ஏம்பல் தஜம்முல் முஹம்மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏம்பல் தஜம்முல் முஹம்மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூன், 2015

அறிந்து கொள்ளுங்கள் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முகம்மது பற்றி:





சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், புதுக்கோட்டை கலைமான் அறக்கட்டளை, திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture முதலிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களின் விருதுகளைப் பெற்றவர். கவிஞர்,எழுத்தாளர்,நூலாசிரி
யர்,ஆய்வாளர்,பதிப்பாசிரியர்,சொற்பொழிவளர் எனத் தனித்தன்மையோடு இயங்கிவருபவர்.
இவருடைய முதல் நூலான ”வீரம் செறிந்த இஸ்லாம்”, இஸ்லாம் மார்க்கத்தின் பார்வையில் ஒரு தத்துவத்தை வரலாற்றின் அடிப்படையில் இலக்கியத் தரத்தோடு தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு நூலாக வழங்கியமைக்காக சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் விருது பெற்றதாகும்(1987).

உலக இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள- வரலாற்று விற்பன்னர் தாமஸ் கார்லைலின் புகழ்பெற்ற “On Heroes and Hero-Worship and the Heroic in History” என்ற நூல் 1840-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவாகும்.இந்த நூலின் “The Hero as Prophet-Mahomet : Islam" என்ற தலைப்பிலான இரண்டாவது அத்தியாயத்தை “தூது வந்த வீரர்” என்ற தலைப்பில் மூல மொழியான ஆங்கிலப் பதிப்புகளில் கூட இடம் பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட விளக்கக் குறிப்புகளுடன் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக முதன்முதலாக 1994-இல் வெளியிட்ட பதிப்பாசிரியர் ஏம்பல் தஜம்முல் முகம்மது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இளவரசர் சார்லஸ் 1993-இல் “Islam and the west” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவையும் “இஸ்லாமும் மேற்கு நாடுகளும்” என்ற தலைப்பில் நூலாக வெளிக் கொணர்ந்தார். இவ்விரண்டு நூல்களுடன் இவருடைய கவிதைகள்-பாடல்களின் தொகுப்பான “நிழலில்லாத சூரியன்” என்ற நூலையும் 1994-இல் வெளியிட்டார்.

இந்தியத் திருநாட்டின் பொன்விழா ஆண்டு நினைவாக ஆகஸ்ட்,1998-இல் ”இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்” என்ற ஆய்வு நூலை ஏம்பல் தஜம்முல் முகம்மது எழுதினார்.இந்த நூலை `திருவருட்பேரவை’எனும் சமய நல்லிணக்க அமைப்பின் தலைமையில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டதன் மூலம் இந்த நூல் பெரிதும் சிறப்பிக்கப்பட்டது.(இந்த நூற்பணிக்காக `சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்’ என்ற விருதினை இஸ்லாமிய இலக்கியக் கழகம் தன்னுடைய திருச்சி மாநாட்டில் வழங்கிச் சிறப்பித்தது.) இந்த நூல் சர்வ சமயச் சான்றோர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு “Religious Harmony – an Islamic Doctrine” என்ற தலைப்பில் ஒரு தனிச்சிறந்த பதிப்பாக வெளியானது. பின்னர் இந்த நூலுக்கு திருச்சி இனாம்குளத்தூர் Islamic Research Centre of Scripture & Culture என்ற நிறுவனம் விருது கொடுத்துச் சிறப்பித்தது.[` Religious Harmony-An Islamic Doctrine’ is included in UNESCO’s index translationum.(S.No. 41/48) and used in American editions as a reference book.]. ”திருக் குர்-ஆனில் பிற சமய மதிப்பீடுகள்-Quranic View of Other Religions”-என்ற ஆய்வேடு அகில இந்திய அளவிலான ஒரு மாநாட்டில்(The All India Seminar on Interpreting the Scriptures, Hermeneutics of Sacred writings organized by The School of Religions, Philosophy & Humanist Thought, Madurai Kamaraj University, under the auspices of DRS – SAP – UCG.) சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் நூலாகவும் வெளிவந்தது.ஏம்பல் தஜம்முல் முகம்மது சமய நல்லிணக்கம் என்ற கொள்கையை விளக்கும் விதத்தில் மூன்று நூல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவை தவிர நான்கு பாட நூல்கள், வரலாற்று நூல்கள் உட்பட மொத்தம் பதினாறு நூல்களும் `நடுநிலையான மொழிக் கொள்கை’,`தமிழுள்ள தமிழ்’ முதலான பல ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


தகவல் : Mohamed Ali

திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரிகளைக் குறைத்து மக்களை வாழ்வித்த மன்னர் அவ்ரங்கஸீப்!

ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வரும் முன்னர் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அவற்றைச் சொன்ன நினைவே இல்லாதது போல் நடந்துகொள்வதும் பல முறை மக்கள் பட்டு அனுபவிப்பதுதான்....
அவ்ரங்கஸீப்(ரஹ்…) அவர்கள் தாம் ஆட்சிக்கு வந்த உடனே ஏற்கனவே பலகாலமாக இருந்து வந்த சுமார் 80வகை வரிகளைத் தாமாகவே நீக்கி ஆச்சர்யப்படுத்தியவர்.
அவை ஆறுவகைப்படும்.அவற்றுள் இந்து சமய மக்களின்மீது விதிக்கப்பட்ட வரிகள் குறிப்பிடத் தக்க ஒருவகை. (ஆதாரம்:அறிஞர்கள் காஃபீகான் ,மனுச்சி& மோர்லாந்த் மற்றும் Sarkar in Mugal Administration,ref.from “Mirat-I Alam”)
அவர் நீக்கிய வரிகளின் நீண்ட பட்டியலில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சில :-
1. கங்கையில் நீராடும் யாத்ரீகர் ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட ஆறேகால் ரூ.வரி;
2.எரிக்கப்பட்ட சடலங்களின் அஸ்தியை கங்கையில் கரைக்க விதிக்கப்பட்ட வரி;
3.வட்டி இல்லாக் கடன்கள் மீது விதிக்கப்பட்ட வரி (அவர் காலத்தில் மக்களுக்கு அரசு வழங்கிய கடன்களுக்கு வட்டி இல்லை );
4. கீழ்ஜாதி இந்து விதவையைத் திருமணம் செய்துகொண்டால் செலுத்த வேண்டிய வரி.
5.தீபாவளி,பரா அத் இரவுகளில் செய்யப்பட்ட விளக்கு அலங்கார வரி .
6.முஹ்தர்ஃபா’ எனும் தலை வரி; 7.பாதிப்புக்குள்ளான நிலங்களுக்கான வரி.
8.கைத்தறி துணிகள் மீதான வரி;
9.தாசில்தார் வரி…. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)


இந்தியாவின் நாணய மதிப்பை உயர்த்திக் காட்டிய மன்னர் அவ்ரங்கஸீப்!








ஆங்கஸ் மேடிஸன் என்னும் பொருளாதார வரலாற்று அறிஞர் அண்மைக் காலத்தில் எழுதிய நூல்கள் மற்றும் ஆய்வேடுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட முந்திய பதிவிற்கு நட்புநூல் சகோதரர்கள் காட்டிய ஆர்வம் அசாதாரணமானது! அல்ஹம்துலில்லாஹ்.
அவர் காலத்திற்கு முன்னரே எழுதப்பட்ட“History of India as told by its own Historians vol-2” (எலியட் & டாவ்ஸன்) என்ற நூலில் இருந்து:- அவ்ரங்கஸீப் காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு,இங்கிலாந்தின் நாணய மதிப்பைவிட அதிகமாக இருந்தது.
அதாவது 01பவுனுக்கு 08 இந்திய ரூபாய். (பவுன்,ஷில்லிங்,பென்ஸ் என்பன இங்கிலாந்து நாணய முறை)
[பெர்னியர்,தேவ்னோ, பக்த்வார்கான், மனுச்சி, ரமூசியோ ஆகிய வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் மற்றும் தஸ்தூர் அமல்(அரசுக் கையேடு) ஆகியவற்றின் அடிப்படையில்] அவ்ரங்கஸீப்பின் ஆட்சிக்கால ஆண்டு வருவாய் 20,32,80,000 முதல் 34,84,00,000 கோடி ரூ. வரை உயர்ந்தே வந்துள்ளது.
“Land Revenue Administration under the Mughals”- என்ற நூலில் மாநிலவாரியான வருவாய் விவரங்கள் 164 முதல் 171வரை உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளன.
நிலவரி வருவாயும் ஏற்றுமதி-இறக்குமதி வருவாயும் அரசின் முதன்மையான வருவாய்களாக இருந்துள்ளன.
----------------------------------------------------------
படத்தில்: அவர் காலத்து தங்க,வெள்ளி,செப்பு நாணயங்கள்.

இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசாக ஆக்கிக் காட்டிய மன்னர் அவ்ரங்க ஸீப்!


”அகன்ற பாரதத்தை அமைத்தவர் யார்?-அதை
அழகாய் ஆட்சி புரிந்தவர் யார்?
மொகலா யர்களின் வழியினில் வந்த
முஸ்லிம் அவ்ரங்க ஸீப் அல்லவா?”
---இது நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாடல் ஒன்றின் பகுதி.
அவர் ஆட்சியின் சிறப்புகளில் ஒன்று:-
”கி.பி.1700-இல் மொகலாயப் பேரரசர் அவ்ரங்க ஸீபின் ஆட்சிக் காலத்தில் அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.அதனால் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது….அவ்ரங்கஸீபால் மீட்கப்பட்ட இந்தியாவின் உலகின் பொருளாதார வல்லரசு என்ற அந்தஸ்து,அதற்குப் பிறகு வந்த எந்த ஆட்சியாளர்களாலும் இன்னமும் சாதிக்கப்படாமல் கிடக்கிறது…”
---ஆங்கஸ் மேடிஸன் என்னும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொருளாதார வரலாற்று அறிஞர் எழுதிய ஆய்வு நூல்களை மேற்கோள் காட்டி தி இந்து (17-02-2015) நாளிதழில் `பொருளாதாரம் அறிவோம்’ பகுதியில் த. நீதிராஜன்.
நன்றி திரு த. நீதிராஜன் அவர்களே.

சனி, 20 டிசம்பர், 2014

கவலைப்படாதே சகோதரா...!

சகோதரா,
உன் தலையில் கொம்பு இல்லையா?
உன் மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் வீசவில்லையா?
”திருமண வீடுகளில் மணமகனாகவும் இழவு வீடுகளில் பிணமாகவும்”
இருந்து முக்கியத்துவம் தேடுவதிலேயே முனைப்பாக இருப்பவர்கள் போல இல்லாத, பிழைக்கத் தெரியாதவன் நீ என்று பேசுகிறார்களா?
உன் யதார்த்தத்தை எளிதாக எண்ணி ஏளனம் பேசுகிறார்களா?
உன் முயற்சிகள் வெற்றி பெறாதவை போலச் சில நேரங்களில் தோன்றுகின்றனவா?
இந்தச் சமூகமும் நாடும் உலகமும் யாரோ சிலருக்கு எழுதிவைக்கப்பட்டு அவர்கள் விருப்பங்கள் மட்டுமே அரங்கேறுவன போல் தோன்றுகிறதா?
சகோதரா,
எதைப் பற்றியும் கவலைப் படாதே!
உன்னுடைய முக்கியத்துவத்தை நீ உணராதிருக்கிறாய் என்பதை முதலில் உணர்வாயாக!
எல்லா உலகங்களையும் படைத்த அல்லாஹ்தான் உன்னையும் படைத்தான்!
`எறும்பும் தன் கையால் எட்டுசாண்’ என்பதை நீ அறியாயா?
இயன்றதைச் செய்!
முயன்றுகொண்டிரு!
இறைவன் எல்லாம் அறிந்தவன்!
அல்லாஹ்வை நம்பியவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
`நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’போல உள்ள ஒருசிலர் உன்னுடன் இருந்தால் போதும்.உன் படைப்பின் நோக்கத்தை இறைவன் நிறைவேற்றிவிடுவான்.
அவர்களையும் அவனே கொண்டுவந்து சேர்ப்பான்...!
உனக்கொன்று தெரியுமா?
இறைநம்பிக்கையாளன் பிறந்ததிலிருந்தே அவனை வெற்றிகள் தொடர்கின்றன!அவன் வெற்றிகளை நோக்கி மட்டுமே நடத்தப் படுகிறான்!
உள்நோக்கம் நிறைந்தது உலகம்.அதில் உன் நோக்கம் தூயது என்றால் தோல்விபோலப் பிறருக்குத் தோன்றுவதிலிருந்தும் வெற்றியே வெளிப்படும் என்பது அனுபவ ரகசியம்.சிந்திக்கும் அனைவரும் உணரக் கூடிய செய்தியே இது.
அலெக்ஸாண்டரைப் போல அனைவருமே உலகை வெல்லப் புறப்பட வேண்டிய அவசியமில்லை.அவன் அதில் வெற்றிபெறவுமில்லை.
உலகில் உனக்குரிய இடம்,உனக்குரிய வெற்றிகள் எவை என எண்ணிப்பார்...இறைவன் உன்னோடு ரகசியம் பேசுவதை உணர்வாய்....
இயன்றதைச் செய்!
முயன்றுகொண்டிரு!
`எறும்பும் தன் கையால் எட்டுசாண்’
நீ இறைநம்பிக்கை என்னும் வில்லில் இருக்கும் நாண்.
உன்னில் ஏற்றப்பட்டு வெளிப்பட இருக்கும் அம்புகளுக்காக
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் காத்திருக்கின்றன....!

 - ஏம்பல் தஜம்முல் முஹம்மது

திங்கள், 21 அக்டோபர், 2013

பன்னூலாசிரியர் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்கள் மறைந்தார்...

“இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,”மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள்” முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது
தம்பி அவர்கள் தம்முடைய எழுபத்து ஒன்பதாம் வயதில் கடந்த 17-10-2013-ஆம் நாள் மஃரிப் வேளையில் மதுரை மருத்துவமனை ஒன்றில் காலமானார்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)அவருடைய ஜனாஸா மறுநாள் ஜும்ஆவுக்குப் பிறகு அவர் பிறந்த ஊரான திண்டுக்கல்லில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் முன்னோர் கேரள மாநிலம் புதூரைச் சேர்ந்தவர்கள்.மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்;தமிழ் மண்ணோடும் மக்களோடும் ஒன்றாய்க் கலந்துவிட்டவர்கள் ஆவர்.திண்டுக்கல்லில் இருந்து குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது இவரும் இளமையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்.தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை சென்னையிலேயே பயின்ற இவருக்கு புதுக்கல்லூரியில் பயின்றபோது சிராஜுல் மில்லத் சீனியர் மாணவராக அறிமுகம் ஆனார்.அவருடைய தொடர்பு,பின்னாளில் முஹம்மது தம்பி அவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட ஒரு தொடக்கமாக அமைந்தது.

கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர்,ஃபார்மசி படித்துவிட்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் ’தம்பி மெடிக்கல்ஸ்’ என்ற பெயரில் பிரபலமான ஆங்கில மருந்துக் கடை ஒன்றை இவர் நடத்திவந்தார்.என்றாலும் இவர் மார்க்கத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்ததாலும் இவருக்கிருந்த எழுத்து,படிப்பு ஆகியவற்றின் மீதான ஈடுபாட்டாலும் அன்று புகழ்பெற்று விளங்கிவந்த எழுத்துலக வல்லவர்களான சையிது முஹம்மது ஹஸன்,எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் முதலியோருடனான தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.குறிப்பாக எம்.ஆர்.எம்.அவர்களுடனான தொடர்பு இவரைப் புத்தகத் துறையில் பெரிதும் ஈடுபாடுகொள்ளச் செய்தது.தாமே புத்தகம் எழுத வேண்டும் என்ற இவருடைய விருப்பத்தை எம்.ஆர்.எம் அவர்களிடம் இவர் தெரிவித்தபோது,ஏதேனும் ஓர் ஆக்கத்தை எழுதிவந்து காட்டுமாறு பணித்துள்ளார்.அவ்வாறே எழுதிக் காட்டிய ஆக்கத்தைக் கண்ணுற்ற எம்.ஆர்.எம். அவர்கள்,”எந்தத் திருத்தமும் தேவை இல்லை;எழுதியவாறே வெளியிடலாம்” என்று நற்சான்றும் இஜாசத் என்னும் அனுமதியும் அளித்துள்ளார்.அன்று தொடங்கிய முஹம்மது தம்பி அவர்களின் எழுத்துப் பயணம்,அவருடைய மூன்றாவது ஹஜ் பயணத்திற்குப் பிறகு(1978) சிறப்பாக வெளிப்படலானது.

தமிழ், மலையாளம்,உர்தூ,ஃபார்சி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவருக்கு இருந்த அறிவு,இவருடைய மார்க்க நூல்களைச் செழுமைப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.இவர் எழுதிய வரலாற்று நூல்கள்-குறிப்பாகக் கலீஃபாக்களைப் பற்றியவை-அரிய செய்திகளுடன் நல்ல முறையில் தொகுக்கப்பட்டவை ஆகும்.

இறை நம்பிக்கையாளர்களின் அமல்கள் சிறப்பாக,முழுமையாக அமைய வேண்டும் என்ற நோக்கில் சிற்சில சிறிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.அவை நல்ல கையேடுகளாக விளங்கிவருகின்றன.அவற்றுள் ஒன்றை ஹஜ் உம்ரா செய்பவர்களின் கைகளில் நான் கண்டுள்ளேன்.

பக்தியும் ஆன்மீக ஈடுபாடும் மிக்க இவர் எழுதிய “இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,படித்த எல்லாருடைய உள்ளங்களையும் கரைத்த நூலாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர்,ஆலிம்கள் பாராட்டிய எழுத்தாளர் ஆவார்.

ஹிரா மலைக் குகையில் இருந்து கஃபாவைக் கண்டு மகிழ்ந்ததை என்னிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டவர் இருவர். ஒருவர்,”நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்னும் காப்பிய நூலின் ஆசிரியர் ஆலிம் கவிஞர் ஜி.எம்.எஸ்.சிராஜ் பாக்கவி அவர்கள்;மற்றொருவர் எம்.எஸ்.எம்.முஹம்மது தம்பி அவர்கள்.இவர் மூன்று முறை ஹஜ்ஜும் மூன்று முறை உம்ராவும் செய்துள்ளார்.மூன்றாவது உம்ராவைக் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கொண்டார்.

இவர்,ஆறு ஆண் மக்களுக்கும் ஐந்து பெண் மக்களுக்கும் தந்தையாகி வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஆவார்.அல்லாஹ்வுடைய நாட்டப்படி உலக வாழ்வை நீத்துவிட்ட இவர்,அறிவுலகில் தாம் எழுதிய அறிவார்ந்த நூல்களால் நம்மோடு வாழ்ந்து வருவார்.எனினும் அவருடைய மறைவு ஒரு மூத்த சகோதரரின் மறைவாகவே என் மனதுக்கு வருத்தம் அளித்த்து.அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தார்,உற்றார்,உறவினர் முதலிய அனைவருக்கும் கருணையுள்ள அல்லாஹ், அழகிய பொறுமையைத் தந்தருளவும் மர்ஹூமான முஹம்மது தம்பி அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்கி அருளவும் நாம் துஆ செய்துகொள்வோமாக.

மரியாதைக்குரிய சகோதரர் மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்களின் மறைவு குறித்து விசாரிக்க விரும்புவோர் அவருடைய ஆண்மக்களில் ஒருவரும் கோவை அல்-ஃபைஸ் ஹஜ் சர்வீஸின் உரிமையாளரும் ஆன கோவை சம்ஷுல் ஹுதா(9952482543) அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்:

-----ஏம்பல் தஜம்முல் முகம்மது


மாமேதை மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் ஆக்கங்கள் பலரின் ஈமானை புதுப்பித்தது, நபி நேசத்தை வளர்த்தது , அன்னாரது இழப்பு சமுதாயத்திற்கே ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
இச்செய்தியை பகிர்ந்து சமுதாயத்திற்கு அறிவித்த அறிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,
எனது ஆத்ம நண்பர் வழுத்தூர் சாப்ஜி (அப்துல் ரஹீம்) அவர்கள் அனுதினமும் இறுதி நபிகளின் இறுதி நாட்கள், மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள் போன்ற புத்தகத்தை வைத்து அழுது அழுது கரைந்து உருகி படித்துக்கொண்டிருப்பார், அவருக்கும் இந்த செய்தியை படித்துக் காண்பித்தேன். அவரும் மறைந்த பன்னூலாசிரியருக்கு துஆ செய்வதாகவும், ஏம்பலார் அவர்களுக்கு நன்றிதனையும் தெரிவித்து கொண்டார். - ஜா.முஹையத்தீன் பாட்ஷா

புதன், 23 ஜனவரி, 2013

நெய்யாக உருகாதோ நெஞ்சம்...


கவிஞர், சிந்தனையாளர் ஜனாப். ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களின் மீலாது நபி சிறப்புக் கவிதை
நெய்யாக உருகாதோ நெஞ்சம்...



 வாள்முனையில் கொன்றொழிக்க
வந்தவனே நடுநடுங்க
ஆள்வீரம் காட்டுபவர்
அல்லாஹ்வின் திருப்பெயரால்........1.

கல்சுமப்பார், மண்சுமப்பார்,
கடுந்துயரம் பொறுத்திடுவார்
அல்லாஹ்வின் புகழிசைப்பார்
அனைவருக்கும் நலமுரைப்பார்.........2

சிந்தனையை மதித்திடுவார்
செல்வத்தை மதித்தறியார்
எந்தநிலை என்றாலும்
இறைநினைவை இழந்தறியார்.............3

நல்லெண்ணம் கொள்வதற்கே
நாயன்அவன் முதற்தகுதி
உள்ளவனென்(று) உணர்த்துபவர்
உலகிரண்டின் நாயகமே!..........................4

புகழ்கொண்ட சிகரத்தில்
போயிருக்கும் வேளையிலும்
புகழெல்லாம் அல்லாஹ்வின்
புகழ்”என்பார் புனிதரிவர்...........................5

செங்குருதி சிந்திடினும்
சிரத்தில்அடி பட்டிடினும்
வெங்கொடுமை இணைவைப்பை
வீழ்த்திடுவார் நாயகமே!...........................6

அசத்தியத்தை அழித்தஅவர்
அல்லாஹ்வே உவந்தளித்த
நிசத்தைநிலை நாட்டுவதால்
நீணிலத்தை நிமிர்த்திடுவார்....................7

எழுத்தேனும் சொல்லேனும்
இறைத்தூதர் வாயுரைத்தால்
பழுத்ததொரு சத்தியமே!
பயன்கொள்ளும் பாருலகே!!.....................8

அச்சமென ஒன்றறியார்
அல்லாஹ்வுக் கெதிரென்றால்
துச்சமென ஊதிடுவார்
தூயதிரு துணிவுடையார்...........................9

அல்லாஹ்வின் பேரன்பை
அடைந்திடவே விரும்புமவர்
எல்லார்க்கும்-குழந்தைகட்கும்
இதயத்தால் அன்புசெய்வார்......................10

நேரத்தை நிர்வகிப்பார்
நெருக்கடியில் தடுமாறார்;
பாரங்கள் சுமந்தாலும்
பக்தியுடன் தொழுதிடுவார்..........................11

மன்னித்தே தண்டிப்பார்!
மனங்களையே வென்றெடுப்பார்
உன்னிப்பாய் உணர்பவர்கள்
உவந்துவந்து தோற்பாரே.............................12

தன்னடக்கச் சின்னமவர்
தாராள எண்ணமவர்
முன்னெடுக்கும் மாதிரிக்கே
முடிசூடா மன்னரிவர்.....................................13

கடன்பட்டும் அறம்செய்வார்,
கருணையினால் உரம்பெய்வார்
உடன்பட்டார் மீதுயரும் 
உட்பாசம் காட்டிடுவார்!.................................14

பகையறியார், வெறுப்பறியார்
பண்புகளைத் தாமறிவார்
மிகையுரையா மேலவரை
மேவிடுவோம் காலம்வரை...........................15

தவறான நம்பிக்கை
தந்தறியாத் தலைவரிவர்
கவர்வதுபோல் கவர்ந்திடவே
காசினியில் யாருமுண்டோ?........................16

தாம்ஆற்றும் பணியெதிலும்
தடுமாற்றம் ஏதுமிலார்
ஏமாற்றும் வேலைஇலார்,
இவரன்றோ தனித்தலைவர்...!........................17

இன்னாசெய் மக்கள்தமை
எதிர்த்தொழிக்க வாய்ப்பிருந்தும்
நன்னயத்தைச் செய்(து,)அவர்க்கும்
ஞானம்வரச்செய்வாரே!....................................18

உறவினர்தம் நம்பிக்கை
ஒன்றுபடா திருந்தாலும்
பரிவோடே அவர்உறவைப்
பாராட்டும் நாகரிகர்.............................................19

உடன்பிறந்தார் தமைவிடவும்
உவந்(து), உவந்து  நேசிக்கும்
படையொன்றை உருவாக்கிப்
பாரெங்கும் பரப்புபவர்!........................................20

சிறுபறவை சிறகசைப்பில்
சிறப்பெதுவும் இருந்தாலும்
உறும்கல்வி உரைத்திடுவார்
உற்றுணரும் நாயகமே........................................21

சொற்சுத்தம், செயல்சுத்தம்,
சொந்தஉடல் அதுசுத்தம்
பற்சுத்தம் என்றுரைத்த
பலசுத்தம்,பரிசுத்தம்!............................................22

வெற்றிவரும் வேளையிலும்
விருப்பமுடன் கஃபாவை
சுற்றிவரும் அவர்திருவாய்
சொல்வது ’குர் ஆன்’வசனம்................................23

வாள்பலத்தால் தோள்பலத்தால் 
வரக்கூடும் சிலவெற்றி
போல்அல்ல இறையருளால்
புனிதர்இவர் பெறும்வெற்றி...................................24

தீமைக்குத் தீமையினால்
தீர்வில்லை;நன்மையையே
சேமிப்பார்;அருள்செய்வார்
சிறந்தென்றும் விளங்குகிறார்................................25

முந்திஸலாம் உரைத்திடுவார்
முதியவரோ, குழந்தைகளோ
சந்திப்போர் மகிழ்வதிலே
சாதிப்பார் சாந்த நபி!...................................................26

உண்டிடவும் பருகிடவும்
உடல்-உளத்தைப் பேணிடவும்
அன்போடும் பரிவோடும்
அறிவுரைகள் கூறிடுவார்..........................................27

மெய்யான அருட் கொடையாய்
மேதினிக்கு வந்தீரே!
நெய்யாக உருகாதோ
நெஞ்சம்உமை நினைக்கையிலே.... ............................28 



                                                      ---ஏம்பல் தஜம்முல் முகம்மது.
************************************************************************************************************************
1.பாருலகம்,காசினி-உலகம், (2) நம்பிக்கை-ஈமான்


வியாழன், 28 ஜூன், 2012

இஸ்லாம் - ஏம்பல் தஜம்முல் முஹம்மது


“இஸ்லாம் தான்உயர் தத்துவம் – இதை
ஏற்பது தான்முதல் உத்தமம்!
நம்பிச் செயல்படல் பத்தியம் – இது
நலமெலாம் தருதல் சத்தியம் !”
என்று பாடினார் ஒருவர்.

‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்ற வினாவிற்குச் சமயம் என்பர் சிலர்; மார்க்கம் என்பர் பலர். இன்னும் ஏற்ற பல விடைகள் உண்டு. அவ்வாறு சொல்வதற்கேற்ற பொருட் செறிவு உள்ள சொல் ’இஸ்லாம்’ என்ற சொல். அது, நானிலத்திற்கு நலமெலாம் தர வந்த சத்தியம் என்றும் அதற்கு ஏற்ற தத்துவம் என்றும் இசை பெற்றிருக்கிறது என்பதை மேற்கண்ட பாடல் சுட்டிக்காட்டுகிறது.

அந்தத் தத்துவம், அமைதித் தத்துவம்; அமைதிக்கான தத்துவம்; அமைதியை – சாந்தியை – நோக்கி நடத்தும் தத்துவம். அமைதியின் பயன்களைப் பெற்றுத் தருவது அந்தத் தத்துவத்தின் இலட்சியம். தன் தத்துவத்தையும், தன் இலட்சியத்தையும், தன் தனிச் சிறப்பையும் தன் பெயரிலேயே பெற்றிருக்கும் ஒரு நெறி இஸ்லாம் ! வாழும் சமயங்களின் பெயர்ப்பட்டியலையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை இனிதே புலப்படும்.

ஒரு மலர்க்கொடி மொட்டுவிடுகிறது; பின்னர் மொட்டு கட்டவிழ்கிறது; மலர்கிறது; மணம் வீசுகிறது; மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது; சூல் கொள்கிறது; காய்க்கிறது; கனிகிறது; இதே பயன்களைப் பன்மடங்காய்ப் பெருக்க வல்ல எத்தனையோ வித்துக்களை அந்தக் கனி, தன்னகத்தே இருந்து வெளிப்படுத்துகிறது; உலகம் பயன்பெறுகிறது; எல்லாம் அமைதியாக…! இந்த அமைதி எவ்வளவு ஆக்கவளம் செறிந்த அமைதி ! ஆற்றல் பெருக்கும் அமைதி! இடையறாச் செயற்பாட்டை உடைய இயக்க அமைதி !

இத்தகைய இனிய அமைதிக்கு இந்த உலகம் எப்போதும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது !
“நம்நோக்கங்கள் ஒன்றேயாகட்டும் !
நம் இதயங்கள் ஒன்றாகச் சேரட்டும் !
ஒற்றுமையில் மனம் சாந்தி அடையட்டும் !
அனைவருடனும் அமைதியாக இருப்போம் !”
                                         என்பது
ஒரு புராதான கால அழைப்பு.

  “முன்னெப்போதும் நடாத்தப்படாத அளவுக்குத் துணிந்து நடாத்தப்படும் மிக்க நீதியான போரைவிட மிகவும் அநீதியான அமைதியாக இருந்தாலும் அந்த அமைதியையே நான் விரும்பித் தேர்ந்தெடுப்பேன்”
என்பது அதை அடுத்ததொரு காலகட்டத்து அமைதி விரும்பியின் விருப்பம்.

  “போரிட்டாவது நீ அமைதியைத் தேடிக்கொள் !”
                              என்பது

இந்த நூற்றாண்டின் தொடக்க காலம் தெரிவித்த ஒரு தீர்வு.

  “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் !”
                              என்பது
‘சாந்தியால் உலகம் தழைக்க வேண்டும்’ என்று சங்க நாதம் புரிந்த ஒரு புரட்சிக்காரரின் போர்க்குரல், நம் காலத்தில் நாம் கேட்ட குரல் !

அமைதி வேண்டுமென்றால் அனைவரும் ஒன்றாக வேண்டும். அப்போதுதான் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஏற்படும். அதற்கு வேற்றுமைகளை வேரறுக்க வேண்டும். அதற்கு ஏற்ற முழக்கங்களும் எழாமல் இல்லை.

  “ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !”
                              என்றொரு
முழக்கம் எழுந்தது. பின்னர்,

“குலமும் ஒன்றே ! குடியும் ஒன்றே !
இறப்பும் ஒன்றே ! பிறப்பும் ஒன்றே !
வழிபடு தெய்வமும் ஒன்றே !
என்று சற்றே விளக்கமான முழக்கமும் எழுந்தது. இப்படி எத்தனையோ குரல்கள் !

அமைதிக்கும் ஒற்றுமைக்கும் தேவையான அனைத்தையும் ஒருங்கிணைத்து – நீணிலமெங்கும் நீறுபூத்த நெருப்பாக இருந்த எத்தனை எத்தனையோ நல்லெண்ணங்களையெல்லாம் ஊதி ஊதிப் பெருஞ் சோதியாக்கி இதோ ‘இஸ்லாம்!’ என்று அரபு தீபகற்பம் அறிமுகம் செய்தது !

ஒருவனே இறைவன் ! ஒன்றே மனுக்குலம் !
அனைத்து மக்களின் அன்னை ஒருவரே !
அனைத்து வேதங்களின் அடிப்படை ஒன்றே !
இம்மையும் ஒன்றே ! மறுமையும் ஒன்றே
இறுதி வேதமும் ஒன்றே ! இறுதித் தூதும் ஒன்றே !
என்பன அந்தச் சோதியின் பெருஞ்சுடர்கள் !

இந்த இஸ்லாம் – இஸ்லாம் எனும் சொல், அரபு மொழிச் சொல் என்பதற்காக இது நமக்குச் சொந்தமானது இல்லை என்று சிந்தனையுள்ள யாரும் சொல்ல மாட்டார்கள். மனித வசதிக்கும், உரிமைகளுக்கும், நல்வாழ்வுக்கும் ஏற்றதாக எங்கிருந்து எந்த நலன்கள் கிடைத்தாலும் அதைப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிற உருண்டைச் சிற்றூர் (Global Village) ஆன இன்றைய உலகம், இஸ்லாம் தன் கொடை வளத்தால் கொடுக்கும் சாந்தி, சமத்துவம், சகோதரத்துவம், சமரசம், சத்தியம் முதலிய எத்தனையோ நன்மைகளை – ஊற்றுப் பெருக்காய் உலகுக்கு ஊட்டும் நன்மைகளை- வேண்டாம் என்று சொல்லுமா என்ன?

(ஸல்ம்) என்னும் வேர்ச் சொல்லில் இருந்து (ஸலம) என்னும் சொல்லும் அதிலிருந்து (அஸ்லம) என்னும் சொல்லும், அதிலிருந்து (இஸ்லாம்) எனும் சொல்லும் தோன்றின என்பர் அரபு மொழி அறிஞர்கள் ‘இஸ்லாம்’ என்ற சொல்லே ஒரு வேர்ச் சொல்தான் என்பாரும் உளர்.

ஸல்ம் – அமைதி, ஸலம – அமைதியடைந்தான், அஸ்லம – அமைதி பெறத் தேடினான் – அமைதி தேடியவன், இஸ்லாம் – அமைதி பெறத் தேடுதல் – இறைவனுக்கு அடிபணிந்து அமைதி பெறல் – அமைதி சாந்தி என்பன முறையே அந்தச் சொற்களின் பொருள்களாக இருக்கின்றன. இதிலிருந்து இஸ்லாம் எனும் சொல்லின் மூல முதற் சொல்லின் பொருளும் அமைதிதான்; இஸ்லாம் எனும் சொல்லின் பொருளும் அமைதிதான் என்று அறிகிறோம். மார்க்க அடிப்படையில், இஸ்லாமிய வாழ்வை வாழ்ந்து காட்டியவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வின் அடிப்படையில், மனித குலத்துக்கு வாய்த்த பேறுகளின் அடிப்படையில் இஸ்லாம் என்றால், எவ்வுயிர்க்கும் இன்னமைதி ஈந்துவக்கும் சன்மார்க்கம் என்று சற்றே விளக்கமாய்ப் பொருள் கொள்ளலாம்.

வணக்கத்திற்குரிய ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு அழகிய பல திருநாமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஸ்ஸலாம் – இன்னமைதி அருள்பவன் – என்பதையும் கவனத்தில் கொள்வோமாக.

இந்த இறைவன் இந்த மார்க்கத்தின் மூலம் இந்த உலகத்திற்கு வாழ்வின் எல்லா அம்சங்கள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதல்களை அளித்துள்ளான். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் சமுதாயத்தை ‘நடுநிலையுள்ள சமுதாயமாக’ – ‘உம்மத்தே வஸதாக’ – ஆக்கியுள்ளான் (2;143) நடுநிலை என்பது நீதி அல்லவோ !

  ”… நாம் படைத்த மக்களில் ஒரு பிரிவினர் இப்படியும் இருக்கிறார்கள்:
அவர்கள் முற்றிலும் சத்தியத்திற்கேற்பவே வழி
காட்டுகிறார்கள். மேலும் சத்தியத்திற்கேற்பவே
நீதி வழங்குகிறார்கள்” (7:181) என்கிறது திருக்குர்ஆன்

  “நீதி, நேர்மை ஆகியவற்றில் நிலைபெற்று, வரம்பு மீறாமல் நடுநிலையான வழியில் சென்று, எவருடனும் அநீதியான அசத்தியமான முறைகளில் தொடர்பு கொள்ளாமல், சத்தியம், மெய்ம்மை ஆகியவற்றில் அடிப்படையில் மட்டுமே எல்லாருடனும் தமது உறவை ஒரேவிதமாக அமைத்துக் கொண்டு உலக சமுதாயங்களுக்கு மத்தியில் பாரபட்சமற்ற வகையில் நீதி வழங்கும் அந்தஸ்த்திலுள்ள உயர்வும் சிறப்பும் கொண்ட ஒரு குழுவுக்குத்தான் திருக்குர்ஆன் தன் மொழி வழக்கில் உம்மத்தே – வஸத் – நடுநிலையுள்ள சமுதாயம் என்று கூறுகிறது.”

உலக மக்கள் நடுநிலையாக நடந்து கொள்வது என்று முடிவு செய்து விட்டால் மனித குலத்துக்கு அதைவிட இயல்பான பொருத்தமான, நேரான, நிம்மதியான வழியாக வேறு என்ன இருக்க முடியும்! எனவேதான் இஃது ‘அவனுடைய இயற்கை வழி’ என்றும் ‘நிலையான வழி’ என்றும் (30:30) அடைமொழிகள் பெற்றுள்ளன.

‘ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும், (17:15)’ ஒரு சமூகம் நேரான வழியை மேற்கொள்கின்றது என்றால் அதனுடைய நேரான வழி அந்தச் சமூகத்துக்கே பயனளிக்கும். இந்த உலகமே நேரான வழியை மேற்கொள்கின்றதென்றால் அஃது ஒட்டு மொத்தமாக இந்த உலகத்துக்கே பயனளிக்கும். இதை யாரால் மறுக்க முடியும்? இத்தகையதோர் ஒளிவுமறைவு அற்ற பரிபூரணமான உயர் நேர் வழியைத்தான் இஸ்லாம் உலகுக்குப் பொதுவுடைமை ஆக்கியுள்ளது.

  அதற்கான பிரகடனம் 11.3.கி.பி.632 (9.12.ஹி10) – ஆம் நாள் வெள்ளிக்கிழமை அந்திப்பொழுதில் எல்லாம் வல்ல இறைவனால் இவ்வாறு இறக்கி அருளப்பட்டது.

  ”…இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களுடைய மார்க்கத்தைச் சம்பூரணமாக்கிவிட்டேன். என் அருட்
கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்திருக்
கிறேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாகவும்
பொருந்திக் கொண்டேன் …” (5:3)

( பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய ‘இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி )

நூலை மேலும் வாசிக்க கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம்.

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ
NEWLIGHT BOOK CENTRE
1504 - A, MIG, 3rd Main Road
Mathur MMDA
Chennai - 600 068
E-mail : 

Cell : 99944 05644
Tel : 044 25552846









இப்போது கையிருப்பில் உள்ள பன்னூலாசிரியர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எழுதிய நூல்களின் விவரம் பின் வருமாறு:

1.வீரம் செறிந்த இஸ்லாம்(சீதக்காதி அறக்கட்டளை பரிசு பெற்ற நூல்)-விலை ரூ.150/=
2.இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்..............................................................................ரூ.055/=
3.Religious Harmony-an Islamic Doctrine............................................................................................Rs.150/=
4.திருக்குரானில் பிற சமய மதிப்பீடுகள்................................................................................ரூ.020/=
(இந்த 2,3&4 நூல்கள் எழுதியமைக்காக எனக்கு சிறந்த சமய நல்லிணக்க நூலாசிரியர்
என்ற விருது இஸ்லாமிய இலக்கியக் கழகத்தால் வழங்கப்பட்டது)
5.அந்த ஒளி!அந்த வழி!!(அண்ணல் நபியவர்களையும் அவர்களின் திருத் 
தோழர்களையும் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்யும் நூல்)...........................................ரூ.030/=
6.அல்லாஹ்வின் வணிகர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்-ரலி-
(கடந்த 1400 ஆண்டுகால வரலாற்றில் இதுவே இவர்களைப் பற்றிய ஆதார பூர்வமான
முதல் வரலாற்று நூல்).....................................................................................................................ரூ.075/=
முதல் 6 நூல்களின் மொத்த விலை ரூ.0480/= 
*******************************************************************************************************************************************************************
7.இஸ்லாம் மார்க்க அடிப்படைகள்(பாகம்-1,2&3-Basics of Islam என்ற அருமையான
ஆங்கில நூலின் அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு-பல வண்ண சிறுவர் நூல்-)1செட் .........ரூ.0280/=
8.Basics of Islam 1 to 7 vol..in English.................................................................................................................ரூ1320/=
(7-வது,8-வது கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மதுவின் வெளியீடுகள் அல்ல. இவற்றை நான் இங்கு குறிப்பிடக் காரணம் இவற்றைவிடச் சிறந்த பாட நூல்கள்-1முதல் 7வகுப்பு வரைக்குமான முஸ்லிம் மாணவர்களுக்கு-வேறில்லை என்பதனால் இவற்றை மார்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்துவது கூடுதல் நன்மையாக இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புவதுதான்.இவ் விவரம் முதல் 3 பகுதியை கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது மொழி பெயர்த்தபோது அறிந்துகொண்டதாகும்)


For Book Orders Pl. send MO / DD in favour of NEWLIGHT BOOK CENTRE, CHENNAI

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ
NEWLIGHT BOOK CENTRE
1504 - A, MIG, 3rd Main Road
Mathur MMDA
Chennai - 600 068
E-mail : 

Cell : 99944 05644
Tel : 044 25552846