திங்கள், 23 டிசம்பர், 2013

என்ன செய்வாய்?

வேலிக்கு வெளியே 
தலையை நீட்டிய என் 
கிளையை வெட்டிய தோட்டக்காரனே 
வேலிக்கு அடியில் நழுவும் 
என் வேர்களை என்ன செய்வாய்? 

-பால்வீதியில் கவிக்கோ

பித்தன்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்

குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து

புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்

அவன் மேலும் சொன்னான்…

குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?

உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன

காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்?

இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை

இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை

ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.

நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்

நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,

உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.

எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை.

- கவிக்கோ அப்துல் ரகுமான்

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

நாகூர் ஹனிபா - ஒரு சரித்திரம்

நன்றி : திண்ணை
- அப்துல் கையூம்


‘வானளாவிய புகழைக் கொண்ட இந்த வாழும் சரித்திரத்தைக் குறித்து நாம் இதுவரை எதுவும் எழுதாமல் இருக்கிறோமே’ என்று சீத்தலைச் சாத்தனார் பாணியில் பால்பாயிண்ட் பேனாவினால் லேசாக உச்சந்தலையில் குத்திக் கொண்டேன்.

வெள்ளி நரை, வெண்கலக் குரல், வேகமான நடை, விவேகமான பேச்சு, வீறுகொண்ட
மிடுக்கு இவற்றின் மொத்த உருவம்தான் இசைமுரசு E.M.ஹனீபா. “கம்பீரத்திற்கு
அர்த்தம் யாது?” என யாராவது கேட்டால், பேசாமல் இவரது போட்டோவைக் காட்டி
‘அதுதான் இது’, ‘இதுதான் அது’ என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம்.

நாகூரில் ஹனீபா என்ற பெயரில் இரண்டு பாடகர்கள் இருந்ததால் மற்றவருக்கு
‘பித்தளை ஹனிபா’வென்று பெயர் வைத்து விட்டார்கள் இந்த வேடிக்கை
மனிதர்கள். ஒருத்தர் “ஈயம்” என்றால் மற்றவர் “பித்தளை”தானே?

அத்தாவுக்கும் (அப்படித்தான் அவரை நான் அழைப்பேன்) எனக்கும் உள்ள
நெருக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அவரும், என் தந்தையும், குடும்ப
நண்பர்கள். 1966-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவரது இல்லத் திறப்பு விழாவுக்கு வந்தபோது, ஒன்பது வயது சிறுவனாக இருந்த நான், நாகை அந்திக்கடையில் விற்ற "கருப்பு-சிவப்பு" நிற
பெர்லூன் பனியனை அணிந்துக் கொண்டு பந்தாவாக நின்றேன். வீட்டின் மையத்தில்
போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அண்ணாவை உட்கார வைத்து எல்லோரும் புகைப்படம்
எடுத்துக் கொண்டார்கள்.

மொட்டை மாடியில் தலைவாழை இலைபோட்டு தடபுடலாக விருந்து ஏற்பாடாகி
இருந்தது. கட்சிக்கொடி நிறத்தில் பனியன் அணிந்து அவர் கவனத்தை ஈர்த்த
என்னைக் கண்டு "யார் இந்தச் சிறுவன்?" என்று அண்ணா வினவ "இச்சிறுவனின்
குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தன் தந்தையின் பேச்சையும் மீறி உங்களைப்
பார்ப்பதற்காக இவன் இந்த பனியனை போட்டுகொண்டு ஓடோடி வந்திருக்கிறான்"
என்று அத்தா என்னை அறிமுகம் செய்ய, அண்ணா என்னை அன்புடன் அரவணைத்து தன்
பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பிலிருந்தே, அவர் மகன் நவுஷாத் படித்த அதே சென்னை பள்ளியில்
என்னையும் சேர்க்கச் சொல்லி, என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனது நலனில்
அக்கறை செலுத்தியவர்.  அந்த சரித்திர நாயகனுடன் ஒன்றாகச் சேர்ந்து காரில் சென்னை
செல்கையில், சிற்றுண்டி அருந்த உணவகத்துக்குள் அடியெடுத்து வைக்க, அவரை
அடையாளம் கண்டுகொண்டு "அதோ பார் நாகூர் ஹனீபா" என்று பொதுமக்கள் அவரை
வியப்போடு பார்ப்பார்கள். உடன் செல்லும் எனக்கு பெருமிதம் தாங்காது.
ஊரினால் சிலருக்குப் பெருமை. சிலரால் ஊருக்குப் பெருமை. இதில் இசைமுரசு
இரண்டாவது ரகம். ஒருமுறை இந்தியாவிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவர் ரஷ்ய
பயணம் சென்றபோது, “நீங்கள் ராஜ்கபூர் நாட்டிலிருந்தா வந்திருக்கிறீர்கள்?” என்று அங்குள்ளவர்கள் ஆச்சரியம் மேலிடக்கேட்டார்களாம். தாஜ்மகாலும், ராஜ்கபூரும்தான் அவர்களுக்குஇந்தியாவாகத் தெரிந்தது.

நான் பஹ்ரைன் நாட்டுக்கு வந்த புதிதில் மலபாரி நண்பரொருவர் “சாருக்கு ஊரு
எவிடே” என்று சோதித்தார். நான் “நாகூர்” என்றதும், “நாகூர் ஹனீபா
அறியாமோ?” “நிங்ஙள் அவரை
கண்டுட்டுண்டோ” என்று என்மீது அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளைத்
தொடுத்தார். நாகூர் ஹனிபாவை வைத்துதான் அந்த பிரகஸ்பதி நாகூர்பதியையே
அறிந்து வைத்திருந்தார்.

வைகைப்புயல் வடிவேலுவை துபாய் நிகழ்ச்சிக்கு காமெடி பண்ண அழைத்தார்கள்.
அவரோ “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற அனைத்து மதத்தினருக்கும்
பொருந்துகின்ற அற்புதமான பாட்டை தன் கட்டைக்குரலில் பாடி, பக்திக்கடலில் அனைவரையும் மூழ்கடித்தார். ஆராய்ந்ததில் அவரும் ஹனிபாவின் ஆத்மார்த்த ரசிகராம்.

‘அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று ஒரு வரி அப்பாடலில்
வரும். “பிறகு எப்படி அது எல்லா மதத்தினருக்கும் பொருந்துகின்ற பாடல்?”
என்ற கேள்வி எழலாம்.

“அல்லாஹ்” என்பதற்கு முஸ்லீம் கடவுள் என்று பொருள் கொள்ளலாகாது. அது GOD
என்பதற்கான அரபுச் சொல். அவ்வளவே.

நாகூர் ஹனிபாவை ‘ஆஹா! ஓஹோ!’வென புகழ்பவர்களைப் போலவே, அவரை நக்கல்,
நையாண்டி செய்பவர்கள் உள்ளூரிலேயே உண்டு. பழுத்த கனிதானே கல்லடி படும்?

ஹனீபா முறையான சங்கீதம் படிக்காமலேயே நிறைவான புகழை அடைந்தார் என்பது
கலப்படமில்லாத உண்மை. வித்வான் எஸ்.எம்.ஏ.காதர், பாகவதர் இசைமணி யூசுப்
போன்ற

உள்ளுர்க் கலைஞர்களுக்கு இணையாக  ஆழமான சங்கீத ஞானம் இவருக்கு இல்லை என்ற
விவாதத்தை மறுத்துப் பேச இயலாமல் திணறிப் போயிருக்கிறேன். இசைத்திறன்
இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.

“மணி ஒலித்தால் நாதம் கிளம்பும். ஆனால் முரசு ஒலித்தால் சப்தம்தான்
வரும். எனவேதான் ‘இசைமணி’ என்று பெயர் வைக்காமல் ‘இசைமுரசு’ என்று
பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று உள்ளுர்க் கவிஞர் ஒருவர்
கிண்டல் செய்வதைக் காதுபட கேட்டிருக்கிறேன்.

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்
என்ற ஆர்வ மிகுதியினால் இவர் மெல்லினத்தைக்கூட வல்லினமாக்கி உச்சரிக்கும்
கொடுமையை எங்கே போய்ச் சொல்வது என்பார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரைப் போன்று “ஹ” “ஷ” போன்ற
அட்சரங்களை தெள்ளத் தெளிவாக உச்சரிக்கும் பாடகர்கள் யாருமே கிடையாது.
“முஹம்மது” “மஹ்மூது” என்ற பெருமானாரின் திருப்பெயரை இவரைப் போன்று அட்சர
சுத்தமாக வேறெந்த பாடகரும் அட்டகாசமாக உச்சரித்ததில்லை.  ஹனிபாவின் சில
பழைய பாடல்களை தேடிப் பிடித்து அதிலுள்ள குறைகளை அலசி ஆராய்ந்து அவரை
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுபவர்களும் உண்டு.

அந்த நாளிலே மக்கா நகரம் இருந்தது’ எப்படியென்றும், ‘ஐயாயிரம் ஆண்டுகள்
முன்னே நடந்த அரபு நாட்டு தியாக’த்தையும், ‘பாத்திமா வாழ்ந்த
முறை’யையும், ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’யையும், ‘கண்களை குளமாக்கும் கர்பலா’ நிகழ்ச்சியையும் பாமரர்கள் ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டதைவிட இவர் வாயிலாக இஸ்லாமிய சரித்திர நிகழ்வுகளை அறிந்து கொண்டவர்கள் ஆயிரமாயிரம்.

“மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா?
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?”

என்று இவரது பாடல், “தழுவாது எனக்கு மரணபயமே” என்று பாடிய ஆசைக்கவிஞன்
கண்ணதாசன், “காலா என் கண்முன் வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்” என்று
பாடிய மீசைக் கவிஞன் போன்ற கேரக்டர் மனிதர்களையும், ‘மரணபயம்’ ஆட்கொண்டு
தெளிவு பிறக்க வைத்து விடும்.

“கன்னியரே! அன்னையரே! கொஞ்சம் நில்லுங்கள்” என்று அன்புடன் இவர்
அழைக்கையில் கடுக்கண்களை காதில் போட்டுக் கொள்ளும் கன்னியர்கள் இந்த
கனிவான அறிவுரையை காதில் போட்டுக் கொள்ள ஆயத்தமாகி விடுவார்கள்.

“காணக் கண் கோடி வேண்டும் கஃபாவை
ஹஜ்ஜூ காட்சிக்கிணை யாகஉலகில் எதுவுமே இல்லை”

என்று இவர் இசைக்கையில் மக்கமா நகரத்து இறையில்லக் காட்சிகள் கண்முன்
தத்ரூபமாக காட்சிதரும்.

“நீராடும் கண்களோடு நெஞ்சம் நிறை பாசத்தோடு
மாறாத ஈமானோடு யாரசூலுல்லாஹ்”

என்று அவர் உருகும்போது கல்லும் கனியாகும்; உள்ளம் பனியாய் இளகிவிடும்.

“ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?
கானத்தினால் அதை இன்னும் கொஞ்சம் சொல்லவா?”

என்று அவர் ஆரம்பம் செய்கையில்  “ஓ! தாரளாமாகச் சொல்லுங்கள். நாங்களும்
கேட்கிறோம்” என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் குரலை நாமே
உணர முடியும்.

தனக்கு பாட்டெழுதி கொடுத்த புலவர்களுக்கு உரிய மரியாதை அவர்
கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் என்றால் பாடலுக்கு
இசையமைத்துத் தந்த இன்பராஜ் போன்ற இசையமைப்பாளர்களை அவர் வெளிச்சத்துக்கு
கொண்டுவரவே இல்லை என்ற குற்றச்சாட்டு வேறொரு புறம் நிலவுவதும் உண்மை.]

ஆனால் இந்த 'பிஸ்கோத்து' குறைகள் யாவும் இந்த மனிதனுக்குள்ளே
பொதிந்திருக்கும் மனிதநேயப் பண்பு, கொள்கைப் பிடிப்பு, அசாத்தியத்
துணிச்சல், இவைகளுக்கும் முன்பு பவுடராகி தூள்தூளாகி விடுகிறது.

இசையால் மயங்க வைக்கும் இந்த லாகிரி வஸ்தாது எத்தனையோ இஸ்லாமிய
பாடகர்களுக்கு அழகிய-முன்-மாதிரி. கவ்வாலி பாடலில் ஒரே சங்கதியை பல
‘மாடுலேஷனில்’ ஏற்ற இறக்கத்தில் பாடி "ரிபீட்டு" செய்வதைப் போல, இஸ்லாமிய
பாடல்கள் என்றாலே எட்டுக் கட்டையில்தான் பாடவேண்டும் என்ற எழுதப்படாத
இலக்கணத்தை ஏற்படுத்தி வைத்தவர் இவர்.

ஊசி உடைகிற உச்சஸ்தாயிலும் பூசிமொழுகுகிற பூத்த குரல்வளம் இவரது.இவரை விட ஒரு கட்டை கூடுதலாக பாடி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் "உலக முஸ்லீம்களே நில்லுங்கள்!" என்ற விவகாரமான பாட்டை வேறொருவர் பாட, நின்றுக் கொண்டிருந்த உலக முஸ்லீம்களையும் பயந்து ஓட வைத்தது கைக்கொட்டிச் சிரிக்க
வைத்த கதை. இவரைப்போலவே ஏழுகட்டை, எட்டுக்கட்டை என்று பாடுவதோடு மட்டும்
நிறுத்திக்கொண்டால் பரவாயில்லையே. சாய்வாக அணிந்த ‘Fur’ தொப்பி, உள்ளங்கையை இறுக்கிப் பிடித்து மூக்கு நுனிவரை இழுத்துப்பிடித்தவாறு சைகை செய்வது, காதோரத்தில் கையை குவித்து வைத்துக் கொள்வது இது போன்ற மேனரிஸங்களைக்கூட இவரது ‘டூப்ளிகேட்’கள் விட்டு வைக்காததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

எல்விஸ் பிரெஸ்லிக்கு அடுத்தப்படியான ‘Look Alike’ ‘எதிரொலி’ ஆசாமிகள்
வாய்க்கப் பெற்றது நாகூர் ஹனீபாவாகத்தான் இருக்க முடியும்.

மேடைக் கச்சேரியின்போது, இசைக்குழு ஆசாமிகளின் காதில் இவர் ஏதோ
‘கிசுகிசு’ப்பதை பலர் கவனித்திருக்கக்கூடும். அடுத்த பாடலுக்கான சுதி
எத்தனை கட்டை என்ற விவரத்தை
காதில் ஓதுகிறாரோ என்று பார்த்தால், “ஒழுங்கா வாசியேண்டா உதவாக்கரை”
என்பதைப்போன்ற அர்ச்சனைகளை அனாயசமாக ஆராதித்துக் கொண்டிருப்பார்.
(‘டோஸ்’களை மிகவும் நாசுக்காகவே இங்கு உளறியிருக்கிறேன்)

ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டு மேடையின் விளிம்பில் உட்கார்ந்திருந்த
நரிபோன்று பிறாண்டும் ஒரு தபேலாக்காரரை லேசாக தள்ளிவிட அவர்
தொபுக்கடீரென்று தலைக்குப்புற விழுந்தது ஊள்ளூர் ஜனங்கள் இரசித்த
‘சிச்சுவேஷன் காமெடி’.

“இவரின் இசைக் கச்சேரி
ஒரு யாகம் .. .. ..
மூன்று மணி நேரம் –
மேடையில் சுற்றியுள்ள
வாத்யக் காரர்கள் மட்டுமல்ல .. ..
இவர் சுருதியும்
கீழே இறங்காது”

என்று இவருக்கு புகழாரம் சூட்டுவார் கவிஞர் இசட் ஜபருல்லாஹ்.

"நாகூர் ஹனீபாவைப் போன்ற ஒரு பாடகர் ஐரோப்பாவிலோ , மொராக்கோ போன்ற
தேசத்திலோ இருந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருப்பார். அப்பேர்ப்பட்ட
குரல் வளம் அவருடையது” என்று பாரட்டுப் பத்திரம் வழங்குகிறார் எழுத்தாளர் சாரு
நிவேதிதா.

நாகூர் முஸ்லிம் சங்கத்தின் சார்பாக இந்த மாமனிதனுக்கு 'வாழ்நாள்
சாதனையாளர் விருது' வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்டர்
ஒட்டி, ஒலி பெருக்கியில் அறிவிப்புச் செய்து கூட்டியிருந்த கூட்டத்தை
கண்டபோது என் கண்கள் ரத்தக்கண்ணீரை வடித்தது, சிறப்பு பேச்சாளராக மேடை
ஏறிய கம்பம் பீர் முகம்மது "இதே விழாவை எனதூரில் கூட்டியிருந்தால்
அலைமோதும் கூட்டத்தை திரட்டியிருப்பேன்" என்று தன் கோபத்தை
வெளிப்படுத்தினார்.

நாகூர் அல்வா பிரசித்திப் பெற்றது. ஆனால் அரசியல் நாகூர் ஹனிபாவுக்கு
அக்காலத்திலிருந்தே 'அல்வா' கொடுத்து வந்தது.

1957- ஆம் ஆண்டு தி.மு.க. முதன்முறையாக சட்டசபை தேர்தலில்
களமிறங்கியபோது,  நாகை தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு
தோல்வியைத் தழுவினார்.

மீண்டும் 2001- ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பாளராக களம்
இறங்கியபோதும் அந்த ஊர்க்காரர்கள் அவருக்கு அல்வா கொடுத்தார்கள்.

பாட்டு பாடியே ஓட்டுக்களைச் சேகரித்தார் இந்த பைந்தமிழ்ப் பாடகர். பாவம்
A right person in a wrong place. கவ்வாலி பாடகர் அதா அலி ஆஜாத்
நின்றிருந்தாலாவது ஜெயித்திருப்பாரோ என்னவோ?

“ஹனீஃபா சாஹேப் பத்தி நம்பள்கி ஜனங்களுக்கு அவ்ளோ தூரம் மாலுமாத்
இல்லீங்கோ” என்று சொன்னார் அந்த ஊரைச் சேர்ந்த தோல் வியாபாரி என் இனிய
நண்பர் அன்வாருல்லா.

கழக இயக்கத்திற்கும் இந்த கருப்புக் குயிலுக்கும் உள்ள தொடர்பு இன்று
நேற்று எற்பட்ட ஒன்றா?

“வாடா கருப்பா” என்று இவரை வாஞ்சையுடன் அழைப்பார் திராவிட இயக்கத்து
முன்னோடிகளில் ஒருவரான ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி.

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை, இந்த பாசறை மறவனைக் கொண்டு பாடவைத்து
இயக்கத்தை வளர்த்தார் அந்த பட்டுக்கோட்டையார்.

தந்தை பெரியார் தான் செல்லுமிடம் யாவும் தமிழுணர்ச்சி பொங்கும்
பாடல்களைப் பாட இந்த தன்னிகரில்லா பாடகனைத்தான் தன்னோடு அழைத்துச்
செல்வார். “அனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை” என்பார். இவரது
குரல் பெருமைக்குரிய குரல் மட்டுமல்ல. “பெரு-மைக்”குரிய குரலும் கூட
என்பது அ.மா.சாமியின் கூற்று.

“தூங்கிக் கிடந்த உனைத் தூக்கி துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈ.வே.ரா”

என்று ஹனீபா தொண்டைக் கிழிய பாட, தந்தை பெரியாரின் சிந்தைக்கினிய
பேச்சுக்கு முந்திக்கொண்டு வருவார்கள் செந்தமிழ்ச் சீலர்கள்.

“ஓடி வந்த இந்திப்பெண்ணே கேள் – நீ
தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே!” என்று உரமேற்றி

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு அஞ்சாமல் ஓடிவா” என்று இவரது உணர்ச்சி
பொங்கும் பாடலைக் கேட்டுவிட்டு  இந்தி எழுத்துக்களை தாரு பூசி அழிக்க
வீறு கொண்டு எழுவார்கள் வீரமறவர்கள்.

“பாடல்களில் சுருதி, லயம், ராகம்தான் இருக்கும் என்பார்கள். இவர்
பாடல்களில் இவைகளை மீறி உணர்ச்சி இருக்கிறது. அது இப்போது தமிழர்களுக்கு
தேவையாக இருக்கிறது”

என்று அறிஞர் அண்ணா புகழ்ந்தார்.

1954- ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அறிஞர் அண்ணாவுடன்
சேர்ந்து ஊர் ஊராக துணிமூட்டைகளைச் சுமந்துச் சென்று உடுமலை நாராயணகவி
எழுதிய

“செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்”

என்று பாடி தெருத் தெருவாக கூவி விற்றார் இவர்.

கலைஞர் அரைக்கால் சட்டையணிந்து கழகச் சேவை புரிந்த காலம் முதற்கொண்டு
ஹனிபா மேடை ஏறி பாடி வருகிறார். நீதிக்கட்சியின் தலைவரான பன்னீர் செல்வம்
லண்டனுக்கு பயணிக்கையில் ஓமான் அருகே விமான விபத்துக்குள்ளாகி உயிர்
துறந்தார்.

1940-ஆம் ஆண்டு நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் “பறந்தாயோ எங்கள்
பன்னீர் செல்வமே!” என்று இவர் நெஞ்சுருக பாடியபோது, மாநாட்டு பந்தலில்
அமர்ந்திருந்த அத்தனை பேரும் விம்மி விம்மி அழுதக் காட்சி ஒரு சரித்திர
நிகழ்வு.

“அனிபாவின் கம்பீரத் தொண்டையைப் போலவே அவரது கழகத் தொண்டும் சற்றும்
மாறவில்லை” என்று கலைஞர் இவருக்கு ‘அக்மார்க்’ முத்திரை வழங்கினார்.

இப்போதுகூட, டாக்டர் கலைஞர் தோளில் ஒரு கையையும், பேராசிரியர் அன்பழகன்
தோளில் மற்றொரு கையையும், ஜாலியாக போட்டுக் கொண்டு பேசக்கூடிய லைசன்சு
ஹனீபாவுக்கு மட்டுமே உண்டு.

அரசியல் துறையில் ‘அட்ஜஸ்ட்’ பண்ணத் தெரிந்து ‘ஆமாம் சாமி’ போட கற்று
வைத்திருந்தால் எப்போதோ இவர் அமைச்சர் ஆகியிருப்பார். ‘தூக்குத்தூக்கி’
கலை அறியாது
‘வணங்காமுடி’யாக இருந்தமையால் ‘சக்கரவர்த்தி திருமகனாக’ இருக்க வேண்டிய
இந்த ‘உத்தம புத்திரன்’ ஊர் ஊராக பாட்டுப் பாடிக்கொண்டு ‘நாடோடி
மன்னனாகவே’ காலத்தைத் தள்ளிவிட்டார்.

தன் மேன்மையான எழுத்துக்களால் தமிழ்மொழிக்கு மீசை வரைத்த பாரதியைப் போல,
கம்பீரமான தன் குரல்வளத்தால் தமிழுக்கு தலைப்பாகை கட்டி அழகு பார்த்தவர்
இந்த வெள்ளிநரை வேந்தன்.

ஒருமுறை விழுப்புரத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள்
கலந்துக் கொண்ட முஸ்லீம்லீக் மாநாட்டில், நாகூர் ஹனிபா பாடினார். கூட்டம்
முடிந்து ‘கெஸ்ட் ஹவுஸில்’ ஹனிபா அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில்
நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தபோது
காயிதேமில்லத் நின்றுக் கொண்டிருந்தார். “ஹனிபா சாஹேப் எனக்குத் தூக்கமே
வரவில்லை. எனக்காக அந்த பாட்டை பாடுவீங்களா?” என்று நடுநிசியில்
சின்னக்குழந்தைபோல் அடம் பிடித்தபோது ஹனிபாவுக்கு உள்ளூர ஒரே ஆனந்தம்.

“மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே!
மாநிலத்தைத் தாங்கிடவோ எங்கள் பெருமானே!”

என்று உள்ளமுருக பாடினார். “இன்னும் ஒருமுறை பாடுங்களேன் ஹனீபா சாஹேப்”
என்று காயிதேமில்லத் மறுபடியும் வேண்டுகோள் விடுக்கிறார்.

“பல்லுடைந்த நேரத்திலும் எங்கள் பெருமானே
பின்வாங்கி ஓடவில்லை எங்கள் பெருமானே
கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே
கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே”

என்ற வரிகளை ஹனிபா பாடியபோது காயிதேமில்லத் அவர்களின் கண்களிலிருந்து
கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிந்தோடுகிறது. தேம்பித் தேம்பி
அழுகிறார். தாயிப் நகரத்து பாதகர்கள் சாந்தநபி மீது புரிந்த கொடுஞ்செயல்
காயிதேமில்லத்தின் கண்முன் நிழலாடி அவரை கலங்கடித்திருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் சகிப்புத்தன்மைக்கும், கருணையுள்ளத்திற்கும் எடுத்துக்

காட்டாய்த் திகழ்கிறது தாயிப் நகரத்தில் நடந்த இந்நிகழ்ச்சி !

நாயகத் திருமேனியின் ஏகத்துவ போதனைகளை ஏற்க மறுத்த தாயிப் நகர மக்கள்
அவர்கள் மீது கல்மாரி பொழிந்தார்கள். அண்ணலாரின் புண்பட்ட மேனியிலிருந்து
செந்நீர் குருதி மண்மீது வழிந்தோடுகிறது.

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்" 

என்று இந்தக் காட்சியை மு.மேத்தா கவிநயத்தோடு வருணிப்பார்.

'கவிக்கோ' அப்துர் ரகுமானின் உவமைப் படிமம் வித்தியாசமாக இருக்கும்

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்" என்பார்

இதே காட்சியினை தனக்கே உரிய பாணியில் வடிப்பார் இறையருட் கவிமணி கா.
அப்துல் கபூர்.

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே" என்று.

அருமை நபிகளுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை ஹனிபாவுக்கு ஆழ்ந்த பாதிப்பை
ஏற்படுத்தியதாலோ என்னவோ “எத்தனை தொல்லைகள், என்னென்ன துன்பங்கள்” என்று
தொடங்கும் இன்னொரு பாடலிலும்

“கல்லடி ஏற்று
கடுமொழி கேட்டு
உள்ளம் துடித்து
உதிரத்தை வடித்து”

என்ற வார்த்தைகள் வலம் வரும். “அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே!”
என்ற பாட்டிலும்

“தாயிப் நகரில் கல்லடிகள்
தந்த தழும்பிலே – இமைகள்
தழுவதற்கும் அழுவதற்கும்
கண்ணீர் பொங்குதே..”

என அந்த சோகத்தை நினைவூட்டுவார். எல்லாவற்றிற்கும் மேலாக

“தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள்
தாஹா இரசூல் நபி நடக்கையிலே
பாவிகள் செய்த கொடுமையினை - என்ணிப்
பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!”

என்ற பாடலில் அந்த வேதனையான நிகழ்ச்சியை முழுவதுமாகவே படம்பிடித்துக்
காட்டியிருப்பார். இவரைப்போன்று ஒரு தான்ஸன் தமிழ்நாட்டில் இதுவரை பிறந்ததுமில்லை; இனி பிறக்கப் போவதுமில்லை. ஒவ்வொரு முறை இவர் சுகவீனம் அடையும் போதெல்லாம்
“நாகூர் ஹனீபா இறந்து விட்டார்” என்ற புரளியை கிளப்பி நம்மை கலங்கடிக்க
வைக்கும் அந்த சோதனையைத்தான் நம்மால் தாங்க முடிவதில்லை.

90 வயதை எட்டியிருக்கும் இந்த மார்க்கண்டேய குரலுக்குச் சொந்தமான இந்த
மாமனிதன் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் என்பதுதான் அனைவரும்
செய்யும் பிரார்த்தனை.

அருஞ்சொற்பொருள்:

மெளத்து : மரணம்
யா ரசூலுல்லாஹ்! : ஓ இறைவனின் தூதரே!
தாயிப் : சவுதி அரேபியாவிலிருக்கும் ஒரு நகரம்
ஈமான் : இறையச்சம்

புதன், 18 டிசம்பர், 2013

பல பொருள் ஒரு சொல்

மனிதர்களில் ஒரே பெயரில் பலரைப் பார்த்திருப்போம். அதேபோல ஒரே பெயரில் இரு வேறு பொருட்களோ, உயிரினங்களோகூட இருக்கின்றன. அதாவது ஒரே உச்சரிப்பில் வரும் வார்த்தைகள், இரு வேறு பொருளைத் தரலாம். ஆங்கிலத்தில் இதை ஹோமோபோன் என்று சொல்வார்கள். தமிழிலும் பல பொருள் தரும் சொற்கள் இருக்கின்றன. இதை பல பொருள் ஒரு மொழி என்று சொல்வார்கள். உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போமா?
ஆங்கிலத்தில் கிவி (kiwi) என்னும் சொல் ஒரு பழத்தையும் பறவையையும் குறிக்கும். வார்த்தையோடு அந்தப் பழத்தையும் பறவையையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
நியூசிலாந்தின் தேசியப் பறவை கிவி. இந்தப் பறவைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இறக்கைகளே இல்லாத பறவை இது. வீடுகளில் வளர்க்கப்படுகிற கோழியின் அளவுதான் கிவியும் இருக்கும். ஆனால் மற்ற பறவைகளின் முட்டைகளோடு ஒப்பிடும்போது, கிவியின் உடல் அளவுக்கு அதன் முட்டை மிகப் பெரியது. கிவி, ஆந்தையைப் போல பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்கும். இவை காடுகளில் வாழும் பறவையினம் என்பதால், காடுகள் அழிப்பு இவற்றைப் பெருமளவில் பாதித்து இருக்கிறது.
இத்தாலி, நியூசிலாந்து, சிலி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயிரிடப்படும் பழ வகை கிவி. கோழிமுட்டை அளவில் இருக்கும் இது, பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலவே இருக்கும். மேல்புறம் இளம்பச்சையும் பழுப்பும் கலந்த நிறமும் உள்ளே அடர்த்தியான பச்சை நிறமோ, பொன்னிறமோ இருக்கும். நடுவே கடுகு போல சின்னச் சின்ன விதைகள் இருக்கும். இனிப்புச் சுவையுடனும் தனித்த மணத்துடனும் இருக்கும்.
தமிழில் வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்லியிருக்கிறார். அதாவது ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறாராம் நாராயணன்.
தமிழ் இலக்கண நூலான பிங்கல நிகண்டு, ‘வாரணஞ்சூழ் புவி’ என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது கடலால் சூழப்பட்டிருக்கிறது இந்தப் பூமி என்று பொருள்.
அதே பிங்கல நிகண்டுவில் இன்னொரு இடத்தில் ‘வாரணத்து வாயடைப்ப’ என்று வந்திருக்கிறது. இந்த இடத்தில் வாரணம் என்பது சங்கு என்ற பொருளைத் தருகிறது.
உதாரணங்கள் போதும்தானே. புதிதாக ஒரு வார்த்தையைப் பயன்படுத்தும்போதோ, தெரிந்துகொள்ளும்போதோ அதற்கு வேறு அர்த்தமும் இருக்கிறதா என்று தெரிந்து பயன்படுத்துவோம்.
- Courtesy - Tamil Hindu daily 

நியூசிலாந்து மக்களையும் கிவி என்றுதான் அடைமொழியில் அழைப்பதுண்டு ..கிவி பழம் சீன தேசத்திலிருந்து தான் மற்றைய நாடுகளுக்கு பரவியது சீன தேசத்தின் தேசிய பழமாகவும் கிவியை பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள் கிவி பழம் வைட்டமின் சி அதிகம் கொண்டது

இது போல் விகடகவி என்ற வார்த்தை திருப்பி வாசித்தாலும் அதே பொருள் தரும் !!!

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்







பங்குச்சந்தை என்றாலே நிறைய பேர் அது ஆபத்தான விஷயம் என்று
ஒதுங்கி விடுகிறார்கள். எனக்கும் சில வருடங்களாகவே பங்குச்சந்தையில்
பணத்தைப்போட்டு நல்ல லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
லாபம் வரவில்லை என்றாலும் அதைப்பற்றி கற்றுக்கொள்ள வேண்டும்
என்ற ஆசை அதிகமிருந்தது.

எனவே Pan Card ( நிரந்தர வருமானக் கணக்கட்டை ) விண்ணப்பித்து வாங்கியும்
Appllo Sindhuri என்ற தரகு நிறுவனத்தில் டீமேட் கணக்கு ( Demat Account - பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள கணக்கு ) ஆரம்பித்து வெகு நாட்களாய் பணம் போடாமல் இருந்தேன். இந்த வருட தொடக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை அதல பாதாளத்தில் குறைந்தபோது நாம் இப்போதாவது முதலீடு செய்வோம் என்று முடிவெடுத்தேன். சிலரோ சத்யம் நிறுவனம் பட்டியலில் இருந்தே தூக்கப்படும் என்று பயமுறுத்தினர்.

இருந்தாலும் எதோ ஒரு சிறு நம்பிக்கையில் ஜனவரி 23 அன்று வாங்கி விட்டேன்.
முதலீடு செய்யும் போது ஒரே பங்கிலேயே செய்யக்கூடாது.வேறு
சில பங்குகளிலும் முதலீடு செய்தால் நட்டத்தை குறைக்கலாம் என்று படித்தது நினைவுக்கு வர என்னிடம் இருந்த 2000 ரூபாயை இவ்வாறு பிரித்து முதலீடு செய்தேன்.

Sathyam --->50 x 28.50 = 1425
RNRL ------>8 x 52.50 = 420
GVK -------->7 x 20.80 = 125

முதலீடு செய்தபின் அவ்வப்போது சந்தை நிலவரத்தைக் கவனித்து வந்தேன். ஏறியும் இறங்கியும் வந்த சந்தை பயமுறுத்தினாலும் கவலைப்படவில்லை. சரியாக ஐந்து மாதம் கழித்து ஓரளவுக்கு எனக்கு லாபம் வந்தபோது June 23 ஆம் தேதி விற்று விட்டேன். ஏனெனில் நிறைய லாபம் கிடைக்கும் என்றும் தள்ளிப்போடக் கூடாது. இப்போது எனக்கு கிடைத்த தொகை 5000 ரூபாய்.சத்யம் 80 ரூபாய்க்கு போனதால் எனக்கு இந்த லாபம் கிடைத்தது.அதற்கடுத்து இப்போது சந்தை இறங்கிவிட்டது.

இதிலிருந்து நான் புரிந்து கொண்டவை என்னவென்றால்,

1. விலை குறையும் போது வாங்க வேண்டும்.
அதிகமாகும் போது விற்று விட வேண்டும்.
2. அதிக லாபத்தை எதிர்பார்க்கக்கூடாது.
3. அவ்வப்போது சந்தை நிலவரத்தை கவனிக்க வேண்டும்.
4. பங்குச்சந்தை பற்றிய அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும்.
5. தினசரி வர்த்தகத்தில் உடனே இறங்கக்கூடாது.


அதேபோல SuperTex Industries என்ற பங்கை நீங்கள் வெறும் 1000 ரூபாய்க்கு போன அக்டோபர் மாதத்தில் வாங்கியிருந்தால் இப்போது நீங்கள் ஒரு லட்சத்திற்கு அதிபதி ஆயிருக்கலாம்.இதைப்பற்றி பார்க்க . அப்போது இதன் ஒரு பங்கின் விலை 43 காசுகள் . இப்போதோ 53 ரூபாய். எனவே இது 100 மடங்காக உயர்ந்துவிட்டது. இது போல சரியான உத்திகளோடு செய்யல்பட்டால் வெற்றி காண முடியும்.

தயங்கும் பெண்கள் கூட இப்போது முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தையில் ஈடுபடவும் அதைப்பற்றிய சந்தேகங்களை போக்கவும் தமிழில் நல்ல இணையதளங்களும் வலைப்பூக்களும் உள்ளன. நீங்களும் நல்ல முதலீட்டாளராக வாழ்த்துகள். பங்குச்சந்தை பற்றிய இணையத்தளங்களின் தொகுப்பு கீழே .

தமிழ் இணையதளங்கள் :

http://pangusanthai.com
http://panguvaniham.wordpress.com/
http://sharedirect.blogspot.com/
http://top10shares.wordpress.com/
http://stock.tamilsasi.com/
http://tamilnithi.blogspot.com/
http://stockintamil.wordpress.com
http://thoughtsintamil.blogspot.com/
http://stocksintamil.com
http://investorarea.blogspot.com/
http://mayashare.blogspot.com/
http://krvijayganesh.wordpress.com/
http://sharehunter.wordpress.com/
http://kmdfaizal.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://sandhainilavaram.blogspot.com/
http://moneybharati.blogspot.com/
http://varthagaulagam.blogspot.com/
http://www.dinamalar.com/business/
http://dailyindiansharemarket.blogspot.com/
http://stocksiva.blogspot.com/
http://mangaloresiva.blogspot.com/
http://porulsey.blogspot.com/
http://panguvanigam.blogspot.com/
http://www.nanayam2007.blogspot.com/
http://panguvanigamtips.blogspot.com/


ஆங்கில இணையதளங்கள் :

http://www.bseindia.com/
http://www.nseindia.com/
http://money.rediff.com/
http://profit.ndtv.com/Home.aspx
http://www.utvi.com/
http://www.moneycontrol.com
http://in.finance.yahoo.com/
http://www.sudarshanonline.com/
http://www.appuonline.com/
http://paisapower.blogspot.com/
http://www.amfiindia.com/
http://www.crnindia.com/
http://finance.tipz.in/
http://moneybazzar.blogspot.com/
http://www.mutualfundsindia.com/
http://www.niftyintra.com/
http://www.nseguide.com/
http://www.bazaartrend.com/
http://www.technicaltrends.com/
http://www.yourbse.com/
http://copperbulls.blogspot.com/

உங்களுக்கு தெரிந்த இணையதளங்களை பற்றி பின்னூட்டம் இடவும் நண்பர்களே!அவை இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும்.





பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2






1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.
பணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.

2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு
எண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.

3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்
ஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading
கணக்கிலேயே இருக்கும்.

4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்
போதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை
வாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.
இவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.
குறைந்த அளவு தான் இருக்கும்.

5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்
உங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா
என்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.

http://www.cdslindia.com/publication/dplist.jsp

6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்
வசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்
நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

State Bank of India Demat :http://demat.sbi.co.in/index.jsp
Icici Direct : http://www.icicidirect.com/

பங்குசந்தையின் சில நுட்பங்கள் :

1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO
( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,
ஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லதுஒரே பங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து
முதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங் களுக்கு
சோதனை வராது.

5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்
தான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா ? இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல
லாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.

எப்படி என்று பார்ப்போம் .

உதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா? வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்கு 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு
500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.

நீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.

6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்
நீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .
இவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.

Mutual Fund பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

தொடர்புடைய பதிவுகள் :

1. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள்
- 1
2. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்

உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே! நன்றி.


பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1



பங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்
எனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்
பங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்
கேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு
எழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் :

முதலில் செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது
புரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட
முடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்
பேசியோ கற்றுக்கொள்ளுங்கள்.

ஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான
நடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன் உள்ளது. இந்த
தளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
http://pangusanthai.com/


எனக்கு தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய"அள்ள அள்ளப்பணம் " என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடியசொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்றுபாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால்மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.

இந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :
http://thoughtsintamil.blogspot.com/2005/01/blog-post_04.html

இந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க :http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html
2. Pan card பெறுதல் :

PAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

அடுத்தது நீங்கள் PAN Card ( Permanent Account Number ) வருமான வரி எண்
அட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.

தேவையான சான்றுகள் :

1. ஒரு 2.5 width X 3.5 height inch புகைப்படம்
2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )
3. உங்கள் புகைப்படம் உள்ள சான்று ( Voter Identity or Driving license )



இதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.
https://tin.tin.nsdl.com/pan/index.html

இந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு "NSDL - PAN" என்ற பெயருக்கு Demand draft அல்லது
Cheque எடுத்து கொள்ளவும்.


3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )
கணக்கு தொடங்குதல் :

டீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்

நமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.

உங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.
இங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.

Trading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.
Demat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.

இதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது
உங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்
Power of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்
விற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.

தேவையான சான்றுகள் :

1. Pan card
2. Ration card
3. Bank Passbook


Thanks:


K.A.Mujeebur Rahman








பயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம்

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/
planetebook.com/
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/
gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/
free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/
globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA! 
cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.
bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.

www.scribd.com அருமையான புத்தகத்தளம் இங்கே இலவச அக்கவுண்ட் தொடங்கி இலவச புத்தகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.தேவையானவற்றை pdf ஃபைல்களாக டவுன்லோடு செய்யலாம்.

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் புத்தகங்கள் இங்கே இலவசமாக
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.