வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உமையாக்கள் - 1

 #உமையாக்கள்


அத்தியாயம்_ஒன்று
அபு ஹாஷிமா

சூரியனின் மாலைநேர வெளிச்சம்பட்டு பொன்னைப்போல் சிவந்து கொண்டிருந்தது பாலைவன தேசத்தின்
மாலை நேரம்.

ஒட்டகங்கள் தங்கள் எஜமானர்களை சுமந்துகொண்டு அங்குமிங்கும்
அவசரமாக ஓடிக் கொண்டிருந்தன.
மக்காவின் மாண்பாக திகழ்ந்து கொண்டிருந்த இறையில்லம்
கஃபாவிற்கு முன்னால் யாத்ரிகர்கள்
கூட்டம் கூட்டமாக வந்து
குழுமி இருந்தார்கள்.

ஆங்காங்கே அடுப்புகளை மூட்டி
பெண்கள் செய்து கொண்டிருந்த சமையலின் பலவிதமான வாசனைகள்
பலருக்கும் பசியை தூண்டிக் கொண்டிருந்தது.

கஃபாவின் அருகாமையிலிருந்த
ஒரு வீட்டின் முற்றத்திலிருந்து திடீரென்று
சந்தோஷ ஆரவாரம் எழுந்து மக்களை
திரும்பிப் பார்க்க வைத்தது.
அரபிகள் சிலர் ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

#அந்த_வீட்டின்_தலைவர்_பெயர்_குஸை.
குஸையின் மகன்
#அப்துல்_மனாஃப்.
அப்துல் மனாஃபின் மனைவி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததுதான் அவர்களின் சந்தோஷத்திற்கான காரணம்.

குழந்தைகளுக்கு
#அப்துஷ்_ஷம்ஸ்
#ஹாஷிம் என பெயர்களைச் சூட்டி
உறவுகளுக்கு விருந்து வைத்து
மகிழ்ச்சியை கொண்டாடினார்
அப்துல் மனாஃப்.

நாட்கள் நகர நகர பிள்ளைகள் வளர ஆரம்பித்தார்கள்.

ஹாஷிமும் அவர் பிள்ளைகளும்
#ஹாஷிம்_குடும்பத்தார் என அழைக்கப்பட்டார்கள்.

மக்காவுக்கு வரும் யாத்ரிகர்களுக்கு
உணவு , தண்ணீர் போன்றவற்றை வழங்கி
உபசரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார் ஹாஷிம்.
மக்கள் அவரை மிகவும் மதித்தார்கள்.
ஹாஷிமின் பெயர் மக்காவைக் கடந்தும்
பிரபலமானது. வெளியூர்களிலிருந்து வரும்
யாத்ரீகர்கள் அவரை சந்திப்பதை பாக்கியமாகக் கருதினார்கள்.

உடன் பிறந்தவரேயானாலும்
அப்துஷ் ஷம்ஷின் உள்ளத்தில் அது
புகைச்சலை ஏற்படுத்தியது.
தனக்குக் கிடைக்காத பெயரும் சிறப்பும்
ஹாஷிமுக்குக் கிடைப்பதா ?
பொறுக்க முடியவில்லை அவரால்.

யாத்ரீகர்களுக்கு தண்ணீர் வழங்கும்
பொறுப்பு தங்களுக்கே தரப்பட வேண்டும் என்று முணுமுணுக்க ஆரம்பித்தார்.
யாரும் அதை கேட்கத் தயாராக இல்லை.

அம்துஷ் ஷம்ஷின் மகன் உமையா.
இவரின் பெயராலேயே
#உமையா_வம்சம் உருவாயிற்று.
தந்தைக்கு ஆதரவாக பொங்கி எழுந்த உமையா யாத்ரீகர்களுக்கு பணிவிடை செய்யும் உரிமையை தங்கள் குடும்பத்துக்கு
தந்தே ஆக வேண்டும் என போர்க்குரல் எழுப்பினார்.

ஹாஷிம் குடும்பத்தாருக்கும்
உமையா குடும்பத்தாருக்கும்
பகை மூண்டது .

நபிகள்_ஸல்லல்லாஹு
அலைஹி_வஸல்லம்_அவர்கள்
பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு
முன்னால் ஏற்பட்ட பகையின் வெறுப்பு
நபிகளார் பிறந்து ஒரு நூறு வருடங்களுக்குப் பின்னால்
கர்பலாவில் பழி தீர்க்கப்பட்டது .
( தொடரும் )

**********

உமையாக்கள் வரலாறு பெரிது.
ஓரளவுக்கு எழுதினாலே 500 பக்கங்களுக்குக் குறையாமல் வரும்.
தமிழக முஸ்லிம்கள் பெரும்பாலானவர்களுக்கு
சொல்லப்படாத வரலாறு அது.

ஸஹாபாக்கள் என்று கண்ணியத்தோடு
அழைக்கப்படக் கூடிய நபித் தோழர்கள்
பலரின் இன்னொரு பக்க வரலாறு இதில் இருக்கிறது என்பதால் ஆலிம் பெருமக்கள்
அதை சொல்வதை தவிர்த்தே வருகிறார்கள்.

கர்பலாவில் நபிகளாரின் அருமைப் பேரர்
இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் கொல்லப்பட்டதைக்கூட
பட்டும் படாமல் சொல்லி விட்டு சென்று விடுவார்கள்.

உமையாக்களைப் பற்றிய இந்தத் தொடரை
என் எழுத்துக்களை விரும்பிப் படிக்கும் நண்பர்களின் வேண்டுகோளுக்காக மிக சுருக்கமாகவே எழுதுகிறேன்..

ஏற்கனவே ...
ரஸூலுல்லாஹ்வின் வாழ்க்கை வரலாறையும்
உத்தம ஸஹாபாக்களான
அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு
உமர் ரலியல்லாஹு அன்ஹு
உதுமான் ரலியல்லாஹு அன்ஹு
அலீ ரலியல்லாஹு அன்ஹு
ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு
ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு
ஆகியோரின் வரலாறுகளையும் எழுதி அவை புத்தக வடிவில் வந்திருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாகத்தான்
உமையாக்கள் வரலாறை
எழுதும் முயற்சியையும் மேற்கொண்டிருக்கிறேன்.

தொடரைப் படிக்கும் போதே
பலருக்கு நெஞ்சம் பதறும் .
சிலருக்கு என்மீது கோபமும் வரும்.
பத்வாக்கள் கூட வரலாம்.

ஆனாலும் ...
இந்த முஹர்ரம் மாதம் இந்த வரலாறை
எழுத உகந்த மாதம் என்பதால் எழுதுகிறேன்....

இதோடு இணைந்தே
கர்பலா வரலாறும் வரும்.

யாஅல்லாஹ் ...
நீயே காப்பு !


  • J Mohaideen Batcha
    இனிய தொடக்கம் சத்தியத்தின் போர் முரசு ஒலிக்க உங்கள் எழுத்துப் பேரணி நடக்கட்டும். இனிதே வருக.. தொடர்க.
    2
    • Like
    • Reply
    • 4d

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக