கவிஞர் வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞர் வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூன், 2015

கலைஞர் பற்றி கவிஞர் வாலி கவிதை



நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும்; தமிழ்க்
கடவுளென கண்முன் எழும்
மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில்-ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!
நூற்கடல் முத்துவேலர்-ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுகத்தன்னை
பயந்தநல் அமுதமே!
மடமையில் உறங்கும்-இந்த
மண்விழிக்க வேண்டி-ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!
சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்!உன்
தகவு அடங்குமோ-என்
தமிழுக்குள்?பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ-சின்ன
சிமிழுக்குள்?
என்னிடத்தில்
ஏது-உன்
சீர்த்தியைச்சுட்ட-ஒரு
சொற்குறி?
உன்
விஷயத்தில்
தலைவா!நானொரு
தற்குறி!
கறுப்பு சிவப்பு
கரைகொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதயசூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல்படித்து-உன்னுள்
இடம்பிடிக்கும் உடன்பிறப்புக்களின்
இதயசூரியனே!
ஞான
ஞாயிறே!
உனக்குஉண்டு சுத்தமனம்;
உனக்குஉண்டு ஒத்தமனம்;
உனக்குஉண்டு யுத்தமனம்;
உனக்குஇல்லை அத்தமனம்!
பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!
அணுவளவும் குறையாது-உன்
ஆரோக்கியம்!முன்னம்
அரசாண்டவர்களில்-உன்னைவிட
ஆர் யோக்கியம்?
சிலர்
வாழ்ந்த வாழ்வை-அவர்களது
வண்டவாளம் சொல்லும்;உன்
தியாகவாழ்வை-கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!
நிச்சயம்-நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது…
தீர்க்கசுமங்கலியாம்
தயாளுஅம்மாளின்
தாலிபாக்கியம்;அதுவே இந்த
வாலி பாக்கியம்!
ஊராளும்
உத்தமனே!
உன்பெயர் சொல்லி-தன்
உச்சந்தலையில்-தினம்
பூசாத்திமகிழும்-பெண்ணரசி
ராசாத்தி துணைவா-இரு
நங்கையர் திலகங்களுக்கும்-நீ
நெடுங்காலம் துணைவா!
சிம்மாசனத்திலும்;தமிழ்ச்
சனத்தின் மனத்திலும்…
கொலுவமர்ந்து-செங்
கோலோச்சும் தலைவா!
உனக்கும் சோம்பலுக்கும்
ஓராயிரம் கல் தொலைவா?
வேலையில் மூழ்கிவிட்டால்-உன்
விழிகள் தூங்கா;
நாட்டவர்நலத்தை-உன்
நினைப்புகள் நீங்கா;உன்
கோட்டை மேசையில்
கோப்புகள் தேங்கா;உன்னால்
ஆனதய்யா-தமிழ் பூமி
அமைதிப்பூங்கா!
நீ
‘ஏ.எம்’ முதல்
‘பி.எம்’ வரை
சலிக்காது உழைக்கும்
‘சி.எம்’.
நீ தேசுமிகு-தமிழ்த்
தேயம்-தனைக்காக்கச்
சிலிர்த்து நிற்கும்
சீயம்!
முத்தமிழ் வித்தகமே!கால்கள்
முளைத்து நடக்கும் முப்பால் புத்தகமே!
நீ
நாடாளுகின்றாய்
நான்காம் தடவை
உன்னை இனி
வெல்லுமோ புடவை!
நிச்சயம்
நாளைய தேர்தல்-இந்த
நான்கை ஆக்கும் ஐந்தா!நீயே தான்
அடுத்த முதல்வன்
அஞ்சுகம் மைந்தா
தலைமுறை
தலைமுறையாய்த்
தலைவனாயிருந்தும்
தலைகனக்காத விந்தையே-மாநகரத்
தந்தையின் தந்தையே
உன்னால் தான் உண்டானது
உழவர் சந்தையே;இனி
உழவர் பெருமக்கள்-
உடுக்கமாட்டார் கந்தையே!
சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா!உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
வசவாளர்கள் உன்மேல்
வீசுகின்ற நிந்தையே!
சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
‘வந்தபின் பார்ப்போம்’ என்று;
வள்ளலே!நீ தான் சொன்னாய்
‘வருமுன் காப்போம்’ என்று!
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்;அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்
இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்;இது காறும்
‘டூ’ விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
நாடாளும்
நல்லவனே
நீ
சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
‘அன்பின் வழியது உயிர்நிலை!’ என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!
மாண்புமிகு மாறனின்
மற்றொரு தாயே! உன்
அன்பினாலன்றோ தீர்ந்தது
அன்னவன் நோயே.
‘அக்கா மகன்’ என்ற அளவிலா
அன்பு காட்டினாய்?நீயே பெற்ற
பக்காமகன் என்று அல்லவோ
பாசம் ஊட்டினாய்!
அந்நாளில்-உன்னை
அனேகம் பேர் அழைப்பர்-உன்
முழுப்பெயர் சொல்லாமல்-
‘மு.க,,மு.க’ என்று.
பிறகு தான் எனக்குப்
புரிந்தது-நீ
முத்தமிழர் மூச்சுவாங்கும்
மூக்காயிருக்கிறாய் என்று!
இனிய தலைவனே!நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!
நீ
வாலறிவன்;உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
‘நன்று!நன்று’
எனக்களித்தாய்;இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!
பெரியவனே!நீயெனைப்
பெரும்புகழ் என்னும்…
தொட்டிலில் போட்டுத்
தாலாட்டும் தாயானாய்;நான்
வாழ்நாளெல்லாம் நன்றியோடு
வாலாட்டும் நாயானேன்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அப்பன் காட்டிய வழி

அஞ்சாங் கிளாஸ் படிக்காத
அப்பா -
I.A.S. படித்த அதிகாரியை
ஆட்டிப் படைப்பதை
அருகிருந்து பார்த்த
அமைச்சரின் மகன்...
ஜனநாயகத்தின்
சக்தியை புரிந்து கொண்டு
பள்ளிப் படிப்பிற்கு - முற்றுப்
புள்ளி வைத்து விட்டு...
சோடா பாட்டில் அடித்தல்;
சைக்கிள் செயின் சுழற்றுதல்;
உருட்டுக் கட்டை உபயோகித்தல்
ஆசிட் பல்பு வீசியெறிதல் -
ஆகிய...
ஆயகலை அனைத்தையும்
ஐயந்திரிபறக் கற்று -
அடுத்த தேர்தலுக்கு
ஆயத்த மானான்!
~ கவிஞர் வாலி

சனி, 19 ஜூலை, 2014

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

எழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி 



பாடம் பயில நான் 
பள்ளிவாசல் புகுந்த 
பிராயந்தொட்டு தொழுகை புரிய 
பள்ளிவாசல் 
புகுவாரோடு பழகி நின்றவன்! 
அவர்களது அன்பை ஆரா 
அமுதமாய் தின்றவன் ! 

என் ஒவ்வொரு பருவத்திலும் 
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள் 
இஸ்லாமிய இனத்தவர் 
அவரெலாம் - தண்ணீர் கலவா 
தாய்ப்பால் மனத்தவர் ! 

இன்றைய என் ஏற்றம் 
அவர்களிட்ட பிச்சை 
இதைச் சொல்ல 
எனக்கில்லை லஜ்ஜை ! 

எல்லா சமயமும் 
எல்லாச்சமயமும் 
பேசுவது அன்பு 
பேணுவது அறம் இதை 
ஒர்ந்தார்க்கு இயல்பாகக் 
கைவரும் சமயப் பொறை 
எனும் இமயப் பொறை ! 
இந்தப் பொறை 
இருப்பின் இச்சமயம் 
அச்சமயம் 
என எச்சமயமாயினும் 
எவரும் 
அச்சமின்றி வாழலாம் என்பதை 
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை ! 

கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய் 
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல் 
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி 
விழிப்புனலை வடித்தவன் ! 

அருளார்ந்த அத்தனும் அன்னையுமான 
அப்துல்லாவும் ஆமினாவும்
 இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
 அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும் 
மக்கள் மனங்களில் மீந்தனர் ! 

அண்ணலார் அவர்கள் என்பு தோல் 
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் ! 
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி ! 
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் ! 
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல் 
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை ! 
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின் 
மொத்தக் குழுமம் 
தகிக்கும் பாலையில் 
தவிக்கும் வேர்களுக்கான 
தண்ணீர்த் தடாகம் ! 
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க 
வந்த பூந்துவாலை ! 
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை 
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை ! 
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் ! 
சுருங்கச் சொன்னால் 
அண்ணல் நபிகளார் அவர்கள் 
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை ! 
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் ! 
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் ! 
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல் 
எட்ட முடியாதவர் ! 

பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல் 
குகை புகுந்த குணாளரை 
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி ! 
அது - வாய் நூலால் குகைக்கு 
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி ! 
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை 
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது 
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது ! 
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம் 
சொல்லச் சொல்ல இன்னும் 
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....


.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007 
நன்றி: அபு ஹாசிமா