வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உமையாக்கள் - 4

 #உமையாக்கள்

#அத்தியாயம்_நான்கு
அபு ஹாஷிமா




பத்ருப் போரில் குறைஷிகளின் தானைத் தலைவன் அபு ஜஹல் உட்பட எழுபது பேர்
இறந்து போனார்கள்.
மக்காவே சோகத்தில் ஆழ்ந்தது.

பத்ருப் போர் தோல்வி உமையாக்களுக்கு
பெருத்த அவமானத்தையும் கோபத்தையும்
ஏற்படுத்தியது.
அபு சுப்யானின் மனைவி ஹிந்தாவின்
தந்தையும் சகோதரனும் கொல்லப்பட்டது
அவர்களை தாங்க முடியாத ஆத்திரத்தில்
தள்ளியது.

முஹம்மதையும் அவர் கூட்டத்தையும்
அழித்தே தீருவேன் என்ற உறுதிமொழியை
மக்கத்து குறைஷிகளுக்கு வழங்கி
அவர்களின் புதுத் தலைவரானார்
அபு சுப்யான்.

பத்ருப் போர் நடந்து ஓராண்டு முடிந்து போயிருந்தது. அந்த ஒரு வருடத்திற்குள் மதினாவின் மீது போர் தொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான படைகளையும் தளபதிகளையும் தளவாடங்களையும்
தயார் செய்தார் அபு சுப்யான்.

மூவாயிரம் பேர்கொண்ட மூர்க்கத்தனமான
படையொன்று மதீனாவை நோக்கி
ஆரவார கூச்சலோடு கிளம்பி வந்தது.

பெண்களின் போரணியொன்று
ஹிந்தாவின் தலைமையில்
போர்ப்பரணி பாடி வந்தது.

மதினாவின் எல்லையிலிருந்த உஹது மலைச்சரிவில் குறைஷியரின் பெரும்படை
கொலைவெறியோடு காத்திருக்க ...
மதீனத்து மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்தார்கள் அண்ணல் நபிகள்.

நயவஞ்சகர்களின் தலைவனான
அப்துல்லா பின் உபை போரைப் புறக்கணித்து நபிகளுக்கு துரோகம் செய்தான்.

ஆனால் ...
மதீனத்து இளைஞர்களும்
மக்கத்து முஹாஜிர்களும்
நபிகளின் பின்னால் அணி திரண்டார்கள்.

எழுநூறு பேர் கொண்ட சிறுபடை
குறைஷிகளின் மூவாயிரம் பேர் கொண்ட
பெரும்படையை எதிர் கொண்டது.

முஸ்லிம்களின் கொடியை முஸ்அஃப் தாங்கிப் பிடித்தார்.
அண்ணலின் சகோதரர் ஜாஃபர் குதிரைப்படையின் தலைவராக வந்தார்.
வில் வீரர் குழுவொன்றை அப்துல்லா பின் ஜுபைர் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.
கவசமணியாத காலாட்படைக்கு
அல்லாஹ்வின் சிங்கம் ஹம்சா அவர்களே
கவசமானார்.
உஹது ஐனைன் குன்றின் கணவாயில்
ஐம்பதுபேர் கொண்ட படையணி ஒன்றை
நிறுத்தி ...
" வெற்றியோ தோல்வியோ
எது வந்தாலும் இந்த இடத்தை விட்டு விலகக் கூடாது " என்றார்கள் நபிகள்.

குறைஷிகளின் பெரும்படையில்
மாபெரும் வீரர் காலித் பின் வலீதும்
சப்வான் பின் வலீதும் நெஞ்சு நிமிர்த்தி
வாட்களை சுழற்ற தயாரானார்கள்.

அபு சுப்யான் போராடை தரித்து
வசீகரப் புரவியொன்றில் ஆரோகணித்து வந்தார்.

" அப்துத் தாரின் மக்களே..
வீரப்போர் புரியுங்கள்.
எதிரிகளைக் கொல்லுங்கள் .
குருதியைப் பூசுங்கள்.
உயிர்களைப் போக்கி
உடல்களை வீசுங்கள் .
விடிவெள்ளிக்குப் பிறந்த
பெண்கள் நாங்கள்.
வெற்றியை அணைத்து வரும்
உங்களை
சுகந்தம் வீசும் கூந்தலோடு
பவள மணிக் கழுத்தோடு
குறுகுறுக்கும் எங்கள்
குருத்து மார்போடு
அள்ளி அணைத்துக் கொள்வோம் .
வென்று வாருங்கள் "

ஹிந்தாவின் மகளிரணிப் பெண்கள்
தம்பூரி கொண்டும்
வட்டப்பறை கொண்டும்
வட்டமடித்தனர்.
வீரர்களுக்கு ரத்த வெறியூட்டினர்.

குறைஷிக் கொடியைத் தாங்கிப் பிடித்த
தல்ஹா ...
தானே முதல் பலி ஆவதற்கு ஓடி வந்தான் .
முஸ்லிம்களை நரகிற்கு அனுப்புவேன் என்று ஆர்ப்பரித்தான்.

புயலைப்போல் எதிரே வந்தார் அலீ.
" பொடியன் " என்றான் தல்ஹா.
" உன்னை நரகத்திற்கு அனுப்ப வந்த
மரணம் நான் " என்றார் வீரர் அலீ .
மின்னலாய் இறங்கி வந்த அலீயின் வாளுக்கு இரு கூறாகி இறந்து போனான் தல்ஹா.

தல்ஹாவின் மகன் ஓடோடி வந்து
தந்தையின் கொடியைத் தாங்கிப் பிடித்தான்.
வீரத்தின் வாளுக்கு சரியான விருந்தென்று
ஹம்சா அவனை விருந்தாக்கினார்.

மக்காவின் புகழ்பெற்ற மல்யுத்த மாமலை
அபு தஜனா.
விரி மார்பும் மாளாத வீரமும் பெற்றவர்.
நபிகள் , தங்களின் வாளெடுத்து
" வெற்றிவாள் இதனை பெறுபவர் யார் ?" என்றார். பலத்த போட்டியில் நபிகளின் வாள் அபு தஜனா கரங்களில் சேர்ந்தது.

அலீ ஒருபுறம்
ஹம்ஸா மறுபுறம் .
அபு தஜனாவோ உட்புறம் .
எப்புறமும் தப்ப முடியாத எலிப்படையாய் ஆனது குறைஷியர் பெரும் படை.

உஹதுப் போர்க்களம் குருதியில் குளித்தது.
முஸ்லிம்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் குறைஷிகள் ஓட ஆரம்பித்தார்கள்.

எதிரிகள் விட்டுப்போன
ஏராளமான கொள்ளைப் பொருட்கள் முஸ்லிம்களின் கண்ணை உறுத்த கணவாயில் காவலுக்கு நின்றவர்கள் நபிகளின் கட்டளையை மறந்து இறங்கி வந்தார்கள்.

காலிதின் கழுகுக் கண்கள் காவலில்லாத கணவாயை கண்டு கொள்ள
போர்களத்தின் காட்சிகள் வேகமாய் மாற ஆரம்பித்தன.

கொள்ளைப் பொருட்களின் மேல் பிரியம் கொண்ட முஸ்லிம்கள் கடும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
ஆயிரம் முதலைகள் அலைமோதும் அகழிக்குள் விழுந்துவிட்ட யானையைப்போல முஸ்லிம்கள்
குதறப்பட்டார்கள்.
காலித் பின் வலீதின் வியூகத்திற்குள்
உஹது சுருண்டு கொண்டது.

நபிகளை நோக்கி ஈட்டிகளும்
அம்புகளும் பாய்ந்து வந்தன.
அபு சுப்யானின் ஆணையை ஏற்று
குறைஷியரின் கொலைக் கூட்டம்
நபிகளின் உயிரைப் பறிக்க முன்னேறியது.
நபிகளைச் சுற்றி ஐந்துபேர் அணியொன்று
காவல் காக்க அவர்களெல்லாம் எதிரிகளால்
கொல்லப்பட்டார்கள்.

நபிகளின் கவசம் உடைந்தது.
பல்லொன்று ஷஹீதானது.
குருதி வழிந்தது.
நபிகள் கொல்லப்பட்டார் என
கூக்குரல் எழுந்தது .
முஸ்லிம்களை குழப்பம் மூடியது .
உஹதுப் போர்க்களம் முஸ்லிம்களின்
ரத்தத்தால் புதுப்பாடம் எழுத ஆரம்பித்தது.

*இன்ஷா அல்லாஹ்
நாளை தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக