-ஸ்ரீலங்காவிலிருந்து
பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்
‘இலக்கியங்களால் இதயங்களை இணைப்போம்’ என்ற தொனிப்பொருள் வாசகத்தோடு அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாடு - 2014 பெப்ரவரி 14,15,16களில் கும்பகோணம் நகரில் இனிதே நடந்து முடிவுற்றது. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் எந்த நாட்டில் நடந்தாலும் இலக்கிய உலகிலும் பண்பாட்டு மரபுகளிலும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் செல்வாக்குகள் பற்றி நாம் மீளாய்வு செய்வதன் மூலம் அடுத்த எமது திட்டங்களை இன்னும் வலிமையானதாகவும் பயனுள்ளதாகவும் கட்டியெழுப்ப முடியும்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் ஒரு தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை என்ற குறைபாடும் மாநாட்டு முடிவுகள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குறைபாடும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். மாநாடுகளுக்கிடையிலான இடைவெளி காலவரையறையின்றி நீடிக்கும் போது மாநாடுகளினால் எதிர்பார்க்ப்படும் பலன் நிறைவடைவதில்லை. எனினும் கும்பகோண மாநாடு இந்த குறைபாடுகளுக்கு பதில் தரக் கூடிய விதத்திலும் முஸ்லிம் தமிழ் இலக்கிய மாநாட்டு வரிசையில் கவனயீர்ப்பைப் பெறத்தக்க மாநாடு என்று கூறக் கூடிய விதத்திலும் - இம்மாநாட்டு வரிசைக்கு - சிறப்புச் சேர்த்திருப்பதாகக் கருதலாம்.
இன்னொரு வகையில் நோக்கும் போது மாநாட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்ட கும்பகோணம் நகரம் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரது அபிமானத்தையும் பெற்றுக் கொண்டது என்பதோடு அங்கு வாழும் முஸ்லிம்களின் கல்வி, பண்பாடு, விருந்தோம்பல் கடந்த சில தசாப்தங்களாக கும்பகோணம் மக்கள் பெற்று வரும் பல்துறை வளர்ச்சி என்பவை எல்லோரது அவதானத்தையும் கவரத்தக்கதாக அமைந்திருந்தது மற்றொரு சிறப்பம்சமாகும்.
கும்பகோணத்திற்கான எமது பிரயாணம் 13ம் திகதி ஆரம்பமானது. மாலையில் திருச்சி நகரை சென்றடைந்த போது இலங்கைக் குழுவினரையும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வருகை தர இருந்த குழுவினரையும் வரவேற்பதற்கு மாநாட்டு அங்கத்தவரகள் சிலர் காத்திருந்தனர். மாலை 5 மணியளவில் எமது வாகனம் திருச்சியில் இருந்து கும்பகோணம் நோக்கிப் புறப்பட்டது. கும்பகோண மாநாட்டு குழுவினரின் அன்பும் உபசாரமும் திருச்சி விமான நிலையத்தில் இருந்தே ஆரம்பமாகியதை எங்களால் நன்றாக அவதானிக்க முடிந்தது.
தி.மு.க வின் புதிய தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமையில் மாநில மாநாடு மறுநாள் நடக்க இருந்ததால் திருச்சி நகரம் ஒரு பரபரப்பான கட்சிக் கொண்டாட்ட சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. ஆயிரக்கணக்கான தி.மு.க கொடிகளும் போஸ்டர்களும் பதாதைகளும் நகர் முழுக்க நிறைந்திருந்தன. இரவூ 7.30 மணியளவில் தஞ்சாவூரைக் கடந்து கும்பகோணத்தை அடைந்தோம்.
அங்கு சென்ற வெளிநாட்டுக் குழுவினரை பேராசிரியர் அப்துஸ்ஸமது தலைமையிலான இலக்கியக் கழகக் குழுவினரும் மாநாட்டு அனுசரணை அமைப்பான கும்பகோண கிஸ்வா அங்கத்தவர்களும் அன்போடு வரவேற்று சிறந்த உபசரிப்பை வழங்கினர். அன்றிரவு வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கான விருந்துபசாரம் 9 மணியளவில் ஆரம்பமாகியது. விருந்துபசாரம் நடைபெற்ற போது கிஸ்வா அமைப்பைப் பற்றியும் இலக்கியக்கழக மாநாட்டு நடவடிக்கைள் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது. ஊர்த்தலைவர்களும் பிரமுகர்களும் உலமாக்களும் கதீப்மார்களும் அந்த விருந்துபசார வைபவத்தில் கலந்து கொண்டனர். மாநாட்டுக் குழுவினர் ஒவ்வொருவராக விசாரித்து தமது அன்பையும் பரிவையும் விருந்தோம்பல் உணர்வையும் வெளிப்படுத்துவதில் உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
மாநில மாநாடாக ஆரம்பித்த எட்டாவது இலக்கிய மாநாடு எவ்வாறு அனைத்துலக இலக்கிய மாநாடாக பரிணமித்தது என்பது விருந்துபசார ஒன்று கூடலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இருக்கின்ற வசதி வளங்களுக்கு ஏற்ற விதத்திலும் மாநாட்டின் முக்கிய பணிகள் சரிவர நிறைவேறக்கூடிய விதத்திலும் திட்டமிட்டு இந்த இலக்கிய மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று எமக்கு தெரிவிக்கப்பட்டது. கவிக்கோ அப்துர் ரஹ்மானும் பேராசிரியர் அப்துஸ்ஸமதும் பேராசிரியர் எம். நஜிமுத்தீனும் அல்ஹாஜ் எஸ்.எஸ். ஷாஜஹானும் எல்லோரையும் வரவேற்று 3 நாள் நிகழ்வூகளைப் பற்றியும் மாநாட்டின் நோக்கங்களைப் பற்றியும் விளக்கப்படுத்தினர். கிஸ்வா அமைப்பு கும்பகோணத்தில் நடத்திவருகின்ற பொதுநல சேவைகள் பற்றியும் கல்வித் தொண்டுகள் பற்றியும் கிஸ்வா அமைப்பின் பிரமுகர்கள் சில விளக்கங்களை வழங்கினர். அதன் பின்னர் ஒரு பெரிய விருந்துபசாரம் காத்திருந்தது. இவ்வாறுதான்13ம் திகதி நிறைவடைந்தது.
கும்பகோணம் எப்படிப்பட்ட நகரம் என்பது பற்றி நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை. விமானத்தில் வந்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் அது ஒரு சிறிய நகரம் அல்லது ஒரு பெரிய கிராமம் என்று கூறிக் கொண்டிருந்ததை நான் அவதானித்தேன். ஆனால் நேரில் பார்த்த போது கும்பகோணம் தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைந்துவரும் நகரங்களில் ஒன்று என்பது தெளிவாகத் தெரிந்தது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கும்பகோணம் கோயில்களுக்கு பேர்போன நகரம். எந்தப் பக்கம் திரும்பினாலும் வானத்தைத் தொடுவது போல் நிமிர்ந்து நிற்கும் கோயில்களும் அதைச் சூழ பரந்து கிடக்கும் குளங்களும் கும்பகோணத்தின் தவிர்க்க முடியாத பிரதான அடையாளங்களாகும்.
இதற்கிடையில் அங்காங்கே பல பள்ளிவாசல்கள் கும்பகோணத்தில் முஸ்லிம்களின் இருப்பையும் செல்வாக்கையும் எடுத்துக் காட்டுவது போல் விளங்குகின்றன. மக்கள் தொகையில் இரண்டாவதாக முஸ்லிம்களும் அதற்கு அடுத்தவர்களாக கிறிஸ்த்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். உருது மொழி பேசும் முஸ்லிம்களும் இங்கு வாழ்கின்றனர். 14ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை ஹனபி பள்ளிவாசல் ஒன்றில் நிறைவேற்றினோம். காலையில் இருந்து விருந்துபசாரங்களுக்கு குறைவே இருக்கவில்லை. பழகுவது வந்தவர்களை ஆதரிப்பது என்ற விடயங்களில் எந்தக் குறையும் நிகழ்ந்து விடக்கூடாது என்று மிகுந்த கவனத்தோடு மாநாட்டு அமைப்பாளர்கள் நடந்து கொண்டனர். அத்துடன் இந்த விருந்துபசார நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஏனைய கும்பகோண மக்களிடத்திலும் ஒரு பணிவையும் பண்பாட்டையும் அவதானிக்க முடிந்தது.
ஒரு ஊரை அல்லது நகரை மையப்படுத்தியதாக பண்பாட்டு மாநாடுகள் நடக்கும் போது அந்த ஊரின் வாசமும் வளமும் ஒத்துழைப்பும் விரைவாக எமது கவனத்திற்கு வந்து சேர்கின்றன. பொதுவாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் என்ற தலைப்பில் பெரிய அளவில் மாநாடுகள் நடத்தப்படும் போது தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசிய மக்களிடத்திலும் இலக்கியாவதிகள் எழுத்ததாளர்கள் மத்தியிலும் ஏன் அரசியல்வாதிகள் மத்தியிலும் இனந்தெரியாத ஆர்வமும் குதூகலமும் ஒன்றிணைந்து கொள்கின்றன. எவ்வளவு பணம் செலவு செய்தும் இந்த மாநாட்டு நிகழ்வூகளை பார்ப்பதற்கு எல்லோருக்குமே ஒரு ஆர்வம் இருக்கின்றது. இது இந்த மாநாட்டுத் தொடர்களுக்கு இருக்கின்ற ஒரு ஜனரஞ்சக அடையாளம் என்று கூறத் தோன்றுகின்றது. மக்கள் சார்ந்ததாக இந்த மாநாடுகள் வெற்றி பெறுவதற்கும் மக்கள் தரும் இந்த உந்துதலும் ஆர்வமும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது.
இத்தகைய மாநாடுகள் இலக்கியத்தின் பேரில் ஒன்றுகூட்டப்பட்டாலும் அவை இதயங்களை இணைப்பதாக இருப்பது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் ஒரு பொதுப் பண்பாக இருந்து வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடந்த இவ்வகையான மலேசிய மாநாட்டில் இந்த விடயம் அடிக்கடி வலியூறுத்தப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் உள்ள முஸ்லிம்களை ஓரிடத்தில் சந்திப்பதற்கும் அளவளாவுவதற்குமான ஒரு பெரிய வாய்ப்பை இந்த மாநாடுகள் உருவாக்குகின்றன. தமிழ் நாட்டில் நடந்தாலும் தமிழ் நாட்டிற்கு வெளியே நடந்தாலும் தமிழக முஸ்லிம்களோடு இலங்கை முஸ்லிம்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பை இந்த மாநாடுகள் வழங்குகின்றன.
மாநாட்டு நிகழ்வுகளுக்கு வெளியே நடைபெறும் சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் அரசியல் உட்பட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைவதை நான் அநேக மாநாடுகளில் அவதானித்திருக்கின்றேன். கும்பகோணம் மாநாடு அந்தக் குறைபாட்டையும் விட்டுவைக்கவில்லை என்று கூற வேண்டும். இலக்கியவாதிகளோடும் இலக்கிய ஆர்வலர்களோடும் ஊர் மக்களோடும் அந்நிய தேசத்தவர்கள் என்ற வகையில் கலந்துறவாடுகின்ற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கும்பகோணம் மாநாடும் சிறப்பாக வழங்கியது.
முதல் நாள் நிகழ்ச்சிகள் அஸ்சூர் புறவெளிச் சாலையில் இருக்கும் ஹாஜி இ.எஸ்.எம் பக்கீர் முஹம்மது வளாகம் டி.எஸ் மகாலில் 4 மணியளவில் ஆரம்பமானது. அது மாநாட்டின் துவக்க விழாவாக அமைந்திருந்தது. பச்சைக் கம்பள வரவேற்பும் பக்கீர் பைத் குழுவினரின் இசையூம் ஒன்று கலந்ததாக மாநாடு மாலை 5 மணிக்கு ஆரம்பமானது. மாநாட்டு கீதம் இசைக்கப்பட்டு மாநாட்டுக் கொடி ஏற்றுதலுடன் அடுத்த கட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஆரம்ப நிகழ்வுகளில் பிரதான சொற்பொழிவாளர்களில் தஞ்சாவூர் பல்கலைக்கழக முனைவர் ம. திருமலையூம் எழுத்தாளர் விமர்சகர் ஆ. மார்க்சும், குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க. அன்பழகன், சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி. குரூஸூம் பங்கேற்றனர். அந்த மாநாட்டு முன்னிலை வரிசையை அலங்கரித்தவர்களில் கெப்டன் என்.ஏ அமீர் அலி, ஜெ.எம் சாலி ஆகியோரும் அடங்கியிருந்தனர். துவக்க விழாவின் தலைமை உரையை இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நிகழ்த்தினார். சுகவீனமுற்றிருந்த நிலையையும் பொருட்படுத்தாது கவிக்கோ வழமைபோல் கம்பீரமாகத் தனது உரையை மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களை விளக்கும் வகையில் வழங்கினார்.
கும்பகோண மாநாட்டிற்கு ஒரு சிறப்புத் தொனிப்பொருள் தரப்பட்டிருந்தது. ‘முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டு ஆய்வரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. கவிக்கோ முஸ்லிம் இலக்கியப் பரப்பில் இசைப்பாடல் மரபுகள் பற்றியும் முஸ்லிம்களின் பண்பாட்டில் இசை பெற வேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விரிவாகப் பேசினார். இசை தொடர்பாக வெளியிடப்படும் கருத்துக்கள் முன்வைக்கப்படும் சமய ஆதாரங்கள் பற்றி அவர் கேள்வி எழுப்பியதோடு பண்பாட்டு வளர்ச்சியில் இசையின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டியது காலத்தின் தேவை என்ற கருத்தை பல்வேறு ஆதாரங்களுடனும் சபையில் விரிவாக விளக்கினார்.
பல்வேறு இனங்களைஇ இதயங்களை இணைக்கும் சக்தியுள்ள இசைத் துறை வளர்ச்சியில் முஸ்லிம்களின் கவனம் திரும்ப வேண்டியதன் அவசியம் மாநாட்டு நிகழ்வுகளில் தெளிவாகப் புலப்பட்டது. துவக்க விழா மேடை நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக 15 அல்லது 20 இளைஞர்களின் இஸ்லாமிய கீதத்துடனான பக்கீர் பைத் முஸ்லிம்களின் பாரம்பரிய இசை மரபுகளை நவீன மேடை உத்திகளோடு சபை முன் அலங்காரமாகக் கொண்டுவர முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்திருந்தது.
கவிக்கோவின் தலைமை உரை நடைபெறவிருந்த மாநாட்டுத் தொனிப்பொருளுக்கான ஒரு மகுடமாகவூம் முன்னுரையாகவும் அமைந்திருந்தது என்று எவ்வித தயக்கமும் இன்றிக் கூறலாம். இதுவொரு நீண்டகால அவாவும் தேவையுமாக இருந்ததை முஸ்லிம் இசை மரபுகளோடும் குறிப்பாக அர்வி பிராந்தியத்தின் இசையோடும் முஸ்லிம் இசைப்பாடல்களின் மரபுகள் பற்றிய ஆய்வுப் பொருளோடும் இருந்த கனவூகளின் நிறைவு போல் இந்த மாநாடு அமைந்திருந்தது. இதுவரை நடைபெற்றுள்ள மாநாடுகளிலும் எப்போதுமே மாநாட்டு அமைப்பாளர்கள் இசைக்கு ஒரு முக்கியத்துவம் வழங்கி வந்துள்ளார்கள். மாநாட்டின் இடை நிகழச்சியாகவோ மாநாட்டு நிகழ்வூகள் நிறைவு பெற்ற பின்னர் இரவு நேர நிகழச்சியாகவோ இசைக்கும் கலை நிகழ்வூகளுக்கும் இடம் அளிக்கப்படுவது ஒரு மரபாக இருந்துள்ளது. 1979ம் ஆண்டு பேராசிரியர் எம்.எம் உவைஸ் நடத்திய மாநாட்டின் தொடக்க விழா காயல் ஷெய்க் முகம்மத் பாடிய ‘ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரே’ என்ற பாடலுடன் தான் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. அதன் பின்னர் ரவூப்ஹக்கீமின் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட மற்றொரு சர்வதேச மாநாட்டில் கலை நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. நூர்தீனின் இசைக்குழுவினரின் இஸ்லாமிய கீத நிகழ்ச்சியூம் ‘புனித பூமியிலே’ நாடகமும் எனது நினைவூகளில் பதிந்துள்ளன.
இலங்கை மாநாட்டில் புனித பூமியிலே நாடகம் தனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சியையூம் கவலையையும் முதல்நாள் விருந்துபசார வைபவத்தின் போது மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவர் மிகுந்த உருக்கத்தோடு விபரித்ததையும் இங்கு நினைவூ கூரலாம். பண்பாட்டுத் துறையில் விரிவாக கால் பரப்ப வேண்டிய தேவையைப் பற்றி நாம் பேசி வருகின்றோம். உணர்வுப் பாலங்களை அமைப்பதற்கும் இதயங்களை இணைப்பதற்கும் முஸ்லிம் சமூகம் சார்ந்த நடப்புக்களை தேச எல்லைகள் கடந்து இன எல்லைகள் கடந்து கொண்டு செல்வதற்கும் இத்தகைய பெரிய மாநாடுகளின் பண்பாட்டு நிழ்ச்சிகள் பெரும் பணி ஆற்றுவதாகவே கருத வேண்டும்.
அ.மார்க்சும் ஜோ.டி. குரூசும் துவக்க விழா உரையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த விடயங்களை முஸ்லிம்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் அறிவுறுத்துவதற்கும் முயன்றதை என்னால் அவதானிக்க முடிந்தது. பம்பாயில் தனக்கு ஏற்பட்ட ஒரு அவலத்தின் போது முஸ்லிம் பெண்கள் தமக்கு வழங்கிய பேருதவியை ஒரு கதையாகக் கூறி குரூஸ் இந்த விடயங்களை விளக்க முற்பட்டார். எதிர்மறையான அல்லது கோபாவேசமான போக்குகளை விட முஸ்லிம்கள் தங்களுக்கே உரித்தான பரந்த மனப்பான்மை விருந்தோம்பல் பண்பாட்டு முதுசொம்கள் போன்றவற்றினூடாக தமது எல்லைகளை விரிவுபடுத்த முடியூம். இதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அ. மார்க்ஸ் தமது கருத்;தை வெளியிட்டார்;;. இந்த வகையில் இசை பெரும் பணியாற்றக்கூடிய ஒரு துறை என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தத் துறைகளில் ஏற்கனவே முஸ்லிம்களின் சாதனை பெரும் வழிகாட்டியாக இருப்பதும் அன்று துவக்க விழா நிகழ்வுகளில் எடுத்துக் காட்டப்பட்டது.
15ம் திகதி மாநாட்டின் முதுகெலும்பான ஆய்வரங்கு நிகழ்வூகள் ஆரம்பமாகின. 2 அரங்கங்களாக வகுக்கப்பட்டுக் கட்டுரைகள் படிப்பதற்கு வாய்பளிக்கப்பட்டது. அநேகமான கட்டுரைகள் முஸ்லிம் இசை மரபுகளையும் இசைப் பாடல்களையும் தழுவியதாக அமைந்திருந்தமை மாநாட்டின் நோக்கத்தை நிறைவேற்ற உதவியதாகக் கருதலாம். வழமையான மூத்த ஆய்வாளர்கள் வரிசை ஒரு புறமாகவும் வளர்ந்து வரும் ஆய்வாளர்களின் கட்டுரைகளும் கருத்துக்களும் மற்றொருபுறமாகவும் இந்த அரங்குகளில் முன்வைக்கப்பட்டன. கணிசமான பொதுமக்கள் கருத்தரங்குகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். எனினும் இளைஞர்களின் தொகை போதுமானதாக இருக்கவில்லை என்று சில நண்பர்கள் என்னிடம் கூறினர். மேலும், பவர் பொயின்ட் விளக்கக் காட்சிக்குத் தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தது ஒரு குறைபாடாகவே தெரிந்தது.
படிக்கப்பட்ட கட்டுரைகளில் தீவிரமான, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்த கட்டுரைகள் எத்தனை என்பது கேள்விக்குறியாக இருக்கலாம். மாநாடுகளில் அதுவும் இவ்விதமான பன்னாட்டு மாநாடுகளில் அத்தகைய கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்பதை நாம் அறிவோம். எனினும் பொதுவாக இங்கு வாசிக்கப்படும் கட்டுரைகளின் தரம் பற்றிய விடயங்கள் சில சந்தர்ப்பங்களில் ஆழமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை இங்கு கூறாமல் இருக்க முடியாது. இலங்கையில் இருந்து 12 கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டதாகவும் அதில் இருந்த சில கட்டுரைகள் மாநாட்டின் தொனிப்பொருளை சரியாகப் பிரிதிபலித்ததோடு அதேவேளை மாநில மாநாட்டை இன்னும் விரிவுபடுத்தும் அவாவை அக்கட்டுரைகள் தூண்டியதாகவூம் பொதுச் செயலாளர் பேராசிரியர் அப்துஸ்ஸமது மாநாட்டின் முக்கியமான சந்தர்ப்பங்களில் சபையினருக்கு எடுத்தரைத்தார். அத்தோடு மாநாட்டு சிறப்புத் தொனிப் பொருளில் எத்தனை கட்டுரைகள் வந்து சேரும் என்று தமக்கிருந்த தயக்கத்தை மாநாட்டுக்காக எழுதப்பட்ட 110 கட்டுரைகள் தீர்த்து வைத்ததாகவும் மாநாட்டு பிரமுகர்கள் தகவல்களை வழங்கினர்.
எவ்வாறாயினும் இசையை பிரதிபலிக்கக் கூடியதாக குறிப்பிடத்தக்க சில கட்டுரைகள் அங்கு வாசிக்கப்பட்டது மாத்திரம் அல்ல முஸ்லிம் இசைப் பாடல் மரபில் தேர்ச்சி பெற்ற பல அனுபவ சாலிகளின் உரைகளையும் அங்கு கேட்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இசை ஆய்வாளர் ந.மம்மது,சென்னைப் பல்கலைக்கழக இந்திய இசைத் துறைத் தலைவர் முனைவர் பிரமிலா குருமூர்த்தி மற்றும் இஸ்லாம் வளர்த்த இசைத் தமிழ் நூல் ஆசிரியரான இரா. திருமுருகன் பற்றிப் பேசிய இரு கட்டுரையாளர்கள் என்று இந்த மாநாட்டு தொனிப்பொருளோடு அமைந்த கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தற்கலை மு. பஷீர், ஏம்பல் தஜம்மல் முஹம்மத்,பேராசிரியர் நஜிமுத்தீன், தத்தோ இக்பால், முனைவர் முஹம்மது நாஸிர், கெப்டன் என். ஏ. அமீர் அலி,பேராசிரியர் சாயிபு மரைக்கார் தம்பதியர், கலந்தை. பீர் முஹம்மத், முனைவர். தி. மு அப்துல் காதர்,முனைவர் ராஜா முஹம்மத், இளைய இசை முரசு ஈ.எம் பாஷா இசை ஆய்வாளர் மம்மது என்று எனக்குத் தெரிந்த பல நண்பர்களை காண முடிந்ததோடு பல புதிய இலக்கிய இசை ஆர்வலர்களையூம் அறிந்து கொள்ள எனக்கும் பலருக்கும் மாநாடு நல்ல வாய்ப்பை வழங்கியது.
காரைக்கால் ஏ. எம். தாவூத், நாகூர் எஸ். எம். ஏ. காதர், புகழ் பெற்ற பாடகி சரளா போன்றோருக்கு இசைப் பங்களிப்புக்காக வாழ்நாள் சேவை விருதுகள் வழங்கப்பட்டன. இசை முரசு ஈ.எம் ஹனிபா அவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சத்துடன் கூடிய உமறுப்புலவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த மாநாட்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். இவ்வாறான பெரிய விருதுகளை இலங்கை, மலேசிய மாநாடுகள் கூட வழங்கி அவரது இசைச் சேவையை கௌரவித்திருக்க முடியும். மூத்த இசை அறிஞர் விருது குமரி அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் விருது வழங்கி இஸ்லாமிய கீத பாடகி சரளாவும் அங்கு பாராட்டப்பட்டார். மற்றும் பல இசைக் கலைஞர்களுக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. காரைக்கால் ஏ.எம் தாவூத் எஸ்.எம்.ஏ காதர்,இசை முரசு நாகூர் ஹனிபா, இசை மணி யூசுப், பி.கே. கலீபுல்லாஹ் போன்ற பாடகர்களின் பெயர்கள் அரங்கு முழுக்க அடிக்கடி எதிரொலித்தன. கவி கா. மு. ஷரீப் அரங்கமும் புலவர் ஆபிதீன் அரங்கமும் இசைப் பாடல் துறைக்கு பங்களிப்புச் செய்தவர்களின் பெருமையை மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதாக அமைந்திருந்தன. நாகூர் சலீமின் இசைப் பாடல் பங்களிப்புப் பற்றியூம் புலவர் ஆப்தீனின் இஸ்லாமிய கீத பாடல்கள் பற்றியூம் விரிவாக கருத்தரங்குகளில் உரையாடப்பட்டன. இது தவிர தமிழ் நாட்டுச் சூழலில் வெவ்வேறு வகைகளில் இசை மரபுகள் மக்கள் வாழ்வில் பயிலப்பட்டு வருவதைப் பற்றிய பல தகவல்கள் மாநாட்டில் பரிமாறப்பட்டன. இவ்வாறு பார்க்கும் போது ஆய்வரங்குகள் எடுத்துக் கொண்ட தொனிப் பொருளை முடிந்தவரை நிறைவு செய்ய முற்பட்டன என்றே கூற வேண்டும்.
இஸ்லாமியக் கீத இசைக்கு நவீன வானொலி நிலைய ஒலிபரப்பு வசதிகளை வழங்கி இஸ்லாமியக் கீதத்தை காற்றலை மூலம் உலகத்திற்குக் கொண்டு சென்ற பெருமை இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்சிப் பிரிவுக்கு கிடைக்க வேண்டிய தனிப்பெருமையாகும். என்ற இவ்வசனத்தை எனதுரையில் ஒரு சந்தரப்பத்தில் நான் பேசிய போது அரங்கம் முழுக்க கரகோஷத்தால் நிறைந்தது. 1960, 70 காலங்களில் காரைக்கால் தாவூத் பி.கே கலீபுல்லாஹ், எஸ்.எம்.ஏ காதிர், ஈ.எம். நாகூர் ஹனிபா, காயல் ஷெய்க் முகம்மது போன்றோரது பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பி அவர்களின் செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்கு உதவிய இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு மீதான நன்றியைத் தமிழக முஸ்லிம்கள் அன்று அந்த சபையில் வெளியிட்டமை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும். இசைப் பங்களிப்பாளர்களின் பெயர்களோடு சில அரங்கங்கள் அங்கு காட்சி அளித்த போதும் இலங்கை வானொலி முஸ்லிம் பிரிவில் முஸ்லிம் இசை வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்களும் இந்த அரங்கத்தை அழகுபடுத்தத் தகுதி பெற்றவையாகும் என்றும் எனது உரையில் நான் கூறினேன். குறிப்பாக முன்னாள் இஸ்லாமிய நிகழ்ச்சிப் பகுதிப் பணிப்பாளர் பாத்காண்டே இசைப் பட்டதாரி எம். எச் குத்தூஸ் பேரில் ஒரு அரங்கம் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நான் அங்கு குறிப்பிட்டதையும் அந்த சபை மகிழ்ச்சியுடன் வரவேற்றது. காரைக்கால் தாவூதின் இசையை வானலைகளுக்கு முதலில் கொண்டு சென்ற பெருமை இலங்கை முஸ்லிம் நிகழ்சிப் பிரிவூக்கு உண்டு என்று நான் கூறிய ஒரு வரியையூம் மக்கள் கரகோஷம் செய்து வரவேற்றனர்.
இவ்விதமான வானொலி தொலைக்காட்சி மற்றும் நவீன சாதனங்கள் இன்றி முஸ்லிம் இசையை உலகளவுக்குக் கொண்டு செல்வது எவ்விதத்திலும் சாத்தியமற்றது அத்தகைய வாய்ப்பு இன்று இலங்கையிலும் இல்லை தமிழ் நாட்டிலும் இல்லை என்று நான் வலியூறுத்திப் பேசிய போது அரங்கம் அதிர மீண்டும் கரகோஷம் எழுந்தது. இத்தகைய விடயங்களில் மக்கள் எவ்வளவு நன்றியுணர்வோடும் புதிய ஊடகத்துறைகளின் வருகையை எவ்வளவு ஆர்வத்தோடு விரும்புகிறார்கள் என்பதை இவற்றின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
மாநாட்டின் மொத்த நிகழ்வுகளும் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கும் முஸ்லிம்களின் பண்பாட்டின் பரப்பிற்கும் வலிமை சேர்ப்பதாக இருந்தது என்பதை இங்கு வலியூறுத்துவது கடமையாகும். மலேசிய பல்கலைக்கழத்தில் மிகப் பிரமாண்டமாக மலேசியாவே திரும்பிப் பார்க்கும் அளவு மாநாடு நடைபெற்ற போதும் மாலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதில் எந்தவித ஏற்பாடுகளும் அங்கு இருக்கவில்லை. 2அல்லது 3 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் மாலை நேரங்களில் முஸ்லிம்களின் பண்பாட்டின் பரப்பை உலகுக்கு அறிவிக்கக்கூடிய நிகழச்சியாக அமைப்பது ஒரு கடமையாகக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் நினைவுக்கெட்டிய காலம் முதல் நம்மோடு பிரிக்க முடியாத உறவாக வளர்ந்து வரும் இப்பண்பாட்டு முதுசொம்களின் சொந்தக்காரர்களை அவர்களின் நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவதும் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்குவதும் அவர்களில் மூத்தவர்களுக்கு வாழ்நாள் சேவைக்கான விருதுகள் வழங்கி அவர்களை கௌரவிப்பதற்கும் முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும்.
ஈ.எம் நாகூர் ஹனீபாவிற்கு வழங்கப்பட்ட விருது அந்தளவு கௌரவம்மிக்கது. சீறாப்புறாணச் செம்மல் குமரி அபூபக்கர் அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதும் மறக்க முடியாத கௌரவத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. சீறாப்புராணத்தை கர்நாடக இசையில் தேன் ஒழுகப் பாடுவதில் இன்றும் அவர் இளமைத் துடிப்புடன் இயங்குவதை மாநாட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் அவதானிக்க முடிந்தது.
மாநாட்டு இறுதி நாள் நிகழச்சிகளில் அனைவரது கவனத்தையும் அன்றைய இசைக் கச்சேரி கவர்ந்து கொண்டது. தாஜ் நூரின் ‘அன்பே இஸ்லாம்’ இறை இசை நிகழ்ச்சி இளைஞர் உலகத்திற்கு இஸ்லாமிய பக்தி இசையை கொண்டு செல்வதற்கான புதிய பரிசோதனை இசை வடிவமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வித மாநாடுகளில் எவ்வகையிலும் எதிர்பார்க்க முடியாத பிரமாண்டமான இசைக் கச்சேரியை அன்று கும்பகோணம் உலகுக்கு வழங்கியது. நாங்கள் வெளி நாட்டவர்களுக்கான சிறப்பு மண்டபத்தில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது புயலைப் போல் ஒரு குழுவினர் உணவுத் தட்டுக்களுடன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அணிந்திருந்த நீல நிற பெனியன்களின் முன்பகுதி ‘அன்பே இஸ்லாம்’என்ற கொட்டை எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அநேகர் முஸ்லிம் அல்லாதவர்கள். தாஜ்நூரின் இசையில் பாட இருப்பவர்கள் இவர்கள் என்று பின்னர் நான் அறிந்து கொண்டேன்.
அந்தக் குழுவில் இருந்தவர்களில் சுப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீனிவாசனும் ஒருவர். தொலைக்காட்சி மூலம் அவரை நான் நன்கு அறிவேன். அவர் சூஃபி மற்றும் கவ்வாலி ரக உச்சஸ்தாயி பாடல்களைப் பாடுவதில் வல்லவராக விளங்குபவர். ஏர். ஆர். ரஹ்மானின் இசையில் பின்னணி பாடியிருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டது. அன்பே இஸ்லாம் குழுவில் அவரைக் கண்டதும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அவரை சந்தித்து சூஃபி இசையில் பாடிய அவரது சில பாடல்களை நினைவூபடுத்தி அந்தத் துறையில் அவருக்கு இருக்கும் திறமையைப் பாராட்டினேன். இன்னும் சிறிது நேரத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி றெஹானாவும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் இன்னும் சில முஸ்லிம் பெண்மணிகளும் கடைசி நாள் இசை அரங்கில் பாட இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. றெஹானா ஒரு பாடகியும், வளர்ந்து வரும் இசையமைப்பளரும் ஆவார். இந்தியத் தொலைக்காட்சிகளில் அவர் வழங்கிய இசைப் பேட்டிகள் தொடர்பாக நானும், எனது மனைவியூம், அங்கிருந்த வேறு சில பெண்களும் எங்களின் கருத்துக்களை றெஹானாவுடன் பகிர்ந்து கொண்டோம்.
மறுநாள் 9 மணியளவில் டி.எஸ் மஹால் முற்றவெளியில் தாஜ்நூரின் அன்பே இஸ்லாம் பக்தி அல்லது சூஃபி இசை அரங்கு ஆரம்பமானது. மிகவும் உயர்தர மற்றும் சக்தி வாய்ந்த ஒலி இயந்திரங்களோடும் பிரமாண்டமான மேடை அமைப்புக்களோடும் 40-க்கும் மேற்பட்ட கலைஞர்களோடும் அந்தப் பரிசோதனை இசை விழா தொடங்கியது. சில நிமிடங்களில் அந்த இசை நிகழ்வின் அறிவிப்பாளராக மேடையில் பி.எச் அப்துல் ஹமீத் தோன்றினார். ஏ.ஆர் ரஹ்மானின் இசைத் தொழிநுட்பப் பிரிவில் 14 வருடங்கள் தாஜ்நூர் பணியாற்றியவர். இன்று 10க்கும் அதிகமான படங்களில் இசை அமைத்திருப்பதோடு இஸ்லாமிய இசை மரபில் புதியதொரு மாற்றத்தை உருவாக்குவதற்காக ஒரு இசைக் குழுவோடு உலகை வலம்வர காத்திருப்பவர்.
அந்தப் பிரமாண்ட இசையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தவர் தாஜ்நூர். ஆனால் தாஜ்நூர் உட்பட அந்த முழு இசை அரங்கையும் தனது பண்பட்ட அறிவிப்புத் திறமையாலும் கண்ணியமான கம்பீரமான அறிமுகக் குறிப்புக்களாலும் அப்துல் ஹமீத் அரங்கை சிறப்பான முறையில் வழிநடத்தினார். அப்துல் ஹமீதின் அறிமுக உரைகளும் ஒவ்வொரு பாடகரையும் பாடலையும் அறிமுகப்படுத்தும் போது அவர் வழங்கும் புதிய தகவல்களும் ரசிகர்களை மேலும் மேலும் தாஜ்நூரின் இசையோடு ஒன்றிணைத்தன. தாஜ்நூரும் அப்துல் ஹமீதும் அந்த மேடையின் பிரமாண்டமான நட்சத்திரங்களாக அன்று மக்கள் உள்ளத்தில் பிரகாசித்தனர். பீ. எச். அப்துல் ஹமீத் அன்று தனது முழு அறிவிப்பு ஆளுமையையூம் சரளமாகப் பயன்படுத்தியது பெருமையாகவே இருந்தது. குமரி அபூபக்கரின் சீறாப்புராண பாடலுக்கு தாஜ்நூர் தனது பிரமாண்டமான இசைக் கருவிகளோடு உயிரூட்டியது ஒரு பிரமிப்பளிக்கும் அனுபவமாகும். அப்துல் ஹமீத் அபூபக்கரை அறிமுகப்படுத்தியது இன்னொரு சிறப்பம்சமாகும். ‘திக்குத் திகந்தமும் கொண்டாடியே’ என்ற பாடல் இசை முரசின் குரலுக்கு மட்டுமே சொந்தமானதாகும். அது மாற்று இன சகோதரர்களையூம் எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பதற்கு அன்பழகனின் திக்குத்திகந்தமும் பாடல் நல்ல உதாரணமாக அமைந்திருந்தது.
‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்ற ஈ.எம். நாகூர் ஹனீபாவின் பாடலை குத்தூஸ் பாடியதில் இருந்துதான் அன்பே இஸ்லாம் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. அந்தப் பாடல் பழைய பாணியை முற்றாகப் பிரதிபலித்தது. ஆனால் நாம் எதிர்பார்த்த அந்தப் பாடலுக்குரிய இசை கைவிடப்பட்டு தாஜ்நூரின் நவீன கருவிகளின் இசைச் சங்கமத்தின் பக்தி ஒலி மேடையை அதிர வைத்துக் கொண்டிருந்தது. குத்தூஸ் சளைக்காமல் பாடினார். பக்கீர் பாவாக்களும் தாஜ் நூரின் ஜாஸ் போன்ற அதிரடியான இசைக்கு ஈடுகொடுத்து தமது திறமைகளை வெளிப்படுத்தினர். உருது கவ்வாலி (பக்கீர் வகைப்பாடல்) குழுவினரும் தமது உருதுப் பாடல்களுடன் இதில் பங்கேற்றனர். அன்பே இஸ்லாம் அதன் தலைப்பிற்கு ஏற்ப இசையினால் இதயங்களை ஒன்றிணைத்தது. தாஜ் நூரின் இந்தப் பணி தொடர வேண்டும் என்பது தான் நாம் அன்று எடுத்த முடிவாகும். உலகளவிற்கு அந்த இசையைக் கொண்டு செல்ல அவரிடம் திட்டங்கள் இருப்பது பற்றியும் இது ஒரு ஆரம்ப அல்லது முன்னோடி நிகழ்ச்சி என்றும் தாஜ்நூர் அன்று அறிவித்தார்.
இவ்வாறு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அதன் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய எட்டாம் மாநாட்டை திட்டமிட்டது போல் முஸ்லிம்களின் இசைப்பாடல் மரபுகளின் ஆய்வுக்கும் இரசனைக்கும் விருந்தாக்கியது பெருமைக்குரியதொன்றாகும். அதே நேரம் முஸ்லிம்களின் நிகழ்த்துக் கலைகள் சிலவற்றையாவது அன்று மேடையேற்றி அந்தக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தமை இன்னொரு வகையில் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும். தாஜ்நூரின் இசை முஸ்லிம் இளைஞர்களுக்கு மத்தியில் புதிய இஸ்லாமிய இசைக் கோலத்தை அறிமுகப்படுத்தும் ஒரு பாரிய பணியை எமக்குக் காட்டியது. இந்த வகையில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை; கிஸ்வா அமைப்பு கும்பகோணமும் இணைந்து முஸ்லிம் உலகம் கவனத்தில் கொள்ளக்கூடிய ஒரு மாநாட்டை நடத்தி முடித்துள்ளது. இது இன்னும் தொடரப்போகும் பல மாநாடுகளுக்கு மற்றொரு முன்னோடி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.
***************************** ****************************** **************************
News From :
Yembal Thajammul Mohammad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக