வெள்ளி, 15 நவம்பர், 2013

கர்பலா நினைவுகள்


ஹிஜ்ரி 61 ம் ஆண்டு முஹர்ரம் 2 ம் நாள் கர்பலாவில் ஹுசைன் கால் பதித்தார்..... 
கர்பலாவில் தங்கியிருந்த ஹுசைனையும் அவர் குடும்பத்தையும் பணிய வைத்து தன்னிடம் இழுத்து வருவதற்கு உமர் இப்னு சஅத் என்பவன் தலைமையில் 4000 படை வீரர்களை கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான் கூபாவின் ஆளுநர் இப்னு ஜியாத். இந்த வேலைக்கு கூலியாக இப்னு சஅதுக்கு "ராய்"நகரின் ஆளுநர் பதவி தருவதாக ஆசைக் காட்டப்பட்டது. பதவிக்காக எந்த மாபாதகத்தையும்செய்யத்
துணிந்தவன் சஅத்.

இவன் கர்பலாவுக்கு வந்து "ஏன் கர்பலாவுக்கு புறப்பட்டு வந்தீர்கள்" என்று இமாம் ஹுசைனிடம் கேட்டான் .
"கூபா மக்கள் அழைப்பு விடுத்ததால் வந்தேன்..இப்போது அவர்கள் என் வருகையை விரும்பவில்லை என்று தெரிகிறது.அதனால் நான் திரும்பிச் சென்று விடத் தயாராக இருக்கிறேன்" என்றார் இமாம் ஹுசைன்.

"ஹுசைன் நமது வலையில் வந்து மாட்டிக் கொண்ட பிறகு திரும்பிச் செல்வதற்கோ..தப்பிச் செல்வதற்கோ அனுமதிக்க வேண்டாம்" என்ற கட்டளையை அனுப்பி வைத்தான் இப்னு ஜியாத்.
"முதலில் ஹுசைன் யஜீதுக்கு "பைஅத்" செய்ய வேண்டும். அதன் பிறகு அவரை என்ன செய்வது என்பதைப் பற்றி
தீர்மானித்துக் கொள்ளலாம்" என்ற வஞ்சக அறிவிப்பையும் வெளியிட்டான் இப்னு ஜியாத்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யஜீதுக்கு பைஅத் செய்ய ஹுசைன் மறுத்து விட்டார். அதனால் புராத் நதியின் தண்ணீர் ஹுசைனுக்கு மறுக்கப்பட்டது.ஹுசைனும் அவரது குடும்பத்தாரும் தாகத்தால் தவித்தார்கள். அவர்களின் வேதனையை தாங்க முடியாத ஹுசைன் இப்னு ஸஅதிடம் மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார். அதன்படி...

"நான் மக்காவுக்கே திரும்பிச் சென்று விடுகிறேன் அல்லது..நான் யஜீதை சந்திப்பதற்கு அனுமதி கொடுங்கள்..அல்லது பரந்த பூமியின்
ஏதாவது ஒரு மூலையில் சென்று தங்கி இறைப்பணி செய்வதிலேயே என் காலத்தை கழித்து விடுகிறேன்.அதற்காவது அனுமதி கொடுங்கள்."

இதில் எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான் இப்னு ஜியாத். அத்துடன்...யஜீதை கலீபாவாக ஏற்றுக்கொள்ள ஹுசைன் மறுத்து விட்டால் தாமதமின்றி அவர்மீது போர் தொடுக்கக் கட்டளையிட்டு "தில் ஜவ்ஷான்" என்ற ஒரு கொலைகாரனையும் கர்பலாவுக்கு அனுப்பி வைத்தான்.மேலும்,

"இப்னு சஅது போரை ஆரம்பம் செய்ய தாமதித்தால் நீயே தளபதியாக இருந்து போரை நடத்து..ஹுசைனின் தலையை வெட்டி எனக்கு அனுப்பு..அவரைச் சார்ந்தவர்கள் அத்தனை போரையும் கொன்று ,அவர்களின் உயிரற்ற சடலங்களின் மீது குதிரைப் படையை ஓடச் செய்து சிதைத்துப்போடு" என ஒரு வெறி நாயைப்போல உத்தரவிட்டு தில்ஜவ்ஷானை ஏவி விட்டான்..

ரத்த வெறிபிடித்த தில் ஜவ்ஷான் கண்களில் கொலை வெறியோடு கர்பலாவை நோக்கி பாய்ந்து சென்றான்.
000
கூபாவாசிகளின் துரோகம்
***********************
முஹர்ரம் மாதம் 9 ம் நாள்.அசர் தொழுகைக்கு பிறகு ஹுசைனின் மீது போர் பிரகடனத்தை அறிவித்தான் இப்னு சஅது.
தனது சகோதரர் அப்பாஸ் மூலம் ஓரிரவு மட்டும் அவகாசம் கேட்டு பெற்றுக் கொண்டார் ஹுசைன்.பிறகு தனது உறவினர்களை எல்லாம் அழைத்து, தனக்காக யாரும் உயிர் துறக்க வேண்டாமென்றும் அனைவரும் இரவோடு இரவாக மதீனாவுக்கு சென்று விடும்படியும் மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் தாங்கள் யாரும் ஹுசைனை விட்டு செல்ல முடியாது என்று அனைவரும் உறுதிபட உரைத்து விட்டனர்.

"இறைவன் மீது ஆணையாக..நான் மரணித்து விட்டால் நபிகள்(ஸல்)அவர்கள் வாக்குக்கு மாற்றமாக யாரும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது.
முகத்திலும் மார்பிலும் அறயக்கூடாது" என அன்புக் கட்டளையிட்டார் ஹுசைன்.

அன்றைய இரவு ஹுசைனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறுதி இரவாக அமைந்தது.அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தண்ணீர்
இல்லை.ஆனால் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை எண்ணி அவர்கள் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.

முஹர்ரம் 10 ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலை.
இப்னு சஅது தனது 4000 படை வீரர்களை ஹுசைனுக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.
ஹுசைனின் அணியில் 32 பேர் குதிரையில் அணிவகுத்து நின்றார்கள்.மற்ற 40 பேர்களில் யாரிடமும் எந்த வாகனமும் இல்லை.
அவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். அவர்கள் அனைவரும் கூடாரத்தில் தங்கி இருந்தனர்.

இப்னு சஅதுடைய படை வீரார்களின் மனதைத் தொடும் வகையில் அவர்களிடையே இமாம் ஹுசைன் உரையாற்றினார்.

" நபிகள் (ஸல்) அவர்கள் என்னையும் என் சகோதரர் ஹசனையும் சொர்க்கத்து இளைஞர்களின் தலைவர்கள் என்று கூறியதை நீங்கள் மறந்து விட்டீர்களா?
என் தாயார் பாத்திமா பெற்றெடுத்த ஆண் மக்களில் நான் மட்டும்தானே மிச்சமிருக்கிறேன்?
நான் உங்களுக்கு என்ன அநியாயம் செய்தேன்?
நீங்கள் அழைத்தீர்கள் என்றுதானே நான் இங்கே புறப்பட்டு வந்தேன்? நீங்கள் விரும்பவில்லை என்றால் என்னை திரும்பிப் போக விடுங்கள் " என்று உருக்கமாகப் பேசினார்.

ஷாம் தேசத்தார்களும் கூபாவாசிகளும் ஹுசைனின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் அவர்களை கேலி செய்தனர்.
மக்காவிலிருந்த ஹுசைனுக்கு கடிதங்கள் எழுதியும் நேரில் சென்று சந்தித்தும் கூபாவுக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்த
அந்த கூபாவாசிகள் இப்போது இறைவன் மீது ஆணையாக...நாங்கள் ஹுசைனையும் அவரது குடும்பத்தாரையும் போரில் கொன்று குவிப்போம்" என்று வெறிக் கூச்சலிட்டனர்.

பணத்துக்காகவும் பதவிக்காகவும் யஜீதிடம் விலைபோன கூபாவாசிகளின் படு பயங்கரமான நம்பிக்கை துரோகத்தின் வெளிப்பாட்டை அவர்களின் வாய் வார்த்தைகளின் வழியாக நேரிடையாக கண்டு கொண்ட ஹுசைன் மனம் நொறுங்கிப் போனார்.தனது தந்தையார் அலீக்கும் சகோதரர் ஹசனுக்கும் இந்த கூபா மக்கள் செய்த துரோகம் தன்னிடமும் தொடர்வதைக் கண்டு துவண்டு போனார்.தனது கூபா பயணத்தை தடுத்து நிறுத்த முயன்ற நல்லோர்களின் வார்த்தைகளை தான்
மறுதலித்ததை எண்ணி வருந்தினார்.ஆயினும் காலம்
கடந்து விட்டதை எண்ணி இறைவனிடமே பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இந்தத் துயர நேரத்திலும் ஹுசைனை சந்தோசப் படுத்தியது
ஒரு சம்பவம்.
ஆரம்பத்தில் ஹுசைனின் கூட்டத்தாரை பின் தொடர்ந்து முற்றுகையிட்ட ஹூர் இப்னு யஜீது திடீரென ஹுசைனின்
அணியில் வந்து இணைந்து கொண்டார்.அதை எண்ணி ஹுசைன் சந்தோசப்பட்டார்.

ஹூர் இப்னு யஜீதும் சுஹைர் பின் கைன் என்பாரும் கூபா மக்களுக்கு ஹுசைனின் நற்குணங்களையும் அவரது மேன்மையையும் எடுத்துரைத்து, அவரைக் கொல்ல நினைப்பவன் அல்லாஹ்வின் கடுமையான தண்டனையை அனுபவிப்பான் என்றும் எச்சரித்தனர்.அதை யாரும்
பொருட்படுத்தவில்லை.எதிரிகளின் ஒரே நோக்கம் ஹுசைனை கொலை செய்வதிலேயே இருந்தது.

இஸ்லாமியப் பேரரசின் மன்னனாக முடி சூட்டிக்கொண்ட யஜீதின் படைத்தளபதி சஅது முதல் அம்பை எய்து போரைத் தொடக்கி வைத்தான்.

இரு தரப்பிலிருந்தும் தனித்தனி வீரர்கள் களத்தில் மோதிப் பார்த்தனர்.ஹயாத் பின் உமைய்யா, இப்னு யஸ்ஸார் ஆகிய எதிரிகளை ஹுசைனின் அணி வீரர் உமைர் கல்பீ என்பவர் கொன்று போட்டார்.அதன் பிறகும் தனித்தனியாக நடந்த
மோதல்களில் யஜீதின் வீரர்களே கொல்லப்பட்டனர். இந்தத் தோல்வியை எதிர்பார்க்காத தில் ஜவ்ஷான் தனது குதிரைப்படையை ஏவி விட்டு ஹுசைனாரின் அணியின் மீது கடும் தாக்குதலைத்
தொடுத்தான்.சரமாரியாக தொடுக்கப்பட்ட அம்புகள் பாய்ந்துவர, ஹுசைனைச் சேர்ந்தவர்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள்.

ஹுசைனின் மிகச் சிறந்த வீரர்களான முஸ்லிம் பின் அவ்சஜா உமைருல் கல்பீ, அவரது மனைவி ஹபீப் பின் மஷ்ஹர், ஹூர் பின் யஜீது, சுஹைர் பின் கைன் போன்றோர் மிகுந்த வீரத்துடன் போரிட்டு யஜீதின் படை வீரர்கள் பலரை கொன்று போட்டனர். என்றாலும் மலைபோல் திரண்டு நின்ற யஜீதுப் படைத் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீர மரணமடைந்தனர்.
நிராயுத பாணியாக நின்று கொண்டிருந்த ஹுசைனை கைது செய்து யஜீதிடம் கொண்டு செல்ல யாரும் முன் வரவில்லை. மாறாக , அவரை கொலை செய்வதிலேயே எதிரிகள் குறியாக இருந்தார்கள்...

கண்கள் குளமாகி நெஞ்சம் ரணமாகி....
**********************
........முஹர்ரம் மாதத்தின் பத்தாம் பிறை வெள்ளிக்கிழமை நண்பகல். கடுமையான சூரிய மழையில் நனைந்து
வியர்வை வெள்ளத்தை வடித்துக்கொண்டிருந்தது
இமாம் ஹுசைனின் உடல்.

தாங்கிக்கொள்ள முடியாத உயிரிழப்புகள் எல்லாம் கண்முன்னால்
நிகழ்ந்துவிட்ட கொடூரத்தை எண்ணி
கண்களிலிருந்து கண்ணீரும்
எதிரிகளின் அம்புகள் பாய்ந்த
புண்களிலிருந்து செந்நீரும்
வழிந்து கொண்டிருந்த இமாம் ஹுசைனின்
தலையின்மீது வாளால் வெட்டினான் -
நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்ட
மாலிக் பின் சபர் என்பவன்.

இமாம் ஹுசைனின் உச்சந்தலையில் ஆழமாக இறங்கியது வாள்.
கொப்பளித்து வந்த ரத்தத்தில்
ஹுசைனின் முகம் ஒழுவெடுத்துக் கொண்டிருந்தது.
உடலெங்கும்
எதிரிகள் வீசிய நூற்றுக்கணக்கான அம்புகள்...
பாய்ந்து வழிந்த ரத்தத்தில் ஹுசைனின் பூவுடல்
குளியல் நடத்திக்கொண்டிருந்தது.

"கொல்லுங்கள் ஹுசைனை" -
குரைத்து, குரைத்து கூப்பாடு போட்டான் வெறியன் ஷிம்ரு.

யஜீதின் படையினர் வேட்டை நாய்களைப்போல இமாம் ஹுசைனின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தனர்.
ஒரு அம்பு ஹுசைனின் கழுத்தில் பாய்ந்தது.
சிரமப்பட்டு அதனைத் தூக்கி எறிந்தார் ஹுசைன்.

ஜுராப் பின் ஷரீக் தமீமி என்ற தீப்பிடித்தவன் தனது வாளால் ஹுசைனின் வலது
கரத்தை வெட்டினான்.கழுத்திலும் தாக்கினான்.

மாநபி(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்த செம்மல்,மரணத்தின் வேதனையோடு மண்ணில்
மல்லாந்து விழுந்தபோது,மாவீரர் மார்பில் வேகத்தோடு வந்து ஈட்டியால் குத்திக் கிழித்தான் சினான் பின் நஜமீ என்ற ஈனன்.

குற்றுயிரும் கொலையுயிருமாக துடித்துக்கொண்டிருந்த பாத்திமா(ரலி) பெற்றெடுத்த பிள்ளை ஹுசைனின்
கழுத்தை, நரியைபோல் நெருங்கிவந்த நாசக்காரன் ஷிம்ரு தனது வாளால் அறுத்தெடுத்து அநியாயத்தின்
உச்சக்கட்டத்தை அரங்கேற்றம் செய்தான்.

மனித உருவத்திலிருந்த யஜீதின் ராணுவ மிருகங்கள் ஹுசைனின் ஆடைகளையெல்லாம் உரிந்து போட்டார்கள்.

பதவி வெறிபிடித்த சஅது பத்து குதிரைப்படை வீரர்களை அனுப்பி தலை அறுக்கப்பட்ட ஹுசைனின் உடல்மீது குதிரைகளை ஏற்றி சிதைக்கச் செய்தான்.

இமாம் ஹுசைனின் அறுத்தெடுக்கப்பட்ட தலையோடு அவரது குடும்பத்துப் பெண்கள் அனைவரும் கூபா ஆளுநர் இப்னு ஜியாதின் முன் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கீழ்பிறப்பினும் இழிபிறப்பான இப்னு ஜியாத், இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட தலையை பார்த்துப் பார்த்து ரசித்தான்.
தட்டின்மீது வைக்கப்பட்டிருந்த ஹுசைனின் இதழ்களை," இதில்தான் நபிகள் முத்தமிட்டார்களா?" எனக்கேட்டுக்கொண்டே தன் கையிலிருந்த பிரம்பால் அடித்து அவமானப்படுத்தினான்.

இதயமே இல்லாத அந்த ஓநாயின் செயலால் ஆத்திரப்பட்ட ஜைத் பின் அர்கம் என்ற பெரியவரை துன்புறுத்தினான்.அப்துல்லாஹ் இப்னு ஹபீப் அஸ்தி என்பவரை கொன்று போட்டான்.

கர்பலா போர் முடிந்து பலநாட்கள்வரை இமாம் ஹுசைனின் உடலையும் அவரைச் சேர்ந்தவர்களது உடலையும் யாரும் அடக்கம் செய்யவில்லை.சில தினங்கள் கழிந்தபிறகே பக்கத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த உடல்களை நல்லடக்கம் செய்தனர்.

கைதிகளாகி நின்ற பெருமானார் வீட்டுப்பெண்களிடம் இப்னு ஜியாத் மிகக்கேவலமாக நடந்துகொண்டான். சிறுவர் ஜைனுல் ஆப்தீனையும் கொல்லத்துடித்தான். (ஜைனுல் ஆப்தீன்,இமாம் ஹுசைனின் உயிர் தப்பிய ஒரே மகன்.) பின்னர் மனம் மாறி அவர்கள் அனைவரையும் யஜீதிடம் அனுப்பி வைத்தான்.

இமாம் ஹுசைனின் துண்டிக்கப்பட்ட
தலையை ஈட்டியில் சொருகி ஜுகர் பின் கைஸ் என்பவனிடம் கொடுத்து டமாஸ்கசிலிருந்த யஜீதுக்கு அனுப்பி வைத்தான்.

ஈட்டியில் சொருவப்பட்ட இமாம் ஹுசைனின் தலை கூபா வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு
யஜீதுக்கு அனுப்பப்பட்டது.யஜீதின் அரண்மனை வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக ஹுசைனின் தலை காட்சிப் பொருளாக்கப்பட்டது.

000000000000000000000

கர்பலா - அது போர்க்களமல்ல! நபிகள்(ஸல்)அவர்களின் வழித்தோன்றல்களை கொன்றுபோட்ட கொலைக்களம்.
முஆவியாவின் மகன் யஜீதின் அடக்குமுறைக்கும் ஆசைகாட்டலுக்கும் அடிபணிந்து அண்ணல்நபி (ஸல்)
அவர்களின் குடும்பத்தாரை நம்பவைத்து,நம்பிக்கை துரோகம் செய்து,நயவஞ்சகமாக,கொடூரமாக,படுகொலை செய்த
கூபாவாசிகளும் ஈராக் மக்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை - இன்றுவரை!
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவனுக்கே எல்லாப்புகழும்!
......- அபூஹாஷிமா எழுதிய "உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் " என்ற நூலிலிருந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக