வியாழன், 14 நவம்பர், 2013

அத்தா

இது தமிழ்நாட்டில் வாழும் ஹனபியாக்களால் தங்களின் தந்தையை அழைக்கப் பயன் படுத்தப்படும் சொல்லாகும். தமிழில் அத்தன் என்றால் தந்தை என்று பொருள்படும்.

இறைவனைத் தமிழர்கள் "அத்தனே" என்றும் "அத்தா" என்றும் விளித்துள்ளனர். கலித்தொகையில் மருதக்கலி 16 ஆம் செய்யுளில் அத்தா என்ற சொல் அப்பா என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமாயணத்தில் அத்தா இதுகேள் என ஆரியன் கூறுவான் இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ? என்ற அடிகளில் அத்தா என்ற சொல் அப்பா என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிற்கால கவிஞர் ஒருவரும் "அத்தா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!" என்று இறைவனை விளித்து ஒரு கவிதையை துவக்குகின்றார்.

துருக்கி மொழியிலும் அத்தா என்றால் தந்தை என்றும் பொருள்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் துருக்கிச் சொல்லையே தங்களின் தந்தையைக் குறிப்பிடப் பயன்படுத்தி வருகின்றனர் என்று சிலர் கூறுகின்றார்கள்.

ஆனால் அத்தா என்ற சொல் முதல் மனிதரான ஆதம் என்பதிலிருந்து தோன்றியது என வேறு சிலர் சொல்கின்றனர்.

ஓகுஸ் களிடையே இது சிறப்புடையோரின் பெயரோடு இணைத்து "அறிவாளர்" " புனுதமானவர்" என்ற பொருளில் மரியாதையுடன் வழங்கப்பெற்று வருகிறது.

யசவி தரிக்காவின் மூலவரான அஹமது யசவியின் கலிபாக்கள் அத்தா என்ற பட்டதை தங்களின் பெயருக்குப் பின் புனைந்து கொண்டனர்.

அவரின் முதல் கலிபாவின் பெயர் மன்சூர் அதா, இரண்டாவது கலிபாவின் பெயர் சையீத் அதா, மூன்றாவது கலிபாவின் பெயர் ஹகீம் அதா என்பனவாகும். இவ்வாறே இவர்களுக்குப் பின் வந்த கலிபாக்களும் செய்து வந்தார்கள்.

சாரச்சூக் என்ற ஊரில் ஒரு வயோதிகத் துருக்கியர் இருந்தாரென்றும் அவரை மக்கள் அத்தா என்று அழைத்ததாகவும் தமக்கு அவர் விருந்தளிததாகவும் இப்னு பதுதா கூறுகிறார். போலி நபி முகன்னா அல் குரசானியின் இயற்பெயர் அத்தா என்பதாகும்.

அத்தாவிலிருந்து ஏற்ப்பட்ட பட்டங்கள் தாம் அதாபெக், அதாபெக் அசாகீர், அதாலிக் காசி ஆகியவை.

துருக்கி அதிபர் முஸ்தபா கமாலுக்கு அம்மக்கள் அளித்த அன்பு பட்டம் அத்தா துர்க் (துருக்கியின் தந்தை) என்பதாகும்.

தகவல்: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் -

பகிர்ந்த ராஜகிரி கஸ்ஸாலிக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக