செவ்வாய், 18 நவம்பர், 2014

பாபரி மஸ்ஜித் வழக்கு - விநாயக முருகன்

அன்புள்ள விமு
உங்கள் முந்தைய பதிவில் 1988 க்கு பிறகுதான் டிவியில் மகாபாரதம் ஒளிப்பரப்பிய பிறகே அயோத்தி பிரச்சினை வெடித்தது போல எழுதி இருந்தீர்கள். அதற்கு முன்பு பிரச்சினையே இல்லையா? நான் முதிரா இளம் பருவத்தில் இருப்பதால் எனது சந்தேகங்களுக்கு பதில் அளித்து எனது வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்கவும்.
அன்புடன் செல்வம்
அன்புள்ள செல்வம்
இல்லையென்று சொல்லவில்லை. உண்மையில் அது சுதந்திரத்துக்கு முன்பே எழுப்பப்பட்ட பிரச்சினை. இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு சில தரவுகளை தேடும்போது சில தகவல்கள் கிடைத்தன.
1528ல் தனது பாபர் தனது தளபதி மீர்பாகியை வைத்து மசூதியை கட்டுகிறார்.
1885ல் பைசாபாத்தில் ஒரு வழக்கு பதியப்படுகிறது. எண் 61/280/1885ஆகப் பதியப்பட்ட இந்த வழக்கை மஹாந்த் ரகுபர் தாஸ் என்பவர் தாக்கல் செய்தார். 21 அடி கிழ மேலாகவும், 17 அடி தென்வடலாகவும் அமைந்த ராமர் பாதம் பதிந்த ராம சபுத்ரா எனும் மேடை தான் ராமர் பிறந்த இடமென்றும் வெப்பம் மற்றும் குளிரால் அங்கு ராமரை வணங்க முடியவில்லை என்றும் அதனால் அந்த மேடைக்கு மேலாக ஒரு ராமர் கோயிலை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டிருந்தார்.
அப்போது பைசாபாத்தின் உதவி நீதிபதியாக இருந்தவர் பண்டிட் ஹரி கிருஷ்ணன். அவர் பிப்ரவரி 24, 1885ல் அந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறார். கோயில் கட்ட அனுமதி மறுத்து தீர்ப்பளிகிறார். அந்த தீர்ப்பில் இப்படி சொல்கிறார்.
கோயில் கட்ட அனுமதியளிப்பது நாம் கொண்டிருக்கக் கூடிய பொதுவான கொள்கைக்கு எதிரானதாகும். அவ்வாறு கோயில் கட்ட நாம் அனுமதித்தால் இந்துக்கள் கோயிலில் மணியடிப்பார்கள்; சங்கு ஊதுவார்கள். அது இங்கு நடந்து செல்லும் இஸ்லாமியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும். இதில் இரு சமுதாயமும் அடித்துக் கொண்டு கலவரம் ஏற்பட்டு, அதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாக நேரிடும். அதனால் ராமர் கோயில் கட்ட அனுமதி என்பது கலவரத்திற்குப் போடும் அஸ்திவாரம் ஆகும். தவிர அந்த இடம் ரகுபர் தாஸிற்குச் சொந்தமானது அல்ல என்றும் தீர்ப்பில் சொல்கிறார்.
அத எதிர்த்து ரகுபர்தாஸ் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார் . வழக்கு எண் 27/1886ஆகப் பதியப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர், பாபரி மஸ்ஜித் இடத்திற்கு நேரடி வருகையளித்துப் பார்வையிடுகிறார்கள். பார்வையிட்ட பிறகு மார்ச் 18, 1886ல் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யும் நீதிபதியின் இப்படி தீர்ப்பு சொல்கிறார்.
"இந்துக்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருப்பது மிகவும் துரதிஷ்டமானது. ஆனால் இது 356 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. இதற்கு இப்போது பரிகாரம் காண முடியாது. காரணம், இது மிகவும் காலம் கடந்தது''
ரகுபர் தாஸ் அதை எதிர்த்து ஆவுத் நீதி ஆணையரிடம் இரண்டாம் மேல் முறையீடு செய்கிறார். ஆவுத் நீதிபதி டபுள்யூ. யங்க் (W.Young) இந்த இரண்டாம் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்து நவம்பர் 1, 1886 அன்று தீர்ப்பளிக்கின்றார். அவர் அளித்த தீர்ப்பிலும் நீதிபதி எஃப்.இ.ஏ. சேமியர் போன்றே சில கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.
"சபுத்ரா நிலம் தனக்குச் சொந்தமானது என்று மனுதாரர் உரிமை கொண்டாடுகிறார். ஆனால் ஆவணங்களின்படி மனுதாரருக்கு இந்த நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த நீதிபதிகள் சரியான விதத்திலேயே மனுதாரரின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்திருக்கின்றனர்'' என தீர்ப்பு சொல்கிறார்.
அதெல்லாம் வெள்ளையர் காலத்தில் நடந்த விஷயம். பிறகு சுதந்திரம் கிடைக்கும்வரை பொறுமையாக காத்திருந்தார்கள். டிசம்பர் 22-23, 1949 அன்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள் மசூதியின் வளாகத்திற்குள் ராமர், லட்சுமணன்,சீதை மூவரது சிலைகள் கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. மீண்டும் பிரச்சினை வெடிக்கிறது.
சிலைகளை அகற்றும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தும், அப்போதைய பைசாபாத் மாவட்ட அதிகாரி, துணை ஆணையர் கே.கே. நய்யார், "பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கை இதன் பின்னணியில் இருக்கின்றது. அதைக் குறைத்து மதிப்பிட முடியாது' என்று மேலிட உத்தரவை உதாசீனப்படுத்தினார்;
யார் அந்த மேலிடம்? பிரதமர் ஜவஹர்லால் நேருதான்.  துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், கவர்னர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி, உ.பி. முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்த், தனது நண்பர் கே.ஜி. மஷ்ருவாலா ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி தள்ளுகிறார்.
டிசம்பர் 26, 1949 அன்று பிரதமர் நேரு, உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
சிலைகளைப் பள்ளியில் கொண்டு வைத்தது பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்ற மிகக் கெட்ட முன் மாதிரியாகும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 5, 1950ல் மஷ்ருவாலாவுக்கு எழுதிய கடிதத்தில், "பைசாபாத் மாவட்ட அதிகாரி முறை தவறி, கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டிருக்கின்றார். முதலமைச்சர் இச்செயலை பல்வேறு கட்டங்களில் கண்டித்தாலும் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் நடந்த சம்பவங்களை படிக்கும்போது இந்தியாவில் பிரதமர் பதவி என்பது அன்றே ஒரு டம்மி போஸ்ட் என்று தெரிகிறது.
ஏப்ரல் 17, 1950 அன்று நேரு, உ.பி. முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடும் வரிகளை படிக்கவும்.
" உ.பி. எனக்கு ஒரு வெளிநாடாகத் தோன்றுகிறது. இதற்கு முன்பு காங்கிரஸின் தூண்களாகத் திகழ்ந்தவர்களின் சிந்தனைகளிலேயே மதவாதம் மிக ஆழமாக ஊடுருவி விட்டதை நான் காண்கிறேன். மதவாதம் என்பது உணர்வு பெற்று எழ முடியாத அளவுக்கு உடலை வெகுவாகப் பாதித்துக் கொண்டிருக்கின்ற பாரிச வாயு! வாத நோய்! இது ஒரு விதத்தில் அரசியல் ஆதாயம். இந்த நோய் விவகாரத்தில் நாம் மிகவும் மெத்தனமாக இருக்கின்றோம்"
நேருவுக்கு எந்தளவு ஆதங்கம் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார்.
பிறகு நடந்த சம்பவங்களை வரிசையாக பார்க்கலாம்.
ஜனவரி 16, 1950 அன்று கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் "1949ல் பள்ளிவாசலில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றக் கூடாது' என்று ஓர் உத்தரவு கோருகின்றார்.
டிசம்பர் 5, 1950 அன்று மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர், பள்ளிவாசலில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு, தொடர்ந்து பூஜை செய்ய பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓர் உத்தரவைக் கேட்கின்றார்.
டிசம்பர் 17, 1950 அன்று சர்ச்சைக்குரிய பகுதியை அரசாங்க ரிசீவரிடமிருந்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்மோஹி அகாரா என்ற அமைப்பு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் கோரியது.
டிசம்பர் 18, 1961 அன்று உத்தர பிரதேச சுன்னத் ஜமாஅத் மத்திய வக்ஃபு வாரியம் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், பள்ளிவாசல் தனக்குரியது என்பதற்கான விளம்புகைப் பரிகாரம் மற்றும் அனுபவ பாத்தியதை (Declaration & Possession) கோரி வழக்கு தொடுத்தது.
மேலே கூறப்பட்ட நான்கு வழக்குகளும் பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுப் பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.
1982ல் வி.ஹெச்.பி. ராமர் கோயில் இயக்கத்தைத் தொடங்கியது.
1989ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், பாலாம்பூரில் கூடிய தனது தேசிய செயற்குழுவில், இந்துத்வா தான் தனது அரசியல் லட்சியக் கொள்கை என்றும், ராம ஜென்ம பூமி இயக்கத்தில் பங்கு கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.
பிறகு 1992 ல் இடிக்கிறார்கள். அன்றைக்கு நேருவால் எப்படி ஒன்றும் செய்ய இயலாமல் போனதோ அதுவே நரசிம்மராவுக்கு நடந்தது.
மஹாந்த் பரமஹன்ஸா ராமச்சந்திர தாஸ் என்பவர்தான் நள்ளிரவில் மூன்று சிலைகளையும் கொண்டு சென்று மசூதிக்குள் வைத்தவர்.
டிசம்பர் 22, 1991ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இப்போது அவரும் உயிரோடு இல்லை. ராமரை கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. பாபரை எழுப்பி கேட்கலாம் என்றால் அவரும் இல்லை. கேட்டவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் வரலாற்றில் உண்மைக்கென்று ஓர் இடம் எப்போதும் இருக்கும். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அதை சிலர் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்
அன்புடன்
விமு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக