புதன், 11 ஜூலை, 2012

பழங்கால பழமொழிகள்

பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!

அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
 
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
 
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

வேலிக்கு ஓணான் சாட்சி.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

வியாழன், 5 ஜூலை, 2012

ஏன் மைதீட்டவில்லை

கண்ணில் ஏன்
மைதீட்டவில்லை
என்கிறாயா தோழி
சொல்கிறேன் ;

கண்ணுக்குள் என்
காதலர்
அவர் முகத்தில்
கரிபூசலாமா.......

என் சூரியன் மீது
இருட்டை தடவுவதோ ?

வீட்டிற்குள்ளே அவர் ;
வாசலில் எதற்கு
வரவேற்புக் கோலம் ?

அவனயே தீட்டி
அழகுபெற்ற கண்களுக்கு
மையலங்காரம் வேண்டுமா ?

கண்ணைவிட மென்மையானவர்
என் காதலர்
கைபட்டால் வலிக்காதா ?

அவரை வைத்த இடத்தில்
வேறொன்றை வைப்பது
என் கற்புக்கு இழுக்கல்லவா ?

- அபுதுல் ரகுமான்

ஞாயிறு, 1 ஜூலை, 2012

வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்

இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்!


இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.




அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.


நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.


நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு
வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.
நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

வீட்டில் பூச்சித்தொல்லையா

வீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.

1. எறும்புத் தொல்லையை நீக்க...

வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா? ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.

2. பல்லி வராமல் தடுக்க...

வீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.

3. கொசுக்களை அழிக்க...

கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,

- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.

- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.

4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...

கற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.