சனி, 17 அக்டோபர், 2015

அழகிய முடிவு

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்).
அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.
பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.
ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.
”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).
’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றார்கள் சூஃகபிள்.
மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் 1.அறிபவர்கள், 2.ஆற்றுபவர்கள், 3.ஆகுபவர்கள்.
Knowing ones; Doing ones; Being ones.
இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.
பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.
அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.
அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இல்மத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா”
(அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும், அழகிய முடிவும் அருள்வாயாக”
இறுதியில் அவனாகும் நிலையே அழகிய முடிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக