வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உமையாக்கள் - 2

 #உமையாக்கள் .....




அபு ஹாஷிமா
* தொடரை படிப்பதற்கு முன்னால் ....
ஹாஷிம் குடும்பத்தார் யார்
உமையா குடும்பத்தார் யார்
என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.
பின்னால் வரும் சம்பவங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கு அது உதவியாக இருக்கும்.
***********
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ....
" நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீம் நபியுடைய பிள்ளைகளில் இஸ்மாயீலை தேர்வு செய்தான். இஸ்மாயிலுடைய பிள்ளைகளில் கினானா குடும்பத்தை தேர்வு செய்தான் .
கினானா குடும்பத்தில் குறைஷியர்களை தேர்வு செய்தான் . குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தை தேர்வு செய்தான்."
மேலும் அவர்கள் சொன்னார்கள் ...
" படைப்பினங்களில் மனிதன் , ஜின் என்ற இரு பிரிவில் மிகச்சிறந்த பிரிவில் என்னை படைத்தான். பின்னர் கோத்திரங்களை தேர்வு செய்து அதில் சிறந்த கோத்திரத்தில் என்னை சேர்த்தான் .
பிறகு குடும்பங்களை தேர்வு செய்து அதில் மிகச்சிறந்த குடும்பத்தில் என்னை ஆக்கினான் .
நான் அவர்களின் ஆன்மாவாலும் மிகச்சிறந்தவன்
குடும்பத்தாலும் மிகச்சிறந்தவன்."
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆரம்பம்
அதிலிருந்து வந்தது
குஸையின் குடும்பம்.
குஸையின் மகன் அப்துல் மனாஃப் .
அப்துல் மனாஃபின் நான்கு பிள்ளைகள்
ஹாஷிம்
அப்துல் ஷம்ஸ்
முத்தலிஃப்
நவ்ஃபல் ஆகியோர்.
ஹாஷிமின் பிள்ளை
அப்துல் முத்தலிஃப் .
அப்துல் முத்தலிபுக்கு பத்து ஆண் பிள்ளைகளும் ஆறு பெண் குழந்தைகளும் இருந்தார்கள்.
ஆண் குழந்தைகள் ....
ஹாரிஸ்
ஜுபைர்
அபு தாலிப்
அப்துல்லாஹ்
ஹம்சா
அபு லஹப்
கைதாக்
முகவ்விம்
ழிரார்
அப்பாஸ் ஆகியோர்.
#அப்துல்லாஹ் அவர்களின் பிள்ளைதான்
அவர்களின் அருமை மகள்
ஃபாத்திமா நாயகியார்.
நபிகளாரின் பெரிய தந்தை
ஃபாத்திமாவின் அருமைக் கணவரும் ஆவார்.
அவர்களின் பிள்ளைகள்
ஹஸன் ( ரலி )
ஹுஸைன் ( ரலி ) ஆகியோர்.
இவர்கள் அனைவரும் ஹாஷிம் குடும்பத்தினர் என அழைக்கப்பட்டார்கள்.
இவர்களே அஹ்லபைத்கள் ஆவார்கள்.
அஹ்ல பைத்கள் என்றால்
நபியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பொருள்.
" என் குடும்பத்தவர்கள் அலீ , ஃபாத்திமா , ஹஸன் , ஹுஸைன் ஆவார்கள்.
அவர்களை நேசிப்பவர்கள்
என்னை நேசிப்பவர்கள் ஆவார்கள் .
அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் " என்பது
நபிகளாரின் கடைசி நேர உபதேசமாக இருந்தது.
அப்துல் மனாஃபின் மற்றொரு மகனான
உமையாவுக்கு
இரு ஆண் பிள்ளைகள்.
அவர்களில் ஹர்பின் வழி வந்தவர்
அபு சுப்யானின் மகன் முஆவியா .
முஆவியாவின் மகன் யஜீது.
உமையாவின் இரண்டாவது மகனான அபுல் ஆஸுக்கு அஃப்ஃபான் என்றொரு மகன்.
அஃப்ஃபானின் மகன்தான்
#கலீபா_உதுமான் ( ரலி ) அவர்கள்.
இவர்கள் அனைவரும் உமையா குடும்பத்தினர் என அழைக்கப்பட்டனர்.
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாற்பதாவது வயதில் இறைவனின் தூதர் என்ற
நபிப் பட்டம் கிடைத்தது.
இறைமறை குர்ஆனையும் இறைவன்
நபிகளுக்கு வழங்கினான்.
ஏக இறைக் கொள்கையை அரபு மக்களுக்கு
எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள் நபிகள்.
" அல்லாஹ் ஒருவன் . நான் அவன் தூதர் "
நபிகளின் அறிவிப்பைக் கேட்டு
அபு ஜஹலும்
அபு லஹபும்
அபு சுப்யானும் கொதித்துப் போனார்கள்.
மக்கத்து மக்களையெல்லாம் ஒன்று திரட்டி
நபிகளுக்கெதிராக வன்முறைகளை
ஏவி விட்டார்கள்.
அல்லாஹ்வையும் நபிகளையும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமானவர்களை சித்திரவதை செய்தார்கள்.
சிலரை கொன்றார்கள்.
நபிகளின் குடும்பத்தை ஊர் நீக்கம் செய்து
ஷிபி அபிதாலிப் பள்ளத்தாக்கில் ஒதுக்கி வைத்தார்கள்.
உணவோ தண்ணீரோ தர மறுத்து சொல்லொணா துன்பங்களை மட்டும் தாராளமாகக் கொடுத்தார்கள்.
மூன்று ஆண்டுகள் பசியிலும் பஞ்சத்திலும்
தத்தளித்து கரை சேர்ந்த நபிகளாரின்
பெரிய தந்தை அபு தாலிப் அவர்களும்
பிரியமுள்ள மனைவி கதீஜா பிராட்டியார் அவர்களும் மரணத்தைத் தழுவினார்கள்.
குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் முஸ்லிம்கள் பலர்
அபிசீனியாவுக்கு தப்பிச் சென்றார்கள்.
இதில் ...
ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த
அபு லஹப் உமையாக்களோடும்
உமையா குடும்பத்தைச் சேர்ந்த
உதுமான் ஹாஷிம் குடும்பத்தோடும்
இணைந்து கொண்டதும் இறைவனின் நாட்டம்தான்.
மக்கத்து குறைஷிகள் நபிகளாரை கொலை செய்வதற்கும் துணிந்தார்கள்.
நபிகளின் இல்லத்தை
அர்த்த ராத்திரியில் அவர்கள் முற்றுகையிட்டபோது
இறைவனருளால்
நபிகளும் அருமைத் தோழர் அபுபக்கரும்
மக்காவிலிருந்து மதினாவுக்குப்
புறப்பட்டுப் போனார்கள்.
அவர்கள் மதினாவுக்கு பயணம் சென்ற
நாளை அடிப்படையாக வைத்தே
ஹிஜ்ரி வருடம் ஆரம்பமானது.
அபு சுப்யான் மக்கா குறைஷிகளுக்குத் தலைவராக இருந்து நபிகளாரையும் இஸ்லாத்தையும் அழிப்பதற்காக
பல சதிகளை செய்ய ஆரம்பித்தார்.
அப்துல் ஷம்ஸின் வழித்தோன்றலான
உமையாவின் குலக் கொழுந்து
அபு சுப்யான் ...
ஹாஷிம் குடும்பத்தின்
மறுவிலாதெழுந்த முழுமதி
முஹம்மது ரஸூலுல்லாஹ்வுக்கு செய்த
அநியாயங்கள் எண்ணிலடங்காதவை ....
இன்ஷா அல்லாஹ் ...
நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக