வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இருளாக்கிய வெண்மை..!

புலியங்குடி அருள் சாமுவேல்
----------------------------------------------

சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது.
..
எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது.
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது.
..
இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
..
இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது.
..
1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்?

2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்?

3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை?

4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை?
..
கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள்.
..
சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா?
..
இல்லை..இல்லவேயில்லை.
..
ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது.
..
அது –
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
..
என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன்
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!

சனி, 20 செப்டம்பர், 2014

நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் :-
காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்துஅழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ப. சிதம்பரம் எனும் திறமையாளர்

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது . எந்த சூழ்நிலையிலும் நேரம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் . விழாக்களுக்கு குறித்த நேரத்தில் வருவார் .நேர விரயம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரது நேரத்தைப் போலவே நமது நேரத்தையும் மதிப்பார். குறித்த நேரத்தில் சந்திப்பார் .காத்திருக்க வைப்பது பிடிக்காது .

வெட்டிப்பேச்சுக்கு இடம் கிடையாது . எவ்வளவு பெரிய விசயத்தையும் ஐந்து நிமிடத்தில் சொல்லிவிட முடியும் ,அப்படி முடியவில்லை என்றால் நமக்கு அவ்விசயத்தில் போதிய பரிச்சயமில்லை என்று பொருள் என்று சொல்லுவார் .

தமிழிலும் ,ஆங்கிலத்திலும் ரசிக்கத்தகக்க ஆளுமை உள்ளவர் . தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை ஒரு வார்த்தை கூட கலக்க மாட்டார் .பழந்தமிழ் இலக்கியத்தில் மிக நல்ல பரிச்சயம் உள்ளவர் .அதே போல நவீன இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர். நன்றாக எழுதக்கூடியவர்.
எதிர்கருத்துகள் மீது மரியாதை உள்ளவர் . ஒரு தலைவர் ,மிகச்சிறந்த அறிவாளி என்ற அகந்தை எப்போதும் கிடையாது . விவாதத்தில் அவர் கருத்தில் அவர் உறுதியாக இருப்பது போல் நாமும் இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் . பிறகு நாம் சொல்லியது சரி என்று உணர்ந்தால் பலபேர் முன்னிலையில் பலநாள் கழிந்த பிறகு கூட அதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் .

தானே மிகப்பெரிய அறிவாளி என்ற போதும் முக்கியமான விசயங்களில் முடிவெடுக்கும் முன் பலருடைய கருத்துக்களையும் கேட்கக் கூடியவர் . அவரிடம் தலைமுறை இடைவெளி என்பது ஒரு துளி கூட கிடையாது . ஒரு 18வயது மாணவரோடு எளிதாக ரிலேட் செய்து கொள்ளக்கூடியவர் .



வார்த்தைகளை தேவைக்கு மேல் பயன்படுத்தவே மாட்டார் . எந்த நேரத்திலும் நிதானம் இழக்க மாட்டார் . ஒரு நாளைக்கு 20மணி நேரம் உழைக்கக் கூடியவர் . அதனால் தான் மிக நெருக்கடியான நேரங்களில் உள்துறையிலும் ,நிதித்துறையிலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்தது .

ஒரு சிறு குழந்தையாக இருந்தாலும் மரியாதையாக அழைத்தே பேசுவார். அவர் அமர்ந்திருக்கும் போது எதிரில் யாரும் மரியாதை நிமித்தமாகக் கூட நின்றுகொண்டு பேசுவதை அனுமதிக்க மாட்டார். கட்டாயம் அமர்ந்து தான் பேசவேண்டும் .(அந்த நாற்காலியில் அமர்ந்து பேசுங்கள் தம்பி! ).சாதி ,மதங்களுக்கு அப்பாற்பட்டு பரந்துபட்டுச் சிந்திக்கக் கூடியவர் .

அவர் சொன்னதிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. "எனக்கு குப்பைகளை அகற்றுவதற்கான ஒரு துறையைக் கொடுத்தால் ஏன் உள்துறை கொடுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் . .உலகிலேயே மிகச்சிறந்த குப்பை அகற்றும் துறையாக அதை மாற்றுவது எப்படி என்று சிந்தித்து மாற்றுவேன் " வேறு எதைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருக்காமல் ,கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்கிற கொள்கை உடையவர் .

ஒரு நடமாடும் அறிவுக் களஞ்சியம். நவீனமான சிந்தனையுள்ள வேட்டி கட்டிய மனிதர் ! நான் தொலைவில் இருந்து நிறையக் கற்றுக்கொண்ட துரோணர் !

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவர் . உங்களுக்குள் உள்ள எழுத்தாளருக்கு இப்போதாவது ஒரு வாய்ப்புக் கொடுங்கள் !