திங்கள், 11 ஜூன், 2012

கண்ணியமிகு தலைவர் காயிதெ மில்லத் -


 -(குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத்ஃபஸ்லுல்லாஹ் )
இந்திய திருநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமுதாய மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், மனிதாபிமானத் தந்தையாகவும், கண்ணியம், புண்ணியம் இந்த இரண்டு சொற்களுக்கு சொந்தக்காரராகவும் வாழ்ந்த கண்ணியத்தின் உருவகம் காயிதே மில்லத்,(ரஹ்) அவர்கள், இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக, தேசிய ஒருமைப்பாட்டின் தந்தையாக, அழியாத வரலாறு படைத்த அரசியல் மேதையாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தலைவராக திகழ்ந்தவர்.

அனைத்துக்கட்சி தலைவர்கள்,அனைத்து சமய மக்கள் அனைவராலும் """"கண்ணியத்திற்குரிய�� என்ற அடைமொழியோடு போற்றப்பட்ட ஒரே தலைவர் காயிதே மில்லத் என்றால் அது மிகையாகாது. தாம் பேசிய தாய்மொழி தமிழுக்கும், பேணிய இஸ்லாமிய மார்க்க வழிக்கும், பிறந்த பொன்னாட்டுக்கும், பெற்றெடுத்த சமுதாயத்திற்கும் சேவையாற்றிய தலைவராக மக்கள் உள்ளங்களில் அங்கீரிக்கப்பட்டிருக்கிறார். """"காயிதே மில்லத்�� என்றால் சமுதாய வழிகாட்டி என்று பொருள், இந்த சிறப்பு பெயருக்கு ஏற்ப, பல இன்னல்களையும், பழிசொற்களையும் தம் இதயத்தில் தாங்கிக்கொண்டு சமுதாயத்தை வழிநடத்தினார்.

காயிதே மில்லத் பிறப்பும் குடும்பமும்;
கவ்மின் காவலர் காயிதே மில்லத் அவர்கள் தென்னகத்தின் நன்னகரம் நெல்லை சீமையிலே உள்ள பேட்டை என்ற ஊரில் சிறப்புமிக்க குடும்பத்தில் கி.பி.1896 ஆம் ஆண்டு ஜூன் 5ம் நான் அன்று பிறந்தார். தந்தை மௌலவி மியாகான் ராவுத்தர். தாயார் ஹமீதா பீவி இளம் வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்ட காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தன் தாயாரிடமே அரபுக் கல்வியையும் மார்க்க போதனைகளையும் ஒருங்கே கற்றார். பின்னர் நெல்லை சி.எம்.எஸ்.மிஷனரி பள்ளிக்கூடத்தில் பயின்றார் பிறகு திருச்சி ஜோசப் கல்லூரியிலும், சென்னை கிருஸ்துவ கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பெற்றார். இளைஞராக இருக்கும் போது தமது பேட்டையில் பால்ய முஸ்லிம் சங்கம் என்ற சங்கத்தை துவக்கினார்.

கல்லூரியில் படித்துவந்த காயிதே மில்லத் அவர்கள் தம் பி.ஏ பட்டம் இரண்டு மாதங்களே இருந்த சமயத்தில் தான் நம் தாய்நாட்டின் தந்தை காந்திஜீ அவர்கள் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி இளைஞர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்தார். நாட்டு விடுதலை உணர்வு கொண்ட காயிதே மில்லத் அவர்கள் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விடுதலை போரட்டத்தில் குதித்தார். தீவிரமாக தம்மை அர்பணித்துக்கொண்டார். சைமன் கமிஷன் சென்னை வந்த போது பூக்கடை அருகே கருப்பு கொடி காட்டினார். விடுதலை போரட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்த வேண்டியதாயிற்று. 1920 ல் திருநெல்வேலியில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டின் மகாசபையில் இந்தியாவுக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ராஜாஜி அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார் காயிதே மில்லத்.

வணிகமும், வள்ளல் குணமும்:
இந்தியாவிலேயே அதிகமான அளவில் தோல் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பிரபல வணிக நிலையமாக அன்றைக்கு விளங்கிய ஜமால் முகையதீன் அன்கோ வில் அலுவலக மேலாளர் பணி சேர்ந்தார் காயிதே மில்லத். அந்த கம்பெனியின் பங்காளிகளில் ஒருவரும் காந்திஜீ அவர்களின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பராகவும் , நாட்டுக்கும் காங்கிரஸ் காட்சிக்கும் லட்சம் லட்சமாக பணத்தை வாரி கொடுத்த வள்ளலாகவும் திகழ்ந்த ஜமால் முஹம்மது அவர்களின் மதிப்பையும் அன்பையும் தம்முடைய சிறப்பு குணங்களால் பெற்றுக்கொண்ட காயிதே மில்லத் அவர்கள், அந்த கம்பெனியினுடைய நிர்வாக பங்காளியாக உயர்ந்தார். இதனால் அல்லாஹ்வின் அருளால் செல்வம் குவிந்தது. அதை பொதுப்பணிக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாகவும் வாழ்ந்தார். காந்திஜீ, அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி ஆகியோர் கட்சிக்காவும், டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள் டில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் காகவும் நன்கொடை பெற்றுள்ளனர்.

ஜமால் முஹியத்தீன் நிறுவனத்தின் பங்காளியான அப்துல்லா சாஹிப்பின் புதல்வி ஜமால் ஹமீதா பீவியை 19.11.1923 தேதி வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். இவர்களுக்கு 10.11.1925 தேதியில் ஒரு மகன் பிறந்தார். இருபெரும் குடுபங்களின் நினைவை போற்றும் வகையில் ஜமால் முஹம்மத் மியாக்கான் என்று பெயர் சூட்டினார். இந்த ஓரே ஒரு மகன் தான் பின்னர் ஜே.எம்.மியாக்கான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். 27-7-62 ம் தேதியில் காயிதே மில்லத் அவர்களின் துணைவியர் ஹமீதாபீவி காலமானார்.

அரசியல் பணிகள்:
காயிதே ஆஜம் ஜின்னா அவர்களை போல் தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான காயிதே மில்லத், 1936 ல் காங்கிரஸ் கட்சியில் பெரும்பான்மை வகுப்புவாதம் தலைதூக்கியதால் ஜின்னா விடுத்த ஆழைப்பை ஏற்றுக்கொண்டு 1937ல் அகில இந்திய முஸ்லிம் லீகின் உறுப்பினராக சேர்ந்தார். 1938 ல் சென்னை மாவட்ட தலைவராகவும் 1945ல் மதராஸ் சட்டமன்றத்திற்கு தனி தொகுதியில் இருந்து போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கை 29 1946 ம் ஆண்டு அப்போது சென்னை மாகாணம் பிரிக்கப்படாத பெரும் மாநிலமாக � சென்னை ராஜதானி"" என அழைக்கப்பட்டது. (இதில் ஆந்திரா- கேரளா மாநிலங்கள் அடங்கியிருந்தன.

இதனால் மதராஸ் சட்டசபை என்று அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராகவும், மதராஸ் மாகாண முஸ்லிம் லீக் தலைவராகவும் பதவி வகித்தார்.

1947 ஜுலை மாதம் சென்னையிலிருந்து முஸ்லிம் என்ற தமிழ் நாளிதழ் அரம்பித்தார். இதே ஆண்டில் இந்திய துணைக்கண்டம் இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரு தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டது. பிறகு பாகிஸ்தான் தலைநகரான காராச்சியில் கூடிய அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசி கூட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் செயல்பாடுகள் முடித்துக் கொள்ளப்பட்டு, �இந்திய முஸ்லிம் லீக்� என்றும் �பாகிஸ்தான் முஸ்லிம் லீக்� என்றும் இரு தனித்தனி அமைப்புகளாக பிரிக்கப்பட்டு காயிதே மில்லத் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அன்றைய தினம் அகில இந்திய முஸ்லிம் லீக் """"டான்�� பத்திரிக்கையில் வரவுகளின் பங்கு தொகையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கென ரூபாய் 17 லட்சம் ஒதுக்கப்பட்டு அதை பெற்றுக்கொள்ளுமாறு காயிதே ஆஜம் ஜின்னாஹ் அவர்களும் நவாப் லியாகத் அலிகானும் கேட்டுக்கொண்டபோது தலைவர் காயிதே மில்லத் கூறிய வார்த்தைகள், �அந்த 17 லட்சம் ரூபாயை விட எனது லட்சியம் உயர்வானது, அது எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு நாங்கள் இந்தியாவில் முஸ்லிம் லீகை வளர்க்க விரும்பவில்லை. அப்படியே எங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்திய சகோதரர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்வேன்� என்று கூறிய போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத்அலிகான் காயிதே மில்லத் அவர்களிடம், �சரி, அந்த பணம் எங்கள் வங்கியில் இருக்கும்-தாங்கள் விரும்பும் போது பெற்றுக்கொள்ளலாம்� என்று கூறினார். இன்றைய மதிப்பில் கூட பெரிய தொகையாக ரூபாய் 17 லட்சம் இருக்கும் போது 1947 ம் ஆண்டில் அது எவ்வளவு பெரிய தொகை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பிறகு காயிதே மில்லத் பாகிஸ்தான் பிரதமரிடம் கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். """"நாம் முஸ்லிம்களாக இருந்தாலும் இனிமேல் நாம் இருவரும் வேறு-வேறு நாட்டை சேர்ந்தவர்கள். நாம் இன்று முதல் அன்னியர்களாக பிரிகிறோம். எந்த சந்தர்பத்திலும் இந்திய முஸ்லிம்களின் விவகாரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது, எங்கள் உரிமைகளை எங்கள் கலாசாரத்தை பாதுக்காக்கவும் எங்களுக்கு தெரியும். எங்கள் தாய் நாடாகிய இந்தியாவிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு என்ன நேர்தாலும் சரி, பாக்கிஸ் தானிலுள்ள இந்து சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கி, அவர்களை அன்பாகவும், நேர்மையாகவும் நடத்தி இந்து சகோதர்களை கண்கலங்கிடமால் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட ஆவண செய்திட வேண்டுகிறேன். இதுவே இந்திய முஸ்லிம் களுக்கு தங்கள் செய்யும் உதவியாக கருதுகிறேன்""

இவ்வாறு காயிதே மில்லத் கூறியதை கேட்ட காயிதே ஆஜம் ஜின்னாவும், நவாப் லியாகத் அலிகானும் கண்ணீர் மல்க காயிதே மில்லத் புனித கரங்களில் முத்தமிட்டு அப்படியே செய்ய உறுதி கூறினார்கள் என்றால் காயிதே மில்லத் தேசப்பற்றையும். சிறுபான்மை மக்களின் மீது அவருக்கு இருந்த பாசத்தையும் மத நல்லிணக்கத்திற்கு அவர்காட்டிய வழியையும் புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம் லீக் தலைமை பொறுப்பு:
இந்திய விடுதலைக்குப்பின் முஸ்லிம்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாக்கப்பட்ட அந்த பதற்றமான காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழிகாட்டவோ, தைரியம் சொல்வோ எந்த ஒரு தலைவரும் முன்வாரத சூழ்நிலையில், முஸ்லிம் லீகின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி எழந்தது.

அன்றைய மதராஸ் இராஜதானியில் வாழ்ந்த முஸ்லிம்களும், பம்பாய்மாகாண முஸ்லிம்களும் மட்டும்தான் முஸ்லிம் லீக் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று கருதினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடக்கில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் லீகை கலைத்துவிட்டால் தங்கள் எதிர்காலம் நன்றாக அமையகூடும் என்று எண்ணினார்கள்.

வகுப்புக் கலவரங்களினாலும் வெறிபேச்சுகளாலும் அச்சுறுத்தப்பட்ட இந்திய முஸ்லிம்களுக்கு மலை அசைந்தாலும் அல்லாஹ் மீது கொண்ட நம்பிக்கையில் நிலை குலையாத காயிதே மில்லத் அவர்கள் சொன்ன வார்த்தை """"முஸ்லிம்களே ஒரு கொடியின் கீழ் ஒன்று படுங்கள் முஸ்லிம்லீகை பலப்படுத்துங்கள்"" என்பதுதான்.

அதே நேரத்தில் முஸ்லிம் லீக்கை கலைத்து விடுங்கள் என்று பிரதமர் நேரு மிரட்டல் விடுத்தார். மவுண்ட் பேட்டன் பிரபுவை தூதுஅனுப்பி தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை கலைக்க சென்னார். அவர் மட்டுமல்ல இந்தியாவின் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பச்சை பிறைக்கொடியை பறக்க அனுமதிக்க மாட்டேன் என்று கர்ஜனை செய்தார். சில நேரங்களில் கனிவாகவும் கெஞ்சி வேண்டினார்கள், சில சமயங்களில் பதவி ஆசைகாட்டி பார்த்தார்கள்.

துணிவாக நெஞ்சை நிமிர்த்தி """"முஸ்லிம் லீகைக் கலைக்க முடியாது, அது நான் தொடங்கிய இயக்கம் அல்ல. ஒரு முஸ்லிம் இந்தியாவில் உள்ளவரை முஸ்லிம் லீக் இருந்தே தீரும். அதை யாரலும் தடுக்க முடியாது"" என்று அழுத்தம் திருத்தமாக அன்றைக்கு காயிதே மில்லத் பதில் அடி தந்தார்.

இந்திய முஸ்லிம்களே நீங்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். நாம் ஓன்றுப்பட்டு விட்டால் நமக்கு இணையாருமில்லை என்று எடுத்துகூறி கடுமையான இன்னல்களையும், பழிசொற்களையும் தம் இதயத்தில் தாங்கி கொண்டும் சகித்துக்கொண்டும் , தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நிலைநாட்டிய இணையற்ற தலைவர் தான் காயிதே மில்லத்(ரஹ்) அவர்கள்.

வகுப்புவெறி, மதவெறி கொழுத்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் என தம்மை இனங்காட்டி கொள்ள அஞ்சிய நேரத்தில், முஸ்லிம் லீக் என்று உச்சரிப்பது கூட தேசத் துரோகம் என்று கருதப்பட்ட காலத்தில் இறைவனைத்தவிர எவருக்கும் அஞ்சாத நெஞ்சத்துணிவுடன் 1948 மார்ச் 10-ல் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கூட்டம் நடத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்று, விடுதலை பெற்ற இந்தியாவில் முஸ்லிம்களுக்கு ஒரு கண்ணியமான மானமிக்க நல்வாழ்வு கிடைக்கவும், சமுதாயத்தின் மீது பிறர்கொண்ட பகைமை மறைந்து பாசம் தழைக்கவும் உழைத்தார்.

பாராளுமன்ற பணி:
தமிழக்தில் பிறந்த காயிதே மில்லத் மலையாள மொழிபேசும் மக்கள் நிறைந்து வாழும் கேரளாவிலுள்ள """"மஞ்சேரி�� பாராளுமன்ற தொகுதியிலிருந்து 1962,1967,1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று பொது தேர்தல்களிலும் தொகுதிக்குக்கு ஒரு முறை கூட சென்று மக்களிடம் வாக்கு கேட்காமலேயே மகத்தான வெற்றியை பெற்றார். தொகுதிக்கு செல்லாமலேயே ஒரே தொகுதியில் மூன்று முறை வெற்றிவாகை சூடிய ஒரே தலைவர் காயிதே மில்லத் என்ற பெருமையை பெற்று வரலாற்றில் இடம்பெற்றார்.

பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக மட்டுமல்ல அனைத்து சிறுபான்மை மக்கள். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை எழுப்பினார்.

1966 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி பொறுப்புக்கு வந்து வங்கிகள் தேசிய மாயமக்கும் சட்ட மசேதாவும், மன்னர் மானியம் ஒழிப்பு மசோதாவும் கொண்டு வந்தபோது காயிதே மில்லத் அவர்களை சந்தித்து அவர் ஆலோசனை பெற்று நிறைவேற்றி செயல்படுத்தினார். அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்ற இருஅவைகளிலும் உறுப்பினராக இருந்த போது அனைவரும் வியந்து போற்றும் வகையில் சிறுபான்மை சமூகங்களின் மொழி. கலாசார, மார்க்கப் பாதுகாப்புக்கு ஒயாமல் குரல் கொடுத்த ஒப்பிலா தலைவராக காயிதே மில்லத் விளங்கினார்.

தமிழர்கள் பலர் இருந்தும், அரசியல் நிர்ணய சபையில் """"தமிழே இனிய மொழி -தொன்மை வாய்ந்த மொழி இந்தியப் பொதுமொழியாக இருக்கும் தகுதி வாய்ந்த மொழி �� என்று முழுக்கமிட்ட ஒரே தலைவர் காயிதே மில்லத் மட்டுமே.

தான் பிறந்த பொன்னாடு பல நெருக்கடிகளாலும் அந்நியநாட்டு தாக்குதலாலும் அலைகழிக்கப்பட்டபோது, தாய்நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய துணிந்தார் காயிதே மில்லத். 1962ல் சீனா தாக்குதல் அதன் பிறகு பாகிஸ்தான் படையெடுப்பு நடந்த போது தனது ஒரே ஒரு தவப்புதல்வன் மியாக்கான் அவர்களை ராணுவத்திற்கு அனுப்பிட முன் வந்து பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார். வீர மகனை இராணுவத்திற்கு அனுப்ப முடிவு செய்ததையும் தலைவரின் தேசப் பற்றையும் தியாக உணர்வையும் நெஞ்சார பாராட்டி 17.11.1962 தேதியில் பாரட்டுமடல் எழுதி காயிதே மில்லத்க்கு அனுப்பினார் நேரு. காயிதே மில்லத் மகனார் மியாகான் அவர்களுக்கு இராணுவத்தில் சேரும் வயது கடந்து விட்டதால் இராணுவ தலைமை சேர்க்க முடியாது. என்று கூறி கடிதம் அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தீரும் வரை தனது பாராளுமன்ற சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை நாட்டின் பாதுகாப்பு செலவுகளுக்கு தந்துவிட்ட ஈடுஇணையற்ற தியாகி என காயிதே மில்லத்தை நேரு புகழ்ந்தார்.

கூட்டணி தத்துவத்தை உருவாக்கிய தந்தை
இந்தியாவிலேயே முதல் முதலாக அரசியல் கூட்டணி என்ற தத்துவத்தை கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி அமைப்பு முறையை ஏற்படுத்தி 1967 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரா கட்சி, குடியரசு கட்சி, கம்யூனிஸ்ட் உள்பட ஏழு கட்சிகளின் கூட்டணி உருவாகிடவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைய வழிகாட்டிய கூட்டணியின் தந்தை காயிதே மில்லத்.

இதனால் தமிழ்நாட்டு அரசியலில் திருப்புமுனையை உண்டாக்கி தொடர்ந்து கழக ஆட்சி அமைய துணைநின்ற பெருமைமிக்க வரலாறு முஸ்லிம் லீக்கிற்கு உண்டு என்பதை வரலாறு செல்லிக்கொண்டிருக்கிறது.

இதனால் தான் தமிழக முதலமைச்சாரன அறிஞர் அண்ணா இந்த கழக ஆட்சியை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு நான் சமர்பணம் செய்கிறேன் என்று குறிப்பிட்டார்.

30.1.1962ல் காஞ்சிபுரத்தில் ஒலி முகம்மது பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள காயிதே மில்லத் காஞ்சிக்கு வந்திருக்கும் இந்த நாள் அரசியலில் ஒரு புனித நாள். காயிதே மில்லத் பாதம் பட்டு காஞ்சி மண் புனிதம் பெற்று விட்டது என்றும் தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர் காயிதே மில்லத் என்றும் குறிப்பிட்டார்கள்.

அனைத்து துறைகளுக்கும் அடிப்படை கல்வியாகும். ஆகவே நம் சமுதாய மக்கள் வாழ்க்கை உயர கல்வி துறையில் முஸ்லிம்கள் விஷேச கவனம் செலுத்தி முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று காயிதே மில்லத் எந்த நேரமும் வலியுறுத்தியபடி இருந்தார். தாமே முன் நின்று பல முஸ்லிம் கல்லூரிகள் தோன்றிடக் காரணமாகவும் இருந்தார்கள்.

காயிதே மில்லத் தலைமையில் கல்வி நிதி திரட்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தோ , சீனா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள பெருந்தனக்காரர்கள் பலரை அணுகி ஏழு லட்சம் ரூபாய்களைச் சேகரித்து கொண்டு வந்து அந்த நிதியிலிருந்து முஸ்லிம்களின் நிர்வாக பொறுப்பில் சென்னையில் புதுக்கல்லூரி, திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி, மலபாரில் (கேரளாவில்) ஃபாரூக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் துவக்கப்பட்டன.

அரசியலில் நேர்மை, நியாயம், தூய்மை, வாய்மை, ஒழுக்கம், எளிமை உன்னத மக்கள் சேவை, தன்னல மறுப்பு, முதலியவை நிலவ வேண்டும் என்று எடுத்துரைத்து அதன்படி தன் வாழ்க்கையை நடத்திய மனிதரில் புனிதராக, அன்பு ,அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக வாழ்ந்து அனைத்து கட்சியினரும் மதிக்கதக்க கண்ணியமிகு தலைவராக விளங்கினார்.

1972 -ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ம் நாள் நாட்டு மக்களையும், நம் சமுதாயத்தையும் துயரக்கடலில் கண்ணீர் மல்க வல் அல்லாஹ்வின் நாட்டப்படி காலமானார்.

கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் மறைந்து நாற்பது ஆண்டு உருண்டு ஓடி விட்டன என்றாலும் மறக்கப்படாத மாமனிதராக இந்திய முஸ்லிம்களின் இதயங்களில் வாழ்கிறார்.

* மதத்தால் நல்ல முஸ்லிம்!
* தேசத்தால் நல்ல இந்தியர்!!
*இனத்தால் நல்ல தமிழர்!!!
என்ற பெருமையுடன் ஆத்ம ஞானியாக வாழ்ந்து அழியாத வரலாற்றை படைத்த கண்ணிய மிகு தலைவர் காயிதே மில்லத் புகழ் பரப்புவோம்! அவர் வழிகாட்டி நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த பாடுபடுவோம்.


குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத்ஃபஸ்லுல்லாஹ்
(தலைமை நிலைய பேச்சாளர், இ. யூ. முஸ்லிம் .லீக்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக