திங்கள், 21 அக்டோபர், 2013

பன்னூலாசிரியர் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்கள் மறைந்தார்...

“இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,”மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள்” முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது
தம்பி அவர்கள் தம்முடைய எழுபத்து ஒன்பதாம் வயதில் கடந்த 17-10-2013-ஆம் நாள் மஃரிப் வேளையில் மதுரை மருத்துவமனை ஒன்றில் காலமானார்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)அவருடைய ஜனாஸா மறுநாள் ஜும்ஆவுக்குப் பிறகு அவர் பிறந்த ஊரான திண்டுக்கல்லில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் முன்னோர் கேரள மாநிலம் புதூரைச் சேர்ந்தவர்கள்.மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்;தமிழ் மண்ணோடும் மக்களோடும் ஒன்றாய்க் கலந்துவிட்டவர்கள் ஆவர்.திண்டுக்கல்லில் இருந்து குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது இவரும் இளமையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்.தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை சென்னையிலேயே பயின்ற இவருக்கு புதுக்கல்லூரியில் பயின்றபோது சிராஜுல் மில்லத் சீனியர் மாணவராக அறிமுகம் ஆனார்.அவருடைய தொடர்பு,பின்னாளில் முஹம்மது தம்பி அவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட ஒரு தொடக்கமாக அமைந்தது.

கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர்,ஃபார்மசி படித்துவிட்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் ’தம்பி மெடிக்கல்ஸ்’ என்ற பெயரில் பிரபலமான ஆங்கில மருந்துக் கடை ஒன்றை இவர் நடத்திவந்தார்.என்றாலும் இவர் மார்க்கத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்ததாலும் இவருக்கிருந்த எழுத்து,படிப்பு ஆகியவற்றின் மீதான ஈடுபாட்டாலும் அன்று புகழ்பெற்று விளங்கிவந்த எழுத்துலக வல்லவர்களான சையிது முஹம்மது ஹஸன்,எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் முதலியோருடனான தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.குறிப்பாக எம்.ஆர்.எம்.அவர்களுடனான தொடர்பு இவரைப் புத்தகத் துறையில் பெரிதும் ஈடுபாடுகொள்ளச் செய்தது.தாமே புத்தகம் எழுத வேண்டும் என்ற இவருடைய விருப்பத்தை எம்.ஆர்.எம் அவர்களிடம் இவர் தெரிவித்தபோது,ஏதேனும் ஓர் ஆக்கத்தை எழுதிவந்து காட்டுமாறு பணித்துள்ளார்.அவ்வாறே எழுதிக் காட்டிய ஆக்கத்தைக் கண்ணுற்ற எம்.ஆர்.எம். அவர்கள்,”எந்தத் திருத்தமும் தேவை இல்லை;எழுதியவாறே வெளியிடலாம்” என்று நற்சான்றும் இஜாசத் என்னும் அனுமதியும் அளித்துள்ளார்.அன்று தொடங்கிய முஹம்மது தம்பி அவர்களின் எழுத்துப் பயணம்,அவருடைய மூன்றாவது ஹஜ் பயணத்திற்குப் பிறகு(1978) சிறப்பாக வெளிப்படலானது.

தமிழ், மலையாளம்,உர்தூ,ஃபார்சி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவருக்கு இருந்த அறிவு,இவருடைய மார்க்க நூல்களைச் செழுமைப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.இவர் எழுதிய வரலாற்று நூல்கள்-குறிப்பாகக் கலீஃபாக்களைப் பற்றியவை-அரிய செய்திகளுடன் நல்ல முறையில் தொகுக்கப்பட்டவை ஆகும்.

இறை நம்பிக்கையாளர்களின் அமல்கள் சிறப்பாக,முழுமையாக அமைய வேண்டும் என்ற நோக்கில் சிற்சில சிறிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.அவை நல்ல கையேடுகளாக விளங்கிவருகின்றன.அவற்றுள் ஒன்றை ஹஜ் உம்ரா செய்பவர்களின் கைகளில் நான் கண்டுள்ளேன்.

பக்தியும் ஆன்மீக ஈடுபாடும் மிக்க இவர் எழுதிய “இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,படித்த எல்லாருடைய உள்ளங்களையும் கரைத்த நூலாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர்,ஆலிம்கள் பாராட்டிய எழுத்தாளர் ஆவார்.

ஹிரா மலைக் குகையில் இருந்து கஃபாவைக் கண்டு மகிழ்ந்ததை என்னிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டவர் இருவர். ஒருவர்,”நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்னும் காப்பிய நூலின் ஆசிரியர் ஆலிம் கவிஞர் ஜி.எம்.எஸ்.சிராஜ் பாக்கவி அவர்கள்;மற்றொருவர் எம்.எஸ்.எம்.முஹம்மது தம்பி அவர்கள்.இவர் மூன்று முறை ஹஜ்ஜும் மூன்று முறை உம்ராவும் செய்துள்ளார்.மூன்றாவது உம்ராவைக் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கொண்டார்.

இவர்,ஆறு ஆண் மக்களுக்கும் ஐந்து பெண் மக்களுக்கும் தந்தையாகி வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஆவார்.அல்லாஹ்வுடைய நாட்டப்படி உலக வாழ்வை நீத்துவிட்ட இவர்,அறிவுலகில் தாம் எழுதிய அறிவார்ந்த நூல்களால் நம்மோடு வாழ்ந்து வருவார்.எனினும் அவருடைய மறைவு ஒரு மூத்த சகோதரரின் மறைவாகவே என் மனதுக்கு வருத்தம் அளித்த்து.அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தார்,உற்றார்,உறவினர் முதலிய அனைவருக்கும் கருணையுள்ள அல்லாஹ், அழகிய பொறுமையைத் தந்தருளவும் மர்ஹூமான முஹம்மது தம்பி அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்கி அருளவும் நாம் துஆ செய்துகொள்வோமாக.

மரியாதைக்குரிய சகோதரர் மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்களின் மறைவு குறித்து விசாரிக்க விரும்புவோர் அவருடைய ஆண்மக்களில் ஒருவரும் கோவை அல்-ஃபைஸ் ஹஜ் சர்வீஸின் உரிமையாளரும் ஆன கோவை சம்ஷுல் ஹுதா(9952482543) அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்:

-----ஏம்பல் தஜம்முல் முகம்மது


மாமேதை மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் ஆக்கங்கள் பலரின் ஈமானை புதுப்பித்தது, நபி நேசத்தை வளர்த்தது , அன்னாரது இழப்பு சமுதாயத்திற்கே ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
இச்செய்தியை பகிர்ந்து சமுதாயத்திற்கு அறிவித்த அறிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,
எனது ஆத்ம நண்பர் வழுத்தூர் சாப்ஜி (அப்துல் ரஹீம்) அவர்கள் அனுதினமும் இறுதி நபிகளின் இறுதி நாட்கள், மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள் போன்ற புத்தகத்தை வைத்து அழுது அழுது கரைந்து உருகி படித்துக்கொண்டிருப்பார், அவருக்கும் இந்த செய்தியை படித்துக் காண்பித்தேன். அவரும் மறைந்த பன்னூலாசிரியருக்கு துஆ செய்வதாகவும், ஏம்பலார் அவர்களுக்கு நன்றிதனையும் தெரிவித்து கொண்டார். - ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக