திங்கள், 26 மார்ச், 2012

விதி மாறும் (தாஜுல் ஸலவாத்)


(தாஜுல் ஸலவாத் என்று ஆன்றோர்களால் சிறப்பித்து ஓதப்பட்டு வரும் ஸலவாத்துக்களின் கிரீடமாய் விளங்கும் சிறப்பான ஸலவாத்தின் மொழி ஆக்கமாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது)

அல்லாஹ் ! எங்கள் அருளாளா ! 
        அருமைத் தலைவர் நபிமீது 
நல்லார் ஓதும் சலவாத்தை  
          நாளும்  பொழிந்தே அருளாயோ ?
எங்கள் நபிகள் நாயகம்தான் 
          எழில் மெய்ஞான மணிமகுடம் !
திங்கள் நபிகள்  கைகளிலே 
           திகழும்  கொடியே புகழாகும் !
வானப் பறவை  புராக்கினையும் 
           வசமாய் ஏற்றுக் கொண்டவராம் ! 
வானம் ஏறி மி- ராஜில் 
            வள்ளல் உன்னைக் கண்டவராம் ! 
நோய்கள்சிரமம்  நொம்பலங்கள் 
            நொடியில் தீர்க்கும் மருந்தவராம் ! 
ஆய்வில் அவரின் திருநாமம் 
            அனைத்து  வேதங்  களிலுண்டாம் !
தலைவிதி எழுதிய பட்டோலை 
            தன்னிலும் அவர்கள் பெயருண்டாம் !
தலைவா ! உந்தன் கைஎழுதும்
               பேனா விலும்அவர்  பெயருண்டு !
அரபிகள் அஜமிகள் அனைவருக்கும் 
               அவரே தலைவர் ஆகின்றார் ! 
சுரபிகள் சுரக்கும் அருளொளியில் 
               சூழ்ந்தவ ரென்றும் இருக்கின்றார் !
மக்கா மதீனா  நகரத்தின் 
              மங்கா ஒளியாய்த் திகழ்கின்றார் ! 
எக்கா  லத்தும் விடிகின்ற 
              இலங்கா லைஒளி அவரானார் ! 
முக்கா லத்து  முழுமதியாய் 
              முஹம்மது நபியே ஒளிர்கின்றார் ! 
நேர்வழி தரும்பே  ரொளியாக
               நிகரில்லாத் தலை  மைஏற்றார் !
பார்புக ழும்அவர் பாதங்களில் 
               படைப்பினமெல்லாம் அடைக்கலமே ! 
பண்பின் சிகரம் அவரானார் ! 
              பரிந்துரைக் கும்பொறுப்  பைஏற்றார் ! 
அன்பின் மிகுதிப் பாட்டதனால் 
              அள்ளிவழங்கும் அருளானார் !
வானவன் அவர்க்கு இமையானான் !
               வானவர் ஜிப்ரீல் துணையானார் ! 
கோனவன் சந்நி தானத்தில் 
               கொண்டுபோய்ச் சேர்க்கும் புராக்நபிக்கு
வாகனம் ஆனது; மி-ராஜே 
              வானப் பயணம் ஆனதுவே ! 
சித்ரத்துல்முன்தஹா தானமென 
               சிறக்கும் நபிகள் வாழியவே ! 
உதிரத் தேட்டம் ஒருவனையே 
               ஓடிச் சென்று அடைவதுவே ! 
மன்னர் நபிகள் நாயகமே 
               மற்றைய நபிக்கெலாம் மன்னரென 
விண்ணில் இறைவன் விதித்திட்டான் ! 
               விரியும் அருளால் பணித்திட்டான் ! 
முத்திரை ஒன்றை பதித்திட்டான் !
                "முற்றும்" நபித்துவம் என்றிட்டான் ! 
நித்திரை யில்நபி வருவதற்கு 
                 நித்தமும் சலவாத் ஓதிடுவோம் ! 
வறியவர்க் கெல்லாம் துணையாகும் 
                 வள்ளல் நபியைப் போற்றிடுவோம் ! 
அறியாப் பிழைகள் செய்தோரை 
                  ஆதரித்  தேகை கொடுக்கின்ற 
நெறியா  ளர்நம்  ஸபாஅத்தாம் 
                 நெஞ்சத் திற்கு  சலாமத்தாம் !  
நெஞ்சால் தன்னை நேசிக்கும் 
                 நேயர் இதயத் தாகத்தை 
துஞ்சா மல்தீர்த்  திடுகின்ற 
                 தூய நபிகள் வாழியவே ! 
மெய்ஞா னத்தின் சூரியனாய் 
                 மேன்மை அடைந்தவர் சுடரொளியாய் 
எஞ்ஞான்றும் நபி விளங்குகிறார் 
                   இறைவா அவருக் கருள்புரிவாய் ! 
திக்கற்றோரகு  திசையானார் ! 
                   தீனோர்க் கெல்லாம் வழியானார் !
மக்கப் பதிக்கும் மதீனத்துச் 
                   சொர்க்கப் பதிக்கும் ஒளியானார் ! 
கிப்லா இரண்டின் இமாமானார் !
                   கிழக்கும் மேற்கும் ஆளுமிறை
கபூலாக் கும் "துஆ" அத்தனையும்
                   கண்ணிய நபிகள் பொருட்டன்றோ ? 
அலியார் மக்கள் இருவருக்கும் 
                  அருமைப் பாட்ட  னாரானார்  ! 
வலிமார் ஜின்கள் கூட்டத்தின் 
                   வானகத் தலைவர் நபியானார் ! 
காசிமின் தந்தை; அப்துல்லாஹ் 
                   கண்ணின் மணியாய்ப் பிறந்த நபி 
எங்கள் நபிகள் நாயகத்தின் 
                  எழில்பூத்  திருக்கும் திருமுகத்தில் 
திங்கள் கோடி திரண்டிருக்கும் ! 
                  திகட்டா மல்கண் பார்த்திருக்கும் !
அண்ணல் நபியின் திருவதனம் 
                  ஆசை  யுடனே காண்பதற்கு 
எண்ணம் கொண்ட சான்றோரே ! 
                 எழில்சல வாத்தினைச் சொல்வீரே ! 
கன்னல் நபியின் நிழலாகக் 
                  காலங் கழித்த தோழர்களின் 
எண்ணம் குளிர சலவாத்தை 
                   எழிலாய்ச் சொல்வீர் சான்றோரே ! 
சொல்வோம் சலவாத் நபிமீது ! 
                   சொர்க்கம் வருமே கைமீது !
வெல்வோம் வாழ்வில் வெற்றிகளும் 
                    விரைந்தே வந்திட விதிமாறும்! 


-P.M.கமால் B.A., கடையநல்லூர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக