கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60

‘Very good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை உணரும் நிலையில் தந்தை இல்லை. கோபாலபுரத்தில் குன்று போல் உட்கார்ந்து இருக்கிறார் கருணாநிதி.

முதல் நாள்!
முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்? 17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.
``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.
“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.

மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.
“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”
அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கருணாநிதி. அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளை, ஒரு புதிய அரசியல் அணிக்கான அரசியல் சேர்க்கையாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஆக்கிக் காட்டத் திட்டமிட்டுள்ளார். எப்படிப் பார்த்தாலும் தி.மு.க-வுக்கு கருணாநிதி, ‘ஆயிரம் பொன்!’

கருணாநிதியின் சட்டமன்ற வாழ்க்கைக்கு வைரவிழா கொண்டாடுகிறது தி.மு.க. அதை விட அவர்களுக்குப் பெருமை தரத்தக்கப் பெரியது எதுவும் இல்லை.

“தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கருணாநிதி வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டுப் பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். ‘`இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கருணாநிதி. ‘`தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?

கருணாநிதி நிரந்தரம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கருணாநிதி தலைவர் அல்ல; கருணாநிதி தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன; இருக்கின்றன. கருணாநிதி என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கருணாநிதியால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால், முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல்.
அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். சிலருக்கு அவரைப் பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் கருணாநிதியை உருவாக்கியது. காலதாமதமாக பி.ஜே.பி. எதிர்ப்பு அரசியலை ஸ்டாலின் இப்போது கையில் எடுத்துள்ளார்.

‘மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை’ என்றவர் கருணாநிதி. அவர் வாய் திறந்தால் இதைத்தான் சொல்வார். ஏனென்றால் அவர் 20-ல் விளைந்தவர்.

--நன்றி ப.திருமாவேலன்,  விகடன்.

வியாழன், 15 ஜூன், 2017

கலைஞர் - ஜெயலலிதா முஸ்லிக்களுக்கு என்ன செய்தார்கள்

என் பாசத்துக்குரிய தாஜ் அண்ணே...
என் கேள்விக்கு இத்தனை விளக்கமாக பதில் தருவீர்கள் என்று எண்ணவில்லை...
திகைக்க வைத்து விட்டீர்கள்.
சின்னப்பிள்ளைக்கும் புரியும் வண்ணம் நிஜங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மறுக்க முடியாது.
தேசத்தின் அதிக சம்பளம் பெறும் முதலாளி கலாநிதி மாறன் என்ற நேற்றைய நிஜத்தையும் சேர்த்து.!
இருந்தாலும் சில நியாயங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன்.
ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடலைக் கேட்டதிலிருந்தே என் தலைமுறை திமுகவின் வசமாகிப்போனது. என் தந்தையின் காலமோ பெரியாரால் ஈர்க்கப்பட்டது. பகுத்தறிவும் இஸ்லாத்தின் மீதான அண்ணாவின் பரிவும் முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
அண்ணாவின் காலத்திற்கு பின் கலைஞர் முதல்வரானார்.
அதுவரை சரியாக போய்க் கொண்டிருந்த கப்பலை திசை திருப்பியதில் எம்ஜிஆருக்கும் பங்கு உண்டு. இந்திராவின் கட்டளைக்கு பயந்து திமுகவை உடைத்த பெருமை எம்ஜிஆர் என்ற சினிமா ஹீரோவுக்கு உண்டு.
அதுவரை திமுகவை மட்டுமே ஆதரித்த தமிழக முஸ்லிம்கள் அதிமுகவையும் ஆதரிக்க ஆரம்பித்தார்கள். முதன் முதலில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் லீக்கை உடைத்தவர் எம்ஜிஆர்தான்.
முழக்கம் ஷெய்குத்தம்பியை வைத்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற லெட்டர்பேடு கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் சமது லத்தீப் பிளவு ஏற்பட்டது.
அதுமட்டுமா ?
முஸ்லிம்களுக்கு முஸ்லிம்லீக் இருப்பதுபோல் இந்துக்களுக்கு " இந்து முன்னணி " ஏன் இருக்கக் கூடாது என்று மேலப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பேசி தாணுலிங்க நாடாரை வளர்த்து விட்டவர் எம்ஜிஆர்.
அதன் பிறகு குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதும் நாடறிந்த விஷயம்.
இன்று ராமகோபாலன் தலைமையிலான இந்து முன்னணி முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதற்கு ஆகாரம் போட்டு கொம்பு சீவி விட்டவர் கொடை வள்ளல் எம்ஜிஆர்தான்.
திமுக ஆட்சியிலும் எம்ஜிஆர் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்தது.
கருணாநிதி சாதிக் பாட்சாவை நன்றாகத்தான் வைத்திருந்தார். சாதிக் நேர்மையானவர்.
அரசு அனுகூலங்களுக்கு ஆசைப்படாதவர். அதனாலேயே அவரது வாரிசுகள் கஷ்டப்பட்டார்கள். பொதுவாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும்போதே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலி அரசியல்வாதிகளுக்கு அழகு. சாதிக் அதற்கு விதி விலக்கு.அதனால் அவர் வாரிசுகள் சிரமத்திற்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை.
நாகூர் ஹனிபா அண்ணனை எம்.எல்.சி ஆகவும் வக்ப் வாரியத் தலைவராகவும் நியமித்தவர் கலைஞர். அதுபோக ராணிப்பேட்டை தொகுதியிலும் சீட் கொடுத்தார். ஹனிபா அண்ணனின் இப்போதைய கஷ்டங்களுக்கு யார் காரணம் என்பது தெரியாது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அமைந்த அம்மையார் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
ராஜா முஹம்மது என்பவர் அமைச்சராக இருந்து ...அமைச்சராக இல்லாமல் இருந்து பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முஸ்லிம் பிரதிநிதித்துவமே இல்லாத மந்திரிசபையாக அம்மையார் மந்திரிசபை இருந்தது. முஸ்லிம்களுக்கென்று எந்தச் சலுகையும் அவரது ஆட்சியில் கிடைக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது கோவைச் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலாம் என்று சொன்னதற்காக அன்றைய உள்துறைச் செயலாளராக இருந்த முனீர்ஹோதா என்ற
ஐ.எ.எஸ். அதிகாரியின் மீது முஸ்லிம் தீவிரவாதிக்கு உதவி செய்தவர்,
அவர்களோடு தொடர்புடைய அதிகாரி என்று பழிசுமத்தி பணி நீக்கம் செய்தவர் ஜெயா.
அந்த பணி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்து பணி நியமன ஆணை பெற்று வந்த பிறகும் முனீர்ஹோதாவை பணியில் சேர்க்காதவரும் ஜெயாதான்.
கருணாநிதிக்கு எதிராக பி.ஜெய்னுலாப்தீன் என்பவரை தூண்டி விட்டு முதல்வர் வீடு முற்றுகை, கவர்னர் மாளிகை முற்றுகை, அண்ணாசாலையில் தொழுகை போன்ற கூத்துகளை நடத்தியவரும் இவர்தான்.
தேர்தல் நேரத்தில் ஊரூராகப்போய் அம்மாவை ஆதரித்து பிஜேயும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் ...
குஜராத் முதல்வராக மோடி வெற்றி பெற்றதும் அவரது பதவி ஏற்பு விழாவில் ஜெயா கலந்து கொண்டார். அவருக்கு தனது தோட்டத்தில் விருந்தும் கொடுத்தார். தன்னை ஆதரித்த முஸ்லிம்களின் முதுகிலும் குத்தினார். இதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான அம்மையாரின் நடவடிக்கைகளுக்கு சின்னச் சின்ன ஆதாரங்கள்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயாவால் பழிவாங்கப்பட்ட முனீர்ஹோதாவுக்கு முதல்வரின் தனிச் செயலாளர் என்ற அந்தஸ்தை கலைஞர் வழங்கினார். மற்றொரு ஐ.எ.எஸ். அதிகாரியான அலாவுதீனுக்கும் சிறந்த மரியாதை கொடுக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின் செயல் அதிகாரியே அவர்தான். ஜமாலுதீன் என்பவருக்கும் நல்ல பொறுப்பு வழங்கப்பட்டது கலைஞரின் ஆட்சிகாலத்தில்.
எல்லாவற்றிற்கும் மேலாக " இட ஒதுக்கீடு " கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. " தருவேன் " என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததும் அவர்களை ஏமாற்றியவர் அம்மையார். கலைஞர் வந்ததும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கினார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதையே எதிர்த்தவர் ஜெயா. தமிழ் நாட்டிலும் எதிர்த்தார். அதையும் மீறித்தான் கலைஞர் கொடுத்தார்.
இன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் மருத்துவமும் பொறியியலும் படிப்பதை சமுதாயம் கண்டு வருகிறது.
பல முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். இதெல்லாம் திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள்.
கழிந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்துத் தருவேன் என்ற உறுதியில்லாத அவரது உறுதி மொழியை ஏற்று அரசியல் சந்தர்ப்பவாதம் செய்த தமுமுக இன்று அதிமுக கூட்டணியை விட்டு விலகி இருக்கிறது.
இது அரசியலில் திமுகவும் அதிமுகவும் நடந்து கொண்ட முறைகள்.
நான் யாரையும் நியாயப்படுத்த விரும்பவில்லை.
பிஜேபியோடு கலைஞர் கூட்டணி வைத்தது குற்றம்..குற்றம்..குற்றமே...
அதுபோல் குஜராத் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் குற்றமே...
ஆனால்...
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பிஜேபி உடனான திமுகவின் உறவு தொடரவில்லை. பல சந்தர்ப்பங்களில் இந்துத்துவாவை பகிரங்கமாக எதிர்த்தும் முஸ்லிம்களை ஆதரித்தும் குரல் எழுப்பிய கலைஞரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
அதே நேரம் மோடியுடனான அதிமுகவின் நெருக்கம் முஸ்லிம்களுக்கு வெறுப்பூட்டக்கூடியது. ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் காரணங்களால் ...
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றாலும் இந்த தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு கட்சிகளுக்கே எனது ஆதரவு என்பதில் மற்ற முஸ்லிம்களைப்போலவே நானும் உறுதியாக இருக்கிறேன்.
மற்றபடி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் உட்பட பலவும் இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதுதான். எந்த கட்சியும் யோக்கியமில்லை. அதில் திமுகவை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
இறுதியாக...
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஊழல், வாரிசு அரசியல் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் பிஜேபியின் மதவாத அரசியலை முறியடிப்பதுதான் இப்போதைய ஒரே நோக்கம். அதற்காக பிஜேபியின் மாற்று சக்திகளை அவர்கள் ஆதரிப்பதில் தப்பே இல்லை. மதவாதம் ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு நெடிய விளக்கம் தர வேண்டும். அது இன்னொரு பதிவில் தருகிறேன்.. மிக மிக ஆபத்தான விளைவுகளைக் கொண்டது அது. அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தத் தேர்தலில் ஓட்டுப்போடாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலை உங்கள் சுதந்திர முடிவு. அதில் கருத்துச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை என்றாலும் ஓட்டே போடாமல் ஜனநாயக் கடமையை நிறைவேற்றாமல் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
என் பதிலும் கூடுதலாகி விட்டது... சிரமத்திற்கு மன்னிக்கவும்... கூடுதல் விளக்கங்கள் கேட்டால் தர முயற்சிக்கிறேன்...
இன்ஷா அல்லாஹ்!

அபுஹாஸிமா எழுதியது. 
அண்ணன் Taj Deen
அவர்களுக்கு 2013 ல் முகநூலில்
எழுதிய ஒரு விளக்கம்.

வியாழன், 26 மே, 2016

எதிர்கட்சி தலைவராக கலைஞர் - வரலாற்று பதிவு

செப்டம்பர் 27 , 1979. தமிழக சட்டமன்றத்தில் புயல் அடித்தது போல இருந்தது . காரணம் அன்றைக்கு எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவந்தார் . அந்த விவகாரம் "பல்கேரியா பால்டிகா" விவகாரம் என தமிழக சட்டமன்ற வரலாற்றில் முக முக்கிய சர்ச்சைக்கு வித்திட்டு பரபரப்பாக இடம் பிடித்த பெயர் . அதென்ன "பல்கேரியா பால்டிகா"..? என்பது தானே உங்கள் கேள்வி . அன்றைக்கு தமிழக மக்களுக்கே இது என்ன புதுசா இருக்கே , இந்திப்பேரா இருக்குமோ என்று தான் நினைத்திருப்பார்கள் . பல்கேரியா தமிழக மக்கள் அதிகம் அறிந்திருக்காத ஒரு நாட்டின் பெயர் . ஆனால் 1979 ஆம் ஆண்டு தமிழக ஊடகங்கள் பல்கேரியா என்ற பெயரை தவிர்த்து தினசரிகளை கொண்டுவரவே முடியாமல் போனது .
தமிழக அரசின் "பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் " சார்பாக அன்றைய எம்.ஜி.ஆர் அரசு பல்கேரியா நாட்டிடம் இருந்து இரண்டு கப்பல்களை வாங்க முடிவு செய்திருந்தது . அந்த கப்பல்களின் பெயர் தான் "பல்கேரியா பால்டிகா ". இந்த விவகாரத்தில் தான் ஊழல் நடந்திருப்பதாகவும் 4 கோடி ரூபாய் லஞ்சம் பேசியிருப்பதாகவும் அதில் ஒரு கோடி ரூபாயை லஞ்சமாக முதல்வர் எம் .ஜி.ஆர் வாங்கி இருக்கிறார் என்றும் சட்டமன்றத்தில் வைத்து குற்றம் சுமத்தினார் எதிர் கட்சி தலைவர் கலைஞர் . குற்றச்சாட்டு என்றால் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று ஏனோ தானோ என்று கலைஞர் வைக்கவில்லை . ஊழல் நடந்திருப்பது உண்மை என நிரூபிக்க அடுக்கடுக்காக சுமார் 20 ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அவைக்கு சமர்பித்து கலைஞர் அமர்ந்தபொழுது மாண்பு பொருந்திய அவை ஸ்தம்பித்துக் கிடந்தது . இத்தனை ஆதாரங்கள் எப்படி கலைஞருக்கு கிடைத்தது என ஆளும் தரப்பு அதிர்ந்து விட்டது . அது தான் கலைஞர் . ஒரு எதிர் கட்சி தலைவராக கலைஞர் சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என்றால் அது சாலப் பொருந்தக்கூடிய வர்ணனையே . மறுநாள் சட்டமன்றத்தில் இதற்கு பதில் அளித்து எம்.ஜி.ஆர் பேசுகையில் சொன்னார் " எவ்வளவு பலவீனமான இயந்திரத்தை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறோம் என்பதற்கு எதிர் கட்சி தலைவர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் சமர்பித்த ஆதாரங்களுமே சான்று " என்றார் . உடனே எழுந்த கலைஞர் அப்படியென்றால் இந்த ஊழல் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதியை வைத்து விசாரிக்க அரசு தயாரா ? " என்றார் . தாமதிக்காமல் எழுந்த எம்.ஜி.ஆர் எதிர் கட்சி தலைவரின் சவாலை ஏற்று விசாரணைக்கு சம்மதித்தார் . அது தான் எம்.ஜி.ஆர் .
ஆக சட்டமன்றத்தில் ஒரு எதிர் கட்சி தலைவராக எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் , ஆளும் கட்சியாக எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு எப்படி செவிசாய்க்க வேண்டும் என்பதற்கு மேலே சொன்னவை ஒரு உதாரணம். நவம்பர் 24, 1981 . தமிழக அரசியல் அல்ல ..இந்திய அரசியலே காணாத ஒரு விசித்திரம் தமிழகத்தில் நடந்தது . ஆளும் அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால் , கமிஷன் சமர்பிக்கும் அறிக்கையை முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிடுவர் . இந்திய அளவில் இது தான் நடைமுறை . ஆனால் தமிழகத்தில் அன்று ஆளும் அரசு வெளியிடுவதற்கு முன் எதிர் கட்சி விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட்டது . என்ன கமிஷன் அது ? சொல்கிறேன்...
திருசெந்தூர் முருகன் கோவிலில் இருந்த வைரவேல் ஒன்று திடுமென காணமல் போயிற்று . அன்றைக்கு அறநிலைய துறை அமைச்சராக இருந்தவர் திரு .ஆர்.எம்.வீரப்பன் . "வீரப்பா வீரப்பா வைர வேல் எங்கப்பா.." என்ற முழக்கம் திமுக மேடைகளில ஒலித்துக்கொண்டிருந்தது . இதை தொடர்ந்து திருசெந்தூர் கோவில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் விடுதி அறையொன்றின் குளியலைறையில் அறநிலையத் துறையின் தணிக்கை அதிகாரியாக இருந்த சுப்ரமணியப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார் . இப்படித்தான் செய்தி ஊடகத்தில் சொல்லப்பட்டது . ஆனால் அது கொலை என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தி வெளியானது . விடுவாரா கலைஞர் . கெட்டியாக இந்த விவகாரத்தை பிடித்துக்கொண்டார் . களத்தில் இறங்கினார் எதிர் கட்சி தலைவர் கருணாநிதி . விசாரணை கமிஷன் அமைத்தே தீர வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளும் கட்சியை உலுக்கினார் . எதிர் கட்சிகளின் நிர்பந்தத்தை மீறி எம்.ஜி.ஆர் அரசு ஒன்றும் செய்ய முடியவில்லை , விசாரணை கமிஷனுக்கு ஒத்துக் கொண்டது அரசு . 

நீதிபதி சி.ஜெ .ஆர்.பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது . விசாரணை நடந்தது நடந்தது நடந்துகொண்டேயிருந்ததே ஒழிய அறிக்கை தாக்கல் செய்யப்படவேயில்லை . திடீரென ஒரு நாள் பார்த்தால் பால் கமிஷனின் விசாரணை அறிக்கை தமிழகத்தின் அனைத்து ஊடகத்திலும் வெளியானது . உபயம்..? வேறு யார் .. எதிர்க்கட்சித்தலைவரான சாட்சாத் கருணாநிதி தான் . எம்.ஜி.ஆர் அரசுக்கு இது ஒரு தலைகுனிவு மட்டுமல்ல , அவர் தலைமையேற்ற அரசின் "ரகசிய காப்புக்கு " விடப்பட்ட சவால் . கொதித்துப்போனார் எம்.ஜி.ஆர். இப்படி ஆளும்தரப்பை தொடர்ந்து கொதி நிலையிலேயே வைத்திருந்த ஒரு எதிர் கட்சி தலைவர் தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒருவர் உண்டென்றால் அது கலைஞர் கருணாநிதி தான் . ஆளும் கட்சியாக இருக்கும்போது தண்ணீரில் இருக்கும் பாஸ்பரஸ் போல அமைதியாகத்தான் இருப்பார் . எதிர் கட்சியாக வரும்போது தண்ணீரி காய்ந்த பாஸ்பரஸ் ஆகி பக் என்று பத்திக்கொள்வார் . ஆளுங்கட்சி தலைவராக இருந்த கலைஞர் மீது எனக்கு அனேக விமர்சனங்கள் உண்டு . ஆனால் ஒரு எதிர் கட்சி தலைவராக துடிப்போடு செயலாற்றிய அவர் மீது எனக்கு வியப்பு மட்டுமே . ஒரு வழியாக பால் கமிஷனின் அறிக்கையை ( செய்தித் தாளில் கலைஞர் வெளியிட்ட அதே அறிக்கையை) , எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் வெளியிட்டார் . இப்படி ஒரே அறிக்கை இரண்டு முறை வெளியிடபட்ட கூத்து அப்போது மட்டுமே நடந்திருக்கிறது . சரி கமிஷன் அறிக்கை வந்துவிட்டது . இனி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையா. ? எம்.ஜி.ஆர் அரசு கிணத்தில் போட்ட கல்லாக கிடந்தது . விடுவாரா கலைஞர் ? எதிர் கட்சி தலைவராயிற்றே ...நீதி கேட்டு திருசெந்தூருக்கு நடை பயணம் போனார் கலைஞர் . (குறிப்பு : அன்றைக்கு யாரும் கலைஞருக்கு சக்கரை நோய் அதான் நடக்கிறார் என்று பழிக்கவில்லை ) காலெல்லாம் கொப்புளங்கள் வந்த பின்னும் காலில் கட்டு கட்டிக் கொண்டு அவர் சென்ற நடை பயணத்தை ஊடகங்கள் சிலாகித்தன ...ஆனால் இந்த நடை பயணத்தை கிண்டல் செய்து அதிமுக அமைச்சர் திரு.ஹண்டே சட்டமன்றத்தில் இப்படி சொன்னார் . 
"கருணாநிதி திருசெந்தூர் போனார் . ஆனால் அவரை பார்க்கப்பிடிக்காமல் அந்த திருசெந்தூர் முருகன் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் " என்றார் கிண்டலாக . வேறுயாராக இருந்தால் என்ன இப்படி நம்மை கிண்டலடிக்கிரார்களே என்று நாக்கை துருத்தியிருக்க கூடும் . ஆனால் கலைஞர் ஆயிற்றே . அமைதியாக எழுந்து ஹண்டேவை பார்த்து சொன்னார் . "நான் இதுவரை வைரவேல் மட்டும் தான் காணாமல் போயிற்று என்று நினைத்திருந்தேன் . இப்போது அமைச்சர் சொல்லித்தான் தெரிகிறது திருசெந்தூர் முருகன் சிலையே காணாமல் போயிருக்கிறது என்று " . அதுவரை சீரியஸாக இருந்த சட்டசபை களுக்கென்று சிரித்துவிட்டது . எம்.ஜி.ஆர் உட்பட . இப்படி எப்போதுமே தன் விவாதங்களால் எதிர் கட்சிக்கு ஒரு கடிவாளமாக இருந்தார் கலைஞர் . எப்போதும் தன்னுடைய குற்றசாட்டுகளுக்கு கலைஞர் ஆதாரங்களை சமர்பித்தே விவாதம் செய்வார் . அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒருமுறை அவையில் எழுந்து "இந்த ஆதாரங்கள் எல்லாம் எதிர் கட்சி தலைவருக்கு எப்படி கிடைக்கின்றன ? " என்று கேள்விஎழுப்பியபோழுது அன்றைக்கு சபாநாயகராக இருந்த (அதிமுக காரர்) க.ராசாராம் "ரகசியம் வெளியே போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அரசாங்கத்தின் கடமை " என அரசுக்கு அறிவுறுத்தினார் .இன்றைக்கு இப்படி ஒரு சபாநாயகர் முதலமைச்ச்சரை பார்த்து இப்படி அறிவுறுத்தினால் அடுத்த நாளே அந்த இருக்கைக்கு வேறொரு சபாநாயகர் வந்துவிடுவார் . ஆனால் எம்.ஜி.ஆரோ சபாநாயகர் இப்படி சொன்ன வுடன் இருக்கையில் இருந்து எழுந்து கண்கள் சிவக்கவில்லை , நரம்பு புடைக்கவில்லை , திராணி இருக்கிறதா என்று விரல் நீட்டி எச்சரிக்கவில்லை மாறாக கலைஞரை பார்த்து சொன்னார் . "ஒரு உண்மையை வெளிக்கொண்டுவர ஆதாரங்களை சொல்வது அரசுக்கு உதவியாக இருக்கிறது . ஆனால் இந்த ஆதாரங்களை முன்கூட்டியே அரசுக்கு கொடுத்திருந்தால் தகுந்த பதில் அளிக்க வசதியாக இருந்திருக்கும் " என்றார் . கலைஞரை பேச விட்டு பேச விட்டே அமைதிபடுத்தினார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் . இது தான் எதிர் கட்சிகளை நடத்தவேண்டிய முறையும் கூட . ஆனால் இப்படி பட்ட சட்டசபை எல்லாம் நான் பிறப்பதற்கு முன்பு தான் நடந்திருக்கிறது என்று நூலகத்தில் படித்து தெரிந்துகொள்ளும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது . அன்றைக்கு ஆளுங்கட்சியை கதிகலங்கசெய்த கலைஞர் ஏனோ ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு சட்டமன்றம் போவதையே தவிர்த்தார் . அது ஒரு மோசமான முன்னுதாரணமாகிப்போனது . இன்றைக்கோ எதிர்கட்சிகள் கிண்டல் செய்தார்கள் கேலி செய்தார்கள் அவதூறு பேசுகிறார்கள் என்று எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்கிறேன் என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள் . சட்டசபைக்குள்ளேயே இருந்து அரசை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதை கலைஞரிடம் இவர்கள் கற்றுக்கொள்ளவேயில்லை .
இப்போது அமைய விருக்கும் புதிய சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் திரு.ஸ்டாலின் அவர்கள் தன் தந்தையின் வழியில் அவையில் செயல்படுவது அவசியம் .அது தான் மக்கள் நலனுக்கு நன்மை பயக்கும் . இந்த செயல்பாடு தான் திமுகவின் எதிர்காலமும் கூட . நிச்சயம் ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆரின் சாயலை எதிர் பார்க்க முடியாது . ஆனால் நீங்கள் கலைஞரின் மகன் . உங்களிடம் ஒரு எதிர் கட்சி தலைவராக எம்.ஜி.ஆர் காலத்து கலைஞர் போல செயல்படுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கவேசெய்கிறது . அரசு இடரும் போது இழுத்துப் பிடித்து ஒரு நிலையில் நிறுத்தவேண்டிய பொறுப்பு எதிர் கட்சி தலைவருக்கே இருக்கிறது .
பதவியேற்பு விழாவில் தகுந்த இடம் தரவில்லை என்று பிறரும் உங்கள் தந்தையும் அதை சர்ச்சையாக்கினாலும் நீங்கள் மெளனமாக அதை கடந்து போனீர்கள் . அது சம்பந்தமாக ஒரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை . இந்த நாகரீகத்தை நான் ரசித்தேன் . இங்கே முன் வரிசையில் சீட்டு கிடைப்பதல்ல இப்போது மக்களுக்கு முக்கியம் . சட்டமன்றத்தில் உங்கள் செயல்பாட்டின் மூலம் சட்டசபை வரலாற்றில் இடம் பிடிப்பதே முக்கியம் . அதுவே மக்கள் நலன் சார்ந்த ஒரு எதிர் கட்சி தலைவராக உங்களுக்கு பெயர் வாங்கித்தரும் . தேவை எழுந்தால் ஒழிய அவையை விட்டு வெளிநடப்பு செய்யாமல் நீங்களும் பெருவாரியான உங்கள் கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் மனசாட்சியை பிடித்து உலுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு . நான் நம்புகிறேன் . இந்த 2016 -2021 காலத்தின் சட்டசபை மீண்டும் மாண்பை மீட்டெடுக்கட்டும் . எனது வாழ்த்துக்கள் !. --க.உதயகுமார் 24/05/2016 Sincere tanks to க. உதயகுமார்

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

நான் திராவிடத்தையும், தலைவர் கலைஞரையும் ஏன் நேசிக்கிறேன்...


படியுங்கள்:-
(ஒரு வரலாற்று ஆவண தகுதி பெற்ற பதிவு)
----------------
Arivazhagan Kaivalyam
தி.மு.க வையும், தலைவர் கலைஞரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறீர்கள்.... திரை நாயகர்களுக்கு இருக்கிற வெள்ளந்தியான பாலூற்றும் ரசிகர்களைப் போலத் தான் நடந்து கொள்கிறீர்கள்...... மனைவியில் இருந்து துவங்கி, நண்பர்கள் பலர் இப்போது இப்படித்தான் சொல்கிறார்கள்.
தி.மு.க ல இருக்குறதும், கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறதும் பாலூற்றித் தேங்காய் உடைக்கும் ரசிக மனநிலை இல்லீங்க, அதுக்கு வரலாற்றுப் பூர்வமான காரணங்கள் பல இருக்கு. அது ஒரு வகையான நன்றிக் கடனுங்கோ சாமிகளா, ஒரு புள்ளிவிவரத்தோட அதை எல்லாம் உங்களுக்குச் சொன்னால் தான் புரியும்.
1) ஆடு மாடு மேச்சுகிட்டு, விவசாயத்தைத் தவிர எதுவுமே தெரியாம அடிமை வாழ்க்கை வாழ்ந்த எங்க ஊரோட வரலாற்றில் "பெரியார்" என்கிற மகத்தான மனிதரின் வரவுக்குப் பின்னால தாங்க படிப்போட வாசனையே வந்தது, உள்ளூர்ல இருக்குற சாதி அரசியல் கூடத் தெரியாம இருந்த எங்க குடிசைல மார்க்சும், லெனினும், டால்ஸ்ட்டாயும், சோவியத் யூனியனும், வெள்ளை வேட்டியும், வெளி உலகமும் வந்து சேந்ததே சுயமரியாதை இயக்கம் தோன்றிய 1925 ஆம் ஆண்டுக்குப் பின்னால தாங்க.
2) ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கல்வி கற்பதே குற்றம்னு சொன்ன மனு நீதியின் கவசங்களை உடைத்து அப்பாவ ஊரின் முதல் முதுகலைப் பட்டதாரியா மாத்துனது இதே அண்ணாவின் தலைமயிலான திராவிட முன்னேற்றக் கழகம் கொடையளித்த இட ஒதுக்கீடும், சட்டத் திருத்தங்களும் தாங்க ராசாக்களா.
3) சில நூறு ஆண்டுகளா ஐயரும், ஐயங்காரும், செட்டியாரும், முதலியாரும் இன்னும் பல ஐயாமாரும் மட்டுமே அதிகாரிங்களா இருந்த வருவாய்த் துறைல அப்பாவ சார் பதிவாளரா உக்கார வச்சு அழகு பாத்தது இதே கலைஞரோட திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஒன்றியச் செயலாளரும் தாங்க ராசா.
4) பொருளாதாரச் செழுமையையும், போட்டியிடுகிற மனதையும், நமனை அஞ்சோம் என்கிற துணிவையும் அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த வேலையும், அந்த இயக்கம் அப்பாவுக்குக் கொடுத்த அரசியல் அறிவும் தானேங்க ஐயா எங்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது.
5) அதுமட்டுமில்லைங்கையா, அரசியல்ங்குறது வெறும் அதிகாரச் சண்டையோ, இல்லை, சுரண்டலோ இல்ல, அது ஒரு சக மனிதனின் வலியைப் புரிந்து கொள்கிற வாழ்க்கை முறைன்னு ஈழத்தமிழ் மக்களின் துயரங்களை ஊர் ஊராக புகைப்படக் கண்காட்சி வச்சு அறிமுகம் பண்ணினதும், இலக்கியமும், வரலாறும், இசையும் இன்னும் எல்லாமும் கலந்தது தான் அரசியல் என்கிற வாழ்க்கையோடு அற்புதமான பாடத்தையும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது இப்பவும் "ஊழல்வாதி", ஊழல்வாதி என்று கீறல் விழுந்த ரிக்கார்ட் மாதிரி பினாத்துரீங்களே அதே தலைவர் கலைஞர் தலைமையிலான இந்த சமூகப் பேரியக்கம் தான்லே அப்பரண்டிசுகளா.
6) அதுமட்டுமில்ல, தி.மு.க ல இருக்குறதும், கலைஞரைப் பின்பற்றுவதும் என்னைப் பொருத்தவரை அறிவியல் பூர்வமான வாழ்க்கை முறை, தி.மு.க ன்னு சொன்ன உடனேயே சமூக நீதிக்கு எதிரான எவனும் உடனே எதிர்ப்பான், முக்கியமா பார்ப்பனன், பழிப்பான், கரிச்சுக் கொட்டுவான், குய்யோ, முறையோன்னு கூத்தாடுவான், ஊழல், ஹிந்தி, மொழித் தீவிரவாதம், இட ஒதுக்கீடு அது இதுன்னு நம்மளோட எப்பப் பாத்தாலும் சண்டைக்கு வருவான், அவனோட முட்டி மோதி தில்லா நிக்கும் போது ஒரு தன்னம்பிக்கையும், மிதப்பான அறிவாற்றலும் கூடவே வரும் பாருங்க, அந்த அனுபவத்துக்காகவே கலைஞரை இன்னும் பல தலைமுறைக்கு வழிபடலாம்.
7) அரசியல் மட்டுமில்லை வாழ்க்கை ஒரு தலைவனுக்கு, மொழிய சும்மா வாய் கிழியகெட்ட வார்த்தை போட்டு மேடைல பேசினாப் போதாது, தூசி தட்டி, எழுது உன் இலக்கியத்தை, படி உன் புறநானூற்றை, கற்றுக் கொள் உன் சங்கத்தமிழை என்று நெஞ்சு நிமிர்த்தி எம் உயிருக்கும் மேலான மொழியை எங்கள் கைகளில் தவழ விட்டார் பாருங்க, அதுக்காக நாங்க எங்க போனாலும் அவரைத் தலையில் வச்சுக் கொண்டாடுவோம் அப்பாடக்கர்களா, திரைப்படம், இசை, கவிதை, கதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு என்று அறுபதாண்டு காலம் தொடர்ந்து ஒரு மொழிக்காக உழைக்கிற ஒரு மனிதனை மதிக்கக் கூட வேண்டாம்ல சுய அறிவு இல்லாத குருட்டுப் பசங்களா, வந்தேறி வடுகன்னு வாய் கூசாமச் சொல்றீங்களே, அதுக்காகவாவது அவரை நாங்க வழிபடுவோம்லே.
8) ஒருபக்கம் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கும் பார்ப்பனீய ஊடகங்கள், இப்போது எதிர்க்கும் பார்ப்பன அடிவருடி ஊடகங்கள், இன்னொரு பக்கம் எங்கே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று நம்ம சொகுசு வாழ்க்கைலயும் கை வச்சுருவரோன்னு பயந்து மக்களுக்குக் கிடைத்த நன்மையின் அலைக்கற்றை மானியத்தை 1,76,000 கோடி ஊழல், அது இதுன்னு அடிச்சு விடுற வடநாட்டு முதலாளிகளும், சுப்ரமணிய சாமிகளும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன லாபி, ஊழல் செய்வதற்காகவே ஆட்சி நடத்தும் ஜெயா, அரசியல் அரிச்சுவடியை அவரிடமே படித்து விட்டு இப்போது மக்கள் நலம் அது இதுன்னு அல்டாப் காட்டும் வை.கோ வைப் போன்ற துரோகிகள் என்று பல எதிர்ப்புக்கு இடையேயும் நின்னு விளையாடுற கிழட்டுச் சிங்கத்துகிட்ட தான்லே அரசியல் படிக்க முடியும், ஆத்தாகிட்டப் போயி அடிமைக் கூனா வாங்க முடியும்.
9) வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகிற நக்கலும், நையாண்டியுமாக, நடைமுறைல சாதியையும் மத வேற்றுமைகளையும் கடந்து எல்லா மனிதர்களோடும் தலை நிமிர்ந்து வாழ்க்கையின் ஊடாக ஒரு அழகான பயணம் லே தி.மு.க காரனா இருப்பதும், கலைஞரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும்......
10) எல்லாத்துக்கும் மேலே சொந்த சாதிக் கட்சியை மறந்து, மதங்களைக் கடந்து, மதவாத இந்துத்துவப் பார்ப்பணீயத்தை எதிர்த்து, எளிமையான உழைக்கும் மக்களின் பின்னே நிற்பதும், எனது இஸ்லாமிய சகோதரனின் வாழ்வுக்கு அரணாக எப்போதும் நின்று நான் ஒரு தி.மு.க காரன் என்று சொல்வதும், கலைஞரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒரு நேர்மையான நன்றிக் கடன் கொண்ட மானுட அறிவியல் என்னைப் பொருத்தவரை.
# ஜெயிக்கிறமோ, தோக்குறோமோ, அதெல்லாம் செக்கன்டரி பாஸ், ஓங்கி அடிச்சா சங்கத்தமிழ், ஒய்யாரமா உக்காந்தா புறநானூற்று வீரம், பார்லிமென்ட் போனா ஸ்பெக்ட்ரம் பாமரன் கைக்குப் போகும், அம்பானிக்கும், டாட்டாவுக்கும் போகாது, மொழியையும், இலக்கியத்தையும், சமூக அறிவியலையும், நக்கலையும், நையாண்டியையும் ஒரு அரசியல் கட்சில பாத்துருக்கியா ஒலகத்துல எங்கேயாச்சும், வந்து பார், வந்து பார்...

செவ்வாய், 2 ஜூன், 2015

கலைஞர் பற்றி கவிஞர் வாலி கவிதை



நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்; தமிழ்க்
கடவுளென கண்முன் எழும்
மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!
நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!
மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!
சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?
என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?
உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!
கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!
ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!
பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!
அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர் யோக்கியம்?
சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!
நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது…
தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!
ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!
சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்…
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?
வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!
நீ
‘ஏ.எம்’ முதல்
‘பி.எம்’ வரை
சலிக்காது உழைக்கும்
‘சி.எம்’.
நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!
முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!
நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா
தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!
சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
‘வந்தபின் பார்ப்போம்’ என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
‘வருமுன் காப்போம்’ என்று!
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்
இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
‘டூ’ விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
‘அன்பின் வழியது உயிர்நிலை!’ என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!
மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.
‘அக்கா மகன்’ என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!
அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!
இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!
நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
‘நன்று!நன்று’
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!
பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்…
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்