வியாழன், 10 அக்டோபர், 2013

பயங்கரவாதத்தின் வேர்கள்

செய்தியாளர் எச்.பீர் முஹம்மது தி இந்து நாளிதழில்...

தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை ‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.
20-ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தின் உருவாக்கமாகத்தான் இருந்தது. 1980-களில் ஆப்கனுக்கு எதிராக சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பை ஒட்டி பாகிஸ்தானில் உருவான முஜாஹிதீன் இயக்கத்துக்குச் சகலவிதமான உதவிகளையும் ஆயுதப் பயிற்சியையும் அமெரிக்கா அளித்தது. அவர்களே பின்னர் தலிபன்களாக உருமாறி, அமெரிக்கத் துணையுடன் ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றி பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தனர். பின்னாளில் தலிபன்களின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு அவர்களிடையே பல சிறு குழுக்கள் தோன்றி ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் இன்னமும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நீட்சியில் அல்கொய்தா இயக்கத்தின் உருவாக்கமும் சேர்த்து கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் வார்ப்பான ஒசாமா பின்லேடன் 19-ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபிய பிரிவைச் சேர்ந்தவர். அன்றைய துருக்கிய உதுமானிய பேரரசுக்கு எதிராக மத்தியக் கிழக்கில் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரிட்டிஷ் துணையுடன் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் (Political Islam) என்பதை முன்வைக்கிறது. ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இதன் அரசியல் இயக்கமான அல்கொய்தா, ‘நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுப்பது ஒவ்வோர் இஸ்லாமியரின் கடமை’ என்று பல முறை அறிவித்திருக்கிறது. மதப் பிரதிகளை இவர்கள் இயந்திரத்தனமாகப் புரிந்துவைத்திருப்பதால், பல நேரங்களில் இஸ்லாம்குறித்து புதிதாக அறிந்துகொள்ள விரும்பும் பதின்பருவ இளைஞர்கள் இதற்கு பலியாகிவிடுகிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்பதைப் பற்றி வரலாற்றில் நேர்மறையான விளக்கங்களும் புரிதல்களுமே இருந்திருக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய வரலாற்றில் தத்துவ ஞானிகளான சூபிகளின் ஜிஹாத் பற்றிய புரிதல் ஆன்மிகத்தை நோக்கித்தான் இருந்தது, அரசியலை நோக்கி அல்ல. ஜிஹாத் என்ற புனிதப் போரை அரசியல் அளவுகோலாக எதிர் சமூகங்களின் மீது வைப்பது மேற்கண்ட இயக்கங்களின் வருகைக்குப் பின்புதான்.

இந்த இயக்கங்கள் சவூதி அரேபிய வகைப்பட்ட உலக இஸ்லாம் (Global Islam) என்பதை முன்வைப்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் பிராந்திய, வட்டாரப் பண்பாடுகளிலிருந்தும், அடையாளங்களிலிருந்தும் இஸ்லாமியர்கள் விலக்கப்படுகிறார்கள் அல்லது விலகுகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் இருந்த இந்து, முஸ்லிம் சமூக ஒற்றுமை சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலையத் தொடங்கியது. இந்தச் சீர்குலைவு அரசியலில் இந்துத்துவா இயக்கங்களின் பங்களிப்பும் மறுக்க முடியாதது. உலக வரலாற்றில் பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் இயக்கங்கள் தங்கள் நாடுகளில் வாழும் சிறுபான்மையினரை எதிர் நிலையில் நிறுத்தித் தங்களை முன்னகர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இந்தியாவிலும் அது போன்றே நிகழ்ந்தது. பாபர் மசூதி என்பது அதன் முக்கிய அரசியல் குறியீடு.

இந்தியாவின் பன்மயப்பட்ட சாதியச் சமூகத்தில் தங்களின் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த குறியீடுதான் ராமரும் பாபர் மசூதியும். இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள இயலாத இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் தன்னைப் பலிகொடுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் தலைவர்களும் எடுத்த சமரச முயற்சியில் இருதரப்பினருமே உடன்படவில்லை. இதன் நீட்சியில் 1992 நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் நிர்க்கதியாயின. போராட்டங்களிலும் கலவரங்களிலும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இறைவனுக்காக மக்கள் கொல்லப்படுவது இறைவனுக்கே ஏற்புடையதல்ல.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது. இதன் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அதிலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. ஆனால், கேரளத்தில் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளத்தில் எல்லோரும் மலையாளிகள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். அங்கு மைய நீரோட்டம் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பல கலை ஊடகங்களை நிராகரிப்பது, பொதுவாசிப்பு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்க மறுப்பது, குறிப்பாக காலங்காலமாகத் திரைப்படத்தை நிராகரித்து அவற்றைவிட்டு ஒதுங்கியிருந்தது போன்றவை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்துகொள்ளக் காரணமாயின. ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களை இந்தச் சூழலில் வைத்துத்தான் நாம் மதிப்பிட முடியும்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், இந்துத்துவ அரசியல் மிக வலுவானதாக இல்லை. ஆனால், சமீப காலமாக தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடுகள் அவற்றை வலுப்பெற வைக்க வாய்ப்பிருக்கிறது. குஜராத் கலவரத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகமாகப் போராடியவர்கள், இயக்கம் நடத்தியவர்கள் இந்தியாவில் உள்ள ஜனநாயக முற்போக்குச் சக்திகள். ஆனால், நெருக்கடியான காலகட்டங்களில் இஸ்லாமியச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தங்களின் சமூக அரசியல்குறித்த புரிதலே அதற்குக் காரணம். இந்நிலையில், சமீபகாலங்களில் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் ஈழப் பிரச்சினை, கூடங்குளம் விவகாரம் போன்றவற்றில் இணைந்து போராட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது இன்னும் தொடர வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட பல குண்டுவெடிப்புகள் 1990-களுக்குப் பிறகே ஏற்பட்டன. பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது. வஹ்ஹாபிய இயக்கங்களின் எழுச்சியும் அதன் கருத்தாக்கமும் மேற்கண்ட இளைஞர்களிடத்தில் புனிதப் போர் குறித்த அரசியல் பார்வையை மேலும் கூர்மையாக்கின. இதில் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களே அதிகம். எல்லா இயக்கங்களுமே பதின்பருவ இளைஞர்களைக் குறிவைக்கக் காரணம், அந்த மூளைகள்தான் உணர்ச்சிபூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை மிக எளிதில் உள்வாங்கும்.

இந்நிலையில், பல அப்பாவி இளைஞர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றனர். அதில் சிலர் நிரபராதிகள் என்று பின்னர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆக, மதம் குறித்த இயந்திரத்தனமான மட்டுப்படுத்தப்பட்ட புரிதலும் கருத்தியல்களும் அப்பாவி இளைஞர்கள் பலரை வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கின்றன. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ‘‘தமிழ்நாட்டில் தீவிர இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர்தான் எங்களைத் தூண்டினார்” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தனர். இந்தியாவின்/தமிழ்நாட்டின் சமூக நீரோட்டத்தைக் குலைக்கும், சமூகங்களிடையே பதற்றங்களை உருவாக்கும் இம்மாதிரியான செயல்பாடுகளுக்குக் கண்டிப்பாக மதம் காரணமாக இருக்க முடியாது. ஹிட்லர் தன் செயல்பாடுகளுக்கு பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டினார். அப்படியிருக்க, அவரின் செயல்பாடுகளுக்கு கிறிஸ்துவம் எப்படிப் பொறுப்பாக முடியாதோ அதுமாதிரிதான் அரசியல் இஸ்லாம் பேசும் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், சிலரின் பயங்கரவாதச் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஊடகங்கள் அவர்களை இஸ்லாத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தையே காயப்படுத்துவதாகும். தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் ஊடகங்கள் அதனைப் பயங்கரவாதக் குறியீடாகக் காட்டுவது மிக அபத்தமான ஒன்று.

தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peerl@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக