புதன், 3 ஆகஸ்ட், 2011

நோன்பு! தமிழக மக்களிடம் நடைமுறையாவது எப்போது?- கே.எம்.கே.

நோன்பு, மனித உடலுக்குப் புனிதத் தன்மையைத் தருகிறது.


நோன்பு, மனித உள்ளத்துக்குத் தூய்மையைத் தருகிறது.

பொதுவாக, நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை பயக்கிறது.

அதற்கும் மேலாக, நோன்பு, மனித ஆன்மாவின் அகமியத்தை உணரச் செய்கிறது.

மனித ஆன்மா, முதல் மனிதர் ஆதம் அவர்களுக்கு இறைவன் தன்புறத்திலிருந்துதந்தது; மண்ணால் படைத்து, அம் மனிதனுக்கு இறைவன் தன் ரூஹ் - ஆன்மாவிலிருந்து ஊதினான். மண்ணுடம்பு, உயிர்பெற்று எழுந்தது; இறைவனுக்குப் புகழ்பா நன்றி செலுத்தியது.

முதல் மனிதரில் ஊதப்பெற்று, அவருள்ளே இருந்த ஆத்மா, அம்முதல் மனிதரில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஹவ்வா என்னும் முதல் மனுஷியிடத்திலும் வந்தது என்பதுதானே சாத்தியம்! முதல் மனிதனுக்கும், முதல் மனுஷிக்கும் பிறந்த ஒவ்வொரு மனிதப் பிறவியிடத்திலும் அந்த ஆத்மா தொடர்கிறது என்பதுதானே சத்தியம்! மூலப் பெற்றோரான ஆதம் - ஹவ்வா இருவரின் வழித் தோன்றல்களாக உலகில் இன்றைக்குப் பல கோடியாகப் பல்கிப் பெருகியுள்ள மனிட உயிர்கள் அனைத்திலும் அந்த மூலமனிதரின் ஆத்மாதன் தொடர்கிறது என்பதுதானே தத்துவம்!

அதனால்தான் நோன்பின் மாண்பைக் குறித்து வந்துள்ள இறைவாக்கு கூறுகிறது:

`அஸ் ஸௌமு லீ; வஅந அஜ்ஜா பிஹி�

நோன்பு எனக்காக; அதன் சன்மானம் நானே�

ஆம்! இறைவனின் அருளைப் புரிந்து, அறிந்து, அதனுடன் ஒன்றிக்கும் அற்புதத்தை நோன்பு மூலமே பெற முடியும்! நோன்பின் மகத்துவத்துக்கு ஈடு எதுவும் இல்லை எனலாம்! அதனால்தான் போலும் திருவள்ளுவர் கூறினார்:

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்; பலர் நோலா தவர்��.

உலகத்தில் நோன்பு நோற்பவர் சிலராகவும், நோன்பை நோற்காதவர் பலராகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் வறுமையில் வாடுவோர் கூட்டம் பெருகியிருக்கிறது என்று திருவள்ளுவர் கூறியதை நேற்றைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது! படித்திருப்பீர்கள்! நோன்பின் மாட்சிமை பற்றிச் சங்க இலக்கியமும் பேசுகிறது. இன்றையத் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள சொற்கள்:

தொழுகை, பள்ளிவாசல், நோன்பு போன்றவை சங்க காலத்துக்குச் சொந்தமானவை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கள், இன்றைக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையில் பழக்கத்தில் உள்ளவையாக மாறியுள்ளன.

நோன்பு என்னும் அழகிய சொல் பல சங்க இலக்கிய நூற்களில் இடம் பெற்றதாக இருக்கிறது.

நோன்பு இருப்பவர் ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் நோன்பி என்று அழைக்கப் பெற்றுள்ளனர்.

நற்றிணை என்னும் சங்க நூலில், `மழை பெய்தலால் நனைந்த நோன்பிகள் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முடித்து உணவு உண்ண குந்தியிருப்பது போலத் தினையை அடக்கிய மந்திக்குரங்கு குந்தியிருந்தது� என்று பேசப்படுகிறது.

நோன்பு திறப்பதற்கு நோன்பிகள் பள்ளிவாசலில் வரிசையாகக் குந்தியிருப்பதுபோல, அந்தக் காலத்து நோன்பிகளும் குந்தியிருந்தார்கள் என்பதையே இந்த நற்றிணைப் பாடல் அறிவிக்கிறது.

நோன்பு, தமிழ்ச்சொல்! நோன்பிருந்தவர்கள் அன்றையத் தமிழர்கள்! ஆனால், இன்றைக்கு அதே தமிழ்ச்சொல் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே இருக்கிறது! அந்தச் சொல்லுக்குரிய செயல்பாடும் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே இருக்கிறது! முஸ்லிம் தமிழர்களிடத்தில் தொடர்கின்ற நோன்பு முழுத் தமிழ்ச்சமுதாயத்திலும் எப்பொழுது தோன்றும்? என்று தொடரும்? இதுதான் இன்றைக்குள்ள கேள்வி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக