செவ்வாய், 22 ஜூலை, 2014

ரத்தம் இல்லாத யுத்தம் ....

-அபூஹாஷிமா

" பச்சைப் பறவைகளாய் 
சுவனச் சோலையில் 
சுற்றிப் பறப்பவர்கள் 
இஸ்லாத்திற்கான
வீரப்போரில் இறப்பவர்கள் !"
உம்மி நபி சொன்ன இந்த
உயர் வாழ்த்துக்காக
வானம் செனறு கொண்டிருக்கிறார்கள்
வாஞ்சையுள்ள
பாலஸ்தீன் முஸ்லிம்கள் !
குர் ஆன் சுமக்கும் வயதில்
குண்டுகளை சுமந்து சாய்ந்த
சின்னமலர்ச் செண்டுகள் !
உடலெல்லாம் குருதி
உயிரெல்லாம்
நம்பிக்கையின் சுருதி
இறுதி மூச்சிலும்
கலிமா கூறி
ஈமானின் சுருமா
பூசிக் கொண்ட
மூமின் பெண்கள் !
" முடம் உடலுக்கென்றாலும்
எதிரிக்கில்லை இங்கே இடம் "
யூதர்களின் குண்டு மழையில்
தலை நனைத்து
மரணத்தால் உயிர் துடைத்துக் கொண்ட
முதியவர்கள் என
கொத்து கொத்தாய்
உருவப்பட்ட உயிர்கள்
மொத்த மொத்தமாய்
வீசி எறியப்படுகின்றன
சுவனச் சோலைக்குள் !
எறிபவர்கள் ...
நரகத்தின் நெருப்பு வயிற்றுக்கு
நிரந்தர உணவாகப்போகும்
யூத விறகுகள் !
ஆயிரத்தி நானூறு
ஆண்டுகளுக்கு முந்திய
இஸ்லாத்தின் தியாக வரலாறு
மீண்டும்
மறுபதிப்பாகிக் கொண்டிருக்கிறது
காஸாவில் !
காஸாவிலும்
கரையிலும்
உடல் கிழிக்கப்பட்ட
யாசிரின் தோழர்களே !
ஏவுகணைகளால்
சாவுகணைகளை பிரசவித்த
சுமையாவின் தொப்புள் கொடிகளே !
போரையே
போர்வையாகப் போர்த்திக் கொண்டிருக்கும்
உங்களுக்கு
எதிரிகள் வீசும்
ஏவுகணைகளெல்லாம்
சிக்கன் குனியா கொசுவைப்போல !
போக்களச் சாவு
புதிதாய்ப் பிறக்கும் சிசுவைப்போல !
பத்ருப்போரும்
உஹதுப்போரும்
பறித்துபோகாத உயிர்களா ?
மூத்தப் போரில்
மூச்சை இழந்து
சுவனக் காற்றை
சுவாசிக்கச் சென்ற
சஹாபாக்கள் சரிதையை
நான் சொல்லவா ?
ஹம்சாவின் ஈரல்
அறுக்கப்படவில்லையா ?
ஜாபரின் உடல் சிதைக்கப்படவில்லையா ?
அந்த உத்தமர்கள் ஊதிவிட்ட
உயிர் காற்றில்தானே
இஸ்லாத்தின் வெற்றிக்கொடி
உயரே உயரே பறந்தது !
மடியும் வேளையிலும்
குடிக்க நீரின்றி துடித்தவர்
குருதியைக் குடித்துத்தானே
தீன் பயிர்
திசையெங்கும் முளைத்தது !
அன்று ...
சஹாபாக்களின் வறுமை
வாழ்விலிருந்தது !
உயிருக்கு விலைபோகாத
ஆண்மை
வாளிலிருந்தது !
அதனால் ...
அல்லாஹ்வின் வாள் என
பெயருமிருந்தது !
இன்று ...
" அல்லாஹ்வின் அப்து " என்ற
பெயர் இருக்கிறது !
பெட்ரோலில் ஊறும் பணம்
கோடி கோடியாய் குவிகிறது !
உள்ளத்தில் மட்டும்
இனத்துக்கே இல்லாத
பேடித்தனம் பல்லிளிக்கிறது !
சகோதரனின்
சாவு சத்தம் கேட்டும்
சத்தமின்றி
அமெரிக்கக் காலடியில்
சரிந்து கிடக்கும்
சாம்ராஜ்ஜிய சாக்கடைகள் !
சாகாவரம் கேட்டு
வெள்ளையரின் காலைக்
கழுவத் துடிக்கும்
ராஜ அவமானங்கள் !
சோரத்திற்கு ஓரம் போனவர்களை
காறித்துப்பிவிட்டு
தீரத்தோடு போராடும்
பாலஸ்தீனப் போராளிகளே ....
நாய்கள் வீசிய
நாசகார குண்டுகளின் கூச்சலை விட
உச்சமாகக் கேட்கிறதே
" அல்லாஹு அக்பர் " என்று
முழக்கமிடும்
உங்கள் நெஞ்சுக் கூட்டின் சப்தம் !
ஆனாலும் ...
என் அருமைத் தோழர்களே ..
உரிமைப் போராளிகளே ...
ஆயுதமே இல்லாமல்
அணுப்பேய்களோடு மோதலாமா ?
தலை போனாலும் தப்பில்லை
தலைப்பாகை தப்பித்தால் போதுமென்று
நினைக்கலாமா ?
சாதிப்பதைவிட
சாவதிலேயே
சாதனை நிகழ்த்துகின்ற
உங்கள் சடலங்களை
எண்ணி எண்ணி
செத்துப் போகிறதே
எங்களது ரத்தம் !
சுவனத்தின் கதவுகள்
மண்ணறையிலும் உங்களுக்கு
திறந்தே இருக்கின்றன !
ஈராக்கும்
பாலஸ்தீனும்
நரகமாகவே இருக்கின்றன !
அழிவதைப் பார்த்தும்
அழவேத் தெரியாத
உங்களைப் பார்த்து
ஆவி துடிக்குது எங்களுக்கு !
பக்கத்திலிருந்த
பாபர் மசூதியையே
பாதுகாக்கத் தெரியாத
பேதைகள் எங்களால்
கடற்கரை ஓரத்தில் நின்று
கோஷம் போடுவதைத் தவிர
வேறென்ன செய்து விட முடியும் ?
களத்துக்கே வர வக்கில்லாத அரபிகளையும்
முக நூலில் வீரம் காட்டுகின்ற எங்களையும்
நம்பி
செத்துப் போகாதீர்கள் !
யுத்தங்களை வெற்றி கொள்ளும்
சக்தியும் யுக்தியும்
சித்தியாகும் வரை
சாவுகளை முக்திபெறச் செய்யுங்கள்
பக்தியில் மனம் நனையுங்கள் !
சண்டைதான் வேண்டுமென்றால்
இங்கே வந்து விடுங்கள் !
அது கூடுமா கூடாதா ?
ஆதாரம் இருக்கா இல்லையா ?
இதுபோல் இன்னும்
எத்தனையோ உண்டு
நமக்குள் சண்டைபோட !
கத்தியின்றி ரத்தமின்றி
இனத்தின் அடையாளமே
தெரியாமல்
அழிந்து போக
இது போதாதா ?
அதைத்தான்
நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் !
கியாம நாள் வரை
கவலையே இல்லை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக