வெள்ளி, 27 ஜனவரி, 2012

நீயாக இரு: அப்துல் கலாம் எழுச்சி உரை

 முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு,

டாக்டர் ஹாஜி எஸ். அப்துல் காதர், ஹாஜி நெய்னா முகம்மது, ஜனாப் சீனி முகம்மது, ஜனாப் இக்பால் மற்றும் முதுகுளதூர் வாழ் பெருமக்களே, மாணவர்களே, இளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் வந்து, இங்கு அனைத்து மாணவர்களையும் சந்திக்கும் போது நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பள்ளி நூற்றுக்கணக்கான அறிஞர்களை உருவாக்கும் ஊற்றாக விளங்குகிறது. உங்களை எல்லாம் பார்க்கும்போது பல விஞ்ஞானிகள் வருவார்கள், பல என்ஜினியர்கள், பல் துறை வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வருவார்க்ள், ந்ல்ல அரசியல் தலைவர்கள் வருவார்கள், அதைவிட முக்கியம் நல்ல சான்றோர்களையும் உருவாகுவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பகுதியில் உள்ள மாணவர்களை சந்தித்து உரையாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்க்ள். உங்களிடம் நீ

நீயாக இரு என்ற தலைப்பில் உரையாட வந்திருக்கிறேன்.

எண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது தான் மில்கி வே என்ற நம் அண்டம். அந்த மில்கி வேயில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி சூரியனை சுற்றுகிறது.

சூரியன் நம்து கேலக்ஸியான மில்கி வேயை சுற்றுகிறது. மில்கி வேயே பிரபஞ்சத்தை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நமது மில்கி வேயைப்போல் ஆயிரக்கண க்கான மில்கி வேக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சந்திராயன் -1 திட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாசா, ஜேபிஎல், இஸ்ரோ விஞ்ஞானிகளோடு நானும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும் கலந்து கொண்டோம். இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து உருவாக்கிய எம்3(மூன் மினராலஜி

மேப்பர்) என்ற சென்சார் உபகரணம் எப்படி HO/H2O தண்ணீர் படிகங்களை கண்டுபிடித்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விவாதித்தோம்.

அப்போது நாசா ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைப் பற்றி கூறினார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது, இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியால் எம்3 தண்ணீரை

கண்டறிந்தது என்ற ஆராய்சி முடிவுகளை அறிந்த போது இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன்.

எனவே, மாணவர்களே இந்தியாவின் அறிவியல் மாட்சிமையை உலகிற்கு பரைசாற்றும் விதமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.

அது எப்படி சாத்தியமாகிறது. நீ நீயாக இரு.

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்

போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.

ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்

செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்

சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.

அஹிம்சா தர்மம் என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும்

மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த

வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.

60 கோடி இளைஞர் சமுதாயம்

மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர்.

நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்தக்கால முறைக்கு ஏற்றாற் போல் நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்கவேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மாறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு

இலட்சியம்.

இலட்சியம்.

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,

எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,

எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா

இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,

அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.

இந்த கவிதையின் கருத்து என்ன?

நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு

இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்

உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.

நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,

நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,

நான் பிறந்தேன் கனவுடன்,

வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,

நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,

நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,

நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,

நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.

தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்

பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன்,

வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,

கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்

வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம்

இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்

இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என்

நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.

1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது

வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது

எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்

உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய

உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு

காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.

எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை

பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.

அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்

வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால்

முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை

உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.

எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய

சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.

பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா

60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

மாணவர்களே! உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,

இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்

நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு

சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது

கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது

சிந்தனை அறிவை வளர்க்கிறது

அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........

மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன

வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.

மனத்தூய்மை

எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்.

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்

குடும்பத்தில் சாந்தி நிலவும்.

குடும்பத்தில் சாந்தி இருந்தால்

நாட்டில் சீர்முறை உயரும்.

நாட்டில் சீர்முறை இருந்தால்

உலகத்தில் அமைதி நிலவும்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி

புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

இந்த உள்ள உறுதிகள் எல்லாம் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரம் ஆகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான் என் கடின உழைப்பாலும், உள்ள உறுதியினாலும், தோல்வியை தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடக்குவேன்.

நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள்

இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,

நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

என்னால் எதைக் கொடுக்க முடியும்

இளைய சமுதாயத்திற்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஒரு இளைஞர்கள் இயக்கம். "என்னால் எதைக் கொடுக்க முடியும்" அல்லது "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்ற எண்ணத்தை இளஞர்கள் மனதில் உருவாக்குவது தான் அந்த இயக்கத்தின் நோக்கம். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து அதை செயல்படுத்துவது தான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை

ஆரம்பிக்க முடியும்.

எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையானதாக மாற்றுவோமேயானால் நாடு மாறும்.

"நான் என்றென்றைக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பேன்" என்ற மனநிலை நம் இளைஞர்களுக்கு வருமென்றால், அந்த மனநிலை, "எனக்கு வேண்டும், எனக்குத்தான்

வேண்டும்" என்ற எண்ணத்தை சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்கு தயாரா? வாருங்கள் நண்பர்களே!

என்ற இணையதளத்தில் உங்களை பதிவு செய்து இந்த இயக்கத்தை வலிமையானதாக ஆக்குங்கள். நீங்கள் என்னை www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

மாணவர்க்களுக்கான பத்து உறுதிமொழிகள்

1. நான், எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன். நன்றாக உழைத்துப் படித்து என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய

முற்படுவேன்.

2. நான், எனது விடுமுறை நாட்களில், எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப்படிக்க கற்றுத்தருவேன்.

3. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

4. நான், எனது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வேன், எனது முதுகுளத்தூரை தூய்மையாக

வைத்துக்கொள்வேன். எனது இந்த செயலால் என் தமிழ்நாடு தூய்மையாகும், இந்தியா தூய்மையாகும், மக்களின் மனமும் சுத்தமாகும், வாழ்வு சிறக்கும்.

5. மது, சூதாடுதல் மற்றும் போதைப்பழக்கங்களுக்கு ஆளாகித் துயருறும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த நான் முயல்வேன்.

6. நான், ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

7. நான், வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு ம்ற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.

8. நான், என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண்குலத்திற்கு உரிய் மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

9. நான், நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக்ச் சுடர்விடச் செய்வேன்.

10. நமது தேசியக் கொடியை என் நெஞ்சத்தில் ஏந்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்.

புதன், 25 ஜனவரி, 2012

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..


பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.

ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி
__________________
கால அளவு..

2 கண்ணிமை = 1 நொடி

2 கைநொடி = 1 மாத்திரை

2 மாத்திரை = 1 குரு

2 குரு = 1 உயிர்

2 உயிர் = 1 சணிகம்

12 சணிகம் = 1 விநாடி

60 விநாடி = 1 விநாடி-நாழிகை

2 1/2 நாழிகை = 1 ஓரை

3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் = 1 சாமம்

4 சாமம் = 1 பொழுது

2 பொழுது = 1 நாள்

15 நாள் = 1 பக்கம்

2 பக்கம்-30 நாள் = 1 மாதம்

6 மாதம் = 1 அயனம்

2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு

60 ஆண்டு = 1 வட்டம்

நன்றி - முகமது அலி முகமது முகைதீன்