சனி, 10 டிசம்பர், 2011

இறை கொள்கை என்பது எது?

இறுதிப் பாகம்

அல்லாஹ் வேறு, சிருஷ்டி வேறு என்பதால் இஸ்லாமிய தத்துவம் மாசுபடுகிறதா?

படைத்தல் என்பதன் பொருள் அல்லாஹ் படைத்தான் என்றால் அதிகமனோரின் அபிப்பிராயப்படி அல்லாஹ் என்று ஒருவன் எங்கோ இருந்து கொண்டு ஒவ்வொறு சிருஷ்டியையும் (தட்சன் மேசையைப் படைப்பதுபோல்) படைக்கின்றான் என்று கருதுகின்றனர். இது அக்கீதாவுக்கு மாபெரும் பிழையாகும். காரணம் : நான் அல்லாஹ்வின் ஒளியாக வந்தவன் என்று சொன்னவர்கள் நபீகள் (ஸல்) அவர்களாயிருக்க, நபீகளாரின் ஒளி இறைவனின் aஒளிக்கு எங்ஙனம் வேறாக இருக்க முடியும். இறைவனின் ஒளியை பிரிக்கவோ அல்லது பங்கு வைக்கவோ முடியாது என்பது பொதுவிதி. உண்மை இவ்வாறிருக்க, இறைவனின் ஒளியில் ஒரு பகுதிதான் றசூலுல்லாஹ்வின் ஒளியாக வந்ததென்று சொல்வது மடமையிலும் மடமையாகும். எனவே, படைத்தான் என்றால் அவனே வெளியானான் என்றுதான் நம்பவேண்டும். முஹம்மது நபீயுடைய ஒளியாகவும் இவ்வுலகமாகவும் இவ்வுலகத்தின் எல்லாப் பொருட்களாகவும் அவனே வெளியானான் என்பதுதான் கலிமா கூறும் உண்மையான தௌஹீத்விளக்கமாகும். அல்லாஹ் என்பவன் தான் சிருஷ்டிகளைப் படைப்பதற்கு முன் எவ்வாறிருந்தானோ அதே நிலையில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமலும் அவன் இருந்தவாறேயிருக்க, முஹம்மதாயும், சர்வ பிரபஞ்சமாயும், வெளியானவன் அவனேதான். இதுவே தவ்ஹீத் என்பதன் அசைக்க முடியாத முடிவாகும். ஒரு பொருள் இன்னோரு பொருளாக வருவதற்கு மூன்று முறைகளுண்டு. 1. ஒரு பொருள் அழிந்து இன்னொரு பொருள் உண்டாதல் 2. பொருள் அழியாமல் மாற்றமடைந்து, விகாரப்பட்டு வேறொரு பொருளாகத் தோற்றமளித்தல். 3. ஒரு பொருள் அழியாமலும், விகாரப்படாமலும் அது எவ்வாறிருந்ததோ அவ்வாறே இருக்க, வேறொரு பொருளாகத் தோற்றல். இம் மூன்று முறைகளிலும் மூன்றாவது முறையே அல்லாஹ்வைப் பொறுத்து உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமேயன்றி, ஏனைய இரு முறைகளையும் எடுக்க முடியாது. காரணம்,

முதலாவது விதியின் படி மாம்பழத்தின் கொட்டையை பூமியில் நாட்டியபோது கொட்டையழிந்து மாமரம் வெளிவருவது போல், அல்லாஹ்வின் தன்ஸீஹ்- அரூப நிலை அழிந்துதான்,தஷ்பீஹ்-ரூப நிலை ஏற்படுகிறது என்று கொள்ள முடியாது. அழிவை ஏற்றுக் கொள்ளக்கூடியது பூரணத் தன்மையுடையதாயிருக்க முடியாது என்பது பொது விதி.ஆகவே, இக்கொள்கையும் தவ்ஹீதுக்கு நேர் மாற்றமான கொள்கையாகும்.

இரண்டாவது விதியின்படி பொருள் ஒன்றுதான் ஆனால் அது அழியாமல் விகாரப்பட்டு காட்சியளிக்கின்றது. உதாரணத்திற்கு சட்டியை எடுத்துக் கொள்ளலாம். சட்டி என்பது மண்ணுடைய வடிவம்தான். மண் தான் சட்டியாக வந்தது. மண் அழிந்து சட்டியாக வரவில்லையாயினும், மண் விகாரப்பட்டு மாற்றமடைந்து சட்டி என்ற பெயரைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று அல்லாஹ்வுடைய “தாத்”, வுஜூத் அழியாமல் விகாரமைந்துதான் சிருஷ்டியாக வெளியானதென்பதும் தௌஹீதுக்குப் பிழையானதும், முரணானதுமாகும். இப்படியும் அல்லாஹ் தன்ஸீஹுடைய நிலை விகாரப்பட்டு “தஷ்பீஹ்” என்ற நிலையில் வெளியாகவில்லை என்பது கொள்கை சம்பந்தமான லோயர்களின் ஏகோபித்த முடிவாகும்.

மூன்றாவது விதியின்படி ஒரு பொருள் அழியாமலும், விகாரப்படாமலும், அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறேயிருக்க வேறொரு பொருளாகத் தோற்றமளித்தல் என்பதற்கு கல்பை (மனம்) உதாரணமாகக் கொள்ளலாம். கல்ப் என்பதை இதயம் என்று கருதலாகாது. இதயம் என்பது மனிதர்களுக்கு இருப்பதைப் போன்று மிருகங்களுக்குமுண்டு. அது மாங்காய் வடிவமானது. ஆனால் மனம் என்பது மனிதனுக்கு மாத்திரம் சொந்தமாக வழங்கப்பட்டது. ஆழ நீள அகலத்தை விட்டும் அப்பாற்ப்பட்டது. மாங்காய் வடிவான இதயம் கட்டுப்பாடையுடையது. கல்பு (மனம்) கட்டுப்பாடற்றதுடன் மனிதனுக்கு மாத்திரம் விஷேடமாய் வழங்கப்பட்டது. இம்மனதை மூன்றாம் விதிக்கு உதாரணமாகக் கொள்ளலாம். நாம் நித்திரை செய்யும்போது எத்தனையோ காட்சிகளை காண்கின்றோமென்றால் அது மனதின் தோற்றமேதான். கனவு காணும்போது செயல்கள் ஒவ்வொன்றும் வேறாகத் தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று நேர் மாற்றமாகத் தென்பட்டாலும் (உதாரணம்- நாய் கடிக்கிறது, கை வெட்டப்படுகிறது) அது மனதுக்கு வேறானதென்று கூற முடியுமா? எந்த வகையிலும் கூற முடியாது. கனவுக் காட்சிகள் மனதின் தோற்றமேதான் என்பதை பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் உண்மை விளக்கமாகும். இதற்கு மாறாகக் கொள்வது பகுத்தறிவற்ற மிருக ஜாதியுடைய நிலையாகும். மனம் (கல்பு) என்பது இருந்தவாறேயிருக்க, அது அழியாமலும் மாறுபடாமலும் விகாரப்படாமலும் இருந்து கொண்டு, எவ்வாறு பல தோற்றங்களைப் பெறுகின்றதோ அதே போன்றுஅல்லாஹ்வும், தனது (தாத், வுஜூத்) பரிசுத்த நிலை அழியாமலும், விகாரப் பட்டு மாறுபடாமலும் முஹம்மத் நபீயாகவும் ஏனைய சிருஷ்டிகளாகவும் வெளியாகியிருக்கின்றான் என்பது தவ்ஹீத் கூறும் உண்மை ஞானமாகும்.

இக் கருத்தைத்தான் “முஹம்மது இப்னு பழ்லுழ்ழாஹ்” அவர்கள் தங்களது “துஹ்பத்துல் முர்ஸலா” என்ற கிரந்தத்தில் “அன்ன தாலிகல் வுஜூத லைஸ லஹூ ஷக்லுன், வலாஹத்துன், வலாஹஸ்றுன், வமஅஹாதா ழஹற வதஜல்லா பிஷ்ஷக்லி, வல்ஹத்தி, வலம் யதகய்யர் அம்மாகான மின் அதமிஷ்ஷக்லி, வமின் அதமில் ஹத்தி, பல்ஹுவல் ஆன கமாகான அலைஹி” என்று கூறுகிறார்கள். இதன் பொருள் என்னவெனில் ‘அந்த தாத், வுஜுதாகிறது அதாவது அல்லாஹ் என்ற வுஜுதுக்கு உருவம் இல்லை, எல்லையில்லை, கட்டுபாடில்லை. ஆயினும் அவனவ்வாறிருப்பதுடன் உருவத்திலும், எல்லையிலும் வெளியாகிருக்கின்றான். இவ்வாறவன் வெளியானாலும் கூட, அவன் முன்பிருந்த நிலையிலிருந்து அழியவோ, மாறுபடவோ, விகாரப்படவோ இல்லை. அவன் மாறுபடப் போவதுமில்லை. அவன் முன்பு எவ்வாறிருந்தானோ அவ்வாறே இப்போதுமிருகின்றான்.’ எனவே இதிலிருந்து நாம் விளங்குவது என்னவெனில், அல்லாஹ் என்பவன் அரூபி-ரூபி இரு தன்மைகளையுடையவனென்றும், இவ்விரு தன்மைகளைக் கொண்டும் நாம் ஈமான் கொள்வதோடு, அவனே இவ்வுலமாகவும், எல்லாப் பொருட்களாகவும், மனதிலூசலாடும் எண்ணமாகவும், ஒலியாகவும், ஒளியாகவும், எல்லாமாய் காட்சிளிக்கின்றான் என்பது தெள்ளதிற் பலனாக, உள்ளங்கை நெல்லிக் கனிபோன்று தெளிவாகின்றது. ஆகவே, அல்லாஹ் சிருஷ்டியைப் படைத்தான் என்றால் சிருஷ்டியாக வெளிவந்தவன் அவனே என்றுதான் நம்ப வேண்டுமே தவிர, மாறாக- தச்சன் கதிரையைப் படைப்பது போன்றுதான் அல்லாஹ் சிருஷ்டியைப் படைக்கின்றான் என்றும், கதிரைக்கு மூலம் தச்சன்தான் என்றும் நம்பிக்கை இருக்கக் கூடாது. கதிரைக்கு மூலப்பொருள் மரம் என்ற கொள்கையே இருக்க வேண்டும். கதிரைக்கு மூலப்பொருள் தச்சன் என்றால், மூலப் பொருளை பிரிக்க வேண்டிய நிலையும், இறைவன் தான் ஒரே மூலப் பொருளாயிருக்க, மூலப் பொருளை பலதாக்க வேண்டிய கட்டங்களும் நாமறியாமலேயே ஏற்பட்டு விடுகின்றன. அது மாத்திரமின்றி, “இன்னழ்ழாஹ அலீமும் பிதாதிஸ் ஸுதூரி” நெஞ்சில் ஊசலாடும் எண்ணங்களையும் இறைவன் அறிந்தவன் என்ற தத்துவத்தையும் ‘வேறு” என்ற கொள்கை உடைத்தெறிந்து விடுகிறது. இக்கருத்தை விளங்க வேண்டும் என்பதற்காக பகுத்தறிவு ஏற்கும் முறையில் கூறுவதென்றால்: கொழும்பில் வாழும் ஒருவன் ஒரு கதிரையைச் செய்கின்றான். (படைக்கிறான்) என்று வைத்துக் கொள்வோம். அவனால் செய்யப்பட்ட கதிரை காத்தான்குடியிலிருக்கிறது. (காத்தான்குடி என்பது இலங்கையில் உள்ள ஒரு ஊர்) இப்போது கதிரைக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கிறதா? “இல்லை” என்று சொல்வதைத் தவிர “ஆம்” என்று சொல்பவன் பெரும் மடையனாகத்தான் இருக்க வேண்டும். தச்சனே கதிரைக்கு மூலப் பொருள் என்றான் பகுத்தறிவால் ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறது. அவன் கொழும்பில் கதிரை காத்தான்குடியில்! பிரிக்க முடியாத மூலப் பொருளை (எண்ணத்தில்) பிரிக்கப்படுகிறது. கதிரை எங்குள்ளது அதன் தற்போதைய நிலையென்ன வென்பதை பிரிந்திருக்கும் தச்சன் அறிய முடியாதது போல் தச்சனைப் போன்று அல்லாஹ்வை சிருஷ்டியை விட்டும் வேறாக்கினால் அல்லாஹ்வும் நெஞ்சிலாடும் எண்ணங்களையும், சிருஷ்டியின் தன்மையையும் அறிய முடியாது. அறிய முடியாதவன் இறைவனாக இருப்பதற்கு தகுதியற்றவனாகிறான். இது நான் காட்டிய திருமறை வசனத்திற்கு நேர்மாறாகத் தெரிகிறது. ஆனால் குர்ஆனின் கருத்து பொய்யானதல்ல, அர்த்தமில்லாமலும் இறைவன் கூறியிருக்க முடியாது. எனவே, இறைவன் ஒவ்வொறு வினாடியும், சிருஷ்டிகளின் தன்மையை அறிந்தவனாகவே இருக்கின்றான் என்ற கூற்றை ஆதாரமாகக் கொண்டு தச்சன்தான் கதிரைக்கு மூலம் என்ற கொள்கை உடைத்தெரியப்படுகின்றது. அதேவேளை கதிரைக்கு மூலப் பொருள் தச்சனல்லவென்பதும், மரம்தான் கதிரையின் மூலப் பொருளென்பதும், கதிரையுடைய தோற்றத்தில் (சூறத்தில்) வந்தது மரம்தான் என்பதும் தெளிவான ஆதாரமாகிறது. எனவே, கதிரைக்கு மரம் மூலமாக இருப்பதைப் போல், கதிரையை விட்டு மரத்தை வேறாக்கவோ, பிரிக்கவோ, சேர்க்கவோ முடியாமலிருப்பது போல், அல்லாஹ்தான் சிருஷ்டிகளின் மூலப் பொருளென்பதும், அவனேதான் தனது தாத் அழியாமலும், விகாரப்படாமலும் படைப்புக்களாக வெளியாகியிருக்கிறான் என்பதும் அசைக்க முடியாத இறுதியான முடிவாகிறது. இக்கருத்தை வைத்து மேற்கூறிய திருமறை வசனத்தை ஆராய்ந்து பார்த்தால், இஸ்லாத்தின் ஈமான் எனும் தவ்ஹீதின் உண்மைத் தத்துவம் இலகுவாகப் புரியும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லீம்களில் அனேகர், தவ்ஹீதென்றும், இறைவன் எங்கும் நிறைந்தவனென்றும் மூடலாக அறிந்திருக்கிறார்களே தவிர – அதன் விபரம் தெரியாத, கொள்கை விளக்கம் புரியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

உலமாக்கள் என்ற லேபலை ஒட்டிக் கொண்டு வாழும் ஆலிமுஷாக்களுக்கே தவ்ஹீத் (ஏகத்துவம்) தெரியாமலிருக்கும் போது பொதுமக்கள் எங்ஙனம் புரிய முடியம்? “இறைவன் எங்கும் நிறைந்தவன்” என்றால், அவன்தான் நிறைந்திருக்கிறான் என்றால், எங்கே அவன்? அவன்தானே இருக்க வேண்டும்! அவனது சிருஷ்டிகள்தானே பார்க்கும் இடமெல்லாம் இருக்கின்றன. அவனைக் காணவில்லையே? அப்படியாயின் நிறைந்திருக்கின்றான் என்பதன் ஆழமான தத்துவத்தை பொதுமக்களைவிட உலமாக்கள் நல்ல மனதுடன் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று சொல்வதைவிட, “எல்லாமாய் இருப்பவன் அவனே” என்று சொல்வது மிகப் பொருத்தமாகும். எங்கும் என்று சொல்லும்போது அவனை விட்டும் இடத்தை வேறாக்க வேண்டியதாகிவிடும். எனவே, சொல்லலவில் எங்கும் நிறைந்தவன் என்று சொன்னாலும் “இஃதிகாத்” கொள்கை எப்படியிருக்க வேண்டுமெனில் “எங்கும்” என்பதும் அவனே என்ற நம்பிக்கை நெஞ்சிலிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தவ்ஹீதுக்கு முரணானதாகவும், இஸ்லாமிய தத்துவத்தை மாசுபடுத்தக் கூடியதாகவும் ஆகிவிடும். ஆகவே, இறைவன் வேறு, சிருஷ்டி வேறு என்பதும், ஒவ்வொறு பொருளிலும் இறைவனிருக்கிறான் என்பதும், எல்லாப் பொருட்களிலும் இறைவன் கலந்து, நிறைந்திருக்கிறான் என்பதும் தௌஹீதுக்கு நேர்மாறானதும், குர்ஆன், ஹதீஸுக்கு முரணானதுமாகும். எனவே தவ்ஹீதின் உண்மையான விளக்கமென்னவெனில், அல்லாஹ் என்பவன் சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்கு முன் எவ்வாறிருந்தானோ, அதே நிலை அழியாமலும் மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் இருந்தவாறேயிருக்க, சர்வ பிரபஞ்சங்களாகவும், சிருஷ்டிகளாகவும் அவனே வெளியாகியிருக்கிறான். ஒவ்வொறு வினாடியும் கோடிக்கணக்கான வெளிப்பாடுகளாக அவனே தஜல்லியாகிறான்., அவனுக்கு வேறான எந்தப் படைப்புமில்லை., அவன் ஒருவனே, பலரல்ல என்பதுதான் “கலிமா தய்யிபா”கூறும் உண்மையான தெளஹீத் விளக்கமாகும். கதிரையென்றும், மேசையென்றும், அலுமாரியென்றும், றாக்கையென்றும், கதவென்றும், கதவு நிலையென்றும், இருப்பவை அனைத்தும் மரம்தான். மரத்தின் கோலங்கள்தான் இவைகள். மரத்தின் வெளிப்பாடுகள்தான் இவையென்று ஒன்றுபடுத்தி சாட்சி பகர்வதுதான் தவ்ஹீத் என்ற சொல்லின் உண்மை அர்த்தமாகும். எனவே, நாமும் இவ்விளக்கத்தை அறிந்து அல்லாஹ்வை அறிந்த ஞானவான்களான அவ்லியாக்களின் அணியில் சேர்வோமாக. ஆமீன்!(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக