வியாழன், 3 அக்டோபர், 2013

சமூக நல்லிணக்க நாயகர் என் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது (ரஹ் )

- எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ், கடயநல்லூர்

அரசியலைவைத்து ஆண்டியும் அரசனாக வாழ்வு பெற்ற காலத்தில் , பிழைப்பிற்காக அரசியல் இயக்கம் நடத்திய தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் , தன் அரசியல் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) வழிநின்று சமுதாயத்திற்கான களத்தில் தன் சொத்து சுகங்களை எல்லாம் இழந்து ,இறைவனின் நற்கூலியை மட்டுமே தன்னகத்தே கொண்டு வாழ்ந்து மரணித்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது(ரஹ் )

பகைவரின் மனம் கூட நோகவிடாமல் நாகரீகமாக பேசும் பண்பாளர். செந்தமிழும் அன்னவர் நா நின்று நர்த்தனமாடும், அழகு கண்டவர் கேட்டவர் அனைவரும் கவர்திடும் வண்ணம் சொல்லாற்றல் கொண்டவர்,தமிழகமே வியந்து பாராட்டும் பேச்சுக்கு சொந்தக்காரரான அண்ணாவே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசும் திறன் கொண்ட பெருமைக்குரியவராக திகழ்ந்தவர் .

தென்னிந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் நிர்வாகியாக இருந்து சென்னை புதுக்கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் .

சிராஜுல் மில்லத் (ரஹ்) அவர்கள் ஒரே ஒரு முறைதான் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டார் .1984 -ஆம் ஆண்டு திருவெல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப் பட்டிருந்தார் .அந்த காலகட்டத்தில் , ஒரு நாள் திருவல்லிக்கேணி பகுதியை சார்ந்த இந்து சமுதாய மக்கள் ,தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களை அலுவலகத்திற்கு வந்து சந்தித்து ,எங்கள் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்ள வந்துள்ளோம் ,நீங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெருந்தலைவர் ,எனவே எங்களுக்கு தயக்கமாக உள்ளது என்று கூறினர் .தலைவர் அவர்கள் ,நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தாராளமாக கேளுங்கள் என்று கூறினார் .

அப்போது அம்மக்கள் , திருவல்லிகேணியில் உள்ள தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பார்த்த சாரதி கோயிலின் குளம் மிகவும் அசுத்தமாக ,சுகாதார சீர்கேடாக உள்ளது ,அதனை துப்பரவு பண்ண தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .

எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக வீற்றிருந்த அன்றைய தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ,தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எழுந்து ,என் தொகுதிக்கு உட்பட்ட ,அரசுக்கு மிக அதிக வருமானத்தை தரக்கூடிய புகழ் பெற்ற பார்த்தசாரதி அம்மன் கோவில் தெப்பக்குளம் மிகவும் சீர்கெட்ட நிலையில் உள்ளது ,உடனடியாக அதனை துப்பரவு செய்து ,மக்கள் பயன் பாட்டிற்கு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .

அன்றைய சட்டமன்றத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஆனந்தம் ,முதல்வர் எம்ஜிஆர் இதற்கு முன் எத்தனையோ நபர்கள் அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் ,எவருமே வைக்காத கோரிக்கையை ,அதுவும் மக்கள் கோரிக்கையை நண்பர் அப்துஸ் சமது அவர்கள் வைத்துள்ளார் ,தமிழக அரசு உடனே அதனை ஏற்று பார்சாரதி கோயிலின் குளம் தூர்வாரபப்டும் என்று ஆணையிட்டார் .குளமும் தூர்வாரப் பட்டது ,அப்பகுதி மக்கள் ஒன்றாக கூடி வந்து யாரும் செய்து தந்திடாத அரும் பணியை செய்து தந்தீர்கள் என்று தலைவர் சிராஜுல் மில்லத்தை நேரில் சந்தித்து பாராட்டி நன்றி கூறி சென்றனர் .

இப்படிப்பட்ட சமூக நல்லிணக்க செயல் பாட்டிற்கு சொந்தக்காராக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து, தான் சார்ந்த சமுதாயத்திற்கு நற்பெயர் எடுத்துக் கொடுத்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா .அ.அப்துல் சமது (ரஹ் ) அவர்கள் .

அந்த மாபெரும் தலைவரின் நெருகிப் பழகிய தொண்டனாக இருந்த நற்பாக்கியத்தை எனக்கு தந்த அல்லாவிற்கே எல்லாப்புகழும் !

அன்னாரின் மண்ணறை,மறுமை வாழ்வையும் வல்லோன் அல்லாஹ் மேன்மையாக்கி சுவனத்தை வழங்குவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக