மேற்கண்ட தலைப்புத் தொடர்பான விபரங்களை நான் எழுதக் காரணம் என்னவெனில். வஹ்ஹாபிகள் “சியாரதுல் குபூர்” “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று கூறிவருவதும், மண்ணறைகளைத் தரிசிக்க வேண்டாமென்று பிரச்சாரம் செய்து
வருவதுமேயாகும். மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு நபீ ஸல் அவர்கள் “சியாரதுல் குபூர்” என்று பெயர் சொல்லியிருக்க வஹ்ஹாபிகளோ அதற்கு “இபாததுல் குபூர்” மண்ணறைகளை வணங்குதலென்று பெயர் சொல்வதிலிருந்து அவர்கள் நபீ ஸல் அவர்களைக் கூடப் பிழை கண்டுள்ளார்கள் என்பதும் மண்ணறைகளைத் தரிசிப்பவர்களை “கப்று” வணங்கிகளென்று அவர்கள் சொல்வதிலிருந்து நபீ ஸல் அவர்களையும் “கப்று” வணங்கி என்று சொல்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?
எனவே, இக்கட்டுரையில் மண்ணறைகளைத் தரிசிப்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரங்கள் எழுதுவதுடன் அந்த வழிகேடர்கள் சொல்வதுபோல் அது எந்த வகையிலும் “கப்று” வணக்கமாகாதென்பதையும், மேலும் மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஏனைய விபரங்களையும் எழுதுகிறேன்.மண்ணறைகளைத் தரிசித்தல் தொடர்பான ஆதாரங்களையும், விளக்கங்களையும் எழுதுமுன் “சியாரதுல் குபூர்” என்ற வசனம் தருகின்ற வெளியரங்கமான, உள்ளரங்கமான கருத்தையும், தத்துவத்தையும் எழுதுகிறேன்.இதைத் தொடர்ந்து மண்ணறைகளைத் தரிசிப்பதன் மூலம் கிடைக்கின்ற பலாபலன்களையும், ஆன்மீக நற்பேறையும் அவ்லியாக்களின் விளக்கத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறேன். சியாறதுல் குபூர் இந்த வசனத்தில் இரண்டு சொற்கள் உள்ளன. ஒன்று சியாறத் மற்றது குபூர்.சியாறத் என்ற சொல்லுக்கு சந்தித்தல், தரிசித்தல் என்று பொருள்வரும்.
குபூர் என்ற சொல்லுக்குச் சுருக்கமான பொருள் புதைகுழி என்பதாகும். இது “மையித்” பிரேதத்தைப் புதைக்கும் குழியைக் குறிக்கும். இதை மண்ணறை என்றும் சொல்வர். முஸ்லிம்கள் இதற்கு “கப்று” என்ற அறபுச் சொல்லையே பயன்படுத்துவர். “சியாறதுல் குபூர்” என்ற வசனத்துக்கு புதைகுழிகளை, பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட இடங்களைத் தரிசித்தல் அல்லது சந்தித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த வசனம் நபீ ஸல் அவர்களின் அருள் மொழிகளில் பல இடங்களில் வந்துள்ளது.இந்த வசனம் புதைகுழிகளைச் சந்திப்பதைக் குறிக்குமேயன்றி புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திப்பதைக் குறிக்காது. ஆயினும் இதே வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்வதற்கும் இடமுண்டு. புதை குழிகளைச் சந்திப்பதும், அங்குள்ளவர்களைச் சந்திப்பதும் சந்திக்கச் செல்பவனைப் பொறுத்த விடயமாகும்.அவன் அங்கு அடக்கப்பட்டுள்ளவரைச் சந்திக்குமளவு மனவலிமையும், ஆன்மீகப் பலமும் பெற்றவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். சந்திப்பவன் அங்கு அடக்கப்பட்டவரைச் சந்திக்குமளவு ஆன்மீக சக்தி பெறாதவனாயிருந்தால் அவனைப் பொறுத்து இந்த வசனத்துக்கு புதை குழிகளைச் சந்தித்தல் என்று பொருள் கொள்ளலாம். நபீ ஸல் அவர்கள் மேற்கண்ட இருவரையும் கருத்திற் கொண்டுதான் இந்த வசனத்தைக் கொண்டு வந்திருக்கலாமென்று கருத இடமுண்டு.எதைச் சந்தித்தாலும் சந்திப்பில் பொதுவாக நன்மையுண்டு என்பது தெளிவாகிறது.இந்த வசனம் நபீ ஸல் அவர்களால்
زياَرَةُ اَهْلِ الْقُبُوْرِ
புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்தித்தல் என்று சொல்லப்பட்டிருந்தால் ஆன்மீக வலிமை பெறாத சாமானிய மக்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டாமற் போய்விடுமென்பதை அறிந்ததினால்தான் உலக மக்களின் அருளான நபீ ஸல் அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை.இங்கு இன்னுமொரு உண்மை மறைந்திருப்பது அறிஞர்களுக்கு மறைவானதல்ல. அதாவது புதைகுழிகளில் உள்ளவர்களைச் சந்திக்காவிட்டாலும்கூட அக் குழிகளைச் சந்திப்பது மட்டுமே ஒரு வணக்கமென்றும், அதைக் கொண்டு சந்திப்பவனுக்கு நன்மையுண்டு, ஆன்மீகப் பயனும் கிடைக்குமென்றும் விளங்குகிறது.
ஞானிகள் கூறும் ஆன்மீகப் பயன்
அஷ்ஷெய்கு அபூஉத்மான் அல்மக்ரிபீ றஹ் அவர்கள் சொல்லத் தான் கேட்டதாக அஸ்ஸெய்யித் அபுல் மவாஹிப் அஷ்ஷாதுலிய்யி றஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஒரு மனிதன் ஒரு வலீயின் “கப்று” சமாதியைத் தரிசித்தால் அங்கு சமாதி கொண்டுள்ள வலீ தரிசிப்பவரை நன்றாக அறிந்து கொள்கிறார். தரிசிப்பவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் கூறுகிறார். தரிசிப்பவர் அங்கு அல்லாஹ்வை “திக்று” நினைத்தால் அந்த வலீயும் இவருடன் சேர்ந்து அல்லாஹ்வை நினைக்கிறார். குறிப்பாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் அந்த வலீ எழுந்திருந்து இவருடன் சேர்ந்து “திக்று” செய்கிறார். இறை ஞானிகளின் உள்ளங்கள் விளக்கமின்றி எதையும் அறிவிக்கமாட்டா.
வலீமார் தமது சமாதிகளில் உயிரோடிருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே. அவர்கள் மரணிப்பதானது பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டுக்குக் குடிபோதல் போன்றதாகும். அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு சங்கையுடனும், கண்ணியத்துடனும் இருந்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் இருக்கிறார்கள். அவர்கள் உலகில் வாழ்ந்த போது மற்றவர்கள் அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்தார்களோ அவ்வாறே அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். ஒரு வலீ இறைநேசர் மரணித்துவிட்டால் அவருக்காக எல்லா நபீமார்களினதும், வலீமார்களினதும் “அர்வாஹ்” உயிர்கள் ஜனாஸஹ் தொழுகை தொழுகின்றன.வலீமார்களிற் சிலர் தாம் உயிரோடிருந்த காலத்தில் தமது “முரீத்” சிஷ்யர்களுக்கு உதவி உபகாரம் செய்ததை விடத்தாம் மரணித்த பின்னர் அவர்களுக்குக் கூடுதலான உதவி உபகாரம் செய்வார்கள். மரணித்தால் அவர்களின் வலிமை கூடுமேயன்றிக் குறையாது.
மனிதர்களிற் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவர்களாவர். அல்லாஹ் அவர்களை எந்தவொரு வாஸிதஹ் – ஊடாக உதவியுமின்றித்தானே ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அல்லாஹ் அவர்களைத் தனது வலீ – நேசர்கள் மூலம் ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறான். அந்த வலீ மரணித்தவராயிருந்தாலும் சரியே. அவர் தனது மண்ணறையில் இருந்து கொண்டே தனது சிஷ்யனை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது சிஷ்யனுடன் உரையாடுகிறார். அவனும் அதைக் கேட்கிறான். மனிதர்களில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்கள் எந்த ஓர் ஊடக உதவியுமின்றி நபீ ஸல் அவர்களே நேரடியாகக் கண்காணித்து ஆன்மீகத்தில் வளர்த்து வருகிறார்கள். இதற்குக் காரணம் நபீ ஸல் அவர்கள் மீது அவர்கள் அதிகமாக ஸலவாத் சொல்வதேயாகும்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக