சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூன், 2012

பின்பற்றப்பட வேண்டிய பத்து ஆலோசனைகள்....

சுஜாதாவின் பின்பற்றப்பட வேண்டிய பத்து ஆலோசனைகள்....

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்..

பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா

1)நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்.

2)எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

3)தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

4)தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

5)களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

6)மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

7)வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

8 )சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

9)வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

10)கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

11)யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

12)நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

13)தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம். மனசுக்குள் படியுங்கள்
ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்

14)எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·Fiction, எண்பது Non-Fiction. படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்

15) வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்

16)நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

நன்றி : சினிபைல்