ஞாயிறு, 15 மார்ச், 2015

சூஃபி தத்துவங்கள்'

'நான் கடவுளை நேசிக்கிறேன்' என்று சொல்வது எளிது.ஆனால், அதன்மூலம் தொடர்ந்து உங்கள் தற்பெருமையை, தான் என்கிற அகங்காரத்தை (Ego) நீங்கள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.
' கடவுள் வடிவமற்றவர்,
நீங்களோ வடிவமுள்ளவர்.
அகந்தையே உங்கள்
வடிவமாயிருக்கிறது'
தண்ணீரும், பனிக்கட்டியும் இணைந்து ஒன்றாவதில்லை. ஆனால் பனிக்கட்டி தனது வடிவத்தை இழந்தால் மட்டுமே அவை இரண்டறக் கலந்து கொள்ள முடியும்.அப்படித்தான் உங்கள் விஷயத்திலும். உங்களுடைய தற்போதைய வடிவத்தில் நீங்கள் இறைவனுடன் இணைந்து கொள்ள முடியாது.அத்துடன் உங்களுக்கும் இறைவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று உங்களுக்குப் பிரியமானவரிடம் உங்களால் நேர்படச் சொல்ல முடியவில்லை. அப்படி உங்களைச் சொல்ல விடாமல் தடுப்பது எது ? அகந்தை. அது இருவரிடமும் இருக்கிறது.அது மோதலை உண்டு பண்ணுகிறது.அகந்தையின் மோதல்!
'அகந்தை ஒரு தீவு,அங்கே
தன்னையன்றி வெறு சஞ்சாரமில்லை
அகந்தை ஒரு பாலைவனம்
அங்கே எதுவும் வளர்வதில்லை '
பக்கத்தில் உள்ளவரிடம் தன்னுடைய நேசத்தைச் சொல்ல முடியாதவர்,' நான் இறைவனை நேசிக்கிறேன்' என்கிறார் !
உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இறைவனின் படைப்பு இருக்கிறது.உங்கள் இருவருக்கும் இடையே மனிதத்தன்மை இருக்கிறது.
மனிதர்களில் பலரும் மதத்தின் புறப் பகுதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் எல்லோருமே மத நம்பிக்கை -சமயப் பற்று கொண்டிருப்பதாய் உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆயினும் மதம் தன்னளவில் தனிச் சிறப்புடையதாகவே இருக்கிறது.எனினும் அங்கே மனிதத்தன்மையும் தேவைப் படுகிறது.மனிதர்கள் இறைவனின் படைப்பு. ஆனால், இறைவனுடன் நீங்கள் நேரடித் தொடர்பை ஏற்புத்திக் கொண்டுவிட முடியாது.இறைவனின் படைப்பின் மூலமே அவனை நீங்கள் நேசிக்க முடியும்
'இயற்கையை நேசிப்பது ,
உயிரினங்களை நேசிப்பது,
சக மனிதர்களை நேசிப்பது
இவற்றின் மூலமே அது சாத்தியம்'
உங்கள் அகந்தையின் அனேக பரப்புகளை கடந்து நீங்கள் பயணிக்க வேண்டியிருக்கும்.
அகந்தையின் வழிகளை (செயல்முறை)நீங்கள் அறிந்திருந்தால்தான் நீங்கள் அதிலிருந்து விடுபட முடியும்.நீங்கள் அகந்தையிலிருந்து விடுபடாதவரை இறைவனுடனான தொடர்புக்கு சாத்திமில்லை.உங்களுக்கும் மெய்ம்மைக்கும் இடையில் அகந்தையே தடையாயிருக்கிறது.
" எங்கே அகந்தை முடிவுறுகிறதோ
அங்கே தொடங்குகிறது
சூஃபியின் ஞானவழி!"
(சி.எஸ்.தேவ நாதன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக