வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உமையாக்கள் - 3

 அத்தியாயம்_மூன்று

அபு ஹாஷிமா



காலம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது....
ஹாஷிம் குடும்பத்து வாரிசுகளும்
உமையா குடும்பத்து வாரிசுகளும்
புதிய தலைமுறை மனிதர்களாக தலையெடுக்க ஆரம்பித்தார்கள்.
உமையா குடும்பத்தின் வாரிசான
அபு சுப்யான் மக்கத்து குறைஷிகளின்
முக்கியத் தலைவர்களில் ஒருவரானார்.
மிகப் பெரிய செல்வந்தராகவும்
வணிகராகவும் இருந்த அபு சுப்யானின்
பேச்சுக்கு அரபுலகம் எதிர் பேச்சு பேசாமல் கட்டுப்பட்டது.
ஹாஷிம் நபியை பின்பற்றி முஸ்லிம்களாக மாறிவிட்ட பலரை சித்திரவதை செய்து
கொன்றவர்களில் அபுசுப்யானும் ஒருவராக இருந்தார்.
நபிகளையும் முஸ்லிம்களையும்
தீர்த்து கட்டுவதற்கு பல வியூகங்களை அமைத்தார். இவருடைய நெருக்கமான கூட்டாளி
அப்துஷ் ஷம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த செல்வந்தரான உத்பா இப்னு ராபிஆவின் மகள். இவள் ஒரு மன்னரை பெற்றெடுப்பாள் என்று ஆரூடம் சொல்லக்கூடிய ஒருத்தி குறி சொன்னாள் .
அதன் பிறகு அபு சுப்யானை இவள் திருமணம் செய்து கொண்டு முஆவியாவை பெற்றெடுத்தாள்.
பிறப்பதற்கு முன்னால் தந்தை அப்துல்லாஹ்வையும்
பிறந்து ஆறு வயதானபோது
தாயார் ஆமீனா உம்மா அவர்களையும்
மரணத்திற்கு பறிகொடுத்து விட்டு
நபிகள் அநாதையானார்கள்.
அன்புப் பாட்டனார்
குழந்தை முஹம்மதை உயிரைவிட
மேலாக பாதுகாத்து வளர்த்தார்.
தான் மரணிக்கும் தருணத்தில்
தன் பிள்ளைகளில் ஒருவரான
#அபுதாலிப் அவர்களிடம் முஹம்மதை ஒப்படைத்து எந்தத் தீங்கும் வராமல்
பிள்ளையை பாதுகாக்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார்.
அபுதாலிப் அவர்களும் தங்கள் உயிருள்ளவரை எந்தக் குறையும் இல்லாமல் முஹம்மதை வளர்த்தார்.
#கதீஜா நாயகியாரை திருமணம் செய்து வைத்தார். அண்ணலாருக்கு நபித்துவம் கிடைத்த பிறகு எதிரிகளிடமிருந்து நபிகளைக் காக்கும் கேடயமாகத் திகழ்ந்தார்.
#தாருல்_நத்வா என்றொரு மன்றம் மக்காவில் இருந்தது. மக்கத்துத் தலைவர்களும் அவர்களின் அடிபொடிகளும் ஊர்கதை பேசி தங்களைப் பிடிக்காதவர்களை அழித்தொழிக்க
கூடிப்பேசும் மன்றமது.
நபிகளின் ஏக இறைக் கொள்கையைப் பற்றி அங்கே காரசாரமாக விவாதித்தார்கள்.
" குறைஷியர் நாமெல்லாம்
கொள்கை மாறிப் போய் விட்டால்
கஃபாவை சூழ்ந்திருக்கும்
கோல எழிலுடைய குலதேவதைகள்
நம்மை கோபிக்காதா ?
அவைகளின் கோலம் அழிந்து போகாதா ?
இந்தக் குவலையம் நம்மை பழிக்காதா ?"
என்று குமுறினார்கள் குறைஷிகள் .
அதனால் நபிகளின் குரல்வளையை
முறித்தேத் தீருவது என முடிவெடுத்தார்கள்.
நபிகளின் பெரிய தந்தை அபுதாலிபை சந்தித்து ....
கசடருக்கும் கல்லாத மடையருக்கும்
கருணை காட்ட வந்த நபிமணியின்
இறைக் கொள்கையை முடிக்கச் சொன்னார்கள்.
முழுமதி போகும் பாதையை
மூடிவிடச் சொன்னார்கள்.
இதனை ஏற்றால் ...
அள்ளி கொள்ளவும்
பள்ளி கொள்ளவும்
ஆரணங்குகள்
ஆபரணங்கள்
அடிமைகள்
அரண்மனை என அத்தனையும் தருவோம் .
மறுத்தால்
முஹம்மதின் மூச்சை முடிப்போம் என்றார்கள்.
நபிகளோ ...
" ஒரு கையில் சந்திரனும்
மறு கையில் சூரியனும்
தந்து என்னை அழைத்தாலும்
சத்தியக் கொள்கை இஸ்லாத்தை கைவிட மாட்டேன்.ஈமானை இழக்கவும் மாட்டேன் " என்றார்கள்.
குறைஷிகள் கழுத்தறுபட்ட
கோழிகளைப்போல துடிக்க ஆரம்பித்தார்கள்.
பெரிய தந்தை அபுதாலிபும்
அருமைத் துணைவியார் கதீஜா உம்மாவும்
காலமான பிறகு நபிகளின் மீது குறைஷியரின் வன்முறை அதிகமாக
கட்டவிழ்த்து விடப்பட்டது.
தங்களை தட்டிக் கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முஹம்மதின் உறவினர்கள் யாரும் அவரோடு இல்லை என்ற துணிச்சலில் கொடுமைகளை அரங்கேற்றினார்கள்.
முஹம்மது ரஸூலுல்லாஹ்
இஸ்லாத்தை மக்களுக்கு சொன்னபோது
அவர்களின் உறவினர்களில் பலரும்கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
பெரிய தந்தை அபு லஹப் எதிரிகளின் தலைவனாகவே மாறி விட்டான்.
சிறிய தந்தைகளான
இஸ்லாத்தை ஏற்கவில்லை.
அதற்காக நபிகளை பகைக்கவுமில்லை.
ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாத
ஹம்ஸா வேட்டைப் பிரியராக இருந்தார். ஹம்ஸா போன்றவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆதரிக்காத காரணத்தால்
அபு ஜஹலும் அபு சுபியானும் நபிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தார்கள்.
ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது குட்டி ஈன்ற ஒட்டகையின் கழிவுகளை கொண்டு வந்து நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோள் மீது சுமத்தினான் அபு ஜஹல்.
இதை கேள்விப்பட்ட ஹம்ஸா அவர்கள் விரைந்து வந்து தாருல் நத்வாவில் வீற்றிருந்த அபூ ஜஹலின் நெற்றியில் தன்னுடைய வாளால் ஒரு கோடு கிழித்தார். அபு ஜஹல் தலையில் இருந்த ரத்தம் கொட்ட ஆரம்பித்தது .
இனி இது போன்ற சம்பவம் நடந்தால் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என்று கர்ஜித்து விட்டு நபிகளிடம் சென்று
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ஹம்ஸா.
நபிகளார் மக்காவைத் துறந்து மதினாவுக்கு சென்ற பிறகு ஹம்ஸாவும் மதினா சென்றார்.
முஸ்லிம்களை வளர விட்டால் தங்கள் குலப் பெருமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விடும் என்று குறைஷிகள் பயந்தார்கள்.
மதினா சென்ற முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து அவர்களை அழிப்பதற்காக
அபுசுப்யான் கூட்டம் பெரும் சதி திட்டங்களைத் தீட்டியது. அதற்காக ...
பெரும் செல்வம் ஈட்டும் நோக்கில் வெளிநாட்டுக்கு சென்று வணிகம் செய்து ஐம்பதாயிரம் பொற்காசுகளோடும் ஆயிரம்
ஒட்டகங்களோடும் தாராளமான செல்வத்தோடும் அபு சுபியான் மக்காவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார் .
அவருடைய செல்வம் முஸ்லிம்களை அழிக்கவே பயன்படும் என்பதால் அதை தடுத்து நிறுத்த நபிகள் விரும்பினார்கள் .
313 தோழர்களோடு நபிகளின் படை புறப்பட்டது. பத்ரு என்ற இடத்தில்
முஸ்லிம்களும் குறைஷிகளும்
போர் செய்தார்கள்.
எழுபது குறைஷிகள் கொல்லப்பட்டார்கள் .
எழுபது பேர் கைதிகளானார்கள்.
இந்தப் போரில் ஹம்ஸா அவர்களும் அலீ அவர்களும் வீர தீரத்தோடு போராடினார்கள்.
இதில் அபு சுபியானுடைய மனைவி ஹிந்தாவில் தந்தை உத்பாவும் தனயன் ஷைபாவும் ஹம்ஸா அவர்களின் வாளுக்கு
இரையானார்கள்.
உத்பாவின் தம்பி வலீதை அலீ ஒரே வெட்டில் வீழ்த்தினார்.
இது அபு சுப்யானுக்கும் அவருடைய மனைவி ஹிந்தாவுக்கும் பயங்கர கோபத்தை உண்டாக்கியது .
ஹம்ஸாவை பழிவாங்கியே தீருவேன் என சூளுரைத்தாள் ஹிந்தா .
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்து இருந்தார்கள்
அவர்களின் ரத்த வெறிக்கு
தன்னை தயார் செய்ய ஆரம்பித்தது
மதினாவின் எல்லையிலிருந்த
* இன்ஷா அல்லாஹ் ...
நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக