இஸ்லாம் - வாழ்வியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் - வாழ்வியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 அக்டோபர், 2013

பயங்கரவாதத்தின் வேர்கள்

செய்தியாளர் எச்.பீர் முஹம்மது தி இந்து நாளிதழில்...

தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை ‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.
20-ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தின் உருவாக்கமாகத்தான் இருந்தது. 1980-களில் ஆப்கனுக்கு எதிராக சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பை ஒட்டி பாகிஸ்தானில் உருவான முஜாஹிதீன் இயக்கத்துக்குச் சகலவிதமான உதவிகளையும் ஆயுதப் பயிற்சியையும் அமெரிக்கா அளித்தது. அவர்களே பின்னர் தலிபன்களாக உருமாறி, அமெரிக்கத் துணையுடன் ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றி பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தனர். பின்னாளில் தலிபன்களின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு அவர்களிடையே பல சிறு குழுக்கள் தோன்றி ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் இன்னமும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நீட்சியில் அல்கொய்தா இயக்கத்தின் உருவாக்கமும் சேர்த்து கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் வார்ப்பான ஒசாமா பின்லேடன் 19-ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபிய பிரிவைச் சேர்ந்தவர். அன்றைய துருக்கிய உதுமானிய பேரரசுக்கு எதிராக மத்தியக் கிழக்கில் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரிட்டிஷ் துணையுடன் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் (Political Islam) என்பதை முன்வைக்கிறது. ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இதன் அரசியல் இயக்கமான அல்கொய்தா, ‘நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுப்பது ஒவ்வோர் இஸ்லாமியரின் கடமை’ என்று பல முறை அறிவித்திருக்கிறது. மதப் பிரதிகளை இவர்கள் இயந்திரத்தனமாகப் புரிந்துவைத்திருப்பதால், பல நேரங்களில் இஸ்லாம்குறித்து புதிதாக அறிந்துகொள்ள விரும்பும் பதின்பருவ இளைஞர்கள் இதற்கு பலியாகிவிடுகிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்பதைப் பற்றி வரலாற்றில் நேர்மறையான விளக்கங்களும் புரிதல்களுமே இருந்திருக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய வரலாற்றில் தத்துவ ஞானிகளான சூபிகளின் ஜிஹாத் பற்றிய புரிதல் ஆன்மிகத்தை நோக்கித்தான் இருந்தது, அரசியலை நோக்கி அல்ல. ஜிஹாத் என்ற புனிதப் போரை அரசியல் அளவுகோலாக எதிர் சமூகங்களின் மீது வைப்பது மேற்கண்ட இயக்கங்களின் வருகைக்குப் பின்புதான்.

இந்த இயக்கங்கள் சவூதி அரேபிய வகைப்பட்ட உலக இஸ்லாம் (Global Islam) என்பதை முன்வைப்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் பிராந்திய, வட்டாரப் பண்பாடுகளிலிருந்தும், அடையாளங்களிலிருந்தும் இஸ்லாமியர்கள் விலக்கப்படுகிறார்கள் அல்லது விலகுகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் இருந்த இந்து, முஸ்லிம் சமூக ஒற்றுமை சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலையத் தொடங்கியது. இந்தச் சீர்குலைவு அரசியலில் இந்துத்துவா இயக்கங்களின் பங்களிப்பும் மறுக்க முடியாதது. உலக வரலாற்றில் பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் இயக்கங்கள் தங்கள் நாடுகளில் வாழும் சிறுபான்மையினரை எதிர் நிலையில் நிறுத்தித் தங்களை முன்னகர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இந்தியாவிலும் அது போன்றே நிகழ்ந்தது. பாபர் மசூதி என்பது அதன் முக்கிய அரசியல் குறியீடு.

இந்தியாவின் பன்மயப்பட்ட சாதியச் சமூகத்தில் தங்களின் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த குறியீடுதான் ராமரும் பாபர் மசூதியும். இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள இயலாத இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் தன்னைப் பலிகொடுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் தலைவர்களும் எடுத்த சமரச முயற்சியில் இருதரப்பினருமே உடன்படவில்லை. இதன் நீட்சியில் 1992 நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் நிர்க்கதியாயின. போராட்டங்களிலும் கலவரங்களிலும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இறைவனுக்காக மக்கள் கொல்லப்படுவது இறைவனுக்கே ஏற்புடையதல்ல.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது. இதன் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அதிலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. ஆனால், கேரளத்தில் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளத்தில் எல்லோரும் மலையாளிகள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். அங்கு மைய நீரோட்டம் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பல கலை ஊடகங்களை நிராகரிப்பது, பொதுவாசிப்பு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்க மறுப்பது, குறிப்பாக காலங்காலமாகத் திரைப்படத்தை நிராகரித்து அவற்றைவிட்டு ஒதுங்கியிருந்தது போன்றவை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்துகொள்ளக் காரணமாயின. ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களை இந்தச் சூழலில் வைத்துத்தான் நாம் மதிப்பிட முடியும்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், இந்துத்துவ அரசியல் மிக வலுவானதாக இல்லை. ஆனால், சமீப காலமாக தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடுகள் அவற்றை வலுப்பெற வைக்க வாய்ப்பிருக்கிறது. குஜராத் கலவரத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகமாகப் போராடியவர்கள், இயக்கம் நடத்தியவர்கள் இந்தியாவில் உள்ள ஜனநாயக முற்போக்குச் சக்திகள். ஆனால், நெருக்கடியான காலகட்டங்களில் இஸ்லாமியச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தங்களின் சமூக அரசியல்குறித்த புரிதலே அதற்குக் காரணம். இந்நிலையில், சமீபகாலங்களில் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் ஈழப் பிரச்சினை, கூடங்குளம் விவகாரம் போன்றவற்றில் இணைந்து போராட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது இன்னும் தொடர வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட பல குண்டுவெடிப்புகள் 1990-களுக்குப் பிறகே ஏற்பட்டன. பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது. வஹ்ஹாபிய இயக்கங்களின் எழுச்சியும் அதன் கருத்தாக்கமும் மேற்கண்ட இளைஞர்களிடத்தில் புனிதப் போர் குறித்த அரசியல் பார்வையை மேலும் கூர்மையாக்கின. இதில் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களே அதிகம். எல்லா இயக்கங்களுமே பதின்பருவ இளைஞர்களைக் குறிவைக்கக் காரணம், அந்த மூளைகள்தான் உணர்ச்சிபூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை மிக எளிதில் உள்வாங்கும்.

இந்நிலையில், பல அப்பாவி இளைஞர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றனர். அதில் சிலர் நிரபராதிகள் என்று பின்னர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆக, மதம் குறித்த இயந்திரத்தனமான மட்டுப்படுத்தப்பட்ட புரிதலும் கருத்தியல்களும் அப்பாவி இளைஞர்கள் பலரை வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கின்றன. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ‘‘தமிழ்நாட்டில் தீவிர இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர்தான் எங்களைத் தூண்டினார்” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தனர். இந்தியாவின்/தமிழ்நாட்டின் சமூக நீரோட்டத்தைக் குலைக்கும், சமூகங்களிடையே பதற்றங்களை உருவாக்கும் இம்மாதிரியான செயல்பாடுகளுக்குக் கண்டிப்பாக மதம் காரணமாக இருக்க முடியாது. ஹிட்லர் தன் செயல்பாடுகளுக்கு பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டினார். அப்படியிருக்க, அவரின் செயல்பாடுகளுக்கு கிறிஸ்துவம் எப்படிப் பொறுப்பாக முடியாதோ அதுமாதிரிதான் அரசியல் இஸ்லாம் பேசும் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், சிலரின் பயங்கரவாதச் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஊடகங்கள் அவர்களை இஸ்லாத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தையே காயப்படுத்துவதாகும். தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் ஊடகங்கள் அதனைப் பயங்கரவாதக் குறியீடாகக் காட்டுவது மிக அபத்தமான ஒன்று.

தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peerl@gmail.com

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன் 


உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?

உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

தயாரா நீங்கள்?


1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்:

முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், “வயதான பின்னர் செய்வேன்” என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, “இனிமேல் எந்த
ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்” என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். “தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பதும் “தொழாதவன் காஃபிராகி விட்டான்” என்பதும் “முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை” என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

2. கனவை நனவாக்குங்கள்:

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை
நனவாக்குங்கள்!

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்:

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: “பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்” என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே,அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்:

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5. இஸ்லாத்தைப் படியுங்கள்:

அதற்கு உயிர் கொடுங்கள்! இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள் :

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்…..இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்:

இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்:

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்:

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்:

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

திங்கள், 14 ஜனவரி, 2013

ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும்

நன்றி ஏபிஎம் இத்ரீஸ் வலைதளம்

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனைஅது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாகத் தெரிந்தாலும் தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை கொல்வதிலிருந்து தடுக்கும் என்கிறார்களே?

‘கொலைக்கு கொலைதான்’ என்ற வார்த்தையை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. கொலைக்கு கொலைதான் என்றால் அது கொலை என்று முதலில் இஸ்லாமிய ஷரீஅத் நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறது. நடந்தது தற்கொலையாக இருக்கலாம். சந்தர்ப்ப வசத்தால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம். சுவாசக் குழாய்க்குள் பால் போய் அடைத்ததால் இறந்திருக்கலாம். கொக்குச் சுடப்போனவர் தவறி காட்டுக்குள் இருந்த மனிதரை தெரியாமல் சுட்டிருக்கலாம். இவ்வாறு எண்ணற்ற மரணங்களின் வகைகள் இருக்கின்றன. திட்டமிட்டு குற்றஞ் செய்ய வேண்டும் என்று நினைத்து குற்ற மனத்தோடு செய்யப்பட்ட கொலையா என்பது இஸ்லாமிய ஷரீஆவில் முக்கியமான விடயப் பொருளாக ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து நவீன சட்ட அறிஞர்களான அப்துல்காதர் அவ்தா, அஹ்மத் ஷர்கா போன்ற பல முஸ்லிம் நியாயவியல் அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். இவை இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் என்ற வாதம் பிழையானது. ‘அத்தஷ்ரிஉல் ஜினாயீ’ என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய குற்றவியல் நூலை படித்த யாரும் கொலைக்குக் கொலை என்று எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்க மாட்டார்கள். குறைந்தது இலங்கையின் சட்டத்தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி வீரமந்திரி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் போன்றோரின் இஸ்லாமிய நியாயவியல், குற்றவியல் குறித்த ஆங்கில நூல்களையாவது குறைந்தபட்சம் வாசித்தவர்கள் கூட எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் தண்டனை என்று முடிவெடுக்க மாட்டார்கள்.
இஸ்லாமிய ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ முடியுமா?
இஸ்லாமிய ஷரீஆ என்பதற்குள் பலவகையான சொல்லாடல்கள் அறபு மொழியில் பயன்பாட்டில் உள்ளன. ‘அல்பிக்ஹு’, ‘இஜ்திஹாத்’, ‘அத்தஸ்ரிஉல் ஜினாயீ’ இவை ஒவ்வொன்றுக்கும் தனியான பரப்பெல்லைகளும் இயல்முறைகளும் காணப்படுகின்றன. ஷரீஆ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லாடலாகும். ஆனால் தமிழ் மொழிச் சூழலில் ஷரிஆ என்பது பல உள் ஆய்வு பிரிவுகளைக் கொண்ட ஒரு சட்டவாக்கத் தொகுதியாக நோக்கப்படுவதில்லை. அதற்குள் நடைபெறும் வாதவிவாதங்கள் அவ்விவாதங்கள் இறுதியில் எட்டப்படும் முடிவுகள் கொண்ட ஒரு செறிவான சொல்லாடலாகும்.
இங்கு ஷரீவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்ற சொல்லாடல்கள் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது என்பது முக்கியமானது. அச்சொல்லாடல்களை நான் புரிந்து கொண்ட வகையில் சொல்வதானால், ஒரு பண்பாட்டின் சமூக நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை, அதனுடைய சமூக வழக்காறுகளை மற்றப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் கேள்விக்குட்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் பின்னால் பலவகையான அரசியல் இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே படித்தானதாக, வகைப்பட்டதாக நாம் நோக்கத் தேவையில்லை. பழங்குடித் தன்மையிலிருந்து விடுபடாத, மனிதாபிமானமற்ற வழக்காறுகளும் நெறிமுறைகளும் மற்றொரு பண்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்ற போது அத்தகைய விமர்சனங்கள் எழ வாய்ப்புமுள்ளது. குறிப்பிட்ட பண்பாடு மட்டும்தான் உன்னதமானது, அந்த பண்பாடு கடைப்பிடிக்கும் அனைத்து நெறிமுறைகளும் புனிதமானவை, எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பண்பாட்டு ஆதிக்கம் அல்லது அடையாள உருவாக்கம் மற்றமைகளை அச்சத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்க முடியும். அந்தக் கோணத்திலிருந்தும் விமர்சனங்களைப் பார்க்க முடியும்.
உதாரணமாக, ஆடை விசயத்தை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கறுப்பு நிற அபாயா அணிந்தால்தான் உண்மையான ஷரீஅத் கூறும் இஸ்லாமியப் பெண்ணாகக் கருத முடியும் என்று நாம் வலியுறுத்தும் போது பல தசாப்தங்களுக்கு முன் நமது தாய்மார்கள், பெண்கள் மூதாட்டிகள் அவ்றத்தை மறைத்து அணிந்த ‘சேலை’ போன்ற ஆடைகளை நாம் இஸ்லாம் அல்ல என்று மறுத்துவிடுகிறோம். குறிப்பிட்ட பூகோள, புவியல் சூழலில் வாழும் மக்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஆடைகளை, அதன் நிறங்களை, வடிவங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. இப்படித்தான் மற்ற விடயங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இப்போது நாம் ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்பதை இஜ்திஹாத் – மறுவாசிப்பு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் அதன் விளக்கம் வேறு வகையாக அமையும். ஷரீஅத்தில் இஜ்திஹாத் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாத்தை பிரதான இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் இறையியல் சார்ந்த விடயங்கள், சமூகவியல் சார்ந்த விடயங்கள் எனப் பிரிக்கலாம். இறையியல் சார்ந்த விடயங்களிலும் கூட அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய வேளைகளில் பல்வேறு இஜ்திஹாதுகளை இறையியல் சார்ந்த வசனங்கள் எதிர்கொண்டதை நாம் காண முடியும். இறையியல் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த விடயங்களை கொச்சைப்படுத்துவது, நிந்திப்பது, பொதுவான நோக்கில் பொதுவான உலக சமூகங்களின் பண்பாடுகளின் அறங்களின் படி தவறானதுதான். ஆனால், சமூகவியல் சார்ந்த விடயங்களில் இஸ்லாம் தாராளமாக மாற்றுக் கருத்துக்களுக்கும் மறுவாசிப்புக்களுக்கும் தனது வரலாற்றுப் போக்கில் நெகிழ்ந்து கொடுத்தே வளர்ந்து வந்துள்ளது.
ஷரீஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆனும் நபிகளின் மொழியையும் சிந்தனைகளையும் கொண்ட ஹதீஸ்களும் மட்டும் அல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக் காலம் இஸ்லாமியப் புலமைத்துவ வாதிகள், புத்துயிர்ப்பாளர்கள் வழங்கிய வியாக்கியானங்களும் சாராம்சப்படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும். எனவே ஏற்கனவே ஷரீஆ சொல்லப்பட்டுவிட்டது, அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்று சொல்ல முடியாது. முஸ்லிமின் நோக்கில் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் புனிதமாகக் கருதப்படலாம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் புனிதமானவை அல்ல. வியாக்கியானங்கள் கால, இட, சூழ்நிலைகளுக்கேற்ப, சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டுச் செல்ல முடியும். பழங்குடி முறையிலிருந்து நிலச்சுவாந்தர் முறைக்கு ஒரு சமூகம் மாற முடியும். நிலச்சுவாந்தர் முறையிலிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு மாற முடியும். முதலாளித்துவத்திலிருந்து ஜனநாயக சமூகங்களாக மாற்றம் பெறலாம். இந்த ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய நிலமைகளுக்கேற்ப தீர்வுகளைப் பேசக்கூடிய உயிரோட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் மூலம் ஷரீஆ மறுவாசிப்புக்குட்படுகிறது. மறுவாசிப்பு என்பது புனிதப் பிரதிகளை மற்றொரு வகையில் வாழவைப்பதுதான். அது அழிப்பது அல்ல. ஆனால் மைய நீரோட்டத்திலிருக்கும் வைதீக நிலைப்பட்ட இறுக்கமான நிறுவன நோக்குக் கொண்ட இஸ்லாமிய கருத்தியல் அடிப்படைவாதம் தான் இந்த வாசிப்புக்களுக்கும் புதிய இஜ்திஹாதுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. உஸ்மானிய சாம்ராஜியத்திற்குப் பின்னர் அறபு இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஷரீஆத் துறையில் குறிப்பாக நியாயவியல், பொருளியல் (முஆமலாத்), சிறுபான்மைக்கான நியாயவியல் என்றெல்லாம் பல துறைகளில் ஆங்காங்கே புதுவகையான இஜ்திஹாத் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் வலுவான தரப்புக்கு மத்தியில் அவை சென்று சேரவில்லை. வலதுசாரி உலமாக்களும் முதலாளித்துவம் சார்பான சேகுகளின் கைகளில்தான் அதிகாரம் இருக்கிறது. எனவே ஷரீஆவுக்கு எதிரான விமர்சனம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுமத சகோதரர்கள், ஊடகங்கள் இஸ்லாம் மீதும் ஷரீஆ சட்டம் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனரே?
இஸ்லாம் உலக மனிதர்களுக்காக அருளப்பட்ட மார்க்கம் என்றே அதன் போதனைகள், அதிகாரபூர்வ நூல்கள் கூறுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, சமூகத்திற்கோ, மொழிக்கோ உரியதல்ல. அதனால்தான் எல்லா மொழிகளிலும் எல்லாத் தேசங்களிலும் இஸ்லாத்தோடு இணைந்த சமூகங்கள் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றன. எனவே இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது, நபிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட தூதர் என்ற மாதிரியே இன்றைய முஸ்லிம் மனப்பாங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தவறான கட்டமைப்பாகும். இந்த தவறான கட்டமைப்பில் இருந்துதான் மேற்கூறிய கேள்வியே எழுகின்றது.
மாற்று மத சகோதரர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் மீதும் ஷரீஆ மீதும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்றால் நாம் அதை பொசிடிவாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்மறையாகச் சிந்திக்கத் தேவையில்லை. உரையாடலுக்கான வாயில், பண்பாடுகளுக்கிடையிலான உரையாடல் அந்த இடத்தில்தான் ஆரோக்கியமாகத் தொடங்குகிறது. அந்த வாயிலை நாம் மேலும் மேலும் திறந்து இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்கள் பற்றிய மேலும் நல்ல புரிதலை உருவாக்க முயலவேண்டுமே அல்லாமல் விமர்சனங்களை முன்வைப்பவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி நோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தால் நமக்கென்ன? நமக்குத் தெரிந்த இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் ஊடாகப் பெற்ற நல்ல பண்பாட்டையும் அவர்களோடு நாகரிகமாகப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாம் கூறும் பண்பாடாகும். எப்போதும் மூடுண்ட, அடைபட்ட போக்கை இஸ்லாம் விரும்புவதில்லை. திறந்த மனதுடன் மற்றப் பண்பாடுகளுடன் ஊடாடி, உரையாடி கலந்து பேசி மனித சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் மத்தியில் நடுநிலையான (உம்மத்தன் வசத்தன்) சமூகம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றே இஸ்லாமியப் போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஒரு முஸ்லிம் பிழையாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறான் என்றால் அதைப் பிழை என்று ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. பிழையென ஒத்துக் கொள்ளவில்லையானால் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பிழை என்றுதான் மாற்று மதத்தினர்கள் நினைப்பார்கள்.
ஊதியில் நடைமுறையில் உள்ள சட்டம் ஷரீஆ சட்டம் இல்லை என்று எப்படிக் கூற முடியும்?
நமது மார்க்க அறிஞர்கள் இஸ்லாம் என்றால் சஊதி என்றும் ஷரீஅத் சட்டம் என்றால் சஊதியிலுள்ள சட்டம் என்றும் ஒரு படிமத்தை நெடுங்காலமாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதனாலேயே இந்தக் குழப்பம் ஏற்படுகிறது. மற்றது, தூது அங்கிருந்து வந்ததாலும்  முஸ்லிம்களின் புனித பூமிகளாகக் கருதப்படும் மக்கா, மதீனா போன்ற இடங்கள் அங்கிருப்பதாலும் அவற்றுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கிடையில் யாத்திரைகள் இடம்பெறுவதாலும் முஸ்லிம் மனம் அங்கு மையங்கொள்வதால் இந்தப் பிரம்மை இலகுவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சஊதி நீண்ட நெடுங்காலமாக தனது பழங்குடித் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு பிராந்தியமாகும். நபிகள் மரணித்து மூன்று தசாப்தங்களுக்குள்ளேயே கிலாபத் ஆட்சி மன்னராட்சியாக மாறிவிடுகிறது. ‘பைத்துல்மால்’ முஸ்லிம் மன்னர்களின் அரண்மனைச் சொத்தாக மாறிவிடுகிறது. ஆட்சியாளர்களை சுதந்திரமாக மக்கள் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது. இன்றைய சஊதி அரேபியா நவீனத்துவ மாற்றங்களையும் ஆரம்பத்தில் பெரிதாக உள்வாங்கவில்லை. உஸ்மானிய சாம்ராஜியத்தின் இறுதிக் காலப்பகுதிகளிலும் அது அந்நிலமையிலேயே காணப்பட்டது. அறுபதுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பெற்றோலிய கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான் அதற்கான தொழில் நுட்பத்தை மேற்கு நாடுகளிலிருந்த தருவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது பல்வேறு பொருளாதார முயற்சிகள், எண்ணெய் சார் நிறுவனங்கள், சஊதிக்குள் தோற்றம் பெறுகின்றன. மத்திய கிழக்கில் கரையோரப் பிரதேசங்களில் பெரும் கடற் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்தான் பின்னால் ஆட்சிப் பொறுப்பையும் பொருளாதாரத்தையும் கையில் எடுக்கிறார்கள். மக்கா மதீனாவுக்குடையிலும் பல கோத்திரப் பிழவுகளும் சண்டைகளும் இருந்து வந்தன. இன்றும் கூட சுஊத் பரம்பரைக்கும் மதீனாவில் உருவாகும் தலைமைகளுக்குமிடையில் முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன. பழங்குடிக் கோத்திரங்களின் தலைவர்கள்தான் தலைமைத்துவத்திற்கு வருகிறார்கள்.
சஊதியில் அமுலிலுள்ள சட்டம் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் என்று கூறப்பட்டாலும் அது முழுமையான ஷரிஆ சட்டம் அல்ல என்பதே உண்மையாகும். சஊதி அறேபியாவில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப் படுவதாகக் கூறப்பட்டாலும் அதுவும் உண்மையல்ல. இஸ்லாத்தில் மிக எளிமையான ஒரு உண்மையைச் சொல்கிறேன். சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லாஹ்வுக்குரியது என்று நம்ப வேண்டும். சட்டம் இயற்றுவதற்கான உரிமை ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, குழுவுக்கோ சார்பாக இல்லாமல் பொதுவாக அமைய வேண்டும் என்பதே இதன் பின்னாலுள்ள நோக்கமாகும். ஆனால் சஊதியில் சட்டமியற்றும் அதிகாரம் குறிப்பிட்ட மன்னர் பரம்பரைக்கே வழங்கப்பட்டுள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியில் இஸ்லாமிய அரசுக்கான பாதை (அத்தரீக்கு இலா ஜமாஅத்தில் முஸ்லிமீன்) என்ற நூலில் சஊதி இஸ்லாமிய நாடு அல்ல, ஆனால் அங்கே முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வு செய்து எழுதியதற்காக அவ்வாய்வாளர் சஊதி அரசால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டமை இங்கு நினைவுகூறத் தக்கது.
சதாராண மார்க்கத்தில் புகுந்த நூதன அணுஷ்டானங்களை மாபெரும் ஷிர்க்காக, குப்ராக (மார்க்க விரோத செயல்களாகக்) கருதும் அளவுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தை அல்லாஹ் அல்லாத சுஊத் மன்னர் பரம்பரைக்குக் கொடுப்பதை எந்த சஊதி ஏஜென்டுகளும் விமர்சிக்க மாட்டார்கள். அதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு ஒப்பிடலாம். எனவே அங்கே எப்படி மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது?
இஸ்லாத்தின் மற்றொரு அடிப்படையான கருத்துத்தான் ஆட்சியாளர்கள் மக்களினால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது. சஊதியில் எப்போதாவது தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுந்தெடுக்கப்பட்ட வரலாறுகளும் இல்லை. எனவே ஜனநாயகத்தின் சிறந்த விழுமியங்களை அங்கே காண முடியாது. உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் உரிமை மறுப்பு, அறபி-அஜமி ஏற்றத் தாழ்வு, மன்னர் குடும்பத்திலிருந்து அடிமட்ட பெலுவிச் பரம்பரை வரை நிலவும் பல்வேறு கோத்திர சாதிப் படிநிலைகள் இன்றும் நின்றும் நிலவுகிறது. பெலுவிச் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்குடும்பங்கள் போன்ற வர்த்தக முயற்சிகளையோ அல்லது சமூக செயற்பாடுகளையோ செய்வதை அங்குள்ள சட்டம் தடுக்கிறது. கல்வி, நீதி, பொருளாதாரத் துறைகளில் இவ்வடிமட்ட கோத்திரங்களுக்கு சமவாய்ப்புக்கள் இல்லை. சஊதியில் பெருந்தொகையான உள்ளுர் வாசிகள் வறுமைக்கோட்டிற்குக் கீழேயே வாழ்கின்றார்கள். ரியாத் போன்ற புதிய நகரங்களை தமது கண்களால் காணாத பதவிகளும் (நாடோடி அறபிகளும்) வாழ்கிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் இன்றுவரை சரியாக முன்னெடுக்கப் படவில்லை.
வறுமை, அறியாமை, ஏற்றத்தாழ்வு, சுரண்டல், உரிமை மறுப்பு, ஏகாதிபத்தியம் போன்ற பல விடயங்களைக் களைந்து உண்மையான மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் அனைவரும் சமமாக உண்டு அனுபவித்து அறிவைப் பகிர்ந்து கொண்டு வாழும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிக் கொடுப்பதுதான் உண்மையான இஸ்லாமிய ஷரீஅத்தின் நோக்கமாகும். அப்போது குற்றங்கள், தவறுகள் குறையும். அதற்குப் பிறகும் குற்றங்கள் நடைபெறுமாக இருந்தால்தான் இஸ்லாமிய ஷரீவை காரணங்காட்டி தண்டனையை வழங்கலாம். வறுமையும் அறியாமையும் அதிகார துஷ்பிரயோகங்களும் நிலவும் ஒரு பிராந்தியத்தில் குற்றங்களை மட்டும் இழைக்கும் போது கத்தியைத் தூக்கிக் கொண்டு தண்டிக்க மட்டும் ஷரீஆ சட்டம் வரமாட்டாது. பஞ்சம் நிலவிய காலத்தில் உமர் (ரழி) அவர்கள் கைவெட்டுவதை நிறுத்திவைத்திருந்தார்கள்.
தண்டனை விடயத்தில் இரக்கங்காட்ட வேண்டாம் என்று சொல்லப்படுகிறதே, எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நான் தண்டிப்பேன் என்றல்லவா நபிகள் கூறியுள்ளார்கள்?
தண்டனை என்ற இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாமிய ஷரீஆவில் பல படிமுறைகள் காணப்படுகின்றன. குற்றவாளியா என்பது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். இதில் குற்றவாளி மேன்முறையீடு செய்வதற்கும் தனக்கான வழக்கறிஞர்களை நியமிப்பதற்கும் வழக்காடுவதற்கும் இஸ்லாமிய ஷரீஆவில் தாராளமாக இடமளிக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் மனிதர்கள் மத்தியில் மிகச்சரியான நீதியை வழங்குங்கள்” என்றுதான் அல்குர்ஆன் கூறுகின்றது. மிகச் சரியான முறையில் நீதி வழங்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் உலகத்தில் உள்ளதோ, உண்மையான நீதியை வழங்குவதற்கு எவை எல்லாம் தேவைப்படுகிறதோ அத்தனையையும் செய்து கொடுப்பது இஸ்லாமிய ஷரீஆவைப் பின்பற்றும் அரசின் கடமையாகும். ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது இஸ்லாத்தில் மிகப் பெரும் குற்றமாகும். பாத்திமா களவெடுத்தால் என்றுதான் நபிகள் சொல்கிறார்கள். பாத்திமா களவெடுக்கவில்லை. களவெடுத்தாரா என்பது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். அறபு மொழியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ‘இன்’ என்ற விகுதிதான் (தமிழ் மொழியில் ‘ஆல்’) அவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நபிகள் சட்டத்தின் அனைவரும் சமம் என்பதைத்தான் அந்த ஹதீஸிலே நாடுகிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் அந்தக் குறிப்பிட்ட சட்டம் நீதியான சட்டமாக இருக்க வேண்டும். நீதிக்குரிய அத்தனை தடயங்களையும் வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும். நபிகள் குற்றவாளியை பலதடவைகள் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். ஒரு குற்றவாளியை வுழுச் செய்துவிட்டு வருமாறு கூறினார்கள். அதற்குப் பிறகும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு வரவே தொழுதுவிட்டு வரும்படி கூறினார்கள். தொழுதுவிட்டு வந்த்தும் இறைவனிடம் பிரார்த்தித்து வரும்படி கூறினார்கள். அதன் பின்னர் அவர் தண்டனை கேட்ட போது ‘நீ வுழுச் செய்தாய் அல்லவா? ஆம், நீ தொழுதாய் அல்லவா? ஆம், நீ பிரார்த்தித்தாய் அல்லவா? ஆம், அதனால் உன்னுடைய குற்றம் மன்னிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். இதேபோன்று விபச்சாரக் குற்றத்திலும் காமிதிய்யா என்ற பெண்ணை குழந்தையை பெற்றெடுத்துவிட்டு வருமாறும் பெற்றெடுத்த பின்னர் வந்த போது பாலூட்டிவிட்டு வருமாறும் பாலூட்டிய பின்னர் வந்த போது பால்குடி மறக்கச் செய்துவிட்டு வரும்படி கூறியமையும் நம்முடைய கவனத்தைப் பெற வேண்டிய மிக முக்கியமான விடயங்களாகும்.
எனவே தண்டிப்பதுதான் இஸ்லாத்தின் என்றென்றைக்குமான தீர்வு அல்ல. நபிகள் யுகத்திலும் அதற்குப் பின்னர் வந்த நான்கு கலீபாக்கள் ஆட்சியிலும் விரல்விட்டு எண்ணக் கூடிய சில தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன. தண்டனைகளை குறைப்பதும் குற்றங்கள் உருவாகாமல் இருப்பதற்குரிய வழிகளை அடைத்து, வருமுன் காப்பதும்தான் இஸ்லாமிய ஷரீஆ கூறும் வழிமுறையாகும். தண்டனை ஒரு தற்காலிக ஏற்பாடே. மனிதனை மதங்கள் பண்படுத்தவே விரும்புகின்றன. மேலும் மேலும் பண்பாடுள்ளவனாக மாற்றுவதே இஸ்லாத்தின் மிகப்பெரும் அறமாகும். மறுமை நாள் வரைக்கும் மனிதர்களை தண்டித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. மனித சமூகம் பண்பட பண்பட தண்டனைகளின் கடுமையான போக்கையும் குறைத்துக் கொண்டு போக வேண்டும். வன்முறையற்ற தன்மையை சமூகம் களைந்து முன்னேற வேண்டும். அதுதான் மனித சமூகம் நாகரீகமடைகிறது என்பதற்கான அடையாளமாகும். அது மேலும் மேலும் பழங்குடித் தன்மைகளுக்கே போகுமாக இருந்தால் அது முன்னேற்றமல்ல.
தண்டனை தீர்மானிக்கப்பட்ட பின்னர் அதனை மாற்றவோ அல்லது மேன்முறையீடு செய்யவோ ஷரீஆ சட்டத்தில் அனுமதி இருக்கிறதா?
ஒரு பழங்குடிச் சமூகம் படிப்படியாக படிமலர்ச்சியடைந்து ஒரு நாகரீக நவீனத்துவ சமூகமாக உருவாகி வருவதைப் போன்று நீதித்துறையும் அதன் பழங்குடித் தன்மையிலிருந்து பஞ்சாயத்து விசாரணை முறைகளிலிருந்து படிப்படியாக இன்றைய நீதிவரைக்கும் பல்வேறு படிமுறைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இது இஸ்லாத்தின் ஷரீஆ சட்டத்திற்கும் பொருந்தும். பதினான்கு நூற்றாண்டு காலமாக அதனுடைய நீதித்துறை பல படிமுறை வளர்ச்சிகளை உலகின் பல் வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் நீதியை வழங்கி வளர்ந்துள்ளது. நபிகளின் ஆரம்ப காலத்திலும் அதற்குப் பின்னர் கலீபாக்களின் காலத்திலும் நபித்தோழர்கள் குற்றவாளிக்குச சார்பாக, எதிராக வாதாடியுள்ளனர். ஒரு குற்றவாளி நீதிச் சபைக்கு வருகின்றபோது அங்கிருக்கின்ற ஒரு நபித்தோழர் அவருக்காகத் தான் வாதாடப் போவதாக அறிவிக்கும் சுயாதீன, இடையீடுகளற்ற சுதந்திர நிலை நபித்தோழர்கள் யுகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய போது முன்னைய சமூகங்களின் நாகரீகங்களில் காணப்பட்ட நீதிமன்ற, நிருவாக முறைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஆனால் சஊதியில் நீதித்துறையில் செல்வாக்குச் செலுத்தும் ஆலிம்சாக்கள் (சலபி சிந்தனையாளர்கள்) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சட்ட சிந்தனைப் பள்ளிகளை (மத்ஹபுகள்) அதன் பன்மையான நியாயவியல் கருத்தாக்கங்களை, முடிவுகளை மறுக்கின்றவர்களாகவும் சொல்லுக்குச் சொல் (ஹர்பியூன்) ஷரீஆவின் அதிகாரப் பிரதிகளை வாசிப்பவர்களாகவும் இருக்கின்றனர். புனிதப் பிரதிகளுக்கான பல வாசிப்புக்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை.
கொலைத் தண்டனையை வழங்கிவிட்டு அது பிழையானது எனப் பின்னர் தெரிய வரும் போது அத்தண்டனையை திரும்பப் பெற்று குற்றவாளியைக் காப்பாற்ற முடியாது. அதைவிடக் குறைந்த சிறைத்தண்டனையை கொடுத்திருந்தால் ஒரு காலத்தில் நிரபராதி என நிரூபிக்கப்படும் போது விடுதலையாவதற்கு வழி இருக்கிறது. இந்த இடத்தில்தான் நவீன சமூகங்கள், மனித உரிமைப் போராளிகள் மரணதண்டனைக்கு மாற்றான தீர்வுகளை முன்வைத்து வருகிறார்கள். மரதண்டனையை விதிப்பதற்கு முன்னர் அதைப்பற்றி பல கட்டங்களில் மேன்முறையீடு செய்து, விவாதித்து, குற்ற தடயவியல் ஆதாரங்களை துருவித்துருவி ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும்.
மனித உரிமைகள் அமைப்புக்கள் அமெரிக்க, ஐரோப்பிய ஏஜென்டுகள் அல்லவா?
நாம் எப்போதும் கிளிப்பிள்ளை மாதிரி எதற்கெடுத்தாலும் மேற்கிலிருந்து வருகின்ற எல்லாவற்றையும் அதன் எல்லாப் பரிமாணங்களையும் சேர்த்து குற்றம் சாட்டி முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவதே நமது இன்றைய பொதுப்புத்தியாக இருக்கிறது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். மேற்கில் உருவாகின்ற கொள்கை, கோட்பாடுகளுக்கு இரண்டு பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் சமூக அரசியல், பண்பாட்டு தேவை நோக்கங்களை பூர்த்தி செய்யும் நோக்கங்களும் அக்கோட்பாடுகளில் இருக்க முடியும். மற்றது பொதுவாக அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் மானுட சமூகத்திற்கு தேவைப்படக்கூடியவையும் அக்கோட்பாடுகளில் இருக்க முடியும். இதற்கு முன்னரும் அவர்களுடைய பாடசாலை அமைப்பு, பல்கலைக்கழக முறைமை, நீதி மன்றம், பாராளுமன்றம், வீதிப்போக்குவரத்து என பல விடயங்களை பௌதீகத் தளத்தில் நாம் பெற்று முன்னேறியிருக்கிறோம். ரோம, பாரசீக நாடுகளில் காணப்பட்ட நிருவாக முறைகளை, சமூக வழக்குகளை கலீபாக்கள் எடுத்து அமுல்படுத்தியிருக்கிறார்கள். நவீன காலத்திலும் கலை, இலக்கியத் துறைகளிலும் நாடகம், கதை, நாவல் எனப் பல வடிவங்களைப் பெற்று நம்முடைய கலை இலக்கியங்களும் நம்முடைய பண்பாடுகளை பிரதிபலிக்கக் கூடிய கலை இலக்கிய ஆக்கங்களை நாம் உருவாக்க வில்லையா? அதைப் போன்றுதான் இந்த மனித உரிமைகள் விடயத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. அல்குர்ஆன், ‘மனிதனை நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம்’ என்று கூறுகிறது. அவனுடைய கண்ணியத்தை, மரியாதையை, பங்கப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் உரிமை மீறல்கள்தான். வாழ்வுரிமை, கல்வியுரிமை, கருத்துச் சொல்லும் உரிமை, செயல்படும் உரிமை என்று பல உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் கூரியுள்ளது என்றும் இஸ்லாத்தில் மனித உரிமைகள் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கைவிடுக்கத் தொடங்கிய பிறகுதான் நாம் இஸ்லாத்தை மறுவாசிப்புச் செய்து அதற்குச் சம்மாக நிறுத்திக் கொள்கிறோம். ஆசியச் சூழலில் இருக்கின்ற அதிகார வர்க்கங்கள் மக்களை, சமூகங்களை ஒடுக்குவதாலும் உரிமைகளை மறுப்பதாலும் அல்லது குறித்த ஒரு பண்பாடு அதிகாரத்தின் மையத்தில் உட்கார்ந்து கொண்டு மற்றப் பண்பாடுகளை விளிம்பு நிலைக்கு தள்ளுகின்ற போதுதான் மேற்கத்திய மனித உரிமைகள் அமைப்புக்களின் வருகைக்கான வாய்ப்பாகவும் வெளியாகவும் அமைந்துவிடுவதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பிராந்தியங்களில் நீதி கிடைக்காத போதுதான் நாம் மேற்குலகை நோக்கி நீதியை கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். போர்ச்சூழலில் மக்கள் ஒடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது அவர்களுக்கு உதவிக் கரம் கொடுத்து கரைசேர்த்தவர்கள் யார்? அறபு நாடுகளா? ஐரோப்பிய நாடுகளா? எங்கு மனிதாபிமானம் இருக்கிறது?
இந்தக் கேள்வியில் இன்னொரு உளவியலும் காணப்படுவதாக நான் உணர்கிறேன். நான் செய்ய வேண்டியதை இன்னொருவன் திறம்படச் செய்யும் போது அதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவனுடைய உள்நோக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் நோயாகும். உதாரணமாக உலகில் எங்கு அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் அங்கு ஐரோப்பிய அரச சார்பற்ற நிறுவனங்கள்தான் முன்நிற்கின்றன. செம்பிறைச் சங்கம் என்று ஒன்று இருந்தாலும் அதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் துன்பத்தில் உழலும்போது அவனுக்கு முதலில் ஓடோடிச் சென்று உதவி செய்ய வேண்டியவன் முஸ்லிம்தான். ஆனால் அத்தகைய பண்பாடு அறபுலகில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்பதுதான் உண்மை. இதன் கருத்து ஐரோப்பிய அரச்சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்நோக்கங்கள், உள்ளரசியல்கள் இல்லை என்று கூறவில்லை. ஒரு நல்ல பக்கமும் அவர்களிடம் உண்டு. ஒரு வியாபாரி வர்த்தகம் மட்டும் செய்யவில்லை. நாம் தூர இடங்களுக்குச் சென்று பெற வேண்டிய ஒரு பொருளை நமது காலடியில் கொண்டு வந்து தருகின்ற சேவையையும் செய்கின்றான். எனவே இந்த மனித உரிமைகள் அமைப்பு விடயத்திலும் இந்த மனநிலையோடுதான் அணுக வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றிலும் தமது மூக்கை நுழைத்து கருத்துச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள், ரிசானாவின் விடயத்தில் மௌனஞ்சாதிப்பது ஏன்?
கருத்து, அறிவு என்பது எப்போதும் அதிகாரம் சார்ந்தே இயங்குகின்றது. வர்க்க நலன்கள் சார்ந்துதான் அறிவு தொழிற்படுகின்றது. எனவே ஒவ்வொரு அறிவுக்கும் கருத்துக்கும் பின்னால் நுண்ணரசியல்கள் தொழிற்படுகின்றன. நான் இங்கு அரசியல் என்று குறிப்பிடுவது காலத்துக்குக் காலம் தேர்தல் மூலம் நடாத்தப்படும் கட்சி அரசியல் அல்ல. ஒவ்வொரு மனித செயற்பாட்டுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் அறிவு, மார்க்கம், பத்வா என்பவற்றுக்குப் பின்னாலும் தான் சார்ந்த நிறுவனங்கள், இயக்கங்கள், தன்னார்வக் குழுக்கள், அவற்றின் நலன்கள், போஷிப்புக்கள் பேன்றவற்றிலிருந்து தான் கருத்துக்களும் வெளிப்படுகின்றன. எனவே சஊதி சட்டம் அல்லது சஊதி ஷரீஆ சட்டம் என்பதையும் நாம் தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அதற்குப் பின்னாலும் மன்னர், கோத்திர நலன்கள், அவர்களின் உதவி பெறும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆலிம்கள் என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாபெரும் வலைப்பின்னல் இதற்குப் பின்னால் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டால்தான், ஏன் இவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகப் புரியும். மௌனம் சாதிப்பது என்பது மாற்றுக் குரல்கள், மாற்றுக் கருத்துக்கள் வந்துவிடக்கூடாது என்ற ஒரு அதிகார நுண்ணரசியல்தான். அதிகாரம் மௌனத்தை உற்பத்தி செய்கிறது. அதை தனது முகவர்களுக்குப் பரப்புகிறது. எனவே மௌனங்களை கலைப்பதன் ஊடாக அவர்களுடைய அறிவு அரசியலை அல்லது மார்க்க அரசியலை நாம் புரிந்து கொள்ள முடியும். (மேலதிக வாசிப்பிற்கு பார்க்க: கலைபடும் மௌனம்)
அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆனால் அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். ரிசானா இங்கு கொல்வதற்காக விமானம் ஏறிச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையை போக்கத்தான் செல்கிறாள். எனவே நபிகள் மக்களுக்காக, மக்களுக்கு மத்தியிலேயே, மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் தீர்வு சொல்பவராகவும் வாழ்ந்துள்ளார்கள். நபிமார்களின் பண்பே அதுதான். எனவே நபிமார்களின் வாரிசுகள் எனக் கருதப்படும் ஆலிம்களும் அந்தப் பண்பை கொண்டிருக்க வேண்டாமா?
சிலர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது மொழியறிவை, இலக்கியப் புலமையைப் பறைசாற்ற கவிதை, கதைகளை எழுதி மேலும் துன்பத்தையும் உணர்ச்சியையும் தூண்டிவிடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டுமல்லவா?
எல்லாவற்றுக்கும் பத்வா வழங்கிக் கொண்டிருப்பது மார்க்கமல்ல. மனிதன் உடல் மட்டும் கொண்டவன் அல்ல. அவன் உணர்ச்சிகளையும் கொண்ட கலவை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இஸ்லாத்தில் சட்டத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை வழங்கப்பட வில்லை. ஒருவருடைய துக்கம், கவலை, தீர்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. சிலர் அழுவார்கள். இன்னும் சிலர் பிறரிடம் கவலையைப் பகிர்ந்து கொள்வார்கள். எழுத்துச் செயல்பாடுள்ளவர்கள் என்ன செய்வார்கள்? கவிதையாகவோ, கதையாகவோ எழுதுவதன் மூலம் தமது மனப்பாரத்தை இறக்கி, தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். அல்குர்ஆனும் கூட முன்னைய சமூகங்களுக்கு நடந்த கதிகளை, துயர நிகழ்வுகளை கவலையோடு பகிர்ந்து கொள்கிறது. நபிகள், அவருடைய மகன் மரணித்த போது அழுதார்கள். நபிகள் மரணித்த போது அவரது தோழர் தோழியர் அழுதார்கள். நபிகளின் சீறா நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
எனவே கவலையை துக்கத்தை பகிர்ந்து கொள்வது மானுட இயல்பு. அவன் மரக்கட்டையாக இருக்க முடியாது. ஏன் மரத்துக்குக் கூட உணர்ச்சி இருக்கிறது. மனிதனுக்கு இருக்க வேண்டாமா? இது இஸ்லாத்தை வெறும் கோட்பாடாக, இறுகிய நெகிழ்வுத் தன்மையே இல்லாத, புத்தாக்கத்திற்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடமில்லாத ஒன்றாக தட்டையாகப் புரிந்து கொள்ளும்போதே இந்த சிக்கல் ஏற்படுகின்றது. நபிகள் போரில் வெற்றியடைந்த போது ஓரிடத்தில் தோழர்களுடன் உட்கார்ந்திருக்க ஒரு பெண் வந்து வெற்றியைக் கொண்டாடும் முகமாக ரபான் அடித்து கஸீதா படிக்க அனுமதி கேட்ட போது நபிகள் அனுமதித்தார்கள். மகிழ்ச்சியான செய்திகள் கேள்விப் படும்போது ஒருவரைச் சுற்றிச் சுற்றி குதித்து குதித்து காலை மாற்றி மாற்றி ஆடும் ‘ஹஜல்’ என்ற மகிழ்வு நடனம் நபிகள் யுகத்தில் காணப்பட்டது. ஜஃபர், அலி போன்ற நபித்தோழர்கள் ஆடியுள்ளனர். அவ்வாறுதான் துக்கத்தையும் கவலையையும் நபிகள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பிலால் மக்காவைப் பிரிந்து செல்லும் போது பிரிவுத்துயரை கவிதை மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
ரிசானாவின் விடயத்தில் சஊதி மன்னரோ இலங்கை அரசோ பொறுப்பாளர்கள் அல்ல என்று கூறப்படுகிறதே?
செய்வதை எல்லாம் செய்துவிட்டு செய்வது தெரிந்தும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தமது பொறுப்பிலிருந்து தப்பிக் கொள்ள முடியுமா? எந்த இரு புனித ஹரம் பள்ளிகளின் தலைவரோ அல்லது சஊதி அரசோ அதனது பழங்குடிகளின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததைப் போல தண்டனையைப் பெற்ற குடிமகளின் பிரதிநிதியாகிய ஜனநாயக சோலிஷ அரசும் அதன் தலைமைகளும் போராட்டத்தை கொண்டு செல்வதற்கான பொறுப்பும் கடமையும் உண்டென்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று சொல்கிறார்களே?
மத்திய கிழக்கில் ‘சன்ஆவிலிருந்து ஹழரமௌத் வரை ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யக்கூடிய காலம் வரும்’ என நபிகள் தனது தோழர் ஒருவரின் கேள்விக்கு பதில் கொடுக்கிறார். ஒரு பெண் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் என்று நபிகளின் வார்த்தை உள்ளது. நபிகளின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் அதன் வழியாக அவர் உருவாக்கிய அரசியல், சமூக இயக்கத்தை வைத்து அவதானித்தால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும். நபிகள் போல் ஆண், பெண், அரவாணிகள் சமத்துவத்தை அவர் காலகட்டத்தில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்திய இன்னொரு தலைவர் இல்லை என்றே சொல்ல முடியும் (பார்க்க: புன்னகைக்கும் நபிகள்) நபிகள் அதை நடைமுறையில் செய்து காட்டியவர். நபிகளின் சாம்ராஜியத்தில் ஆண்-பெண்-அரவாணிகள் என்ற பேதம் எவ்வகையிலும் சாத்தியப்படவில்லை. அண்மையில் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹரம் ஷரீபில் இருந்த அரவாணிகளை சஊதி அரேபிய அரசு வெளியேற்றியுள்ளது. சமய வழிபாடுகள், பெருநாள் விழாக்கள் தொடக்கம் கல்வி, தொழில், பொதுப் பணிகள் என்ற தளங்களில் ஆணுக்கு நிகராக பெண்களை அவர் நிலை நிறுத்தியுள்ளார். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும் தன்னிலையையும் உருவாக்கிக் கொள்ள உந்துதல் அளித்துள்ளார். ஆணாதிக்க சொத்துரிமை உள்ள சமூகத்தில் பெண்களின் சொத்துரிமையை கடுமையாக வலியுறுத்தினார். பெண்களை பொது வாழ்க்கையில் பொதுப் பணிகளில் பங்குகெள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
சமய வழிபாடுகள், தொழில் தேவைகள், சமூகப் பொதுப் பணிகள் என்ற அடிப்படைகளிலிருந்து நபிகள் பெண்களின் நடமாடும் உரிமை என்ற எண்ணக்கருவை வந்தடைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். நடமாடும் உரிமையில் வதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் கல்வியில், தொழிலில், சமூகப் பங்கேற்பிலும் கட்டுப்பாடுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெண்களை ஒடுக்க நினைப்பவர்கள் முதலில் கைவைப்பதே இந்த நடமாடும் உரிமையில்தான். பள்ளிவாயலுக்குச் சென்று வழிபடும் உரிமை, கல்வி கற்றல், தொழில் செய்தல், சமூகப் பணிகளில் ஈடுபடல் போன்றவற்றில் முழுமையான உரிமையைப் பெற்றுக் கொள்ளாத பெண் குடும்பத்திலும் அடிமையாகவே நடத்தப்படுவாள். நடமாடும் அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பயணம் செய்யும் சுதந்திரம் இல்லாமல் அவளுடைய ஆளுமை வளர முடியாது. பெண்கள் புழங்கும் வெளி சுருக்கப்பட்டால் அவள் ஆன்மீகப் பக்குவம் அடையவும் மாட்டாள்.
எனவே பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்பதை இந்தக் கோணத்திலிருந்தே நாம் அணுக வேண்டும். பெண்களை முடக்கி வைத்திருந்த, பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அக்கால காட்டறபிகளின் கொடும் பிடியிலிருந்து பெண்களை ஐந்து நேரம் பள்ளிக்கனுப்பி அகபா அரசியல் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவைத்து நபிகள் உருவாக்கிய முஸ்லிம் பெண்களை நோக்கி இவ்வாறு சொல்வது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட, சமயவாதிகளின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்தாகவே நாம் எடுக்க வேண்டும். வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு நீ வராதே! அப்படி நீ வந்தால் நான் உன்னைக் கொல்லுவேன் என்ற மிரட்டல் அறிவிப்புத்தான் அது. பெண்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆணாதிக்க அரசியல் தன்மை கொண்ட நாங்கள் ஷரீஅத்தின் பெயரால் என்னவும் செய்வோம் என்று சொல்வது போலதான் அதைக் கருத வேண்டும். பெண்கள் பொது வெளியிலிருந்து மீண்டும் இருண்ட சமயலறைகளுக்குள் அனுப்பப்பட வேண்டும் என்பது நபிகள் உருவாக்க விரும்பிய அல்லது தனது காலத்தில் உருவாக்கிக் காட்டிய அந்த வழிகாட்டலை மறுப்பதாகும். குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்களும் பெண்களும் வெளியேறிச் செல்வது என்பது வேறு. தற்போது ரிசானாவுக்கு சஊதியில் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இவ்வாறு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்வதுதான் காரணம் என்று கூறுவதுதான் பொருத்தமற்றது. இவ்விரண்டையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

சனி, 28 ஏப்ரல், 2012

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். புகாரி (5141) எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21) எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற் பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) முஸ்லிம் 2611 தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும் தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி (6612 நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம். எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும். நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆண் அப்பெண்ணுடன் ஒட்டி உறவாடினால் அவளுடன் உடலுறவு கொண்டால் அதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டைக் கட்டிப்பார். திருமணத்தை நடத்திப்பார் என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணத்தை பாரதூரமான விஷயமாக சமுதாயம் ஆக்கிவிட்ட காரணத்தால் பெண் பேசப்பட்டு திருமணத்துக்காக பல வருடங்கள் ஆண்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இஸ்லாம் காட்டாத விதிமுறைகளை நம்மீது நாமே விதித்துக் கொள்வதால் தான் இவ்வாறு மார்க்க வரம்புகளை மீறக்கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படுகிறது. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது.

சனி, 11 பிப்ரவரி, 2012

ஜீவகாருண்யமும் பெருமானாரும்


 
عن سهل بن عمرو رضي الله عنه قال مر رسول الله ببعير و قد لحق ظهره ببطنه فقال اتقوا الله فى هذه البهائم المعجمة اركبوها صالحة و كلوها صالحة
 
 
  
 
நபித்தோழர் சஹல் இப்னு அம்ரு அவர்கள் அறிவிக்கிறார்கள் உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஒரு
 
ஒட்டகத்தை கடந்து சென்றார்கள் அந்த ஒட்டகத்தின் வயிறு முதுகுடன் ஒட்டிய நிலையில் இருந்தது.  இதை கண்ட
 
நபியவர்கள் இந்த வாயில்லா பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள், நல்ல முறையில்
 
அவற்றில் பயணம் செய்யுங்கள் இன்னும் அவற்றிலிருந்து நல்ல முறையில் சாப்பிடுங்கள்.
 
 
 
 
திருக்குர்ஆனில் நபியவர்களை இறைவன் அறிமுகப்படுத்தும்போது இப்படி கூறுவான் “  உங்களை உலகத்தாருக்கு ஓர்
 
அருட்கொடையாக அனுப்பியுள்ளோம்”.
 
 
அந்த காருண்ய நபி தன் தோழர்களையும், உலக அழிவு நாள் வர இருக்கிற மக்களையும் எப்படி பக்குவப்படுத்தினார்கள்
 
என்பதே ஒரு அழகிய வரலாறு.
 
 
அநீதி என்பதற்கு இமாம்களின் விளக்கம் இவ்வாறு உள்ளது “ ஒரு பொருளை அதன் இடத்தில் அல்லாது வேறொரு இடத்தில்
 
வைப்பது.எத்துணை அற்புதமான அகண்ட பொருளிது.
 
 
கல்வியை தேவையுள்ள இடத்தில் கொடுக்காமல் இருப்பதும், தேவையில்லாத இடத்தில் கொடுப்பது அநீதம்.
 
பொருளுக்கும், கண்ணியத்திற்கு இது போன்றே விளக்கங்கள் நீள்கிறது.
 
 
இது ஒரு அழகிய விதி.
 
படித்த பண்டிதரிலிருந்து பாமரன் வரை விளங்குவதற்கு எளிதாக.
 
இன்னும் தங்களின் செயல்களை தாங்களே சீர்செய்து கொள்வதற்கு தோதுவாக,
 
இது எளிது படுத்தி அமைத்து தரப்பட்ட ஒரு செய்தி.
 
ஒவ்வொரு செயலையும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற அணுகுமுறை உள்ளது.
 
அவற்றை அனைத்தையும் போதிக்க வந்தவர்கள் தான் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.
 
அந்த காலத்து எதிர்மறை சிந்தனையுடையவர்கள் ஸஹாபக்களை பார்த்து 
 
“ முஹம்மது உங்களுக்கு சிறுநீர் கழிப்பது எப்படி? என்றெல்லாம் சொல்லித்தருகிறாராமே”
 
என்று கிண்டல் நிறைந்த வார்த்தைகளை உதிர்த்தபோதெல்லாம்.
 
நபித்தோழர்கள் உதிரம் சூடேராமல் அவர்களுக்கு அழித்த நேர்மறை சிந்தனைக்குரிய வார்த்தைகள் இதுவே
 
“ எங்கள்  தூதர் எங்களுக்கு எப்படி சிறுநீர் கழிப்பதென்று கூட கற்றுக்கொடுக்கிறார்”.
 
அந்த காலத்தின் சூழ்நிலை ஒரு அழகிய உதாரணம் இதோ.
 
பெரிய மனிதர்கள் கூட கூட்டமாக நின்று கொண்டு சிறுநீர் கழித்து யாரின் சிறுநீர் அதிக தூரம் செல்கிறது என்று போட்டிகள்
 
நடத்திக்கொண்டிருந்த காலம்.
 
இந்த காலத்தில் சிறுநீர் கழிக்கும் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து ஒரு உயர்ந்த அறிவியல் அன்றோ.
 
அப்படி தான் நபியவர்கள் ஒவ்வொரு நிலையாக பார்த்து தனது உம்மத்தை சரிசெய்தார்கள்.
 
ஆகையால் தான் தன்னைக்குறித்து இவ்வாறு கூறினார்கள்
 
انما بعثت معلما
 
”நான் அனுப்பப்பட்டதெல்லாம் ஒரு ஆசானகத்தான்”.
 
வாய் உள்ள பொருடகளிடம் எப்படி நடக்கவேண்டும் என்று சொன்ன பெருமானார் அவர்கள்.
 
வாயில்லா உயிர்களின் ஜீவகாருண்ய விஷயத்தில் மிக எச்சரிக்கையாக தனது உம்மத்திற்கு பாடம் நடத்திவிட்டு
 
சென்றார்கள்.
 
எந்த ஒரு உயிரை அறுத்து பலியிடுவதற்கு முன் கத்தியை தீட்டு என்று புத்தியை தீட்டினார்கள்.
 
அது போன்று மற்ற உயிர்களையும் அதை ஒரு உயிர் என்று மதித்து அதனிடம் நடந்துகொள்ளுங்கள்.
 
அந்த உயிர்களிடம் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்று கூறினார்கள்.
 
ஜீவகாருண்ய விஷயத்தில் அதை அருத்து பழியிடுவதே தவறு, அத்துணை பொருடகளிடம் அன்பு கொள்ளவேண்டும்.
 
சீறி வரும் பாம்பை கூட அன்புக்கண்கொண்டுதான் பார்க்கவேண்டும் என்று அதற்கு பால் உற்றும் மக்கள் மத்தியில்.
 
எதை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று நீதமான முறையைப்பயிற்றுவித்தார்கள்.
 
ஒரு பூனையை கட்டிவைத்து அதற்க்கு உணவு தராத பெண் நரகம் சென்றால் என்று சொல்லும் போதே.
 
உயிர்களிடம் காட்டவேண்டிய நிலையை சுட்டிக்காட்டினார்கள்.
 
ஒரு உயிருள்ள பொருளோ அல்லது ஒரு உயிரற்ற பொருளோ அதோடு ஒரு முஃமின் நடந்துகொள்ளும் விதம் அழகானது.
 
இன்று கூட வீட்டில், அலுவலகத்தில் பொருடகளை, கோப்புகளை, டைரிலகளை வேகமாக நம்மில் பலர் போடுவதை
 
பார்த்திரும்போம்.
 
அது போன்று கார், பைக் சாவிகளை முதல் நாள் இரவு தூக்கி விசிய இடம் தெரியாம், தேடுவதில் நேரம் செலவழித்து
 
டென்ஷனோடு அலுவலகம் செல்பவர்களை பார்த்திருப்போம்.
 
இது ஒரு முஃமினின் குணமாக இருக்க முடியாது என்பதையே நபியவர்கள் அநீதத்தை விவரிக்கும் போது கூறினார்கள்
 
“ ஒரு பொருளை அது அல்லாத வேறு இடத்தில் வைப்பது” ( மீண்டும் நினைவு படுத்த எழுதுகிறேன்).
 
தமிழிலே சொல்வார்கள் “ பெரிய மனிதர்கள் என்பவர்கள் பெரிய பெரிய செயலை மட்டும் செய்பவர்கள் அல்ல மாறாக
 
தங்களின் சின்ன சின்ன விஷயத்திலும் கவனமாக இருப்பர்கள்.”
 
அதை தான் நபியவர்கள் தன் உம்மத்துக்கு போதித்து சென்றார்கள்.
 
என் தந்தையார் அடிக்கடி சொல்லுவார்கள் “ எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்தால் மீண்டும் தேடவேண்டியதில்லை”
 
இன்று நம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை தொலைத்து விட்டு அதை தேடுவதிலே அதில் நேரம்
 
செலவிடுகிறோம்.
 
 
அது போன்றே நபியவர்கள் தங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பெயர் வைத்து அழைக்கும் பழக்கம் கொண்டவர்கள்.
 
நபியவர்களின் ஒட்டகத்திற்கு பெயர் கஸ்வா
 
அவர்களின் கழுதைக்கு பெயர் உபைர்
 
நம் இன்று பொதுவாக நம் வாகனங்களில் நம் பிள்ளைகளின் பெயர்களை எழுதி வைக்கிறோம்.
 
ஆனால், நபியவர்கள் அதைக்கென்றே தனியான பெயர்வைத்து அன்போடு அதன் பெயரை செல்வார்கள்.
 
இப்படி செய்வது ஒரு ஸுன்னா தான்.
 
எத்துணை அற்புதமான நபி எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
 
நபியவர்களின் வரலாறுகள் முழங்கப்படும் இந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் நபியவர்களின் சுன்னத்துக்களை
 
நமதாக்குவோம்.
 
 
இம்மை, மறுமை வெற்றிகளை எளிதாக்குவோம்.
 
அல்லாஹும்ம ஸல்லி அலா சைய்யிதினா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா சைய்யிதினா இப்ராஹிம வ அலா அலி
 
இப்ராஹிம இன்னக ஹமீதுன் மஜீத்.
 
 
 
- அபூ புஷ்ரா ஹஸனீ

சனி, 10 டிசம்பர், 2011

சியாரதுல் குபூர் - மண்ணறைகளைத் தரிசித்தல். தொடர் - 01


மேற்கண்ட தலைப்புத் தொடர்பான விபரங்களை நான் எழுதக் காரணம் என்னவெனில். வஹ்ஹாபிகள் “சியாரதுல் குபூர்” “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று கூறிவருவதும், மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்து

வருவதுமேயாகும். மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு நபீ ஸல் அவர்கள் “சியாரதுல் குபூர்” என்று பெயர் சொல்லியிருக்க வஹ்ஹாபிகளோ அதற்கு “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று பெயர் சொல்வதிலிருந்து அவர்கள் நபீ ஸல் அவர்களைக் கூடப் பிழை கண்டுள்ளார்கள் என்பதும் மண்ணறைகளைத் தரிசிப்பவர்களை “கப்று” வணங்கிகளென்று அவர்கள் சொல்வதிலிருந்து நபீ ஸல் அவர்களையும் “கப்று” வணங்கி என்று சொல்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?

எனவே, இக்கட்டுரையில் மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரங்கள் எழுதுவதுடன் அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் அது எந்த வகையிலும் “கப்று” வணக்கமாகாதென்பதையும், மேலும் மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுகிறேன்.மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஆதாரங்களையும், விளக்கங்களையும் எழுதுமுன் “சியாரதுல் குபூர்” என்ற வசனம் தருகின்ற வெளியரங்கமான, உள்ளரங்கமான கருத்தையும், தத்துவத்தையும் எழுதுகிறேன்.இதைத் தொடர்ந்து மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் கிடைக்கின்ற பலாபலன்களையும், ஆன்மீக நற்பேறையும் அவ்லியாக்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன். சியாறதுல் குபூர் இந்த வசனத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று சியாறத் மற்றது குபூர்.சியாறத் என்ற சொல்லுக்கு சந்தித்தல், தரிசித்தல் என்று பொருள்வரும்.

குபூர் என்ற சொல்லுக்குச் சுருக்கமான பொருள் புதைகுழி என்பதாகும். இது “மையித்” பிரேதத்தைப் புதைக்கும் குழியைக் குறிக்கும். இதை மண்ணறை என்றும் சொல்வர். முஸ்லிம்கள் இதற்கு “கப்று” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்துவர். “சியாறதுல் குபூர்” என்ற வசனத்துக்கு புதைகுழிகளை, பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தரிசித்தல் அல்லது சந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனம் நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளில் பல இடங்களில் வந்துள்ளது.இந்த வசனம் புதைகுழிகளைச் சந்திப்பதைக் குறிக்குமேயன்றி புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திப்பதைக் குறிக்காது. ஆயினும் இதே வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்வதற்கும் இடமுண்டு. புதை குழிகளைச் சந்திப்பதும், அங்குள்ளவர்களைச் சந்திப்பதும் சந்திக்கச் செல்பவனைப் பொறுத்த விடயமாகும்.அவன் அங்கு அடக்கப்பட்டுள்ளவரைச் சந்திக்குமளவு மனவலிமையும், ஆன்மீகப் பலமும் பெற்றவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். சந்திப்பவன் அங்கு அடக்கப்பட்டவரைச் சந்திக்குமளவு ஆன்மீக சக்தி பெறாதவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். நபீ ஸல் அவர்கள் மேற்கண்ட இருவரையும் கருத்திற் கொண்டுதான் இந்த வசனத்தைக் கொண்டு வந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.எதைச் சந்தித்தாலும் சந்திப்பில் பொதுவாக நன்மையுண்டு என்பது தெளிவாகிறது.இந்த வசனம் நபீ ஸல் அவர்களால்

زياَرَةُ اَهْلِ الْقُبُوْرِ

புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று சொல்லப்பட்டிருந்தால் ஆன்மீக வலிமை பெறாத சாமானிய மக்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டாமற் போய்விடுமென்பதை அறிந்ததினால்தான் உலக மக்களின் அருளான நபீ ஸல் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இங்கு இன்னுமொரு உண்மை மறைந்திருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. அதாவது புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திக்காவிட்டாலும்கூட அக் குழிகளைச் சந்திப்பது மட்டுமே ஒரு வணக்கமென்றும், அதைக் கொண்டு சந்திப்பவனுக்கு நன்மையுண்டு, ஆன்மீகப் பயனும் கிடைக்குமென்றும் விளங்குகிறது.
ஞானிகள் கூறும் ஆன்மீகப் பயன்

அஷ்ஷெய்கு அபூஉத்மான் அல்மக்ரிபீ றஹ் அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அஸ்ஸெய்யித் அபுல் மவாஹிப் அஷ்ஷாதுலிய்யி றஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு வலீயின் “கப்று” சமாதியைத் தரிசித்தால் அங்கு சமாதி கொண்டுள்ள வலீ தரிசிப்பவரை நன்றாக அறிந்து கொள்கிறார். தரிசிப்பவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் கூறுகிறார். தரிசிப்பவர் அங்கு அல்லாஹ்வை “திக்று” நினைத்தால் அந்த வலீயும் இவருடன் சேர்ந்து அல்லாஹ்வை நினைக்கிறார். குறிப்பாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் அந்த வலீ எழுந்திருந்து இவருடன் சேர்ந்து “திக்று” செய்கிறார். இறை ஞானிகளின் உள்ளங்கள் விளக்கமின்றி எதையும் அறிவிக்கமாட்டா.

வலீமார் தமது சமாதிகளில் உயிரோடிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்கள் மரணிப்பதானது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபோதல் போன்றதாகும். அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு சங்கையுடனும், கண்ணியத்துடனும் இருந்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறார்கள். அவர்கள் உலகில் வாழ்ந்த போது மற்றவர்கள் அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். ஒரு வலீ இறைநேசர் மரணித்துவிட்டால் அவருக்காக எல்லா நபீமார்களினதும், வலீமார்களினதும் “அர்வாஹ்” உயிர்கள் ஜனாஸஹ் தொழுகை தொழுகின்றன.வலீமார்களிற் சிலர் தாம் உயிரோடிருந்த காலத்தில் தமது “முரீத்” சிஷ்யர்களுக்கு உதவி உபகாரம் செய்ததை விடத்தாம் மரணித்த பின்னர் அவர்களுக்குக் கூடுதலான உதவி உபகாரம் செய்வார்கள். மரணித்தால் அவர்களின் வலிமை கூடுமேயன்றிக் குறையாது.

மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாவர். அல்லாஹ் அவர்களை எந்தவொரு வாஸிதஹ் – ஊடாக உதவியுமின்றித்தானே ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அல்லாஹ் அவர்களைத் தனது வலீ – நேசர்கள் மூலம் ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த வலீ மரணித்தவராயிருந்தாலும் சரியே. அவர் தனது மண்ணறையில் இருந்து கொண்டே தனது சிஷ்யனை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிஷ்யனுடன் உரையாடுகிறார். அவனும் அதைக் கேட்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் எந்த ஓர் ஊடக உதவியுமின்றி நபீ ஸல் அவர்களே நேரடியாகக் கண்காணித்து ஆன்மீகத்தில் வளர்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் நபீ ஸல் அவர்கள் மீது அவர்கள் அதிகமாக ஸலவாத் சொல்வதேயாகும்.

தொடரும்...