சனி, 10 டிசம்பர், 2011

அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? பாகம்-02 .



படைப்பு என்பது தானிருப்பதற்கு ஓர் இடத்தளவில் தேவையுள்ளதாகவே இருக்கும். இத் தன்மை அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது. அல்லாவுக்கும் இத்தன்மை உண்டென்று வைத்துக் கொண்டால் படைப்புக்குள்ள தன்மையை படைத்தவனுக்குத் தரிபடுத்தினதாகிவிடும். இது ஷிர்க் என்ற இணைவைத்தலை உண்டாக்கிவிடும் ஆதலால் குறித்த திருவசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தங்கள் இருந்தாலும்கூட இவ்வாறான இடத்தில் இந்த அர்த்தம் கொடுக்காமல் அச்சொல்லுக்குள்ள மற்ற இரண்டு அர்த்தங்களில் ஒன்றைக் கொடுத்து றஹ்மான் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்றோ, றஹ்மான் அர்ஷைப் பூரணப்படுத்தினான் என்றோ கருத்துக் கூறுதல் அவசியமாகும்.
இச் சொல்லுக்கு இவ்விரு அர்த்தங்களில் ஒன்றைக் கொடுக்கும்போது படைப்புக்குள்ள ஒரு
தன்மையை படைத்தவனுக்கு தரிபடுத்துதல் என்ற பிரச்சினைக்கு இடமுமில்லை. ஷிர்க் ஏற்படுவதற்கு வழியுமில்லை. “இஸ்தவா” என்ற சொல்லுக்கு நான் மேலே சொன்னவாறு அர்த்தங் கொள்ளாமல் அந்த இடத்துக்குப் பொறுத்தமற்ற, பிரச்சினைக்குரிய, ஷிர்க் இணையை ஏற்படுத்தக் கூடிய தரிபட்டான், அமர்ந்தான் என்ற அர்த்தங்கொண்டு அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று வஹ்ஹாபிகள் கூச்சலிடுவது அவர்களின் அறியாமையையும், றியால் மீது அவர்களுக்கு உள்ள மோகத்தையும், வேகத்தையும் தெளிவாகக் காட்டுகிறதல்லவா? பல அர்த்தமுள்ள ஒரு சொல் ஓர் இடத்தில் வந்தால் அவ்வர்த்தங்களில் அந்த இடத்துக்குப் பொருத்தமான, பிரச்சினையான விளக்கத்தை தராத அர்த்தம் அச்சொல்லுக்கு கொடுக்க வேண்டுமென்று ,நான் முன்னால் எழுதிக்காட்டியுள்ளேன். இதற்கு இஸ்தவா என்ற சொல்லைக் கொண்டு விளக்கமும் எழுதினேன், இதற்கு இன்னுமோர் உதாரணம் தருகிறேன்.
மூன்று எழுத்துக்களைக் கொண்ட “ஐன்” (عين) என்ற சொல்லுக்கு முப்பதிற்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உள்ளன. கண், தங்கம், உளவாளி, சூரியன், தலைவன், நீரூற்று என்பன அவற்றில் சில. இச்சொல் ஓர் இடத்தில் வந்தால் இதற்கு ஒரே நேரத்தில் முப்பது அர்த்தங்களும் சொல்லிவிட முடியாது. இச்சொல் வந்துள்ள இடத்துக்குப் பொருத்தமான அர்த்தம் மட்டுமே கொள்ள வேண்டும். உதாரணமாக فى الإنسان عينان - “பில் இன்ஸானி ஐனானி” என்று ஒரு வசனம் வந்தால் இதற்கு மனிதனில் இரு கண்கள் உள்ளன என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டுமேயன்றி மனிதனில் இரண்டு தங்கம் உள்ளன, மனிதனில் இரண்டு உளவாளிகள் உள்ளனர், மனிதனில் இரண்டு சூரியன் உள்ளன, மனிதனில் இரண்டு தலைவர்கள் உள்ளனர், மனிதனில் இரண்டு நீரூற்றுகள் உள்ளன என்று அர்த்தம் கொள்ள முடியாது. இவ்வாறுதான் “இஸ்தவா” என்ற சொல்லின் கதையுமாகும்.
அதற்குள்ள மூன்று அர்த்தங்களில் அவ்விடத்துக்குப் பொருத்தமான பிரச்சினையையோ, முரண்பாட்டையோ ஏற்படுத்தாத மேற்கண்ட இரண்டு அர்த்தங்களில் ஒன்றை கொள்ள வேண்டுமேயன்றி ,பிரச்சினையையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய தரிபட்டான், அமர்ந்தான், என்ற பொருள் கொண்டு அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்று கூற முடியாது. இவ்வாறு கூறுதல் மேற்கண்ட فى الإنسان عينان என்ற உதாரணத்தில் அந்த இடத்துக்குப் பொருத்தமான கண்கள் என்ற அர்த்தங் கொள்ளாமல் பொருத்தமற்ற, பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய ஏனைய அர்த்தங்கள் கொண்டு மனிதனில் இரண்டு சூரியன்கள் உள்ளன, மனிதனில் இரண்டு தங்கம் உள்ளன என்று கூறுதல் போன்றதாகி விடும். எனவே, அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று வாதிடும் வஹ்ஹாபிகள் பிடிவாதம் விட்டு, இடத்துக்குப் பொருத்தமான, பிரச்சினையையும், முரண்பாட்டையும் ஏற்படுத்தாத அர்த்தம் கொண்டு அல்லாஹ் அர்ஷை முடித்தான் என்றோ அல்லது அல்லாஹ் அர்ஷில் அதிகாரமுள்ளவனானான் என்றோ நம்பவும் சொல்லவும் வேண்டும். அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்ற வாதத்துக்கு ஆதாரமாக வஹ்ஹாபிகள் கூறிவரும்
الرحمن على العرش استوى -
என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுள்ள இமாம்களிற் பலர் தமது நூல்களில் எழுதியுள்ள விளக்கத்தை இங்கு எழுதுகிறேன். இந்த விளக்கம் அல்லாஹ் அர்ஷில் உள்ளான் என்று கூறும் வஹ்ஹாபிகளுக்கு சாட்டையடியாக அமைந்திருப்பது சிந்திப்பவர்களுக்குப் புரியும்.
ஆதாரங்கள்
الرحمن على العرش استوى -
என்ற திருவசனத்திற்கு விரிவுரை எழுதிய “தப்ஸீர் ஜலாலைன்” ஆசிரியர் அர்ஷ் என்றால் அரசனின் கட்டில் அல்லது ஆட்சிபீடம் என்றும், இஸ்தவா என்ற சொல்லுக்கு “அவனின் தகுதிக்கேற்றவாறு” என்றும் விரிவுரை எழுதியுள்ளார்களே தவிர, விளக்கமாக வேறொன்றும் எழுதவில்லை. ஆயினும் அவர்கள் இஸ்தவா என்ற சொல்லுக்கு
إستواء يليق به
“அவனின் தகுதிக்கு ஏற்றவாறு” என்று குறிப்பிட்டதிலிருந்து அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் ஒரு மனிதன் கட்டிலில் அல்லது கதிரையில் அமர்ந்திருப்பதுபோல் இருக்க வில்லை என்ற கருத்து தெளிவான சிந்தனையுள்ளவர்களுக்கு விளங்கும். உண்மையிலேயே, அர்ஷ் என்ற இடத்தில்தான் அல்லாஹ் இருக்கின்றான் என்றிருந்தால், அவனின் தகுதிக்கு ஏற்றவாறு என்று அவர்கள் விளக்கம் எழுதியிருக்கமாட்டார்கள். அவ்வாறு எழுதத் தேவையுமில்லை. இதிலிருந்து அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் இருக்கின்றான் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
பார்க்க - தப்ஸீருல் ஜலாலைன் – பக்கம் -46 இந்த தப்ஸீர் நூல் தொன்று தொட்டு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள அறபுக் கல்லூரிகளின் பாடத்திட்டதிலுள்ள ஒரு நூலாகும். இந்த நூலை இரு இமாம்களால் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ ஆவார். மற்றவர் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ ஆவார். மேற் கண்ட விரிவுரை நூலை ஜலாலுத்தீன் அல்மஹல்லீ அவர்களே எழுதத் தொடங்கினார்கள்.ஆனால் அதை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர்கள் மரணித்துவிட்டபடியால் அதை ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ என்பவர்கள் நிறைவு செய்தார்கள். இதனால்தான் இந்நூல் தப்ஸீர் ஜலாலைன் இரண்டு ஜலால்களுக்குரியதென்றழைக்கப்படுகின்றது. ஜலாலுத்தீன் அல் மஹல்லீ அவர்கள் கெய்ரோவில் 1388ல் பிறந்து 1459ல் உலகைப் பிரிந்தார்கள்.
“அல்மஹல்லதுல் குப்றா” என்ற இடத்தில் பிறந்தபடியால் “மஹல்லீ” என்றழைக்கப்பட்டார்கள். பட்டு விற்பனை செய்வதில் அதிக காலத்தைக் கழித்தார்கள். பின்னர் அறிவுத் துறையில் இறங்கினார்கள். ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி அவர்கள் கெய்ரோவில் 1445 ல் பிறந்து 1505ல் உலகைப் பிரிந்தார்கள். இவர்கள் ஓர் அநாதையாகவே வளர்ந்தார்கள். எட்டு வயதுக்கு முன்னர் திரு குர்ஆனை மனனம் செய்து கொண்டார்கள். தப்ஸீர், ஹதீது, பிக்ஹ், நஹ்வு, மஆனீ, பயான், பதீஉ, லுகத் ஆகிய கலைகளில் பாண்டித்தியம் பெற்றார்கள். சிரியா, சஊதி அரேபியா, எமன், இந்தியா, மொரோக்கோ ஆகிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். அவற்றில் தபகாத்துல்ஹுப்பாள், தபகாதுல் முபஸ்ஸிரீன் என்பன மிகப் பிரசித்தமானவையாகும்.
الرحمن على العرش استوى -
என்ற வசனத்திற்கு விரிவுரை எழுதிய தப்ஸீர் ஸாவீ நூலாசிரியர் இமாம் அஹ்மத் இப்னு முஹம்மத் அஸ்ஸாவீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் ஸாவீ மூன்றாம் பாகத்தில் தாஹா அத்தியாயத்தின் விரிவுரையில் “அர்ஷ்” என்றால் அரசனின் கட்டில் என்று குறிப்பிட்டு “இஸ்தவா” என்ற சொல்லுக்கு விளக்கம் எழுதுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இஸ்தவா” என்ற சொல்லுக்கு (அவனின் தகுத்திக்கேற்றவாறு) என்று விளக்கம் கொள்வது “ஸலப்” முன்னோர்களின் போக்காகும். அவர்கள் “முதஷாபிஹ்” பல அர்த்தங்களுகுச் சாத்தியமான திருகுர்ஆன் வசனங்களின் அறிவை அல்லாஹ் அளவில் ஒப்படைத்து விடுவார்கள். இதனால்தான் ஸாவீ அவர்கள் அதற்கு அவ்வாறு பொருள் எழுதியுள்ளார்கள். அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்திலுள்ளான் என்பது தொடர்பாக இமாம் மாலிக் (றஹ்) அவர்களிடம் ஒருவர் வினவியபோது
الإستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه بدعة أخرجوا عني هذالمبتدع
“அல்லாஹ் “அர்ஷ்” என்ற இடத்தில் இருப்பது அறியப்பட்ட விடயமாகும், எவ்வாறிருக்கின்றான் என்பது அறியப்படாத ஒன்றாகும். அதை நம்புவது கடமை. அது பற்றிக் கேள்வி எழுப்புவது “பித்அத்” இவ்வாறு கேள்வி கேட்ட அந்த “பித்அத்” காரனை என்னிடமிருந்து வெளியேற்றிவிடுங்கள்” என்று கூறினார்கள். ஆனால் "ஸலப்” முன்னோர்கள் அதாவது ஹிஜ்ரீ ஐநூறுக்கு முன்னுள்ளவர்கள் மேற்கண்ட வசனத்துக்கு அல்லாஹ் தகுதிக் கேற்றவாறு சரியான வலிந்துரை கொண்டு விளக்கம சொல்லியுள்ளார்கள். அதாவது குறித்த வசனத்தில வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு إستولى இஸ்தவ்லா அதிகாரமுள்ளவனானான் என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமேயன்றி ஒரு மனிதன் கதிரையிலிருப்பது போல் அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏனெனில் இஸ்தவா என்ற சொல்லுக்கு மொழியில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
ஒன்று “அமர்தல்” மற்றது “அதிகாரம்” செய்தல்
إستوى السلطان على الكر
என்ற வசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு முந்தின அர்த்தப்படி அமர்ந்தான் என்று பொருள் கொண்டு அரசன் கதிரையில் அமர்ந்தான் என்றும்
.إستوى بشر على العراق -
என்ற வசனத்தில் வந்துள்ள -إستوى இஸ்தவா என்ற சொல்லுக்கு இரண்டாவது அர்த்தப்படி பிஷ்று என்பவன் இறாக் நாட்டில் அதிகாரம் செய்தான் என்றும், கருத்துக் கொள்ளுதல் வேண்டும். எனவே, மேற்கண்ட திருவசனத்திற்கு அல்லாஹ் அர்ஷ் என்ற இடத்தில் அதிகாரமுள்ளவனானான் என்று கருத்துக் கொள்ளுதல் குறிப்பாகிவிட்டது.
பார்க்க – தப்ஸீர் ஸாவீ – பாகம்-03 ஸாவீ ஆசிரியரின் கருத்து ஸாவீ ஆசிரியர் என்ன சொல்கின்றார்கள் என்றால் “இஸ்தவா” என்ற சொல்லுக்கு அறபு மொழியில் இரண்டு அர்த்தங்கள் இருப்பதால் மேற்கண்ட
الرحمن على العرش استوى –
என்ற திருவசனத்தில் வந்துள்ள இஸ்தவா என்ற சொல்லுக்கு அமர்ந்தான் என்று பொருள் கொள்வது பல சிக்கல்களை ஏற்படுத்துவதால் அதற்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாத அதிகாரம் செய்தான் என்று பொருள் கொள்வதே நல்லது. ஸாவீ தோற்றம் 1775 – மறைவு 1241
الرحمن على العرش استوى –
என்ற சொல்லுக்கு விரிவுரை எழுதிய தப்ஸீறு றூஹில் பயான் ஆசிரிரியர் இமாம் இஸ்மாயீல் ஹக்கீ (றஹ்) அவர்கள் தங்களின் தப்ஸீர் ஐந்தாம் வால்யூம் 16ம் பாகம் 363ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். “அர்ஷ்” என்பது அரசனின் கட்டில் அல்லது ஆட்சிபீடம் “இஸ்தவா” என்றால் அமர்ந்தான். மேற்கண்ட திருவசனத்திற்கு – அதில் வந்துள்ள “இஸ்தவா” என்ற சொல்லுக்கு “இஸ்தவ்லா” அதிகாரம் செய்தான் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். ஒருவன் ஆட்சியதிகாரத்திலுள்ளான் என்பதைக் குறிப்பதற்காக إستوى فلان على سرير الملك ஆதாரங்கள் தொடரும்..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக