பள்ளிவாசல் புகுந்த
பிராயந்தொட்டு தொழுகை புரிய
பள்ளிவாசல்
புகுவாரோடு பழகி நின்றவன்!
அவர்களது அன்பை ஆரா
அமுதமாய் தின்றவன் !
என் ஒவ்வொரு பருவத்திலும்
எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்
இஸ்லாமிய இனத்தவர்
அவரெலாம் - தண்ணீர் கலவா
தாய்ப்பால் மனத்தவர் !
இன்றைய என் ஏற்றம்
அவர்களிட்ட பிச்சை
இதைச் சொல்ல
எனக்கில்லை லஜ்ஜை !
எல்லா சமயமும்
எல்லாச்சமயமும்
பேசுவது அன்பு
பேணுவது அறம் இதை
ஒர்ந்தார்க்கு இயல்பாகக்
கைவரும் சமயப் பொறை
எனும் இமயப் பொறை !
இந்தப் பொறை
இருப்பின் இச்சமயம்
அச்சமயம்
என எச்சமயமாயினும்
எவரும்
அச்சமின்றி வாழலாம் என்பதை
உணர்ந்து வாழ்ந்திடும் மன்பதை !
கவிவேந்தர் மு.மேத்தா காவியமாய்
வரைந்த நபிகளார் வரலாற்றை வரிவிடாமல்
படித்தவன் படித்து - பரவசத்தில் புளகாங்கிதம் எய்தி
விழிப்புனலை வடித்தவன் !
அருளார்ந்த அத்தனும் அன்னையுமான
அப்துல்லாவும் ஆமினாவும்
இருளார்ந்த உலகிற்கு ஓர் இரவியை ஈந்தனர்
அங்கனம் ஈர்ந்ததால் அவர்கள் மரித்த பின்னும்
மக்கள் மனங்களில் மீந்தனர் !
அண்ணலார் அவர்கள் என்பு தோல்
கொண்டு எழுந்து வந்த அன்புரு ! ம
றம் தன்னை புறம் காண வந்த அறம் !
காலணி அணிந்து தர்மம் நடந்த நூலணி !
மனிதம் என்னும் வடிவில் வந்த புனிதம் !
பயிர் உய்ய பெய்யும் வான் மழைபோல்
ஞாலத்தின் உயிர் உய்யப் பெய்த ஞான மழை !
உலகு வணங்கும் உயரிய விழுமங்களின்
மொத்தக் குழுமம்
தகிக்கும் பாலையில்
தவிக்கும் வேர்களுக்கான
தண்ணீர்த் தடாகம் !
கதியற்றோர் கண்ணீரைத் துடைக்க
வந்த பூந்துவாலை !
விட்டொழிக்க வேண்டிய வெற்றுச் சடங்குகளை
சுட்டெரிக்க வந்த செந்தணல் சுவாலை !
எவ்வுயிரும் ஏற்று நிற்கும் செவ்வுயிர் !
சுருங்கச் சொன்னால்
அண்ணல் நபிகளார் அவர்கள்
இவ்வுலகிற்கு இறைவன் தந்த கொடை !
தூரிகையால் தீட்ட முடியாத ஓவியம் !
யாப்பதிகாரங்களால் காட்ட முடியாத காவியம் !
வார்த்தைகளால் சுட்ட முடியாதவர் வானம் போல்
எட்ட முடியாதவர் !
பகை புகுந்த நெஞ்சத்தார் பார்வையில் படாமல்
குகை புகுந்த குணாளரை
கதீஜா மணாளரை காத்து நின்றது - ஒரு கருஞ்சிலந்தி !
அது - வாய் நூலால் குகைக்கு
வாய்ப் பூட்டுப் போட்ட அருஞ்சிலந்தி !
ஆறறிவிடமிருந்து - ஒரு பேரறிவை
ஆன்றறிவில்லாத ஒரு மூன்றறிவுக் காத்தது
அதனால் அதற்கு அழியாப் புகழ் பூத்தது !
நபிகளார் பற்றி நாளெல்லாம் சொல்லலாம்
சொல்லச் சொல்ல இன்னும்
சொல்லாததாய் இருக்கும் சொல்லலாம் ! .....
.நன்றி:நமது முற்றம் - மாத இதழ் - ஜூலை -2007
நன்றி: அபு ஹாசிமா
நன்றி: அபு ஹாசிமா
மாஷா அல்லாஹ் .அருமை
பதிலளிநீக்கு