ஞாயிறு, 17 ஜூலை, 2011

அவுலியாவை கிண்டலடித்த ஒரு சகோதரருக்கு அவர் தெளிவடைய பதில்

السلام عليكم ورحمة الله وبركاته
அவுலியாவை கிண்டலடித்து ஒரு சகோதரர் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அவர் தெளிவடைய என் பதில்:
"நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.” 26:80
ஒரு அவுலியா உயிருடன் இருக்கும் காலத்தில் நோய்வாய் பட்டிருந்தால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை அழைப்பார்கள். அவர் இறை நேசர் என்பதால் மேற்கண்ட இறை வசனத்தின்படி அல்லாஹ் அந்நோயை குணபடுத்துவான். மேலும் அன்றாட வாழ்கையின் தேவைகளுக்கு பணியாட்களின் உதவியையும் நாடுவதும் உண்டுதான். மரணித்துவிட்டால் ஜனாஜாவை குளிப்பாட்டுவது, கபனிடுவது, தோள்கொடுத்து தூக்கி செல்வது, கப்ர் வெட்டுவது, அடக்கம் செய்வது போன்றவைகளை மற்றவர்கள்தான் செய்வார்கள். இது உலக நியதி. இதுபோன்ற விஷயங்களில் அவர்களுடைய சக்தியை (கராமத்தை) காட்டவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருந்தால் அதையும் அவர்கள் செய்து காட்டுவார்கள். இறை நேசர்கள் விஷயத்தில் இதுபோன்ற கேள்விகள் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது / அபத்தமானது. இறைநேசர்களை கேலி செய்வது இறைவனை கேலி செய்வதாகும்.
'ஆகுக' என்று சொன்னமாத்திரத்தில் 'ஆகிவிடும்' என்று அல்லாஹ் சொல்கிறான். வானங்கள், பூமி இவற்றை ஆட்சி செய்வதில் தனக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் தனக்கு இணை - துணை இல்லை என்றும் சர்வ வல்லமை பொருந்தியவன் என்றும் சொல்லும் அல்லாஹ், தான் தேவை அற்றவன் என்றும் சொல்கிறான். தன் நபியிடம் பேசுவதற்கே 'ஜிப்ரயீல்' (அலை) உதவி தேவைபட்டிருக்கிறது. ரூஹை கைப்பற்ற 'இஸ்ராயீல்' (அலை) உதவி தேவைபடுகிறது. 'கிராமன் - கார்த்தீபன்', 'முன்கர் வ நக்கீர்', 'மீக்காயீல்' மற்றும் இலட்சக்கனக்கான மலக்குகளின் உதவி அல்லாஹ்விற்கு தேவைபடுகிறது. மேலும் தன்னை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க இலட்சக்கணக்கான நபிமார்களின் உதவி அல்லாஹ்விற்கு தேவைபட்டிருக்கிறது. இலட்சகணக்கில் நபிமார்களை பூமிக்கு அனுப்பியும் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பூமியில் பாதிக்கு மேல் இருக்கிறார்கள். இந்நிலையில் நபிமார்களின் வருகைக்கு ஏன் முத்திரை இட்டான்? ஒரு வேளை தன்னை அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டுவிட்டார்கள் என்று தவறாக நினைத்துவிட்டானா? நபிமார்களின் வருகைதான் நின்று விட்டதே இப்பொழுது 'ஜிப்ரயீல்' (அலை) என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ஒருவர் கேட்டார்; நீங்கள் கேட்பதுபோல்....... இதுவும் நியாமாகத்தானே தெரிகிறது. சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விற்கே இத்தனை பேர்களுடைய உதவி தேவைப்படும்போது அவுலியாவிற்கு தண்ணீர் கொண்டுவர ஒரு பணியாளின் உதவி தேவைபடுவதில் ஆச்சர்யம் இல்லை.

என் கேள்விக்கென்ன பதில்?

உங்கள் பாணியில் இப்படி கேட்டுப் பாருங்கள். இவைகளுக்கெல்லாம் அறிவுப் பூர்வமான பதில் உங்களால் சொல்ல முடியாது. பதில் தெரியவில்லை என்றால் உடனே "நவூதுபில்லாஹ்".... கலிமா சொல்லுங்கள் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம்தான் இது:
முஃமீன்களே! அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை, அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமீன்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். 3:160

நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? 2:107



கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்து பார்ப்பது மிகக் குறைவே யாகும். 27:62

ஹஜ்ரத் ஹம்சா(ரலி), இமாம் ஹசன்(ரலி), இமாம் ஹுசைன்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) இவர்களெல்லாம் மார்க்கம் தெரியாதவர்களா? - அல்லாஹ்விடம் உதவி தேடாமல் அல்லாஹ்வை தவிர்த்து வேறு ஒருவரிடம் உதவி தேடியவர்களா? இவர்களெல்லாம் அல்லாஹ்மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பேற்படுத்தி கொண்டவர்கள்தானே. இவர்களுக்கெல்லாம் இறைவன் உதவி செய்யாமல் கைவிட்டு விட்டானே மேற்கண்ட இறை வசனத்திற்கு மாறாக....அது ஏன்? என்று கேட்பது எவ்வளவு விபரீதமானதோ அதுபோன்றுதான் உங்கள் கேள்வியும் விபரீதமானது.
மேலும் 'பத்ர்' போர் நடந்த சமயத்தில் சகாபாக்களுக்கு துணையாக மலக்குகளை இறைவன் பூமிக்கு அனுப்பி போர் புரிய வைத்தான். இதை குர்-ஆன் சொல்கிறது. இது தொடர்பான ஒரு கேள்வி. இறைவன் (நாடினால்) சொன்னாலே போதுமே முஹம்மது (ஸல்) அவர்களின் அணி வெற்றி பெற்றிருக்குமே. அவன் எதற்கு மலக்குகளை போர் புரிய அனுப்பவேண்டும்? அல்லாஹ் இந்த பக்கம் இருந்தும், ஆயிரகணக்கான மலக்குகள் சகாபாக்களுக்கு துணையாக போர் புரிந்தும் சகாபாக்கள் நிறைய பேர் போரில் பலியானார்களே ஏன்? மலக்குகள் சரியாக போர் புரியவில்லையா? அபூஜகீலின் தாக்குதலை மலக்குகளால் எதிர் கொள்ள முடிய -வில்லையா? சகாபாக்களுக்கு துணை செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே மலக்குகளை அனுப்பிவைத்தான். சகாபாக்களில் ஒருவர் கூட பலியாகாமல் காப்பாற்றி இருக்கலாமே - அல்லாஹ் தனது வல்லமையை காட்டியிருக்கலாமே. இப்படி கேள்வி கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியுமா?
இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை குர்பான் கொடுக்கும் சமயத்தில் கத்தி இஸ்மாயில் (அலை) அவர்களின் கழுத்தை அறுக்கவில்லை. காரணம் அந்த கத்திக்கு அறுக்கக்கூடாது என்று அல்லாஹ் உத்தரவு இட்டிருந்தான். அதுபோல பத்ர் போர் சமயத்திலும் எதிரிகளின் வாளுக்கு அல்லாஹ் முஸ்லிம்களை வெட்டக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கலாமல்லவா. ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்று கேட்பதும் விபரீதமானதுதான்.

இறைவன் விஷயத்தில் நமது சாதாரண அறிவை பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும். குர்-ஆனும் அப்படித்தான். குர்-ஆன் வசனத்தை மேலெழுந்தவாரியாக படித்து பொருள் கொண்டோமேயானால் இப்படித்தான் அபத்தமான கேள்வி கேட்கத் தோன்றும். மற்ற புத்தகங்களை படித்து பொருள் உணர்வது போல 'இறை வேதத்தை' பொருள் உணர முடியாது. குர்-ஆனுடைய வசனங்களை மேற்கோள் காட்டுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
குர்-ஆன், ஹதீசிலிருந்து சட்டங்களை ஆராய்ந்தெடுப்பது என்பது 'இஜ்திஹா' தின் அந்தஸ்தை எய்தியவர்களைத் தவிர மற்றவர்களால் சாத்தியமாகக்கூடிய விஷயமன்று. ஒருவருக்கு குர்-ஆனின் மேலெழுந்தவாரியான பொருள் தெரிந்தால் மட்டும் சட்டங்களை ஆராய்ந்தெடுக்கும் ஆற்றல் உண்டாகிவிடாது. குர்-ஆனின் வசனங்களில் பல பிரிவுகள் உள்ளன. உதாரணம் 'நாஸிக்', 'மன்ஸூக்', 'முஜ்மல்', 'முஃபஸ்ஸர்', 'முஹ்கம்', 'முதஷாபிஹ்'. சில வார்த்தைகள் 'ஆம்' மாகவும், 'காஸ்' ஸாகவும், 'முஷ்த்தரகா' கவும், 'முஅவ்வலா' கவும் பல பிரிவுகள் உள்ளன. இவற்றை புரிந்து கொள்வதற்கு 'உஸூலுல் ஃபிக்ஹூ', 'உஸூலுத் தப்ஸீர்' என்ற கலைகளில் சிறப்பான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் குர்-ஆனின் வசனத்தை மேற்கோள் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இன்றைய தலைமுறையினர். மேலெழுந்தவாரியாக குர்-ஆனின் வசனங்களை பார்த்தால் நம் அறிவுக்கு தெளிவு கிடைக்காது.
- ஜாஃபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக