ஞாயிறு, 17 ஜூலை, 2011

என் கண்மணியே! இரசூலே!

என் கண்மணியே! இரசூலே! கவி மழையால் உங்களை புகழ் பாட வந்துள்ளேன்!

எத்தனை கோடி கவிஞர்கள் திரண்டாலும் முடியாத தங்கள் புகழ் பாட இந்த பேதை பேராசைப்பட்டேன்.

இதோ புகழை புகழக் கோல் ஏந்தினேன். என் பேனாவும் வெட்கி தலை குனிந்தது.

முடியாமல் திண்டாடினேன். ஆனாலும் என் ஆருயிரை நினைக்கும் போது அருவியாய் உள்ளத்தில் பொங்கி வரும் பாசத்தை கவி வடிவில் கொட்டினேன்.


கண்ணியத்தின் கோட்டையே!

அகிலத்தின் அருட்கொடையே!

ஞானத்தின் திறவுகோலே!

ஈமானிய உதிரத்தால் எங்கள் கல்புகளை நிரப்பிய ரசூலே!


உலகத்தின் மாமணியே ஒப்பற்ற கோமானே!

ஏழையின் சிரிப்பில் இறை சந்தோசத்தை கண்ட பெருமானே!

வறுமை எனக்கு பெருமை என்றுரைத்த கோமானே!

பொறுமையின் பொக்கிஷமாய் விளங்கிய பூமானே!


கியாமத்து என்னும் மறுமை நாளிலே ஆதரவாய் அடைக்கலமாய் உம்மத்தை எல்லாம் அரவணைத்து காப்பாற்றும் அன்பு உள்ளமே!

உம்மி நபியா நீங்கள்? தாங்கள் அல்லவா உலக பல்கலைகழகம்!

பலகற்ற மேதைகளும் பயின்று வரும் புத்தகம் அல்லவா நீங்கள்.

மாபெரும் தத்துவங்களை இந்த அகிலத்திற்கு வாரி வழங்கிய தங்களை கல்லாநபி என்று எப்படி உரைப்பது?

நாயகமே! நீங்கள் பிறந்த போது கிஸ்ரா மன்னனின் கோட்டை மட்டுமல்ல இறுகி போன மனகோட்டைகளும் சரிந்தன.


பஸ்ரா மாளிகைகள் மட்டுமல்ல பாவப்பட்ட மனங்களும் இலங்கி நின்றன.

பாரசீகத்தில் பொங்கிய நெருப்பு தங்கள் ஒளிமதி கண்டு சாந்தமானது.

சமாவத் ஓடை தங்கள் வரவால் ஒடுங்கி போனது.

தாங்கள் மண்ணில் மலர்ந்த போது பாலை மண்ணே மணத்தது.

தங்கள் பிறப்பால் முழுமனித வர்க்கமே மாண்புற செய்தீர்கள்.


ஏந்தலே! உங்கள் வரவால்தான் எங்கள் பூட்டப்பட்ட மனக்கதவுகள் திறக்கப்பட்டது.


பெண்வர்கத்தை மண் தோண்டி புதைத்த சமூகத்தின் மனங்களில் அன்பென்னும் விதையை விதைத்தவர் நீங்கள்!


எத்தனை கொடுமைகள், எத்தனை கஷ்டங்கள் அத்தனையும் தாங்கள் தாங்கியதால் தானோ பொறுமை கூட உங்களிடம் பொறுமை கற்றது.

கருணை நபியே! கவலைகள் உள்ளத்தை தாக்கும் பொழுது, தாங்கள் நினைவுகள் தானே எங்கள் மனகாயங்களை சுகப்படுத்துகின்றது.

எங்கள் ஆன்மாவின் அருமருந்தே!

கண்ணீர் பெருக, நெஞ்சம் விம்ப என் சங்கையான ஸலவாத்தையும், பண்பான ஸலாமையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கின்றேன் யா ரசூலல்லாஹ்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக