திங்கள், 21 அக்டோபர், 2013

பன்னூலாசிரியர் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்கள் மறைந்தார்...

“இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,”மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள்” முதலிய இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது
தம்பி அவர்கள் தம்முடைய எழுபத்து ஒன்பதாம் வயதில் கடந்த 17-10-2013-ஆம் நாள் மஃரிப் வேளையில் மதுரை மருத்துவமனை ஒன்றில் காலமானார்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)அவருடைய ஜனாஸா மறுநாள் ஜும்ஆவுக்குப் பிறகு அவர் பிறந்த ஊரான திண்டுக்கல்லில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் முன்னோர் கேரள மாநிலம் புதூரைச் சேர்ந்தவர்கள்.மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவர்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்;தமிழ் மண்ணோடும் மக்களோடும் ஒன்றாய்க் கலந்துவிட்டவர்கள் ஆவர்.திண்டுக்கல்லில் இருந்து குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தபோது இவரும் இளமையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்.தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை சென்னையிலேயே பயின்ற இவருக்கு புதுக்கல்லூரியில் பயின்றபோது சிராஜுல் மில்லத் சீனியர் மாணவராக அறிமுகம் ஆனார்.அவருடைய தொடர்பு,பின்னாளில் முஹம்மது தம்பி அவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட ஒரு தொடக்கமாக அமைந்தது.

கல்லூரிப் படிப்பிற்குப் பின்னர்,ஃபார்மசி படித்துவிட்டு சென்னை ஏழுகிணறு பகுதியில் ’தம்பி மெடிக்கல்ஸ்’ என்ற பெயரில் பிரபலமான ஆங்கில மருந்துக் கடை ஒன்றை இவர் நடத்திவந்தார்.என்றாலும் இவர் மார்க்கத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்ததாலும் இவருக்கிருந்த எழுத்து,படிப்பு ஆகியவற்றின் மீதான ஈடுபாட்டாலும் அன்று புகழ்பெற்று விளங்கிவந்த எழுத்துலக வல்லவர்களான சையிது முஹம்மது ஹஸன்,எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் முதலியோருடனான தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.குறிப்பாக எம்.ஆர்.எம்.அவர்களுடனான தொடர்பு இவரைப் புத்தகத் துறையில் பெரிதும் ஈடுபாடுகொள்ளச் செய்தது.தாமே புத்தகம் எழுத வேண்டும் என்ற இவருடைய விருப்பத்தை எம்.ஆர்.எம் அவர்களிடம் இவர் தெரிவித்தபோது,ஏதேனும் ஓர் ஆக்கத்தை எழுதிவந்து காட்டுமாறு பணித்துள்ளார்.அவ்வாறே எழுதிக் காட்டிய ஆக்கத்தைக் கண்ணுற்ற எம்.ஆர்.எம். அவர்கள்,”எந்தத் திருத்தமும் தேவை இல்லை;எழுதியவாறே வெளியிடலாம்” என்று நற்சான்றும் இஜாசத் என்னும் அனுமதியும் அளித்துள்ளார்.அன்று தொடங்கிய முஹம்மது தம்பி அவர்களின் எழுத்துப் பயணம்,அவருடைய மூன்றாவது ஹஜ் பயணத்திற்குப் பிறகு(1978) சிறப்பாக வெளிப்படலானது.

தமிழ், மலையாளம்,உர்தூ,ஃபார்சி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவருக்கு இருந்த அறிவு,இவருடைய மார்க்க நூல்களைச் செழுமைப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.இவர் எழுதிய வரலாற்று நூல்கள்-குறிப்பாகக் கலீஃபாக்களைப் பற்றியவை-அரிய செய்திகளுடன் நல்ல முறையில் தொகுக்கப்பட்டவை ஆகும்.

இறை நம்பிக்கையாளர்களின் அமல்கள் சிறப்பாக,முழுமையாக அமைய வேண்டும் என்ற நோக்கில் சிற்சில சிறிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.அவை நல்ல கையேடுகளாக விளங்கிவருகின்றன.அவற்றுள் ஒன்றை ஹஜ் உம்ரா செய்பவர்களின் கைகளில் நான் கண்டுள்ளேன்.

பக்தியும் ஆன்மீக ஈடுபாடும் மிக்க இவர் எழுதிய “இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்”,படித்த எல்லாருடைய உள்ளங்களையும் கரைத்த நூலாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மீது மிகுந்த பற்று கொண்ட இவர்,ஆலிம்கள் பாராட்டிய எழுத்தாளர் ஆவார்.

ஹிரா மலைக் குகையில் இருந்து கஃபாவைக் கண்டு மகிழ்ந்ததை என்னிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டவர் இருவர். ஒருவர்,”நெஞ்சில் நிறைந்த நபிமணி” என்னும் காப்பிய நூலின் ஆசிரியர் ஆலிம் கவிஞர் ஜி.எம்.எஸ்.சிராஜ் பாக்கவி அவர்கள்;மற்றொருவர் எம்.எஸ்.எம்.முஹம்மது தம்பி அவர்கள்.இவர் மூன்று முறை ஹஜ்ஜும் மூன்று முறை உம்ராவும் செய்துள்ளார்.மூன்றாவது உம்ராவைக் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கொண்டார்.

இவர்,ஆறு ஆண் மக்களுக்கும் ஐந்து பெண் மக்களுக்கும் தந்தையாகி வாழ்வாங்கு வாழ்ந்தவர் ஆவார்.அல்லாஹ்வுடைய நாட்டப்படி உலக வாழ்வை நீத்துவிட்ட இவர்,அறிவுலகில் தாம் எழுதிய அறிவார்ந்த நூல்களால் நம்மோடு வாழ்ந்து வருவார்.எனினும் அவருடைய மறைவு ஒரு மூத்த சகோதரரின் மறைவாகவே என் மனதுக்கு வருத்தம் அளித்த்து.அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தார்,உற்றார்,உறவினர் முதலிய அனைவருக்கும் கருணையுள்ள அல்லாஹ், அழகிய பொறுமையைத் தந்தருளவும் மர்ஹூமான முஹம்மது தம்பி அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்கி அருளவும் நாம் துஆ செய்துகொள்வோமாக.

மரியாதைக்குரிய சகோதரர் மர்ஹூம் எம்.எஸ்.முஹம்மது தம்பி அவர்களின் மறைவு குறித்து விசாரிக்க விரும்புவோர் அவருடைய ஆண்மக்களில் ஒருவரும் கோவை அல்-ஃபைஸ் ஹஜ் சர்வீஸின் உரிமையாளரும் ஆன கோவை சம்ஷுல் ஹுதா(9952482543) அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்:

-----ஏம்பல் தஜம்முல் முகம்மது


மாமேதை மர்ஹூம் முஹம்மது தம்பி அவர்களின் ஆக்கங்கள் பலரின் ஈமானை புதுப்பித்தது, நபி நேசத்தை வளர்த்தது , அன்னாரது இழப்பு சமுதாயத்திற்கே ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
இச்செய்தியை பகிர்ந்து சமுதாயத்திற்கு அறிவித்த அறிஞர் ஏம்பல் தஜம்மல் முஹம்மது அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,
எனது ஆத்ம நண்பர் வழுத்தூர் சாப்ஜி (அப்துல் ரஹீம்) அவர்கள் அனுதினமும் இறுதி நபிகளின் இறுதி நாட்கள், மரணத்தின் பிடியில் மாநபியின் தோழர்கள் போன்ற புத்தகத்தை வைத்து அழுது அழுது கரைந்து உருகி படித்துக்கொண்டிருப்பார், அவருக்கும் இந்த செய்தியை படித்துக் காண்பித்தேன். அவரும் மறைந்த பன்னூலாசிரியருக்கு துஆ செய்வதாகவும், ஏம்பலார் அவர்களுக்கு நன்றிதனையும் தெரிவித்து கொண்டார். - ஜா.முஹையத்தீன் பாட்ஷா

வியாழன், 10 அக்டோபர், 2013

எனக்கு ஏணி முஸ்லிம்கள் தான் - கவிஞர் வாலி


பயங்கரவாதத்தின் வேர்கள்

செய்தியாளர் எச்.பீர் முஹம்மது தி இந்து நாளிதழில்...

தமிழ்நாட்டில் இந்துத்துவா இயக்கத் தலைவர்களின் படுகொலைகளில் சம்பந்தப்பட்டதாக மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிகழ்வு பயங்கரவாதத்தின் வேர்கள்குறித்த கேள்வியை எழுப்பியிருக்கிறது. பயங்கரவாதத்தை ‘உலகில் பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையிலான போராட்டம்’ என்கிறார் அமெரிக்க மொழியியலாளர் நோம் சாம்ஸ்கி.
20-ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தின் உருவாக்கமாகத்தான் இருந்தது. 1980-களில் ஆப்கனுக்கு எதிராக சோவியத் ரஷ்யாவின் படையெடுப்பை ஒட்டி பாகிஸ்தானில் உருவான முஜாஹிதீன் இயக்கத்துக்குச் சகலவிதமான உதவிகளையும் ஆயுதப் பயிற்சியையும் அமெரிக்கா அளித்தது. அவர்களே பின்னர் தலிபன்களாக உருமாறி, அமெரிக்கத் துணையுடன் ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றி பல்வேறு குற்றச் செயல்களைப் புரிந்தனர். பின்னாளில் தலிபன்களின் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு அவர்களிடையே பல சிறு குழுக்கள் தோன்றி ஆப்கனிலும் பாகிஸ்தானிலும் இன்னமும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் நீட்சியில் அல்கொய்தா இயக்கத்தின் உருவாக்கமும் சேர்த்து கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் வார்ப்பான ஒசாமா பின்லேடன் 19-ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான தீவிர இஸ்லாமியக் கோட்பாடான வஹ்ஹாபிய பிரிவைச் சேர்ந்தவர். அன்றைய துருக்கிய உதுமானிய பேரரசுக்கு எதிராக மத்தியக் கிழக்கில் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரிட்டிஷ் துணையுடன் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்ற பழங்குடித் தலைவரால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபியம் நவீன உலகில் அரசியல் இஸ்லாம் (Political Islam) என்பதை முன்வைக்கிறது. ஜிஹாத் மற்றும் காபிர் என்ற இரு புனிதச் சொல்லாடல்கள் இதன் அரங்குக்குள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. குறிப்பாக, இதன் அரசியல் இயக்கமான அல்கொய்தா, ‘நம்பிக்கையற்றவர்கள் மீது போர் தொடுப்பது ஒவ்வோர் இஸ்லாமியரின் கடமை’ என்று பல முறை அறிவித்திருக்கிறது. மதப் பிரதிகளை இவர்கள் இயந்திரத்தனமாகப் புரிந்துவைத்திருப்பதால், பல நேரங்களில் இஸ்லாம்குறித்து புதிதாக அறிந்துகொள்ள விரும்பும் பதின்பருவ இளைஞர்கள் இதற்கு பலியாகிவிடுகிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்பதைப் பற்றி வரலாற்றில் நேர்மறையான விளக்கங்களும் புரிதல்களுமே இருந்திருக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய வரலாற்றில் தத்துவ ஞானிகளான சூபிகளின் ஜிஹாத் பற்றிய புரிதல் ஆன்மிகத்தை நோக்கித்தான் இருந்தது, அரசியலை நோக்கி அல்ல. ஜிஹாத் என்ற புனிதப் போரை அரசியல் அளவுகோலாக எதிர் சமூகங்களின் மீது வைப்பது மேற்கண்ட இயக்கங்களின் வருகைக்குப் பின்புதான்.

இந்த இயக்கங்கள் சவூதி அரேபிய வகைப்பட்ட உலக இஸ்லாம் (Global Islam) என்பதை முன்வைப்பதால் உலகின் பல்வேறு நாடுகளில் பிராந்திய, வட்டாரப் பண்பாடுகளிலிருந்தும், அடையாளங்களிலிருந்தும் இஸ்லாமியர்கள் விலக்கப்படுகிறார்கள் அல்லது விலகுகிறார்கள். இந்நிலையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் இருந்த இந்து, முஸ்லிம் சமூக ஒற்றுமை சுதந்திரத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்குலையத் தொடங்கியது. இந்தச் சீர்குலைவு அரசியலில் இந்துத்துவா இயக்கங்களின் பங்களிப்பும் மறுக்க முடியாதது. உலக வரலாற்றில் பெரும்பாலும் ஒரு நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் இயக்கங்கள் தங்கள் நாடுகளில் வாழும் சிறுபான்மையினரை எதிர் நிலையில் நிறுத்தித் தங்களை முன்னகர்த்திக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இந்தியாவிலும் அது போன்றே நிகழ்ந்தது. பாபர் மசூதி என்பது அதன் முக்கிய அரசியல் குறியீடு.

இந்தியாவின் பன்மயப்பட்ட சாதியச் சமூகத்தில் தங்களின் வகுப்புவாத அரசியலை முன்னிறுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த குறியீடுதான் ராமரும் பாபர் மசூதியும். இந்த நுண்ணரசியலைப் புரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள இயலாத இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் தன்னைப் பலிகொடுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடங்கிய காலகட்டத்தில் பல்வேறு முற்போக்குச் சக்திகளும் தலைவர்களும் எடுத்த சமரச முயற்சியில் இருதரப்பினருமே உடன்படவில்லை. இதன் நீட்சியில் 1992 நிகழ்வுக்குப் பிறகு இந்தியாவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியக் குடும்பங்கள் நிர்க்கதியாயின. போராட்டங்களிலும் கலவரங்களிலும் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இறைவனுக்காக மக்கள் கொல்லப்படுவது இறைவனுக்கே ஏற்புடையதல்ல.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றம் இதனோடு தொடர்புடையதாகிறது. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போன்ற மிதவாத இயக்கங்களின் பலவீனமும் இயலாமையும் 1990-களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற வஹ்ஹாபிய இயக்கங்களின் வருகைக்குக் காரணமாக அமைந்தது. இதன் தலைவர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அதிலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் என்ற மற்றொரு தீவிர இயக்கத்தை உருவாக்கியது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டத்துக்கான இயக்கங்களாகத் தங்களை முன்னிறுத்தினாலும், ஏற்கெனவே தமிழ் அடையாளங்களிலிருந்தும், சமூக நீரோட்டத்திலிருந்தும் விலகியிருந்த சமூகத்தை இவை மேலும் விலகச் செய்தன. இவற்றின் 20 ஆண்டு கால வரலாற்றைக் கூர்ந்து அவதானித்தால், மேற்கண்ட உண்மை புரியும். மைய நீரோட்டம் என்றால் கிலோ என்ன விலை? தமிழர்கள் என்பவர்கள் இந்துக்களே என்ற நிலைப்பாடே இவர்களிடம் இப்போதும் இருக்கிறது. ஆனால், கேரளத்தில் நிலைமை இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் கேரளத்தில் எல்லோரும் மலையாளிகள் என்று சொல்வதில் பெருமை கொள்கின்றனர். அங்கு மைய நீரோட்டம் என்ற கேள்வியே எழவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பல கலை ஊடகங்களை நிராகரிப்பது, பொதுவாசிப்பு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை உள்வாங்க மறுப்பது, குறிப்பாக காலங்காலமாகத் திரைப்படத்தை நிராகரித்து அவற்றைவிட்டு ஒதுங்கியிருந்தது போன்றவை தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்துகொள்ளக் காரணமாயின. ‘விஸ்வரூபம்’ போன்ற திரைப்படங்களை இந்தச் சூழலில் வைத்துத்தான் நாம் மதிப்பிட முடியும்.

திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில், இந்துத்துவ அரசியல் மிக வலுவானதாக இல்லை. ஆனால், சமீப காலமாக தீவிர இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடுகள் அவற்றை வலுப்பெற வைக்க வாய்ப்பிருக்கிறது. குஜராத் கலவரத்தைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகமாகப் போராடியவர்கள், இயக்கம் நடத்தியவர்கள் இந்தியாவில் உள்ள ஜனநாயக முற்போக்குச் சக்திகள். ஆனால், நெருக்கடியான காலகட்டங்களில் இஸ்லாமியச் சமூகம் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தங்களின் சமூக அரசியல்குறித்த புரிதலே அதற்குக் காரணம். இந்நிலையில், சமீபகாலங்களில் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் ஈழப் பிரச்சினை, கூடங்குளம் விவகாரம் போன்றவற்றில் இணைந்து போராட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது இன்னும் தொடர வேண்டியதிருக்கிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட பல குண்டுவெடிப்புகள் 1990-களுக்குப் பிறகே ஏற்பட்டன. பதின்பருவ இளைஞர்கள்கூட முட்டு வரை தாடி வளர்ப்பது இதன் பிறகே ஏற்பட்டது. வஹ்ஹாபிய இயக்கங்களின் எழுச்சியும் அதன் கருத்தாக்கமும் மேற்கண்ட இளைஞர்களிடத்தில் புனிதப் போர் குறித்த அரசியல் பார்வையை மேலும் கூர்மையாக்கின. இதில் பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்களே அதிகம். எல்லா இயக்கங்களுமே பதின்பருவ இளைஞர்களைக் குறிவைக்கக் காரணம், அந்த மூளைகள்தான் உணர்ச்சிபூர்வமான அரசியல் கருத்தாக்கங்களை மிக எளிதில் உள்வாங்கும்.

இந்நிலையில், பல அப்பாவி இளைஞர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கிச் சிறை சென்றனர். அதில் சிலர் நிரபராதிகள் என்று பின்னர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கின்றனர். ஆக, மதம் குறித்த இயந்திரத்தனமான மட்டுப்படுத்தப்பட்ட புரிதலும் கருத்தியல்களும் அப்பாவி இளைஞர்கள் பலரை வன்முறை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கின்றன. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல இளைஞர்கள் ‘‘தமிழ்நாட்டில் தீவிர இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர்தான் எங்களைத் தூண்டினார்” என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்தனர். இந்தியாவின்/தமிழ்நாட்டின் சமூக நீரோட்டத்தைக் குலைக்கும், சமூகங்களிடையே பதற்றங்களை உருவாக்கும் இம்மாதிரியான செயல்பாடுகளுக்குக் கண்டிப்பாக மதம் காரணமாக இருக்க முடியாது. ஹிட்லர் தன் செயல்பாடுகளுக்கு பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டினார். அப்படியிருக்க, அவரின் செயல்பாடுகளுக்கு கிறிஸ்துவம் எப்படிப் பொறுப்பாக முடியாதோ அதுமாதிரிதான் அரசியல் இஸ்லாம் பேசும் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் பொறுப்பேற்க முடியாது. இந்நிலையில், சிலரின் பயங்கரவாதச் செயல்பாடுகள் காரணமாக இந்திய ஊடகங்கள் அவர்களை இஸ்லாத்தோடு சேர்த்து அடையாளப்படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்தையே காயப்படுத்துவதாகும். தாடிகுறித்த அறிவீனமான பார்வை சமூகத்துக்குள் நிலவுகிறபோதும் ஊடகங்கள் அதனைப் பயங்கரவாதக் குறியீடாகக் காட்டுவது மிக அபத்தமான ஒன்று.

தமிழ் இஸ்லாமிய சமூகம் தங்களைப் பிரதேச அடையாளங்களோடு வலுவாக இணைப்பதுடன், தங்களின் மறுமலர்ச்சிக்காக மைய நீரோட்டத்தில் இணைவதும் முக்கியம். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதில் மட்டுமே அதன் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், தொடர்புக்கு: mohammed.peerl@gmail.com

செவ்வாய், 8 அக்டோபர், 2013

வெற்றிலை போடுவது பற்றி...

பழந்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

(புகையிலையைச் சேர்த்து போடும் போது தான் அது ஒரு தவறான பழக்கமாக உருமாறுகிறது)

Nagoorkani Kader Mohideen Basha அண்ணன் சுவரிலிருந்து...

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தமிழில் சிறுபான்மை இலக்கியம் - எழுத்தாளர் ஜெயமோகன்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை ஒரு போதும் நிகழ்ந்து விடலாகாது . காரணம் இலக்கிய அனுபவத்தில் மத, இன, மொழி பிரிவினைகள் இல்லை .
மதச் சிறுபான்மையினரால் எழுதப் பட்ட ஆக்கங்களே இக்கட்டுரையில் சிறுபான்மை இலக்கியம் எனும்போது குறிக்கப் படுகிறது. பிற மதங்கள், கருத்தியல்கள் ஆகியவற்றின் பாதிப்பே ஒரு இலக்கியத்தை அடுத்த கட்டம் நோக்கி நகரச் செய்கிறது. பெளத்த, சமண மதங்களின் வருகையினாலேயே தமிழிலக்கியம் காப்பிய கால கட்டம் நோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியது என்பது நாமறிந்ததே. இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உண்டு. முழுமையான பெளத்த காவியமும் [மணிமேகலை], இஸ்லாமிய காவியமும் [ சீறாப்புராணம்] உள்ள ஒரே மொழி தமிழ் தான். பல காரணங்களினால் இவ்விரு காவியங்களின் முக்கியத்துவமும் இங்கு உணரப் படவில்லை. நவீனச் சூழலிலும் பேசப் படவில்லை. [சீறாப்புராணம் குறித்து நான் மலையாளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்] தமிழின் நீதி, மருத்துவ, இலக்கண நூல்களில் கணிசமானவை பெளத்த, சமண மதங்களின் கொடையாகும். விவாதத்துக்கு உரிய கணிப்பென்றாலும், என் தரப்பு தத்துவ விவாதத்தை இம்மதங்களே தமிழுக்கு கொண்டு வந்தன என்பதே உண்மை.
தமிழகத்துக்கு அடுத்து வந்த பெரும் மதம் இஸ்லாம். வெகுகாலம் இஸ்லாம் வணிகர்களின் மதமாக, அரபு மொழி சார்ந்ததாக இருந்து வந்திருக்க வேண்டும். அதைத் தமிழக வெகு ஜன மொழிக்கும் இலக்கிய தளத்துக்கும் கொண்டு வந்தவர் தமிழக இஸ்லாமிய வரலாற்றின் திருப்பு முனையான மார்க்க மாமேதை சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள். அவரது மாணவரான வள்ளல் சீதக்காதி இரண்டாமர். இருவருமே இலக்கியவாதிகளல்லர். துரதிர்ஷ்டவசமாக தமிழ்க் கலாசாரத்தின் முக்கியமான ஆளுமைகளான இவர்களைப் பற்றி இங்கு அதிகம் பேசப் பட்டதில்லை. [ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப் பற்றி எழுத முடிந்துள்ளது. அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம். மேலும் சிறு விமரிசனக் குறிப்பைக் கூட அபாயகரமாக திரித்து விடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு].
சமகாலத்தவர்களான இவ்விருவருக்கும் உள்ள பொது அம்சம் அது வரை கலாச்சார ரீதியாக இஸ்லாமுக்கும், பிறருக்கும் இடையே இருந்த இடைவெளியை இவர்கள் குறைத்தார்கள் என்பதுதான். ஹிஜ்ரி 1042 ல் காயல் பட்டினத்தில் பிறந்த சதக்கா தன் அரபு மொழிப் புலமையாலும் மார்க்கத் தேர்ச்சியாலும் சதக்கத்துல்லாஹ் என புகழ்பெற்றார். இல்லறத் துறவு வாழ்க்கையை மேற் கொண்ட இவர் தமிழிலும் பெரும் பண்டிதர். படிக்காசுத் தம்புரான், நமச்சிவாயப் புலவர் போன்ற அக்கால சைவ அறிஞர்கள் பலர் இவருடைய மாணவர்களாக இருந்தனர். ஏராளமான மாற்று மதத்தினர் — அவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்துக்குமேல் — இவரிடம் கல்வி பயின்றுள்ளார்கள். தமிழகம் முழுக்க பெரும்பாலான ஊர்களில் இவர் வந்து சென்றதாக ஐதீகக் கதை உள்ளது. அக்கால சூஃபி க்கள் பெரும்பாலானவர்களிடம் இவர் உரையாடியுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது . 73 வயது வரை உயிர் வாழ்ந்தார் .
‘ ‘ செத்தும் கொடுத்த சீதக்காதி ‘ ‘ என்று படிக்காசுப் புலவரால் பாடப்பட்ட சீதக்காதியின் இயற் பெயர் ஷேக் அப்துல் காதர். சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மாண்வர் இவர். கடல் வணிகம் செய்த பெரும் செல்வந்தர். ராமநாதபுரம் கிழவன் சேதுபதியிடம் அமைச்சராக இருந்த போது இவர் பொறுப்பில் தான் ராமநாதபுரம் கோயில் புதுப்பிக்கப் பட்டு இன்றைய நிலையில் அமைக்கப் பட்டது. மேலும் பல ஆலய்ங்களுக்கு திருப்பணியும் குடமுழுக்கும் செய்வித்துள்ளார். இந்தியக் கட்டடக் கலையின் அமைப்பில் பல மசூதிகளை கட்டியுள்ளார். ராமநாதபுரம், மதுரை பகுதிகளில் ஏராளமான அன்னச் சத்திரங்களும் அமைத்தவர். தமிழறிவு மிகுந்த சீதக்காதி தமிழறிஞர்களின் புரவலராக இருந்தார். இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் உருவாக இவர் பெரு முயற்சி எடுத்தார்.
தமிழ்க் காவியங்களில் இலக்கியச் சுவையில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றுக்கு நிகராக வைக்கத் தக்க பெருங்காப்பியமான ‘சீறாப்புராணத்தை’ எழுதிய உமறுப் புலவர், வள்ளல் சீதக்காதி கேட்டுக் கொண்டதற்கேற்ப , சதக்கத்துல்லா அப்பா அவர்களிடமும் அவரது மாணவர் மஹ்மூது தீபி அவர்களிடமும் மார்க்க கல்வி பெற்று, அதன் பின்னரே எழுதினார் என்பது வரலாறு. இவர் முடிக்காமல் விட்ட நபியின் வரலாற்றை பனீ அஹம்மது மரைக்காயர் என்பவர் இயற்றியுள்ளதாகவும் அது சின்ன சீறா எனப் படுவதாகவும் தெரிகிறது. பின்பு முன்னா முகம்மது காதிரி என்பவர் இரு பகுதியையும் இணைத்து தானும் சில பகுதிகளை சேர்த்து முழுமைப் படுத்தியதாக தெரிகிறது. இந்நூல்களை நான் பார்த்ததில்லை. அச்சில் உள்ளனவா என்றும் தெரியவில்லை.
இங்கு ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். சதக்கத்துல்லாஹ் அப்பா உள்ளிட்ட கணிசமான இஸ்லாமிய அறிஞர்கள் அரபு மொழியில் எழுதியுள்ளனர். அவற்றை தமிழ் இலக்கியம் என்று கொள்ளாவிட்டாலும் தமிழக இலக்கியத்தின் பகுதியாக கருத வேண்டும். வட மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப் பட்ட தமிழர் ஆக்கங்கள் அவ்வண்ணமே கருதப்படுகின்றன.
தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்பு கொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் குறைவெனவே கொள்ள வேண்டும். சீறாப்புராணம் போல காவியச் சுவை உடைய எந்தப் படைப்பும் இல்லை என்பது என் எல்லைக்குட்பட்ட வாசிப்பிலிருந்து அடைந்த முடிவு. பிற்கால இஸ்லாமிய இலக்கியங்கள் நாட்டார் இலக்கியங்களின் தொடர்ச்சியாக எழுதபட்டவை. மாலை, கண்ணி எனும் வடிவங்கள் பிரபலமாக இருந்திருக்கின்றன. இன்று இவை தற்செயலாக கிடைத்தால்தான் உண்டு. இஸ்லாமிய இலக்கியங்களுக்கான ஆய்வு மையமும், ஆவணக் காப்பகமும் இன்று பெரிதும் தேவையாகின்றன. ஹிஜ்ரி 1270 களில் கண்ணகுமது மகதூம் முகம்மது புலவர் தன் தனிப்பட்ட முயற்சியால் அச்சில் ஏற்றி வெளிக் கொணராவிடில் இஸ்லாமிய இலக்கியங்கள் முற்றிலும் அழிந்து விட்டிருக்கும். ஏறத்தாழ் அறுபது நூல்களை இவர் பதிப்பித்திருக்கிறார். உ.வே.சாமிநாதய்யர் தமிழுக்கு செய்த சேவையுடன் ஒப்பு நோக்கத் தக்க இப்பெரும் பணி எவ்வகையிலும் தமிழில் அங்கீகரிக்கப் படவில்லை.
இன்று ஒரு கூர்ந்த வாசகனுக்கு கூட இஸ்லாமிய இலக்கியங்களின் பெரும் பகுதி கிடைப்பதில்லை. சிற்றிலக்கியங்களில் பெரும்பாலோர் வாசித்திருக்கக் கூடிய குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்களையே நானும் வாசித்திருக்கிறேன். ஹிஜ்ரி 1207 ல் பிறந்த சுல்தான் அப்துல் காதிர் ஒரு பக்கீராக சென்னையில் ராயபுரத்தில் வாழ்ந்து குணங்குடி சித்தர் என அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டு அங்கேயே இறந்தார். இவரது பாடல்கள் இவர் மாணவர் முஹம்மது ஹுசைன் புலவர் என்பவரால் எழுதியெடுக்கப் பட்டு சீயமங்கலம் அருணாசல முதலியார் என்பவர் பதிப்பித்தார் என்பதும் வரலாறு. என் பெரியப்பா குணங்குடியார் பாடல்களை சிறப்பாகக் கற்றிருந்தார். தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் சீறாப்புராணம் ஒரு சிகரம் என்றால் குணங்குடியார் பாடல்கள் இன்னொரு சிகரம்.
இசைப் பாடல்களில் இஸ்லாமியப் பாடல்கள் பெரும் புகழ் பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. பல பாடல்களை நானே கேட்டதுண்டு. கோட்டாறு சையிது அபூபக்கர் புலவர் எழுதிய சீறா கீர்த்தனைகள் ஒருகாலத்தில் குமரி மாவட்டத்தில் புகழ் பெற்றிருந்தன. சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழிசை இயக்கத்தில் தீவிரப் பங்கு பெற்றதும் முக்கியமான பல கீர்த்தனைகளை எழுதியதும் குறிப்பிடத் தக்கவை .
வீரமாமுனிவர் தமிழின் நவீன மயமாக்கலை தொடங்கி வைத்தவர். உரை நடையின் பிதா மகர்களில் ஒருவர் என்பது நாம் அறிந்ததே. அவரது தேம்பாவணி ஒரு முக்கியமான ஆக்கம். ஆனால் அது இலக்கியச் சுவை உடைய முக்கியமான காவியமாக எனக்குப் படவில்லை. இன்னொரு கிறித்தவக் காவியமான எச் . ஏ கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும் வெறும் செய்யுளாகவே நின்று விட்டது. ஆனால் இன்னொரு கவனமான வாசிப்புக்குப் பிறகே இது குறித்து திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியும்.
கிறிஸ்தவ இலக்கியத்தின் மிக முக்கியமான தமிழ்ப் பங்களிப்பு பைபிள் மொழிபெயர்ப்பு தான். விவிலியத்தின் எளிய கம்பீரமான நடையின் தாக்கம் தமிழில் எழுதப் புகுந்த முக்கியமான எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. மூத்த தலைமுறையில் சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ண தாசன் ஆகியோரின் உரை நடையிலும் புது படைப்பாளிகளில் நான், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் உரை நடையிலும் விவிலியத்தின் மொழித் தாக்கம் மிக வெளிப்படையானது. சரோஜினி பாக்கியமுத்து எழுதிய ‘விவிலியமும் தமிழும் ‘ என்ற ஆய்வு நூல் விவிலியத்தின் தமிழ் தாக்கம் குறித்து பேசும் முக்கியமான நூல்.
அதே சமயம் பொதுவான இலக்கியப் போக்கில் குர் ஆனின் தாக்கம் அனேகமாக ஏதுமில்லை என்றே சொல்ல வேண்டும். விவிலியத்தின் நடை உணர்ச்சிகரமான கவித்துவம் கொண்டது என்றால் குர் ஆனின் நடை கச்சிதமும் வீரியமும் உடையது. ஆனால் குர் ஆன் இஸ்லாமிய எழுத்தாளர்களில் கூட தாக்கம் செலுத்தவில்லை. இதுவே மலையாளத்திலும் உள்ள நிலைமை என விமரிசகர் குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் என்ன என்பது யோசிக்கத் தக்கது . குர் ஆன் வெறும் வழிபாட்டுப் பொருளாகவே இஸ்லாமியரால் கூட எண்ணப் பட்டது என்பதும், அனைத்து மானுடருக்குமான இறைச் செய்தி என்ற முறையில் அது பரவலாக எடுத்துச் செல்லப் படவில்லை என்பதும் முக்கியமான காரணங்கள் என்று படுகிறது.
பைபிளை மனம் தோய்ந்து நான் படிக்கும் போது என் வயது பதினாறு. ஆனால் இருபது வருடம் கழித்தே குர் ஆன் என்னை ஆட்கொள்ளும் நூலாக ஆகியது. என் ஆசிரியரான நித்ய சைதன்ய யதி [நாராயண குருவின் மாணவரான நடராஜ குருவின் மாணவர். தத்துவப் பேராசிரியராக மேலை நாடுகளில் பணியாற்றியவர். 150 நூல்களை ஆக்கியவர்] தன் வாழ்வின் இறுதி வருடத்தில் குர் ஆனை கற்கவும் ஒரு பகுதியை அழகிய கவித்துவ மொழியில் மலையாளத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். அவருடைய மாணவரான உஸ்தாத் ஷெளக்கத் அலியிடமிருந்து நான் குர் ஆனின் சில பகுதிகளை அறிந்த பிறகு தான் அம்மாபெரும் நூலை பயில ஆரம்பித்தேன் . குர் ஆன் அனுபவம் குறித்து மலையாளத்தில் இரு கட்டுரைகளையும் ஆக்கினேன். இந்த ஐந்து வருடங்களில் குர் ஆனை சற்றேனும் படித்த இஸ்லாமியரல்லாத ஒரே ஒரு தமிழ் எழுத்தாளரைக் கூட நான் கண்டதில்லை. அடிப்படையில் இது இஸ்லாமிய அறிஞர்களின் தோல்வியே.
நவீன இலக்கியத்தின் துவக்க காலத்தில் பண்டைய இலக்கியத்தை சமகாலத்துடன் பிணைக்கும் பணியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்த குலாம் காதிர் நாவலரின் பங்களிப்பு முக்கியமானது. இவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். நன்னூலுக்கு இவர் எழுதிய எளிய விளக்கம் பிற்பாடு தமிழை நவீன காலகட்டத்துக்கேற்ப கற்பிக்கும் முயற்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது ‘.
நவீன உரை நடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் ஈழ எழுத்தாளரான சித்தி லெவ்வை மரைக்காயர் முக்கியமானவர். [1838 - 1898] அவரது இயற்பெயர் முகம்மது காசிம். இவர் எழுதிய ‘அசன்பே சரித்திரம்’ தமிழின் முதல் கட்ட நாவல்களில் ஒன்று என இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் ‘முஸ்லீம் நேசன் ‘ என்ற இதழை நடத்தியவர் .
நவீன இஸ்லாமிய படைப்பாளிகள் பலர் முக்கியமானவர்கள் பெயர்களையெல்லாம் இங்கு சொல்லி விட முடியாது. ஆரம்ப கால எழுத்தாளர்களில் ‘கருணாமணாளன் ‘ இஸ்லாமிய வாழ்க்கையை பற்றிய சித்திரங்களை அளித்திருக்கிறார். ‘ ஜெ எம் சாலி ‘ நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். களந்த பீர்முகம்மது முக்கியமான படைப்புகளை ஆகியுள்ளார். ஆயினும் பொதுவாக இலக்கிய வீச்சும் வேகமும் கொண்ட முதன்மையான இஸ்லாமிய படைப்பாளி ‘தோப்பில் முகம்மது மீரான் ‘ என்றே ஓர் இலக்கிய விமரிசகனாக நான் கூறுவேன் . [அவரைப்பற்றி நான் விரிவாக எழுதியதுமுண்டு]. சமீபகாலமாக ‘மீரான் மைதீன் ‘ கவனிப்புக்குரிய கதைகளை எழுதிவருகிறார் .
கவிஞர்களில் அப்துல் ரஹ்மான், மு. மேத்தா ஆகியோர் அதிகமும் பேசப் படும் இஸ்லாமியக் கவிஞர்கள். ஆனால் இவர்கள் எழுத்து மீது எனக்கு மிகக் கடுமையான எதிர் விமரிசனம் உண்டு. ரகுமானின் பாண்டித்யம் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றாலும் அரசியல் நிலை பாடுகளை ஒட்டி போலியாக உருவாக்கப் படும் கவிதைகள் அவை என்பது என் எண்ணம். அத்துடன் ஒரு கவிஞன் கண்டிப்பாக காத்துக் கொள்ள வேண்டிய அறிவார்ந்த சுய மரியாதையை அவர் காத்துக் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளை புகழ்ந்து தரமிறங்கி அவர் எழுதிய வரிகள் மிக மோசமான முன்னுதாரணங்கள்.
மூத்த தலைமுறை தமிழ் கவிஞர்களில் அபி முக்கியமானவர்.  இஸ்லாமியக் கவிஞர்களில் பரவலாக அறியப்பாடாத நவீனக்கவிஞர்கள் ‘நாகூர் ரூமி ‘, ‘ஷாஅ ‘. இஸ்லாமிய கருக்களை எடுத்து எழுதுவதனால் கவனிக்கப் பட்ட முக்கிய கவிஞர்கள் ஹெச் ஜி ரசூல், ஹமீம் முஸ்தபா ஆகியோர். சல்மா சமீப காலமாக கவனிக்கப் பட்டு வரும் தமிழ்க் கவிஞர்.
ஆனால் இளைய தலைமுறை தமிழ் கவிஞர்களில் முக்கியமான நால்வரில் ஒருவராக நான் எப்போதுமே குறிப்பிட்டு வரும் ‘ மனுஷ்ய புத்திரன் ‘ தான் இவர்களில் முதன்மையானர். இஸ்லாமிய வாழ்க்கை சார்ந்த சித்திரங்களோ இஸ்லாமிய பிரச்சினைகளோ அவர் கவிதைகளில் அதிகமில்லை. ஆனால் இஸ்லாமிய தரிசன அடிப்படையின் உச்ச நிலையில் நின்று கனிவும், கூர்மையும் கூடிய பல கவிதைகளை அவர் எழுதியிருக்கிறார்.
நவீனத் தமிழில் கிறித்தவ இலக்கியம் அழுத்தமான பதிவை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு திருப்பு முனையாக அமைந்த படைப்பு என்பது இலக்கிய வரலாறு. ஐசக் அருமைராசன், மாற்கு, எம். ஜேக்கப் ஆகியோரின் நாவல்கள் குறிப்பிடத் தக்கவை. முகையூர் அசதா சமீப காலமாக கவனத்துக்கு உள்ளாகி வரும் படைப்பாளி.
இஸ்லாமிய இலக்கியத்தை தமிழுக்குத் தொகுத்து தருவதில் மணவை முஸ்தபா அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமான ஒன்று. ‘ தமிழில் இஸ்லாமிய இலக்கியம் ‘ அவருடைய முக்கியமான நூல். இஸ்லாமிய பண்பாட்டை விரிவாக அறிய உதவும் மாபெரும் ஆக்கம் 1977ல் ‘அப்துற்- றகீம் ‘ அவர்களால் தொகுக்கப் பட்ட இஸ்லாமிய கலைக் களஞ்சியம். நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது.
பொதுவாக சொல்லப் போனால் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கால கட்டத்தில் நடந்த ஒரு படைப்பூக்கக் கொந்தளிப்பை தவிர்த்தால் தமிழில் சிறுபான்மை இலக்கியம் தீவிரமான வளர்ச்சி எதையும் அடையவில்லை என்றே எனக்குப் படுகிறது. சீறாபுராணம் ஒரு சிகரம். குணங்குடியார் பாடல்கள் அபூர்வமான விதிவிலக்கு. தோப்பில் முகம்மது மீரானும் மனுஷ்ய புத்திரனும் மட்டுமே நாம் உலக இலக்கிய மரபை நோக்கி முன் வைக்க ஓரளவேனும் தகுதிவாய்ந்த படைப்பாளிகள். அண்டை மொழியான மலையாளத்திலோ அவர்களின் மிகச் சிறந்த படைப்பாளிகளே சிறுபான்மையினர்தான். வைக்கம் முகம்மது பஷீரும், சக்கரியாவும் எந்த உலக பெரும் படைப்பாளிக்கும் நிகரானவர்கள்.
இது ஏன் என நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நமது பொதுச் சூழல் சிறுபான்மையினரின் எழுத்தில் அவர்களுடைய மிகச் சிறந்த தளத்தை எதிர்பார்ப்பதாக இருக்கிறதா? சிறுபான்மையினரின் கலாச்சார, இலக்கிய மரபு குறித்த போதிய புரிதல் பொதுச் சூழலில் இல்லை என்பது ஒரு பெரும் குறை. ஆகவே சிறுபான்மை சமூக எழுத்தாளன் தன் வாழ்க்கை குறித்து நேர்மையாக எழுதினால் அது பொதுச் சூழலுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவோ, ஏற்கக் கூடுவதாகவோ இல்லை. தோப்பில் முகம்மது மீரான் தன் நாவல்களின் நடையையும், சூழலையும் புரிய வைக்கவும், ஏற்கச் செய்யவும் கடுமையாக போராட வேண்டியிருந்தது.
மறுபக்கம் சிறுபான்மை சமூகம் தன் எழுத்தாளர்களை மதிப்பதாகவோ, அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதாகவோ இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். அதற்கும் தோப்பில் முகம்மது மீரான் போராட வேண்டியிருந்தது நாமறிந்ததே. சகஜமான சுதந்திரத்துடன் எழுத்தாளர்கள் எழுதும் போதும், அவர்களை சமூகம் கூர்ந்து கவனிக்கும் போதும் மட்டுமே உயர்ந்த இலக்கியம் உருவாகிறது. பஷீர் தன் சமூகத்தை மிகக் கடுமையாக விமரிசித்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதுமே உச்ச கட்ட அங்கீகாரத்தையே அடைந்திருக்கிறார்.
ஒரு மொழிச் சூழலில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளன் தன் அடையாளத்தைத் தவிர்த்து விட்டு எழுதுகிறான். பொது மொழியையும், பொதுவான சூழலையும் தேர்வு செய்கிறான் என்றால் அச்சமூகம் கருத்தியல் அடக்குமுறை கொண்ட சமூகம் என்றே பொருள். படைப்பூக்கம் கொண்ட சுதந்திர சமூகத்தில் தன்னுடைய தனித் தன்மை கொண்ட மொழியும், சூழலும் அவனுக்கு ஒரு பெரிய சொத்தாகவே இருக்கும். வாழும் சமூகமும், மொழியும் ஒருபோதும் ஒற்றைப் படையான இயக்கம் கொண்டிருக்காது.
================================
[பூங்காற்று இஸ்லாமிய சிறப்பிதழுக்கு எழுதப் பட்டது. ஷிபா மீடியா 142/2வது தள/ வடக்கு வெளி வீதி, யானைக்கல், மதுரை 625001]
இஸ்லாமிய இலக்கியம்

வியாழன், 3 அக்டோபர், 2013

சமூக நல்லிணக்க நாயகர் என் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது (ரஹ் )

- எஸ்.கே.எம்.ஹபீபுல்லாஹ், கடயநல்லூர்

அரசியலைவைத்து ஆண்டியும் அரசனாக வாழ்வு பெற்ற காலத்தில் , பிழைப்பிற்காக அரசியல் இயக்கம் நடத்திய தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் , தன் அரசியல் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) வழிநின்று சமுதாயத்திற்கான களத்தில் தன் சொத்து சுகங்களை எல்லாம் இழந்து ,இறைவனின் நற்கூலியை மட்டுமே தன்னகத்தே கொண்டு வாழ்ந்து மரணித்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது(ரஹ் )

பகைவரின் மனம் கூட நோகவிடாமல் நாகரீகமாக பேசும் பண்பாளர். செந்தமிழும் அன்னவர் நா நின்று நர்த்தனமாடும், அழகு கண்டவர் கேட்டவர் அனைவரும் கவர்திடும் வண்ணம் சொல்லாற்றல் கொண்டவர்,தமிழகமே வியந்து பாராட்டும் பேச்சுக்கு சொந்தக்காரரான அண்ணாவே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசும் திறன் கொண்ட பெருமைக்குரியவராக திகழ்ந்தவர் .

தென்னிந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தின் நிர்வாகியாக இருந்து சென்னை புதுக்கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் .

சிராஜுல் மில்லத் (ரஹ்) அவர்கள் ஒரே ஒரு முறைதான் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டார் .1984 -ஆம் ஆண்டு திருவெல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப் பட்டிருந்தார் .அந்த காலகட்டத்தில் , ஒரு நாள் திருவல்லிக்கேணி பகுதியை சார்ந்த இந்து சமுதாய மக்கள் ,தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களை அலுவலகத்திற்கு வந்து சந்தித்து ,எங்கள் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்ள வந்துள்ளோம் ,நீங்கள் இஸ்லாமிய சமுதாயத்தின் பெருந்தலைவர் ,எனவே எங்களுக்கு தயக்கமாக உள்ளது என்று கூறினர் .தலைவர் அவர்கள் ,நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தாராளமாக கேளுங்கள் என்று கூறினார் .

அப்போது அம்மக்கள் , திருவல்லிகேணியில் உள்ள தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பார்த்த சாரதி கோயிலின் குளம் மிகவும் அசுத்தமாக ,சுகாதார சீர்கேடாக உள்ளது ,அதனை துப்பரவு பண்ண தமிழக அரசின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .

எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக வீற்றிருந்த அன்றைய தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ,தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எழுந்து ,என் தொகுதிக்கு உட்பட்ட ,அரசுக்கு மிக அதிக வருமானத்தை தரக்கூடிய புகழ் பெற்ற பார்த்தசாரதி அம்மன் கோவில் தெப்பக்குளம் மிகவும் சீர்கெட்ட நிலையில் உள்ளது ,உடனடியாக அதனை துப்பரவு செய்து ,மக்கள் பயன் பாட்டிற்கு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .

அன்றைய சட்டமன்றத்தில் இருந்த உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஆனந்தம் ,முதல்வர் எம்ஜிஆர் இதற்கு முன் எத்தனையோ நபர்கள் அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலும் ,எவருமே வைக்காத கோரிக்கையை ,அதுவும் மக்கள் கோரிக்கையை நண்பர் அப்துஸ் சமது அவர்கள் வைத்துள்ளார் ,தமிழக அரசு உடனே அதனை ஏற்று பார்சாரதி கோயிலின் குளம் தூர்வாரபப்டும் என்று ஆணையிட்டார் .குளமும் தூர்வாரப் பட்டது ,அப்பகுதி மக்கள் ஒன்றாக கூடி வந்து யாரும் செய்து தந்திடாத அரும் பணியை செய்து தந்தீர்கள் என்று தலைவர் சிராஜுல் மில்லத்தை நேரில் சந்தித்து பாராட்டி நன்றி கூறி சென்றனர் .

இப்படிப்பட்ட சமூக நல்லிணக்க செயல் பாட்டிற்கு சொந்தக்காராக தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து, தான் சார்ந்த சமுதாயத்திற்கு நற்பெயர் எடுத்துக் கொடுத்த பெருந்தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா .அ.அப்துல் சமது (ரஹ் ) அவர்கள் .

அந்த மாபெரும் தலைவரின் நெருகிப் பழகிய தொண்டனாக இருந்த நற்பாக்கியத்தை எனக்கு தந்த அல்லாவிற்கே எல்லாப்புகழும் !

அன்னாரின் மண்ணறை,மறுமை வாழ்வையும் வல்லோன் அல்லாஹ் மேன்மையாக்கி சுவனத்தை வழங்குவானாக!

ஹஜ்ரத் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்


 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "(நபி) மூசாவிடம் (நபி) ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள்.எனினும்எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள்.31 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: (சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)அவர்களிடமிருந்தே நேரடியாகச் செவியுற விரும்பினேன். ஆகவேநான் சஅத் (ரலி) அவர்களைச் சந்தித்துஎனக்கு ஆமிர் (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்து ரைத்தேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் "நான் இதை (நபியவர்களிடமிருந்து) செவியுற்றேன்'' என்று கூறினார்கள். ''நீங்கள் இதைச் செவியுற்றீர் களா?'' என்று கேட்டேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் தம் இரு விரல்களைத் தம் காதுக்குள் வைத்து "ஆம் (நான்தான் செவியுற்றேன்)இல்லாவிட்டால் இவ்விரண்டும் செவிடாகப் போகட்டும்!'' என்று கூறினார்கள்.32 இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாகநியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும்கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையாஆயினும், (ஒரு வேறு பாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள்.33 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபீசுஃப்யான் அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்கு மாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். "நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏசமறுப்பதற்கு என்ன காரணம்?'' என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். எனவேஅலீ (ரலி) அவர்களை நான் ஒருபோதும் ஏசமாட்டேன். அந்த மூன்றில் ஒன்று என்னிடம் இருப்பதுகூட, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகம் எனக்குக் கிடைப்பதைவிட மிகவும் உவப்பானதாகும். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு:) 1அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் எனும்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது, (மதீனாவில்) அலீ (ரலி) அவர்களைத் தம்பிரதிநிதியாக விட்டுச்சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையாஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்,) எனக்குப்பின் நபித்துவம் இல்லை'' என்று கூறினார்கள். 2அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்'' என்று கூறினார்கள். (அந்த மனிதர் நாமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்) நாங்கள் எங்கள் தலையை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குமுன்னால்) உயர்த்திக்காட்டினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அவர்களது கண் ணில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்து (கண்வலியைக் குணப்படுத்தி விட்டு)கொடியை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு அந்தப் போரில் அல்லாஹ் வெற்றி யளித்தான். 3. "வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்...'' (3:61எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி)ஃபாத்திமா (ரலி)ஹசன் (ரலி),ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா! இவர்கள்தான் என் குடும்பத்தார்'' என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்தஅந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
  அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப்போரில்) வெற்றியை அளிப்பான்'' என்று சொன்னார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப் பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவனாக நான் தலையை உயர்த்திக்காட்டினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்துஅவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். மேலும், "திரும்பிப் பார்க்காமல் செல்லுங் கள் அல்லாஹ் உங்கள் மூலம் வெற்றியளிப் பான்'' என்று சொன்னார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் சிறிது தூரம் சென்று நின்றுகொண்டு திரும்பிப் பார்க்காம லேயே, "அல்லாஹ்வின் தூதரே! எந்த அடிப் படையில் நான் மக்களுடன் போரிட வேண்டும்?'' என்று உரத்த குரலில் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் அவர்கள் உறுதியளிக்கும்வரை அவர்களுடன் போரிடுவீராக. அதற்கு அவர்கள் இணங்கிவிட்டால்உரிய காரணம் இருந்தால் தவிர அவர்கள் உங்களிடமிருந்து தம் உயிர்களையும் உடைமைகளையும் காத்துக்கொள்வார்கள். (மனத்தைப் பொறுத்தவரை) அவர்களது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது'' என்று சொன்னார்கள்.

புதன், 2 அக்டோபர், 2013

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

நத்தர்ஷா வலியுல்லாஹ் தர்கா பகுதியில் உள்ள சகோ தரர் ஜே.கே.வஜீர் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண் டிருப்பவர்.திருமண நாளில் வர இயலாமல் சேலம் மாநாட்டில் பங்கேற்க வேண்டியதாயிற்று. எப்படியாவது, தனது இல்ல விழாவில் என்னையும் பங்கேற்கச் செய்திட வேண் டும். என்று விடாப்பிடியாக இருந்து, 

27.9.13 வெள்ளிக்கிழமை மாலையில் திருமண வரவேற்பு விழா என்று ஏற்பாடு செய்து, நம்மையெல்லாம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை அளித்தி ருக்கிறார்.

இந்த விழாவுக்கு வர வேண்டுமானால் மாநகர் மாவட்டப் பொருளாளர் தம்பி அமீருத்தீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்த போது வேலைப்பளு மற்றும் உடல்நிலை காரணமாக வர இயலாதே என கூறி விழாவுக்கு வாழ்த்து கூறினேன். 


ஆனால், எழுத்தரசு ஏ.எம். ஹனீப் சாஹிப் தொலைபேசி யில் என்னை விழாவுக்கு வந் திட வேண்டும் என்றார். அவரின் அன்பான அழைப்பை ஆணை யாக மதித்து இங்கே உங்கள் முன் நிற்கிறேன்.

காரணம் நான் பேராசிரியர் தான். ஆனால், எனக்கு ஹனீப் சாஹிப் ஆசானாக இருந்து இயக்கத்தில் ஈடுபடச் செய்த பெருமைக்குரியவராவார்.


நத்தர்வலி தர்காவும் முஸ்லிம் லீகும்

இ.யூ.முஸ்லிம் லீக் இயக்க வரலாற்றில் திருச்சிக்கும், தர்கா பகுதிக்கும் சிறப்பான இடம் உண்டு. காயிதே மில்லத் திருச்சிக்கு வரும் போதெல் லாம், அவர்களை திருச்சி ஜங்சனில் இருந்து பாலக்கரை மறுமலர்ச்சி அலுவலகத்துக்கு அழைத்து வருவதற்குச் செல்கிறவர் களில் அதிகம் பேர் தர்கா பகுதியைச் சேர்ந்த வர்களாகவே இருப்பார்கள்.

எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் இதே தர்கா பகுதியில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட வரலாறு இருக்கிறது. மௌலவி குத் புதீன் ஹஜ்ரத் போன்ற பெரிய வர்களின் வழிக்காட்டு தலில் வளர்ந்த ஹனீப் சாஹிப், முஸ்லிம் லீகை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறார். இப்பகுதியில் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பெரும் துணை யாக இருந்த சகோதரர் ஷபியுல் லாஹ் போன்றவர்களை இன்றைக்கு காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

இங்கே சகோதரர்கள் ஜி.எம். ஹாஸிம், மூசாகோயா வாழ்த் துரை வழங்கினார்கள். 1982-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்த இருவரும் அப்போது தான் இ.யூ.முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர். முஸ்லிம் லீகில் இணைந்த வர்கள், கட்சி மாறுவதில்லை. இந்த முப்பது ஆண்டுகளில் பிற கட்சிகளை பார்க்கிறோம். பலப்பல கட்சி களில் தாவிக் கொண்டி ருப்போர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், முஸ்லிம் லீகில் இணைந்தவர் கள் யாரும் எங்கும் போனதாக வரலாறு இல்லை. இத்தகைய சேவையா ளர்களை இ.யூ. முஸ்லிம் லீகிற்கு தந்த பெருமை தர்கா பகுதிக்கு உண்டு.

ஹஸ்ரத் சுஹர்வதி, ஜமால் முஹம்மது கல்லூரியில் உர்து, பார்சி பேராசிரியராக இருந் தவர். தர்காவுக்கு உரியவர். திருக்குறளை முதன்முதலில் உர்துவில் மொழி பெயர்த்து வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது அவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தப்லே ஆலம் பாதுஷா வலியுல்லாஹ் அவர்களின் மஜாரில் ஜியாரத் செய்து விட்டு இதே வளாகத்தில் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியாவில் இஸ்லாம் பரவியது இரண்டு வகைகளில் என்று வரலாறு கூறுகிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமது முன்னோர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றார்கள். வாள் எடுத்து போர் புரிந்து வாகை சூடிய பாதுஷாகள், ஷகின் ஷாகள், நிஜாம்கள், நவாபுகள், பரப்பிய இஸ்லாம் மார்க்கத்தை நமது முன்னோர்கள் ஏற்க

வில்லை, நமது முன்னோர்கள் வார்த்தைகள் மூலம் - நபிமார் களும், ஸஹாபாகளும், வலிமார் களும் அவர்களின் வழியில் வந்த - வாழ்ந்து வழி காட்டிய ஆன்மீக மேதைகளின் வார்த் தைகளைக் கேட்டு, அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வு முறையைப் பார்த்து நம்முன்னோர் இஸ்லாத்தை ஏற்றார் கள். இஸ்லாம் மார்க்கத்தின் அமைதித்தன்மை, சாந்தி சமாதான போக்கு, எதையும் இதய சுத்தியோடு நோக்கும், பண்பு நமது முன்னோர்களிடம் இருந்து நாம் பெற்றிருக்கிறோம்.

வாளின் வலிமையைப் பேசாமல், சுத்தசத்திய நித்திய வார்த்தையின் வலிமையை போற்றும் முஸ்லிம்களாக, இந்தியாவின் தென் கோடியான தமிழகம், கேரளம், இலங்கை, மாலத்தீவு, மலேசியா, இந்தோ னேஷியா போன்ற பகுதிகளில் இன்றைக்கும் வாழுகின் றோம். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத சிங்கங்கள் போலவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியில் அணி வகுத்து செல்லும் தீரர்கள் போலவும், தென்கிழக்கு ஆசிய முஸ்லிம்களாக நாம் இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். நம்மை உண்மையான முஸ்லிம்களாக வாழச் செய்துள்ள வலிமார் களின் வளாகங்களில் இன் றைக்கு இத்தகைய நிகழ்ச்சி கள் நடப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும். 
அன்பியாகளும், வலிமார் களும், இமாம்களும் காட்டிய பாதையில் திருக்குர்ஆன் ஒளியில் - திருநபி (ஸல்) அவர் களின் வழியில் செல்லும் இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு உண்மையான இஸ்லாமிய அடையாளங்கள் எவை? நாம் அணிந்திருக்கும் ஆடைகளா? போட்டிருக்கும் தொப்பியா? வைத்திருக்கும் தாடியா? என்றால் இவையெல்லாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங்கள் ஆகிவிடுவது இல்லை.

மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், வக்ஃபுகள், கப்ருஸ்தான்கள், தர்காகள், ஷரீஅத் சட்டங்கள், நமது வணக்க வழிபாட்டு முறைகள் போன்றவைகள்தாம் முஸ்லிம்களின் உண்மையான அடையாளங் கள் ஆகும்.

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப் பதற்குதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் இந்த பேரியக்கத்தை நமது முன் னோர்கள் உருவாக்கி தந்தி ருக்கிறார்கள்.

முஸ்லிம் லீகின் எழுச்சி

இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா, தமிழகத்தில் மட்டுமின்றி எல்லா மாநிலங்களிலும் எழுச்சி பெற்ற இயக்கமாக வளர்ந்து கொண்டி ருக்கிறது.

இளைஞர்கள், தொழிலாளி கள், மகளிர், மாணவர் என்று எல்லா தரப்பினர்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகி றார்கள். வரும் அக்டோபர் 5-ம் தேதி சென்னை பெரியார் திடலில் காலையில் மாநில முஸ்லிம் லீகின் பொதுக்குழு கூட்டமும், மாலை 3 மணி முதல் 8 மணி வரை எம்.எஸ். எஃப். - முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு - குற்றாலத்தில் நடந்த மாநாட் டுக்குப் பிறகு -நடக்கிற மாநாடாக ஏற்பாடாகியிருக்கிறது. 

தமிழகம் முழுவதிலுமி ருந்து 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் இதில் பங் கேற்கிறார்கள். திருச்சி மாவட் டத்திலிருந்து பன்னூற்றுக் கணக்கில் பங்கேற்க உள்ளார் கள் என அறியும் போது மிகுந்த மகிழ்ச் சியை தருகி றது. 

இந்திய முஸ்லிம்களாகிய நாம் நமது உண்மையான அடையாளங்களை பாதுகாப்ப தற்கே, இத்தகைய நிகழ்ச்சிகள் - மாநாடுகளையெல்லாம் நடத் துகிறோம்.

சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் தங்களின் கலாசார தனித்தன்மையை பாதுகாக்கும் முயற்சியாகவே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை வலுப்படுத்த வேண்டும் - பலப்படுத்த வேண்டும். முஸ்லிம் லீகை பலப்படுத்துவதோடு தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் முக்கியத்துவம் பெற்று செயல் பட்டுக் கொண்டிருக்கிற பிற முஸ்லிம் இயக்கங்களையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்ப டையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கருத்து இப்போது பிறந்திருக்கிறது. இத்தகையதொரு ஐக்கி யத்தை உருவாக்கிக் கொண்டு, தேசிய அளவில் உள்ள ஜன நாயக, சமயசார்பற்ற, சமூக நீதிக் கொள்கைகளை நிலை நிறுத்துகிற அரசியல் சக்திக ளுடன் இணைந்து பாடு படுதல் வருங்கால இந்தியா விற்கு வலிமையும், வளமும் சேர்ப்பதாகும் என்னும் எண்ணம் சமுதாய மக்களிடம் பரவலாகி வருகிறது.

வகுப்புக் கலவரங்களை தூண்டும் பா.ஜ.க.
இத்தகைய சிந்தனை ஏற் படுவதற்கு 26-9-2013 அன்று இதே திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி அவர்களின் பேசிய கூட்டம் மட்டுமல்ல, தேசத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. கூட்டங்களும் அதில் பேசப்படும் கருத்துக்களும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இந்திய நாடு அதன் அரசியல் சாசனப்படி ஜன நாயக நாடு - சமயசார் பற்ற நாடு - சமூக நீதியை நிலை நிறுத்தும் மக்கள் ஆட்சியில் உள்ள நாடு. இந்த நாட்டை பாரதீய ஜனதா கட்சி இந்து ராஷ்ட்ரம் என்னும் இந்துக்கள் நாடாக்க முயற்சிக்கிறது. இந்தியாவில் வாழும் முஸ்லிம் கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று அழைக்கப்பட வேண் டும் என்றால் முஸ்லிம்கள் எல் லோரும் தங்களுடைய மூதாதைகள் இந்துக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் கள்.

முஸ்லிம்களின் அடையாள மாக உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரேவிதமான சிவில் சட்டம் - பொது சிவில் சட்டம் ஒன்று தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

கஷ்மீருக்குள்ள தனி அந்தஸ்து ஒழிக்கப்பட வேண் டும் என்று பிரச்சாரம் செய்கிறார் கள். இவற்றிற்கெல்லாம் மேலாக குஜராத்தில் வகுப்பு கலவ ரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல் லப்பட்டதிலும், அஸ்ஸாமில் 5 லட்சம் முஸ்லிம்களை அகதி முகாம்களில் தங்க வைத்து வேடிக்கை பார்ப்பதிலும், இப் போது உ.பி.மாநிலம் முசாபர் நகர் கலவரத்தில் பல்லா யிரக்கணக்கான முஸ்லிம் களை ஊரை விட்டும் வெளி யேற்றி கொடுமைப் படுத்தி வருவதிலும் பி.ஜே.பி. யை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சிய டைந்து கொண்டிருக்கிறார் கள்.

முஸ்லிம்களை அடையா ளங்களே இல்லாமல் ஆக்க நினைப்பதோடு அவர்களை அழிக்கவும் முடிவு செய்திருப் பதைப் போல தொடர்ச்சியாக கலவரங்கள் தூண்டப்பட்டு வருகின்றன. கலவரத்தில் மாண்டு போன முஸ்லிம்கள், அவர்களின் பார்வையில் நாய்க் குட்டிகளாக தெரிகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்கள் நடந்துள்ளன என பத்திரிகைகள் செய்தி தருகின்றன. சென்ற வாரம் டெல்லியில் நடந்த ஒருமைப் பாட்டு கவுன்சில் கூட்டத்தில் 2013 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் நடந்து வகுப்புக் கலவரங்களின் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் பாதிக்கப் பட்டவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்னும் தகவலும் தரப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் 13 ஆயிரம் வகுப்பு கலவரங்களி லும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் - சொத்து இழந்த வர்கள் முஸ்லிம்கள் - எல்லா விதமான சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளான வர்கள் முஸ்லிம்கள். ஆனால், இவ்வளவு காலமும் இவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் அமைதி யாகவே இருந்து அரசியல் ரீதியான தீர்வுகளுக்கு குரல் கொடுத்து வருகிறது.

இன்னல்லாஹ் மகஸ் ஸாபிரீன் - நிச்சயமாக பொறு மையாளர்களுடன் இறைவன் இருக்கிறான் - என்பதில் நம் பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கள். 

தங்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடு மைகளை பற்றி உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பிய தில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமை கமிஷனுக்கு பெட்டிஷன் போட்ட தில்லை. 

ஆனால், சுதந்திர இந்தியா வில் 1984-ல் திருமதி இந்திரா காந்தி அம்மையாரை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற் காக 2 ஆயிரத்திற் கும் மேற் பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட் டனர். அந்த ஒரே ஒரு கலவரத் திற்காக நிவாரணங்கள் தரப்பட்டன. சீக்கியரான மன் மோகன்சிங் இருமுறை நாட்டின் பிரதமராக ஆக்கப்பட்டிருக் கிறார். பலரும் குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்டிருக்கி றார்கள். இவை மூலம் சீக்கிய சமுதாயம் இன்னமும் திருப் தியடையவில்லை. சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்போம் என்கிறார்கள். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக் கிறார்கள். 

திருமதி சோனியாகாந்தி மருத்துவம் செய்ய அமெ ரிக்கா சென்ற போது அவரிடம் கோர்ட் சம்மன் தரப்படுகிறது. இப்போது ஐ.நா. சபை கூட்டத் தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக் கும் கோர்ட் சம்மன் காத்தி ருக்கிறது. 

சீக்கியருக்கு எதிராக நடந்த ஒரே ஒரு கலவரத்திற்கு நியாயம் கோரி சர்வதேச அளவில் சீக்கிய சமுதாயம் வழக்கு தொடுக்கிறது. ஆனால், 13 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வகுப்பு கலவ ரங்களால் பாதிக்கப்பட்டும், இந்திய முஸ்லிம் சமுதாயம் அமைதி வழியில் - அறவழி யில் - அரசியல் ரீதியில் - நாட்டுக்கு உள்ளேயே நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். 

இதைப்பற்றி நாட்டிலுள்ள நல்லவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற வேண்டு கோளைத்தான்நாம் முன் வைக்கிறோம்.

நாட்டுப் பிரிவினையின் போது காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர் கள் கராச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாப் லியாகத் அலிகான் அவர்களிடம் விடை பெற்றார். அப்போது லியாகத் அலிகான் சொன்னார்:

இந்தியாவில் முஸ்லிம்க ளுக்கு எதிராக இந்துக்கள் செயல்பட்டால் எங்களின் உதவிகளை நீங்கள் உடனே பெற்றுக் கொள்ளலாம். என்றார். 

அதற்கு காயிதெ மில்லத் சொன்ன பதில் இதுதான்:

`நவாப் அவர்களே! பாகிஸ் தானில் உள்ள சிறுபான்மை மக்களாகிய இந்துக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் கடமையாகும். இந்தியா எங்கள் நாடு. அதில் முஸ்லிம் களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் தடுக்கவும், எங்க ளைக் காப்பாற்றி கொள்ளவும் எங்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான். அதைப் பற்றிய கவலை உங்களுக்குத் தேவை யில்லை’’ என்றார்கள்.

அதனால்தான் காயிதெ மில்லத் அவர்களை ஜிந்தா வலியுல்லாஹ் என்று சமுதாயம் போற்றியது.

அல்லாஹ்வின் பேரருள் கொண்டு இந்திய முஸ்லிம்க ளாகிய நாம் நமது அடையாளங் களை பாதுகாப்போம் - நமது கலாசார தனித்தன்மையை நிலை நிறுத்துவோம்.

இதற்கு உகந்த ஒரே ஒரு வழி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் இந்த பேரியக்கத்தை கட்டிக் காப்பதுதான். இந்தியா வின் பெருமையை உலக அரங் கில் உயர்த்தவும், இந்திய முஸ்லிம்களின் தனித்தன் மையை பாதுகாக்கவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செல்லும் பாதைதான் என்றும் வெல்லும் பாதை. -இதை வரலாறு நிச்சய மாக சொல்லும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்கள். 

வார்டு தலைவர் ஷேக் பாவாதீன் நன்றி கூறினார். மவ்லானா உமர் பாரூக் மஹலரி துஆ ஓதினார். வஜீர் குடும்பத் தினர் எல்லோருக்கும் விருந்து உபசரிப்பு செய்தனர்.