இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இல்லறம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மனைவியிடம் பேசுங்கள்...!!! - திருச்சி சிவா

- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது.

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு.

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன்.

ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....

# ஒவ்வொரு கணவனும் படிக்கவேண்டிய பதிவு....

முக்கியமாக அரசியல்வாதிகள் என்றால் அசால்டாக பேசிவிடும் அனைவரும் படிக்கவேண்டிய பதிவு.... ஒரு அரசியல்வாதியின் வாழ்வில் அவர்கள் இழப்பது என்னவெல்லாம் என்பதை வாழ்வின் வலியை உணர்பவர்களால் மட்டும் நன்கு புரிந்துகொள்ளமுடியும்...

சனி, 19 மே, 2012

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?


கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவுசெலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

* 1. வருமானம்
* 2. ஒத்துழைப்பு
* 3. மனித நேயம்
* 4. பொழுதுபோக்கு
* 5. ரசனை
* 6. ஆரோக்கியம்
* 7. மனப்பக்குவம்
* 8. சேமிப்பு
* 9. கூட்டு முயற்சி
* 10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

* 1. அன்பாக பிரியமாக இருக்க வேண்டும்.
* 2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
* 3. கோபப்படக்கூடாது.
* 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
* 5. பலர் முன் திட்டக்கூடாது.
* 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
* 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
* 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
* 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
* 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்மதிக்க வேண்டும்.
* 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
* 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தைகுடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
* 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
* 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
* 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
* 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
* 17. ஒளிவு மறைவு கூடாது.
* 18. மனைவியை நம்ப வேண்டும்.
* 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
* 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
* 21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
* 22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
* 23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
* 24. சின்னசின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
* 25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* 26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
* 27. அம்மாவிடம் காட்டும் பாசத்தைமனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விடஅக்காதங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
* 28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
* 29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* 30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
* 31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
* 32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
* 33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
* 34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* 35. பொய்சூதுமதுமாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
* 36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
* 37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

* 1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
* 2. காலையில் முன் எழுந்திருத்தல்.
* 3. எப்போதும் சிரித்த முகம்.
* 4. நேரம் பாராது உபசரித்தல்.
* 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
* 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
* 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
* 8. அதிகாரம் பணணக் கூடாது.
* 9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன்தம்பி பிரிப்பு கூடாது.
* 10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
* 11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
* 12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
* 13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
* 14. வீட்டுக்கு வந்தவுடன்சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
* 15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
* 16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
* 17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
* 18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
* 19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
* 20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* 21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* 22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
* 23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
* 24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
* 25. அடக்கம்பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடைஅலங்காரம் செய்ய வேண்டும்.
* 26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
* 27. சுவையாகச் சமைத்துஅன்புடன் பரிமாற வேண்டும்.
* 28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* 29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* 30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன்பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
* 31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
* 32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்கசுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் ,அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டிஅரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .நீ ராசா அல்லவாராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். மக்குமண்டுமண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம்கூச்சமின்றிஉறுதியான நெஞ்சம்உண்மையான பேச்சுஉயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

* 1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
* 2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
* 3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
* 4. விரும்பியதைப் பெற இயலாமை.
* 5. ஒருவரையொருவர் நம்பாமை.
* 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
* 7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
* 8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
* 9. விருந்தினர் குறைவு.
* 10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
* 11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
* 12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
* 13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
* 14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்கதான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

* 1. அன்பாகப் பேசுவது
* 2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
* 3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
* 4. குறை கூறாமல் இருப்பது.
* 5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
* 6. இன்முகத்துடன் இருப்பது.
* 7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
* 8. பிறரை நம்புவது.
* 9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
* 10. பணிவு
* 11. எதையும் எடுத்தஉரிய இடத்தில் வைப்பது.
* 12. பிறர் வேலைகளில் உதவுவது.
* 13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
* 14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
* 15. சுறுசுறுப்பு
* 16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
* 17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
* 18. நகைச்சுவையாகப் பேசுவது.
* 19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
* 20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
* 21. நேரம் தவறாமை.
* 22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
* 23. தெளிவாகப் பேசுவது.
* 24. நேர்மையாய் இருப்பது.
* 25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமாபல நேரங்களில் பகையும்பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும்இரத்த அழுத்தம்நரம்புத் தளர்ச்சிதீராத கவலைஅமைதியின்மை,மதுசிகரெட் பழக்கம்தூக்க மின்மைஒத்துப்போக இயலாமை உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலைநாம் மகிழ்வாக இருக்கநம்மால் பிறரும் மகிழச்சி பெற பிறர் நம்மை விரும்பபிறர் மத்தியில் நம் மதிப்பு உயரபிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

* 1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
* 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
* 3. இன்சொல் கூறி நான்எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
* 4. உணர்வுகளை மதிக்கவும்மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* 5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
* 6. எப்போதும் பேசுவதைக் கேட்டுபின்விளைவை யோசித்து சரியான சைகைமுகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
* 7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
* 8.ஐங்குணமாகிய நகைச்சுவைநேர்மைசமயோசிதம்இன்முகம்விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
* 9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
* 10.ஓஹோஇவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்.

புதன், 7 மார்ச், 2012

புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே திருத்திக்கொள்ளுங்கள்....

இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.

நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.

கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.

அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.

ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.

தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.

கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.

இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!