கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மே, 2016

பலஸ்தீன கவிதை

மஹ்மூத் தர்வேஷ் கவிதை
பலியாள் இலக்கம் 18
பதிவு - ஹெச்.ஜி.ரசூல்


அவனது நெஞ்சில் ஒரு  ரோஜாமலர் விளக்கையும்
ஒரு நிலாவையும் கண்டனர் அவர்கள்.

அவன் கொலையுண்டு கற்களின்மீது வீசப்பட்டான்.
அவனது பையில் அவர்கள் கண்டெடுத்தவை
சில நாணயங்கள்
ஒரு நெருப்புப் பெட்டி
ஒரு அடையாள அட்டை
அவனது புயத்தில்
பச்சை குத்திய தடங்களின் இருந்தன.
அவனது தாயோ அவனை இழந்தாள்
ஆண்டுதோறும் அஞ்சலி செய்தாள்
அவனது விழிகளில் முட் செடி முளைத்தது.
இருள் மிக அடர்ந்தது.
அவனது தம்பி இளைஞனாகி
வேலைதேடி நகர்ப்புறம் சென்றான்.
அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர்.
அடையாள் அட்டை அவனிடம் இல்லை.
தெருவில் அவனிடம் இருந்ததெல்லாம்
ஒரு குப்பை பெட்டியும் வேறு சிலவும்.
என் தாய்நாட்டின் குழந்தைகளே
இவ்வாறுதான் நிலா இறந்தது.

(தமிழில் எம். நுஹ்மான்)

பலஸ்தீன கவிஞர் மஹ்மூத் தர்வேஷ்
காலம்(1941 - 2008 )




> *கவிதை இழை
> ஹெச்.ஜி.ரசூல்*
> 
> அன்புச் சகோதரர்களே..
> 
> நமது குழுமத்தில் கவிதைஎழுதவும் வாசிக்கவும் பழக்கம் உள்ள நண்பர்கள் பல
> இருக்கலாம்.
> இந்த இழையில் தாங்கள் எழுதிய மரபு அல்லது நவீன கவிதைகளையோ அல்லது வாசித்ததில்
> பிடித்த கவிதைகளையோ அல்லது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளையோ
> அறிமுகப்படுத்தி உரையாடிக் கொள்வதற்கும் சாத்தியம் இருக்கிறது. எனவே ஆர்வம்
> உள்ள கவிஞர்கள் இதில் தொடர்ந்து எழுதினால் தமிழ்சூழலிலும் உலகச் சூழலிலும்
> முஸ்லிம் கவிஞர்கள் குறித்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்
> 
> *என் சட்டைப் பையிலிருந்த ஒரு குருவி
> நிஸார் ஹப்பானி*
> 
> எனது கவிதைகளைப் படித்துக் காட்ட
> அராபியதாயகத்தில் பயணம் செய்தேன்.
> கவிதை மக்களின் உணவு என்ற நம்பிக்கை எனக்கு
> சொற்கள் மீன்கள் மக்களோ தண்ணீர் என்ற நம்பிக்கை எனக்கு
> 
> ஒரே ஒரு நோட்டுப் புத்தகத்துடன் தான்
> என் அராபியதாயகத்தில் பயணம் செய்தேன்
> ஒரு காவல்நிலையத்திலிருந்து
> மற்றொரு காவல் நிலையத்திற்கு அலைக்க வைக்கப்பட்டேன்.
> படைவீரர்கள் என்னை அலைக்கலைத்தனர்.
> என்னிடம் இருந்ததெல்லாம்
> என் சட்டைப்பையிலிருந்த ஒரு குருவி மட்டும்தான்.
> அதிகாரி குருவியின் கடவுச் சீட்டைக் கேட்டான்.
> எனது நாட்டில் சொல்லுக்கு
> ஒரு கடவு சீட்டு வேண்டுமாம்,
> அனுமதிசீட்டுக்காக காத்திருந்தேன்.
> மணல் மூட்டைகளை பார்த்தபடி
> அவை பேசின
> ஒரேதாயகம் ஒரேமக்கள் பற்றி
> எனது தேசத்தின்
> நுழைவாயிலில் தூக்கி எறியப்பட்டேன்
> உடைந்த கண்ணாடி போல.
> (தமிழில் .கீதா,எஸ்.வி.ராஜதுரை)
> 
> நிஸார் ஹப்பானி
> சிரியக் கவிஞர்
> காலம்: 1923 - 1998


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

சனி, 6 டிசம்பர், 2014

பணம் என்ற காகிதத்தை பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

புதன், 20 ஆகஸ்ட், 2014

மனதைப் பிழிந்த கவிதை....!



பிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காசிம் அவர்கள் காலமாகிவிட்டதாக இலங்கைக் கவிஞர் அண்ணன் அஷ்ரப் ஷிகாபுத்தீன் அவர்கள் ஒரு இடுகை இட்டிருந்தார். 

அதில் 75 வயதான கவிஞர் சமீஹ்

"மரணமே உன் மீது எனக்குக் காதலோ பயமோ கிடையாது. உடல் கொண்டு ஒரு படுக்கையையும் ஆத்மாவைக் கொண்டு ஒரு போர்வையையும் நீ உருவாக்கியிருக்கிறாய் "

என்று ஒரு குறிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்ன அவர் எழுதி வைத்திருந்ததையும் குறிப்பிட்டு பின் அவர் எழுதிய ஒரு கவிதையின் தமிழாக்கத்தை பதித்திருந்தார் அதை படித்துவிட்டு மிகுந்த உணர்ச்சி மேலிட வியந்து போனேன். அந்த கவிதையை படித்தால் பலஸ்தீனத்தின் கொடுஞ்சோகம் பட்டென விளங்கும்.. செத்தவனுக்கும் உணர்வு பிறக்கும்... அமைதியாக இருக்கும் நரம்புகளும் ஆர்த்தெழும்....!!!!!!!!!!

அவர்களின் போராட்டத்தை அப்படியே படமெடுத்துக்காட்டும் அந்த கவிதை இதோ.....

என் பாண்துண்டை நான் இழக்க நேரினும்
என் சட்டையையும் கட்டிலையும் விலை கூற நேர்ந்தாலும்
கல்வெட்டியோ சுமைகாவியோ
தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும்
உன் பண்டசாலையைத்
துடைத்து மினுக்க நேரிட்டாலும்
குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும்
பட்டினி கிடந்து அழுந்த நேரினும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன் ...

என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு
என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு
என் முதுசொத்தைக் கொள்ளையடி
என் நூல்களை எரித்திடு
என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு
போ .. என் ஊரிலுள்ள கூரைகள் மீது
உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

என் கண்ணெதிரே
நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும்
உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும்
உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினை
சாபங்களால் நிறைத்தாலும்
என் ஓலமிடும் குரல்வளையை
அமுக்கி ஒடுக்கினாலும்
என் காசுகள் போற் பொய்க்காசுகள் தயாரித்தாலும்
என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப்
பிடுங்கி எடுத்தாலும்
இகழ்ச்சி ஆணி கொண்டு
என் விழிகளில் அறைந்தாலும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டு விட்டன
காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பி விட்டன
எங்கெங்கும் அவை தெரிகின்றன
அடிவானத்திலே கப்பற்பாய்களைக் காண்கின்றேன்
முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும்
யூலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன
பொழுது புலர்கிறது ... மனிதன் முன்னேறுகிறான் ..
அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் -
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்!

(நன்றி - பலஸ்தீனக் கவிதைகள்)

சனி, 19 ஜூலை, 2014

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி 



பாடம் பயில நான் 
பள்ளிவாசல் புகுந்த 
பிராயந்தொட்டு தொழுகை புரிய 
பள்ளிவாசல் 
புகுவாரோடு பழகி நின்றவன்! 
அவர்களது அன்பை ஆரா 
அமுதமாய் தின்றவன் ! 

என் ஒவ்வொரு பருவத்திலும் 
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள் 
இஸ்லாமிய இனத்தவர் 
அவரெலாம் - தண்ணீர் கலவா 
தாய்ப்பால் மனத்தவர் ! 

இன்றைய என் ஏற்றம் 
அவர்களிட்ட பிச்சை 
இதைச் சொல்ல 
எனக்கில்லை லஜ்ஜை ! 

எல்லா சமயமும் 
எல்லாச்சமயமும் 
பேசுவது அன்பு 
பேணுவது அறம் இதை 
ஒர்ந்தார்க்கு இயல்பாகக் 
கைவரும் சமயப் பொறை 
எனும் இமயப் பொறை ! 
இந்தப் பொறை 
இருப்பின் இச்சமயம் 
அச்சமயம் 
என எச்சமயமாயினும் 
எவரும் 
அச்சமின்றி வாழலாம் என்பதை 
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை ! 

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய் 
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல் 
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி 
விழிப்புனலை வடித்தவன் ! 

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான 
அப்துல்லாவும் ஆமினாவும்
 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும் 
மக்கள் மனங்களில் மீந்தனர் ! 

அண்ணலார் அவர்கள் என்பு தோல் 
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் ! 
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி ! 
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் ! 
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல் 
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை ! 
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் 
மொத்தக் குழுமம் 
தகிக்கும் பாலையில் 
தவிக்கும் வேர்களுக்கான 
தண்ணீர்த் தடாகம் ! 
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க 
வந்த பூந்துவாலை ! 
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை 
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை ! 
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் ! 
சுருங்கச் சொன்னால் 
அண்ணல் நபிகளார் அவர்கள் 
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை ! 
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் ! 
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் ! 
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல் 
எட்ட முடியாதவர் ! 

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல் 
குகை புகுந்த குணாளரை 
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி ! 
அது - வாய் நூலால் குகைக்கு 
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி ! 
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை 
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது 
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது ! 
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம் 
சொல்லச் சொல்ல இன்னும் 
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....


.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007 
நன்றி: அபு ஹாசிமா

விலைமாதின் விண்ணப்பம்!


ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரகளும் உண்டு.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே!
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்...?
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானல்தான்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்க்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப் பட்டதே இல்லை..
ஏனெனில்
விதவை - விபச்சாரி
முதிர்கன்னி - மலடி
ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
முதுமை என்னை
முத்தமிடுவதற்க்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
இறுதியாக
இரு கோரிக்கை.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
கவிஞர்:தமிழ்தாசன்

ஞாயிறு, 16 மார்ச், 2014

கவியரசு கண்ணதாசன் காலமானபோது கலைஞர் எழுதிய கவிதை

என் உயிர்த்தோழன்!
(தனது நெருங்கிய நண்பன் கவியரசு கண்ணதாசன் காலமானபோது கலைஞர் எழுதிய கவிதை …)
என் இனிய நண்பா!
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே! உன்
இதயத் துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்?
தென்றலாய் வீசியவன் நீ – என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு திகழ்ந்ததே யன்றி
அணைந்த தீபமாக ஆனதே யில்லை நண்பா!
கண்ணதாசா, என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ! உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கிவிட்டதே!
கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ,
அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட!
இயக்க இசை பாடிக் களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனை தான் நீ கொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் – சுவைப்
பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை,
தித்திக்கும் கவித் தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்று விட்டாய்!
அட்டா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!
ஆயிரங் காலத்துப் பயிர் பயிர் நம் தோழமை யென
ஆயிரங் கோடி கனவுகள் கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்!
நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!
இந்த அதிசயத்தை விளைவிக்க – உன் பால்
இனிய தமிழ் அன்னை துணை நின்றாள்!
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத் தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?
எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெலாம் நிறைந்தாய்!
கனமான இயதத்துடன்…
உன் நண்பன்
மு. கருணாநிதி.

சனி, 14 செப்டம்பர், 2013

கதீஜா நாயகியும் கவ்லா நாயகியும்!

கதீஜா நாயகியின் சோதரி 
கவ்லா பின்த் குவைலிது!

அன்னை கதீஜாவின் 
மறைவுக்குப் பிறகும் 
அவ்வப்போது அவர் 
அண்ணல் பெருமான் இல்லத்துக்கு 
வருவதுண்டு 
வருகின்ற அவரை 
அகமும் முகமும் மலர்ந்து 
அண்ணலும் குடும்பமும் 
வரவேற்று உபசரிப்பதுண்டு!

சகோதரிகள் இருவருக்கும் 
ஒன்றுபோல் ரத்தம் 
அதுபோல் 
ஒன்றுபோல் சத்தம்!

அதனால் 
கவ்லா நாயகி பேசினால் 
கேட்பவர் எவர்க்கும் 
அது கதீஜா நாயகி 
பேசுவது போன்றே கேட்கும்!

அது கேட்கும் 
அண்ணல் நபிகளின் மனமும் 
அன்னை கதீஜாவுடன் வாழ்ந்த 
பழைய நினைவுகளில் மூழ்கும்! 

ஒருதரமா இருதரமா 
அன்னை கவ்லா பேசும்
ஒவ்வொரு தரமும்  
அவர் குரல் 
இழுத்து வரும் 
அண்ணலின் முன் 
அவர் 
கதீஜா பெருமாட்டியுடன் வாழ்ந்த 
பழைய நிகழ் நிரல்!

அன்னை மேல் கொண்ட 
அன்பின் உச்சமாய் 
அவ்வேளைகளில் எல்லாம் 
அண்ணல் நாவில் 
அன்னையார் பெயர் புரளும் 
அவர் 
அந்நேரம் 
இல்லாதததை எண்ணி 
கருணை விழிகளில் 
கண்ணீர் திரளும்!
அதைப் பார்த்திருக்கும் 
அன்னை ஆயிஷா விழிகளில் 
வேகமும் தாகமும் பெருகும்!

இருப்பினும் 
கதீஜா பெருமாட்டி 
அண்ணலின் உள்ளத்தில் எழுதிய 
அப்பழுக்கிலாத அகப்பாட்டை 
எவராலும் அழிக்க முடியவில்லை 
அண்ணல் நெஞ்சத்தில் இருந்து 
அவர் போட்டு வைத்த 
ஒப்பற்ற நினைவை 
ஒரு சிறிதேனும் 
ஒழிக்க முடியவில்லை!

எத்தனையோ விஷயங்களில் 
எம்பெருமான் நபிகளின்  
இளையமான் 
அன்னை ஆயிஷா நாயகி 
வெற்றி பெற்றும் 
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் 
அவரால் அந்த  உயரத்தை 
எட்ட முடியவில்லை!


அண்ணல் மிக மிக நேசித்த 
அவருக்கே  அப்படியெனில் 
பிறருக்கு எப்படி 
அவர் உயரத்தை எட்ட முடியும்?

அதனை 
இவ்விதம் என்று 
எடுத்துக்காட்டி 
என்பாட்டில் மட்டும் 
எப்படிச் சுட்ட முடியும்?

ஆயிரம்  காரணம் கொண்டு 
அவன் அன்னையாரை 
அண்ணலோடு ஒட்டி  வைத்தான் 
அகிலத்தின் அருட்கொடை
அண்ணல் நபிகள் நாயகக் காவியத்தின் 
பாயிரம்போல் அவர் புகழைக்
கவிதையில் கொட்ட வைத்தான்!

குவைலிதின் குலக்கொடி 
அன்னை கதீஜா போல் - இந்த 
குவலயத்தில் யாரும் சிறப்புறவில்லை 
வானமே வந்து - அந்த 
வான் மகளை வாழ்த்தும் 
அப்படி 
வானமே வாழ்த்தும் 
வகைக்கேது எல்லை! 
(முகப் புத்தகத்தில் தமியேன் இட்ட பதிவு))