செவ்வாய், 31 மே, 2011

பள்ளி என்றும் கொள்ளலாம்...



ஒரு வழியாய் அவரது மகளுக்கு அந்தப் பேர் போன பள்ளியில் எல்.கே.ஜி
> சேர்க்கைக்கான நேர்காணலுக்கு கடிதம் வந்திருந்தது. ஏதோ ஜெயிக்கப் போகும்
> கட்சியில் வெற்றி வாய்ப்பு நிச்சயமாய் உறுதி செய்யப்பட்ட தொகுதியில்
> டிக்கட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு
> வீட்டிற்கு வந்து விட்டார்.
>
> அவரது பதட்டம் தனித்து, அவரை ஒரு நிலைக்கு கொண்டு வரவே கொஞ்ச நேரம் ஆனது.
> ஆற அமர அவர் ஒரு வழியாய் நாற்காலியில் அமர்ந்ததும் அவரது கையிலிருந்த
> அழைப்புக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அப்படியே வெல வெலத்துப்
> போனேன்.
>
> அடுத்த நாள் நடக்கும் தேர்வில் தங்கள் மகள் தேர்ச்சி பெற்றால் உடனடியாக
> பள்ளிக் கட்டணம் , சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், டை, வில்லை , ஷூ ,
> சாக்ஸ் , புத்தகப் பை, மற்றும் நன்கொடை என்கிற வகையில் 48000 ரூபாயை
> உடனே கட்டிவிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சேர்க்கை ரத்து
> செய்யப் படும் என்றும் சொல்லப் பட்டிருந்தது. இது போக இரண்டாம்
> பருவத்திற்கு வேறு சில ஆயிரங்களை கொட்டவேண்டும் என்று நண்பர் சொன்னார்.
>
> "ஏம்ப்பா, இவ்வளவு பெரிய தொகைய வட்டிக்கு வாங்கி அழுது இங்க கொண்டு போய்
> சேர்க்கனுமா?. தம்பிய எல்லாம் நம்ம பள்ளிக் கூடத்துலதான சேர்த்தேன்.
> நல்லாதானே படிக்கிறான்,"
>
> "அடப் போப்பா உனக்கு இருக்கிற மன வலிமையோ, பக்குவமோ நமக்கு இல்லப்பா.
> மட்டுமல்ல, இந்தப் பள்ளிகூடத்துல சேக்கலன்னா அவ வீம்புக்குன்னு
> நாண்டுக்கிட்டே செத்தாலும் செத்துடுவா"
>
> இதற்குமேல் பேசிப் பயனில்லை என்று தோன்றவே அதற்குமேல் அதற்குள் நான் போகவில்லை.
>
> "நீ வந்தாதான் நாளைக்கு வருவாளாமாம். அம்மா வேணாமாம் , அப்பாவும்
> வேணாமாம் , மாமாதான் வரணுமாம் . இண்டர்வியூக்கு வார புள்ளைங்களையும்
> ,பெற்றோரையும் கூட்டிட்டுப் போக எல்லா இடத்துக்கும் பள்ளி பேருந்து
> வருதாமாம். தேர்முட்டிக்கு சரியா எட்டு மணிக்கெல்லாம் வந்துடுப்பா "
> படபடன்னு சொல்லிட்டு கிளம்பினார்.
>
> அவளுக்கு என்மேல் அவ்வளவு பிரியம் வருவதற்கு வே று ஒன்றும் காரணமில்லை.
> அவள் கேட்பதை காது கொடுத்துக் கேட்டு பதில் சொல்லும் எனது கோமாளித் தனமான
> அணுகுமுறைதான்.
>
> முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து வானுயர்ந்து நிற்கும்
> கட்டிடங்களாய் பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்லூரிகள், ஆசிரிய பயிற்சி
> நிறுவனங்கள் , பொறியியல் கல்லூரிகள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள்
> நம்மை பிரமிக்க வைக்கும். இருநூறு பேருந்துகளுக்கும் மேல் அவர்களால்
> இயக்கப் படுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
>
> அடுத்த நாள் அவர்களுக்கும் முன்னமே தேர்முட்டியில் காத்திருந்தேன்.
> வந்ததும் ஓடி வந்து தொத்திக் கொண்டாள். பேருந்திலும் இருக்கையில் அமராமல்
> என் மடியில் அமர்ந்துகொண்டாள்.
>
> கேள்வி மேல் கேள்வி . இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கும் ஞானக்
> குழந்தைகளைத்தான் இது மாதிரி பிரமாண்டக் இருட்டுக் குகைகளில் தள்ளப்
> போகிறோமே என்றிருந்தது.
>
> பேருந்து வளாகத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம் , குழந்தை துள்ளிக்
> குதித்து மடியை விட்டு இறங்கினாள்.
>
> எல்லோரும் இறங்கினோம். அழகான புல்தரை, ஆர்ப்பாட்டமான கட்டடங்கள்,
> நேர்த்தியான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த பேருந்துகள் என்று அசத்தலான
> சூழல்.
>
> துள்ளிக் குதித்து ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபின் குழந்தை
> குதூகலித்தாள், " ஐ! எவ்ளோ பெரிய பஸ் ஸ்டாண்டு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக