சனி, 31 மார்ச், 2012

ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

'அப்பா...
ஒரு கதை சொல்லு'
ஓடி வந்தாள்
ஒன்றாம் வகுப்பு மீனாட்சி.

ஆர்வத்துடன் ஆரம்பித்தேன்
'முயலுக்கும் ஆமைக்கும்
ஓட்டப் பந்தயம்
முயல் உறங்க
ஆமை வென்றது'
அபிநயத்துடன்
அரங்கேற்றினேன்.

'போப்பா!
தப்புத் தப்பா சொல்றே...
மெள்ள நகரும் ஆமைக்கும்
துள்ளி ஓடும் முயலுக்கும்
போட்டி என்பது நியாயமா?'

ஒன்றாம் வகுப்பின்
கேள்வியால்
நூற்றாண்டுத் தத்துவம்
நொடியில் உடைந்தது.
கேள்வியே கல்வி என்று
இப்போது புரிந்தது.

ம்...ம்... பள்ளிக்குப்
போக வேண்டியது
மீனாட்சியல்ல!

- அமிர்தநேயன்
(விகடன் - 07.அக்டோபர்.09 )

வெள்ளி, 30 மார்ச், 2012

உங்களுக்காக சில மணித்துளிகள் ...!


அதிகாலையில் எழுந்து பரபரப்பாக அலுவலகம் செல்லும் நகர வாழ்க்கையில் தினம் தினம் ஒரே மாதிரி செய்வது போராடித்து விடும். இதனால் உடலும், மனமும், சோம்பிவிடும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற அன்றாடம் செய்யும் அலுவல்களை சற்றே மாற்றி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இது நமது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது என்கின்றனர்.

ஜூஸ்க்கு வெல்கம், காபிக்கு பை

நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகாலையில் எழுந்து காபி குடிப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. தினம் தினம் காலையில் எழுந்து காபி குடிப்பது போரடிப்பதோடு உடல் நலத்திற்கும் உகந்ததல்ல எனவே காபிக்கு பதிலாக ஜூஸ் குடிப்பது நல்லது என்கின்றனர். இதனால் உற்சாகத்தோடு உடலும் நலமாகும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எழுதுங்கள் நல்லது

கணினி மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் பேனா பிடித்து எழுதுவது என்பதே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும், அலுவகத்திலும் எழுதுவது என்பது மாறி, டைப் செய்வதே அவசியம் என்றாகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்திற்கு பேனா பிடித்து நோட்டு புத்தகங்களில் எழுதி பார்ப்பது நல்லது. ஒவியராக இருந்தால் அழகான ஓவியம் ஒன்றை வரைவது மனதிற்கு மாற்றத்தை தரும். தினசரி போரான வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

பிறந்தநாளுக்கு ஒரு மரம்

ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு மரம் நடுவதை திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நமது வாழ்க்கைமுறையையில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மரம் வளர்ப்பது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

மனதிற்கு இதமான பயணம்

வாரம் ஒருமுறையாவது காரை விடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம். தனியாக சென்று பழகிய நமக்கு சக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியான மாற்றத்தை தரும். இதனால் பெட்ரோல் மிச்சப்படுவதோடு சுற்றுச்சுசூழலுக்கும் நன்மை செய்தது போலாகும்.

நமக்காக ஒருநாள்

தினம் 24 மணி நேரத்தையும், அலுவலகம், வாழ்க்கைத்துணை, கேர்ள்பிரண்ட், குடும்பம், செல்லப்பிராணிகள் என அனைவருக்காகவும் நேரத்தை செலவழிக்கிறோம். நமக்காக என்று சிலமணித் துளிகள் கூட செலவழிப்பது கிடையாது. எனவே நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக்க நமக்காக சில நிமிடங்களை தினசரி செலவழிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

ஞாயிறை வீணாக்க வேண்டாம்

விடுமுறை நாளான ஞாயிறு என்பது வீணாக்க அல்ல. எந்த ஒரு இடையூறும் இன்றி அந்த நாளை கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த வாரத்திற்கான தினங்களை புத்துணர்ச்சியோடு கழிக்க முடியும்.

சிரிப்பு மருந்து

சிரிப்பு என்பது மிகச்சிறந்த மருந்து. தினமும் இறுக்கமாக இருப்பதை கலைக்கவும், மனஅழுத்தம், வலிகளை மறக்கவும், சிரிப்பு உதவுகிறது. மனது விட்டு சிரித்தால் கவலைகள் மறக்கப்படும். எனவேதான் வாய்விட்டு சிரிக்க உளவியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புத்துணர்ச்சி தரும் இசை

இதமான இசையை கேட்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அமைதியான முறையில் இசையை கேட்பது மன அழுத்தம் தரும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும், எனவேதான் அன்றாட அலுவல்களினால் ஏற்பட்ட சிக்கல்களை களைய இசையை கேட்க வலியுறுத்துகின்றனர் உளவியலாளர்கள்.

நடத்தல் அவசியம்

வாக்கிங் என்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். இது நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால்தான் மருத்துவர்கள் நடப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர். வீட்டிற்குள்ளேயே டிரட்மில் வைத்து வீட்டிற்குள் நடப்பதை விட திறந்த வெளியில் நடக்க வலியுறுத்துகின்றனர்.

தினம் ஒரு நற்செயல்

இன்று புதிதாய் பிறந்தோம் என்பதைப்போல தினம் ஏதாவது ஒரு நன்மை, யாருக்காவது ஒரு உதவி செய்யவேண்டும். அது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தரும்.
 

செவ்வாய், 27 மார்ச், 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…!

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

திங்கள், 26 மார்ச், 2012

குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள்

குழந்தைகளின் மீது நடத்தப்படுகின்ற பாலியல் வன்கொடுமை மற்ற எல்லா குற்றங்களைப் போலவே உலகமயமானதுதான். ஆனால் எல்லா இடத்திற்கும் பொதுவான விளக்கம் என்று எதுவும் இல்லை. ஆனால் பெரியவர்களின் ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்து குழந்தைகளிடம் பாலியல் கொடுவா ளுமை தூண்டுகிறது. குழந்தை பாலியல் கொடுவா ளுமை என்பது குழந்தைகளின் பாலுறுப்புகளைத் தடவுதல், அசைத்தல் ,வாயில் வைத்தல், விரல்களை நுழைத்தல், மற்றும் உடலுறவு கொள்ளுதல். உடல்ரீதியான தொடர்பு மட்டுமல்லாமல் உடல் தொடர்பு இல்லாமல் பாலுறுப்புகளைப் பார்த்தல், பாலுறவுக் காட்சிகளைப் பார்க்கச் செய்தல், பாலுறவு பற்றிப் பேசுதல் ஆகியவையும் அடங்கும். குழந்தைகளிடம் கொடுவாளுமை கொள்கிறவர்களி டையே அந்தஸ்து வேறுபாடு ஏதுமில்லை. மிக மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படுபவர்கள் கூட இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மீதும் நடத்தப்படுகின்ற கொடுவாளுமைக் குற்றங்கள் பற்றிய துல்லியமான புள்ளிவிவரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஏனென்றால் அதைப்பற்றிப் பதிவு செய்வது குறைவாக உள்ளதும், கொடுவாளுமை என்றால் என்ன என்பதற்கான விளக்கம் தெரியாததும் காரணமாகும். கொடுவாளுமையால் ஏற்படும் தாக்கம் ஓரிடத்தில் ஏதுமில்லாமலும் மற்றோர் இடத்தில் மிக கடுமையாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வன்செயலால் பாதிக்கப்படும் குழந்தைகள் -குறிப்பாக குடும்ப உறுப்பினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வர்களும் உடல்ரீதியான தாக்குதல் அதிகம் ஏற்பட்டவர்களும் 'பயம் பதட்டம்' மோசமான மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு சமயங்களில் வெளிப்பட்டு துன்பத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பது அவசியம்.

கொடுவாளுமையால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

குழந்தைகளோ,வயது வந்தோரோ இனம், கலாச்சாரம், பொருளாதார நிலைமை, தோற்றம் என எந்த வேறுபாடும் இல்லாமல் பாலியல் கொடுவாளுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிறுவர்களைவிட சிறுமிகள் அதிக அளவில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் பாலியல் கொடுவாளுமைக்குள்ளானோர் விவரம்: இந்தியாவில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 மாநிலங்களை உள்ளடக்கி 12,446 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வை பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச் சகம் வெளியிட்டுள்ளது. அதன் அதிர்ச்சிகரமான விவரம்.
53 % க்கும் அதிகமான குழந்தைகள் ஒன்று அல்லது அதற்கு அதிக மான வகைகளில் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

22% குழந்தைகள் மோசமான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 6 % பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

50% குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்களாகஅல்லது நம்பிக்கைக்குரியவர் களாக இருக்கிறார்கள்.(குடும்ப உறுப்பினர், நெருங்கிய உறவினர்,நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள்.)

5-12 வயதுள்ளவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்காளானாலும் பெரும்பாலும் பதிவு செய்யப்படவில்லை.
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளைப் போலவே சம அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

11-16 வயதுடையோர் மோசமாக கெடுவாளுமைக் காளாகிறார்கள்.

73% பாதிக்கப்பட்டவர்கள் 11-18 வயதுடையவர்கள்.

2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட - வின் ஆய்வில் சென்னையில் உள்ள 2,211 பள்ளி செல்லும் குழந்தைகள் பங்கு பெற்றனர். அதில் குழந்தை பாலியல் கொடுவாளுமைக்குள்ளானோர் 42% என்று தெரிகிறது. இங்கும் பொருளாதாரப் பாகுபாடு இல்லாமல் கொடுமை நடந்திருப்பது தெரிகிறது. இந்த ஆய்வில் 48 % சிறுவர்களும்- 39 % சிறுமிகளும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் 15 % இருபால் சிறார்கள் மோசமாக கொடுவாளுமை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சர்வதேச அளவிலும் ஏறக்குறைய இதே அளவில் இந்தக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் குற்றவாளிகள் யார்?

இதைப்பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு தகவல்களைத் தருகின்றன. ஆனால், அதிர்ச்சிகரமான செய்தியாக இக்குற்றத்தைச் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழகும் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பழக்கமில்லாத புதியவர்களின் பங்கு இதில் குறைவாகவே இருக்கிறது. மேலும் ஆண்களே இக்குற்றத்தை அதிகம் செய்கிறார்கள். பெண்களும் இக்குற்றத்தில் ஈடுபடுவதாகப் பதிவுகள் இருக்கின்றன. பொதுவாக நினைப்பதுபோல் அல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இக்குற்றத்தில் அதிகமாக ஈடுபடுவதில்லை.

பாலியல் கொடுமையால் ஏற்படும் விளைவுகள் என்ன?

இக்கொடுமைக்கு ஆளானோர் உளவியல் மற்றும் நடத்தைக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இப்பாதிப்பு சாதாரண முதல் கடுமையானது வரை குறுகிய காலத்திற்கும் நீண்ட காலத்திற்கும் மாறுபட்டு உள்ளது. மன அழுத்தம், பயம்_பதட்டம், குற்ற உணர்வு, அச்சம், பாலியல் செயல்பாடின்மை, விலகி இருத்தல், காணாமல் போதல் என விளைவுகள் பலவகையில் இருக்கிறது.

நிகழ்வின் தன்மையைப் பொறுத்து எதிர் பாலின வெறுப்பு ,பாலுறவு விருப்பமின்மை போன்ற நடத்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல்,

1. உண்பதில் ஒழுங்கின்மை

2. தன்னம்பிக்கைக் குறைவு.

3. உடல் இயக்கக் குறைபாடுகள்.

4. நாட்பட்ட உடல் வலி.

5. கருவுறும் மற்றும் தொற்று நோய்கள் பீடிக்கும் அபாயம். 6. கற்றல் குறைபாடுகள்.

7. பொருட்களை உடைத்தல், தவறாகப் பயன்படுத்தல்.

8. பருவமடைந்தபின் பாலுறவு விருப்பமின்மை.

9 குற்றச் செயல்களில் ஈடுபடுதல்.
10 சிறு குழந்தைகள் போல் விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல்.

11 குறிப்பிட்ட சிலருடன் இருந்து விலகி இருத்தல்.

12 தற்கொலை செய்துகொள்ளுதல்.

கொடுவாளுமையைத் தடுப்பது எப்படி?

பெற்றோர்களும் பாதுகாவலர்களும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் :

அடிப்படையான பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர்கள் மூலமாக...

பெரியவர்களின் பாலியல் அணுகுமுறை தவறு என்பதை...

அவர்களுக்கு நேர்ந்ததை உங்களிடமோ நம்பிக்கைக்குரிய மற்றவர்களிடமோ வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதை, ஒருவேளை அப்படி ஒரு கொடுமை நேர்ந்திருக்கலாம் என்பது தெரிந்தால் நேரடியாகக் கேட்கலாம்.

எதை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும், எதைத் தெரிவித்துவிட வேண்டும் என்பதை...

