கதீஜா நாயகியின் சோதரி
கவ்லா பின்த் குவைலிது!
அன்னை கதீஜாவின்
மறைவுக்குப் பிறகும்
அவ்வப்போது அவர்
அண்ணல் பெருமான் இல்லத்துக்கு
வருவதுண்டு
வருகின்ற அவரை
அகமும் முகமும் மலர்ந்து
அண்ணலும் குடும்பமும்
வரவேற்று உபசரிப்பதுண்டு!
சகோதரிகள் இருவருக்கும்
ஒன்றுபோல் ரத்தம்
அதுபோல்
ஒன்றுபோல் சத்தம்!
அதனால்
கவ்லா நாயகி பேசினால்
கேட்பவர் எவர்க்கும்
அது கதீஜா நாயகி
பேசுவது போன்றே கேட்கும்!
அது கேட்கும்
அண்ணல் நபிகளின் மனமும்
அன்னை கதீஜாவுடன் வாழ்ந்த
பழைய நினைவுகளில் மூழ்கும்!
ஒருதரமா இருதரமா
அன்னை கவ்லா பேசும்
ஒவ்வொரு தரமும்
அவர் குரல்
இழுத்து வரும்
அண்ணலின் முன்
அவர்
கதீஜா பெருமாட்டியுடன் வாழ்ந்த
பழைய நிகழ் நிரல்!
அன்னை மேல் கொண்ட
அன்பின் உச்சமாய்
அவ்வேளைகளில் எல்லாம்
அண்ணல் நாவில்
அன்னையார் பெயர் புரளும்
அவர்
அந்நேரம்
இல்லாதததை எண்ணி
கருணை விழிகளில்
கண்ணீர் திரளும்!
அதைப் பார்த்திருக்கும்
அன்னை ஆயிஷா விழிகளில்
வேகமும் தாகமும் பெருகும்!
இருப்பினும்
கதீஜா பெருமாட்டி
அண்ணலின் உள்ளத்தில் எழுதிய
அப்பழுக்கிலாத அகப்பாட்டை
எவராலும் அழிக்க முடியவில்லை
அண்ணல் நெஞ்சத்தில் இருந்து
அவர் போட்டு வைத்த
ஒப்பற்ற நினைவை
ஒரு சிறிதேனும்
ஒழிக்க முடியவில்லை!
எத்தனையோ விஷயங்களில்
எம்பெருமான் நபிகளின்
இளையமான்
அன்னை ஆயிஷா நாயகி
வெற்றி பெற்றும்
இந்த ஒரு விஷயத்தில் மட்டும்
அவரால் அந்த உயரத்தை
எட்ட முடியவில்லை!
அண்ணல் மிக மிக நேசித்த
அவருக்கே அப்படியெனில்
பிறருக்கு எப்படி
அவர் உயரத்தை எட்ட முடியும்?
அதனை
இவ்விதம் என்று
எடுத்துக்காட்டி
என்பாட்டில் மட்டும்
எப்படிச் சுட்ட முடியும்?
ஆயிரம் காரணம் கொண்டு
அவன் அன்னையாரை
அண்ணலோடு ஒட்டி வைத்தான்
அகிலத்தின் அருட்கொடை
அண்ணல் நபிகள் நாயகக் காவியத்தின்
பாயிரம்போல் அவர் புகழைக்
கவிதையில் கொட்ட வைத்தான்!
குவைலிதின் குலக்கொடி
அன்னை கதீஜா போல் - இந்த
குவலயத்தில் யாரும் சிறப்புறவில்லை
வானமே வந்து - அந்த
வான் மகளை வாழ்த்தும்
அப்படி
வானமே வாழ்த்தும்
வகைக்கேது எல்லை!
(முகப் புத்தகத்தில் தமியேன் இட்ட பதிவு))
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக