ஞாயிறு, 30 நவம்பர், 2014

சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?

கேள்வி: அருள்தந்தை அவர்களே, சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?
வேதாத்திரி மகரிஷியின் விடை: "சத்து" என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். "சித்து" என்பது உயிரைக் குறிக்கும். "ஆனந்தம்" என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். ஆக "மெய்ப்பொருள் - உயிர் - மனம்" இந்த மூன்று நிலைகளையும் "சத்து - சித்து - ஆனந்தம்" என்றும், அவற்றைச் சேர்த்து "சச்சிதானந்தம்" என்றும் வழங்குகிறோம்.
இதில் "சித்து" என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள்.
ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.

புதன், 26 நவம்பர், 2014

அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா



அல் ஆழிமுல் பாழில், வல் குத்புல் வாஸில், மாதிஹுர் றஸூல்அஷ்ஷெய்கு ஸதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ! மௌலவீ HMM இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் எனும் நூலிலிருந்து இம் மகானவர்கள் ஹிஜ்ரி 1042 இல் இந்தியாவிலுள்ள காயல்பட்டணத்தில் மலர்ந்தார்கள். இவர்களின் தந்தை அற்புதங்கள் பல நிகழ்த்திய அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் அவர்களாகும் . ஹழ்றத் சுலைமான் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள். முறையே, 01- அஷ்ஷெய்கு ஷம்சுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 02- அஷ்ஷெய்கு ஷிஹாபுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 03- அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 04- அஷ்ஷெய்கு அஹ்மத் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி 05- அஷ்ஷெய்கு சலாஹுத்தீன் வலீ றஹ்மதுல்லாஹ் அலைஹி ஆகியோராவர்கள் . இவர்கள் அனைவரும் வலீமார்களேயாவர். அவர்களில் மூன்றாமவரே நமது ஞானக்கடல், ஆஷிகுர் றஸூல் குதுபுஸ்ஸமான் அஷ்ஷெய்கு சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களாகும் .

தந்தை சுலைமான் வலீ , இவர்களுக்கு “சதகத் ” என்று தமது தந்தையின்பெயரையே சூட்டினார்கள் . கல்வி தங்களது ஏழு வயதில் தன் தந்தையிடம்திருக்குர்ஆனை ஓதி முடித்து, அதை மனனம் செய்து மார்க்க அடிப்படைச் சட்டங்களைக் கற்ற சதகத் ( றஹ் ) அவர்கள் உயர் கல்விக்காக தன் தந்தையின் பள்ளித் தோழரும் கீழக்கரை தாறுல்  உலூம் அறபுக் கல்லூரியின் அதிபருமான மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களிடம் சென்று மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் திறன் படக்கற்று தலை சிறந்த ஆலிமாகத் திகழ்ந்தார்கள். திருமணம் திருமண வயதையடைந்த மகான் அவர்களுக்கு பெற்றோர் மேலைப்பாளயத்தைச் சேர்ந்த இறை நேசர் பரம்பரையில் தோன்றிய மர்யம் எனும் மங்கையைத் திருமணம்செய்து வைத்தனர். மனைவியுடன் காயல்பட்டணம் வந்த மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அங்கு வாழ்ந்து, ஒரு ஆண் பிள்ளையையும் ஐந்து பெண் மக்களையும் பெற்றார்கள் . அவர்கள் முறையே, அஷ்ஷெய்கு முஹம்மது லெப்பை றஹ்மதுல்லாஹ்அலைஹி, கதீஜா, ஆமினா , ஸைனப்,உம்மு ஹானீ , ஸாறா ஆகியோராவர் .

இப்படியும் ஓர் அற்புதம் ஷெய்குனா சதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் அதிக காலங்களில் மக்காவுக்குச்சென்றே ஐந்து வக்துக்களையும் தொழுது வந்தார்கள் . ஒரு நாள் வீட்டில் ஒரு குழந்தையைத் தூக்கியவர்களாக இருக்கும் நிலையில் கஃபாவுக்குச் செல்லும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது . ( இந்நிலை அவ்லியாஉகளுக்கும் , நபீமார்களுக்கும் ஏற்படும் நிலையாகும் .) குழந்தையுடன் சென்ற அவர்கள் கஃபாவில் ஒரு இடத்தில் குழந்தையை வைத்து விட்டு இறை முனாஜாத்தில் இருந்து அவர்கள் அந்த ஆன்மீக நிலையிலேயே ஊர் வந்து விட்டார்கள் .

ஊர் வந்த போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நிலை தணிந்து தான் தூக்கிச்சென்ற குழந்தையின் நினைவு வந்தது . அதை அங்கிருந்த  முஹிப்பீன்களிடம் சொல்லும் போது அவர்களுக்கு பணிவிடை செய்யும் “காதிமஹ் ” பணிப்பெண் அதைக்கேட்டு உடன் அவர் மக்கா சென்று குழந்தையைத்தூக்கி வந்தார் .இது அனைவருக்கும்வியப்பை ஏற்படுத்தவே அப்பணிப்பெண்ணிடம் இந்த உயர்நிலை உமக்கு எப்படி ஏற்பட்டது ? என்று இருந்தவர்கள் கேட்டனர் .அதற்கு அப்பணிப் பெண்“எமது சங்கைமிகு ஷெய்கு நாயகத்திற்கு நான்இக்லாஸுடன்பணி செய்து வந்துள்ளேன் .”அவர்கள் அணிந்து கழட்டிய உடைகளை நான் கழுவுவது வழக்கம் .அவர்களது உடையைக் கழுவும் போதெல்லாம் கழுகிய தண்ணீரில் பறக்கத்தை நாடி நான் குடித்து வந்தேன். அதன் காரணத்தால்தான் அல்லாஹ் எனக்கு இந்தநிலையைத் தந்தான். எனது தறஜஹ்வை உயர்த்தினான்என்று சொன்னார்கள் .பணிவிடை செய்த பெண்ணுக்கே இந்நிலையென்றால், அவ்லியாஉகள் குத்புமார்களுடைய மாண்பு எப்படி இருக்கும்.

மீக்காயீல் (அலை ) அவர்களும் சதகதுல்லாஹ் அப்பாவும் !

ஒரு நாள் அவர்கள் காயல் நகரிலுள்ள இரட்டைக் குளம் பள்ளியில்அமர்ந்து மார்க்க ஞான போதம் செய்து கொண்டிருக்கும் போது அந்தமான் தீவில் மழையை இறக்குவதற்காகச்சென்று கொண்டிருந்த மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சதகதுல்லாஹ் அப்பாவிடம்வந்திறங்கி உரையாடினார்கள். அப்போது அவர்களிடம் இந்தவூரில்மழையின்றி பஞ்சத்தால் மக்கள்நலிகின்றனர் . இங்கும் மழையை இறக்கிச்செல்லுங்கள் என்று வேண்டினார்கள் . அதன்படி மீக்காயீல் மழையை இறக்கிச்சென்றார்கள். மக்களின் பஞ்சம் சதகதுல்லாஹ் அப்பா அவர்களால் மறைந்தது. மேலும் அவர்கள் அப்பள்ளியில் வைத்து மக்களுக்கு உபதேசம் செய்த போது பள்ளியின் தூண் அழுததாகவும்அதில் நீர் சுரந்ததை மக்கள் கண்டதாகவும்சான்றுகள் சொல்கின்றன .மாண்பும் மகத்துவமும் இமாம் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹ் அல் காஹிரீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் சாதாரண அறிவுடையவர்களல்லர் . காயல் நகர் மற்றுமுள்ள உலமாஉகளிடமும்உங்களில் அறிவால் சம்பூரணத்துவம் பெற்றவர் யார் ? என்று கேட்பின் அனைவரும் ஒரே குரலில் சதகதுல்லாஹ் என்றே சொல்வார்கள், தர்க்கலைப் பீர்முஹம்மது வலியுல்லாஹ்விடம் மார்க்க விவாதம் செய்ய உலமாஉகளால்அனுப்பப்பட்ட அறிவுப் புலி. ஷரீஅத்மேதை .பதினான்கு வகை ஞானங்களையும்அறபு மொழிக்கலைகளையும் கற்றறிந்த மாமேதை . இந்திய தேசத்தின் மாண்புக்குரிய காழி நீதிபதியாக இருந்தவர்கள் . மக்காவிலும் மதீனாவிலும் உள்ள மாமேதைகளுக்குக் கிதாபு ஓதிக்கொடுத்தவர்கள். கொடை வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ( ஷெய்கப்துல் காதர்) அவர்களின் மெய்ஞ்ஞான குரு. உமறுப்புலவர் அவர்களின் ஸீறாவுக்கு உரை கொடுத்த பெருந்தகை. அண்ணல் நபீ ( ஸல்) அவர்களில் அன்பு கொண்டு “பனா ”தன்னை மறந்தவர்கள்.அல்லாஹ்வை அறிந்த ஆரிபீன்களில் ஒருவர் . மலக்குகளுக்கும் ஜின்களுக்கும் ஓதிக் கொடுத்தவர்கள்.அவர்களின் மகத்துவம் அனந்தம், மாண்புகள் அதிகம்!

“ வித்ரிய்யஹ் ” தந்த பரிசு !
அகிலத்தின் பேரொளி அண்ணல் முஹம்மத் ( ஸல்) அவர்கள் மீது அதிக அன்பு கொண்டு வாழ்ந்த அப்பா அவர்களுக்கு பக்தாதைச் சேர்ந்த முஹம்மத் பின் அபீ பக்ரில் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் அறபியில் எழுதப்பட்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அதில் அறபு அட்சரங்கள் 29 எழுத்துக்களுக்கும் 21 இரண்டடிப்பாக்கள் வீதம் எழுதியிருந்தார்கள் . அதை சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள் . கனவில் நபிகள் கோமான்! மாதிஹுர் ரஸூல் இமாம் முஹம்மத் பின் அபீ பக்ர் பக்தாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் 1218 கவிதையடிகளைக் கொண்ட வித்ரிய்யஹ் ஷரீபஹ்வைப் பூர்த்தி செய்த அன்றிரவு ஹிஜ்ரி 652 “உந்துலிஸ்” ( ஸ்பெய்ன்) தேசத்தில்  “குர்னாத்தா ” எனும் ஊரில் இருந்தார்கள் . அவர்கள் சொல்கிறார்கள் -அன்றிரவு கனவில் நபி ( ஸல் ) எனது கிதாபைக் கையில் வைத்து பக்கம் பக்கமாகப் பார்த்து மகிழ்ந்து எவ்வளவு அழகாக எனது மத்ஹை எழுதியுள்ளீர் . மிக அழகாக இருக்கின்றதென்று அருகில் நின்ற தோழர்களிடமும் அதைப்பார்க்கும்படி கொடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.சஹாபாக்களில் ஹழ்றத் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹுஅவர்களை மட்டுமே கனவில் இன்னார் என்று தெரிய வந்தது . மற்றவர்கள்
யாரென்பது புரியவில்லை .கண்விழித்து விட்டேன் . எனது மத்ஹை றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்து பேரானந்தம் கொண்டேன் . என்று ! சதகதுல்லாஹ் அப்பாவின் ஆசை !
அண்ணல் நபீ மீது காதல் கொண்டு மகான் முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களால் எழுதப்பட்டிருந்த ( 29 x 21 = 609 x 2 = 1218 அடிகள்) வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை மீண்டும் மீண்டும் ஓதிய எங்கள் மகான் சதகதுல்லாஹ் அவர்களுக்கு நபிகள் மேல் காதல் அதிகரித்தது . அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்த அறபு மொழி ஆற்றல் அவர்களையும் எழுதும் படி சொன்னது .

“நபீகளின் புகழ் ” எனும் காதலால் உந்தப்பட்ட மாதிஹுர் ரஸூல் இமாம் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்கள் இப்னு அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி எழுதிய இரண்டிப் பதத்துக்கும் மூன்றடிப் பாக்களைச் சேர்த்து ஐந்தடிப் பதமாக அமைத்ததுடன் 21 பைத்துக்களுடன் மேலும் ஐந்தடிப் பதங்கள் கொண்ட எட்டு பைத்துக்களும் சேர்த்து எழுதினார்கள். அத்துடன் “மீம்” என்ற எழுத்துக்கு மட்டும் ஏனைய எழுத்துக்களுக்குப் போல் 29 பைத்துக்களை எழுதாமல் ஐயடிகள் கொண்ட ஒரு பைத்தைக் கூடுதலாக எழுதி முப்பது பைத்தாக்கினார்கள். மொத்தமாக அவர்கள் எழுதிய பைத்துக்கள் 1496 ஆகும். இவை 2992 கவிதை அடிகளாகும். எனவே, முஹம்மத் பின் அபீ பக்ர் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கவிதை அடிகள் 1218 இமாம் சதகதுல்லாஹ் அவர்கள் எழுதிய 2992 அடிகளும் சேர்ந்து மொத்தம் 4210 கவிதையடிகளாகும். அறபு மொழியில் 29 எழுத்துக்களுக்கும் பைத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாலும் 29 என்பது ஒற்றைப்பட உள்ள எண்ணாகையாலும் “ஒற்றைப்படையானது” என்ற பொருளில் இதற்கு “வித்ரிய்யஹ் ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நூல் கவிதை நயமும் பொருட் செறிவும்கொண்டுள்ளது.

கவிதைகளில் நபீ புகழ் ஓதும் இக்காப்பியம் போல் நீண்டதோர் காப்பியம் இதுவரை தோன்றவில்லை என்பது அறிஞர்களின் முடிவாகும். இக்காப்பியத்தில் நபிகளின் “முஃஜிஸாத் ” அற்புதங்கள், நபிகளின் அகமியங்கள் நடந்தயுத்தங்கள், சஹாபாக்களின் மாண்புகள், நபிகள் தமதும்மத்தின் மீது கொண்டிருந்த கருணைகள், நபியன்பின் முக்கியத்துவங்கள் , சஹாபாக்களின் வீரச்செயல்கள் நிறைந்துள்ளன . அத்துடன் அவர்கள் அல்லாஹ்வுடன் செய்த முனாஜாத்துக்களும் உள்ளன . இதில் மகானவர்கள் தன்னை ஒரு பெரும் பாவிபோல் கருதி தான் பெரும்
குற்றமிழைத்தவனென்றும் தன்னை மன்னித்து நபிகளுடன் சேர்த்து வைக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள் . குற்றவாளிகளின் இழி நிலையை தமதாக்கிக்கொள்கிறார்கள். பாவிகளுக்கு கைகொடுக்கும் நாயகமே இந்தப்பாவிக்கும் கைகொடுங்களென்று நபிகளிடம்கேட்கிறார்கள் . அந்த உத்தமர் தன்னை தாழ்வாக்க் கருதி தன்னை இழிமைப்படுத்திக்கொள்வதை என்னென்று சொல்வேன். மாணிக்கம் மலத்தில் கிடந்தாலும் அது மாணிக்கம்தான்.
மகான் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் பாவிகளையும் அவர்களது பாவங்களையும் தாமாகவும் தாம் செய்ததாகவும்சொல்லியிருப்பது தன்னை , தனது நப்ஸை இழிவுபடுத்துதற்கேயாகும் . அத்துடன் பெரும் பாவிகளுக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் நபிகள் நாயகத்தின் அன்பும் உண்டென்று காட்டுவதற்காகவுமேயாகும் . இதை விளங்காத சிலர், இறை ஞான வழியைப் புரியாத பலர் அவர்களைக் கீழ்த்தரமானவர் என்பதும் புனித வித்ரிய்யஹ்வைத் தரம் குறைத்துப்பேசுவதும் அவமதிப்பதும் ஆன்மிக குற்றங்களாகும் . இதனால் தண்டனை கிடைக்கும். இதற்குத் தண்டனை மௌத்தாகும்போது கலிமா இல்லாமல் மரணிக்கும் நிலை ஏற்படுவதாகும் . இத்தகையவர் ” ஸூஉல் காதிமஹ் ” கெட்ட முடிவைக்கொண்டு சோதிக்கப்படுவார் . நஊதுபில்லாஹ்! 

மக்பூல் வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை எழுதிய இமாம்கள் இருவரும் நபிகள்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறை கண்டுள்ளார்கள் .கனவிலும் நனவிலும் அது நிகழ்ந்துள்ளது. ஒரு நாள் மக்காவில் சதகதுல்லாஹ்அப்பா நிற்கும்போது ஒரு கனவு கண்டார்கள் .மதீனாவில் இருந்து சிலர் ஒரு ” சுன்தூக் ” ( சன்தூக் ) கில் ஒரு ஜனாஸாவை வைத்து மக்காவுக்குக்கொண்டு வந்து ஜனாஸா பெட்டியுடன் கஃபாவைத் தவாபு செய்கின்றனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாப் பெட்டியிலிருந்து வெளிவருகின்றார்கள் . அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு ஒருவர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கிறார் . இதைப்பார்த்த சதகதுல்லாஹ் அப்பா அவர்களும் ஒரு கேத்தலில் “ஸம்ஸம் ” நீர்கொண்டு அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வுழு எடுக்கக்கொடுக்கிறார்கள். கனவுகளைந்துவிட்டது.இக்கனவில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வுழூச்செய்வதற்கு முதலில் நீர் கொடுத்தது மாதிஹுர் றஸூல் முஹம்மத் இப்னு அபீபக்ர் பஃதாதீ றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும், இரண்டாவது நீர் கொடுத்தது திஹுர் றஸூல் சதகதுல்லாஹ் றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களென்றும்அவ்விருவரும் கொடுத்த நீரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்களென்றும் அதேபோல் நாம் வெளிப்படுத்திய வித்ரிய்யஹ் ஷரீபஹ்வை நபிகள் ஏற்றுக்கொண்டார்களென்றும் சதகதுல்லாஹ் அப்பா அவர்களே விளக்கம் சொன்னார்களாம் .


அவர்களது வித்ரிய்யஹ் ஷரீபஹ்வில் சொல்லப்பட்டுள்ளபடி நபீகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பல முறைகள் சதகதுல்லாஹ் அப்பா அவர்கள் கண்டுள்ளார்கள் .எனவே, மகான் சதகதுல்லாஹ் அப்பா றஹ்மதுல்லாஹ் அலைஹி அவர்களின் கறாமத்துக்களும், அறிவு ஞானங்களும் அனந்தம். அவர்களது புகழ் இன்றும் உலகெங்கும் நிறைந்துள்ளது . இறுதியில் மகானவர்கள் ஹிஜ்ரி 1115 ம்ஆண்டு ஸபர் பிறை 5 வியாழன் இரவு தங்களின் 73ம் வயதில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகாவை அடைந்தார்கள் .இவர்களது ஜனாஸா கீழக்கரை ஜாமிஆ மஸ்ஜிதின் முன்னுள்ளது .இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

செவ்வாய், 18 நவம்பர், 2014

பாபரி மஸ்ஜித் வழக்கு - விநாயக முருகன்

அன்புள்ள விமு
உங்கள் முந்தைய பதிவில் 1988 க்கு பிறகுதான் டிவியில் மகாபாரதம் ஒளிப்பரப்பிய பிறகே அயோத்தி பிரச்சினை வெடித்தது போல எழுதி இருந்தீர்கள். அதற்கு முன்பு பிரச்சினையே இல்லையா? நான் முதிரா இளம் பருவத்தில் இருப்பதால் எனது சந்தேகங்களுக்கு பதில் அளித்து எனது வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.
அன்புடன் செல்வம்
அன்புள்ள செல்வம்
இல்லையென்று சொல்லவில்லை. உண்மையில் அது சுதந்திரத்துக்கு முன்பே எழுப்பப்பட்ட பிரச்சினை. இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு சில தரவுகளை தேடும்போது சில தகவல்கள் கிடைத்தன.
1528ல் தனது பாபர் தனது தளபதி மீர்பாகியை வைத்து மசூதியை கட்டுகிறார்.
1885ல் பைசாபாத்தில் ஒரு வழக்கு பதியப்படுகிறது. எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த ராம சபுத்ரா எனும் மேடை தான் ராமர் பிறந்த இடமென்றும் வெப்பம் மற்றும் குளிரால் அங்கு ராமரை வணங்க முடியவில்லை என்றும் அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு ராமர் கோயிலை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.
அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்தவர் பண்டிட் ஹரி கிருஷ்ணன். அவர் பிப்ரவரி 24, 1885ல் அந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறார். கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளிகிறார். அந்த தீர்ப்பில் இப்படி சொல்கிறார்.
கோயில் கட்ட அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். அது இங்கு நடந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் ராமர் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும். தவிர அந்த இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது அல்ல என்றும் தீர்ப்பில் சொல்கிறார்.
அத எதிர்த்து ரகுபர்தாஸ் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் . வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகிறார்கள். பார்வையிட்ட பிறகு மார்ச் 18, 1886ல் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யும் நீதிபதியின் இப்படி தீர்ப்பு சொல்கிறார்.
"இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது''
ரகுபர் தாஸ் அதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க் (W.Young) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
"சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்'' என தீர்ப்பு சொல்கிறார்.
அதெல்லாம் வெள்ளையர் காலத்தில் நடந்த விஷயம். பிறகு சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமையாக காத்திருந்தார்கள். டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள் மசூதியின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன்,சீதை மூவரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது.
சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், "பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது' என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்;
யார் அந்த மேலிடம்? பிரதமர் ஜவஹர்லால் நேருதான்.  துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி தள்ளுகிறார்.
டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
சிலைகளைப் பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், "பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நடந்த சம்பவங்களை படிக்கும்போது இந்தியாவில் பிரதமர் பதவி என்பது அன்றே ஒரு டம்மி போஸ்ட் என்று தெரிகிறது.
ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் வரிகளை படிக்கவும்.
" உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்"
நேருவுக்கு எந்தளவு ஆதங்கம் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்.
பிறகு நடந்த சம்பவங்களை வரிசையாக பார்க்கலாம்.
ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் "1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது' என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.
டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.
டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.
டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (Declaration & Possession) கோரி வழக்கு தொடுத்தது.
மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது.
1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
பிறகு 1992 ல் இடிக்கிறார்கள். அன்றைக்கு நேருவால் எப்படி ஒன்றும் செய்ய இயலாமல் போனதோ அதுவே நரசிம்மராவுக்கு நடந்தது.
மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர்தான் நள்ளிரவில் மூன்று சிலைகளையும் கொண்டு சென்று மசூதிக்குள் வைத்தவர்.
டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இப்போது அவரும் உயிரோடு இல்லை. ராமரை கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. பாபரை எழுப்பி கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. கேட்டவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் வரலாற்றில் உண்மைக்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதை சிலர் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்
அன்புடன்
விமு