தொடுதலில் உள்ள 'தவறு' மற்றும் 'சரி' என்பதைப் பற்றி...

அவர்களுடைய அந்தரங்க உறுப்புகளின் பெயர்கள் அதைப் பராமரிக்கவேண்டிய முறை; அவசியம் பற்றி...

அதனால் அவர்கள் மூத்தவர்கள் பார்க்க அல்லது தொட அனுமதிக்கமாட்டார்கள்.

உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

தெரிந்தவர்களின் மூலமாகவே அதிகமாக இக்கொடுமை நடக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உறவினர்களைக் கட்டிப் பிடிப்பது முத்தமிடுவது போன்ற பழக்கங்களைத் தவிர்த்து விடுங்கள்.

கார் போன்ற வாகனங்களில் உங்கள் அனுமதி இல்லாமல் வேறு யாருடனும் பயணம் செய்ய அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தையை யாரிடமாவது விட்டுச் செல்வதில் தயக்கமோ சந்தேகமோ இருந்தால்... வேண்டாம் என்று முடிவெடுங்கள்.

கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால் என்ன செய்வது?

குழந்தையைப் பாதுகாப்பான சூழ்நிலையில் வைத்து உங்களிடமோ வேறு நம்பிக்கைக்குரியவர் களிடமோ பேச வையுங்கள். அதைப் பற்றிப் பேச தைரியம் கொடுங்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருங்கள். அமைதியாகக் கேளுங்கள். குழந்தையின் வார்த்தைகளுக்கும் குறிப்புகளுக்கும் ஆதரவாக இருங்கள்.

அந்தக் குழந்தையின் மீது தவறு ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள்.

ஒரு உளவியல் நிபுணர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடுங்கள்.
இதைப் பற்றிய அனுபவமுள்ள மருத்துவரின் மூலம் பரிசோதனை செய்து முடிவு எடுக்கலாம்.

சட்ட உதவியை நாட வேண்டும்.

சிகிச்சைகள்:

கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.

சம்பந்தப்பட்டவருக்கான சிகிச்சை.

குடும்ப சிகிச்சை.

குழு மருத்துவம்.

அறிவு சார் நடத்தை மாற்று சிகிச்சை.

குழந்தையை மய்யப்படுத்திய சிகிச்சை.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை பயன் தராது. ஒவ்வொருவரின் குணாதிசயங்களுக்கு ஏற்ப பல்வேறு அணுகுமுறை, மற்றும் கால அளவில் சிகிச்சை தேவை.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பைப் பொறுத்து குணமாகும் கால அளவு மாறுபடும். ஆனால், நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.

'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்பார்கள். மொட்டுகளைச் சுட்டு விடாதீர்கள் என்று கற்பிக்க வேண்டும். மனிதன் என்று மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வான் என்று கவலையோடு காத்திருக்க வேண்டியிருக்கிறது.

விதி மாறும் (தாஜுல் ஸலவாத்)


(தாஜுல் ஸலவாத் என்று ஆன்றோர்களால் சிறப்பித்து ஓதப்பட்டு வரும் ஸலவாத்துக்களின் கிரீடமாய் விளங்கும் சிறப்பான ஸலவாத்தின் மொழி ஆக்கமாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது)

அல்லாஹ் ! எங்கள் அருளாளா ! 
        அருமைத் தலைவர் நபிமீது 
நல்லார் ஓதும் சலவாத்தை  
          நாளும்  பொழிந்தே அருளாயோ ?
எங்கள் நபிகள் நாயகம்தான் 
          எழில் மெய்ஞான மணிமகுடம் !
திங்கள் நபிகள்  கைகளிலே 
           திகழும்  கொடியே புகழாகும் !
வானப் பறவை  புராக்கினையும் 
           வசமாய் ஏற்றுக் கொண்டவராம் ! 
வானம் ஏறி மி- ராஜில் 
            வள்ளல் உன்னைக் கண்டவராம் ! 
நோய்கள்சிரமம்  நொம்பலங்கள் 
            நொடியில் தீர்க்கும் மருந்தவராம் ! 
ஆய்வில் அவரின் திருநாமம் 
            அனைத்து  வேதங்  களிலுண்டாம் !
தலைவிதி எழுதிய பட்டோலை 
            தன்னிலும் அவர்கள் பெயருண்டாம் !
தலைவா ! உந்தன் கைஎழுதும்
               பேனா விலும்அவர்  பெயருண்டு !
அரபிகள் அஜமிகள் அனைவருக்கும் 
               அவரே தலைவர் ஆகின்றார் ! 
சுரபிகள் சுரக்கும் அருளொளியில் 
               சூழ்ந்தவ ரென்றும் இருக்கின்றார் !
மக்கா மதீனா  நகரத்தின் 
              மங்கா ஒளியாய்த் திகழ்கின்றார் ! 
எக்கா  லத்தும் விடிகின்ற 
              இலங்கா லைஒளி அவரானார் ! 
முக்கா லத்து  முழுமதியாய் 
              முஹம்மது நபியே ஒளிர்கின்றார் ! 
நேர்வழி தரும்பே  ரொளியாக
               நிகரில்லாத் தலை  மைஏற்றார் !
பார்புக ழும்அவர் பாதங்களில் 
               படைப்பினமெல்லாம் அடைக்கலமே ! 
பண்பின் சிகரம் அவரானார் ! 
              பரிந்துரைக் கும்பொறுப்  பைஏற்றார் ! 
அன்பின் மிகுதிப் பாட்டதனால் 
              அள்ளிவழங்கும் அருளானார் !
வானவன் அவர்க்கு இமையானான் !
               வானவர் ஜிப்ரீல் துணையானார் ! 
கோனவன் சந்நி தானத்தில் 
               கொண்டுபோய்ச் சேர்க்கும் புராக்நபிக்கு
வாகனம் ஆனது; மி-ராஜே 
              வானப் பயணம் ஆனதுவே ! 
சித்ரத்துல்முன்தஹா தானமென 
               சிறக்கும் நபிகள் வாழியவே ! 
உதிரத் தேட்டம் ஒருவனையே 
               ஓடிச் சென்று அடைவதுவே ! 
மன்னர் நபிகள் நாயகமே 
               மற்றைய நபிக்கெலாம் மன்னரென 
விண்ணில் இறைவன் விதித்திட்டான் ! 
               விரியும் அருளால் பணித்திட்டான் ! 
முத்திரை ஒன்றை பதித்திட்டான் !
                "முற்றும்" நபித்துவம் என்றிட்டான் ! 
நித்திரை யில்நபி வருவதற்கு 
                 நித்தமும் சலவாத் ஓதிடுவோம் ! 
வறியவர்க் கெல்லாம் துணையாகும் 
                 வள்ளல் நபியைப் போற்றிடுவோம் ! 
அறியாப் பிழைகள் செய்தோரை 
                  ஆதரித்  தேகை கொடுக்கின்ற 
நெறியா  ளர்நம்  ஸபாஅத்தாம் 
                 நெஞ்சத் திற்கு  சலாமத்தாம் !  
நெஞ்சால் தன்னை நேசிக்கும் 
                 நேயர் இதயத் தாகத்தை 
துஞ்சா மல்தீர்த்  திடுகின்ற 
                 தூய நபிகள் வாழியவே ! 
மெய்ஞா னத்தின் சூரியனாய் 
                 மேன்மை அடைந்தவர் சுடரொளியாய் 
எஞ்ஞான்றும் நபி விளங்குகிறார் 
                   இறைவா அவருக் கருள்புரிவாய் ! 
திக்கற்றோரகு  திசையானார் ! 
                   தீனோர்க் கெல்லாம் வழியானார் !
மக்கப் பதிக்கும் மதீனத்துச் 
                   சொர்க்கப் பதிக்கும் ஒளியானார் ! 
கிப்லா இரண்டின் இமாமானார் !
                   கிழக்கும் மேற்கும் ஆளுமிறை
கபூலாக் கும் "துஆ" அத்தனையும்
                   கண்ணிய நபிகள் பொருட்டன்றோ ? 
அலியார் மக்கள் இருவருக்கும் 
                  அருமைப் பாட்ட  னாரானார்  ! 
வலிமார் ஜின்கள் கூட்டத்தின் 
                   வானகத் தலைவர் நபியானார் ! 
காசிமின் தந்தை; அப்துல்லாஹ் 
                   கண்ணின் மணியாய்ப் பிறந்த நபி 
எங்கள் நபிகள் நாயகத்தின் 
                  எழில்பூத்  திருக்கும் திருமுகத்தில் 
திங்கள் கோடி திரண்டிருக்கும் ! 
                  திகட்டா மல்கண் பார்த்திருக்கும் !
அண்ணல் நபியின் திருவதனம் 
                  ஆசை  யுடனே காண்பதற்கு 
எண்ணம் கொண்ட சான்றோரே ! 
                 எழில்சல வாத்தினைச் சொல்வீரே ! 
கன்னல் நபியின் நிழலாகக் 
                  காலங் கழித்த தோழர்களின் 
எண்ணம் குளிர சலவாத்தை 
                   எழிலாய்ச் சொல்வீர் சான்றோரே ! 
சொல்வோம் சலவாத் நபிமீது ! 
                   சொர்க்கம் வருமே கைமீது !
வெல்வோம் வாழ்வில் வெற்றிகளும் 
                    விரைந்தே வந்திட விதிமாறும்! 


-P.M.கமால் B.A., கடையநல்லூர்  

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஆங்கிலம் கற்க!

அன்புடையீர்

http://aangilam.blogspot.in/
http://www.talkenglish.com/

http://www.learnenglish.de/

http://learnenglish.britishcouncil.org/en/


http://www.tolearnenglish.com/

ஆங்கிலம் கற்பதற்கு இவை போல் மிகுதியான் வலைத்தளங்கள் உள்ளன.

எனினும் தமிழாக்கம் தமிழ் மரபிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதில் இவை கருத்து செலுத்தவில்லை.

பி.பி.சி. முதலான செய்தித் தளங்கள் சில  செ ய்திகளில் இடம் பெறும் ஆங்கிலச சொற்களுக்கு  விளக்கம் தருகின்றன. நடை முறை ஆங்கில அறிவிற்கும் ஆங்கிலத்தில் செய்தி்யை தெரிவிப்பதற்கும் இவை பயனுள்ளதாக அமையும்.

இணைய வழி ஆங்கிலம்  கற்றுப் பயனடைந்தவர்களும்  குறிக்கத் தக்க இணைப்பைத் தரலாம்.

சனி, 24 மார்ச், 2012

நாம் வழிப்போக்கர்கள்

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மீகவாதிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர் இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். 'சுவாமி உங்களால் எப்படி இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?'

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு 'நீ உன் கையைக் காட்டு' என்றார். 
அந்த மனிதரும் தன் கையை நீட்டினார். 
அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் 'உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான் பாக்கி இருக்கிறது'

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது. அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை கட்டி வைத்து விட்டு சாவதற் குள் செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார். 

ஏகநாதர் சரியாக ஒரு வாரம் கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். 'நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.' 

ஏகநாதர் சொன்னார். 'நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும் இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு எதுவும் பெரிய விஷய மாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள் இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்' என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார். 

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை. 

வாழ்ந்த காலத்தில் எப்படி உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது. இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி அது கண்டிப்பாக அணுகுகிறது. 

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காண முடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன? 

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப் பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம். 

வாழ்க்கையில் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக வாழவேண்டும். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யவேண்டும். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து விடக்கூடாது. நாமே நிரந்தரமல்ல என்கிற போது நம் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும் வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? 

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்ய முயற்சிப்போம். இது வரை நாம் படித்த/ அனுபவ சாலிகள் சொன்ன பாடங்களைப் புரிந்துகொண்டு சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை சுலபமாகும், 

நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன அமைதியிழந்து விடக்கூடாது. ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்! இது தான் உண்மை.. 

புதன், 21 மார்ச், 2012

ஆண் நட்பை அறவே வெறுப்பீர் தோழிகளே !

பெண்களை இவ்வாறு அறைகூவல் விட்டு அழைப்பவர் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா. அம்மையார் கட்டுரையில் சொன்னதைப் பார்ப்போமா வாசகத் தோழிகளே !

• ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத் தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில் இந்த நாளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.

• ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெற்றோர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா காது அறுந்துபோகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

• ஆனால், ஆண் இந்த விஷயத்தில் தந்திரமானவன், நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துக் கொண்டு பெண் தன்னைத் தவிர்த்து விடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி, அவளது நன்மதிப்பை சம்பாதித்தபின் மிகக் கீழ்த்தரமாக நடந்துக் கொள்பவன்.

• தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்யவே மாட்டான், ஆனால் தோதான வாய்ப்பின் போது எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான் ! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான். எனவே புற்றில் பாம்பு இருக்கிறதா எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண், அதில் கையை விட்டு பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது, அது தேவையற்ற ரிஸ்க்

• ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவையில்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன ? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கி பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும் அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய், அபத்தத்திலும் அபத்தமான கருத்து.

• ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனாலெல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றி விட முடியாது !

அய்யய்யோ....போதும் பாட்டி போதும், முடியல, இது ஏதோ நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரையன்று, இன்று சுடச்சுட தினமணியில் வந்தக் கட்டுரை From FB MR. 
Raja Rajendran 

புதன், 14 மார்ச், 2012

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

ஞாயிறு, 11 மார்ச், 2012

பூட்டு உருவான விதம்....

ஆயிரக்கணக்கான வருடங்களாக பூட்டு உபயோகத்தில் இருக்கின்றது. ஆனால், இப்பொழுது நாம் பயன்படுத்தும் பூட்டை 150 வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடித்தனர். 1817ஆம் ஆண்டு யாராலும் திறக்க முடியாத பூட்டை வடிவமைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட ஜெரிமயா சப் என்பவர் அது மாதிரி ஒரு பூட்டை உருவாக்கினார். 

பூட்டை உடைத்துத் திருடி சிறையில் இருக்கின்ற ஒரு திருடனைக் கொண்டு அந்தப் பூட்டை உடைத்துத் திறந்து விட்டால் அவனுக்கு விடுதலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், பத்து நாட்களுக்கு மேல் முயற்சி செய்தும் அவனால் பூட்டை உடைக்க முடியவில்லை. அவனால் மட்டுமல்ல, இதுவரைக்கும் யாராலும் அந்தப் பூட்டை உடைத்துத் திறக்க முடியவில்லை. இருந்தாலும் இது போன்ற பூட்டுக்களை யாரும் பயன்படுத்தவில்லை. காரணம் ஒருவேளை திறப்பு தொலைந்து விட்டால் எப்படித் திறப்பது என்ற பயம் தான்.

நாம் தற்போது பயன்படுத்தும் பூட்டைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த லினஸ் யேல். 1861ஆம் ஆண்டிலிருந்து இவர் கண்டுபிடித்த பூட்டு மாதிரியைத் தான் இதுவரைக்கும் நாம் உபயோகப்படுத்தி வருகின்றோம்.

அமெரிக்க இளைஞனும், சிவப்பு இந்திய இளைஞனும்

ஒரு அமெரிக்க இளைஞனும், ஒரு சிவப்பு இந்திய இளைஞனும்
ஒரு பாலை வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.
பொழுது சாய்ந்திடவே ஓரிடத்தில் தங்கள் கூடாரத்தினை
அமைத்து அதனுள் இருவரும் படுத்தனர்.

இரவு சுமார் மணி மூன்று இருக்கும். சில்லென்று காற்று வீசவே
சிவப்பிந்தியஇளைஞன் விழித்துக் கொண்டான். நண்பனை எழுப்பிக்
கேட்டான், “மேலே பார். என்னதெரிகிறது?” என்று.

வெள்ளை இளைஞன் சொன்னான், “கோடிக் கணக்கான நட்சத்திரங்கள்
இருக்கின்றன” என்று.

சிவப்பிந்தியன் கேட்டான், “அப்புறம்?”

“வான சாஸ்திரப்படி சொன்னால் அந்த நட்சத்திரங்களைச் சுற்றி
பலகோடி கிரகங்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.”

“அப்புறம்?”

“ஜோதிட சாஸ்திரப் படி சொன்னால் சனி கிரகம் சிம்ம லக்னத்திற்கு
நகர்ந்துள்ளது.”

“அப்புறம்?”

“வானிலை சாஸ்திரப் படி சொன்னால் நாளை மேக மூட்டமிருக்கது.”

“நண்பா நமது கூடாரத்தை யாரோ திருடி கொண்டு போய்விட்டார்கள்
என்பது தெரியவில்லை உனக்கு..!?”?????????????நாம கூட பல நேரங்களில் இப்படி தான்! தலைக்கு மேல் போன விஷயத்தை விட்டு போட்டு வேற ஏதாவது உருப்படாத கவலைகளை மனதில் போட்டு குழப்பி கொள்கிறோம் ..............

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.


கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்


மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். 

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். 

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்)  அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்


தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம்மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். 

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில்  எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். 

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்


  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
மேற்கோள்கள்

புதன், 7 மார்ச், 2012

புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே திருத்திக்கொள்ளுங்கள்....

இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.

குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.

வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.

நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.

கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.

அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.

இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.

ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.

தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.

கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.

கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.

இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!