சனி, 22 செப்டம்பர், 2018

இஸ்லாத்தில் தீட்டு கிடையாது.

இஸ்லாத்தில் தீட்டு கிடையாது. உதிரப் போக்கு காலத்தில் தொழுகை, நோன்பு போன்றவற்றிற்கு தரப்பட்டிருப்பது சலுகைகளே... அதுவும் அந்த நேரத்தில் அவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மட்டும்...

ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்களாம்..

இதை ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார் என ஹிஷாம் அறிவிக்கிறார்கள்... புகாரி 296

இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன... முதலாவது தலையை சீவி விடுவது போன்ற பணிவிடைகளை அவர் கணவருக்கு செய்திருக்கிறார். இரண்டாவது அதை மாதவிடாய் காலத்திலும் செய்திருக்கிறார்...

"எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 297 முஸ்லிம் 506

மாதவிடாய் என்பதற்காக ஒதுக்கி வைக்கவில்லை... அவர் மீது அன்போடு சாய்ந்து அமர்ந்திருக்கிறார்கள்... அது மட்டுமல்ல... படுக்கையிலும் விலக்கி வைக்கவில்லை...

"எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 300

மாதவிடாய் காலங்களில் பெண்ணின் நாபியில் இருந்து முழங்கால் வரை கணவனுக்கு அனுமதியில்லை... அதை தவிர்த்து வேறெந்த விலக்கும் கிடையாது...

ஆனா அறியாமையால் இன்னும் நம் சமுதாயத்தில் ஹைலு, நிபாஸ், ஜனாபத் குளிப்புகளில் பல கிறுக்குத்தனங்கள் நடக்கின்றன... அதிலும் எங்க ஊரில் சிலரிடம் இருக்கும் விசித்திரமான பழக்கம் என்னவென்றால் ஜனாபத்துக்குப் பின் அத்தனையும் கழுவுவார்கள்...

அதாவது படுக்கை விரிப்பு, போர்வையை துவைப்பது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் உடுத்தியிருந்த உடை, குளிக்கும் முன் தொட்ட பாத்திரங்கள்... ஏன் அந்த நேரத்தில் தலையில் குத்தியிருந்த ஹேர்ப்பின் வரை அத்தனையும் கழுவி வைப்பார்கள்... தன் குழந்தையை தொட்டு விட்டால் அதையும் குளிக்கச் செய்வார்கள்...

இதுவெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே மாமியார்களின் கட்டளையாக இருக்கிறது... இதனாலே இதை பெரும் சுமையாகக் கருதி கணவனிடமிருந்து விலகிப் போகிறார்கள் பெண்கள்... மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாத அறிவீனம் தான் காரணம்...

கணவன் மனைவிக்குள்ளான ஹலாலான வாழ்க்கையை தம் இஷ்டப்படி வாழ்ந்து கொள்ள இஸ்லாம் போதிக்கிறது. அதில் தீட்டு தொடக்கு எல்லாம் கிடையாது.

"நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 299

மாதவிடாய் நேரத்தில் தொழ வேண்டாம் என்பது பெண்களின் சிரமத்தைப் புரிந்து வழங்கப்பட்ட ஒரு சலுகை தானே தவிர அது தண்டனையல்ல... ஒரு வேளை அவரவர் விருப்பத்துக்கு விட்டிருந்தால் பிற்காலத்தில் செய்யச் சொல்லி பெண்கள் நிர்பந்திக்கப்படலாம் என்பதாலேயே முற்றிலும் தடை செய்து விட்டார்கள் எம்பெருமானார்...

மற்றபடி மாதவிடாய் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் தொழக் கூடாதென்று சொல்லவில்லை என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உணரலாம்...

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,

‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?’

என்று கேட்டதற்கு,

‘உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்’

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். புகாரி 307

ஆயிஷா (ரலி) தம் மாதவிடாய் காலத்தில் தான் வாய் வைத்து பருகிய பானத்தை அதே இடத்தில் வாய் வைத்து நபி(ஸல்) பருகியிருக்கிறார்கள்... இவர் கடித்துத் தந்த இறைச்சித் துண்டை அவர் புசித்திருக்கிறார்...

ஆக... தாய்மை என்ற உயரிய அந்தஸ்து தரப்பட்டுள்ள பெண்களை சிரமப்படுத்தாமல் அவர்களை இளவரசியாகவும் மஹாராணியாகவும் வாழ வைக்கும் சமுதாயம் நம் இஸ்லாமிய சமுதாயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக