வியாழன், 15 ஜூன், 2017

கலைஞர் - ஜெயலலிதா முஸ்லிக்களுக்கு என்ன செய்தார்கள்

என் பாசத்துக்குரிய தாஜ் அண்ணே...
என் கேள்விக்கு இத்தனை விளக்கமாக பதில் தருவீர்கள் என்று எண்ணவில்லை...
திகைக்க வைத்து விட்டீர்கள்.
சின்னப்பிள்ளைக்கும் புரியும் வண்ணம் நிஜங்களை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் மறுக்க முடியாது.
தேசத்தின் அதிக சம்பளம் பெறும் முதலாளி கலாநிதி மாறன் என்ற நேற்றைய நிஜத்தையும் சேர்த்து.!
இருந்தாலும் சில நியாயங்களைச் சொல்ல முயற்சிக்கிறேன்.
ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற பாடலைக் கேட்டதிலிருந்தே என் தலைமுறை திமுகவின் வசமாகிப்போனது. என் தந்தையின் காலமோ பெரியாரால் ஈர்க்கப்பட்டது. பகுத்தறிவும் இஸ்லாத்தின் மீதான அண்ணாவின் பரிவும் முஸ்லிம்களை அவர்கள் பால் ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
அண்ணாவின் காலத்திற்கு பின் கலைஞர் முதல்வரானார்.
அதுவரை சரியாக போய்க் கொண்டிருந்த கப்பலை திசை திருப்பியதில் எம்ஜிஆருக்கும் பங்கு உண்டு. இந்திராவின் கட்டளைக்கு பயந்து திமுகவை உடைத்த பெருமை எம்ஜிஆர் என்ற சினிமா ஹீரோவுக்கு உண்டு.
அதுவரை திமுகவை மட்டுமே ஆதரித்த தமிழக முஸ்லிம்கள் அதிமுகவையும் ஆதரிக்க ஆரம்பித்தார்கள். முதன் முதலில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் லீக்கை உடைத்தவர் எம்ஜிஆர்தான்.
முழக்கம் ஷெய்குத்தம்பியை வைத்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற லெட்டர்பேடு கட்சியை ஆரம்பித்தார். அதன் பிறகுதான் சமது லத்தீப் பிளவு ஏற்பட்டது.
அதுமட்டுமா ?
முஸ்லிம்களுக்கு முஸ்லிம்லீக் இருப்பதுபோல் இந்துக்களுக்கு " இந்து முன்னணி " ஏன் இருக்கக் கூடாது என்று மேலப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பேசி தாணுலிங்க நாடாரை வளர்த்து விட்டவர் எம்ஜிஆர்.
அதன் பிறகு குமரிமாவட்டத்தில் மண்டைக்காடு கலவரம் நடந்ததும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதும் நாடறிந்த விஷயம்.
இன்று ராமகோபாலன் தலைமையிலான இந்து முன்னணி முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக செயல் படுகிறது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதற்கு ஆகாரம் போட்டு கொம்பு சீவி விட்டவர் கொடை வள்ளல் எம்ஜிஆர்தான்.
திமுக ஆட்சியிலும் எம்ஜிஆர் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்தது.
கருணாநிதி சாதிக் பாட்சாவை நன்றாகத்தான் வைத்திருந்தார். சாதிக் நேர்மையானவர்.
அரசு அனுகூலங்களுக்கு ஆசைப்படாதவர். அதனாலேயே அவரது வாரிசுகள் கஷ்டப்பட்டார்கள். பொதுவாக அரசியலில் கொடிகட்டிப் பறக்கும்போதே தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலி அரசியல்வாதிகளுக்கு அழகு. சாதிக் அதற்கு விதி விலக்கு.அதனால் அவர் வாரிசுகள் சிரமத்திற்கு ஆளானதில் வியப்பொன்றுமில்லை.
நாகூர் ஹனிபா அண்ணனை எம்.எல்.சி ஆகவும் வக்ப் வாரியத் தலைவராகவும் நியமித்தவர் கலைஞர். அதுபோக ராணிப்பேட்டை தொகுதியிலும் சீட் கொடுத்தார். ஹனிபா அண்ணனின் இப்போதைய கஷ்டங்களுக்கு யார் காரணம் என்பது தெரியாது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அமைந்த அம்மையார் ஆட்சியில்தான் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
ராஜா முஹம்மது என்பவர் அமைச்சராக இருந்து ...அமைச்சராக இல்லாமல் இருந்து பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முஸ்லிம் பிரதிநிதித்துவமே இல்லாத மந்திரிசபையாக அம்மையார் மந்திரிசபை இருந்தது. முஸ்லிம்களுக்கென்று எந்தச் சலுகையும் அவரது ஆட்சியில் கிடைக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது கோவைச் சிறையிலிருந்த அப்துல் நாசர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கலாம் என்று சொன்னதற்காக அன்றைய உள்துறைச் செயலாளராக இருந்த முனீர்ஹோதா என்ற
ஐ.எ.எஸ். அதிகாரியின் மீது முஸ்லிம் தீவிரவாதிக்கு உதவி செய்தவர்,
அவர்களோடு தொடர்புடைய அதிகாரி என்று பழிசுமத்தி பணி நீக்கம் செய்தவர் ஜெயா.
அந்த பணி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்து பணி நியமன ஆணை பெற்று வந்த பிறகும் முனீர்ஹோதாவை பணியில் சேர்க்காதவரும் ஜெயாதான்.
கருணாநிதிக்கு எதிராக பி.ஜெய்னுலாப்தீன் என்பவரை தூண்டி விட்டு முதல்வர் வீடு முற்றுகை, கவர்னர் மாளிகை முற்றுகை, அண்ணாசாலையில் தொழுகை போன்ற கூத்துகளை நடத்தியவரும் இவர்தான்.
தேர்தல் நேரத்தில் ஊரூராகப்போய் அம்மாவை ஆதரித்து பிஜேயும் பிரச்சாரம் செய்தார்.
ஆனால் ...
குஜராத் முதல்வராக மோடி வெற்றி பெற்றதும் அவரது பதவி ஏற்பு விழாவில் ஜெயா கலந்து கொண்டார். அவருக்கு தனது தோட்டத்தில் விருந்தும் கொடுத்தார். தன்னை ஆதரித்த முஸ்லிம்களின் முதுகிலும் குத்தினார். இதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான அம்மையாரின் நடவடிக்கைகளுக்கு சின்னச் சின்ன ஆதாரங்கள்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயாவால் பழிவாங்கப்பட்ட முனீர்ஹோதாவுக்கு முதல்வரின் தனிச் செயலாளர் என்ற அந்தஸ்தை கலைஞர் வழங்கினார். மற்றொரு ஐ.எ.எஸ். அதிகாரியான அலாவுதீனுக்கும் சிறந்த மரியாதை கொடுக்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின் செயல் அதிகாரியே அவர்தான். ஜமாலுதீன் என்பவருக்கும் நல்ல பொறுப்பு வழங்கப்பட்டது கலைஞரின் ஆட்சிகாலத்தில்.
எல்லாவற்றிற்கும் மேலாக " இட ஒதுக்கீடு " கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. " தருவேன் " என்று சொல்லி ஆட்சிக்கு வந்ததும் அவர்களை ஏமாற்றியவர் அம்மையார். கலைஞர் வந்ததும் 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கினார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதையே எதிர்த்தவர் ஜெயா. தமிழ் நாட்டிலும் எதிர்த்தார். அதையும் மீறித்தான் கலைஞர் கொடுத்தார்.
இன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் மருத்துவமும் பொறியியலும் படிப்பதை சமுதாயம் கண்டு வருகிறது.
பல முஸ்லிம்களுக்கு அரசு வேலை கிடைத்து சந்தோசமாக இருக்கிறார்கள். இதெல்லாம் திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள்.
கழிந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரித்துத் தருவேன் என்ற உறுதியில்லாத அவரது உறுதி மொழியை ஏற்று அரசியல் சந்தர்ப்பவாதம் செய்த தமுமுக இன்று அதிமுக கூட்டணியை விட்டு விலகி இருக்கிறது.
இது அரசியலில் திமுகவும் அதிமுகவும் நடந்து கொண்ட முறைகள்.
நான் யாரையும் நியாயப்படுத்த விரும்பவில்லை.
பிஜேபியோடு கலைஞர் கூட்டணி வைத்தது குற்றம்..குற்றம்..குற்றமே...
அதுபோல் குஜராத் கலவரத்தை கண்டு கொள்ளாமல் இருந்ததும் குற்றமே...
ஆனால்...
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு பிஜேபி உடனான திமுகவின் உறவு தொடரவில்லை. பல சந்தர்ப்பங்களில் இந்துத்துவாவை பகிரங்கமாக எதிர்த்தும் முஸ்லிம்களை ஆதரித்தும் குரல் எழுப்பிய கலைஞரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
அதே நேரம் மோடியுடனான அதிமுகவின் நெருக்கம் முஸ்லிம்களுக்கு வெறுப்பூட்டக்கூடியது. ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தக் காரணங்களால் ...
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றாலும் இந்த தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு கட்சிகளுக்கே எனது ஆதரவு என்பதில் மற்ற முஸ்லிம்களைப்போலவே நானும் உறுதியாக இருக்கிறேன்.
மற்றபடி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் ஊழல் மற்றும் வாரிசு அரசியல் உட்பட பலவும் இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளுக்கும் பொதுவானதுதான். எந்த கட்சியும் யோக்கியமில்லை. அதில் திமுகவை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
இறுதியாக...
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஊழல், வாரிசு அரசியல் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் பிஜேபியின் மதவாத அரசியலை முறியடிப்பதுதான் இப்போதைய ஒரே நோக்கம். அதற்காக பிஜேபியின் மாற்று சக்திகளை அவர்கள் ஆதரிப்பதில் தப்பே இல்லை. மதவாதம் ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு நெடிய விளக்கம் தர வேண்டும். அது இன்னொரு பதிவில் தருகிறேன்.. மிக மிக ஆபத்தான விளைவுகளைக் கொண்டது அது. அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இந்தத் தேர்தலில் ஓட்டுப்போடாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலை உங்கள் சுதந்திர முடிவு. அதில் கருத்துச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை என்றாலும் ஓட்டே போடாமல் ஜனநாயக் கடமையை நிறைவேற்றாமல் நாம் யாரையும் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.
என் பதிலும் கூடுதலாகி விட்டது... சிரமத்திற்கு மன்னிக்கவும்... கூடுதல் விளக்கங்கள் கேட்டால் தர முயற்சிக்கிறேன்...
இன்ஷா அல்லாஹ்!

அபுஹாஸிமா எழுதியது. 
அண்ணன் Taj Deen
அவர்களுக்கு 2013 ல் முகநூலில்
எழுதிய ஒரு விளக்கம்.