைத் துறைகளில் தமிழ்ச் சொல்லாடலையும், ஒரு தினுசான நாத்திகத்தையும் அதிக அளவில் மேலும் மேலும் முன்னெடுத்துச் சென்றார்கள்.
காங்கிரஸ் பேரியக்கம் மேட்டுக்குடிகளோடும் அவர்களது மொழியாடல்களோடும் சங்கமமாகிக் கிடந்தது.
பொது மக்கள் காங்கிரஸை வெறுக்கவும் ஜமீன்தார் கட்சி எனப் புறம் தள்ளவும் இது போதுமான காரணமாக உறுதியானது.
ஒதுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களின் செல்லப் பிள்ளையாகத் தி.மு.க. வளர்த்தெடுக்கப் பட்டது.
நவீனமாக அண்ணாவின் தலைமையில் புறப்பட்டு வந்த அந்த இயக்கம் ஆழமாகவே வேர் பதிக்க ஆரம்பித்தது.
தமிழக மக்கள் மத்தியில் இது ஒருமாதிரியான உத்வேகம்தான்.
இந்தக் காலக் கட்டத்தில், அதாவது 1960 --ஆம் ஆண்டுகளின் பக்கத்தில் காயிதெ மில்லத்தும் அண்ணாவும் ஒரு புதிய கூட்டணிச் சிந்தனைக்குள்
வரத் துவங்கினர்.
காங்கிரஸ் எப்போதுமே தமிழகத்தில் பாதிப் பலத்துடன் கூடிய வாக்குகள் கூடப் பெற்றிராத கட்சி.ஆனால் அதுதான் அரசாண்ட கட்சி.காங்கிரசின் எதிர்ப்புகள் சிதறிக் கிடந்தன. அதனால் வெற்றி பெற்று ஆளும் கட்சியாகக்
காங்கிரஸ் அரசாண்டது.
எதிர்ப்புகளை ஒன்றிணைத்தால் காங்கிரஸ் காணமற் போய்விடும்.
இந்தச் சூத்திர விதியைக் காயிதெ மில்லத் முன் வைக்க, தி.மு.க. முழுச் சம்மதம் தெரிவிக்க, சற்றுப் பொறுத்து இராஜ கோபாலச்சாரியார் பக்கம் வர, பொது உடைமை இயக்கங்களும் ஒரு மாதிரி ஒத்துழைக்கத் தமிழகத் தேர்தல் களத்தைக் கூட்டணியினர் சந்தித்தனர்.
இதன் முழு வெற்றியை 1967--ஆம் ஆண்டு சந்தித்தது.தி.மு.க. தமிழக ஆட்சியில் வந்து அமர்ந்தது. அன்று சரிந்த காங்கிரஸ், சல்லடை போல ஓட்டைகள் பெற்று இன்னும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக், தி.மு.க. கூட்டணி, 1962--யில் முதல் முதலாகத் தேர்தலைச் சந்தித்தது. அதில் தி.மு.க. முன்னேற்றம் கண்டது. ஆனாலும் முஸ்லிம் லீக் அதைச் சந்திக்க வில்லை.
1967--யில் கூட்டணிகளின் சாதனைப் பலத்தால் தி.மு.க.வுககு தமிழகத்தின் ஆட்சி கைக்கு வந்துவிட்டது.
இந்தக் காலக் கட்டங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு சோதனையும் கலந்து கூடவே வந்தது.
முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் தி.மு.க.வினரின் பேச்சாலும், எழுத்தாலும் அதிகமே கவரப்பட்டார்கள்.
முஸ்லிம் லீக் --தி.மு.க. அரசியல் கூட்டணிதான் என்ற உண்மை உணர்வு சற்று மங்கியது. கிட்டத்தட்ட தாயத்தார் உறவு போல நெருக்கம் சற்று அதிகரித்தது.
காயிதெ மில்லத் இதில் கவனம் செலுத்தினார் என்றே சொல்ல வேண்டும். உறவின் நட்பு குறையாமலும் தம் சமுதயத்தவர்கள் , இயக்த்தவர்கள் திசை தப்பிப் போகமலும் கவனமாக, நுணுக்கமாக அரசியல் காயை நகர்த்தி வந்தார்.
1967--ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இந்தச் சேதாரம் சற்றுக் கூடியது.
1971--யில் மு.கருணாநிதி தி.மு.க. கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை ஏற்றார். இவர் காலத்தில் இந்தச் சேதாரம் இன்னும் கொஞ்சம் மேல் நோக்கிப் படியேறியது.
இறைவன் நாட்டப்படி 1972--ஆம் ஏப்ரல் 4--ஆம் தேதி காயிதெ மில்லத்தும்
மறைந்து விட்டார்.
தி.மு.க.--முஸ்லிம் லீக் கூட்டணி தி.மு.க. ஆட்சிக்கு வலுசேர்த்தது.
ஆனால் தாய்ச்சபைக்குச் சலனத்தைக் கூடவே கூட்டியும் வந்தது.

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 3 )

அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கூட்டம் 1947--ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கராச்சியில் கூட்டப் பட்டது. இந்திய அரசு அனுமதி பெற்று
காயிதெ மில்லத்தும் மற்றும் சிலரும் கராச்சிக்குப் போய் அப் பொதுக் குழுவில் கலந்து கொண்டார்கள். தமிழ் நாட்டில் இருந்து லெப்பைக்
குடிக்காடு அப்துல் காதர் ஜமாலியும் காயிதெ மில்லத்துடன் சென்றிருந்தார்
அந்த நிகழ்வில் ஜின்னா சாஹிப், காயிதெ மில்லத்திடம் " இந்திய முஸ்லிம்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், எங்களிடம் கேளுங்கள். நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம் "என்றார்.
உடனடியாகக் காயிதெ மில்லத், " இந்த எண்ணத்தோடு எம்மை நீங்கள் அழைத்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நேற்று வரை நாம் ஒரே தேசத்தவர்கள். இன்று முதல் நாம் சட்ட ரீதியாக வெவ்வேறு தேசத்தவர்கள்.ஆனால் அண்டை தேசத்தவர்கள்.
எங்கள் தேச இஸ்லாமியர்களின் தேவைகளை, உங்கள் தேசத்தவர்களிடம் நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? எங்கள் தேசத்தவர்களிடம்தான் நாங்கள் கேட்டுப் பெற உரிமை பெற்றிருக்கிறோம்.
உங்கள் தேச இந்துச் சிறு பான்மையோருக்கு தேச உரிமைகளையும், பாது காப்புகளையும் நீங்கள் உறுதி செய்யுங்கள். அதுதான் எங்களுக்கும் நல்லதாக இருக்கும் "எனப் பதில் சொன்னார்.
ஜின்னா சாஹிப் தலைமையில் இருந்த அகில இந்திய முஸ்லிம் லீக் இங்கு இருந்து போது ,அதற்கு அன்றைய நிலையில் ஹபீப் பாங்கில்ரூபாய் 40 லட்சம் ரொக்கம் இருப்பு இருந்தது.
அந்த தொகையோடு ஜின்னா சாஹிப் பாக்கிஸ்தான் சென்று விட்டார்.
பின்னர், " அத்தொகையில் 17 லட்சம் ரூபாயை இந்தியாவில் உள்ள
முஸ்லிம் லீகின் பங்காக கொடுக்கக் கராச்சிப் பொதுக் குழு முன் வந்தது
கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜ கோபாலச்சாரியார், காயிதெ மில்லத்திடம் இது பற்றிக் குறிப்பிட்டார், " ஜின்னா சாஹிப் சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த விதத் தடையுமில்லை " என்றார், இராஜ கோபாலச்சாரியார்.
காயிதெ மில்லத்தின் பதில் ஆணித்தரமாக வந்தது. " Mr.இராஜ கோபாலச்சாரியார் அவர்களே! நம் அண்டைய அந்நிய தேசத்தினுடைய
எந்த ஒரு தொகையையும் பெற்றுக் கொள்ள, இந்திய இஸ்லாமியருக்கு எந்தவித உரிமையும் நியாயமும் இல்லை. அந்நியர்களிடம் பொருள் உதவி பெற்று
இந்திய இஸ்லாமியர்கள் தங்களைக் கட்டமைக்க வேண்டியதும் இல்லை.
நாம் அனைவரும் இந்தியர்கள் நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வோம் " என்றார் காயிதெ மில்லத்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப்பட்ட இந்தியர் அரசியல் இயக்கம்தான் என்பதை நிரூபணம் செய்தார் காயிதெ மில்லத்.
அதே நேரத்தில் இந்திய முஸ்லிம்களின் உரிமைகளை இந்தியப் பாராளு மன்றத்தில் கோரிக்கை வைத்துப் பெற்று அதை உறுதியும் செய்தார், காயிதெ மில்லத்.
மராட்டியம் பகுதியைச் சேர்ந்த சட்ட மேதை முஹமது அலி சாக்ளா, காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் மத்திய அரசின் சட்ட அமைச்சராக
இருந்தார். அப்போது பண்டித நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சர்முஹமதலி அலி கரீம் சாக்ளா ஒரு சட்ட முன் வடிவம் கொண்டு வந்தார்.
" இந்தியாவில் இறந்து போனவர்களின் பிரேதங்கள் இனி புதைக்கப்படக் கூடாது. அவை எரிக்கப்படத்தான் வேண்டும். அதுதான் விஞ்ஞான பூர்வமானது" "என்பதுதான் அந்தச் சட்ட முன்வடிவம்.
இதற்கு இந்தியப் பாராளு மன்றத்தில் காயிதெ மில்லத் ஒருவர்தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார்.
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு
நேர் எதிரானது, இப்போது அறிமுகப் படுத்தும் சட்டம் முன்வடிவம்.
இந்திய மக்கள் கடைபிடிக்கும் மதங்களுக்கு மார்க்கங்களுக்கும் இது முற்றிலும் முரண்பட்டது.
இந்துப் பெருங்குடி மக்களிலும் சில பிரிவினர் தங்கள் பிரேதத்தை எரிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
கிருத்துவ மக்களும் இதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இஸ்லாமியர்கள் ஒருபோதும் இதை அங்கீகரித்துக் கொள்ளவே மாட்டார்கள். அவரவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கும், கடைபிடித்துக் கொண்டிருக்கும் தத்துவங்களுக்குப் பூரணமாக முரண் பட்டிருக்கிறது.
இந்தச் சட்ட முன்வடிவு அறிமுகக் கட்டத்திலேயே திரும்பப் பெறப்பட வேண்டும. விஞ்ஞானமும் புதைப்பதே சுகாதார பூர்வமானது என்கிறது "
எனவே இந்த சட்ட வடிவைத் திரும்பப் பெறுங்கள் " எனக் காயிதெ மில்லத் வாதிட்டார். இந்தச் சட்ட முன்வடிவு அறிமுகக் கட்டத்திலேயே நேரு அரசால் திரும்பப் பெறப்பட்டது.
முஹமது அலி கரீம் சாக்ளா விடவில்லை தொடர்ந்து பேசினார். " Mr.முஹம்மது இஸ்மாயில் சாஹிபும் அவரைச் சார்ந்தவர்களும் வேண்டுமானால், அவர்கள் மரணத்திற்குப் பின்னால் அவர்கள் உடலை மண்ணிற்குள் புதைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொள்ளட்டும். முஹமதலி அலி கரீம் சாக்ளா வாகிய என் பிரேதத்தைக் கண்டிப்பாக எரிக்கத்தான் வேண்டும் என இந்த அவையில் பதிவு செய்து கொள்கிறேன் "எனச் சாக்ளா அறிவித்தார்.
காயிதெ மில்லத்தும், " சட்ட அமைச்சரின் இந்த மன்றத்து இந்தக்
கோரிக்கையை இறைவன் நிறைவேற்றித் தரப் பிரார்த்திக்கிறேன்" என்றார்.
பிந்தையக் காலத்தில் அதுதான் நடந்தது.
காங்கிரஸில் பதிவிகளைச் சுகித்து விட்டு, பின்னர் அதிலிருந்து விலகி வெளியேறி "ஜனசங்கம்"( இந்நாள் பா. ஜ. க. ) சட்ட வடிவமைப்புக் குழு உறுப்பினராக மாறிப் போனார்.
சில ஆண்டுகள் சென்ற பின் ஒருநாள் முன்னாள் பம்பாய் நகர் கிளப் ஒன்றில் சீட்டாடிக் கொண்டிருந்தார்.நடுவில் எழுந்து சிறுநீர் கழிக்கக் கழிப்பறை
சென்றார். அங்கேயே மாரடைப்பால் மரணத்தைச் சந்தித்தார்.
பாராளு மன்றத்தில் அவர் ஏற்கனவே வைத்திருந்த வேண்டுகோள்படி
எரியூட்டப் பட்டார்.
சென்னை சட்டசபையில் மீண்டும் மீண்டும் மீண்டும் காயிதெ மில்லத் போராடி நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் இந்தச் சுரங்கத்தை
ஆந்திராவுக்குக் கொண்டு செல்லக் கடும் முயற்சி செய்தது. காங்கிரஸ்
இயக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து காமராஜர் போன்ற பெருந்தலைவர்களும் சற்று அமைதி காத்தனர்.
