செவ்வாய், 22 மார்ச், 2016

பிரசவ வேதனை



ஒரு பெண் தன் வயிற்றில்
கரு சுமந்திருக்கும் அந்த பத்து மாதங்களும் ஒவ்வொரு விநாடியும் திக் திக் என்று தான் ஒரு பெண்ணிற்கு கழியும் - கரு நன்கு வளர்ந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண் மல்லாக்க படுக்க கூடாது - ஒருக்கழித்து தான் படுத்திருக்க வேண்டும் என்கிற அறிவுரை வரும்- ஒரே பொசிசனில் படுத்திருக்க முடியாது என்பதால் இன்னொரு பக்கம் ஒருக்கழித்து படுக்க வேண்டு் என்று தோன்றும் - அப்பொழுது படுத்தபடியே பொசிசன் மாறக் கூடாது - தூக்கத்திலும் எழுந்து உட்கார்ந்து பிறகு தான் சாவகாசமாக மாறிப்படுக்க வேண்டும்
உட்கார்ந்து கொண்டே இருக்காதே - அதை செய் இதை செய் என்று வருகிற போகிற பார்க்கிறவங்க ஃபோன் பேசறவங்க என்று அத்தனை பேர்களும் விதவிதமாக அட்வைஸ் செய்வார்கள் - இதில் கொடுமை என்னவென்றால் - ஒருத்தர் சொன்ன அட்வைசிற்கு துளியும் சம்மந்தமிருக்காது இன்னொருவர் சொல்வது - இதை செய்வதா அதை செய்வதா என்கிற குழப்பம் தான் மிஞ்சி நிற்கும் - ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கழிக்கும் தருணங்கள் இருக்கிறதே அப்பப்பா - தெருவில் வாக்கிங் போனால் கூட அத்தனை வாகனங்களும் நம் வயிறு நோக்கி நகர்வது போலவே மனம் திக் திக் என்று அடித்துக் கொள்ளும்
சிறு வயது தொட்டது முதல் நம் தமிழ் சினிமாவில் கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் வில்லன்கள் எத்துவது போலவும் - தடுக்கி விழுந்து கரு கலைவது போலவும் காட்சிகள் பார்த்து பார்த்து புத்தியில் ஏற்றியதன் பின்விளைவு எல்லாம் நாம் கருவுற்ற காலத்தில் தான் மனதிற்குள் அரங்கேறும்
ஆண்களுக்கும் கருவுறாத பெண்களுக்கும் இந்த கர்ப்பிணி அனுபவத்தை வார்த்தைகளால் சொல்லி உணரவைக்கவே முடியாது - வேண்டுமானால் ஒரு வார கோழிக்குஞ்சை எடுத்து உள்ளங்கையில் வைத்துப் பொத்திப் பாருங்கள் - அந்த குஞ்சு மென்மையாக திமிறும் போது இரண்டு உள்ளங்கைகளுள்ளும் ஒரு வித சிலிர்ப்பும் பரவசமும் தோன்றும் - அதை விட ஆயிரம் மடங்கு பரவசம் கருவுற்ற பெண்ணின் வயிற்றுனுள் அனுதினம் நடக்கும்
ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்கப் போகிறோம் என்கிற அந்த உணர்வு அவளை கடவுள் ரேஞ்சிற்கு கொண்டு சென்று சந்தோஸப்படவும் வைக்கும் - கருவிற்கு நம் அஜாக்கிரதையால் எதுவும் ஆகிவிடுமோ என்கிற உணர்வு அனுதினமும் கொன்று வதைக்கும் - மொத்தத்தில் அந்த ஒன்பது மாதங்களும் கடப்பதே இன்னவென்று சொல்லமுடியாத மனஉளைச்சலோடு தான்
ஆனால் பிரசவ வேதனை வந்து - உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை நரம்புகள் எல்லாம் இழுத்துப்பிடித்தாற்போல் ஒரு வேதனை வருமே - அதற்கு மட்டும் ஆண்களுக்கு டெமோ மூலம் தெரிந்து கொள்ள விரும்பினால் - ஒவ்வொரு ஆணும் சாகத் துணிந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்
பனிக்குடம் உடைந்து - மருத்துவமனை பிரசவ டேபிளில் படுத்திருக்கும் போது நர்சுகள் சொல்வது காதிலேயே விழாது - அந்த நொடியே என் உயிரை எடுத்துக்கோடா கடவுளே என்று தான் கிட்டத்தட்ட எல்லா உள்ளங்களும் வேண்டியிருக்கும்
வாயில் அதிக சூடுடன் காபியோ டீயோ தெரியால் ஊற்றி விட்டால் - உடனே முழுங்கவும் முடியாமல் துப்பவும் தோன்றாமல் ஒரு அரைவிநாடி குழம்பி - அந்தக்குழப்பத்திலேயே சிலர் ஓரிரு நொடிகள் தாமதமாகி கடைசியில் குடிக்கவோ துப்பவோ ஏதோ ஒன்று செய்துவிடுவர் - உங்களுக்கு அந்த அனுபவம் இருந்தால் அதை இதோடு ஓரளவு ஓப்பிடலாம் - அந்த இரண்டு விநாடிகளுக்கே நாம் அத்தனை துடி துடித்தால் பிரசவ வலி வந்து குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் அதிக பட்சம் ஓரிருநாட்கள் வரை கூட வலி பொறுத்திருக்க வேண்டிய சூழ்நிலை கர்ப்பிணிகளுக்கு
ஆனால் கடைசியில்
குழந்தை தலை வெளிவரும்போது வரும் அந்த உச்ச கட்ச ராட்சஷ வலியைக் கடந்து - தலைக்கு வெளியே வந்த பின் - அடுத்தடுத்த விநாடிகளில் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டா போல் ஓரிரு நிமிடங்களுக்குள் வயிற்றில் இருந்த அத்தனை கழிவும் ஒரு காட்டாறு போல் கால் வழியே கடந்து வெளியே போனபின் ஒரு அந்த பிள்ளைத்தாச்சியின் உடலில் ஒருவித சுகம் வந்து நிற்குமே
அடடடா - வார்த்தைகளேயில்லை - படுத்தபடியயே வானில் ஒட்டுமொத்த உடலும் சொர்க்கத்தில் சிறகுகளை ஆட்டாமல் மிதந்து பறந்து செல்வது போல் இருக்கும்
அவ்வளவு ஒரு சுகம் - அதற்கு ஈடு இணையே இல்லை
அந்த சுகத்தை எப்பேர்ப்பட்ட கொம்பனாயிருந்தாலும் ஆணா பொறந்திருந்தா அனுபவிக்க முடியாது - பெண்ணா பிறந்திருந்தாலும் - கருவுற்று - அதுவும் சிசேரியன் இல்லாமல் பெற்று அதை உணர ஒரு கொடுபிப்னை நிச்சயம் வேண்டும்
-----------------------------
இன்று உச்சக்கட்ட வலி பிரசவம்... ஆனாலும் அதை சுக'ப்பிரசவம்னுதான் சொல்றோம்!
என்று நம்ம Kaadhal Sugumar பதிவு போட்டிருக்காங்க - அவருக்கு என் பதில் கமெண்ட் ஐ தான் இங்கே விரிவாக எழுதியிருக்கேன்
----------------
கிரிஸ் மணி பதிலுரை....
சகோதரி Sivakamy Sooraj அவர்களின் பதிவிற்கு என் பின்னூட்டம். நான் மிகவும் நுட்பமாக எழுதவில்லை. இருந்தாலும் epidural முறை சகோதரிகளைப் போய்ச்சேரும்.
இக்காலத்தில் epidural என்ற முறைப்படி முதுகில் தண்டு வடத்தின் ஒரு பகுதியில் ஒரு சில milli meter அளவு துளை செய்து ஒரு தந்துகி (capillary tube) வழியே இடுப்பிலிருந்துகால்வரை மரத்துப் போகும் மருந்தை சொட்டுச் சொட்டாக செலுத்தும் முறை உள்ளது. இதனால் பல மணி நேர வலியைத் தவிர்த்து குழந்தை வெளிவர ஆரம்பித்தவுடன் மரத்துப் போகும் மருந்தை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால் இறுதிக்கட்டத்தில் ஒரு இருபது நிமிடம் தாய் வலியை உணர்ந்து உந்தித்தள்ளி தான் ஆக வேண்டும் கடும் வலியோடு!
ஓரளவு குழந்தை வெளிவர மருத்துவர் கத்தியால் பிறப்பு வழியை சிறிது அறுத்து(Episiotomy) உதவுவார். இரத்தம் பீறிப்பாயும்! சேதமடைந்த தசைத் துணுக்குகள் துண்டங்கள் சரிந்து விழும்! அவ்வளவு இரத்தத்தை நாம் வாழ்நாளில் பார்த்திருக்க முடியாது! இக்காட்சியைப் பார்க்க திடமான மனதும் அளவற்ற அன்பும் வேண்டும்! அன்றுதான் பெண் போகப் பொருளல்ல என்பதன் practical பயிற்சி எனலாம்! இன்னும் எவ்வளவோ சொல்லலாம்! அமெரிக்கா போன்ற நாடுகளில் காணொளி எடுக்க அனுமதி உண்டு. எப்போதாவது மனைவி " ஒரு தடவ போட்டுக் காட்டுங்க !" என்பார். " வேண்டாம்மா !"என மறுத்துவிடுவேன்! Epidural முறை கத்துக்குட்டி மருத்துவர்களிடம் செய்து கொள்ளாதீர்கள் சகோதரிகளே! சொதப்பினால் தண்டு வடத்தில் பிரச்சனை வரும்.

புதன், 2 மார்ச், 2016

காஞ்சிப் பெரியவருக்கு ஒரே சந்தோஷம் – இஸ்மாயிலைப் பார்த்ததில்...!


யார் இந்த இஸ்மாயில்..?
சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் இந்த மு. மு. இஸ்மாயில்..!
இஸ்லாமியராக இருந்தபோதிலும் கம்ப ராமாயணத்தில் ஈடுபாடு அதிகம் கொண்டிருந்தவர் ..!
சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கி ஆரம்ப நாள் முதல் , தன் அந்திமக் காலம்வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்தவர்..!
“கம்பன் கண்ட சமரசம்” , “கம்பன் கண்ட ராமன்” இன்னும் பல இலக்கிய நூல்களை இனிக்க இனிக்க எழுதியவர்..!
அந்த கம்பனின் ரசிகரான நீதிபதி இஸ்மாயிலும் , காஞ்சிப் பெரியவரும் ஒருமுறை சந்தித்து , சந்தோஷமாக உரையாடினார்கள்..!
இலக்கியம்... கம்பராமாயணம்.... இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர்...!
குறிப்பாக , நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற புத்தகத்தைப் பற்றி..!
அந்தப் புத்தகத்தில் , “ வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது சரிதான்..” என திட்டவட்டமாக , தீர்ப்பளித்து எழுதி இருந்தாராம் நீதிபதி இஸ்மாயில் ..!
அதைக் குறிப்பிட்டு காஞ்சிப் பெரியவர் , “ஒரு தலைமை நீதிபதியான , நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள் ” என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்..!
இருவரும் விடை பெறும் நேரம்..!
இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்..!
நீதிபதி விடை பெற்றுப் புறப்படும்போது...காஞ்சிப் பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் ..?
இந்துக்கள் என்றால் விபூதி , குங்குமம் கொடுப்பார் ..!
ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு , இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும்....?
இதோ... இஸ்மாயில் விடை பெற எழுந்து விட்டார்...!
அனைவரும் ஆவலோடு உற்று நோக்க....
காஞ்சிப் பெரியவர் ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து , இஸ்மாயிலைப் பார்த்து “இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது... நம் இரு மதத்தினருக்கும் பொதுவான அம்சம் இந்த சந்தனம்...! உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு இருக்கிறது...எங்கள் கோவில்களிலும் சந்தனம் இருக்கிறது... இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள்” என்று வழியனுப்பி வைக்க , சந்தனத்தோடும் , சந்தோஷத்தோடும் புறப்பட்டுச் சென்றாராம் நீதிபதி எம்.எம்.இஸ்மாயில்..!
# படிக்கும்போதே சந்தனமாக மணக்கிறது இந்த சந்திப்பு...!
# அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்....!
இது போன்ற பெரியவர்கள் இருக்க இருக்க
இந் நாட்டில் சமாதானம் இருக்கும்...!