தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 டிசம்பர், 2014

பணம் என்ற காகிதத்தை பெற...

சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..

திங்கள், 10 மார்ச், 2014

யாருக்கு நிலம் சொந்தம்?

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, "இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

துறவி கேட்டார்,

"இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார்.

"அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அந்த செல்வந்தன்.

"ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

செல்வந்தன், "அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க,

"அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் செல்வந்தன்.

"நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு,

அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, "அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அந்த செல்வந்தன்.

துறவி சிரித்துக்கொண்டே, "நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது, இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா?

என் நிலம்,என் சொத்து,என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர்.
அவர்கள் இப்போது இல்லை.ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது.இது என்னுடையது எனக்கூறும் நீயும்,ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய்.
உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.

செல்வந்தனோ தன் அறியாமை எண்ணி தலை குனிந்தான்.

உலகில் எதுவும் நிலையானது அல்ல.கவுரவம்,பணம்,சொத்து,பதவிஎல்லாம் ஒரு நாள் நம்மை விட்டுச் சென்று விடும்.
அதனால்,அவற்றின் மீது அளவுக்கு மீறி பற்று வைக்க கூடாது.மனதிலிருந்து அகந்தையை தூக்கி எறியுங்கள். அன்புடன் எல்லா உயிர்களுக்கும் சேவை செய்யுங்கள்.
நாம் எல்லோரும் சமம் என்பதை உணருங்கள்.

வியாழன், 6 மார்ச், 2014

அறியவை 33

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

சனி, 19 ஜனவரி, 2013

இதுவும் கடந்து போகும்

"எல்லா காலங்களுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் பொருத்தமாக வழி காட்டக்கூடிய ஒரு சுருக்கமான மந்திரமோ, வாக்கியமோ இருக்கிறதா?" என்று ஒரு சக்கரவர்த்தி தன் சபையில் இருந்த அறிஞர் பெருமக்களைக் கேட்டார்.

சர்வரோகங்களுக்கும் ஒரே நிவாரணி என்கிற மாதிரி அவர் கேட்டதற்கு அந்த அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி சிந்தித்தார்கள். பலரும் பலதைச் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ஒரு சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாகத் தோன்றியது இன்னொன்றிற்கு அபத்தமாகத் தோன்றியது. எனவே அவற்றையெல்லாம் அவர்கள் ஒதுக்கி விட்டார்கள்.

கடைசியில் ஒரு முதிய அறிஞர் ஒன்று சொல்ல அவர்களுக்கு அதுவே சரியான வாசகமாகப் பட்டது. அதை ஒரு காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்தனர். "அரசே! நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இதில் உள்ளது. ஆனால் இதை நீங்கள் இப்போது படிக்கக் கூடாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக இக்கட்டான சூழ்நிலையில் தான் எடுத்துப் படிக்க வேண்டும்" என்றனர்.

சக்கரவர்த்தியும் அதை ஏற்றுக் கொண்டு அதை ஒரு வைர மோதிரத்தின் அடியில் வைத்துக் கொண்டு அதை விரலில் மாட்டிக் கொண்டார். சில காலம் கழித்து பக்கத்து நாட்டுடன் போர் மூள அந்தச் சக்கரவர்த்தி போரில் படு தோல்வி அடைந்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தப்பியோட வேண்டியதாயிற்று. எதிரிப்படையினர் துரத்தி வர ஒரு காட்டுப் பாதையில் ஓடிய சக்கரவர்த்தி ஓரிடத்தில் அப்பாதை முடிந்து ஒரு பெரிய பள்ளத்தாக்கு தான் அதற்குப் பின் இருந்ததைக் கண்டார். மேலே போக வழியில்லை. பின் செல்லவும் வழியில்லை. தொலைவில் எதிரி வீரர்கள் வரும் காலடி ஓசை வேறு கேட்டது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று கலங்கிய சக்கரவர்த்திக்கு அந்த அறிஞர்கள் தந்த வாசகம் பற்றிய நினைவு வர வைர மோதிரத்தினடியில் இருந்த அந்த காகிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் எழுதியிருந்தது - "இதுவும் கடந்து போகும்". அதை மீண்டும் படித்தார். மனதில் பொறி தட்டியது.

சில நாட்களுக்கு முன் அவர் பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். எல்லா செல்வமும், படைபலமும் அவரிடம் இருந்தன. அவை எல்லாம் இன்று அவரைக் கடந்து போய் விட்டன. இன்று தோல்வியும், தனிமையும் மட்டுமே இருக்கின்றன. இதுவும் ஒரு கட்டத்தில் போகுமல்லவா?.... சிந்திக்க சிந்திக்க சொல்லொணா அமைதி அவரை சூழ்ந்தது. லேசான மனதுடன் எதிரிகளை எதிர்நோக்கி நின்றார். ஆனால் எதிரி வீரர்கள் காட்டின் மற்றொரு பாதையைத் தேர்ந்தெடுத்து அவரைத் தேடுவது, குறைந்து வந்த அவர்கள் காலடியோசை மூலம் தெரிந்தது.

கடைசியில் தப்பித்து தன் நேச நாடுகளின் உதவி கொண்டு மீண்டும் படைகளைத் திரட்டி போரிட்டு எதிரிகளைத் தோற்கடித்து அவர் பெருவெற்றி பெற்றார். நாட்டு மக்களின் வாழ்த்தும், வெற்றி வாகை சூடிய பூரிப்பும் சேர்ந்த போது அவருக்கு மனதில் கர்வம் வந்தது. "அப்படி சுலபமாக நான் விட்டுக் கொடுத்து விடுவேனா? என்னை வெல்வது யாருக்கும் சாத்தியமா?". அந்த எண்ணம் வர வர சூரிய ஒளிபட்டு அவர் வைர மோதிரம் பளீரிட்டது. படிக்காமலேயே அந்த செய்தியை அது நினைவூட்டியது. "இதுவும் கடந்து போகும்". அந்தக் கணத்தில் அவர் கர்வம் நீங்கியது. அன்றிலிருந்து அவர் வாழ்க்கையில் அந்த வாக்கியம் தாரக மந்திரம் ஆகியது. அமைதி குறையாத அரசரென அவர் எல்லோராலும் பாராட்டு பெறும்படி ஆட்சியையும் வாழ்க்கையையும் நடத்தினார்.

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா? வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.

சனி, 24 மார்ச், 2012

நாம் வழிப்போக்கர்கள்

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மீகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். 'சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?'

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு 'நீ உன் கையைக் காட்டு' என்றார். 
அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். 
அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் 'உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது'

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற் குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். 

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். 'நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.' 

ஏகநாதர் சொன்னார். 'நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷய மாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்' என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார். 

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை. 

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது. 

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காண முடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன? 

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப் பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம். 

வாழ்க்கையில் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழவேண்டும். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யவேண்டும். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடக்கூடாது. நாமே நிரந்தரமல்ல என்கிற போது நம் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? 

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்ய முயற்சிப்போம். இது வரை நாம் படித்த/ அனுபவ சாலிகள் சொன்ன பாடங்களைப் புரிந்துகொண்டு சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், 

நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடக்கூடாது. ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்! இது தான் உண்மை.. 

திங்கள், 24 அக்டோபர், 2011

மூன்றுண்டு

மிகக் கடினமானவை மூன்றுண்டு
1. இரகசியத்தை காப்பது.
2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.
3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.

நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்
1. இதயத்தால் உணர்தல்.
2. சொற்களால் தெரிவித்தல்.
3. பதிலுக்கு உதவி செய்தல்.

பெண்மையை காக்க மூன்றுண்டு
1. அடக்கம்.
2. உண்மை.
3. கற்பு.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு
1. சென்றதை மறப்பது.
2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.

இழப்பு மூன்று வகையிலுண்டு
1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.
2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.
3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.

உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்
1. அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.
2. அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.
3. அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.