காயிதெ மில்லத் மட்டும் இந்தத் திட்டத்தை வலியுறுத்தி வந்தார். தென் பகுதி இந்தியாவில் நெய்வேலி மிகச் சிறந்த பகுதி என்பதைப் பல நிபுணர் குழுக்களின் அறிக்கை பெற்றுச் சட்ட மன்றத்தில் விடாது போராடிப் பெற்றார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய இஸ்லாமியரின் உரிமைகளைப் பாராளு மன்றத்தில் போராடி பெற்றுத் தந்திருக்கிறது. அதுவும் இந்திய அரசியல் சட்ட விதிகளின் படிப் பெற்றுத் தந்திருக்கிறது.
அதே வேளையில் ஒட்டு மொத்த இந்தியர்களின் உரிமைக்காகவும் பாராளு மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் போராடி இருக்கிறது என்பதற்கு இவைகளெல்லாம் ஒரு முன்மாதிரி நிரூபணங்கள்.
( காயிதெ மில்லத் காலத்திற்குப் பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் இந்த முன் மாதிரி அடையாளங்கள் எங்கே போயின?
அடையாளங்கள் கரைந்து போன காரணங்கள் எங்கே மறைந்து கிடக்கின்றன என்பதை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்ப்போம்.

அடையாளம் கரைந்த அவமானம். . . ! ( 2 )

1947-ஆண்டு ஆகஸ்ட் 1 4-ஆம் தேதி ஆங்கில ஏகாதிபத்தியம் தன் ஆட்சி அதிகாரத்துக்குக் கீழ் இருந்த இந்தியத்தை இரண்டு கூறு போட்டு பாக்கிஸ்தானைத் தனி நாடாகப் பிரகடனப் படுத்தியது.
அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 15 - ல் மீத முள்ள பிரதேசத்தை இந்தியா எனத் தனி நாடாக அங்கீகரித்துக் கொண்டது.
பிரதேசங்கள் இரண்டாகப் பிரிக்கப்படும் அவசியத்தால், ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எல்லைகளை வகுக்க ஒப்பந்தம் செய்தது.
இந்திய சுதந்திரத்தைத் தலைமை யேற்று நடத்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் அன்றையத் தலைவர் மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் காங்கிரஸ் சார்பாக அதில் கையொப்பம் இட்டார்.
பாக்கிஸ்தான் சார்பாக முஸ்லிம் லீக் தலைவர் காயிதே ஆஸம் முஹமதலி ஜின்னா கையெழுத்திட்டார்.
மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணி சார்பாக மவுண்ட் பேட்டன் பிரபு
கையொப்பம் இட்டார்.
சட்ட ரீதியாக இரண்டு நாடுகள் உதயமாகி விட்டன.
இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு வரை , இந்திய முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாகத் தன்னைக் காட்டி வந்த காயிதே ஆஸம் முஹமதலி ஜின்னா 1947-ஆகஸ்ட் 1 4-ஆம் தேதிக்குப் பின் பாக்கிஸ்தான்
முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக மாறி இந்தியத்தில் இருந்து வெளியேறி விட்டார்.
இந்தியத் தலைவர் புதிய அண்டை நாட்டுத் தலைவராக மாறிப் போனார்.
இந்தியாவின் அண்டைப் பிரதேசம் அன்றுமுதல் அந்நியப் பிரதேசமாகி விட்டது.
இது அரசியல் வரலாறு . ஆனால் மக்கள் வரலாறு வேறு விதமாகப் பதிவானது.
இந்து--முஸ்லிம் என மதப் போராட்டங்களாக உரு மாற்றப் பட்டன. மண், மற்றும் மனிதப் பிரிவினைகள் மதப் போராடங்களாக. விரோதக் களங்களாக
மோசமாக வடிவமைக்கப் பட்டன.
இந்துக்கள்-முஸ்லிம்கள் எனும் சகோதரர்கள் மத்தியில் குரோதங்கள் விதைக்கப் பட்டன. அதன் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் இரு பிரிவினர்களிலும் கொல்லப் பட்டனர்.
5,00,000 பேர்களுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டனர்.
முதல் நாள் வரை இந்தியர்கள் என அரசியல் சட்டத்தால் குறிக்கப் பட்ட மக்கள், அடுத்த நாள் தொடங்கி மத மக்களாக மாறி மனிதத் தன்மையை
முழுவதுமாகக் குழி தோண்டிப் புதைக்கத் தலைப் பட்டனர்.
இந்தியத்திலிருந்து ஜின்னா சாஹிப் தூக்கிச் சென்ற முஸ்லிம் லீக் , பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டது.
காயிதே ஆஸத்திற்கு இந்திய மக்களைத் தெரிந்திருந்த அளவு, பாக்கிஸ்தான் மக்களை முழுமையாகத் தெரிந்திருக்குமா? என்ற கேள்விக்கு இன்று வரை பதில் என்பது தேடப்படக் கூடிய ஒன்றாகத் இருக்கிறது.
இந்தியத்துக்குள் இந்தியப் பூர்வீக மக்களாய் வாழ்ந்து கொண்டு , மார்க்கத்தால் இஸ்லாமியர்களாகத் திகழும் மக்கள் அனைவரையும்,
சில மத வன்முறையார்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். அப்படி அவர்களைச் சிலர் மாற்றி இருந்தனர்.
"இந்திய முஸ்லிம்களைப் பாக்கிஸ்தானுக்குத் துறத்தி விடுவோம். " எனக் கோஷங்கள் போட்டு, ஆயுதம் தாங்கி மிகச் சிலர் வெறியாட்டம் போட்டனர்.
பாக்கிஸ்தானில் மட்டும்தான் முஸ்லிம்கள் வாழ்வது போல ஒரு மட்டரகமான பிரேமை ஏற்படுத்தப் பட்டது.
வரலாற்றில் இதற்கும் முன்னமே சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னே இஸ்லாம் மக்கா நகரின் வாழ்வு முறையாக அறிமுகமாகி இருந்தது.
அந்த இஸ்லாம் பாரசீகத்தில் பரவியது. கிரேக்கத்துக்குச் சென்றது.
ஈரான்,ஈராக், எகிப்து,ஏமன் எத்திரோபியா (அபு ஷினியா) தாய்பு, பிரதேசங்களில் நடமாடியது. துருக்கி, ரஷ்யா பகுதிகளில் பவனி வந்தது.
ஆப்கான், இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்,ஆப்ரிக்க நாடுகள்
இங்கேயும் எழுச்சி பெற்றிருந்தது.
லண்டன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஐரோப்பிய நாடுகள், பர்மா, மலேசியா இந்தோனேசியா,சிங்கப்பூர். புருனே, இலங்கை இன்னும் இன்னும் அநேக நாடுகளைச் சென்றடைந்து இருந்தது.
இந்த அத்தனைத் தேசத்தின் மக்களில் பலரும் இஸ்லாமியக் கோட்பாட்டை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் இஸ்லாமியர்கள். ஆனாலும் அவர்கள் அனைவரும் தம்தம் தேசத்துப் பூர்வீகக் குடிமக்கள்தாம்.
இந்த வரலாற்று உண்மை மறைக்கப் பட்டுப் பாக்கிஸ்தான் இஸ்லாத்தின்
பூர்வீகம் என்பது போல R.S.S. போன்ற அமைப்புகள் பகிரங்கப் பொய்ப் பிரச்சாரத்தைப் படுவேகமாகவும் மோசமாகவும் கிளப்பியது.
"இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடி விடுங்கள்"
என்று இன்று வரைத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது.
பாக்கிஸ்தானுக்கு இஸ்லாம் கடந்த சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான்
வந்து சேர்ந்தது. இந்த உண்மை கூட முழுமையாக மூடி மறைக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்களாகிய இஸ்லாமியர்களுக்கு அடிப்படை உரிமை , நியாயம் கோரி அரசியல் அமைப்பு இயக்கம் தேவைப்பட்டது.
அது ஒதுக்கப் பட்டோரின், புறக்கணிக்கப் பட்டோரின் பாதிப்பின் கால நிர்பந்தம்.
காயிதெ மில்லத் முஹமது இஸ்மாயில் சாஹிப் தலைமையில் இன்னும் பல இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி ஆலோசித்தனர்.
இந்திய இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவ உரிமை கோரி வெளிப்படையான, பகிரங்கமான, ஒளிவு மறைவு அற்ற ஒரு அரசியல் இயக்கத்தை முன்னெடுத்தனர். அதுதான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.
இந்தியத்தின் வடக்கு-மேற்கு-கிழக்கு மாநிலங்கள் முழுமையாக இதற்கு உடன்படவில்லை. சிறிய அளவு ஆதரவே வழங்கின. தென்னிந்திய மாநிலங்களாக கர்நாடகம், ஆந்திரம் ஓரளவு சம்மதம் காட்டின.
தமிழகம், கேரளம் சற்றுக் கூடுதலாக முன்வந்தன. கேரளம் குறிப்பிடத்தக்க
அளவில் தீவிரம் காட்டியது.
சென்னை மவுண்ட் ரோட்டில்(அண்ணா சாலை) உள்ள அரசுக்கு உரிமையான அன்றைய ராஜாஜி ஹாலில் அரசு அனுமதி பெற்று ஒன்று கூடி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தை அறிவித்தார்கள்.
ராஜாஜி ஹாலில்தான் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பிரசவமானது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இஸ்லாமிய மத, மார்க்க, ஆன்மீகப் பிரச்சார இயக்கமல்ல. இஸ்லாமியரின் அரசியல் உரிமை இயக்கம். இஸ்லாமியர்களின் உரிமைகளையும், பாது காப்புகளையும், இந்திய அரசியல் அடிப்படைச் சட்டம் வழங்கி யுள்ள விதிகளின் அடிப்படையில்
முன்னெடுத்துப் போராடும் முழுமையான அரசியல் இயக்கம்.

அடையாளம் கரைந்த அவமானம். ..! ( 1 )

1947-ஆம் ஆண்டுக்கு முன்னாலுள்ள இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆளுமைக்குக் கீழ் பிரச்சினைகளால் சூழப்பட்ட இந்தியாவாகத்தான் இருந்தது.
இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராகச் சுதந்திரப் போராட்டஙகளை இந்தியா நிகழ்த்திக் கொண்டே வந்திருக்கிறது.
ஆங்கில ஆதிக்கம் இந்திய எல்லையைத் தன்போக்கிற்கு ஏதுவாக தாறுமாறாக விரித்து வைத்திருந்தது.
இன்றைய இந்தியாவுடன் அன்றைய பாக்கிஸ்தானும் இந்தியாவாகவே கருதப் பட்டது.
பங்களா தேசமும் இந்த வரைபடத்துக்குள் ஒட்டி இருந்தது. ஆப்கானிஸ்தான்
உடைய ஓரம் சாரமும் இந்தியா என்ற இணைப்பில் இருந்தது.
இந்த வரைப் படத்தை அப்படியே நம் மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆப்கான் முழுப் பகுதியும் அன்றும் இந்தியாவுக்குள் இல்லை. ஆப்கானுக்கென்று ஒரு தனிக் குணாம்சம் உண்டு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அது ஆப்கானுடன் ஒட்டிக் கொண்டே வருகிறது.
ஆப்கான் முழு தேசத்தையும் உலகின் எந்தவொரு வல்லரசாலும் தன் கட்டுப் பாட்டில் முழுக்க வைத்திருக்க முடிந்ததே இல்லை,
இப்படிக் கூடச் சொல்லலாம், உலகின் எந்த வல்லரசானாலும் ஆப்கானிடம்
தோற்றுத்தாம் போய் இருக்கிறது. ஆங்கில ஆதிபத்தியமும் இதற்கு விதி விலக்கல்ல.
ஆப்கான் எப்போதும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ளும். தன்னைத் தானே படுகுழிக்குள் தள்ளி தானே மண்ணை வாரிப் போட்டு மூடியும் கொள்ளும் .
புராண கால மகா பாரதப் பாத்திரமான சகுனியின் தாய் நாடும் ஆப்கான்தான்.
ஆப்கான் காந்தாரத்தின் அரசியல் எப்போதுமே சதி நிறைந்ததாகவும் ஆக்கம் கொண்டதாவும் வீழ்ச்சி பெற்றதாகவும்தான் எப்போதும் வரலாற்றில் இருந்து வருகிறது.
பாக்கிஸ்தான் பாமரத் தனத்திலும் அடிமைகள் குணத்திலும் ஏதாவது ஒரு தலைமைக்குக் கீழே கண்ணை மூடிக் கொண்டு தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் விநோதமான பூமி.
வங்காள தேசமும் எழுச்சி பெறாத அடிமைத் தனம் கனிந்த பூமியாகத்தான்
திகழ்ந்தது.
இன்றைய நம் இந்தியா என்ற எல்லைப் பகுதியில் இந்த அத்தனை தன்மைகளும் கலவைகளாக நிரம்பி இருந்தன.
இநத முழு இந்தியாதான் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க கால காலமாகச் சுதந்திர வேட்கைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் வரலாற்றை நாம் நம்பிக் கொண்டிருந் திருக்கிறோம்.
இந்தியச் சுதந்திர வரலாற்றைத் தலைமை தாங்கிய தலைவர்கள் அனைவரும் எங்கே தயாராகி இருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து பார்த்தால்,
ஒரு வெளிச்சம் சில உண்மைகளை நமக்கு வெளிப்படுதிக் காட்டுகின்றன.
இன்றையப் பாக்கிஸ்தான் பகுதியில் இருந்து எத்தனைத் தலைவர்களை
சுதந்திர வரலாறு நமக்கு அடையாளம் காட்டுகின்றன?
எவ்வளவு மக்கள் போராட்டங்கள், எழுச்சி, புரட்சி வடிவங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளன?
பங்களா தேசத்தை நோக்கி யும் இப்படி ஒரு பார்வையை நாம் அனுப்பிப் பார்த்தால் அங்கேயும் இதே கேள்விகள் நம்மை எதிர் நோக்கி நிற்கின்றன.
ஆப்கான் ஓரஞ் சாரப் பகுதிகளில் அன்று நடந்த ஒட்டு மொத்த இந்திய சுதந்திரப் போராட்டத்தில், எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான் நமக்குத் தென்படுகிறார். அவர் சார்ந்த மக்கள் போராட்டக் குழு காட்சிப் படுகின்றன.
ஆனால் இன்றைய இந்தியப் பகுதியின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும்
சுதந்திர வரலாறு சகட்டு மேனிக்கு ஏராளமாக தலைமைகளைப் பதிவு செய்திருக்கிறது.
இமயமலை தொடங்கி குமரிக் கடல்வரையாக வட, தென் எல்லைகளிலும்
மேற்கு கிழக்கு பகுதிகளான அரபிக்கடல் , வங்காள விரிகுடாக்கடல் முடிய உள்ள பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் கூட்டங் கூட்டமாகச் சுதந்திரப் போராட்டத்தில் போராடி இருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள்.உயிர்ப் பலி வழங்கி இருக்கிறார்கள்.
இங்கிருந்துதான் மகாத்மா காந்தி உருவானார். சட்ட மாமேதை அம்பேத்கார்
தயாராகினார். சுபாஷ் சந்திர போய் முன் எழுந்துள்ளார். மவ்லானா சவுக்கத் அலி, முஹம்மதலி என்னும் அலி சகோதரர்கள் ,அவர்களின் தாயார் பீவி அம்மையார்,முஹமதலி ஜின்னா போன்றோர்கள் வெளி வந்தார்கள். லாலா லஜபதிராய், லோக மான்ய திலகர், கோபால கிருஷ்ண கோகலே. கப்பட்ட தமிழர் வ.உ.சிதம்பரனார்,சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி, பகத் சிங், ஜக்தேவ், போன்ற லட்சக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் இன்றைய இந்திய எல்லைக்குள்தான் முளைத்தெழுந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
1947-ஆம் ஆண்டில் சுதந்திம் வந்து விட்டது. இந்தியாவில் ஆசிய ஜோதி பண்டித நேரு பிரதமரானார்.இராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியானார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியானார்.
பாக்கிஸ்தானுக்கு முஹமதலி ஜின்னா தலைமை தாங்கினார்.பாக்கிஸ்தான் தனி நாடானது.பங்களா தேசம் பாக்கிஸ்தானில் மறைந்து இருந்தது.
பாக்கிஸ்தானும் பங்களா தேசமும் பாரதூரமான அளவு சுதந்திரப் போர்க் களத்தைச் சந்தித்ததாகச் சரித்திர ஏடுகள் பெரிய அளவில் பதிவு செய்திருக் வில்லை.
பாக்கிஸ்தானுக்கு முஹமதலி ஜின்னா தலைமை தாங்கினார். பாக்கிஸ்தான் தனி நாடானது. பங்களா தேசம் பாக்கிஸ்தானில் மறைந்து இருந்தது.
பாக்கிஸ்தானும் பங்களா தேசமும் பாரதூரமான அளவு சுதந்திரப் போர்க் களத்தைச் சந்தித்ததாகச் சரித்திர ஏடுகள் பெரிய அளவில் பதிவு செய்திருக் வில்லை.
இன்றைய இந்திய எல்லைக்குள் நடந்து வந்த சுதந்திரப் போராட்ட முழுச் செய்திகளையும் அன்றைய பங்களா தேசம் உள்ளிட்ட பாக்கிஸ்தான் மக்கள் பூரணமாக அறிந்திருந்தார்களா? என்பதற்கே போதுமான ஆதாரங்கள் இல்லை.
அன்றையப் பாக்கிஸ்தானியர்கள் சுதந்திர வேட்கையின் முகவரியைக் கூடச் சரியாகத் தெரிந்திருக்க வில்லை.
அதாவது பங்களா தேஷ் உள்ளிட்ட பாக்கிஸ்தான் இன்றைய இந்தியாவோடு
எந்த விதமான ஆழமான உறவுகளையும் , உணர்வுகளையும் வைத்திருக்கவே இல்லை.
அது ஒரு தனி நாடு போலத்தான் இருந்தது. அதனால்தான் இந்தியாவில்
அகில இந்திய முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த குஜராத்திக்காரர் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்தவர் பிரிந்து போன பாக்கிஸ்தானின் முதல் ஜனாதிபதியாகப் போய் அமர முடிந்தது.பாக்கிஸ்தான் எல்லைக்குள்
அப்படி ஒரு தலைமையே உருவாகவில்லை.
பங்களா தேஷில் போர்க் படை தலைமை தாங்க முஜிபுர் ரஹ்மானுக்கு இந்திரா காந்தி ஆதரவு தர புத்தம்புது பங்களா தேஷ் முளைத்தெழுந்து.
பாக்கிஸ்தானில் இருந்து தன்னைத் துண்டாடித் தனி நாடகத் தன்னைப் பிரகடனப் படுத்தியது.
ஒரு சூட்சமம் புரிகிறது.பாக்கிஸ்தானியர்களும் பங்களா தேஷத்தவர்களும் தங்களை இந்தியர்களாக எப்பவுமே ஒப்புக் கொள்ளவே இல்லை
அனைவருக்கும் தலைமேல் ஆங்கில ஆட்சி அதிகாரம் சிம்மாசனம் போட்ட
அமர்ந்து இருந்தது. இந்த ஒன்றுதான் இவர்களுக்குள்ள ஒரே ஒற்றுமை.
ஆங்கில ஆட்சித் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு லண்டனுக்குப் போகும் முன் இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டுத் தனித் தனி உதிரிகளாக்கிச் சென்று விட்டது.
இந்தியா குஜராத்திககாரரான காந்திஜி பாதையைக் கண்டெடுத்து நின்றது.
பாக்கிஸ்தான் மற்றொரு இந்தியக் குஜராத்திக்காரரான முஹமதலி ஜின்னா வழியைப் பின்பற்றியது.
முஹமதலி ஜின்னாவின் பழைய அகில இந்தியராக முஸ்லிம் லீக் பாக்கிஸ்தான் லீகாக மாறி முதல் தலைமை ஏற்றது. ஆனாலும் முழு பாக்கிஸ்தானியரும் முஹமதலி ஜின்னாவின் முஸ்லிம் லீகை ஒப்புக் கொள்ளவில்லை. முஹமதலி ஜின்னா பாம்பாயில் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். அவர் கழுத்திலும் ஆழமாகப் பதிந்தது. இதன் வீரியம் அவருக்குள் இருந்தது. ஏற்கனவே காச நோய் பாதிப்பும் அவருக்கு உண்டு. அவர் மரணத்துக்கு இவைகளே போதுமான காரணங்களாக இருந்தன. அவர் அள்ளிச் சென்ற முஸ்லிம் லீகும் தள்ளாடிக் தள்ளாடி விழுந்து எழுந்து நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இநதியத்திலும் மகாத்மா காந்தி ஒரு வெறிப் பிடித்த இந்துத்துவ இந்தியனால் கொல்லப் பட்டார்.அவர் முன்னெடுக்க நினைத்த காங்கிரஸும் சரிந்து,நிமிர்ந்து, தள்ளாடி நடந்து கொண்டிருக்கிறது.
பாக்கிஸ்தான் மக்கள் சுதந்திரப் போராட்ட விலை கொடுக்காமல் உரிமையைப் பெற்று விட்டார்கள். இந்தியப் போராட்ட மாவீரர்களின் ரத்தத்தைத் தமக்குச் சாதகமாக்கி எந்தச் சங்கடங்களும் இல்லாமல் உரிமை கண்டார்கள். இதுதான் வரலாற்று மோசடி.
இதற்கு ஜின்னாவே சாட்சி வாக்கு மூலம் தருகிறார். "நான் ஒரு டைப் ரைட்டர்,ஒரு டைப்பிஸ்ட் வைத்துக் கொண்டு பாக்கிஸ்தானைப் பெற்றேன்" என்று குறிப்பிட்டார்.
இப்படி ஒரு தேசம் உருவானால் அது பின்னால் ஏராளமானக் கோரக் கொடிய விலை கொடுக்க நேரும் எனபது தான் சரித்திரச் சத்தியம்.
இன்று பாக்கிஸ்தானில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
( இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பற்றி நாளைத் தொடருவோம் )