வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இறை அறிவில் தெளிந்தால் இஸ்லாம் விளங்கும்



நபிகள் திலகம் முஹம்மது (ஸல்) நாடிய அறிவு எது?
புகஹாக்கள் எனப்படும் ஷரீஅத் சட்ட நிபுணர்கள் அல்இல்முஎன்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முஷ்ஷரீஅத் எனப்படும் மார்க்கச்சட்ட அறிவு என்றுசொல்கின்றனர்.

அதேபோல்முஹக்கிகீன் எனப்படும் இறைகொள்கை வல்லுனர்கள் அல்இல்மு என்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முத்தௌஹீத், இல்முல்மஃரிபஹ் எனப்படும் இறையறிவு என்று சொல்கின்றனர் இதன்படி ஒரு முஸ்லீம் கலிமத்துத் தௌஹீத் இறை கொள்கை பற்றிய அறிவையும் ஷரீஅத் போந்தும் தொழுகை,ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகள் பற்றிய அறிவு ஞானங்களையும் கற்றிருக்க வேண்டும்.

இவ்வறிவு எவரிடமில்லையோ அவர் இறைவனைப் பற்றி அறியாதவராகவும் ஏனைய கடமைகளை சரிவரச் செய்ய முடியாதவராகவும் ஆகி விடுகின்றார்.
காரணம் அமல்கள் எனப்படும் வணக்கங்களைச் செய்வதற்கு முதல் அவ்வமல்களைச் செய்வது பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அறிவு இருந்தால்தான் அமல் நிறைவேறும். இன்றேல் அமலால் பயனடைய முடியாது. அமல்களும் நிறைவேறாது.

எனவே ஒரு முஸ்லீம் கொள்கை பற்றிய அறிவையும் இஸ்லாத்தின் கடமைகள் பற்றிய அறிவையும் கற்றிருப்பது கடமையாகின்றது.

ஈமானுடைய பர்ளுகள், ஆறாக இருப்பினும் இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாக இருப்பினும் இவ்விரண்டிலும் முதற்கடமை அல்லாஹ் பற்றி அறிந்திருப்பதும் முதற்கடமையாகின்றது.

ஈமானையும் இஸ்லாத்தையும் இணைத்தே ஷரீஅத் ஆகும்.

இவ்விரண்டில் ஒன்றையெடுத்து மற்றதை விடுவது எவ்வகையிலும் ஷரீஅத் ஆகாது. தீனுல் இஸ்லாம் என்பது அகீதஹ் (கொள்கை) அஃமால்/ இபாதாத் (செயல்கள்/வணக்கங்கள்) இக்லாஸ் (கலப்பற்ற-இரண்டற்ற நிலை) ஆகிய மூன்றையும் உள்ளடக்கி நிற்கிறது. இவை ஷரீஅத், தரீகத்,ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கையும் கொண்டுள்ளது.

இதனையே அல் குர்ஆன் லிகுல்லின் ஜஅல்னா மின்கும் ஷிர்அதன் வமின்ஹாஜன்உங்களில் ஒவ்வொறுவருக்கும் ஷரீஅத்தையும், மின்ஹாஜ் எனும் தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றையும் ஆக்கியுள்ளோம். என்று சொல்கிறது. எனவே ஒரு முஸ்லீம் இம்மூன்றையும் அறிந்து செயற்படுவது அவசியமாகின்றது.

காரணம் இம்மூன்று அம்சங்களையும் கொண்ட தீன் சன்மார்க்க அறிவுதான் ஒரு முஸ்லிமின் இவ்வுலக மறுவுல வாழ்வுக்கு மிக அவசியமானது அதனாற்றான் நபிகள் திலகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல் இல்மு எனும் அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமை என்று நவின்றார்கள்.

இங்கே நபீகள் அல் இல்மு என்று குறிப்பிட்டது மார்க்க அறிவையேயன்றி வேறு எவ்வறிவையும் அல்ல. எல்லா அறிவுகளையும் என்று நபிகள் நாடியிருந்தால் விஞ்ஞானம், கணிதம், பூமி, வானசாஸ்திரம் போன்ற அறிவுகளையும் எல்லாரும் கற்பது பர்ழாக ஆகிவிடும். இது அசாத்தியம்.

எனவே நபீகள் இம்மொழியில் தலபுல் இல்மி ஒரு அறிவை தேடுதல் என்று குறிப்பிட்டிருப்பதால் அது இல்முத்தீன் எனும் சன்மார்க்க அறிவு என்றும் குறிப்பாக சன்மார்க்கத்தின் அடிப்படையான இல்முத்தௌஹீத் ஏகத்துவ கொள்கை அறிவு என்றும் மார்க்க மேதைகள் சொல்கின்றனர்.

மேற்குறித்த விபரத்தின் படி ஈமான் இஸ்லாத்தின் முதல் அம்சமான இறை கொள்கை பற்றிய அறிவை விரிவாகக் கற்பதும் தொழுகை ஸக்காத், நோன்பு, ஹஜ் கிரியைகளின் அறிவை விரிவாகக் கற்பதும் இறைவணக்கத்தின் உயிரோட்டமான இக்லாஸ் பற்றி விரிவாகக் கற்பதும் மிக அவசியமும் கடமையும் ஆகும்.

சுருங்கக் கூறின் இம்மூன்றையும் ஏற்றுக் கற்றவரே முஸ்லிம் முஃமின் என்றும் இதை மறுத்தவர் காபிர் என்றும் கணிக்கப்படுகின்றார்.

தீனும் தீன்தாரிகளும்

இன்றைய முஸ்லீம்களில் அனேகர் தீனின் முக்கியத்துவத்தை உணராது தொழுகை போன்ற செயற்பாட்டு அறிவுகளை மட்டும் கற்பதில் அதை மட்டும் போதிப்பதிலும் சிலர் அதைக்கூடக் கற்காது பின்பற்றல் வாதிகளாகவும் காலத்தைக் கழிக்கின்றனர்.

ஈமானின் இஸ்லாத்தின் முதற்கடமையான கொள்கை பற்றிய அறிவையும் இபாதத்தின் உயிர் நாடியான இக்லாஸ் பற்றிய அறிவையும் அவசியம் கற்காமலும் அதை தெரிந்தோர் போதிக்காமலும் அதை கூறுபவரை மார்க்கத்திற்கு முரணானவர் எனக் கருதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.

ஒரு வருவருக்கு ஏழு வயதிலிருந்த இறை கொள்கையறிவே எழுபதிலும் இருக்கிறது. முதற்கடமையான அல்லாஹ் பற்றி ஐந்து நிமிடம் சொல் என்றால் ஏழுவயது சிறுவனின் இறையறிவே அவரில் காணப்படுகிறதேயன்றி அல்லாஹ் பற்றி அவரால் சொல்ல முடியாது இதனை நபி (ஸல்) அவர்களின் திருச்சபையில் ஒளியினால் படைக்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) மனித உருவில் தோன்றி இம்மூன்றையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டறிந்து சென்றார்கள். அவர்கள் சென்றபின் நபிகள் (ஸல்) அவர்கள்தோழர்களை விழித்து வந்தவர் ஜிப்ரீல் என்றும் அவர் அதாகும் லியு அல்லிமகும் தீனகும்உங்களது தீன் சன்மார்க்கத்தை உங்களுக்கு கற்றுத்தர வந்து சென்றார் என்றும் கூறினார்கள். இவ்வரலாறு தீன் எனும் சொல் ஈமான் இஸ்லாம் இக்லாஸ் ஆகிய மூன்றையும் வலியுறுத்துகிறது.

காகம் அன்று கூடு கட்டியது போன்றே இன்றும் கூடு கட்டுகின்றது. எல்லா விடயங்களிலும் உச்சநிலையை அடைந்து மாளிகையில் வாழும் மனிதன் இன்று கொள்கையறிவில் காகத்தின் தறஜஹ் படித்தரத்தில்தான் வாழ்கிறான்.

ஒரு முஸ்லீமுக்கு கொள்கையறிவு அவனது தலையைப் போன்றது செயற்பாட்டறிவு அவனது கை, கால் போன்றது மனிதன் தலை இன்றேல் உயிர் வாழ முடியாது. எனவே மார்க்கத்தின் தலையான கொள்கையறிவைப் புறக்கணித்து கை,கால்போன்ற கிரியை அறிவை மட்டும் கற்பதில் என்ன பயனுன்டு? தலையில்லாதவனுக்கு எது இருந்தும் என்ன பயன்? கொள்கை தெரிந்த ஒருவன் அமல் செய்யாது போனாலும் அவன் அவனது உறுதியான இறைகொள்கையினால்சொர்க்கம் புகுந்துவிடுவான். ஆனால்கொள்கை என்ன வென்று தெரியாமலும் தெரிந்தவனிடம் சென்று கற்காமலும் அமல் எனும் செயற்பாட்டு வணக்கத்தில் மட்டும் ஈடுபட்டவன் எவ்வாறு விசுவாசியாவான்? எப்படி சுவர்க்கதில் நுழைவான்?

கொள்கையறிவை உரியவாறு அறிந்து உறுதிபெற்றவன் அமல்களை நிராகரிக்காது அவற்றை செய்ய முடியாது போனால் அதை விட்ட காரணத்தால் ஆஸீபாவியாகிவிடுவானேயன்றி அவன் காபிராகிவிடான். இறைவன் நாடின் அவனது கருணையினால் பாவியின் பாவத்தை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழைத்துவிடுவான்.

ஆனால் கொள்கையை அறியாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது அவன் மறுமையில் இறைசமூகம் சேரமாட்டான்.

மேற்குறித்த விபரங்களில் இருந்து முஸ்லீம் மிக அவசியம் கற்கவேண்டிய அறிவு இல்முத்தீன் எனும் இல்முத் தௌஹீத் ஆகும் இல்முத் தௌஹீத் எனும் ஏகத்துவ அறிவுதான் வஹ்ததுல் வுஜுத் (உள்ளமை ஒன்று) என்றும் இல்முல் ஹிக்மத் (யதார்தத்தை அறியும் மெஞ்ஞான இறை தத்துவ அறிவு) என்றும் அழைக்கப்படுகிறது. பெயரில்தான் வித்தியாசமேயன்றி யதார்த்ததில் அல்ல.

இவ்வறிவின் மூலம் இரு உள்ளமைகள் இல்லையென்றும் அல்லாஹ் எனப்படும் ஒரேயொரு வுஜுத்\தாத் என்ற உள்ளமைதான் சர்வ பிரபஞ்சமாகவும் பலதாகவும் உள்ளது என்றும் பிரபஞ்சமென்பது அந்த ஒரேயொரு மூலத்தின் கோலமேயன்றி அது தனியான சுயமான உள்மையல்ல என்றும் ஒரு மூலப்பொருளைக் குறிக்கும் இரு சொற்களே வுஜுதும் தாத்தும் என்பதும் அவ்விரண்டும் ஒன்றென்பதும் தெளிவாகிறது.

கடலின்மேல் நடனமிடும் குமுழி சுயமானதல்ல ஐஸ்கட்டி சுயமானதல்ல நீரே அவற்றின் மூலமாகும்.

நீர்தான் தன்னை கொண்டு நிலை பெற்றுள்ளது. குமுழியும் ஐஸும் தன்னைக் கொண்டு நிலைபெற்றிருக்க வில்லை. அவ்விரண்டையும் நீரைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. ஐஸ், குமுழி என்பவை பார்வையிலும் புத்தியிலும்தான் உள்ளவை யதார்தத்தில் இல்லாதவை ஐஸ் குமுழி என்று பார்வையும் அறிவும் சென்னாலும் கையில் படும்போது நீரையே உணர்கிறோம். இதேபோல் பிரபஞ்சம் (சிருஷ்டி) என்பது ஆதேயமானதேயன்றி ஆதாரமானதல்ல. ஆதேயம் தன்னைக் கொண்டு சுயமாக தனியாக இருக்காது. ஆதாரத்தைக் கொண்டே அது நிலைபெற்றிருக்கும்.

உதாரணத்திற்கு பன் என்பது ஆதாரமானது. பாய் என்பது ஆதேயமானது. பாய் என்பது தன்னைக் கொண்டு சுயமாக நிற்பது அசாத்தியமாகையால் பன்னைக் கொண்டே நிலைபெற்றிருக்கிறது. பாய் என்பது அறிவிலும் பார்வையிலுமே உள்ளது. அமரும்போது நமது உடல் பன்னில்தான் படுகிறது பாயில் அல்ல காரணம் பாய் என்பதே யதார்த்தத்தில் இல்லை. இதேபோல் பிரபஞ்சம் எனும் சிருஷ்டி அல்லாஹ் எனும் உள்ளமையை கொண்டே நிலை பெற்றுள்ளது. பிரபஞ்சத்தின் கோலத்தில் இருப்பது அல்லாஹ் என்ற மூலப்பொருளேயாகும்.

இதனாற்றான், தன்னைப்பற்றி இறைவன் சொல்கையில் ஏகன் (அஹதுன்) என்று சொல்கின்றான் ஏகமாக-எல்லாமாக இருப்பது தானே! வேறல்ல என்பதை நிறுவுவதுடன் தான் அனைத்துமாக இருப்பதால் தான் பலதல்ல. எல்லாமாக இருக்கும் ஒருவனாகிய என்னை ஒன்று படுத்தி தவ்ஹீத் செய்யுங்கள் என்கிறான்.

இறைவன் உள்ளமையில் ஒருவனேயன்றி எண் கணிப்பின்படி ஒருவனல்லன் இதுதான் இஸ்லாத்தின் கொள்கை.

இவ்வுண்மையை உணராது இவ்விறை தத்துவத்தை அறியாது இன்று முஸ்லீம்கள் பிறந்து மடிகின்றனர்.

இறை கொள்கை பற்றி தெரியாமலும் இறை கொள்கைதான் எல்லாமவன் எனும் வஹ்ததுல் வுஜுத் கொள்கையை மறுத்தும் எதிர்த்தும் அக் கொள்கையை சொல்வோரை மதம் மாறியவர் என்றும் கருதி தமது அறியாமையால் அமல்களில் மட்டும் காலூன்றி அமல்களின் அடிப்படை அறிவின்றி வாழ்வை முடிக்கின்றனர். இன்னும் அதிகமானோர் இறைவன் ஒருவன் என்பதால் அவன் எண் இலக்கத்திற்கு உட்பட்ட ஒருவன் அவன் எங்கோ ஒருஇடத்தில் இருந்துகொண்டு சிருஷ்டிகளை படைத்துக் கொண்டிருக்கின்றான் என்றும் நம்பியுள்ளனர்.

இதுவும் வழிகெட்ட கொள்கையேயாகும். வழி கெட்ட அனைத்துக் கொள்கையையும் மறுத்தே அல்குர்ஆன் இறை கொள்கை பற்றி பின்வருமாறு அறைகிறது.

அவனே முதலானோன்!
அவனே இறுதியானோன்,
அவனே (பிரபஞ்சங்களாக) வெளியானோன்,
அவனே உள்ளானோன்,
அவனே அனைத்தைக் கொண்டே,
அறியப்பட்டோன்.

எல்லாம் அவனே எனும் ஏகத்துவ ஞானம் இல்முத் தவ்ஹீத் இவ்வசனத்தில் எடுத்தோதப்படுகிறது.

இல்முத் தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவ அறிவு என்று பொருள் சொல்லப்படுகிறது.

ஏகத்துவம் என்பது ஏகம் + தத்துவம் ஏகமாகவிருப்பது அஹதுன் ஏகன் என்ற அல்லாஹ்தான் என்பது தெளிவாகிறது.

தெளஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள் கொண்டாலும் அச்சொல் வஹ்ஹத என்ற சொல்லிருந்து பிறந்துள்ளது வஹ்ஹத, யுவஹ்ஹிது, தௌஹீதன் என்பது அச்சொல் தோன்றிய முறையாகும்.

வஹ்ஹத என்றால் ஒன்று படுத்தினான் என்பது பொருள் தவ்ஹீத் என்றால் ஒன்று படுத்துதல் என்பது பொருள் .

இறைவன் ஒருவனாக இருக்கையில் அவனை ஒன்றுபடுத்து என்று சொல்ல முடியாது. ஒன்றை ஒன்றுபடுத்தல் அசாத்தியமாகும். ஒரு பேனையை சுட்டி அதை ஒன்றுபடுத்துமாறு அதை ஒன்று என்று சொல்லுமாறும் பணிப்பது முஹால் அசாத்தியமானதாகும். இதனையே தவ்ஹீதுல் வாஹிதி முஹாலுன் ஒன்றை ஒன்று படுத்துதல் அசாத்தியம் என்று இறை கொள்கைச் சட்டம் சொல்கிறது.

எனவே தவ்ஹீத் ஒன்று படுத்துதல் என்பது ஒரேயொரு வுஜுத் உள்ளமை தான் இருந்து பிரபஞ்ச உடையில் பலதாக தோற்றுகிறது. யதார்த்தத்தில் அனைத்தும் ஒன்றே அன்றி பலதல்ல. அலை,நுரை, குமுழி, துளி ஒவ்வொன்றும் சுயமானது போல் தெரிந்தாலும் நீரேயன்றி எதுவுமில்லை என்பதுபோல் அவையனைத்தும் நீர்தான் என்று ஒன்று படுத்துவதுபோல் எல்லாமாக இருப்பது அல்லாஹ் எனும் உள்ளமையே அன்றி இன்னொன்றல்ல. அதுதானே தான் என்று ஒன்று படுத்துவதே தவ்ஹீத் ஆகும். இவ்வறிவே இல்முத்தவ்ஹீத் ஏகத்துவ அறிவாகும் இதனையே இல்முல் ஹிக்மத் என்றும் அழைக்கப்படுகின்றது.

இல்முல் ஹிக்மத் என்பதற்கு இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குல்லி ஷையின் ஒவ்வொரு வஸ்துவின் யாதார்த்தம் பற்றியும் ஆராய்ந்து அனைத்திற்கும் அல்லாஹ்வின் வுஜுதே யதார்த்தமான மூலம் என்று அதன் வரைவிலக்கணம் சொல்கிறது. உடையின் மூலம் நூல் என்றும் அதன் மூலம் பஞ்சுதான் என்றும் பஞ்சுக்கு வேறான உடையில்லை என்றும் நூலையும் சீலையையும் பஞ்சுதான் என்று தெரிந்து ஒன்று படுத்துவதுபோல் பிரபஞ்சத்தின் கோலம் பலதாக தெரிந்தாலும் அக்கோலங்களாக யதார்த்தத்தில் உள்ளவன் அல்லாஹ்தான் என்று ஒன்று படுத்தி ஆராயப்படும் அறிவே இல்முல் ஹிக்மத் எனப்படும். எனவே மேற்கண்ட விபரத்தின்படி இல்முத் தவ்ஹீத், இல்முல் ஹிக்மத் கல்வியைக் கற்பதும் அதை கற்பிப்பதும் பர்ழு ஐன் ஒவ்வொருவருக்கும் பிரதான கடமையும் அத்தியாவசியமும் ஆகும். இக் கல்வியினாற்றான் ஈருலகப் பயன் கிடைப்பதுடன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நிறைவு செய்ய முடியும்.

இவ்வறிவையே நபிகள் (ஸல்) தலபுல் இல்மி ஒரு அறிவைத் தேடு என்றும் அதை தேடுதல் கடமை என்றும் சீனா சென்றேனும் தேடிப்படி என்றும் நவின்று அவ்வறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.

இவ்வறிவு வழங்கப்பட்டவனே அதிக நன்மை வழங்கப்பட்டவன் என்று அல்குர் ஆனும் சொல்கிறது.

உண்மை இப்படியிருக்க அவசியம் அறிய வேண்டிய தவ்ஹீதுடைய அறிவை அறியாமல் தீனின் ஒரு பகுதியான இஸ்லாத்தின் கிரியையான அமல்களை மட்டும் தெரிந்தும், சட்டம் தெரியாமலும் செய்துவருவது ஆச்சரியமும் அறியாமையுமாகும்!

எனவே அல்லாஹ் பற்றி அறியாமலும், அவனே எல்லாம் எனும் தத்துவத்தை ஏற்காமலும் எதிர்ப்போர் இறைவனிடம் தப்பவே முடியாது!!!.

(
அல்மிஷ்காத் மாத இதழ் 2002 ஆம் வருட இதழில் அதன் ஆசிரியர் மெளலவி இப்றாஹிம் நத்வியால் எழுதப்பட்டது)

நன்றி: முஹைய்யித்தீன் டிவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக