சனி, 10 டிசம்பர், 2011

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? பாகம்-01



இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற விடயத்தில் முஸ்லிம்களில் நான்கு பிரிவினர் உள்ளனர்.

ஒவ்வொறு பிரிவிலும் “உலமாஉ” மார்க்க அறிஞர்களும் உள்ளனர். மார்க்க அறிவில்லாத “அவாமுன்னாஸ்” சாமானியர்களும் உள்ளனர்.

1) ஒரு பிரிவினர் அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்திலிருக்கின்றான் என்று வலியுறுத்திக் கூறுகின்றனர்.

2) இன்னொரு பிரிவினர் அவன் தூணிலுமிருப்பான், துரும்பிலிமிருப்பான், எல்லாவற்றிலுமிருப்பான் என்று கூறுகின்றனர்.

3) வேறொரு பிரிவினர் அவன் தூணாயுமிருப்பான், துரும்பாயுமிருப்பான், எல்லாமாயுமிருப்பான் என்று கூறுகின்றனர்.

4) மற்றொரு பிரிவினர் அல்லாஹ் எங்கிருந்தாலென்ன?

அந்த விபரம் எமக்குத் தேவையில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கூறுகின்றனர். இந்த நான்கு பிரிவினரில் முதற் பிரிவினரை வஹ்ஹாபிகள், வழிகேடர்கள் என்று நாங்கள் சொல்வோம்.

இரண்டாம் பிரிவினரை “ஹுலூல் இத்திஹாத்” என்ற வழி கெட்ட கொள்கையுடையோர் என்று நாங்கள் சொல்வோம்.

மூன்றாவது பிரிவினரை “முவஹ்ஹிதூன் தவ்ஹீத் வாதிகள்” “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடையோர், அல்லாஹ்வைச் சரியாக அறிந்து “ஈமான்” விசுவாசம் கொண்டோர் என்று நாங்கள் சொல்வோம். நான்காம் பிரிவினரை தந்தையின் விபரத்தை அறிந்து கொள்ள விரும்பாத துர்பாக்கியவான்கள் என்றும், தமது கருவை அறிந்து கொள்ள விரும்பாத அநீதியாளர்கள் என்றும் நாங்கள் சொல்வோம். இவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் தமது வாதத்துக்கு திருகுர்ஆன் வசனங்களையும், நபீமொழிகளையும், இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களையுமே ஆதாரங்களாகக் கூறுகிறார்கள். இதனால் மார்க்க ஞானமில்லாத பொதுமக்கள் யாரின் கருத்தை ஏற்பது யாரின் கருத்தை விடுவதென்று தெரியாமல் தடுமாறுகின்றனர். அல்லாஹ் எல்லாமாயுள்ளான் என்ற கருத்தை நம்பினவர்கள் ஒரு கூட்டமாயும், அவன் எதிலுமிருக்கிறான் தூணிலுமிருக்கின்றான், துரும்பிலுமிருக்கின்றான் என்ற கருத்தை நம்பினவர்கள் இன்னொரு கூட்டமாயும், அவன் “அர்ஷ்” என்ற இடத்தில் இருக்கின்றான் என்ற கருத்தை நம்பினவர்கள் வேறோரு கூட்டமாயும், அவன் எங்கிருந்தால்தான் எமக்கென்ன என்று சொல்பவர்கள் பிறிதொரு கூட்டமாயும் பிரிந்து முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விடயத்தில் பல கூட்டங்களாயும், பல கொள்கையுடையோர்களாயும் காணப்படுகின்றனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கிடையில் வாக்கு வாதங்களும், அடி தடிகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. எனவே, இறைவன் எங்கே இருக்கின்றான் என்பது தொடர்பாக திருகுர்ஆனையும், நபீ மொழிகளையும் ஆதாரங்களாகக் கொண்டு இமாம்களும் ஞானிகளும் எழுதிய நூல்களிலிருந்து நான் பார்த்தறிந்த விடயங்களையும், இலங்கை, இந்தியா, ஈராக், ஈரான், சிரியா, சஊதி அரேபியா போன்ற நாடுகளில் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் நான் கேட்டறிந்த விளக்கங்களையும் இங்கு எழுதுகின்றேன். இந்நூலைப் பார்வையிடும் எந்தக் கருத்துடைய “உலமாஉ” மார்க்க அறிஞர்களாயினும், பொது மக்களாயினும் இதில் பிழையிருக்கக் கண்டால் என்னை நேரில் கண்டு அல்லது கடிதம் மூலம் ஆதாரத்துடன் பிழையைச் சுட்டிக்காட்டுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். முதலில் அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற வஹ்ஹாபிகளின் கருத்துபற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்பதை நிறுவுவதற்காக வஹ்ஹாபிகள் கூறிவரும் ஒரேயோர் ஆதாரம்

الرحمن على العرش استوى “அர் றஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா” என்ற திருகுர்ஆன் வசனமேயாகும். இது தவிர திருக் குர்ஆன் ஆதாரம் அவர்களிடம் வேறு ஒன்றுமே இல்லை.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் இது வஹ்ஹாபிகளின் கூற்று .

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று வஹ்ஹாபிகள் வாதிடுகின்றனர். அவர்கள் தமது வாதத்துக்கு ஆதாரமாக திருகுர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் இமாம்கள் கூறியுள்ள கருத்துக்களையும் கூறுகின்றார்கள். அவர்கள் தமது வாதத்தை நிறுவக்கூறும் ஆதாரங்கள் சரியானவைதான். அவற்றை நாம் மறுக்கவில்லை. ஆயினுமவர்கள் அவ்வாதாரங்களைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லைஎன்றே நாம் சொல்கின்றோம்.

வஹ்ஹாபிகள் துறை தெரியாமல் தோணி தொடுக்கிறார்கள்.

ஒரு சொல் பல அர்த்தமுள்ளதாயிருந்தால் அவ்வர்த்தங்களில் அச்சொல் வந்துள்ள இடத்துக்குப் பொருத்தமான அர்த்தம் மட்டுமே அதற்குக் கொடுக்க வேண்டும். அத்தோடு கொடுக்கப்படும் அர்த்தம் திரு குர்ஆனுக்கும் நபீ மொழிகளுக்கும், இமாம்களின் ஏகோபித்த முடிவுகளுக்கும் முரணில்லாமலும் இருத்தல் வேண்டும். பல அர்த்தமுள்ள ஒரு சொல்லுக்கு அவற்றில் ஒரு அர்த்தம் மட்டுமே கொடுத்து, இது மட்டுமே இதன் அர்த்தமென்று பிடிவாதம் செய்வதும், ஏனைய அர்த்தங்களை மறுப்பதும் பிழையானதாகும். இவ்வடிப்படையில் “அர்றஹ்மான் அலல் அர்ஷிஸ்தவா” என்ற திருகுர்ஆன் வசனத்தை ஆராய்ந்து பார்ப்போம். الرحمن على العرش استوى இந்த வசனத்தில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மூன்று ஆர்த்தங்கள் உள்ளன. ஒன்று - استقرّ- “இஸ்தகர்ற” இதற்கு தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தம் உண்டு, இந்த அர்த்தங் கொண்டு றஹ்மான் அர்ஷில் தரிபட்டான், றஹ்மான் அர்ஷில் அமர்ந்தான் என்று கருத்துக் கொள்ள முடியும்.

இரண்டு – இஸ்தவா என்று சொல்லுக்கு, استو لى – இஸ்தவ்லா அதிகாரமுள்ளவனானான் என்று அர்த்தம் உண்டு. இந்த அர்த்தம் கொண்டு றஹ்மான் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்று கருத்துக் கொள்ள முடியும். மூன்று – இஸ்தவா என்ற சொல்லுக்கு استتمّ – இஸ்ததம்ம பூரணப்படுத்தினான், முடித்தான் என்று அர்த்தமுண்டு.

இந்த அர்த்தம் கொண்டு றஹ்மான் அர்ஷின் பேரில் (அர்ஷை) பூரணப்படுத்தினான்- முடித்தான் என்று கருத்துக் கொள்ள முடியும். “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மேற்கண்ட மூன்று விதமாகவும் அர்த்தம் கூறலாம். குறித்த மூன்று அர்த்தங்களில் எந்த அர்த்தம் கொண்டாலும் அது அச்சொல்லுக்கான நேரடி அர்த்தமேயன்றி அச் சொல்லுக்கான “தஃவீல்” வலிந்துரையாகாது. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு மேற்கண்ட மூன்று அர்த்தங்களும் கொள்ளச் சாத்தியமாயிருக்கும்போது வஹ்ஹாபிகள் தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தத்தை மட்டும் எடுத்துக் கொண்டு றஹ்மான் அர்ஷில் இருக்கிறான் என்று பிடிவாதம் செய்வது ஒன்றில் அவர்களின் அறியாமை எனலாம். அல்லது சஊதி ரியாலின் மோகம் எனலாம். அல்லாஹு அஃலம். ஒரு சொல்லுக்குரிய பல அர்த்தங்களில் ஓர் அர்த்தம் அச் சொல் வந்துள்ள இடத்தைப் பொறுத்துப் பிரச்சினையையும் முரண்பாட்டையும் தருமாயின் அதற்கு அந்த அர்த்தம் கொடுக்காமல் அதற்குள்ள ஏனைய அர்த்தங்களில் அவ்விடத்திற்கு பொருத்தமான அர்த்தம் கொடுத்தல் அவசியமாகும். உதாரணமாக “இஸ்தவா” என்ற சொல்லையே எடுத்துக் கொள்வோம்.

இச்சொல்லுக்கு மேற்கண்ட மூன்று அர்த்தங்களில் தரிபட்டான் – அமர்ந்தான் என்ற அர்த்தம் கொடுத்து றஹ்மான் அர்ஷில் தரிபட்டான் – அமர்ந்தான் என்று சொல்லுதல் பிழையாகும். ஏனெனில் இந்த அர்த்தம் கொடுத்து றஹ்மான் அர்ஷில் இருக்கிறான் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு ஓர் இடத்தை தரிபடுத்த வேண்டிவரும். அல்லாஹ் இடத்தை விட்டும் துய்யவனாவான். இடமென்பது படைப்புக்களுக்குள்ள தன்மையாகும். படைப்புக்களின் தன்மையை விட்டும் அல்லாஹ் துய்யவன் என்பது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையோரின் தீர்க்கமான முடிவாகும். தொடரும்...

தொடர்ந்து வர இருப்பவை... ----------------------------------------

  • அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
  • அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் இது வஹ்ஹாபிகளின் கூற்று
  • ஆதாரங்கள்
  • ஸாவீ ஆசிரியரின் கருத்து
  • கவிஞனின் கவி ஆதாரமாகுமா?
  • நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு
  • பிரச்சினைக்குத் தீர்வு
  • இஸ்தவா சொல் பற்றிய சிறு ஆய்வு
  • ஹுலூல் இத்திஹாத்
  • இரண்டும் ஒன்றே
  • தவ்ஹீத்
  • ஐயம் எதற்கு?
  • முஹ்கமாத்-முதஷாபிஹாத், இமாம்கள்
  • ஸலப்-கலப்
  • முஹக்கிகீன்களும், முதகல்லிமீன்களும்
  • அல் இஹாதத் – சூழ்தல்
  • யூனுஸ் நபீ, மூஸா நபீ
  • நாடகம்
  • வஹ்ஹாபிகளின் பாட்டுக்குத் தாளம் போடும் உலமாஉகள்
  • இமாம் சமக்ஷரீ
  • முடிவுரை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக