இஸ்லாமிய சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய சமுதாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜூன், 2017

கலைஞர் - ஜெயலலிதா முஸ்லிக்களுக்கு என்ன செய்தார்கள்

என் பாசத்துக்குரிய தாஜ் அண்ணே...
என் கேள்விக்கு இத்தனை விளக்கமாக பதில் தருவீர்கள் என்று எண்ணவில்லை...
திகைக்க வைத்து விட்டீர்கள்.
சின்னப்பிள்ளைக்கும் புரியும் வண்ணம் நிஜங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மறுக்க முடியாது.
தேசத்தின் அதிக சம்பளம் பெறும் முதலாளி கலாநிதி மாறன் என்ற நேற்றைய நிஜத்தையும் சேர்த்து.!
இருந்தாலும் சில நியாயங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன்.
ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடலைக் கேட்டதிலிருந்தே என் தலைமுறை திமுகவின் வசமாகிப்போனது. என் தந்தையின் காலமோ பெரியாரால் ஈர்க்கப்பட்டது. பகுத்தறிவும் இஸ்லாத்தின் மீதான அண்ணாவின் பரிவும் முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
அண்ணாவின் காலத்திற்கு பின் கலைஞர் முதல்வரானார்.
அதுவரை சரியாக போய்க் கொண்டிருந்த கப்பலை திசை திருப்பியதில் எம்ஜிஆருக்கும் பங்கு உண்டு. இந்திராவின் கட்டளைக்கு பயந்து திமுகவை உடைத்த பெருமை எம்ஜிஆர் என்ற சினிமா ஹீரோவுக்கு உண்டு.
அதுவரை திமுகவை மட்டுமே ஆதரித்த தமிழக முஸ்லிம்கள் அதிமுகவையும் ஆதரிக்க ஆரம்பித்தார்கள். முதன் முதலில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் லீக்கை உடைத்தவர் எம்ஜிஆர்தான்.
முழக்கம் ஷெய்குத்தம்பியை வைத்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற லெட்டர்பேடு கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் சமது லத்தீப் பிளவு ஏற்பட்டது.
அதுமட்டுமா ?
முஸ்லிம்களுக்கு முஸ்லிம்லீக் இருப்பதுபோல் இந்துக்களுக்கு " இந்து முன்னணி " ஏன் இருக்கக் கூடாது என்று மேலப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பேசி தாணுலிங்க நாடாரை வளர்த்து விட்டவர் எம்ஜிஆர்.
அதன் பிறகு குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதும் நாடறிந்த விஷயம்.
இன்று ராமகோபாலன் தலைமையிலான இந்து முன்னணி முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதற்கு ஆகாரம் போட்டு கொம்பு சீவி விட்டவர் கொடை வள்ளல் எம்ஜிஆர்தான்.
திமுக ஆட்சியிலும் எம்ஜிஆர் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்தது.
கருணாநிதி சாதிக் பாட்சாவை நன்றாகத்தான் வைத்திருந்தார். சாதிக் நேர்மையானவர்.
அரசு அனுகூலங்களுக்கு ஆசைப்படாதவர். அதனாலேயே அவரது வாரிசுகள் கஷ்டப்பட்டார்கள். பொதுவாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும்போதே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலி அரசியல்வாதிகளுக்கு அழகு. சாதிக் அதற்கு விதி விலக்கு.அதனால் அவர் வாரிசுகள் சிரமத்திற்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை.
நாகூர் ஹனிபா அண்ணனை எம்.எல்.சி ஆகவும் வக்ப் வாரியத் தலைவராகவும் நியமித்தவர் கலைஞர். அதுபோக ராணிப்பேட்டை தொகுதியிலும் சீட் கொடுத்தார். ஹனிபா அண்ணனின் இப்போதைய கஷ்டங்களுக்கு யார் காரணம் என்பது தெரியாது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அமைந்த அம்மையார் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
ராஜா முஹம்மது என்பவர் அமைச்சராக இருந்து ...அமைச்சராக இல்லாமல் இருந்து பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முஸ்லிம் பிரதிநிதித்துவமே இல்லாத மந்திரிசபையாக அம்மையார் மந்திரிசபை இருந்தது. முஸ்லிம்களுக்கென்று எந்தச் சலுகையும் அவரது ஆட்சியில் கிடைக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது கோவைச் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலாம் என்று சொன்னதற்காக அன்றைய உள்துறைச் செயலாளராக இருந்த முனீர்ஹோதா என்ற
ஐ.எ.எஸ். அதிகாரியின் மீது முஸ்லிம் தீவிரவாதிக்கு உதவி செய்தவர்,
அவர்களோடு தொடர்புடைய அதிகாரி என்று பழிசுமத்தி பணி நீக்கம் செய்தவர் ஜெயா.
அந்த பணி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்து பணி நியமன ஆணை பெற்று வந்த பிறகும் முனீர்ஹோதாவை பணியில் சேர்க்காதவரும் ஜெயாதான்.
கருணாநிதிக்கு எதிராக பி.ஜெய்னுலாப்தீன் என்பவரை தூண்டி விட்டு முதல்வர் வீடு முற்றுகை, கவர்னர் மாளிகை முற்றுகை, அண்ணாசாலையில் தொழுகை போன்ற கூத்துகளை நடத்தியவரும் இவர்தான்.
தேர்தல் நேரத்தில் ஊரூராகப்போய் அம்மாவை ஆதரித்து பிஜேயும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் ...
குஜராத் முதல்வராக மோடி வெற்றி பெற்றதும் அவரது பதவி ஏற்பு விழாவில் ஜெயா கலந்து கொண்டார். அவருக்கு தனது தோட்டத்தில் விருந்தும் கொடுத்தார். தன்னை ஆதரித்த முஸ்லிம்களின் முதுகிலும் குத்தினார். இதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான அம்மையாரின் நடவடிக்கைகளுக்கு சின்னச் சின்ன ஆதாரங்கள்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயாவால் பழிவாங்கப்பட்ட முனீர்ஹோதாவுக்கு முதல்வரின் தனிச் செயலாளர் என்ற அந்தஸ்தை கலைஞர் வழங்கினார். மற்றொரு ஐ.எ.எஸ். அதிகாரியான அலாவுதீனுக்கும் சிறந்த மரியாதை கொடுக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின் செயல் அதிகாரியே அவர்தான். ஜமாலுதீன் என்பவருக்கும் நல்ல பொறுப்பு வழங்கப்பட்டது கலைஞரின் ஆட்சிகாலத்தில்.
எல்லாவற்றிற்கும் மேலாக " இட ஒதுக்கீடு " கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. " தருவேன் " என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததும் அவர்களை ஏமாற்றியவர் அம்மையார். கலைஞர் வந்ததும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கினார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதையே எதிர்த்தவர் ஜெயா. தமிழ் நாட்டிலும் எதிர்த்தார். அதையும் மீறித்தான் கலைஞர் கொடுத்தார்.
இன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் மருத்துவமும் பொறியியலும் படிப்பதை சமுதாயம் கண்டு வருகிறது.
பல முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். இதெல்லாம் திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள்.
கழிந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்துத் தருவேன் என்ற உறுதியில்லாத அவரது உறுதி மொழியை ஏற்று அரசியல் சந்தர்ப்பவாதம் செய்த தமுமுக இன்று அதிமுக கூட்டணியை விட்டு விலகி இருக்கிறது.
இது அரசியலில் திமுகவும் அதிமுகவும் நடந்து கொண்ட முறைகள்.
நான் யாரையும் நியாயப்படுத்த விரும்பவில்லை.
பிஜேபியோடு கலைஞர் கூட்டணி வைத்தது குற்றம்..குற்றம்..குற்றமே...
அதுபோல் குஜராத் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் குற்றமே...
ஆனால்...
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பிஜேபி உடனான திமுகவின் உறவு தொடரவில்லை. பல சந்தர்ப்பங்களில் இந்துத்துவாவை பகிரங்கமாக எதிர்த்தும் முஸ்லிம்களை ஆதரித்தும் குரல் எழுப்பிய கலைஞரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
அதே நேரம் மோடியுடனான அதிமுகவின் நெருக்கம் முஸ்லிம்களுக்கு வெறுப்பூட்டக்கூடியது. ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் காரணங்களால் ...
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றாலும் இந்த தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு கட்சிகளுக்கே எனது ஆதரவு என்பதில் மற்ற முஸ்லிம்களைப்போலவே நானும் உறுதியாக இருக்கிறேன்.
மற்றபடி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் உட்பட பலவும் இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதுதான். எந்த கட்சியும் யோக்கியமில்லை. அதில் திமுகவை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
இறுதியாக...
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஊழல், வாரிசு அரசியல் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் பிஜேபியின் மதவாத அரசியலை முறியடிப்பதுதான் இப்போதைய ஒரே நோக்கம். அதற்காக பிஜேபியின் மாற்று சக்திகளை அவர்கள் ஆதரிப்பதில் தப்பே இல்லை. மதவாதம் ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு நெடிய விளக்கம் தர வேண்டும். அது இன்னொரு பதிவில் தருகிறேன்.. மிக மிக ஆபத்தான விளைவுகளைக் கொண்டது அது. அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தத் தேர்தலில் ஓட்டுப்போடாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலை உங்கள் சுதந்திர முடிவு. அதில் கருத்துச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை என்றாலும் ஓட்டே போடாமல் ஜனநாயக் கடமையை நிறைவேற்றாமல் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
என் பதிலும் கூடுதலாகி விட்டது... சிரமத்திற்கு மன்னிக்கவும்... கூடுதல் விளக்கங்கள் கேட்டால் தர முயற்சிக்கிறேன்...
இன்ஷா அல்லாஹ்!

அபுஹாஸிமா எழுதியது. 
அண்ணன் Taj Deen
அவர்களுக்கு 2013 ல் முகநூலில்
எழுதிய ஒரு விளக்கம்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

அபுல் கலாம் ஆசாத்தின் 59 வது நினைவு தினம்

பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி குளிர்காய்வதின் அடிவேரைக்கண்டு வெட்ட ஆரம்பித்தவர். அதற்காகவே அவர் ஹல் ஹிலால் என ஒரு உருது வார இதழை தொடங்கி வெள்ளைக்காரர்களை வெளுத்தவர்.
இரண்டே ஆண்டில் பத்திரிக்கைகு தடை.. இருந்தாலும் விடவில்லை. மறுபடியும் ஹல் பலாஹி என வேறு பெயரில் பத்திரிகையை கொண்டுவந்தார். அதே ஆவேசமான எழுத்துகள்..அதையும் இரண்டே ஆண்டுகளில் முடக்கியது பிரிட்டிஷ் ஆட்சி..
இப்படித்தான் உருவெடுத்து சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தவர். மிகவும் இளம்(35) வயதில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவ ரானவர், இவருக்கு அடுத்துதான் மகாத்மா காந்தியே 1924-ல் அப்பதவிக்கு வந்தார்.
ஒரு புறம், ஜின்னா போன்றவர்களால் வலுப்பெற்று வந்த நாட்டின் பிரிவினை வாதம்... இன்னொருபுறம் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல போராட்டங்களுடன் சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிவந்த தருணம்..
தேசம் பல பிரச்சினைகளை உக்கிரமாக சந்தித்து கொண்டிருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக 1940 முதல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய திறமைசாலி்.
பாகிஸ்தான் பிரிவினை தீர்மானத்தை ஆதரித்து வாக்க ளிக்காததால் ( நடுநிலை) ‘’காங்கிரசின் கைப்புள்ளை’’ என முகமது அலி ஜின்னாவால், கேலி பேசப்பட்டவர்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்..ஐஐடி போன்ற பல கல்வி நிறுவனங்கள் தோன்ற வகை செய்து இன்றைய உயர் கல்வி வளர்ச்சிக்கு அன்றே வித்திட்ட ஒரு சிற்பி..
காந்தி, படேல் நேரு. நேதாஜி வரிசையில் இருந்தவர்..
இஸ்லாமியர் ஒவ்வொருவ்ரும் உச்சபட்ச கனவு, மெக்கா..ஆனால் இவரோ மெக்காவிலேயே பிறந்த பாக்கியத்தை பெற்றவர்
பாரத் ரத்னா அபுல் கலாம் ஆசாத்தின் 59 வது நினைவு தினம் இன்று

சனி, 12 செப்டம்பர், 2015

விடுதலைப் போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்

“பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானது” என்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒருவிடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.
சிலருக்கு அரசியல் தெரிந்தளவுக்கு வீரமிருக்காது. வீரமிருக்கும் அளவுக்கு ஆட்சி திறன் இருக்காது. ஆட்சித் திறன் இருக்கும் அளவுக்கு நிலப்பரப்பு இருக்காது. ஆனால், ஒரு மன்னனுக்கு & ஒரு தலைவனுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும், அந்த ஆற்றல்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் பெற்ற பிறவி தலைவன் திப்பு சுல்தான். பன்முக ஆற்றல் கொண்ட அறிஞன்.
“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப் போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என தனது இளைய இந்தியா பத்திரிகையில் காந்தியடிகள் சிலாகித்தார்கள்.
விடுதலை உணர்வு திப்புவுக்கு தாய்ப்பாலோடு சேர்த்தே புகட்டப்பட்டது. அவரது தந்தை ஹைதர் அலியும் ஒரு விடுதலை வீரரே! அவர்தான் மகனுக்கு வழிகாட்டி!
இவரது முன்னோர் அஜ்மீர், குல்பர்கா பகுதிகளிலிருந்து குடியேறிவர்கள். இவர் மைசூர் அரசின் ராணுவ தளபதி. பின்னாளில் மைசூர் அரசுக்கு அரசராக பொறுப்பேற்றார்.
ஹைதர் அலி, ஃபக்ர் நிஸா ஆகியோருக்கு 20.11.1750 அன்று திப்பு சுல்தான் பிறந்தார். அவருக்கு கருவறையே பாசறையாக இருந்தது. பாசறையே கருவறையாக திகழ்ந்தது!
பெத்தனூர் மன்னருடன் பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலி போர் புரிய நேர்ந்தது. மகன் திப்புவையும் அழைத்துச் சென்று போர்க்களத்தை காட்டினார் தந்தை ஹைதர் அலி. போர்க்களம் அவர்களுக்கு பூங்காவாகவே தெரிந்தது. இப்படித்தான் திப்பு போராடி வளர்ந்தார். தந்தையும், மகனும் ஒரே களத்தில் எதிரிகளைச் சந்தித்தனர்.
ஆந்திரா, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என இன்றைய இந்திய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து ஹைதர் அலி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
1782ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாவது மைசூர் போரில் ஹைதர் அலி வீரமரண மடைந்தார். தன் தந்தை வழியேற்று விடுதலைப் போரை தொடர்ந்தார் திப்பு. இவர் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அதிர்ந்த னர். ஆம்! திப்பு ஒரு விடுதலை புலி! அவரது கொடியில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
திப்பு ஒரு சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர், தொழுகையாளர். தனது அரசை இறைவழியில் செயல்படும் அரசு என்றார். தனது வீரர்களை முஜாஹிதீன்கள் என்றார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது விடுதலைப் போரை ‘ஜிஹாத்’ என வர்ணித்தார்.
சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்றார். தவறு செய்த முஸ்லிம்கள் மீது ஷரீஅத் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கினார். மற்றவர்களுக்கு பொதுச் சட்டங்களின் கீழ் தீர்ப்பு வழங்கினார். தனது அதிகாரிகளுக்கு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடும்போது நபி (ஸல்) அவர்கள் எமது தலைவர் என குறிப்பிடுவார்.
சீர்திருத்தவாதி
ஆடம்பரங்களை எதிர்த்த திப்பு ஒருவர் தனது வருமானத்தில் 1 சதவீதத்தை மட்டுமே திருமணத்திற்கு செலவு செய்ய வேண்டும் என அறிவித்த சீர்திருத்தவாதி.
சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் நமது நல்ல மரபை பாதுகாக்க உதவ வேண்டும். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்க வேண்டும் என ஆணையிட்ட மனித உரிமைப் போராளி.
கலைஞன் & கல்விச் செம்மல்
உருவமற்ற ஓவியங்களையும், தோட்டங்களையும், நீரூற்றுகளையும் தனது அரண்மையில் உருவாக்கிய திப்பு மிகச் சிறந்த கலை ரசிகர். நல்ல கலைஞர்.
நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை அமல்படுத்திய திப்பு, காமராஜரின் முன்னோடி எனலாம். அவரது ஆட்சியில் முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் மதரஸா கல்வி கூடுதலாகப் போதிக்கப்பட்டது.
இஸ்லாம் மனித குலத்துக்கான அருட்கொடை என்பதை ஆழமாக நம்பிய திப்பு, ஹதீஸ்களை ஆழ்ந்து பார்த்தார். குர்ஆனை தானும் ஓதி, தனது ஆட்சியில் வாழும் முஸ்லிம்களையும் ஓத வலியுறுத்தினார்.
தன் பிள்ளையை படிக்க வைக்காத தந்தை தன் கடமையை மறந்தவன் ஆகிறான் என்பது அவரது அறிவிப்பாக இருந்தது.
நூலகமும் & அறிவாற்றலும்
ஏழைகள் இரவும், பகலும் உழைத்துத் தந்து அப்படியே மரணிக்கின்றனர். ஓடும் ஆறுகளின் அழகை ரசிக்கவோ, மேகத்திரள்களை கண்டு மகிழவோ, வானங்களை, சோலைகளை ரசிக்கவோ, சிலாகிக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. யார் ஆண்டாலும் அவர்களதுநிலை அப்படியேதான் உள்ளது என்று இலக்கியப் பார்வையுடன் கூடிய இரக்கமுள்ள ஆட்சியாளனாகவும் திகழ்ந்தார்.
இந்தியாவிலேயே நூலகங்களை தனது அரண்மனையில் ஏற்படுத்திய முதல் மன்னன் திப்பு சுல்தான். அவரது நூலகத்திற்கு ஓரியண்டன் எனப் பெயரிட்டார். அந்த காலத்திலேயே 2000க்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கிறது. திப்பு ஒரு பன்மொழிப் புலவர். உர்து, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகள் அவரது நாவில் சுரக்கும்.
வெளியுறவுக் கொள்கை
திப்பு பல பரிமாணங்களைக் கொண்டவர். மிகச் சிறந்த அரசியல் விஞ்ஞானி. இந்தியாவின் முதல் வெளியுறவு துறையின் கொள்கை வகுப்பாளர் எனலாம். ஆங்கிலேய ஆட்சியை இந்தமண்ணில் வேரூன்ற விட மாட்டேன் என முழங்கியதோடு நில்லாமல், அதற்கான மாற்று செயல் திட்டங்களையும் வகுத்தார். அன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.
1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ் பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டி நோபிலுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அச்சமயம் துருக்கியர்கள், மிகப் பெரிய ரஷ்யாவை எதிர்த்து போர் நடத்திக் கொண்டிருந்ததால் அவர்களால் திப்புவுக்கு உதவ முடியவில்லை. மனம் தளராத திப்பு அன்றைய ஐரோப்பாவை மிரட்டிய நெப்போலியனுடன் ராணுவ ஒப்பந்தம் போட ஒரு தூதுக் குழுவை அனுப்பினார். ஆங்கிலேயர்களை ஐரோப்பாவில் மிரட்டிய நெப்போலியனும், இந்தியாவில் அதிர வைத்த திப்புவும் ஓரணி திளர வேண்டிய தருணம் வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி பரிசுகளை அனுப்பி மகிழ்ந்தனர். ஆனாலும் உறவுகளும், ஒப்பந்தங்களும் வந்தபோதும், அது நிறைவேறாமல் போனது வரலாற்று விபத்தாகும்.
திப்புவுக்கு நெப்போலியன் கடிதம் எழுதினார். அது பின்வருமாறு…
தேசிய அமைப்பின் தலைமை தளபதி நெப்போலியன் போனபர்ட் தமது உன்னத நண்பரும், மகத்தான சுல்தானுமாகிய திப்புவுக்கு எழுதுவது.
வெல்ல முடியாத படையுடன், தங்களை பிரிட்டனின் இரும்புச் சங்கிலியிலிருந்து விடுவிக்க ஆவலுடன் வரவிருக்கிறோம்-. மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள்படி தங்களின் விருப்பத்தையும், அரசியல் சூழ்நிலைகளையும் அறிந்தோம். சூயிஸ் (கால்வாய்) அல்லது கெய்ரோவுக்கு தங்களது கருத்தை அதிகாரப்பூர்வமான & திறமைமிக்க ஒருவர் மூலம் அனுப்பவும். அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும். தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
புகழ்பெற்ற இக்கடிதம் 1798ல் கெய்ரோவில் இருந்தபடி நெப்போலியன் எழுதியது.
இக்கடிதம் திப்புவின் கைகளுக்கு கிடைக்கும் முன்னரே திப்பு கொல்லப்பட்டு விட்டார். புகழ்பெற்ற முதல் ஆசிய, ஐரோப்பிய ராணுவ உடன்படிக்கையாக மலர வேண்டிய அந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது, இந்திய விடுதலையை இருநூறு ஆண்டுகள் ஒத்தி வைத்தது.
சமூக நல்லிணக்கத் தலைவன்
தமிழக விடுதலை வீரர்களான தீரன் சின்னமலை, சின்ன மருது ஆகியோர் திப்புவிடம் ராணுவ உதவியை பெற்றவர் கள். ஆற்காடு நவாப், ஹைதராபாத் நிஜாம் போன்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்கள் ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் இருந்த தால் அவர்களை எதிரிகளாகவும், துரோகிகளாகவுமே கருதினார் திப்பு.
திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி கேரளாவின் மலபார், ஆந்திராவின் ஒரு பகுதி, தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டது. இதில் 10 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள்.
பிற இந்து, கிறிஸ்தவ சமுதாயங்களின் நன்மதிப்பைப் பெற்ற திப்பு சுல்தானை மிகச் சிறந்த சமூக நல்லிணக்கவாதி என வரலாற்று அறிஞர்கள் புகழ்கிறார்கள்.
“மதங்களிடையே நல்லுறவு என்பது குர்ஆனின் கூற்று. லகும் தீனுகும் வலியதீன் என்பதாகும்” என தனது 1787ஆம் ஆண்டின் பிரகடனத்தில் திப்பு வெளியிட்டார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட 'சிட்டிசன் திப்பு" என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.
இந்துக்களின் நண்பன்
கி.பி 14ஆம் நு£ற்றாண்டில் மராட்டிய இந்துப்படை சிருங்கேரி நகரைத் தாக்கி 17 லட்சம் வராகன் மதிப்புள்ள சொத்துக்களை கொள்ளையடித்தது. அதில் தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையும் ஒன்று. இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்த சங்கராச் சாரியாருக்கு உதவ திப்பு முன் வந்தார். பெருமளவில் நிதியுதவி செய்து மீண்டும் சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தார்.
திப்புவின் மலபார் படையெடுப்பில் குருவாயூர் பிடிபட்டது. அங்குள்ள கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர்கள் ஓடி ஒளிந்தனர். கிருஷ்ணன்சிலையை வேறு ஊருக்கு மாற்றினர்.
இதையறிந்த திப்பு, தான் மதவெறியனல்ல என்பதையும், தனது நோக்கம் ஆட்சியை விரிவுபடுத்துவதும், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதும்தான் என்பதையும் தெளிவுபடுத்த அந்த கோயிலுக்கு பாதுகாப்பை வழங் கினார். மீண்டும் அங்கே கிருஷ்ணர் சிலையை கொண்டு வரச்செய்தார். குருவாயூர் வட்டத்தின் வரி வசூல் முழுமையையும் கிருஷ்ணர் கோயிலுக்கு அளித்தார். இந்துக்கள் வியந்து போய், திப்புவின் நேர்மையைக் கொண்டாடினர்.
மைசூரை அடுத்த மேலக் கோட்டையில் ஐயர்களுக்கும் & ஐயங்கார்களுக்கும் இடையில் வடகலையா-? தென்கலையா? என்ற உள் மத மோதல் நிலவியது. இதனால் கோயில் சடங்குகளில் பிரச்சினைகள் உருவானது. இதையறிந்த திப்பு இருபிரிவுக்கும் இடையில் சமாதானம் செய்து, இரு தரப்பும் ஏற்கும் வகையில் கோயில் நிகழச்சிகளை நடத்திட தீர்ப்பளித்தார்.
திப்புவின் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜய நகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட கோயில் அவரது அரண்மனைக்கு அருகிலேயே இருந்தது. அதில் தடையின்றி வழிபாடுகள் நடக்க உதவி செய்தார். அவர்களின் வழிபாட்டுரிமையை கட்டிக் காத்தார்.
அறிவிக்கப்படாத ஒரு இந்து அறநிலையத் துறையை திப்பு தன் ஆட்சியில் இருந்த பெரும்பான்மை இந்து மக்களுக்காக நடத்தினார் எனலாம். அம்மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்காகவும், செலவினங்களுக்காகவும் ஏராளமான நிலங்களையும், நிதிகளையும் வாரி வழங்கினார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆனால் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு உதவிகள் செய்தார். இவரது உதவிகள் அனைத்தும் பல இன மக்கள் வாழும் நாட்டின் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் நீதியாகவே இருந்தது.
ஓரிறைக் கொள்கை கொண்ட திப்பு, பிற மக்களின் பல கடவுள் வழிபாட்டுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்தான் திப்பு!
மது விலக்கு
தமது மக்களின் சமுதாய, பொருளாதார ஆன்மீக நன்மைக்காக மது காய்ச்சுவதும், விற்பதும் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என திப்பு (வருவாய் துறை சட்டம் 1787) அறிவித்து அதை அமல் படுத்தினார்.
மது விற்பனையை தடை செய்ததோடு, அத் தொழிலை செய்து வந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளுக்கும் அவர் ஏற்பாடு செய்தார். இது குறித்து தனது ஆட்சி பணியாளர் மீர் சாதிக் என்பவருக்கு 1787ல் திப்பு ஒரு கடிதம் எழுதினார்.
‘முழுமையான மதுவிலக்கு கொண்டு வருவதில் உள்ள பொருளாதார லாப நஷ்டங்களுக்காக தயங்கவோ, ஒதுங்கவோ கூடாது. இது மக்களுக்கு நல்ல தல்ல. இதில் உறுதியான முடிவெடுக்க வேண்டும். நமது இளைஞர்களிடம் நல்லொழுக்கம் உருவாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களின் உடல் நலம், வளமான வாழ்வு இவற்றைவிட நமது அரசு கஜானாவை நிரப்புவதை முக்கியமாக கருதுவது எப் படி சரியாகும்? என இடித்துரைத்தார் அக்கடிதத்தில்.
இன்று அரசு வருவாய்க்காக மதுக்கடைகளை நடத்துகிறோம் என நியாயப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் கடிதம் ஒரு சரியான விளக்கமாகும்.
விவசாயம்
விவசாயம்தான் ஒரு நாட்டின் ஜீவநாடி என்பதை உணர்ந்த திப்பு ‘உழுபவனுக்கு நிலம் சொந்தம்’ என்ற புரட்சிகர திட்டத்தை அமல்படுத்தினார். விவசாயிகளுக்கு கடன் வழங்கினார். விவசாயத்தில் பண்ணை யாளர் போக்குக்கு எதிராக, உழைக்கும் விவசாயிக ளுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
நீர்வளம் காக்க குளங்கள், ஏரிகளை தோண்டினார். சிறிய அணைகளையும், கால்வாய்களையும் உருவாக்கினார். புதிய ஒட்டு ரக மா மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டது. கரும்பு பயிரிட ஊக்க மளிக்கப்பட்டது. விவசாய உற்பத்தி பொருள்களை அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்தது. அரசே, ஏற்றுமதி, இறக்குமதியை கையாளும் வகையில் வணிகக் கப்பல்களும் வாங்கப்பட்டது. 1790ல் காவிரியின் நடுவே அணை கட்ட அடிக்கல் நாட்டினார் திப்பு.
தொழில்கள்
திப்புவின் தொழில் கொள்கை, உள்நாட்டு தொழில்களுக்கே முன்னுரிமை தந்தது. இரும்பை காய்ச்சி வடிக்கும் 5 உருக்காலைகளை திப்பு உருவாக்கினார்.
துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை பிரான்ஸ் பொறியாளர்களின் துணையுடன் உருவாக்கினார்.
பட்டு உற்பத்தி, காகிதம் தயாரித்தல் இவற்றின் தொழில்நுட்பங்களை அறிந்துவர தொழில் வல்லுனர்களை பிரான்சுக்கு அனுப்பினார்.
1788ல் தொழிலதிபர்களுக்கு கடிதம் எழுதிய திப்பு, நமது பொருளாதார, தொழில் கொள்கைகள் வளர்ச்சி, முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றார்.
முத்து வளர்த்தல், கிரானைட் கற்களை பாலீஷ் செய்தல், தோல் பதனிடல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து உள்நாட்டில் பயிற்சியளிக்க வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
திப்பு இயற்கையின் ரசிகர். உயிரினங்களின் நேசர். பறவைகள், விலங்கினங்களை அழிப்பதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என எச்சரித்தார். உயிரின காப்பகங்களை அமைத்ததோடு, அரிதான விலங்குகளை வேட்டையாடவும் தடை செய்தார்.
காவிரியோரம் அமைந்திருந்த ஆயுதத் தொழிற்சாலை ஒன்றின் கந்தகக் கழிவுகள் ஆற்று மீனை அழித்துவிடக் கூடும் என்பதால், அந்த தொழிற் சாலையை வேறு இடத்துக்கு மாற்றினார். இப்போது போபால் விஷ வாயு விபத்து நடந்து 26 ஆண்டு காலமாய் அம்மக்கள் படும் துயரத்தை நினைக்கும் போது, திப்புவின் இச்செயல்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
தவறு செய்யும் விவசாயிகளுக்கு வித்தியாசமான முறையில், ’’சேவை செய்யும்’’ தண்டனை வழங்கப் பட்டது. அவர்கள் வாழும் சிற்று£ரில் இரண்டு மாமரங்கள், இரண்டு பலா மரங்கள் நட்டு, அவற்றுக்கு நீர் ஊற்றி வளர்த்து, மூன்றடி உயரம் வரை அதை வளர்க்க வேண்டும் என்று ஆணையிட்டார் திப்பு. இன்றைய புவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து அன்றே கவலைப்பட்டிருக்கிறார் திப்பு.
திப்புவும் & மார்க்கமும்
இஸ்லாத்தை எல்லா நிலைகளிலும் போற்றிய திப்பு, ஒரு தொழுகையாளி மட்டுமல்ல. அழைப்புப் பணியிலும் ஆர்வம் காட்டியிருக்கிறார். நெப்போலிய னுக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்.
இன்றைய ஓமன் தலைநகர் மஸ்கட் அன்று பெரும் வணிக நகராக இருந்தது. பல இந்திய வணிகர்களின் போக்குவரத்து நகராகவும் இருந்தது. அங்கு ஒரு பள்ளிவாசலை கட்ட திப்பு நிதியுதவி அளித்துள்ளார். மதரஸாக்களுக்கும், உலமாக்களுக்கும் வாரி வழங்கியி ருக்கிறார். குர்ஆனை அனைவரும் ஓத வேண்டும் என முஸ்லிம்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
பார்ஸியை ஆட்சி மொழியாக்கிய திப்பு உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அரசை நிறுவ விரும்பினார். தனது தலைநகர் சிரீறங்கப்பட்டினத்தில் அரண்மனை அருகே பள்ளிவாசலை கட்டினார். அவர் கொல்லப் பட்ட பிறகு, எரிக்கப்பட்ட அவரது அரண்மனை நூல கத்தில் 44 குர்ஆன் பிரதிகளும், குர்ஆன் தப்ஸீர் நூல்களும், 41 ஹதீஸ் நூல்களும், 56 இஸ்லாமிய அறிவியல், வரலாறு, வானியல், சட்ட நூல்களும் கண்டெடுக்கப்பட்டன.
திப்பு தன் நாணயங்களுக்கு அரபி, பார்ஸி பெயர் களை சூட்டினார். அதில் கலீஃபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரின் பெயர்களைச் சூட்டினார். தங்க, வெள்ளி நாணயங்களிலும் கலீஃபாக்களின் பெயர்களை பொறித்தார். ஆனால் எதிலும் தனது பெயரை அவர் பொறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித நேயம்
இன்றைய கேரள மாநிலம் மலபார் திப்பு ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் ஜாக்கெட் (மேலாடை) அணிந்து மார்பகங்களை மூடாமல் வாழ்வது அறிந்து பதறினார் திப்பு.
1785&ல் மலபார் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில், இது தொன்மையான பழக்கமா-? அல்லது வறுமையா? வறுமை என்றால், அவர்கள் மேலாடை அணிய அனைத்து நிதி உதவிகளையும் செய்யுங்கள். இது மத நம்பிக்கை எனில், நம்பிக்கையை புண்படுத்தாத வண்ணம் நட்பு ரீதியாகப் பேசி நடவடிக்கை எடுங்கள். ஆண்களுக்கு இல்லாமல், பெண்களுக்கு மட்டும் இது சுமத்தப்பட்டால் அது நீதிக்குப் புறம்பானது. தமது தாய்மார்களும், சகோதரிகளும் பாதி நிர்வாணமாக நடமாடுவதை எப்படி அந்த இன இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்? என அக்கடிதத்தில் திப்பு அங்கலாய்த்திருக்கிறார்.
இறுதியில் அந்த பெண்கள் மேலாடை அணிய வேண்டும் என்ற திப்புவின் முயற்சி வென்றது.
போர்திறமை :
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.
முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.
அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
திப்புவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கிலேயர்கள் விரண்டோடுவதை விளக்கும் வண்ணமாக லண்டனில் வெளிவந்த கேலிச்சித்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த கேலிசித்திரம் மூலமாக மாவீரனின் போர்த் திரமையை அறிந்துகொள்ளலாம்.
மாவீரனின் போர் வாள்
போரில் கடுமையாக காயமடைந்து தோல்வியின் விளிம்பில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு உகப்பான இந்த வாளைப் ப்றிக்க முயன்ற ஆங்கிலேய சிப்பாயை இந்த வாளாலேயே கொன்றார் மாவீரர் திப்பு.
மிக பிடித்தமான விளையாட்டு சாமான்
இது தான் மாவீரர் திப்பு சுல்தானுக்கு மிக பிடித்தமான விளையாட்டு சாமான். 'சீறும் புலியின் கால்களில் சிக்கி கதறும் ஆங்கில படை வீரன்' அந்த அளவுக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு கொண்டிருந்தார்.
ஷஹீதானார் ‘திப்பு’
ஆங்கிலேயர்களை அலற வைத்து, அவர்களை தென்னிந்தியாவிலேயே தடுத்து நிறுத்தி போராடிக் கொண்டிருந்த திப்பு, இறுதியாக மூன்றாம் மைசூர் போரில் ஆங்கிலேயருடன் போரிட்டார். துரோகம், எதிரிகளின் பெரும் படை, நவீன ஆயுதங்கள் எல்லாம் எதிரணியின் பக்கம். திப்புவின் படை வீரப் போரிட் டது. எனினும் தோல்வியைச் சந்தித்தது. திப்பு சரணடையவும், சமாதானம் பேசவும் ஆங்கிலேயர்கள் வாய்ப்பு வழங்கினாலும், அவர் அதை நிராகரித்தார். இறுதியாக தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரி களை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை.
தன் வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் 1799, மே&4 அன்று திப்பு ஷஹீதானார். இந்திய விடுதலைக்கு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக்குர் ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன.
நன்றி மறந்த தேசம்
இந்தியாவின் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் காரணமாக யார், யாரோ குறிப்பிடப்பட்டிருக்கிறார் கள். ஆனால் திப்புவின் தியாகமும், வரலாறும் மறைக் கப்படுகிறது.
நடிகர் சஞ்சய்கான் என்பவர் ‘திப்புவின் வாள்’ என்று தூர்தர்ஷனுக்கு தொலைக்காட்சித் தொடர் ஒன்றை தயாரித்தார். ஆனால், அது ‘ஒரு கற்பனைக் கதை’ என அடைப்புக் குறிக்குள் போட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசின் தொலைக்காட்சி அனுமதி அளித்து, தன்னை கேவலப்படுத்திக் கொண்டது.
1980களின் இறுதியில் நடைபெற்ற இச்சம்பவம் வரலாற்று ஆர்வலர்களையும், தேசப்பற்றாளர்களை யும் உலுக்கியது. அந்த டி.டி. தொலைக்காட்சியில் அதிக மக்கள் பார்க்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் நேரத்தில் ஒளிபரப்ப அனுமதி வழங்காமல், சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பிறகே ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது. அந்நாட்களில் மக்கள் முன் கூட்டியே உறங்கிவிடும் பழக்கத்தில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே காலகட்டத்தில் நேருவினால் கற்பனை என கூறப்பட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற தொடர்கள் அதே தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமையின் பகல் பொழுதுகளில் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் மரியாதை
இன்றைய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்பு சுல்தானே. அவர்தான் குறுந்தொலைவு பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரித்து பயன் படுத்தினார். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நான் பயிற்சி பெற அமெரிக்காவின் தலைசிறந்த ராக்கெட் தொழில்நுட்ப ஆய்வுக் கூடமான வாலோ பஸீக்கு சென்றேன். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான நாசாவின் அந்த இடத்தின் வரவேற்பு கூடத்தில் ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்தின் மிகப் பெரிய ஓவியத்தைப் பார்த்தேன்.
அது பிரிட்டிஷாரை எதிர்த்து 200 ஆண்டுக ளுக்கு முன்பு சிரீரங்கப்பட்டிணத்தில் திப்பு நடத்திய விடுதலைப் போர் காட்சி என்பது என் வியப்பை அதிகரித்தது.
திப்புவின் தாய் மண்ணே நினைவு கூறத் தவறிய அவரது ராக்கெட்

செவ்வாய், 18 நவம்பர், 2014

பாபரி மஸ்ஜித் வழக்கு - விநாயக முருகன்

அன்புள்ள விமு
உங்கள் முந்தைய பதிவில் 1988 க்கு பிறகுதான் டிவியில் மகாபாரதம் ஒளிப்பரப்பிய பிறகே அயோத்தி பிரச்சினை வெடித்தது போல எழுதி இருந்தீர்கள். அதற்கு முன்பு பிரச்சினையே இல்லையா? நான் முதிரா இளம் பருவத்தில் இருப்பதால் எனது சந்தேகங்களுக்கு பதில் அளித்து எனது வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.
அன்புடன் செல்வம்
அன்புள்ள செல்வம்
இல்லையென்று சொல்லவில்லை. உண்மையில் அது சுதந்திரத்துக்கு முன்பே எழுப்பப்பட்ட பிரச்சினை. இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு சில தரவுகளை தேடும்போது சில தகவல்கள் கிடைத்தன.
1528ல் தனது பாபர் தனது தளபதி மீர்பாகியை வைத்து மசூதியை கட்டுகிறார்.
1885ல் பைசாபாத்தில் ஒரு வழக்கு பதியப்படுகிறது. எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த ராம சபுத்ரா எனும் மேடை தான் ராமர் பிறந்த இடமென்றும் வெப்பம் மற்றும் குளிரால் அங்கு ராமரை வணங்க முடியவில்லை என்றும் அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு ராமர் கோயிலை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.
அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்தவர் பண்டிட் ஹரி கிருஷ்ணன். அவர் பிப்ரவரி 24, 1885ல் அந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறார். கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளிகிறார். அந்த தீர்ப்பில் இப்படி சொல்கிறார்.
கோயில் கட்ட அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். அது இங்கு நடந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் ராமர் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும். தவிர அந்த இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது அல்ல என்றும் தீர்ப்பில் சொல்கிறார்.
அத எதிர்த்து ரகுபர்தாஸ் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் . வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகிறார்கள். பார்வையிட்ட பிறகு மார்ச் 18, 1886ல் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யும் நீதிபதியின் இப்படி தீர்ப்பு சொல்கிறார்.
"இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது''
ரகுபர் தாஸ் அதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க் (W.Young) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
"சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்'' என தீர்ப்பு சொல்கிறார்.
அதெல்லாம் வெள்ளையர் காலத்தில் நடந்த விஷயம். பிறகு சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமையாக காத்திருந்தார்கள். டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள் மசூதியின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன்,சீதை மூவரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது.
சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், "பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது' என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்;
யார் அந்த மேலிடம்? பிரதமர் ஜவஹர்லால் நேருதான்.  துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி தள்ளுகிறார்.
டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
சிலைகளைப் பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், "பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நடந்த சம்பவங்களை படிக்கும்போது இந்தியாவில் பிரதமர் பதவி என்பது அன்றே ஒரு டம்மி போஸ்ட் என்று தெரிகிறது.
ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் வரிகளை படிக்கவும்.
" உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்"
நேருவுக்கு எந்தளவு ஆதங்கம் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்.
பிறகு நடந்த சம்பவங்களை வரிசையாக பார்க்கலாம்.
ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் "1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது' என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.
டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.
டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.
டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (Declaration & Possession) கோரி வழக்கு தொடுத்தது.
மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது.
1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
பிறகு 1992 ல் இடிக்கிறார்கள். அன்றைக்கு நேருவால் எப்படி ஒன்றும் செய்ய இயலாமல் போனதோ அதுவே நரசிம்மராவுக்கு நடந்தது.
மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர்தான் நள்ளிரவில் மூன்று சிலைகளையும் கொண்டு சென்று மசூதிக்குள் வைத்தவர்.
டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இப்போது அவரும் உயிரோடு இல்லை. ராமரை கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. பாபரை எழுப்பி கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. கேட்டவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் வரலாற்றில் உண்மைக்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதை சிலர் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்
அன்புடன்
விமு

வியாழன், 10 அக்டோபர், 2013

பயங்கரவாதத்தின் வேர்கள்

செய்தியாளர் எச்.பீர் முஹம்மது தி இந்து நாளிதழில்...

தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை ‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.
20-ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தின் உருவாக்கமாகத்தான் இருந்தது. 1980-களில் ஆப்கனுக்கு எதிராக சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பை ஒட்டி பாகிஸ்தானில் உருவான முஜாஹிதீன் இயக்கத்துக்குச் சகலவிதமான உதவிகளையும் ஆயுதப் பயிற்சியையும் அமெரிக்கா அளித்தது. அவர்களே பின்னர் தலிபன்களாக உருமாறி, அமெரிக்கத் துணையுடன் ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றி பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தனர். பின்னாளில் தலிபன்களின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு அவர்களிடையே பல சிறு குழுக்கள் தோன்றி ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் இன்னமும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நீட்சியில் அல்கொய்தா இயக்கத்தின் உருவாக்கமும் சேர்த்து கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் வார்ப்பான ஒசாமா பின்லேடன் 19-ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபிய பிரிவைச் சேர்ந்தவர். அன்றைய துருக்கிய உதுமானிய பேரரசுக்கு எதிராக மத்தியக் கிழக்கில் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரிட்டிஷ் துணையுடன் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் (Political Islam) என்பதை முன்வைக்கிறது. ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இதன் அரசியல் இயக்கமான அல்கொய்தா, ‘நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுப்பது ஒவ்வோர் இஸ்லாமியரின் கடமை’ என்று பல முறை அறிவித்திருக்கிறது. மதப் பிரதிகளை இவர்கள் இயந்திரத்தனமாகப் புரிந்துவைத்திருப்பதால், பல நேரங்களில் இஸ்லாம்குறித்து புதிதாக அறிந்துகொள்ள விரும்பும் பதின்பருவ இளைஞர்கள் இதற்கு பலியாகிவிடுகிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்பதைப் பற்றி வரலாற்றில் நேர்மறையான விளக்கங்களும் புரிதல்களுமே இருந்திருக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய வரலாற்றில் தத்துவ ஞானிகளான சூபிகளின் ஜிஹாத் பற்றிய புரிதல் ஆன்மிகத்தை நோக்கித்தான் இருந்தது, அரசியலை நோக்கி அல்ல. ஜிஹாத் என்ற புனிதப் போரை அரசியல் அளவுகோலாக எதிர் சமூகங்களின் மீது வைப்பது மேற்கண்ட இயக்கங்களின் வருகைக்குப் பின்புதான்.

இந்த இயக்கங்கள் சவூதி அரேபிய வகைப்பட்ட உலக இஸ்லாம் (Global Islam) என்பதை முன்வைப்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் பிராந்திய, வட்டாரப் பண்பாடுகளிலிருந்தும், அடையாளங்களிலிருந்தும் இஸ்லாமியர்கள் விலக்கப்படுகிறார்கள் அல்லது விலகுகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் இருந்த இந்து, முஸ்லிம் சமூக ஒற்றுமை சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலையத் தொடங்கியது. இந்தச் சீர்குலைவு அரசியலில் இந்துத்துவா இயக்கங்களின் பங்களிப்பும் மறுக்க முடியாதது. உலக வரலாற்றில் பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் இயக்கங்கள் தங்கள் நாடுகளில் வாழும் சிறுபான்மையினரை எதிர் நிலையில் நிறுத்தித் தங்களை முன்னகர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இந்தியாவிலும் அது போன்றே நிகழ்ந்தது. பாபர் மசூதி என்பது அதன் முக்கிய அரசியல் குறியீடு.

இந்தியாவின் பன்மயப்பட்ட சாதியச் சமூகத்தில் தங்களின் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த குறியீடுதான் ராமரும் பாபர் மசூதியும். இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள இயலாத இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் தன்னைப் பலிகொடுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் தலைவர்களும் எடுத்த சமரச முயற்சியில் இருதரப்பினருமே உடன்படவில்லை. இதன் நீட்சியில் 1992 நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் நிர்க்கதியாயின. போராட்டங்களிலும் கலவரங்களிலும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இறைவனுக்காக மக்கள் கொல்லப்படுவது இறைவனுக்கே ஏற்புடையதல்ல.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது. இதன் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அதிலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. ஆனால், கேரளத்தில் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளத்தில் எல்லோரும் மலையாளிகள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். அங்கு மைய நீரோட்டம் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பல கலை ஊடகங்களை நிராகரிப்பது, பொதுவாசிப்பு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்க மறுப்பது, குறிப்பாக காலங்காலமாகத் திரைப்படத்தை நிராகரித்து அவற்றைவிட்டு ஒதுங்கியிருந்தது போன்றவை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்துகொள்ளக் காரணமாயின. ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களை இந்தச் சூழலில் வைத்துத்தான் நாம் மதிப்பிட முடியும்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், இந்துத்துவ அரசியல் மிக வலுவானதாக இல்லை. ஆனால், சமீப காலமாக தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடுகள் அவற்றை வலுப்பெற வைக்க வாய்ப்பிருக்கிறது. குஜராத் கலவரத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகமாகப் போராடியவர்கள், இயக்கம் நடத்தியவர்கள் இந்தியாவில் உள்ள ஜனநாயக முற்போக்குச் சக்திகள். ஆனால், நெருக்கடியான காலகட்டங்களில் இஸ்லாமியச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தங்களின் சமூக அரசியல்குறித்த புரிதலே அதற்குக் காரணம். இந்நிலையில், சமீபகாலங்களில் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் ஈழப் பிரச்சினை, கூடங்குளம் விவகாரம் போன்றவற்றில் இணைந்து போராட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது இன்னும் தொடர வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட பல குண்டுவெடிப்புகள் 1990-களுக்குப் பிறகே ஏற்பட்டன. பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது. வஹ்ஹாபிய இயக்கங்களின் எழுச்சியும் அதன் கருத்தாக்கமும் மேற்கண்ட இளைஞர்களிடத்தில் புனிதப் போர் குறித்த அரசியல் பார்வையை மேலும் கூர்மையாக்கின. இதில் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களே அதிகம். எல்லா இயக்கங்களுமே பதின்பருவ இளைஞர்களைக் குறிவைக்கக் காரணம், அந்த மூளைகள்தான் உணர்ச்சிபூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை மிக எளிதில் உள்வாங்கும்.

இந்நிலையில், பல அப்பாவி இளைஞர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றனர். அதில் சிலர் நிரபராதிகள் என்று பின்னர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆக, மதம் குறித்த இயந்திரத்தனமான மட்டுப்படுத்தப்பட்ட புரிதலும் கருத்தியல்களும் அப்பாவி இளைஞர்கள் பலரை வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கின்றன. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ‘‘தமிழ்நாட்டில் தீவிர இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர்தான் எங்களைத் தூண்டினார்” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தனர். இந்தியாவின்/தமிழ்நாட்டின் சமூக நீரோட்டத்தைக் குலைக்கும், சமூகங்களிடையே பதற்றங்களை உருவாக்கும் இம்மாதிரியான செயல்பாடுகளுக்குக் கண்டிப்பாக மதம் காரணமாக இருக்க முடியாது. ஹிட்லர் தன் செயல்பாடுகளுக்கு பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டினார். அப்படியிருக்க, அவரின் செயல்பாடுகளுக்கு கிறிஸ்துவம் எப்படிப் பொறுப்பாக முடியாதோ அதுமாதிரிதான் அரசியல் இஸ்லாம் பேசும் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், சிலரின் பயங்கரவாதச் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஊடகங்கள் அவர்களை இஸ்லாத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தையே காயப்படுத்துவதாகும். தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் ஊடகங்கள் அதனைப் பயங்கரவாதக் குறியீடாகக் காட்டுவது மிக அபத்தமான ஒன்று.

தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peerl@gmail.com