சனி, 10 டிசம்பர், 2011

ஹக்கும், கல்கும் ஒன்றா?

ஹத்தாத் இமாம் தரும் விளக்கம்.

இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் அவர்கள் ஹூசைன் (ரலி) அவர்களின் வழியில் வந்தவர்கள். இவர்கள் தம் மூதாதையின் பெயரால் “ஹத்தாதி” என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1044 இல் தர்யம் எனும் ஊரில் பிறந்தார்கள். பல அறிஞர்களிடமும், குறிப்பாக காளி ஸஹல் இப்னு அஹ்மது பாஹஸன் என்ற பெரியாரிடம் கல்வி கற்ற இவர்கள், சிறந்த அறிஞராகவும், மார்க்க மேதையாகவும், மெஞ்ஞானியாகவும் ஆகி பெரிய இமாமென மக்களால் பிற்காலத்தில் பாராட்டுப் பெற்றார்கள்.


பெரியார்களின் அடக்க விடங்களைத் தரிசிப்பதில் பேரார்வம் காட்டிய இவர்கள், ஹூது (அலை) அவர்களின் அடக்க விடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தரிசனம் செய்தார்கள். ஹிஜ்ரி 1080 இல் மக்கா, மதீனா ஆகிய நகரங்களல் தங்கி மக்களுக்கு அறிவுரை நல்கினார்கள். அப்போது இவர்களிடம் ஏராளமானோர் தீட்சை பெற்றனர்.சிறந்த இறைநேசரச் செல்வரான இவர்கள் தம்மிடம் வருபவர்களின் மனதிலுள்ள விருப்பங்களை “கஷ்பின்” (ஞானோதயத்தின்) மூலம் அறிந்து ஆசீர்வதிப்பார்கள் என்றும், அதன் காரணமாக அவர்களின் விருப்பங்கள் நிறைவேறின என்றும் கூறுவர்.இவர்கள் ஹிஜ்ரி 1132 இல் காலமானார்கள். இவர்கள் எழுதிய நூல்கள் அன்னஸாயிஹூத்தீனிய்யா, ரிஸாலதுல் மஜீத், இத்திஹாபுஸ் ஸாயில், அல் கிஸ்முத்தாலிது பீ கலாமில் மன்சூர், ரிஸாலதுல் முஆவனா ஆகியவை, அவற்றில் இறுதியாக கூறப்பட்ட நூலின் ஒரு பகுதி தமிழில் காயல்பட்டணம் வள்ளல் வாவு ஷாஹுல் ஹமீது அவர்களின் நினைவாக அவர்களின் மக்களால் அச்சிட்டப்பட்டு வெளிவந்துள்ளது. ஹத்தாது (ரஹ்) அவர்களின் றாதிபு சிறப்பு மிக்கதாகும் அதனை ஓதிய மக்களின் நாட்டங்கள் இறையருளால் நிறைவேறுகின்றன.

இறைவழி நடக்கும் நல்லடியார்களின் ஆத்மீக முன்னேற்றத்தை மனதிற் கொண்டு அவர்கள் இயற்றிய றாதிபு வெள்ளிக்கிழமை தோறும் இந்தியா, இலங்கைபோன்ற நாடுகளிலும், குறிப்பாக இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த ஊர்களிலும் பக்திப் பரவசத்தோடு ஓதப்பட்டு வருகிறது.ஹத்தாது றாதிபு என்ற பெயரால் அழைக்கப்பட்டுவரும் றாதிபு, பல அவ்றாது ஒதல்களை உள்ளடங்கியதாக இருக்கின்றது. அதில் பல அவ்றாதுகளைச் சேர்த்த இமாமவர்கள் முனாஜாத்து அடிப்படையில் பல பாடல்களையும் எழுதியுள்ளார்கள். அவை ஏகத்துவ ஞான தத்துவங்களை விளக்கமாக கூறுகின்றன. அந்தப் பாடல்களிற் சில பின்வருமாறு.

இலாஹில் கல்கு மித்லஹூபாப் அலா மாஅன் லதல் அஹ்பாப் பமாஉன் பில் பனாஇ ஹூபாப் வஹால் பகாஹூ யா அல்லாஹ். பஐன அன இதா அந்தா பிதாதீ தாயிமன் குந்தா பமா பிந்து வலா பிந்தா வலா ‘தா’ பைனனா அல்லாஹ் இறைவா! கல்கு எனும் பிரபஞ்சம் நீரின்மேல் எழுந்து நிற்கும் குமுழிபோன்றது. குமுழி என்பது உண்மையிலேயே அது குமிழியாயிருக்கும்போதும் தண்ணீர்தான்.

அது அழிந்து உடைந்த பின்னும் தண்ணீர்தான். இறைவா! என்னுடைய தாத்திலே (என்னிலே) நீ நிலைபெற்றிருக்கின்றபொழுது ‘அன’ நான் என்பது எங்கே? எனவே நான் உன்னைப் பிரியவுமில்லை, நீ என்னைப் பிரியவுமில்லை. இறைவா! எமக்கிடையில் ‘தே’ என்பதே இல்லை. மேற்கூறப்பட்ட பாடல்கள் மூலம் இமாம் ‘ஹத்தாத்’ (ரஹ்) அவர்கள் தவ்ஹீத் ஏகத்துவ தத்துவத்தை ஒழிப்பு மறைப்பு இல்லாமல் யாரும் எழிதில் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான உதாரணத்தின் மூலம் விளக்கியுள்ளார்கள்.

அப்பாடல்களைப் பாடுபவர்களில் அனேகர், அவைகளில் கூறப்பட்ட உண்மையான தத்துவத்தை அறியாமலேயே பாடலை மட்டும் பாடி மகிழ்கிறார்கள்.இவர்கள் பாடலின் இசையில் மயங்கி பலகோணங்களிலும் ஆடி அசைகிறார்களே அல்லாமல்அந்தப் பாடல் தரும் தத்துவத்தையுணர்ந்து பேரின்ப மது மயக்கத்தில் ஆடி அசைபவர்களாக இல்லை.அவர்களுக்கு அறபு மொழியின் பொருள் விளங்காமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் உலமாக்கள், மௌலவிகள் எனப்படுவோர் அறபு மொழியறிவு பெற்றிருந்தும் கூட அப்பாடல்களின் உண்மையை உணராமலிப்பது வேதனையாகவும், அவ்வண்மையை உணராமலேயே அதை மறுப்பது விந்தையாகவும் உள்ளது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் முதற் பாடில் ஹக்தஆலாவுக்கு நீரையும், அவனது படைப்புக்களுக்கு அந்த நீரில் உண்டாகும் குமுழிகளையும் உதாரணம் கூறியுள்ளார்கள்.

மேலும் குமிழி குமிழியாயுக்கும்போதும் அது தண்ணீர்தான். அது உடைந்த பின்னும் தண்ணீர்தான் என்ற தத்துவத்தையும் கூறியுள்ளார்கள். ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணம் காட்டுவதில் எவ்வித தவறுமில்லை. ஆயினும் அவனது படைப்புக்களில் எதையும் அவனுக்கு நிகரானதென்று கூறக்கூடாது. அவ்வாறு கூறுவது அசாத்தியமானதாகும். ஏனெனில் ‘ஷிர்க்’ இணை எண்பது எதார்த்தத்தில் இல்லாத ஒன்றேயாகும்.

அல்லாஹ்வுக்கு நிகராக எந்தவொரு வஸ்துவும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. ஆயினும் ஒருவரின் எண்ணத்தைப் பொறுத்துதான் ‘ஷிர்க்’ இணை ஏற்படுகிறதேயல்லாமல் ‘ஹகீகத்’ எதார்த்தத்தில் ‘ஷிர்க்’ என்பதே கிடையாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் உண்டு,ஆனால் அவனுக்கு நிகரில்லை என்பதற்கு குர்ஆன் ஷரீபில் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ‘வலில்லாஹில் மதலுல் அஹ்லா’ அல்லாஹ்வுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு. என்று குர்ஆனில் ஒர் இடத்திலும், ‘வலஹூல் மதலுல் அஹ்லா’ அவனுக்கு உயர்ந்த உதாரணம் உண்டு என்று குர்ஆனில் மற்றோர் இடத்திலும் ஹக்தஆலா கூறியுள்ளான்.எனவே, ஹக்தஆலாவுக்கு அவனது படைப்புக்களை உதாரணமாகக் கூறுவதில்த எவ்வித தவறுமில்லை. ஆனால் ‘மதல்’ என்ற உதாரணத்துக்கும், ‘மித்லு’ என்ற நிகருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு விளக்கமில்லாததால் ஒருவகை மயக்கம் ஏற்படுவதுண்டு. மேலே கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்காகிய அல்லாஹ்வுக்கு தண்ணீரை உதாரணமாகவும், கல்காகிய சிருஷ்டிகளுக்கு தண்ணீரினால் உண்டான குமுழியை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள்.

ஒன்றை இன்னொன்றுக்கு உதாரணம் கூறுவதானால் இரண்டுக்குமிடையில் எந்த வகையிலேனும் தொடர்பு இருத்தல் வேண்டும். இரண்டுக்குமிடையில் எவ்விததொடர்பில்லாமல் உதாரணம் கூறுதல் அர்த்தமற்றதாகும். முகம்மது சிங்கத்தைப் போன்றவன் என்று அவனை சிங்கத்திற்கு உதாரணமாக கூறினால் சிங்கத்துக்கும், முகம்மதுக்குமிடையில் எந்தவகையிலேனும் தொடர்பு இருந்தாக வேண்டும். முகம்மதுவிடம் சிங்கத்திடமுள்ள தன்மைகளில் ஒன்றான வீரம் இருக்குமானால் அவன் சிங்கத்தைப் போன்றவன் என்று கூறலாம். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், ஹக்தஆலாவுக்கு நீரையும், படைப்புக்களுக்கு குமிழியையும் உதாரணம் கூறியிருப்பதால் அந்த உதாரணத்தில் எந்த வகையில் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ந்தறிதல் அவசியம். இறைவனுக்கும், அவனது படைப்புகளான பிரபஞ்சத்துகுமிடையில் உள்ள தொடர்பு நீருக்கும், குமிழிக்குமிடையிலுள்ள தொடர்ப்பு போன்றதென்பது இமாமவர்களின் உதாரணத்திலிருந்து கிடைக்கப்பெறும் விளக்கமாகும்.

நீருக்கும், குமிழிக்குமிடையிளுள்ள தொடர்பு எத்தகையதென்றால், நீர் இல்லையானால் குமிழி இல்லையென்ற அளவுக்கு அவ்விரண்டுக்குமிடையில் தொடர்பு உண்டு. அதாவது குமுழி என்பது நீர்தான் என்பதாகும், மேலும் நீரில்லாமல் குமுழி உண்டாகவோ அல்லது நிலைபெற்றிருக்கவோ முடியாது. குமுழி என்ற பெயரைப் பெற்றிருப்பது நீரேயல்லாமல் வேறொன்றுமில்லை.குமுழியின் உருவத்தில் தோன்றியது நீரேயல்லாமல் வேறெதுவுமில்லை. குமுழி நீரின் கோலமேயன்றி அதற்கு வேறானதல்ல. குமிழி நீருக்கு வேறானதென்று யாரும் சொல்லவும் முடியாது. அதேபோல் குமுழியில் நீர் இல்லையென்றோ, அல்லது குமுழியின் இன்ன இடத்தில் நீருண்டு இன்ன இடத்தில் நீரில்லை என்றோ நம்பவும் முடியாது.இதேபோல் குமுழிக்கு தனியான, சுயமான ‘வுஜுது’ உள்ளமை கிடையவே கிடையாது. ஆயினும்மந்தக் குமிழி நீரின் ‘வுஜுதை’ உள்ளமையைக் கொண்டுதான் நிலை பெற்றுள்ளது.எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் தத்துவமிக்க உதாரணத்திலிருந்து ‘ஹுபால்’ எனும் குமுழி, நீரின் வேறாக வெளிப்பாடு என்பதும், நீர்தான் குமிழிக்கு மூலம் என்பதும்,அந்தக் குமுழி தனக்கு மூலமான நீருக்கு எந்த வகையிலும் வேறானதல்ல என்பதும், குமுழி எந்தக் காரணத்தைக் கொண்டும் நீரைப்பிரிந்திருக்க முடியாது என்பதும், குமுழி என்ற பெயர் அதன் உருவத்துக்குரியதல்லாமல் குமுழி என்பது அதன் கருவான நீருக்குரியதல்லவென்பதும்,

குமுழியானது குமுழி என்ற பெயரிலும், உருவத்திலும் இருந்தாலும் எதார்த்தத்தில் அது நீரேயல்லாமல் வேறல்லவென்பதும் தெளிவாகிவிட்டது. இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ள இவ்வுதாரணத்தின் மூலம் ஹக்தஆலாவினது ‘வுஜுது’ உள்ளமை நீரைப்போன்றதும், அந்த வுஜுதிலிருந்து உண்டான சர்வ சிருஷ்டிகளும் குமுழி போன்றது மாகுமென்பதும் தெளிவாகிவிட்டது. மேலும் நீரின் மேலேழுந்த நாட்டியமாடும் குமுழிக்கூட்டம் நீரைப் பிரியாததாயும்,அந்த குமுழிகள் நீருக்கு வேறாகாதவையாகவும் இருப்பது போலவே ஹக்த ஆலாவின் ‘வுஜுது’ உள்ளமை என்ற உள்ளமை என்ற நீரின் மேலெழுந்த நடனமாடும் பலகோடி சிருஷ்டிகள் அந்த வுஜுதெனும் நீரைப் பிரியாதவையாகவும், அதற்கு எந்த வகையிலும் வேறாகாதவையாகவும் இருக்கின்றனவென்பதும், குமுழி குமுழியாயிருக்கும் போதும் அது நீர்தான், அது உடைந்த பின்னும் அது நீர்தான் என்பது தெளிவாகிவிட்டது. இமாமவர்கள் தங்களின் இரண்டாவது பாடலில் என்னுடைய தாத்தில் (என்னில்) நீக்கமற நீ இருக்கும்பொழுது நான் எங்கே? ஆகையால் (நீயே நானாக வெளியாகியிருப்பதால்) உன்னைவிட்டும் நான் பிரிவதோ அல்லது என்னை விட்டும் நீ பிரிவதோ இல்லை. அதனால் நமக்கிடையில் ‘தே’ இல்லை என்று கூறி, முந்திய பாடலில் கூறப்பட்ட உதாரணத்தை தெளிவாக்கிப் பாடியுள்ளார்கள். குமுழியானது தண்ணீரிடம், நீரே! நீதான் நானாக (குமுழியாக) இருக்கும் பட்சத்தில் குமுழி எனும் நான் எங்கே இருப்பது என்று கேட்பதுபோல், இறைவா! குமுழிக்கு உவமிக்கப்பட்ட சிருஷ்டியான நான், உனக்கு வேறாகாத, உன்னைப் பிரியாத வெளிப்பாடாயிருக்கும் பட்சத்தில் குமுழி என்ற பெயரில் இருக்கும் எனக்கு ‘வுஜுது’ ஏது? நானே இல்லாமலிருக்கும்போது எனக்கு ‘வுஜுது’ எங்ஙனம் இருக்கும்! நீரின் வேறாகாத வெளிப்பாடாக குமுழி இருப்பது போலும், குமுழியை விட்டு நீரைப் பிரித்தெடுக்க முடியாமலிருப்பதுபோலும் உன்னை விட்டு என்னை பிரிக்கவோ, என்னை விட்டு உன்னை பிரிக்கவோ முடியாது.ஏனெனில் பிரித்தல் என்பதற்கோ, சேர்த்தல் என்பதற்கோ குறைந்தது இரண்டு வஸ்துக்கள் தேவை.

ஒரேயொரு வஸ்துவை சேர்க்கவோ, பிரிக்கவோ முடியாது, அது அசாத்தியமானதாகும். பலகோடிக் குமுழிகள் பல கோடி உருவங்களில் இருந்த போதிலும் அவை அனைத்தும் தண்ணீரின் வேறு படாத, தண்ணீரை விட்டும் எக்காரணம் கொண்டும் பிரிக்க முடியாதவைகளாயிருப்பதுபோல், பிரபஞ்சமெனப்படும் சர்வ சிருஷ்டிகள் அனைத்தும் ஹக்த ஆலாவின் வுஜுதுக்கு வேறுபடாதவைகளும், அவனுடைய பரிசுத்த ‘தாத்தை’ உள்ளமையை விட்டும் பிரிக்க முடியாதவைகளுமாகும். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள், இறைவா! எனக்கும் உனக்குமிடையில் ‘தே’ என்பதே இல்லை என்று கூறியதன் விளக்கம் என்னவெனில், அறபு மொழியில் ‘அன’ என்ற சொல்லுக்கு நான், என்ற பொருள் உண்டு. ‘அன’ என்ற சொல்லுடன் அறபு அட்சரங்களில் ஒன்றான ‘தே’ என்பதை சேர்த்தால் ‘அனத’ என்ற சொல் உண்டாகும்.அறபு இலக்கண இலக்கியப்படி ‘அனத’ என்ற சொல்லை ‘அந்த’ என்று மொழிந்து ‘நீ’ என்ற பொருளைத் தரக்கூடிய முன்னிலையைக் காட்டும் சொல்லாக உபயோகிக்க வேண்டும். எனவே, இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் ‘அன-அந்த’ நான்-நீ என்ற வேற்றுமைகளைவிட்டு, எல்லாமாய் நீ இருக்கும் பட்சத்தில் நீ என்றும், நான் என்றும் எங்ஙனம் பிரிக்க முடியும் என்று இறைவனிடம் கலிமாவின் உண்மையான ஏகத்துவ ஞானத்தை கூறுகிறார்கள். இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்களின் மேற்கூறப்பட்ட இரண்டு பாடல்கள் மூலம் கிடைக்கின்ற விபரத்தை சுருக்கமாக ஆராய்ந்தால் பின்வரும் விவரம் தெளிவாகும் அதாவது தண்ணீரினால் உண்டான குமுழிக்கு தண்ணீர்தான் வுஜுதாய் இருப்துபோன்று குமுழியானது தண்ணீரில் நின்றும் உண்டாகி அதைக்கொண்டே நிலைபெற்றிருப்பதைப் போன்றும் இன்னும் குமுழி தண்ணீரை விட்டும் எந்தவகையிலும் பிரியாமலும் அதற்குவேறுபடாமலும் இருப்பது போன்றும்தான் ஹக் தஆலா தனது படைப்புக்களுடன் இருக்கின்றான்.

அவனுடைய தாத் அல்லது வுஜுது உள்ளமை ஒன்றேயல்லாமல் அது பலதல்ல அந்த தாத்துக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ‘தன்ஸீஹ்’ ஒப்புவமையற்ற நிலை அது அரூபநிலை என்றும் சொல்லப்படும் மற்றநிலை ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை அது ரூபநிலையென்றும் அழைக்கப்படும். ‘தன்ஸீஹ்’ ஒப்புவமை அற்ற நிலை, அருப நிலை என்று அழைக்கப்டும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டாத கருப்பு வெள்ளை என்ற கட்டுப்பாடும் கட்டை நெட்டை என்ற கட்டுப்பாடும் மில்லாத எந்த அறிஞனாலும் அந்த வகையிலும் கட்டுப்படுத்தமுடியாத நிலையாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியாது. ‘அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள் ஆனால் அவனுடைய தாத்தை பற்றி சிந்திக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் அந்த தாத்துடைய இந்த நிலை (தன்ஸீக்) பற்றித்தான் கூறினார்களேயல்லாமல்

அவனுடைய ஸிபத் தன்மையைப்பற்றி சிந்திப்பதை தடுக்கவில்லை. படைப்புக்கள் யாவும் அவனுடைய ஸிபாத் தன்மைகளேயாகும். ‘தஷ்பீஹ்’ ஒப்புவமை உள்ள நிலை ரூப நிலையென்றழைக்கப்படும் நிலை சிருஷ்டிகளின் சிந்தனைக்கும் அறிவுக்கும் எட்டக்கூடிய நிறங்களைக்கொண்டும், கட்டை நெட்டையென்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய நிலையுமாகும். இறைவனுக்குரிய இந்த நிலை பற்றி சிந்திக்க முடியும்.சிந்திப்பதும் கடமை. தஷ்பீஹ் ஒப்புவமை உள்ள நிலைதான் படைப்புக்களாக அவன் வெளியாகியிருக்கும் நிலையாகும் இந்த தஷ்பீஹ் உடைய நிலை பற்றி சிந்திப்பதற்கு நாம் ஏவப்பட்டுள்ளோமேயல்லாமல் தடுக்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்தியுங்கள் என்று கூறியது தஷ்பீஹ் உடைய நிலையேயாகும். மேற்கூறப்பட்ட ஹக்தஆலாவின் ‘தன்ஸீஹ்’ ‘தஷ்பீஹ்’ ஆகிய இரண்டு நிலைகளையும் ஈமான் விசுவாசிப்பது கடமை.

இந்த கடமை ஞான வழி நடக்கும் சூபிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல விசுவாசிகள் யாவரும் நம்பவேண்டிய ஒன்றேயாகும். ஆனால் இந்த காலத்தைப்பொறுத்த வகையில் ஹக்தஆலாவின் தன்ஸீஹ், ஒப்புவமையற்ற நிலையைதான் விசுவாசிக்கின்றார்களேயல்லாமல் அவனுடைய மற்ற நிலையான தஷ்பீஹ் ஒப்புவமையுள்ள நிலையை விசுவாசிக்கிறார்கள் இல்லை.ஒரு விசுவாசி காட்டாயமாக விசுவாசிக்கவேண்டிய இந்நிலையை ‘ஷிர்க்’ இணை என்று கூறுகிறார்கள். ஈமானை தலைகீழாகப் புறட்டிவிட்டார்கள் தன்ஸீஹ் உடைய நிலையை ‘அல் பாதின்’ உள்ளானவன் என்ற திருநாமமும் தஷ்பீஹ் உடைய நிலையை ’அள்ளாஹிர்’ வெளியானவன் என்ற திருநாமமும் காட்டுகின்றன. ஒரு விசுவாசி அவ்விரு திருநாமத்தையும் நம்புதல் வேண்டும். மேலும் அவ்விரண்டும் திருக்குர்ஆன் வசனங்களில் வந்துள்ளதால் அவ்விரண்டும் குர்ஆன் வசனங்களைச் சேர்ந்ததேயாகும். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வசனங்கள் யாவையும் நம்பியவன்தான் குர்ஆனை நம்பியவனாவான். சில வசனங்களை மட்டும் நம்பிக் கொண்டு மற்ற வசனங்களை நம்பாதவன் குர்ஆனை நம்பியவனாக மாட்டான். குர் ஆன் வசனங்கள் யாவையும் நம்பாதவன் முஃமின் விசுவாசியாய் இருக்க மாட்டான் காபிரீன்களில் சிலர் குர்ஆனை முழுக்க நம்பாவிட்டாலும் அதிலுள்ள சில வசனங்களை நம்பியும் வேறு சில வசனங்களை நம்பாதவர்களாகவும் இருந்தார்கள்.அது பற்றி அல்லாஹ் குர்ஆனில் “யுஃமினூன பிபஹ்லின் வயக்புறூன பிபஹ்லின்’ அவர்கள் (காபிரீன்கள்) சில வசனங்களை ஈமான் கொள்கிறார்கள் சில வசனங்களை நம்பாமல் விடுகிறார்கள். காபிராகிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளான். எனவே ஹக் தஆலாவுக்குள்ள இரண்டு நிலைகளையும் நம்புவது குர்ஆனை நம்புவதேயாகும். குர்ஆனை நம்பாதவன் விசுவாசியாக முடியாததுபோல் அவ்விருநிலைகளை நம்பாதவனும் விசுவாசியாக மாட்டான் மேற்கூறப்பட்ட பாடல்களில் இமாம் ஹத்தாத் (ரஹ்) அவர்கள் இவ்வுண்மையைதான் நீரையும் குமுழியையும் உதாரணம் காட்டி விளக்கியுள்ளார்கள்.ஹத்தாத் இமாம் என்று சகல மக்களாலும் போற்றப்பட்டு வருகின்ற இமாம் அவர்கள் என்ன கொள்கையுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது அவர்களின் பாடல் மூலம் தெளிவாகிவிட்டது. மேற்கூறப்பட்ட கொள்கை விளக்கத்தை அறிவில்லாதவர்கள் மறுப்பதுண்டு அவர்களே அந்த பாடல்களை றாதிபு மஜ்லிஸ் சபைகளில் பாடுவதும் உண்டு.

பணத்திற்காக வாழும் அறிஞர்களுக்கு கொள்கை எதற்கு ? -முற்றும்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக