அற்ப உலகம் இந்த பாவியை உங்களை விட்டும் பாரமுகமாக்கியதும் ஏனோ
வசந்த காலத்தில் கண்ணீர் சிந்தும் விழிகளோடு உங்களை புகழ்ந்த என் நாவு, இன்று தாங்க முடியா வேதனை தரும் உள்ளத்தோடு யா ரசூலுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் என்று கூறி அழுகிறது
வசந்த காலத்தில் உங்கள் கருணையினால் அமுத மழையில் நனைந்த நான், இன்றோ தாங்க முடியா வேதனைகளோடு கண்ணீர் மழையில் நனைகிறேன்.
கவலைகள் என்னும் தலையணையில் படுத்து இரவுப்பகலாக நான் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறேன்
நான் சிந்திய கண்ணீர் துளிகளில் எதாவது ஒரு துளி உங்கள் பாதம் நனைத்து என் தேவையை உங்களிடம் சொல்லாதா...
பாவங்கள் என்னும் மேகங்கள் என்னை சூழ்ந்து கொண்டபோது
கருமை கொண்ட என் உள்ளம், உங்களை மட்டும், உங்கள் அன்பை மட்டும் நம்பி வாழ்ந்தது.
எந்த நன்மைகளும் இன்றி அனாதையாக என் ஆத்மா கலங்கியபோது
என்னை என் நேசர் கரம் பிடித்து காப்பாற்றுவார் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டது
உயர இருந்து தாழ்வாக பாயும் அருவி போல் என் மீது சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன.
பக்தி மார்க்கத்திலே பரம கோழையான நான் தாங்க முடியாமல் தடுமாறி விழுகிறேன்
கரம் பிடித்து என்னை தூக்கி விடுங்கள் என் நாயகமே
எஜமானிடம் உணவு தேடி நிற்கும் நாய், அவர் வீட்டு வாசலில் காத்து நிற்பதை போல்
என் எஜமானரே, உங்களின் நாயாகிய நான் உங்கள் அன்புக்காக காத்து நிற்கிறேன்.
என்னை விட்டும் உங்கள் அழகு திருமுகத்தை திருப்பி விடாதீர்கள் என் நாயகமே.
உங்களை அன்றி என்னை சேர்த்து அணைப்பார் எனக்கு வேறு யாருமில்லை.
உங்களை தவிர இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே தெரியாது...
எனக்கு எல்லாமே நீங்கள்தான்.