திங்கள், 14 ஜனவரி, 2013

ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும்

நன்றி ஏபிஎம் இத்ரீஸ் வலைதளம்

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி கொலைக்கு கொலைதான் தண்டனைஅது ஒரு காட்டு மிராண்டித் தனமான சட்டமாகத் தெரிந்தாலும் தனது வாழுமுரிமை பறிக்கப் படும் என்ற ஒரே அச்சம் மாத்திரமே அநியாயமாக ஒருவரை கொல்வதிலிருந்து தடுக்கும் என்கிறார்களே?

‘கொலைக்கு கொலைதான்’ என்ற வார்த்தையை நாம் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. கொலைக்கு கொலைதான் என்றால் அது கொலை என்று முதலில் இஸ்லாமிய ஷரீஅத் நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறது. நடந்தது தற்கொலையாக இருக்கலாம். சந்தர்ப்ப வசத்தால் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம். சுவாசக் குழாய்க்குள் பால் போய் அடைத்ததால் இறந்திருக்கலாம். கொக்குச் சுடப்போனவர் தவறி காட்டுக்குள் இருந்த மனிதரை தெரியாமல் சுட்டிருக்கலாம். இவ்வாறு எண்ணற்ற மரணங்களின் வகைகள் இருக்கின்றன. திட்டமிட்டு குற்றஞ் செய்ய வேண்டும் என்று நினைத்து குற்ற மனத்தோடு செய்யப்பட்ட கொலையா என்பது இஸ்லாமிய ஷரீஆவில் முக்கியமான விடயப் பொருளாக ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் இருந்து நவீன சட்ட அறிஞர்களான அப்துல்காதர் அவ்தா, அஹ்மத் ஷர்கா போன்ற பல முஸ்லிம் நியாயவியல் அறிஞர்கள் ஆழமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். இவை இஸ்லாமிய வரலாற்றுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன. எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் என்ற வாதம் பிழையானது. ‘அத்தஷ்ரிஉல் ஜினாயீ’ என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய குற்றவியல் நூலை படித்த யாரும் கொலைக்குக் கொலை என்று எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்க மாட்டார்கள். குறைந்தது இலங்கையின் சட்டத்தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி வீரமந்திரி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் போன்றோரின் இஸ்லாமிய நியாயவியல், குற்றவியல் குறித்த ஆங்கில நூல்களையாவது குறைந்தபட்சம் வாசித்தவர்கள் கூட எடுத்த எடுப்பிலேயே கொலைக்குக் கொலைதான் தண்டனை என்று முடிவெடுக்க மாட்டார்கள்.
இஸ்லாமிய ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ முடியுமா?
இஸ்லாமிய ஷரீஆ என்பதற்குள் பலவகையான சொல்லாடல்கள் அறபு மொழியில் பயன்பாட்டில் உள்ளன. ‘அல்பிக்ஹு’, ‘இஜ்திஹாத்’, ‘அத்தஸ்ரிஉல் ஜினாயீ’ இவை ஒவ்வொன்றுக்கும் தனியான பரப்பெல்லைகளும் இயல்முறைகளும் காணப்படுகின்றன. ஷரீஆ என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லாடலாகும். ஆனால் தமிழ் மொழிச் சூழலில் ஷரிஆ என்பது பல உள் ஆய்வு பிரிவுகளைக் கொண்ட ஒரு சட்டவாக்கத் தொகுதியாக நோக்கப்படுவதில்லை. அதற்குள் நடைபெறும் வாதவிவாதங்கள் அவ்விவாதங்கள் இறுதியில் எட்டப்படும் முடிவுகள் கொண்ட ஒரு செறிவான சொல்லாடலாகும்.
இங்கு ஷரீவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்ற சொல்லாடல்கள் என்ன அர்த்தத்தில் கையாளப்படுகிறது என்பது முக்கியமானது. அச்சொல்லாடல்களை நான் புரிந்து கொண்ட வகையில் சொல்வதானால், ஒரு பண்பாட்டின் சமூக நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை, அதனுடைய சமூக வழக்காறுகளை மற்றப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் கேள்விக்குட்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் பின்னால் பலவகையான அரசியல் இருக்க முடியும். எல்லாவற்றையும் ஒரே படித்தானதாக, வகைப்பட்டதாக நாம் நோக்கத் தேவையில்லை. பழங்குடித் தன்மையிலிருந்து விடுபடாத, மனிதாபிமானமற்ற வழக்காறுகளும் நெறிமுறைகளும் மற்றொரு பண்பாட்டுக்கு அச்சுறுத்தலையும் பயத்தையும் ஏற்படுத்துகின்ற போது அத்தகைய விமர்சனங்கள் எழ வாய்ப்புமுள்ளது. குறிப்பிட்ட பண்பாடு மட்டும்தான் உன்னதமானது, அந்த பண்பாடு கடைப்பிடிக்கும் அனைத்து நெறிமுறைகளும் புனிதமானவை, எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பண்பாட்டு ஆதிக்கம் அல்லது அடையாள உருவாக்கம் மற்றமைகளை அச்சத்திற்கும் அசௌகரியத்திற்கும் உள்ளாக்க முடியும். அந்தக் கோணத்திலிருந்தும் விமர்சனங்களைப் பார்க்க முடியும்.
உதாரணமாக, ஆடை விசயத்தை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கறுப்பு நிற அபாயா அணிந்தால்தான் உண்மையான ஷரீஅத் கூறும் இஸ்லாமியப் பெண்ணாகக் கருத முடியும் என்று நாம் வலியுறுத்தும் போது பல தசாப்தங்களுக்கு முன் நமது தாய்மார்கள், பெண்கள் மூதாட்டிகள் அவ்றத்தை மறைத்து அணிந்த ‘சேலை’ போன்ற ஆடைகளை நாம் இஸ்லாம் அல்ல என்று மறுத்துவிடுகிறோம். குறிப்பிட்ட பூகோள, புவியல் சூழலில் வாழும் மக்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஆடைகளை, அதன் நிறங்களை, வடிவங்களை தேர்வு செய்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. இப்படித்தான் மற்ற விடயங்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
இப்போது நாம் ஷரீஆவைக் கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் என்பதை இஜ்திஹாத் – மறுவாசிப்பு என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் அதன் விளக்கம் வேறு வகையாக அமையும். ஷரீஅத்தில் இஜ்திஹாத் இருக்கிறதா? என்றால் நிச்சயமாக இருக்கிறது. இஸ்லாத்தை பிரதான இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் இறையியல் சார்ந்த விடயங்கள், சமூகவியல் சார்ந்த விடயங்கள் எனப் பிரிக்கலாம். இறையியல் சார்ந்த விடயங்களிலும் கூட அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய வேளைகளில் பல்வேறு இஜ்திஹாதுகளை இறையியல் சார்ந்த வசனங்கள் எதிர்கொண்டதை நாம் காண முடியும். இறையியல் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த விடயங்களை கொச்சைப்படுத்துவது, நிந்திப்பது, பொதுவான நோக்கில் பொதுவான உலக சமூகங்களின் பண்பாடுகளின் அறங்களின் படி தவறானதுதான். ஆனால், சமூகவியல் சார்ந்த விடயங்களில் இஸ்லாம் தாராளமாக மாற்றுக் கருத்துக்களுக்கும் மறுவாசிப்புக்களுக்கும் தனது வரலாற்றுப் போக்கில் நெகிழ்ந்து கொடுத்தே வளர்ந்து வந்துள்ளது.
ஷரீஆ என்பது பற்றி நம்மிடம் ஒரு தட்டையான புரிதல்தான் இருக்கிறது. இறை வெளிப்பாடு ஊடாக நபிகளுக்குக் கிடைத்த அல்குர்ஆனும் நபிகளின் மொழியையும் சிந்தனைகளையும் கொண்ட ஹதீஸ்களும் மட்டும் அல்ல ஷரீஆ என்பது. அவற்றுக்குக் காலத்துக் காலம் இஸ்லாமியப் புலமைத்துவ வாதிகள், புத்துயிர்ப்பாளர்கள் வழங்கிய வியாக்கியானங்களும் சாராம்சப்படுத்தல்களும் நியாயவியல் விதிகளும் சேர்ந்ததுதான் ஷரீஆவாகும். எனவே ஏற்கனவே ஷரீஆ சொல்லப்பட்டுவிட்டது, அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்று சொல்ல முடியாது. முஸ்லிமின் நோக்கில் அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் புனிதமாகக் கருதப்படலாம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட வியாக்கியானங்கள் புனிதமானவை அல்ல. வியாக்கியானங்கள் கால, இட, சூழ்நிலைகளுக்கேற்ப, சமூகப் பண்பாட்டுப் பின்புலங்களுக்கேற்ப மாறுபட்டுச் செல்ல முடியும். பழங்குடி முறையிலிருந்து நிலச்சுவாந்தர் முறைக்கு ஒரு சமூகம் மாற முடியும். நிலச்சுவாந்தர் முறையிலிருந்து முதலாளித்துவ சமூக நிலைக்கு மாற முடியும். முதலாளித்துவத்திலிருந்து ஜனநாயக சமூகங்களாக மாற்றம் பெறலாம். இந்த ஒவ்வொரு சூழலிலும் இஸ்லாமிய ஷரீஆ நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய நிலமைகளுக்கேற்ப தீர்வுகளைப் பேசக்கூடிய உயிரோட்டத்தை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கேள்விக்குட்படுத்தல், விமர்சித்தல் மூலம் ஷரீஆ மறுவாசிப்புக்குட்படுகிறது. மறுவாசிப்பு என்பது புனிதப் பிரதிகளை மற்றொரு வகையில் வாழவைப்பதுதான். அது அழிப்பது அல்ல. ஆனால் மைய நீரோட்டத்திலிருக்கும் வைதீக நிலைப்பட்ட இறுக்கமான நிறுவன நோக்குக் கொண்ட இஸ்லாமிய கருத்தியல் அடிப்படைவாதம் தான் இந்த வாசிப்புக்களுக்கும் புதிய இஜ்திஹாதுகளுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. உஸ்மானிய சாம்ராஜியத்திற்குப் பின்னர் அறபு இஸ்லாமிய உலகில் இஸ்லாமிய ஷரீஆத் துறையில் குறிப்பாக நியாயவியல், பொருளியல் (முஆமலாத்), சிறுபான்மைக்கான நியாயவியல் என்றெல்லாம் பல துறைகளில் ஆங்காங்கே புதுவகையான இஜ்திஹாத் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் வலுவான தரப்புக்கு மத்தியில் அவை சென்று சேரவில்லை. வலதுசாரி உலமாக்களும் முதலாளித்துவம் சார்பான சேகுகளின் கைகளில்தான் அதிகாரம் இருக்கிறது. எனவே ஷரீஆவுக்கு எதிரான விமர்சனம் என்பதை நான் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாற்றுமத சகோதரர்கள், ஊடகங்கள் இஸ்லாம் மீதும் ஷரீஆ சட்டம் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றனரே?
இஸ்லாம் உலக மனிதர்களுக்காக அருளப்பட்ட மார்க்கம் என்றே அதன் போதனைகள், அதிகாரபூர்வ நூல்கள் கூறுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, சமூகத்திற்கோ, மொழிக்கோ உரியதல்ல. அதனால்தான் எல்லா மொழிகளிலும் எல்லாத் தேசங்களிலும் இஸ்லாத்தோடு இணைந்த சமூகங்கள் பன்னெடுங் காலமாக வாழ்ந்து வருகின்றன. எனவே இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் உரியது, நபிகள் முஸ்லிம்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட தூதர் என்ற மாதிரியே இன்றைய முஸ்லிம் மனப்பாங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தவறான கட்டமைப்பாகும். இந்த தவறான கட்டமைப்பில் இருந்துதான் மேற்கூறிய கேள்வியே எழுகின்றது.
மாற்று மத சகோதரர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாத்தின் மீதும் ஷரீஆ மீதும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்றால் நாம் அதை பொசிடிவாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்மறையாகச் சிந்திக்கத் தேவையில்லை. உரையாடலுக்கான வாயில், பண்பாடுகளுக்கிடையிலான உரையாடல் அந்த இடத்தில்தான் ஆரோக்கியமாகத் தொடங்குகிறது. அந்த வாயிலை நாம் மேலும் மேலும் திறந்து இஸ்லாம் பற்றிய, முஸ்லிம்கள் பற்றிய மேலும் நல்ல புரிதலை உருவாக்க முயலவேண்டுமே அல்லாமல் விமர்சனங்களை முன்வைப்பவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி நோண்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் இருந்தால் நமக்கென்ன? நமக்குத் தெரிந்த இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் ஊடாகப் பெற்ற நல்ல பண்பாட்டையும் அவர்களோடு நாகரிகமாகப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாம் கூறும் பண்பாடாகும். எப்போதும் மூடுண்ட, அடைபட்ட போக்கை இஸ்லாம் விரும்புவதில்லை. திறந்த மனதுடன் மற்றப் பண்பாடுகளுடன் ஊடாடி, உரையாடி கலந்து பேசி மனித சமூகங்களுக்கும் பண்பாடுகளுக்கும் மத்தியில் நடுநிலையான (உம்மத்தன் வசத்தன்) சமூகம் என்ற உயரிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றே இஸ்லாமியப் போதனைகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஒரு முஸ்லிம் பிழையாக இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறான் என்றால் அதைப் பிழை என்று ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டத் தேவையில்லை. பிழையென ஒத்துக் கொள்ளவில்லையானால் இஸ்லாமிய வாழ்வியல் கோட்பாடு பிழை என்றுதான் மாற்று மதத்தினர்கள் நினைப்பார்கள்.
ஊதியில் நடைமுறையில் உள்ள சட்டம் ஷரீஆ சட்டம் இல்லை என்று எப்படிக் கூற முடியும்?
நமது மார்க்க அறிஞர்கள் இஸ்லாம் என்றால் சஊதி என்றும் ஷரீஅத் சட்டம் என்றால் சஊதியிலுள்ள சட்டம் என்றும் ஒரு படிமத்தை நெடுங்காலமாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதனாலேயே இந்தக் குழப்பம் ஏற்படுகிறது. மற்றது, தூது அங்கிருந்து வந்ததாலும்  முஸ்லிம்களின் புனித பூமிகளாகக் கருதப்படும் மக்கா, மதீனா போன்ற இடங்கள் அங்கிருப்பதாலும் அவற்றுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கிடையில் யாத்திரைகள் இடம்பெறுவதாலும் முஸ்லிம் மனம் அங்கு மையங்கொள்வதால் இந்தப் பிரம்மை இலகுவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சஊதி நீண்ட நெடுங்காலமாக தனது பழங்குடித் தன்மையை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு பிராந்தியமாகும். நபிகள் மரணித்து மூன்று தசாப்தங்களுக்குள்ளேயே கிலாபத் ஆட்சி மன்னராட்சியாக மாறிவிடுகிறது. ‘பைத்துல்மால்’ முஸ்லிம் மன்னர்களின் அரண்மனைச் சொத்தாக மாறிவிடுகிறது. ஆட்சியாளர்களை சுதந்திரமாக மக்கள் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது. இன்றைய சஊதி அரேபியா நவீனத்துவ மாற்றங்களையும் ஆரம்பத்தில் பெரிதாக உள்வாங்கவில்லை. உஸ்மானிய சாம்ராஜியத்தின் இறுதிக் காலப்பகுதிகளிலும் அது அந்நிலமையிலேயே காணப்பட்டது. அறுபதுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பெற்றோலிய கண்டுபிடிப்புக்குப் பின்னர்தான் அதற்கான தொழில் நுட்பத்தை மேற்கு நாடுகளிலிருந்த தருவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது பல்வேறு பொருளாதார முயற்சிகள், எண்ணெய் சார் நிறுவனங்கள், சஊதிக்குள் தோற்றம் பெறுகின்றன. மத்திய கிழக்கில் கரையோரப் பிரதேசங்களில் பெரும் கடற் கொள்ளைக்காரர்களாக இருந்தவர்தான் பின்னால் ஆட்சிப் பொறுப்பையும் பொருளாதாரத்தையும் கையில் எடுக்கிறார்கள். மக்கா மதீனாவுக்குடையிலும் பல கோத்திரப் பிழவுகளும் சண்டைகளும் இருந்து வந்தன. இன்றும் கூட சுஊத் பரம்பரைக்கும் மதீனாவில் உருவாகும் தலைமைகளுக்குமிடையில் முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கின்றன. பழங்குடிக் கோத்திரங்களின் தலைவர்கள்தான் தலைமைத்துவத்திற்கு வருகிறார்கள்.
சஊதியில் அமுலிலுள்ள சட்டம் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் என்று கூறப்பட்டாலும் அது முழுமையான ஷரிஆ சட்டம் அல்ல என்பதே உண்மையாகும். சஊதி அறேபியாவில் இஸ்லாமிய நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப் படுவதாகக் கூறப்பட்டாலும் அதுவும் உண்மையல்ல. இஸ்லாத்தில் மிக எளிமையான ஒரு உண்மையைச் சொல்கிறேன். சட்டமியற்றும் அதிகாரம் என்பது இஸ்லாமிய இறையில் நம்பிக்கையின் படி அல்லாஹ்வுக்குரியது என்று நம்ப வேண்டும். சட்டம் இயற்றுவதற்கான உரிமை ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ, குழுவுக்கோ சார்பாக இல்லாமல் பொதுவாக அமைய வேண்டும் என்பதே இதன் பின்னாலுள்ள நோக்கமாகும். ஆனால் சஊதியில் சட்டமியற்றும் அதிகாரம் குறிப்பிட்ட மன்னர் பரம்பரைக்கே வழங்கப்பட்டுள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியில் இஸ்லாமிய அரசுக்கான பாதை (அத்தரீக்கு இலா ஜமாஅத்தில் முஸ்லிமீன்) என்ற நூலில் சஊதி இஸ்லாமிய நாடு அல்ல, ஆனால் அங்கே முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வு செய்து எழுதியதற்காக அவ்வாய்வாளர் சஊதி அரசால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டமை இங்கு நினைவுகூறத் தக்கது.
சதாராண மார்க்கத்தில் புகுந்த நூதன அணுஷ்டானங்களை மாபெரும் ஷிர்க்காக, குப்ராக (மார்க்க விரோத செயல்களாகக்) கருதும் அளவுக்கு சட்டமியற்றும் அதிகாரத்தை அல்லாஹ் அல்லாத சுஊத் மன்னர் பரம்பரைக்குக் கொடுப்பதை எந்த சஊதி ஏஜென்டுகளும் விமர்சிக்க மாட்டார்கள். அதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு ஒப்பிடலாம். எனவே அங்கே எப்படி மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது?
இஸ்லாத்தின் மற்றொரு அடிப்படையான கருத்துத்தான் ஆட்சியாளர்கள் மக்களினால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது. சஊதியில் எப்போதாவது தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்தெடுந்தெடுக்கப்பட்ட வரலாறுகளும் இல்லை. எனவே ஜனநாயகத்தின் சிறந்த விழுமியங்களை அங்கே காண முடியாது. உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் உரிமை மறுப்பு, அறபி-அஜமி ஏற்றத் தாழ்வு, மன்னர் குடும்பத்திலிருந்து அடிமட்ட பெலுவிச் பரம்பரை வரை நிலவும் பல்வேறு கோத்திர சாதிப் படிநிலைகள் இன்றும் நின்றும் நிலவுகிறது. பெலுவிச் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்குடும்பங்கள் போன்ற வர்த்தக முயற்சிகளையோ அல்லது சமூக செயற்பாடுகளையோ செய்வதை அங்குள்ள சட்டம் தடுக்கிறது. கல்வி, நீதி, பொருளாதாரத் துறைகளில் இவ்வடிமட்ட கோத்திரங்களுக்கு சமவாய்ப்புக்கள் இல்லை. சஊதியில் பெருந்தொகையான உள்ளுர் வாசிகள் வறுமைக்கோட்டிற்குக் கீழேயே வாழ்கின்றார்கள். ரியாத் போன்ற புதிய நகரங்களை தமது கண்களால் காணாத பதவிகளும் (நாடோடி அறபிகளும்) வாழ்கிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் இன்றுவரை சரியாக முன்னெடுக்கப் படவில்லை.
வறுமை, அறியாமை, ஏற்றத்தாழ்வு, சுரண்டல், உரிமை மறுப்பு, ஏகாதிபத்தியம் போன்ற பல விடயங்களைக் களைந்து உண்மையான மனிதாபிமானத்தையும் சகோதரத்துவத்தையும் அனைவரும் சமமாக உண்டு அனுபவித்து அறிவைப் பகிர்ந்து கொண்டு வாழும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிக் கொடுப்பதுதான் உண்மையான இஸ்லாமிய ஷரீஅத்தின் நோக்கமாகும். அப்போது குற்றங்கள், தவறுகள் குறையும். அதற்குப் பிறகும் குற்றங்கள் நடைபெறுமாக இருந்தால்தான் இஸ்லாமிய ஷரீவை காரணங்காட்டி தண்டனையை வழங்கலாம். வறுமையும் அறியாமையும் அதிகார துஷ்பிரயோகங்களும் நிலவும் ஒரு பிராந்தியத்தில் குற்றங்களை மட்டும் இழைக்கும் போது கத்தியைத் தூக்கிக் கொண்டு தண்டிக்க மட்டும் ஷரீஆ சட்டம் வரமாட்டாது. பஞ்சம் நிலவிய காலத்தில் உமர் (ரழி) அவர்கள் கைவெட்டுவதை நிறுத்திவைத்திருந்தார்கள்.
தண்டனை விடயத்தில் இரக்கங்காட்ட வேண்டாம் என்று சொல்லப்படுகிறதே, எனது மகள் பாத்திமா திருடியிருந்தாலும் நான் தண்டிப்பேன் என்றல்லவா நபிகள் கூறியுள்ளார்கள்?
தண்டனை என்ற இறுதி முடிவுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாமிய ஷரீஆவில் பல படிமுறைகள் காணப்படுகின்றன. குற்றவாளியா என்பது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். இதில் குற்றவாளி மேன்முறையீடு செய்வதற்கும் தனக்கான வழக்கறிஞர்களை நியமிப்பதற்கும் வழக்காடுவதற்கும் இஸ்லாமிய ஷரீஆவில் தாராளமாக இடமளிக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் மனிதர்கள் மத்தியில் மிகச்சரியான நீதியை வழங்குங்கள்” என்றுதான் அல்குர்ஆன் கூறுகின்றது. மிகச் சரியான முறையில் நீதி வழங்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் உலகத்தில் உள்ளதோ, உண்மையான நீதியை வழங்குவதற்கு எவை எல்லாம் தேவைப்படுகிறதோ அத்தனையையும் செய்து கொடுப்பது இஸ்லாமிய ஷரீஆவைப் பின்பற்றும் அரசின் கடமையாகும். ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது இஸ்லாத்தில் மிகப் பெரும் குற்றமாகும். பாத்திமா களவெடுத்தால் என்றுதான் நபிகள் சொல்கிறார்கள். பாத்திமா களவெடுக்கவில்லை. களவெடுத்தாரா என்பது முதலில் நிரூபிக்கப்பட வேண்டும். அறபு மொழியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ‘இன்’ என்ற விகுதிதான் (தமிழ் மொழியில் ‘ஆல்’) அவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நபிகள் சட்டத்தின் அனைவரும் சமம் என்பதைத்தான் அந்த ஹதீஸிலே நாடுகிறார்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் அந்தக் குறிப்பிட்ட சட்டம் நீதியான சட்டமாக இருக்க வேண்டும். நீதிக்குரிய அத்தனை தடயங்களையும் வழிமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும். நபிகள் குற்றவாளியை பலதடவைகள் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். ஒரு குற்றவாளியை வுழுச் செய்துவிட்டு வருமாறு கூறினார்கள். அதற்குப் பிறகும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு வரவே தொழுதுவிட்டு வரும்படி கூறினார்கள். தொழுதுவிட்டு வந்த்தும் இறைவனிடம் பிரார்த்தித்து வரும்படி கூறினார்கள். அதன் பின்னர் அவர் தண்டனை கேட்ட போது ‘நீ வுழுச் செய்தாய் அல்லவா? ஆம், நீ தொழுதாய் அல்லவா? ஆம், நீ பிரார்த்தித்தாய் அல்லவா? ஆம், அதனால் உன்னுடைய குற்றம் மன்னிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். இதேபோன்று விபச்சாரக் குற்றத்திலும் காமிதிய்யா என்ற பெண்ணை குழந்தையை பெற்றெடுத்துவிட்டு வருமாறும் பெற்றெடுத்த பின்னர் வந்த போது பாலூட்டிவிட்டு வருமாறும் பாலூட்டிய பின்னர் வந்த போது பால்குடி மறக்கச் செய்துவிட்டு வரும்படி கூறியமையும் நம்முடைய கவனத்தைப் பெற வேண்டிய மிக முக்கியமான விடயங்களாகும்.
எனவே தண்டிப்பதுதான் இஸ்லாத்தின் என்றென்றைக்குமான தீர்வு அல்ல. நபிகள் யுகத்திலும் அதற்குப் பின்னர் வந்த நான்கு கலீபாக்கள் ஆட்சியிலும் விரல்விட்டு எண்ணக் கூடிய சில தண்டனைகளே வழங்கப்பட்டுள்ளன. தண்டனைகளை குறைப்பதும் குற்றங்கள் உருவாகாமல் இருப்பதற்குரிய வழிகளை அடைத்து, வருமுன் காப்பதும்தான் இஸ்லாமிய ஷரீஆ கூறும் வழிமுறையாகும். தண்டனை ஒரு தற்காலிக ஏற்பாடே. மனிதனை மதங்கள் பண்படுத்தவே விரும்புகின்றன. மேலும் மேலும் பண்பாடுள்ளவனாக மாற்றுவதே இஸ்லாத்தின் மிகப்பெரும் அறமாகும். மறுமை நாள் வரைக்கும் மனிதர்களை தண்டித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. மனித சமூகம் பண்பட பண்பட தண்டனைகளின் கடுமையான போக்கையும் குறைத்துக் கொண்டு போக வேண்டும். வன்முறையற்ற தன்மையை சமூகம் களைந்து முன்னேற வேண்டும். அதுதான் மனித சமூகம் நாகரீகமடைகிறது என்பதற்கான அடையாளமாகும். அது மேலும் மேலும் பழங்குடித் தன்மைகளுக்கே போகுமாக இருந்தால் அது முன்னேற்றமல்ல.
தண்டனை தீர்மானிக்கப்பட்ட பின்னர் அதனை மாற்றவோ அல்லது மேன்முறையீடு செய்யவோ ஷரீஆ சட்டத்தில் அனுமதி இருக்கிறதா?
ஒரு பழங்குடிச் சமூகம் படிப்படியாக படிமலர்ச்சியடைந்து ஒரு நாகரீக நவீனத்துவ சமூகமாக உருவாகி வருவதைப் போன்று நீதித்துறையும் அதன் பழங்குடித் தன்மையிலிருந்து பஞ்சாயத்து விசாரணை முறைகளிலிருந்து படிப்படியாக இன்றைய நீதிவரைக்கும் பல்வேறு படிமுறைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இது இஸ்லாத்தின் ஷரீஆ சட்டத்திற்கும் பொருந்தும். பதினான்கு நூற்றாண்டு காலமாக அதனுடைய நீதித்துறை பல படிமுறை வளர்ச்சிகளை உலகின் பல் வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் நீதியை வழங்கி வளர்ந்துள்ளது. நபிகளின் ஆரம்ப காலத்திலும் அதற்குப் பின்னர் கலீபாக்களின் காலத்திலும் நபித்தோழர்கள் குற்றவாளிக்குச சார்பாக, எதிராக வாதாடியுள்ளனர். ஒரு குற்றவாளி நீதிச் சபைக்கு வருகின்றபோது அங்கிருக்கின்ற ஒரு நபித்தோழர் அவருக்காகத் தான் வாதாடப் போவதாக அறிவிக்கும் சுயாதீன, இடையீடுகளற்ற சுதந்திர நிலை நபித்தோழர்கள் யுகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அறபுத் தீபகற்பத்திற்கு வெளியே இஸ்லாம் பரவிய போது முன்னைய சமூகங்களின் நாகரீகங்களில் காணப்பட்ட நீதிமன்ற, நிருவாக முறைகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஆனால் சஊதியில் நீதித்துறையில் செல்வாக்குச் செலுத்தும் ஆலிம்சாக்கள் (சலபி சிந்தனையாளர்கள்) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய சட்ட சிந்தனைப் பள்ளிகளை (மத்ஹபுகள்) அதன் பன்மையான நியாயவியல் கருத்தாக்கங்களை, முடிவுகளை மறுக்கின்றவர்களாகவும் சொல்லுக்குச் சொல் (ஹர்பியூன்) ஷரீஆவின் அதிகாரப் பிரதிகளை வாசிப்பவர்களாகவும் இருக்கின்றனர். புனிதப் பிரதிகளுக்கான பல வாசிப்புக்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை.
கொலைத் தண்டனையை வழங்கிவிட்டு அது பிழையானது எனப் பின்னர் தெரிய வரும் போது அத்தண்டனையை திரும்பப் பெற்று குற்றவாளியைக் காப்பாற்ற முடியாது. அதைவிடக் குறைந்த சிறைத்தண்டனையை கொடுத்திருந்தால் ஒரு காலத்தில் நிரபராதி என நிரூபிக்கப்படும் போது விடுதலையாவதற்கு வழி இருக்கிறது. இந்த இடத்தில்தான் நவீன சமூகங்கள், மனித உரிமைப் போராளிகள் மரணதண்டனைக்கு மாற்றான தீர்வுகளை முன்வைத்து வருகிறார்கள். மரதண்டனையை விதிப்பதற்கு முன்னர் அதைப்பற்றி பல கட்டங்களில் மேன்முறையீடு செய்து, விவாதித்து, குற்ற தடயவியல் ஆதாரங்களை துருவித்துருவி ஆராய்ந்து பார்ப்பது முக்கியமாகும்.
மனித உரிமைகள் அமைப்புக்கள் அமெரிக்க, ஐரோப்பிய ஏஜென்டுகள் அல்லவா?
நாம் எப்போதும் கிளிப்பிள்ளை மாதிரி எதற்கெடுத்தாலும் மேற்கிலிருந்து வருகின்ற எல்லாவற்றையும் அதன் எல்லாப் பரிமாணங்களையும் சேர்த்து குற்றம் சாட்டி முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவதே நமது இன்றைய பொதுப்புத்தியாக இருக்கிறது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும். மேற்கில் உருவாகின்ற கொள்கை, கோட்பாடுகளுக்கு இரண்டு பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் சமூக அரசியல், பண்பாட்டு தேவை நோக்கங்களை பூர்த்தி செய்யும் நோக்கங்களும் அக்கோட்பாடுகளில் இருக்க முடியும். மற்றது பொதுவாக அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் மானுட சமூகத்திற்கு தேவைப்படக்கூடியவையும் அக்கோட்பாடுகளில் இருக்க முடியும். இதற்கு முன்னரும் அவர்களுடைய பாடசாலை அமைப்பு, பல்கலைக்கழக முறைமை, நீதி மன்றம், பாராளுமன்றம், வீதிப்போக்குவரத்து என பல விடயங்களை பௌதீகத் தளத்தில் நாம் பெற்று முன்னேறியிருக்கிறோம். ரோம, பாரசீக நாடுகளில் காணப்பட்ட நிருவாக முறைகளை, சமூக வழக்குகளை கலீபாக்கள் எடுத்து அமுல்படுத்தியிருக்கிறார்கள். நவீன காலத்திலும் கலை, இலக்கியத் துறைகளிலும் நாடகம், கதை, நாவல் எனப் பல வடிவங்களைப் பெற்று நம்முடைய கலை இலக்கியங்களும் நம்முடைய பண்பாடுகளை பிரதிபலிக்கக் கூடிய கலை இலக்கிய ஆக்கங்களை நாம் உருவாக்க வில்லையா? அதைப் போன்றுதான் இந்த மனித உரிமைகள் விடயத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. அல்குர்ஆன், ‘மனிதனை நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம்’ என்று கூறுகிறது. அவனுடைய கண்ணியத்தை, மரியாதையை, பங்கப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் உரிமை மீறல்கள்தான். வாழ்வுரிமை, கல்வியுரிமை, கருத்துச் சொல்லும் உரிமை, செயல்படும் உரிமை என்று பல உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் கூரியுள்ளது என்றும் இஸ்லாத்தில் மனித உரிமைகள் என்றும் ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கைவிடுக்கத் தொடங்கிய பிறகுதான் நாம் இஸ்லாத்தை மறுவாசிப்புச் செய்து அதற்குச் சம்மாக நிறுத்திக் கொள்கிறோம். ஆசியச் சூழலில் இருக்கின்ற அதிகார வர்க்கங்கள் மக்களை, சமூகங்களை ஒடுக்குவதாலும் உரிமைகளை மறுப்பதாலும் அல்லது குறித்த ஒரு பண்பாடு அதிகாரத்தின் மையத்தில் உட்கார்ந்து கொண்டு மற்றப் பண்பாடுகளை விளிம்பு நிலைக்கு தள்ளுகின்ற போதுதான் மேற்கத்திய மனித உரிமைகள் அமைப்புக்களின் வருகைக்கான வாய்ப்பாகவும் வெளியாகவும் அமைந்துவிடுவதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பிராந்தியங்களில் நீதி கிடைக்காத போதுதான் நாம் மேற்குலகை நோக்கி நீதியை கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். போர்ச்சூழலில் மக்கள் ஒடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போது அவர்களுக்கு உதவிக் கரம் கொடுத்து கரைசேர்த்தவர்கள் யார்? அறபு நாடுகளா? ஐரோப்பிய நாடுகளா? எங்கு மனிதாபிமானம் இருக்கிறது?
இந்தக் கேள்வியில் இன்னொரு உளவியலும் காணப்படுவதாக நான் உணர்கிறேன். நான் செய்ய வேண்டியதை இன்னொருவன் திறம்படச் செய்யும் போது அதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் அவனுடைய உள்நோக்கத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் நோயாகும். உதாரணமாக உலகில் எங்கு அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் அங்கு ஐரோப்பிய அரச சார்பற்ற நிறுவனங்கள்தான் முன்நிற்கின்றன. செம்பிறைச் சங்கம் என்று ஒன்று இருந்தாலும் அதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே ஒரு மனிதன் துன்பத்தில் உழலும்போது அவனுக்கு முதலில் ஓடோடிச் சென்று உதவி செய்ய வேண்டியவன் முஸ்லிம்தான். ஆனால் அத்தகைய பண்பாடு அறபுலகில் இன்னும் பெரியளவில் வளர்ச்சியடையவில்லை என்பதுதான் உண்மை. இதன் கருத்து ஐரோப்பிய அரச்சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்நோக்கங்கள், உள்ளரசியல்கள் இல்லை என்று கூறவில்லை. ஒரு நல்ல பக்கமும் அவர்களிடம் உண்டு. ஒரு வியாபாரி வர்த்தகம் மட்டும் செய்யவில்லை. நாம் தூர இடங்களுக்குச் சென்று பெற வேண்டிய ஒரு பொருளை நமது காலடியில் கொண்டு வந்து தருகின்ற சேவையையும் செய்கின்றான். எனவே இந்த மனித உரிமைகள் அமைப்பு விடயத்திலும் இந்த மனநிலையோடுதான் அணுக வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றிலும் தமது மூக்கை நுழைத்து கருத்துச் சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள், ரிசானாவின் விடயத்தில் மௌனஞ்சாதிப்பது ஏன்?
கருத்து, அறிவு என்பது எப்போதும் அதிகாரம் சார்ந்தே இயங்குகின்றது. வர்க்க நலன்கள் சார்ந்துதான் அறிவு தொழிற்படுகின்றது. எனவே ஒவ்வொரு அறிவுக்கும் கருத்துக்கும் பின்னால் நுண்ணரசியல்கள் தொழிற்படுகின்றன. நான் இங்கு அரசியல் என்று குறிப்பிடுவது காலத்துக்குக் காலம் தேர்தல் மூலம் நடாத்தப்படும் கட்சி அரசியல் அல்ல. ஒவ்வொரு மனித செயற்பாட்டுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த வகையில் அறிவு, மார்க்கம், பத்வா என்பவற்றுக்குப் பின்னாலும் தான் சார்ந்த நிறுவனங்கள், இயக்கங்கள், தன்னார்வக் குழுக்கள், அவற்றின் நலன்கள், போஷிப்புக்கள் பேன்றவற்றிலிருந்து தான் கருத்துக்களும் வெளிப்படுகின்றன. எனவே சஊதி சட்டம் அல்லது சஊதி ஷரீஆ சட்டம் என்பதையும் நாம் தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அதற்குப் பின்னாலும் மன்னர், கோத்திர நலன்கள், அவர்களின் உதவி பெறும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆலிம்கள் என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாபெரும் வலைப்பின்னல் இதற்குப் பின்னால் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டால்தான், ஏன் இவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகப் புரியும். மௌனம் சாதிப்பது என்பது மாற்றுக் குரல்கள், மாற்றுக் கருத்துக்கள் வந்துவிடக்கூடாது என்ற ஒரு அதிகார நுண்ணரசியல்தான். அதிகாரம் மௌனத்தை உற்பத்தி செய்கிறது. அதை தனது முகவர்களுக்குப் பரப்புகிறது. எனவே மௌனங்களை கலைப்பதன் ஊடாக அவர்களுடைய அறிவு அரசியலை அல்லது மார்க்க அரசியலை நாம் புரிந்து கொள்ள முடியும். (மேலதிக வாசிப்பிற்கு பார்க்க: கலைபடும் மௌனம்)
அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. அதிகாரம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆனால் அந்த அதிகாரமும் அரசியலும் அதனோடு இணைந்து தொழிற்படும் அறிவு அல்லது மார்க்கமும் யாருக்காக எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறது என்பதை வைத்துத்தான் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். ரிசானா இங்கு கொல்வதற்காக விமானம் ஏறிச் செல்லவில்லை. தன்னுடைய வறுமையை போக்கத்தான் செல்கிறாள். எனவே நபிகள் மக்களுக்காக, மக்களுக்கு மத்தியிலேயே, மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் தீர்வு சொல்பவராகவும் வாழ்ந்துள்ளார்கள். நபிமார்களின் பண்பே அதுதான். எனவே நபிமார்களின் வாரிசுகள் எனக் கருதப்படும் ஆலிம்களும் அந்தப் பண்பை கொண்டிருக்க வேண்டாமா?
சிலர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது மொழியறிவை, இலக்கியப் புலமையைப் பறைசாற்ற கவிதை, கதைகளை எழுதி மேலும் துன்பத்தையும் உணர்ச்சியையும் தூண்டிவிடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டுமல்லவா?
எல்லாவற்றுக்கும் பத்வா வழங்கிக் கொண்டிருப்பது மார்க்கமல்ல. மனிதன் உடல் மட்டும் கொண்டவன் அல்ல. அவன் உணர்ச்சிகளையும் கொண்ட கலவை. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இஸ்லாத்தில் சட்டத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை வழங்கப்பட வில்லை. ஒருவருடைய துக்கம், கவலை, தீர்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. சிலர் அழுவார்கள். இன்னும் சிலர் பிறரிடம் கவலையைப் பகிர்ந்து கொள்வார்கள். எழுத்துச் செயல்பாடுள்ளவர்கள் என்ன செய்வார்கள்? கவிதையாகவோ, கதையாகவோ எழுதுவதன் மூலம் தமது மனப்பாரத்தை இறக்கி, தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். அல்குர்ஆனும் கூட முன்னைய சமூகங்களுக்கு நடந்த கதிகளை, துயர நிகழ்வுகளை கவலையோடு பகிர்ந்து கொள்கிறது. நபிகள், அவருடைய மகன் மரணித்த போது அழுதார்கள். நபிகள் மரணித்த போது அவரது தோழர் தோழியர் அழுதார்கள். நபிகளின் சீறா நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
எனவே கவலையை துக்கத்தை பகிர்ந்து கொள்வது மானுட இயல்பு. அவன் மரக்கட்டையாக இருக்க முடியாது. ஏன் மரத்துக்குக் கூட உணர்ச்சி இருக்கிறது. மனிதனுக்கு இருக்க வேண்டாமா? இது இஸ்லாத்தை வெறும் கோட்பாடாக, இறுகிய நெகிழ்வுத் தன்மையே இல்லாத, புத்தாக்கத்திற்கும் புதிய சிந்தனைகளுக்கும் இடமில்லாத ஒன்றாக தட்டையாகப் புரிந்து கொள்ளும்போதே இந்த சிக்கல் ஏற்படுகின்றது. நபிகள் போரில் வெற்றியடைந்த போது ஓரிடத்தில் தோழர்களுடன் உட்கார்ந்திருக்க ஒரு பெண் வந்து வெற்றியைக் கொண்டாடும் முகமாக ரபான் அடித்து கஸீதா படிக்க அனுமதி கேட்ட போது நபிகள் அனுமதித்தார்கள். மகிழ்ச்சியான செய்திகள் கேள்விப் படும்போது ஒருவரைச் சுற்றிச் சுற்றி குதித்து குதித்து காலை மாற்றி மாற்றி ஆடும் ‘ஹஜல்’ என்ற மகிழ்வு நடனம் நபிகள் யுகத்தில் காணப்பட்டது. ஜஃபர், அலி போன்ற நபித்தோழர்கள் ஆடியுள்ளனர். அவ்வாறுதான் துக்கத்தையும் கவலையையும் நபிகள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். பிலால் மக்காவைப் பிரிந்து செல்லும் போது பிரிவுத்துயரை கவிதை மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
ரிசானாவின் விடயத்தில் சஊதி மன்னரோ இலங்கை அரசோ பொறுப்பாளர்கள் அல்ல என்று கூறப்படுகிறதே?
செய்வதை எல்லாம் செய்துவிட்டு செய்வது தெரிந்தும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தமது பொறுப்பிலிருந்து தப்பிக் கொள்ள முடியுமா? எந்த இரு புனித ஹரம் பள்ளிகளின் தலைவரோ அல்லது சஊதி அரசோ அதனது பழங்குடிகளின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக மரணதண்டனை பெற்றுக் கொடுத்ததைப் போல தண்டனையைப் பெற்ற குடிமகளின் பிரதிநிதியாகிய ஜனநாயக சோலிஷ அரசும் அதன் தலைமைகளும் போராட்டத்தை கொண்டு செல்வதற்கான பொறுப்பும் கடமையும் உண்டென்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
பெண்கள் வெளிநாடு செல்லக் கூடாது. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று சொல்கிறார்களே?
மத்திய கிழக்கில் ‘சன்ஆவிலிருந்து ஹழரமௌத் வரை ஒரு பெண் தனியாகப் பயணம் செய்யக்கூடிய காலம் வரும்’ என நபிகள் தனது தோழர் ஒருவரின் கேள்விக்கு பதில் கொடுக்கிறார். ஒரு பெண் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் என்று நபிகளின் வார்த்தை உள்ளது. நபிகளின் ஒட்டுமொத்தப் போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் அதன் வழியாக அவர் உருவாக்கிய அரசியல், சமூக இயக்கத்தை வைத்து அவதானித்தால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியும். நபிகள் போல் ஆண், பெண், அரவாணிகள் சமத்துவத்தை அவர் காலகட்டத்தில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்திய இன்னொரு தலைவர் இல்லை என்றே சொல்ல முடியும் (பார்க்க: புன்னகைக்கும் நபிகள்) நபிகள் அதை நடைமுறையில் செய்து காட்டியவர். நபிகளின் சாம்ராஜியத்தில் ஆண்-பெண்-அரவாணிகள் என்ற பேதம் எவ்வகையிலும் சாத்தியப்படவில்லை. அண்மையில் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹரம் ஷரீபில் இருந்த அரவாணிகளை சஊதி அரேபிய அரசு வெளியேற்றியுள்ளது. சமய வழிபாடுகள், பெருநாள் விழாக்கள் தொடக்கம் கல்வி, தொழில், பொதுப் பணிகள் என்ற தளங்களில் ஆணுக்கு நிகராக பெண்களை அவர் நிலை நிறுத்தியுள்ளார். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும் தன்னிலையையும் உருவாக்கிக் கொள்ள உந்துதல் அளித்துள்ளார். ஆணாதிக்க சொத்துரிமை உள்ள சமூகத்தில் பெண்களின் சொத்துரிமையை கடுமையாக வலியுறுத்தினார். பெண்களை பொது வாழ்க்கையில் பொதுப் பணிகளில் பங்குகெள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
சமய வழிபாடுகள், தொழில் தேவைகள், சமூகப் பொதுப் பணிகள் என்ற அடிப்படைகளிலிருந்து நபிகள் பெண்களின் நடமாடும் உரிமை என்ற எண்ணக்கருவை வந்தடைந்திருக்கிறார் என்றுதான் சொல்ல முடியும். நடமாடும் உரிமையில் வதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் கல்வியில், தொழிலில், சமூகப் பங்கேற்பிலும் கட்டுப்பாடுகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெண்களை ஒடுக்க நினைப்பவர்கள் முதலில் கைவைப்பதே இந்த நடமாடும் உரிமையில்தான். பள்ளிவாயலுக்குச் சென்று வழிபடும் உரிமை, கல்வி கற்றல், தொழில் செய்தல், சமூகப் பணிகளில் ஈடுபடல் போன்றவற்றில் முழுமையான உரிமையைப் பெற்றுக் கொள்ளாத பெண் குடும்பத்திலும் அடிமையாகவே நடத்தப்படுவாள். நடமாடும் அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு பயணம் செய்யும் சுதந்திரம் இல்லாமல் அவளுடைய ஆளுமை வளர முடியாது. பெண்கள் புழங்கும் வெளி சுருக்கப்பட்டால் அவள் ஆன்மீகப் பக்குவம் அடையவும் மாட்டாள்.
எனவே பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடாது என்பதை இந்தக் கோணத்திலிருந்தே நாம் அணுக வேண்டும். பெண்களை முடக்கி வைத்திருந்த, பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அக்கால காட்டறபிகளின் கொடும் பிடியிலிருந்து பெண்களை ஐந்து நேரம் பள்ளிக்கனுப்பி அகபா அரசியல் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவைத்து நபிகள் உருவாக்கிய முஸ்லிம் பெண்களை நோக்கி இவ்வாறு சொல்வது ஆணாதிக்க மனோபாவம் கொண்ட, சமயவாதிகளின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்தாகவே நாம் எடுக்க வேண்டும். வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு நீ வராதே! அப்படி நீ வந்தால் நான் உன்னைக் கொல்லுவேன் என்ற மிரட்டல் அறிவிப்புத்தான் அது. பெண்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆணாதிக்க அரசியல் தன்மை கொண்ட நாங்கள் ஷரீஅத்தின் பெயரால் என்னவும் செய்வோம் என்று சொல்வது போலதான் அதைக் கருத வேண்டும். பெண்கள் பொது வெளியிலிருந்து மீண்டும் இருண்ட சமயலறைகளுக்குள் அனுப்பப்பட வேண்டும் என்பது நபிகள் உருவாக்க விரும்பிய அல்லது தனது காலத்தில் உருவாக்கிக் காட்டிய அந்த வழிகாட்டலை மறுப்பதாகும். குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை வளர்க்க வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்களும் பெண்களும் வெளியேறிச் செல்வது என்பது வேறு. தற்போது ரிசானாவுக்கு சஊதியில் வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு இவ்வாறு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்வதுதான் காரணம் என்று கூறுவதுதான் பொருத்தமற்றது. இவ்விரண்டையும் நாம் வேறுபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக